வரலாறு என்பது கடந்தகாலம் மட்டுமல்ல – R.உமாமகேஸ்வரி

R.உமாமகேஸ்வரி குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியர்; பத்திரிக்கையாளர். தமிழ்ப் பகுதியின் அரசியல் சமூகம் பண்பாடு சார்ந்த ஆய்வுகள் நிறைய ஆங்கிலத்திலேயே வெளியாகியிருக்கின்றன. அவர்களிலும் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுக்காரர்கள். இந்த வரிசையில் தமிழ்ப் பகுதி குறித்த கலாச்சார ஆய்வாளர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் உமாமகேஸ்வரி. ஆனால் இவர் தமிழ் பின்புலத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழகம் பற்றி எழுதியிருக்கும் ஆய்வுகளுள் சமகால அரசியல் அடையாளங்கள் பற்றியதே அதிகமாக இருக்கிறது. இப்பின்னணியில் விதிவிலக்காக கலாச்சார ஆய்வில் ஈடுபட்டவர் உமாமகேஸ்வரி. எனினும் இவர் பெயர் தமிழ்நாட்டு அறிவுத்தளத்தில் சொல்லப்படுவதில்லை. ஒன்று இவர் உடனடி கவனம் பெறாத பண்பாட்டு ஆய்விலிருப்பது. இரண்டு தமிழகத்தில் சிறுபான்மை எண்ணிக்கையிலிருக்கும் ஜைனர்கள் பற்றி ஆய்வு செய்தவர்.
உமாமகேஸ்வரி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வரலாற்றுத் துறையில் எம்ஃபில் மற்றும் பிஎச்டி பட்டங்களை முடித்தவர். ’Reading History with the Tamil Jainas: A study of Identity, memory and marginalisation (2017)’ என்பது தமிழ்ஜைனர்கள் பற்றிய இவர் ஆய்வு நூலாகும். ’From Possession to freedom : The journey of Nili – Nilakaci’ என்பது நீலகேசி பற்றிய நூலாகும். இவ்வாறான கலாச்சார ஆய்வுகளுக்கு முற்றிலும் மாறாக கோதாவரி நதி பற்றி ’when godavari comes: People’s History of a River (A journey in the zone of the Dispossessed)2014’ என்ற நூலை எழுதினார். தற்போது இமாச்சல் பிரதேசம் சிம்லாவிலேயே தங்கி ஆய்வு செய்துவரும் உமாமகேஸ்வரி 2017-18 ஆம் ஆண்டிற்கான பிரான்ஸ் நாட்டின் the Nantes Institute for Advanced Study ஆய்வு உதவியையும்,2014 – 16 ஆம் ஆண்டிற்காக சிம்லா IIAS ஆய்வு உதவியையும் பெற்று ஆய்வினை மேற்கொண்டார். அரசியல், பண்பாடு, சூழலியல் சார்ந்து இந்து, ப்ரண்ட்லைன், வயர்,செமினார் ஆகிய ஏடுகளில் எழுதி வரும் சுயாதீன பத்திரிக்கையாளராகவும் இருந்து வருகிறார்.
2025 பிப்ரவரி 27, 28 தேதிகளில் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் (நன்றி:பேராசிரியர்கள் ந.கோவிந்தராஜன், அரிபாபு,ஷோபியா பெஞ்சமின்) கலந்து கொள்ள வருகை தந்த உமாமகேஸ்வரியிடம் முத்துப்பாண்டி, ராஜகுமாரன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் எடுத்த நேர்காணல் இது.
-ஸ்டாலின் ராஜாங்கம்
*
உங்களுடைய பிறப்பு, இளமைக்காலம் ஆகியவற்றிலிருந்து இந்த நேர்காணலை தொடங்கலாமா?
நான் மும்பை நகரில் 1969 ஆம் ஆண்டில் பிறந்தேன். எனக்கு முன்பே அண்ணனும் அக்காவும் பிறந்திருந்தார்கள். தொடக்கக் கல்வியை மும்பையிலேயே முடித்திருந்தார்கள். நான் பிறந்த ஒரு வருடத்திலேயே குடும்பத்தோடு டெல்லிக்குச் சென்று விட்டோம். என்னுடைய குழந்தைப் பருவம் டெல்லியில் தான் கழிந்தது. ஏழாம் வகுப்பு வரை டெல்லியில் படித்தேன். பிறகு நாங்கள் ஹைதராபாத்துக்கு சென்றுவிட்டோம். அப்பா தமிழ்நாட்டில் சிவகங்கை அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். அம்மாவுக்கு கோயம்புத்தூர் தான் சொந்தஊர். அவர்களுக்கு திருமணமானது திண்டுக்கல்லில். திருமணத்திற்கு பிறகு இருவரும் மும்பை சென்றார்கள். அங்கு நிறைய வேலைகளில் இருந்தார்கள். டெல்லியில் அப்பா ராக்பெல்லர் பவுண்டேஷனில் ஸ்டெனோவாக இருந்தார். 1970 – இல் ICRISAT மையத்தில் தனி செயலாளராக பணியாற்றினார். அம்மையத்தின் ஹைதராபாத் பணிக்காக தான் ஹைதராபாத் வந்தோம். 7 ஆம் வகுப்புக்கு பிறகு ஹைதராபாத்தில் படித்தேன். பிறகு கஸ்தூரி பாய் பெண்கள் கல்லூரியில் இண்டர் மீடியட்டும் இளநிலை படிப்பும் (அரசியல் அறிவியல், வரலாறு, ஆங்கில இலக்கியம்) படித்தேன். தொடர்ந்து எம்.ஏ, எம்ஃபில், பிஎச்டி படிப்புகளை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தேன்.
நீங்க JNU (டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகம்) சென்றதற்கான காரணம் என்ன? இன்றைக்கு தமிழகத்தில் வரலாறு பற்றிய படிப்பென்பது வேறு படிப்பை படிக்க வாய்ப்பில்லாதவர்கள் படிப்பதாக மாறிவிட்டது. அதேபோல், நீங்க JNU போகும் போது அங்கு வரலாற்று படிப்பின் நிலை என்னவாக இருந்தது?
எனக்கு சின்ன வயதிலிருந்து தொல்லியலாளராக (Archaeologist) ஆக வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. அப்போதெல்லாம் என்னுடைய வகுப்பு தோழிகளுக்கு Archaeologist என்பதற்கு Spelling கூட தெரியாது. பழைய பொருட்களை எல்லாம் சேகரிப்பது எனக்குப் பிடிக்கும். எங்க அப்பாவும் அதே மாதிரி பழைய பொருட்களை தேடித் தேடி சேகரிக்கக் கூடியவராக இருந்தார். ஹைதராபாத்தில் இருந்த போது என் அண்ணன் விஜயவாடாவில் பத்திரிக்கையாளராக இருந்தார். அவர் தான் JNU சேர்க்கை விளம்பரத்தை கொடுத்து விண்ணப்பிக்க சொன்னார். விண்ணப்பித்த நான் நுழைவுத் தேர்வும் எழுதினேன்.
கலாச்சாரம் மற்றும் சமூக வரலாறு பற்றி படிக்க டெல்லி JNU ஆய்வுச்சூழல் உங்களுக்கு சாதகமாக இருந்ததா?
நான் ஹைதராபாத்தில் இருந்தபோதே ரொமிலா தாப்பரோட புத்தகத்தை எங்க அப்பா வாங்கிக்கொடுத்து படிக்க வைத்தார். ஜெஎன்யுவில் சிறின் ரத்னாகர், ரொமிலா தாப்பர், பிபான் சந்திரா, நீலாத்ரி பட்டாச்சார்யா, பி.டி.சட்டோபாத்யயா என்று பெரிய ஸ்காலர்ஸ் இருந்தார்கள். ஜெஎன்யுவில் நிறைய வாசிக்கிற வாய்ப்பும் சூழலும் சுதந்திரமும் இருந்தது.
உங்கள் அப்பா என்ன படித்திருந்தார்?
எங்க அப்பா பி.ஏ.படித்தவர் என்று நினைக்கிறேன். எங்க அம்மா பியுசி வரை படித்திருந்தார். இந்தியிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அப்பாவுக்கும் அம்மாவுக்கு புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்துது. Music, Art, dance எல்லாம் அப்பா அம்மாவுக்கு பிடிக்கும். இந்த பின்புலத்திலிருந்து தான் நான் வளர்ந்தேன். சாந்தி நிகேதன் கல்லூரியில் எனக்கு Archaeology படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் அங்கு படிக்கப் போகவில்லை. எனக்கு எழுத்தாளராக தான் விருப்பம். JNU நுழைவுத் தேர்வில் கேட்டிருந்த கேள்விகள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தன. Do Wars change the course of history? என்ற கேள்வியை நான் பதிலளிக்க தேர்ந்தெடுத்தேன். எம்.ஏ சேர்ந்தேன். அதன் பிறகு cult of Murugan என்கிற தலைப்பில் M.phil முடித்தேன்.
M.Phil ஆய்வுக்கு முருகனை தேர்ந்தெடுத்தது ஏன்?
முருகன் படம் எங்கள் வீட்டில் இருந்தது. அம்மாவுக்கு அவர் பிடித்த கடவுள். எனவே ஒரு ஒத்துணர்வு இருந்தது. டெல்லியின் கடவுள்களோடு பார்க்கும் போது இவரின் உருவம் வேறு மாதிரி இருக்கும்.டெல்லி ஆர்.கே.புரத்தில் இருக்கிற மலைமந்திர் எனும் முருகன் கோயிலுக்கு அம்மா அடிக்கடி என்னை கூட்டிக்கொண்டு போவார். நாங்கள் ஹைதராபாத்தில் இருக்கும் போதும் வெங்கடாபுரத்தில ஒரு சின்ன முருகன் கோயில் இருந்தது. அந்த கோயிலை 1916 ஆம் ஆண்டு தமிழ் பகுதியிலிருந்து இராணுவத்திற்கு சென்ற ஆதிதிராவிடர்கள் கட்டியிருந்தார்கள். மற்ற முருகன் கோயில்களை விட இவர்கள் கட்டியது வித்தியாசமாக இருந்தது. இந்த கோயிலின் வடிவம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. உருவம் வெள்ளையாக இல்லாமல் கருப்பாக இருக்கும். வள்ளி தெய்வயானை கூட இருக்க மாட்டார்கள். எனவே அக்கோவிலை நெருக்கமாக உணர்ந்தேன். ஏ.கே ராமானுஜம் எழுதிய Poems of Love and War எனும் நூலை நான் JNU ல படித்தேன். எனக்கு அந்த மொழிபெயர்ப்பு புத்தகம் ரொம்ப புடிச்சது. தமிழ் படிக்க விருப்பம் ஏற்பட்டது. அம்மா சொல்லித் தந்தார். இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உருவானது. எம்ஏ படிப்பில் செமினார் பேப்பர் ஒன்றை சமர்பிக்க வேண்டும் அதற்கான கருத்தரங்கில் சங்கக் கவிதைகளை வரலாற்று நிலவியல் பின்புலத்தில் வைத்து திணை பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரையாக சமர்பித்தேன். பி.டி சட்டோபாத்தியா என்பவர் தான் அந்த கட்டுரைக்கு நெறியாளராக இருந்தார். எனக்கு சமயத்தின் மேல் சின்ன வயதிலிருந்தே ஆர்வமிருந்தது. அவற்றைப் புரிந்துகொள்வதற்கு முயற்சித்து வந்தேன்.
எம்.ஏ. படிப்பின் இந்த பின்புலத்திலிருந்து தான் m.phil ஆய்வுக்கான தலைப்பை நீங்க தேர்ந்தெடுக்கறீங்க? இந்த ஆராய்ச்சியில் உங்களுக்கு கிடைத்த ஆய்வு முடிவு என்ன?
நான் திருமுருகாற்றுப்படை நூலை அடிப்படையாகக் கொண்டு ஆய்வை மேற்கொண்டேன். ஆனால், வெறுமனே நூலகத்திற்கு சென்று ஆய்வை மேற்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். களத்திற்குச் சென்று முருகனைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருந்தேன். முருகனின் அறுபடை வீடுகளை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்பதே என்னுடைய திட்டம். அப்பாவும் நானும் அறுபடை வீடுகளுக்கு சென்றோம். ஆனால் ஐந்து படை வீட்டிற்கு மட்டுமே சென்று கள ஆய்வு செய்ய முடிந்தது. முருகன் ஆராய்ச்சிக்குப் பிறகு தமிழ் கற்றுக்கொண்டேன். சில கையெழுத்துப் பிரதிகளைப் படிக்கவும் பழகிக்கொண்டேன். திணையில் சொல்லப்பட்ட முருகனுக்கும், திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்பட்ட முருகனுக்கும், கோயில்களில் இருக்கக் கூடிய முருகனுக்கும் இடையேயிருந்த வேறுபாடுகளை கண்டறிந்தேன். அதன்பிறகு தான் முருகன் வழிபாட்டில் நிறைய வேறுபாடுகள் இருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது. சிவனின் புத்திரனாகச் சொல்லப்படுகின்ற முருகனை கந்தபுராணத்தில் படித்தேன். தொன்மத்தைப் பற்றி படித்தேன். கிடைக்கிற எல்லா கையெழுத்துப் பிரதிகளிலும் பிராமணர்களுக்கு கொடுத்த பிரம்ம தேயங்கள் பற்றிய குறிப்புகளே அதிகமாக இருந்தன. அறுபடை வீடுகளை சுற்றிப் பார்க்கும்போது நிறைய இடங்களில் ஜைன தடயங்கள் இருந்தன. இதன்படி முருக வழிபாட்டிடம் தொடக்கத்தில் சமண இடமாக இருந்திருப்பதை அறிய முடிந்தது. அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் சென்றது. சமணச் சிற்பங்களை முருகக் கடவுளாக மாற்றியதைப் பற்றியும் என் ஆய்வின் வழியாக சொன்னேன்.
நிலைமை இவ்வாறிருக்க நீங்கள் முருகன் பற்றி ஆய்வைத் தொடராமல் முனைவர்பட்ட ஆய்வில் சமணர்கள் குறித்த ஆய்வுக்கு சென்றது ஏன்?
முருகன் பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் ’தமிழ் சமணர்கள்’ குறித்த ஆய்வுகள் அதிகம் செய்யப்படவில்லை. குறிப்பாக ஆங்கில ஆய்வுலகில் இல்லை என்று சொல்லலாம். அது மறைக்கப்பட்ட வரலாறாகவே இருக்கிறது. எல்லாரும் M.Phil – லில் எடுத்த ஆய்வை தான் பின்னால் முனைவர் பட்ட ஆய்வு வரை தொடர்வார்கள். ஆனால் எனக்கு சமணர்கள் பற்றி ஆர்வம் இருந்ததால் முனைவர் பட்டத்தில் சமணர்கள் குறித்த ஆய்விற்கு சென்றுவிட்டேன். இவர்களின் திரையிட்ட வரலாற்றைப் பற்றி யார் எழுதுவார்கள்? சேயோனிலிருந்து சுப்பிரமணியன் ஆனார்; அதில் அதற்கு பிறகு என்ன எழுதமுடியும்? பிரம்மதேயம் தேவதானம் பற்றியா? அதெல்லாம் வேண்டாம் என்றுத் தோன்றியது. அதனால் தான் சமணம் பற்றிய தலைப்பில் ஆய்வு செய்தேன்.
உங்களுக்கு பிரம்மதேயம் மற்றும் தேவதானங்கள் பற்றிய விமர்சனப் பூர்வமான அணுகுமுறை எப்படி வந்தது?
நான் டெல்லி மாதிரியான நகர்ப்புறப் பகுதிகளில் வளர்ந்ததால் என் மீது சாதி பற்றியான கேள்விகள் யாரிடமிருந்தும் வந்ததில்லை. நாங்கள் எந்த சாதி என்ற நினைவுகள் வளரிளம் பருவங்கள் வரை இருந்ததில்லை. அதனால் தான் JNU வில் குறிப்பாக பழமையான வரலாறுகள் பற்றியும், கூடவே டி.டி. கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா மாதிரியான நிறைய வரலாற்றாசிரியர்கள் நூல்களையும் படித்து புரிந்ததால் சமூகவியல் அறிவை வளர்த்துக் கொண்டேன். நம்முடைய சமூக வரலாற்றை விமர்சனபூர்வமாக எழுதுவது எப்படி என்பதும் புரிந்தது. முருகன் ஆய்வு இவ்வாறு தான் என்னை சமண ஆய்விற்கு நகர்த்தியது. 1996இல் என்னுடைய எம்ஃபில் முடிந்தது. பெரிய அளவுக்கு பொருளாதார வசதிகள் இல்லாமல் இருந்தன. எங்க அப்பாவுக்கு ஒவ்வொரு மாதத்திற்கும் 600 ரூபாய் ஓய்வூதியம் வரும். அப்பணத்தை எனக்குப் படிக்க அனுப்பிவிடுவார்கள். அதனால் டெல்லியில் சின்ன சின்ன வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். டியூசன் எடுப்பது மாதிரியான சில வேலைகளை செய்தேன். அதன் பிறகு ஆய்வியல் நிறைஞர் பட்டத்தோடு என்னுடைய படிப்பை முடித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் எங்க அப்பா தான் என்னை முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள தூண்டினார்.

நீங்கள் முனைவர் பட்டத் தலைப்பை எடுத்ததிலிருந்து உங்களுக்கு கிடைத்த கருதுகோள், புதிதாக கிடைத்த திறப்புகள் என்னென்ன?
முனைவர் பட்ட ஆய்வை தொடங்கியதிலிருந்து நிறைய தடைகள் ஏற்பட்டன. குறிப்பாக 1996-1997 வாக்கில் மாணவர் இயக்கங்களின் நிறைய போராட்டங்கள் நடத்தன. அதனால் நிறைய இடர்பாடுகள் இருந்தன. ஆய்வுச் சுருக்கத்தை இரண்டு வருடங்களில் ஆசிரியர் குழுவிற்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்பட்டது. இக்காலக்கட்டத்தில் நிறைய கேள்விகள் எனக்கு எழுந்தன. மக்களிடம் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி உத்தரகாண்டில் ஓராண்டு வேலை செய்ய ஆரம்பித்தேன். அங்கே இந்த ஜைனம் பற்றிய ஆய்வு நூல்களை நிறைய எடுத்து போய் படித்தேன். அங்கேயே ஆய்வுச் சுருக்கம் எழுதி ஒப்படைத்தேன். அது ஒப்புதல் ஆன தகவலை சொல்ல சென்னையிலிருந்த அப்பாவுக்கு போன் பண்ணி சொன்னேன். அதுதான் என் அப்பா என்னிடம் பேசிய கடைசிப் பேச்சு. அம்மாவும் அண்ணனும் சென்னையிலேயே இருந்தார்கள். நானும் சென்னை திரும்பிவிட்டேன். அப்போது தான் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நவீன வரலாறு கற்பிக்க தற்காலிக பணிவாய்ப்பு கிடைத்தது. அங்கே ஒரு மாணவி, தன் தோழி தமிழ் ஜைனப் பின்புலத்திலிருந்து வந்ததாக என்னிடம் சொன்னாள். அப்போது தான் எனக்கு நானே கேட்டு வந்திருக்கிற கேள்வியின் அர்த்தங்கள் புரிந்தன.

தமிழ் ஜைனர்கள் பற்றிய உங்கள் தேடல் மற்றவர்களால் எப்படி பார்க்கப்பட்டது?
குறிப்பிட்ட சாதி பற்றி வரலாற்றைத் தேடுவது வேண்டாத வேலை என்று தான் சம்பக லட்சுமி உள்பட நிறைய பேர் பார்த்தார்கள். ஆனால் எனக்கு சமூகங்கள் பற்றிய வரலாற்றைப் பற்றி படிக்க வேண்டுமென்று நிறைய ஆர்வம் இருந்தது. சம்பகலட்சுமி ஓய்வு பெற்றதால் எனக்கு நெறியாளராக குணால் சக்ரவர்த்தி என்கிற பேராசிரியர் அமைந்தார். அவருக்கு தமிழ் தெரியாது. எனக்கு சுதந்திரம் தந்தார். பிறகு தான் இந்த ஆய்வை என்னால் செய்ய முடிந்தது. ஆனால், என்னுடைய ஆய்வில் சாதி பற்றி மட்டும் எழுதவில்லை. கல்வெட்டு ஆதாரங்கள், நினைவுச்சின்னங்கள் போன்ற பலவற்றை கண்டறிந்து எழுதினேன். நான் முதன்முதலில் தமிழ்நாட்டு திருப்பருத்திக்குன்றத்திற்கு (ஜினகாஞ்சி) சென்றபோது அங்கே ஒரு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அகத்தியப்ப நயினார் இருந்தார். அவரிடம் பேச முடிந்தது.நிறைய மக்கள் அறிமுகமும் கிடைத்தது. அவர்களில் நிறைய பேர் அன்பளிப்பாக நிறைய தமிழ் புத்தகங்களை கொடுத்தார்கள்.
உங்களுடைய தேடல் எவ்வாறு அமைந்தது? உங்கள் ஆய்வு முடிவில் தமிழ் ஜைனர்கள் என்போரை அடையாளப்படுத்தி ஏற்க வைக்க முடிந்ததா?
நிறைய பேர் அதென்ன ”தமிழ் ஜைனர்?” என்ற கேள்வி கேட்டார்கள். ஆனால், அப்படி ஒரு மக்கள் குழு உண்மையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னேன். இந்த வகையில் அவர்களை தேடியது எனக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. என்னுடைய ஆய்வைப் பற்றி கொஞ்சம் புரிந்தவர்கள் இருந்தார்கள். லண்டனில் Soas என்ற இடத்தில் Dr.peter flugel என்று ஒருவர் இருந்தார். அவர் என்னை இந்த ஆய்விற்கு ஊக்கப்படுத்தினார். என்னுடைய ஆய்வை முதன்முதலில் பார்த்துவிட்டு ‘இத நீ புத்தகமா வெளியிட வேணும்ணு’ சொன்னார். பிறகு பேராசிரியர் பத்மனாப் ஜெயினி என்பவருக்கு நான் கடிதம் எழுதி அனுப்பினேன். அதை பார்த்துவிட்டு நீண்ட கடிதத்தோடு அவருடைய ஒரு கட்டுரையையும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து (பேர்க்லி) அனுப்பினார். இந்த மாதிரியான ஆட்களால் எனக்கு நிறைய நம்பிக்கை வந்தது.

இவற்றிற்கிடையில் பத்திரிக்கையாளர் என்ற இடத்திற்கு எப்படி சென்றீர்கள்? அதற்கும் இந்த ஆய்வுக்கும் என்ன தொடர்பு?
1999 ஆம் ஆண்டில் அப்பா இறந்து விட்டார். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரில் வேலைக்கு பிறகு நான் ஹைதராபாத்திலிருந்த எங்கள் அக்கா வீட்டுக்கு போயிருந்தேன். அங்கே இருக்கும் போது தான் எனக்கு செய்தித்துறையில் வேலை பார்க்க வேண்டுமென்று ஆசை வந்தது. 2000 ஆம் ஆண்டில் Deccan Chronicle செய்தி நிறுவனத்துக்கு போனேன். அப்போது அங்கே ஒரு திரைப்பட விழா நடந்தது. அதை ஒரு வாய்ப்பு என்று கருதி சென்றேன். அந்த எடிட்டர் என்னை free lancer ஆகவே இருக்க சொல்லி அறிவுறுத்தி இருந்தார். அப்படியாகத் தான் என்னோட பத்திரிகையாளர் என்கிற நிலை உருவானது. அதன் பிறகு அகமதாபாத்தில் இருந்த சூன்யா பவுண்டேஷனில் ஆய்விற்கான நிதியுதவி கொடுப்பதை அறிந்து அவர்களிடம் என்னுடைய ஆய்வு முன்னுரையையும், ஆய்விற்குத் தேவைப்படுகிற பட்ஜெட்டையும் சமர்பித்தேன். அது கிடைத்த பிறகு என்னுடைய ஆய்வில் முழுமையாக ஈடுபட்டேன். அந்த நிதியுதவியில் தான் என்னுடைய முதல் கம்ப்யூட்டர், பிரிண்டர் எல்லாம் வாங்கினேன். கள ஆய்வுக்காக தமிழ் ஜைன கிராமங்களுக்கும் சென்றேன். 2006 ஆம் ஆண்டில் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வை முழுமையாக எழுதிவிட்டேன். 2004 ஆம் ஆண்டு அம்மா இறந்ததால் அவரும் என்னுடைய ஆய்வேட்டை பார்க்கவில்லை. ஆனால் 2015ஆம் ஆண்டு திரும்ப நான் Reading History With Tamil Jainas A study on identity, memory and marginalization புத்தகம் எழுதுவதற்கு களஆய்வுக்குப் போனேன். ஏனென்றால் என்னுடைய ஆய்வு எழுதியதை திரும்ப கூறாமல் எப்போதும் புதுமையாக இருக்க வேண்டுமென்று விரும்பினேன்.
Reading History With Tamil Jainas A study on identity, memory and marginalization புத்தகத்தில் வைக்கின்ற வாதங்களைத் தொகுத்துக் கொள்ளலாமா?
சமூக வரலாற்றை படிப்பது பற்றி இங்கே ஒரு கற்பிதம் இருக்கிறது. ஆனால் அது உண்மையிலேயே அப்படியெல்லாம் இல்லை. எது பெரும்பான்மைச் சமூகமாக இருக்கிறதோ அதற்குரிய சமூக வரலாறாக மாறிவிட கூடாது. கலாச்சார மேலாதிக்கம் என்பது ஒரு விஷயம். அதுவே ஒரு பொதுவான சமூக வரலாறாக மாறிவிட கூடாது என்ற ஆய்வில் தான் நான் முதன்மையாக ஈடுபட்டுட்டிருந்தேன். சமூகத்தில் எண்ணிக்கைக் குறைவாக இருக்கிற ஒரு சில சமூகங்களின் அடையாளம் நீர்த்துப் போகாமல் இருக்கவும், அது மைய நீரோட்ட வரலாற்றில் அடையாளப்படுத்தப்படாமல் இருக்கக் கூடாது என்பதும் தான் என்னுடைய நிலைப்பாடாக இருந்தது. நிகழ்காலத்திலிருந்து ஏன் பின்னாடி போகக் கூடாது என்று நினைத்தேன். ஏனென்றால், history is not just past. History is also what is now. அப்போது தான் வரலாற்றை ஒரு முழுமையான பார்வையோடு அணுக முடியும் என்று நான் நம்புறேன். இந்த மாதிரி விளிம்புநிலை சமூகக்குழுக்கள் பற்றிய ஆய்வை முழுமையாக செய்ய களஆய்வோடு, சமூக வரலாறும் தெரிந்தால்தான் நம்முடைய ஆய்வுகள் இன்னும் ஆழமாக இருக்கும். அவர்கள் (தமிழ் ஜைனர்) தமிழ் அடையாளத்தை சிலப்பதிகாரம், நன்னூல் மாதிரியான இலக்கியங்கள் வழியாகவும் காத்து வந்தார்கள்.

குறள், தொல்காப்பியம் கூட அவர்களுடையது தான். ஆனால் அதனை அவ்வளவு வெளிப்படையாக அவர்கள் உரிமை கோருவதில்லை இல்லையா?
ஆமாம். அவை அவர்களுடையது இல்லை என்பது போல் பெரிய விவாதம் ஆக்கிவிட்டார்கள் எல்லோரும். குறளை தமிழ் சமண நூல் என்று கருதுகிறேன். அது ஏன் என்பதை என்னுடைய நூலில் ஒரு அத்தியாயம் ஒதுக்கி விவாதித்திருக்கிறேன். நான் இந்த புத்தகத்தை எழுதும்போது மக்களிடம் வாய்மொழியாக புழங்குகிற கதைகளைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டு அதன் பின்னால் கல்வெட்டுகளைப் படித்துப் பார்ப்பேன். அப்போது சில விஷயங்கள் ஒத்துப்போகும். அதாவது மக்களுடைய வாய்மொழிக் கதைகளில் இருப்பதும் ஒரு வரலாறுதான். ஆனா அதை ஆவணங்களில் தேட முடியாது. ஜைனர்கள் சொல்கிற கதைகள் எல்லாம் கல்வெட்டுகளில் கிடைக்காது. நான் கதைகளை வாசித்து கதைகளில் இணைத்துப் பார்த்தேன்.
முனைவர் பட்ட ஆய்வை முடித்து விட்டு ஜைனம் பற்றிய உங்களின் புத்தகத்தை எழுதும்போது இவை இரண்டுக்கும் உண்டான மாற்றங்கள் அல்லது வேறுபாடுகள் என்னென்ன?
என்னென்ன வேறுபாடுகள் என்பது இந்த மொத்த சிந்தனைகளில் மொழி அரசியலைப் பற்றி என்னால் தெரிந்துக் கொள்ள முடிந்தது. நிறைய சைவர்கள் ஜைனர்களோட எழுத்துக்களை சைவமாக மாற்றிவிட்டார்கள். ஆறுமுக நாவலர் பற்றி மயிலை சீனி வேங்கடசாமியே எழுதியிருப்பார். நாவலர் தவறாக எழுதியதைப் பற்றி ஜீவபந்து ஸ்ரீபாலும் எழுதியிருப்பார். உ.வே.சா என் சரித்திரத்தில் “என் ஜைன நண்பர்கள்” என்று எழுதியிருப்பார். இவ்வளவு எழுதப்பட்டும் கூட நிறைய பேர் அவற்றை அடையாளப்படுத்துவது இல்லை. லட்சுமிசுப்பிரமணியன் போன்றோரெல்லாம் பக்தி, இசை என்று எந்த பிரச்சினையும் இல்லாதது போல் எழுதியிருக்கிறார்கள். அதெல்லாம் நான் இந்த புத்தகம் எழுதும்போது புதியதாக கண்டறிந்து எடுத்து எழுதினேன்.
நீங்க செய்த ஆய்வுகள் மூலமாக ஆய்வு நெறிகள் (methodology) எந்தெந்த மாதிரியாக அமைந்தன? நம்முடைய ஆய்வு நெறிமுறைகளில் மாற்றங்கள் தேவை என்று உங்களுக்கு தோன்றுகிறதா?
சமூக வரலாறு பற்றி ஆய்வு செய்ய வேண்டுமென்று முடிவெடுத்து, ஜைனர்கள் பற்றிய ஆய்வுகளை தேடிய போது தமிழ்நாடு சார்ந்ததாக எதுவும் வந்திருக்கவில்லை. ஆங்கிலத்தில் ஜைனர்கள் பற்றி தேடிய போது குஜராத் பகுதி பற்றி தான் எழுதியிருந்தார்கள். தமிழ்நாட்டு ஜைனர்கள் பற்றி யாரும் எழுதியிருக்கவில்லை. குறிப்பாக, ஸ்வேதம்பரர்களுடைய நிறைய சடங்குகளை ஆவணம் செய்திருக்காங்கன்னு தெரிந்தது. அங்கே அவர்களிடம் ஒரு ஆய்வுமுறை இருந்தது. ஆனால் அவர்கள் கல்வெட்டுப் பதிவுகளை பெரிதாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. நான் அப்படியில்லை. ஜைனர்களின் மொழியடையாளம் பற்றி பெரிய அளவுக்கு இங்கு பார்வை இல்லை. அதனால் தான் இங்கே (தமிழ்நாடு) முக்கியமான விஷயமாக நான் எடுத்துக்கிட்டேன். தமிழ் ஜைனர் சமூகத்தைத் தேடி கள ஆய்வுக்கு போன பின்னால் நிறைய தெரிந்து கொண்டேன். மயிலை சீனி வேங்கடசாமியை தெரிந்து கொண்டதே ஜைன சமூகத்திடம் சென்ற பின்பு தாம்.
அந்தப் பகுதிகளில் இருக்கும் ஜைனர்கள் மற்ற சமூக மக்களோடு எந்த மாதிரி தொடர்பில் இருக்கிறார்கள்?
கண்டிப்பா இருக்கிறார்கள். அவங்கெல்லாம் ஒரு காலத்தில் நிலச் சுவான்தாரர்களாக இருந்தார்கள். அப்போது மற்ற சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வேலை பார்த்தார்கள் என்று சொன்னார்கள். ஆனால், அதில் கூட நிறைய பிரச்சனைகளும் இருந்தன. ஒரு காலத்தில அங்கே இருக்கிற திகம்பர முனிவர் (திசையை ஆடையாய் உடையவர்) ஒருவரை ஊருக்குள் வரக்கூடாது என்று ஊர் கட்டுப்பாடு இருந்ததாம். அதனால அவருக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டது என்று சொன்னார்கள். இந்த மாதிரி சில சிக்கல்களையும் அந்த மக்கள் சந்தித்திருக்கிறார்கள்.
பௌத்தம், ஜைனம், ஆசீவகம் போன்ற மதங்களைக் குறிக்க சிரமணப் பண்பாடு என்று கூறுவோம். தமிழ்நாட்டில் சமணம் என்ற சொல்லை ஜைனம் என்ற பதத்திற்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். அந்தவகையில் சமணம் என்பது ஒரு பொதுச் சொல். தமிழ் ஜைனம் என்று சொல்லாமல் அதனை தமிழ் சமணம் என்று குறிப்போர் தான் அதிகம். நீங்கள் சமணம் என்பதற்கு மாற்றாக ஜைனம் என்று குறிப்பிடுகிறீர்கள். இதைப்பற்றி உங்கள் புரிதலை கூறுங்கள்?
நான் எல்லா இடத்திலேயும் ஜைனர்கள் என்று தான் குறிப்பிடுவேன். ஆனால் ஒருமுறை அவர்கள் ஒரு பெட்டிசன் எழுதும்போது, தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டுமென்று குறிப்பிட்டபோது தங்களை தமிழ் சமணர்கள் என்று எழுதியதை கவனித்தேன். அதனால், இரண்டு பதங்களையுமே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதேவேளையில் நயினார்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள்.

நீலகேசி பற்றிய வேலைகளுக்கு எப்படி நகர்ந்தீர்கள்?
டெல்லியில் சாகித்ய அகாதமிக்கு போய் அங்கே இருக்கிற நூலகத்தைப் பயன்படுத்துவேன். அந்த நூலகத்தில் அ.சக்கரவர்த்தி நயினார் எழுதிய நீலகேசி ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை எதார்த்தமாகப் பார்த்தேன். அதை படித்த போது பழையனூர் நீலி பற்றிய கதையை அறிந்தேன். அது எனக்கு பிடித்துபோய் இன்னும் நிறைய தேடி என்னுடைய முனைவர் பட்ட ஆய்வில் ஒரு இயலாகவே வைத்தேன். ‘jaina literature in tamil’ என்ற தலைப்பில் அதனை இணைத்தேன். அதை பேரா. பத்பநாப ஜெயினிக்கு என்னுடைய நண்பர் கொடுத்தபோது அவர் படித்து விட்டு, ஒரு டெல்லியில் சந்திப்பின் போது ‘this nelakesi itself can be a book’ என்று சொன்னார். 2003இல் பிரகிருதி பவுண்டேசன் சார்பாக சென்னையில் “Reimagining the Feminine” தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் தமிழ் சினிமாவில் வருகிற ‘goddest figures’ பற்றி பேச அழைத்திருந்தார்கள். நான் நீலி பற்றி தான் பேசினேன். எனக்கு அதை பற்றி விளக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதைக்கேட்ட வெங்கடேஷ் சக்கரவர்த்தி நீலி கதையின் வெவ்வேறு கலை வடிவங்கள் இருப்பதாக சொன்னார். பிறகு ரோஜா முத்தையா நூலகத்தில் அவற்றை படித்து நீலி பற்றிய புரிதலை விரிவாக்கி என்னுடைய முனைவர் பட்ட ஆய்வில் சிறிய பகுதியாக சேர்த்துக்கிட்டேன். நீலகேசி பற்றிய தனி நூல் 2018 – ஆம் ஆண்டில் zubaan வெளியீடாக வந்தது.
ஜெயினர்கள் பெரும்பாலும் வடதமிழ்நாட்டுப் பகுதிகளாக இருக்கும் செய்யாறு, ஆரணி, மேல் சித்தாமூர் போன்ற ஊர்களில் மட்டும்தான் இருக்கிறார்கள். தமிழ் கலாச்சாரத்தில் தமிழ் ஜெயினர்கள் தமிழ்நாட்டில் வேறு இடத்தில் இருக்கிறார்களா? அவற்றை கண்டு நீங்கள் எழுதியிருக்கிறீர்களா?
கல்வெட்டு ஆதாரங்களை பார்த்தால் மதுரைப் பகுதிகளிலும், தஞ்சை காவேரி டெல்டாப் பகுதிகளிலும் மிகவும் பரவலாக இருந்திருக்கிறார்கள். சைவ, வைணவ மோதலுக்குப் பிறகுதான் எண்ணிக்கை அடிப்படையில் மிகவும் குறைந்து போய் விட்டார்கள். தமிழ் பௌத்தர்கள் இப்போது எண்ணிக்கையளவில் கூட இல்லை. அந்த மாதிரியான ஒரு சூழல்தான் உருவாகியிருக்கு.
”பௌத்தர்கள் அழிந்துபோகவில்லை. பௌத்தர்கள் இன்றைய நிலையில் நவீன கால அடையாளத்திற்குள் கொண்டுவரப்பட்டு அவர்களை வேற ஒரு மதமாக அடையாளப்படுத்தி விட்டார்கள். சான்றாக அடிநிலை மக்களிடம் இருக்குற கலாச்சார அடையாளத்தை எடுத்துக்கிட்டு அவற்றையெல்லாம் இந்து அடையாளம் என்று பெயரிட்டு விட்டார்கள். ஆனால் அந்த கலாச்சார அடையாளங்கள் முழுக்க பௌத்தர்களுடையதுதான்”என்று அயோத்திதாசப் பண்டிதர் சொல்கிறார். அது என்னளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வாதமாக இருந்தது. இந்த அணுகுமுறையை ஜைனர்கள்கிட்டேயும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஏனென்றால் இந்த மக்களுடைய அடையாள எச்சங்கள் வடதமிழகப் பகுதிகளில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருக்கிறது. சான்றாக, ‘நயினார் என்ற பெயர்ச்சொல் தமிழகம் முழுவதும் புழக்கத்தில் இருக்கிறது. இந்த விஷயத்தை நீங்க எப்படி பாக்குறீங்க?
தமிழ் ஜைனர்கள் இடைக்காலத்துக்கு முன்பு வரைக்கும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இடைக்காலத்துக்குப் பிறகுதான் தமிழ்நாட்டின் வடபகுதியில் நிலைத்து இருக்கிறார்கள். அவர்கள் இடம்பெயர்ந்தவர்களா? அங்கேயே இருந்தவர்களா? என்று அறுதியிட்டு கூற முடியாது. அது தொடர் ஆய்வுகளுக்குரியது. குறிப்பாக மேல்சித்தாமூரில் இருக்கும் மடம் நாயக்க மன்னர்கள் காலத்திற்கு பிறகு தான் உருவானது. முந்தி ஜினகாஞ்சி தான் மையமாக இருந்தது. அங்கு பௌத்தர்களும் ஜைனர்களும் தான் இருந்தார்கள்.தமிழகம் முழுவதும் ஜைனத்தின் சான்றுகள் இருக்கின்றன. இன்றைய சைவ அடையாளங்கள் பலவற்றிலும் அதன் சான்றுகள் எச்சங்களாக இருக்கின்றன. தீர்த்தங்கரர் சிலைகள் பலவும் முனியாண்டி வழிபாடாக மாறி இருக்கின்றன.
1990களுக்குப் பிறகு மத அரசியல் குறிப்பாக இந்து பெரும்பான்மைவாதம் தலைதூக்கியது. இந்த மாதிரியான காலகட்டத்தில் இன்னொரு மதத்தைப் பற்றி(ஜைனம்) நீங்க ஆய்வு செய்ததற்கும் இந்த சூழலுக்கும் தொடர்பும் உண்டா?
1990 கள் பல வகைகளில் முக்கியமான காலக்கட்டம். அப்போது தான் டெல்லியிலும், ஜெ.என்.யுவிலும் நான் படிக்க போனேன். மண்டல் கமிஷன் போராட்டம், பாபர் மசூதி இடிப்பு எல்லாம் நடந்தன. அந்த நேரத்தில் நான் மதம் பற்றி ஆராய்வதை பலரும் விரும்பவில்லை. மக்களிடம் சென்று மதம் பற்றி ஆய்வு செய்யாததால் தான் அதனை பிடித்துக் கொண்டு இத்துனை அரசியல் நடக்கிறது. அங்கு மார்க்சிய சித்தாந்தம் தான் பெரும்பாலும் மேலோங்கி இருந்தன. மதத்தை விலக்கும் பார்வை செல்வாக்கோடு இருந்தது. அந்த ஒரு கோட்பாட்டுக்குள் நான் போக விரும்பவில்லை. மதத்தை ஒதுக்கி வைக்காமல் ஆய்வு செய்திருந்தால் இவ்வளவு சிக்கல்கள் வந்திருக்காது. ஆனால், இந்த மாதிரியான ஆய்வு செய்ததால் தான் இந்த சமூகத்தைப் பற்றின புரிதல் எனக்கு கிடைத்தது.
அப்போ உங்களுக்கு மதச்சார்பற்ற அரசியலில் ஈடுபாடு இருந்ததுன்னு சொல்லலாமா?
நான் இந்த மாதிரியான கோட்பாடுகளையெல்லாம் மேலோட்டமாக பயன்படுத்தமாட்டேன். எனக்கு எந்த இஸமும் பிடிக்கவில்லை. சொல்லப்போனால் எனக்கு தகுந்த மாதிரியான இஸம் இன்னும் கிடைக்கவில்லை என்று தான் சொல்லனும். எந்த கோட்பாட்டோடும் ஒட்டக் கூடாது என்று நினைப்பேன். ஏனென்றால் வருங்காலத்தில் வேறொரு சூழல் வந்தால் அதிலிருந்து வெளியே வர முடியாதென்று நினைக்கிறேன்.
சைவ சமயத்திற்கும் முந்தைய சான்றுகள் ஜைனம் பௌத்த சமயங்களுக்கு கிடைக்கின்றன. ஆனால் அவற்றை வடஇந்திய சமயங்கள் என்று மட்டுமே சொல்லிவிட்டு கடப்பது நடந்து கொண்டே இருக்கின்றன. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? இன்றைய அளவில் ஜைன மக்களின் தமிழ் நிலையை எந்த மாதிரியாக பார்க்கிறீர்கள்?
என்னுடைய தமிழ் ஜைனம் நூலில் ஒரு அத்தியாயம் ஒதுக்கி இதனைப் பற்றி எழுதியிருக்கிறேன். அச்சமயங்கள் வடக்கிருந்து வந்திருக்கலாம். அதற்காக அவற்றை தமிழ் எதிரி போலவும், பக்தி தான் தமிழ் என்பது போலவும் சொல்வது நியாயம் இல்லை. இவ்வாறு கூறுவது Conspiracy Theory. சைவத்திற்கு முன்பே ஜைனர்களும் பௌத்தர்களும் தமிழ் மொழியில் நிறைய வேலை செய்திருக்கிறார்கள். அவர்களை வட இந்தியர்களாகவே விலக்கி விட்டு பக்தி தான் தமிழ் என்பது மாதிரி கூறுவது கண்ணுக்கு தெரிந்து நடக்கிற பிழை. இவற்றில் மாற்றம் வர வேண்டும். சுமதி ராமசாமி போன்றவர்களே இந்த பார்வையிலிருந்து மாறவில்லை.
மதுரை பற்றிய வரலாறுகளில், மதுரையைச் சுற்றியுள்ள ஜைன படுக்கைகள் இடம்பெறுவதில்லை. ஆனால், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கதைகள் எல்லோருக்கும் தெரிந்த வரலாறாக ஆகிவிட்டது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ஆமாம். மதுரை வரலாற்றையே தொன்மக் கதைகளுக்குள் நிலை நிறுத்தி விட்டார்கள். ஆனால் மதுரையின் சமண வரலாற்றை கேட்டால் கல்வெட்டு, சிற்பங்கள் என்று சொல்ல முடியும். அவை வரலாறாக மாற்றப்படவில்லை. இவையெல்லாம் இருப்பதை இப்போது கேட்டுப் பாருங்கள் ஜைனத்தில் ஆர்வம் இருப்பவர்கள் வேண்டுமானால் சொல்லக் கூடும். மாறாக பரவலான வரலாறாக ஆக்கப்படவில்லை.
ஜைனர்களோட கதைகள் அவர்களுடைய நினைவுகளிலேயே தங்கியிருக்கிறது. அவங்களுடைய கதைகளிலும் வரலாற்றுத் தன்மைகள் அடங்கியிருக்கிறது. அவர்கள் கதைகள் சொல்லும்போதே சில பகுதிகளில் இருக்கும் கல்வெட்டுகளை ஆதாரமாக காட்டுவார்கள். ஜைன இளைஞர் மன்றம் மாதிரியான அமைப்புகள் இந்த மாதிரியான ஆவணங்களை பதிப்பித்து இருக்கிறார்கள். ஆனால், அவற்றை ரொம்ப லோக்கல் அளவில் மட்டுந்தான் பண்ணியிருக்காங்க. ஜைனர்களுக்கு வெளியேயும் சமணர்களின் வரலாற்றுத் தன்மை பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். மயிலை சீனி வேங்கடசாமி தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். ஸ்ரீபால் எழுதியிருக்கிறார். மதுரையிலேயே இருக்கும் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் கூட அண்மையில் மதுரையில் சமணம் என்று நூல் எழுதி வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அவற்றை யாரும் முக்கியமானதாக எடுத்து வரலாற்றுக்குள் இணைத்துக் கொள்ளாமலே எழுதி வருகிறார்கள். அதேவேளையில் இந்த எழுத்துகள் தமிழிலேயே நின்று விட்டன. தமிழ் பற்றி ஆங்கிலத்தில் எழுதுபவர்களை நோக்கி இவை செல்ல வேண்டும்.

‘கோதாவரி’ பற்றி உங்களுடைய ஆய்வுகள் எந்த மாதிரி தொடங்கியது?
நான் இதழியல் துறையில் free lancer-ஆக இருந்தேன். மாதம் மாதம் ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்று திட்டமிட்டேன். அதற்காக வாராங்கல் மாவட்டத்திற்கு போய் வந்து கொண்டு இருப்பேன். அப்போதுதான் கோதாவரி பிரச்சினை இருப்பதை அறிந்தேன். அங்கே கள ஆய்வில் ஒரு சின்ன மீனவர் குடும்பத்தை விசாரிக்கும்போது பெரிய அணை கட்டுவதற்காக பெருந்திரளான மக்களை இடம்பெயரச் செய்ததாக சொன்னார்கள். ‘கோதாவரி ஒச்சுனப்படு இக்கட ஒச்சாமு’ என்று ஒரு பெரியவர் சொன்னார். அப்படியென்றால் ‘கோதாவரி வரும்போது நாங்க இங்க வந்துட்டோம்னு’ அர்த்தம். எனக்கு இந்த மாதிரி சொன்னது ரொம்ப பிடிச்சுபோனது. வெள்ளம் என்று அவர்களால் சொல்ல முடிவதில்லை. ஆறு வந்தது, போனது என்று ஒரு பெண்ணின் உருவகத்தையே தன் நினைவுகள் வழியாக சொன்னார்கள். அந்த நேரத்தில் போலவரம் அணை கட்டுறதுக்கு திட்டம் போட்டு அது தொடர்பாக நிறைய விவாதங்களும் நடந்தன. அப்படியாகத் தான் அதைப் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். அதைப் பற்றி வேலை பார்க்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கும்போது prem patiya memorial scholarship என்னும் பெயரில் ஒரு மீடியா ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதன்மூலமாக தான் நான் அந்தப் பகுதி களஆய்வுகளுக்குப் போனேன். அங்கே இருக்கிற ஆதிவாசி மக்கள், மீனவர்கள், தலித்துகள் என்று எல்லோரையும் சந்திச்சேன். 2006-ல் தொடங்கின வேலை 2012-ல் முடித்து 2014-ல் ‘when gothawari comes’ என்று புத்தகம் வெளி வந்தது. அதாவது மக்களுக்கும் ஆறுக்கும் என்னென்ன தொடர்புகள் இருக்கு? அரசு மக்களை எப்படி ஆறுகளிடமிருந்து தள்ளி வைத்தது என்று ஆய்வு செய்து எழுதினேன்.
இப்போது என்ன மாதிரியான ஆய்வில் இருக்கிறீர்கள்?
இப்போது, ஹிமாச்சல் பிரதேசத்தில் நிறைய மலைகளை உடைச்சு நான்குவழிச் சாலை கட்டிகிட்டு இருக்காங்க. அங்கே சுற்றுலாவை மட்டும் மையப்படுத்தி நிறைய இயற்கை வள அழிப்புகள் நடக்கின்றன. முன்னெல்லாம் வராத வண்டிகள் இப்போது வந்து கொண்டு இருக்கின்றன. அங்கே இருக்கிற மக்களோட தேவைகளை கருத்தில் கொள்ளாமல் நிறைய வேலைகள் நடந்திட்டு இருக்கு. அதைப் பற்றி இப்போது களஆய்வில் இருக்கேன். அப்புறம் அங்க Spiti என்ற இடம் இருக்கிறது. அது 100 சதவிகிதம் பௌத்தம் வாழும் இடம். அடுத்து அதைப் பற்றிய ஆய்வில் இருக்கிறேன்.
நீங்க எழுதியதிலேயே ரொம்ப கவனம் பெற்ற கட்டுரை என்று இருக்கிறதா?
கோதாவரி பற்றிய நூல் கவனம் பெற்றது. தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது.

தமிழ் கல்விப்புல ஆய்வுகளில் உங்க நூல்களுக்கான வரவேற்பு எந்த மாதிரி இருந்தது?
பெரிதாக வரவேற்பு இல்லை. ஆனா தமிழ் ஜைனர்கள் நிறைய பேர் இந்த புத்தகத்தை படிச்சதா சொன்னார்கள். அவ்வளவுதான். விஜயா ராமசாமி என்னுடைய புத்தகத்தை விமர்சனம் செய்து எழுதியிருந்தார். ஆனால் அதுவே தாமதம் தான். என்னுடைய நூல்களை The Hindu-க்கு அனுப்பியிருந்தேன். 2018 -ல் வெளியானவற்றை 2019-இல் எழுதுவதில்லை என்று கூறிவிட்டார்கள். ப்ரண்ட்லைனுக்கு அனுப்பி அவர்களும் போடவில்லை. ஆனால் கோபாலகிருஷ்ண காந்தி சொந்தமாக வாங்கிப் படித்து ப்ரண்ட்லைனில் எழுதியிருந்தார். ஆனால் வெளிநாட்டில் நிறைய வரவேற்பு கிடைத்தது. தமிழ்ப் பகுதி பற்றிய ஆய்வுக்கு தமிழ்நாட்டில் கவனம் கிடைக்க வில்லை.
நீங்கள் தமிழ் ஜைனர்களைப் பார்க்கப் போனப்போது அவர்களிடம் குறள், சிந்தாமணி உள்ளிட்ட புத்தகங்களை இப்போதும் பார்த்தீர்களா?
எல்லோர் வீட்டிலும் இருக்கும். எப்போது போனாலும் ‘அன்பளிப்பு’ என்று எனக்கு நிறைய புத்தகங்கள் கொடுப்பார்கள். அண்மையில் கூட காஞ்சிபுரம் அருகே உள்ள கரந்தை திருப்பனம்பூருக்கு போயிருந்தேன். நரிவிருத்தம், ஜைன ராமாயணம், ஸ்ரீபுராணம் போன்ற நூல்களை அன்பளிப்பாக கொடுத்தார்கள். அது அவர்களின் மரபு அனுமதிக்கிறது.
அவர்களுடைய மற்ற சடங்குகளை பார்த்தீங்களா?
இல்லை. நான் போன சமயத்தில் எல்லா சடங்குகளையும் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர்களுடைய பாடல்களை நிறைய கேட்டேன். அவ்வளவுதான்.
ஆனால் நான் அதிசயித்த சில விசயங்களை ஆரம்ப காலத்திலேயே பார்த்திருக்கேன். நான் முன்பு ஹைதராபாத்தில் 2001 வாக்கில் செய்தியாளராக இருந்த போது, குஜராத் ஜைனர் நடத்திய திருவிழாவை பார்த்தேன். அவற்றில் ஒரு தீர்த்தங்கரர் பிறப்பை கொண்டாடினார்கள். முழு திருவிழாவையும் பார்த்தேன். எல்லா தீர்த்தங்கரர்களுக்கும் கிட்டதட்ட ஒரே கதைதான். எல்லோரும் ராஜாவா இருந்துதான் துறவி ஆனதாகத் தான் சொல்கிறார்கள். அந்தக் கதைதான் அங்கேயும் நடந்தது. அந்தச் சடங்கின் கடைசியில் தீர்த்தங்கரர் எல்லாவற்றையும் தானம் கொடுத்துவிட்டுப் போவார். அப்போது அங்கே இருக்குற மக்களுக்கு தானம் கொடுக்குறப்போ எனக்கு ஒரு பேனா தானமாக கிடைத்தது. அதை இன்னும் நான் வைத்திருக்கிறேன்.
*
- ஸ்டாலின் ராஜாங்கம் – தமிழ்விக்கி – தமிழ் சமூகவியல் ஆய்வாளர், இலக்கிய ஆய்வாளர், ஊடக ஆய்வாளர். தலித் வரலாற்றை மீட்டெழுதுவதில் பெரும்பங்கு வகிக்கும் முன்னணிச் சிந்தனையாளர். கல்வியாளர்.

- கோ.ராஜகுமாரன் – மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர்.

- ஊ.முத்து பாண்டி – அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர்.

*
மதுரையில் சமணர் படுகைகள் மிக அதிகமாக இருக்கும் அவற்றை நண்பர்களுடன் சென்று பார்த்திருக்கிறோம். ஆனால் அவற்றின் எந்த கதைகளும் தொன்மமாக மாறவில்லை. உதாரணமாக அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு பலதொன்ம கதைகள் உண்டு. ஒவ்வொரு இந்துக்கோவிலை எடுத்துக் கொண்டாலும் ஏதாவது ஒரு தொன்ம கதையுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் மக்களின் வாய்மொழிக் கதைகள் எதிலுமே ஜைனர்களின் ஆன்மீகம் தொன்மம் அறவே இல்லை. இவை ஏன் என்று ஒரு சிறப்பான கேள்வியை எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கேட்டிருப்பார்.
உமா மகேஸ்வரி அவர்களின் மிக முக்கியமான பண்பாட்டுப் பங்களிப்பு இன்றைக்கு யாருக்கும் தெரியு போவது இல்லை என்றாலும் அது எதிர்காலத்தில் ஒரு அலையை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் மிகச்சிறப்பான பேட்டி.
Sathishkumar