கனவுகளின் வண்ணம் – சக்திவேல்

சுசித்ராவின் ஒளி சிறுகதைத் தொகுப்பு

ஒரு பழங்கதை உண்டு. புலி துரத்த அஞ்சி ஓடியவன் பள்ளத்தில் சறுக்கி விழுகிறான். தட்டுத்தடுமாறி முறியும் தருவாயில் உள்ள மரக்கிளை ஒன்றை பிடித்து தொங்குகிறான். கீழே அதள பாதளம். விழுந்தால் சாவு நிச்சயம். கைப்பிடித்துள்ள கிளையில் பாம்பு ஒன்று நகர்ந்து வருகிறது. பள்ளத்திற்கு மேல் புலி காத்திருக்கிறது. அவனது கைக்கெட்டும் தூரத்தில் பாறை இடுக்கில் தேனடை ஒன்று உடைந்து வழிகிறது. அதன் ஒரு சொட்டை எடுத்து நக்கி இனிய கனவுகளில் தன்நிலை மறக்கிறான்.

மனித வாழ்க்கைக்கு உதாரணமாக சொல்லப்படும் கதை இது. அந்தத் துளி பொழுதில் எழும் வண்ணக்கனவுகளாக சுசித்ராவின் ஒளி தொகுப்பின் கதைகள் அமைந்துள்ளன. 2017 ஆம் ஆண்டு வெளியான முதல் கதையான சிறகதிர்வு தொடங்கி 2019 இறுதியில் வெளியான ஒளி வரை மொத்தம் பத்துக்கதைகளின் தொகுதியாக உள்ள ஒளியின் பாதிக்கும் அதிகமான கதைகள் துயரத்திலிருந்து எழும் மெல்லிய ஒளியை பேச முற்படுகின்றன.

ஒளி தொகுப்பின் கதைகளை பேசுவதற்கு வசதியாக மூன்று பெரும் பிரிவுகளாக பிரித்து கொள்ளலாம். ஒன்று, சிதில எதிர்கால (Dystopian) புனைவுகளாக வெளிப்பட்டு நிறபேதம் காட்டும் ”யாமத்துக்கும் யானே உளேன்”; ”சிறகதிர்வு”; ”தேள்” ஆகிய கதைகள். இரண்டு, பதின்பருவ பெண்களின் ஆரம்பம் தொட்டு முதிரிளம் கன்னியின் அகம் வரை பேசும் ”ஹைட்ரா”; ”ஊஞ்சல்”; ”நட்சத்திரங்கள் பொழிந்து கொண்டிருக்கின்றன”; ”ஒளி” ஆகிய கதைகள். மூன்று, தத்துவார்த்தமான உருவகங்களை கதைகளாக சித்தரிக்க முற்படும் ”லீலாவதின் தத்துவங்கள்” மற்றும் ”அலாத சாந்தி”. இது தவிர எந்த பகுப்புகளுக்குள் அடங்காமல் தனித்த கதையாக நின்றிருக்கும் ஒரு மழைநாள் என்றொரு கதையும் உண்டு.

யாமத்துக்கும் யானே உளேன் கதையும், சிறகதிர்வும் மானுடத்தின் ஆதாரமான மெய்யியல் கேள்விகளை கலை அறிவியல் என இரண்டையும் உரசவிட்டு சென்றடைகின்றன. இவை சென்று தொடும் ஆதார கேள்விகளையும் அவற்றின் கலைத்தன்மையையும் பேசுவதற்கு முன்னால் சுசித்ராவின் கதைகளில் வெளிப்படும் புனைவு தருணங்களின் தன்மையை குறித்து பேசிவிட்டு நகர்வது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் தமிழ் எழுத்து பரப்பின் மைய ஓட்டத்திற்கு பரிச்சயமான வாசகர்களுக்கு இவரது புனைவுகளின் கூறுமுறை அதன் மேல் விலக்கத்தை தோற்றுவிப்பதற்கான சாத்தியம் உண்டு.

பொதுவாக நம்மிடையே வலுவாக உள்ளது, யதார்த்தவாத கதைச்சொல்லல் மரபு. அம்மரபின் அடிப்படையில் எழுதப்படும் கதைகளின் தன்மையாக ஒன்றை சொல்லலாம். எழுத்தாளர் தன் சொந்த அனுபவங்களின் கற்பனை நீட்சியாகவும் தான் கண்டு கேட்ட கதைகளுடன் கற்பனை கலந்து செய்வதாகவும் அமைந்திருக்கும்.

சுசித்ராவின் கதையுலகை பொறுத்தவரை வாசிப்பில் அவரை ஈர்த்த புனைவுகள் மற்றும் வரலாற்றில் இருந்து புனைவுத் தருணங்களை சமைத்தெடுத்துக் கொள்கிறார். 2020 இல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் பத்து ஆசிரியர்களின் முதல் நூல் வெளியீடுகளில் ஒளி தொகுப்பும் ஒன்றாகும். அப்போது எடுக்கப்பட்ட சுய அறிமுக நேர்காணலில் சுசித்ரா சொல்வது போல இளமையில் அவரது விருப்பத்திற்குரியதாக இருந்த ஐரோப்பிய புனைவுகளின் தாக்கமாக இத்தன்மையை காணலாம். கதைகளில் இதற்கு உதாரணமாக மூன்று இடங்களை முக்கியமாக சுட்டிக்காட்ட வேண்டும்.

’யாமத்துக்கு யானே உளேன்’ கதையில் வரும் அண்ணன் போர் நடுவே விரிந்த வானத்தை பார்த்து பொருளின்மையை உணர்வது, போரும் வாழ்வும் நாவலில் ஆண்ட்ரூ நெப்போலியன் யுத்தத்தில் ஈடுபட்டு காயமுற்று விரிநீல வானத்தை காணும் காட்சியை நினைவுட்டுகிறது. ’சிறகதிர்வு’ கதையில் அம்மாவும் அவரது நண்பர்களும் அமர்ந்து இலக்கிய விவாதம் செய்ய, நடுவே கதைச்சொல்லி விளையாடி கொண்டிருப்பது ஐரோப்பிய கவிஞர்கள், நாவலாசிரியர்களின் வாழ்க்கை சம்பவங்களை நினைவிலெழுப்புகிறது. ’தேள்’ கதை மத்திய காலக்கட்டத்து ஜரோப்பிய மதப்போர்களை நவீன காலத்து சிதில எதிர்கால புனைவுகளுடன் கலந்து சிலுவைக்கு சர்வதிகாரத்தின் அர்த்தத்தை வழங்குகிறது. வாசித்த நூல்களில் இருந்து புனைவுக்கான தருணங்களை மறு உருவாக்கம் செய்வதை சிதில எதிர்கால கதைகளில் மட்டும் காண முடிகிறது.

யாமத்துக்கும் யானே உளேன், கௌதமன் என்ற மூன்றாம் நிலை பண்பாட்டு தானியங்கியின் வளர்ச்சியைக் கூறுவதன் வழியாக அறிவியலும் கலையும் சந்தித்துக் கொள்ளும் புள்ளியின் வழியாக வாழ்க்கை சார்ந்த மையக்கேள்விகளை சென்று தொடுகிறது. அவற்றை இப்படி சொல்லலாம், ’பிரக்ஞை என்பது என்ன?’; ’வலி என்ற புலனுணர்வை தான் பிரக்ஞை என்கிறோமா?’; ’வாழ்க்கைக்கு அர்த்தம் என நாம் கற்பிதம் செய்து கொள்வதெல்லாம் மரணத்தை முன்னுறுத்தி மட்டுந்தானா?’.

தத்துவத்தில் நீண்டகாலமாக விவாதிக்கப்படும் இக்கேள்விகளை சுசித்ரா தன்னுடைய நரம்பியல் ஆய்வு பின்புலத்திலிருந்து அறிவியல் புனைவு பரப்பில் வைத்து பரிசீலனைக்கு உள்ளாக்குகிறார். இக்கேள்விகளுக்கு முற்று முழுதான விடையென ஏதுமில்லையெனினும் பெரும்பாலும் ”ஆம்” என்ற இடத்தில் சென்று நிற்கிறோம். ஆம் என்ற விடை ஒரு விளக்கமாக இல்லாமல் மர்மமாக நிலைபெறுவதே மனிதர்கள் திரும்ப அக்கேள்விகளை சென்று ஆராய காரணம் என்று தோன்றுகிறது.

முதல் வாசிப்பில் யாமத்துக்கும் யானே உளேன் பெரும் மனக்கொந்தளிப்பை உண்டு பண்ணியது. அன்றைக்கு இக்கதையை வாசிப்பதற்கு முன்னம் ஆங்கில படமான ஐ ரோபார்ட்டை பார்த்து விட்டு சென்றேன். அப்படத்தில் கதாநாயகனுக்கு ரோபார்ட்டின் மேல் ஒவ்வாமையும் சந்தேகமும் இருக்கும். அது பார்வையாளனிலும் பிரதிபலிக்கும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இங்கே கதையில் வரும் கௌதமனை அந்த படத்தின் ரோபார்ட்டுடன் இணைத்து கொண்டேன். இது ஒருவகையான மன கொதிப்பை உருவாக்கியது.

இந்த அனுபவத்தை குறிப்பிடுவதன் காரணம், கதையில் மானுடர் உருவாக்கிய கதைகள் அத்தனையும் நாமறியா இருளில் ஒன்றுடனொன்று பிணைந்து ஒற்றைப்படலாமாக மாறி இருப்பவை என்ற வரி வரும். அதனை தொடர்புறுத்தி பார்க்கையில் கௌதமன் கொள்ளும் தவிப்பை புரிந்து கொள்ள முடிகிறது. இன்னொன்று கதை முடிவில் அவன் தன்னை ஏக்கம் மட்டுமேயான சித்தம் அழைத்து கொள்கிறான். அதாவது மானுடக் கதைகளை கேட்டு மனித உணர்வுகளை அடைந்த பின் மனிதனாக வாழ்ந்து புலனின்பங்களை நுகர முடியாது. இந்த இடத்தில் கதைகளை அர்த்தப்படுத்தி கொள்ளும் நம் இயல்பை நோக்கி ஒரு கேள்வி எழுகிறது. நாம் வாழாத வாழ்க்கைகளை மனித உடல் கொண்டிருப்பதால் மட்டும் தான் பொருள் கொள்கிறோமா? இல்லை அதற்கப்பாலும் வழிகள் உள்ளதா?

இக்கதையில் கௌதமனின் கனவுகளாக வரும் இரண்டு கவியுருவகங்கள் முக்கியமானவை, கர்ணனாக நதியில் மிதப்பதும் மண்டையோட்டின் பொருளின்மையை ஏந்தி பைத்தியமானவனும் அவனது பிச்சியான காதலியும். இரண்டு உருவகங்களும் ஒன்றுடனொன்று இணைந்து முடிவிலா பெருக்கின் பொருளின்மையின் துயரத்திற்கு பின்னும் அளித்து செல்லும் அவா ஏன் ஊற்றெடுக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் நடக்கும் உரையாடல் தருணங்கள், சித்தப்பாவின் ஆடையை பலவந்தமாக அகற்றி பின்னர் மனம் கூசுவது போன்ற விஷயங்கள் கதைகள் உண்டு பண்ணும் அறம் சார்ந்த முக்கியத்துவத்தையும் பேசு பொருளாக்குகின்றன.

எழுத்தாளர் சுசித்ரா

அடுத்து சிறகதிர்வு என்ற கதையின் மைய கேள்வியாக அமைந்திருப்பது, அறிவியல் துணைகொண்டு உடலளவில் மரணத்தை வென்றுவிட்டாலும் மனித மனத்தில் இறப்பை நோக்கி உந்தி செல்லும் விசை இருக்கத்தான் செய்யும் என்ற முடிவின் அடிப்படையிலும் அது ஏன் அப்படி என்ற கேள்வியை கதைச்சொல்லியின் செயல்களின் ஊடாக கண்டறிய முனைகிறது. இன்னொரு கோணத்தில் கலை இறப்பை ஏற்றுக்கொள்வதன் காரணம் யாது என்ற கேள்வியாகவும் விரிகிறது.

கதைச்சொல்லியின் நூற்றி எழுபத்தெட்டாவது பிறந்தநாளின் போது கண்ணில் படும் இறந்த பறவை அவனுக்கு தான் இறுதியாக பார்த்த அம்மாவின் இறப்பையும் இறவா மருந்தை அவளுக்கு கொடுப்பதாக சொல்லியும் ஏன் மறுத்துவிட்டாள் என்ற ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது.  அப்பறவையை புதைக்க முயல்வதும் தன் நினைவுகளில் மூழ்குவதுமாக இருக்கிறான். அப்பறவையை புதைத்த இறுதி கணத்தில் தங்கத்தூசு போல மண்ணை தூவுவதாக உணர்வதன் வழியாக இறப்பின் அர்த்தத்தை உணர்கிறான்.

இறந்து கொண்டிருக்கும் அம்மாவின் அருகே அமர்ந்து தன்னிச்சையாக கொக்கு செய்வதும் அதனை கண்டு அம்மா புன்னகைப்பதும் வெகுகாலம் கழித்து இறந்த பறவையை காண்கையில் அவை நினைவிலெழுவதும் உடன் எமிலி டிக்கன்சனின் கவிதை வரி ஒன்றின் சாரமாக அவரது கவிதையில் எந்த பறவையும் சாவதில்லை என்பவை முக்கியமான மனமாற்றங்களை அவனிடம் உண்டு பண்ணுகின்றன. அவன் கொண்ட அறிவியல் உடலையும் அதன் புலனின்பங்களையும் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்கிறது. கலையோ உடலுக்கப்பால் நம் சொந்த தன்னிலைக்கப்பால் எப்போதும் வாழும் ஒரு வாழ்வை குறிப்புணர்த்தி சொல்கிறது.

தேள் கதையில் தேள் சர்வதிகார ஆட்சி தோற்றுவிக்கும் பயத்தின் குறியீடாக அமைகிறது. சர்வதிகாரம் சொல்லும் மன தைரியமும் உறுதியும் எப்படி நேர்மாறாக பயத்தை தோற்றுவித்து மக்களை கொல்கின்றன என்று பேசுகிறது. ஐரோப்பிய மதக்குறியீடுகளான சிலுவை, லூசிபர் என்பவனவற்றை மறு ஆக்கம் செய்து பயன்படுத்தியிருப்பது புதுமையாக இருந்தாலும் வலுவாக இல்லை.

இரண்டாம் பகுப்பில் ஒளி கதை முக்கியமாக அமைகிறது. சுசித்ரா வளர்ந்து அமைந்த மதுரை நிலத்தில் இருந்து ஃபிலோமீனாவின் கதையை சொல்லும் ஒளி தன்னியல்பில் உள்ளொளியை சூடி கொள்கிறது. கதை முடிவில் ஆரோன் அவளுக்கு மீட்டுத்தரும் ஒளி, அவளது உள்ளொளி தான். கனவுகளை நிறைக்கும் ஒளி. இத்தகையாக கதைக்கு முன்னோடியாக சந்திரா தங்கராஜ் போன்றோரின் கதைகளை குறிப்பிடலாம். பெண்கள் தங்கள் வளர்ந்த நிலத்தை நினைவில் மீட்டு அங்கிருந்து கதைகளைப் புனைகையில் மனதின் ஒளிமிக்க பக்கங்களின் மீது கவனம் குவிக்கிறார்களோ என எண்ண இடமிருக்கிறது.

புதியதொரு ஆணின், கலைஞனின் வருகையும் ஆரோனுக்கும் ஃபிலோமீனாவுக்குமான உறவு தொடங்கி விரிந்து அவள் தன்னை கண்டுகொள்ளும் இடம் கலைத்தன்மையுடன் சொல்லப்பட்ட கதையாக ஒளி அமைகிறது. அந்த நிலத்தை ஆரோன் ஒளியலையாக காண்பதும் இறுதியாக அவளை குதிரையாக வரைந்து தருவதும் பொருத்தமானவை. அவனது ஒவியங்களை அவளது கண்களின் வழியாக காண்பதும் கச்சிதமாக அமைந்துள்ளன.

இதற்கடுத்து பதின்பருவத்தின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரைக்குமான கதைகளாக நிற்கும் ஹைட்ரா, ஊஞ்சல், நட்சத்திரங்கள் பொழிந்து கொண்டிருக்கின்றன ஆகிய மூன்று கதைகளை பார்க்கலாம்.

இவற்றில் ஹைட்ரா என்னும் நுண்ணுயிரின் பெயரை தலைப்பாக வைத்து லக்ஷ்மி – ஐஸ்வர்யா என்கிற இரட்டை தோழியரின் நட்புக்கு படிமமாக அந்நுண்ணுயிரின் இயல்பை பொருத்த ஆசிரியர் முயற்சி செய்துள்ளார் என்பது தெரிகிறது. ஆனால் அது அடையாளம் சுட்டலுக்கு அப்பால் பெரிய விளைவை வாசக மனதில் ஏற்படுத்தவில்லை.

ஊஞ்சல் வலுவான சித்தரிப்பாக பருவ பெண்ணொருத்தி தன் ஆளுமையை எப்படி தன் பாட்டி, அம்மாவை முன்வைத்து வரையறுத்துக் கொள்கிறாள் என காட்டுகிறது. அனு தங்கம்மா பாட்டியும் யமுனம்மாவும் கூந்தலை எப்படி வைத்துள்ளார்கள் என்பது பற்றியே பெரும்பாலும் சிந்தனை ஊஞ்சலில் முன்னும் பின்னும் சென்று வருகிறாள். அதன் தூல வடிவமாக அவள் நின்று கொண்டிருக்கும் கங்கைக்கு நடுவில் அமைந்துள்ள ரிஷிகேஷின் ஊஞ்சல் இருக்கிறது.

கூந்தலை பற்றி நினைக்கையில் அதனை ஆசாரத்திற்கும் நவ நாகரீக நாசூக்குக்கும் இடைப்பட்ட சமநிலையாகவே காண்கிறாள். இழந்த கூந்தலை பாட்டி பேத்தியில் கண்டு சீராட்டுகிறார். இந்த கதையில் கூந்தல் மூன்று தலைமுறை பெண்களில் எவ்வண்ணம் மாறுகிறது என்பதாகவும் அதனூடாக அவர்களது வாழ்க்கை பிணைப்பும் வெளிப்படுகிறது. பாட்டிக்கு அது இளமையின் கனவாக, அம்மாவுக்கு ஆசாரத்திற்கும் பணிச்சூழல் நாகரீகத்திற்குமான கோடாக, மகளுக்கு தேவைக்கும் அழகுக்கும் ஏற்ப மாறுவதாக என மாற்றம் காண்கிறது. பெண்களை பொருத்தவரை கூந்தல் முற்றிலும் நடைமுறை சார்ந்த அர்த்தத்தை மட்டுமே கொள்கிறது போலும்.

நட்சத்திரங்கள் பொழிந்து கொண்டிருக்கின்றன என்ற வளரிளம் பெண்ணின் சுதந்திரத்தை சமூகமாக நாம் வெட்டிவீசுவதும் மறுத்தால் அவளை பைத்தியமென்று சொல்வதன் நிலையையும் கவித்துவமாக கூற முயலும் கதை என்பதே என் வாசிப்பு. இக்கதையின் கவித்துவ தொடர்ச்சியையும் செறிவையும் சுசித்ரா எழுதி இந்த ஆண்டு(2024) வெளியான மதுரம் போன்ற கதையில் பார்க்க முடிகிறது. நட்சத்திரங்கள் பொழிந்து கொண்டிருக்கின்றன என்ற வர்ணனைகளின் வழியாக அழகிய கனவுலகம் ஒன்றை உருவாக்குகிறது.

மூன்றாவது பகுப்பாக தத்துவார்த்தமான கதைகளாக லீலாவதின் தத்துவங்கள் மற்றும் அலாத சாந்தி ஆகியவை நிற்கின்றன. இவை கதை என்ற அளவில் வாசிக்க இனிமையாக உள்ளன. எனினும் ஆசிரியரின் பின்குறிப்பும் வலிந்து திணித்தலும் இல்லாமலேயே தன்னியல்பாக தத்துவ ஆழத்தின் சுவையை சென்று தொடாமல் நின்றுவிடுகின்றன.

ஒரு மழைநாள் தொகுப்பில் தனித்து நிற்கும் கதையாக அமைகிறது. பெரியப்பா ஆதரவில் வாழும் தம்பி மகனும் அவனது அம்மாவும் பெரியப்பாவுக்கும் அப்பாவுக்கும் இருக்கும் பிணக்கு, தன் அம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும் இருக்கும் நாசூக்கான உறவு என எல்லாம் பனிமூட்டமாகவே அமையும் கதை. வேண்டியளவு வெளிப்படவில்லை என்றே நினைக்கிறேன்.

சக்திவேல்

எழுத்தாளர்களின் முதல் தொகுப்புகளில் பொதுவாக காணப்படும் மொழி சார்ந்த சில சிதறல்கள், வடிவத்தில் ஆங்காங்கே காணப்படும் பிசிறுகளும் களைவுகளும் ஒளி தொகுப்பிலும் காணப்படுகிறது.

ஒளி, யாமத்துக்கும் யானே உளேன், சிறகதிர்வு ஆகியவற்றை முக்கியமான முதன்மை கதைகளாகவும் ஊஞ்சல், நட்சத்திரங்கள் பொழிந்து கொண்டிருக்கின்றன ஆகியவற்றை இரண்டாவது வரிசையிலும் மற்றவற்றை பிறகும் அடுக்கலாம். வெவ்வேறு கனவுகளின் வண்ணங்களாக அமையும் ஒளி, ஒரு தொகுப்பாக சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்குகிறது.

*

சுசித்ரா – தமிழ்விக்கி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *