பெயரை மாற்றிக் கொள்ளும் பெண்கள் – எலிஃப் ஷஃபாக்
(தமிழில்: மதுமிதா)

எனக்கு பதினெட்டு வயதான பொழுது என்னுடைய பெயரை மாற்றிக்கொள்வது என்று முடிவு செய்தேன். எலிஃப் எனும் பெயரை எனக்கு ஓரளவு பிடிக்கும். துருக்கியில் சாதாரணமாக பெண்களுக்கு வைக்கப்படும் பெயர். ‘அலெஃப்’ எனும் உதுமானிய அரிச்சுவடியின் முதல் எழுத்து, அதைப் போலவே உயரமான, நெகிழ்வான எனும் பொருள் படுவது. துருக்கிய மொழி தவிர அரபிய, பாரசீக, மற்றும் யூத மொழிகளில் இந்த சொல் புழக்கத்தில் உள்ளது. ஆனால் நான் அறிந்த வரையில் துருக்கிய மொழியில் மட்டுமே இது பெண் பெயர். அதே வருடம் போர்ஜஸின் புகழ் பெற்ற சிறுகதையான ‘அலஃப்’ வாசிக்க நேரிட்டது. அதில் அவர், “நேர் பார்வைக்கு புலப்படாத ஓர் புள்ளி, ஆனால் அனைத்து பிற புள்ளிகளுக்கும் குவிமுகம்” என்று அந்த சொல்லுக்கு விளக்கம் அளித்திருப்பார். தாழ்வில்லை என்று தோன்றியது. இளமையின் செருக்கில் சென்று கொண்டிருந்த எனக்கு, ஓர் எழுத்தோடு ஒப்பிடப்படுவது உவப்பளித்தது. என்ன, ஓர் எழுத்திற்கு பதிலாக மொத்த அரிச்சுவடியாக இருந்திருக்கலாம்.
அதுவே என் குடும்பப்பெயரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அது வேறு கதை. பெண்களுக்கு தந்தையின் குடும்பப்பெயரையோ, அல்லது கணவனின் குடும்பப்பெயரையோ மட்டுமே கொள்ள உரிமை இருந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தந்தையின் முகத்தைக் கூட காணாமல் வளர்ந்த நான் அந்த பெயரை எதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்? நிச்சயமாக மணம் செய்து கொண்டு கணவரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று முன்னரே உறுதி கொண்டிருந்ததால், இந்த விதி எனக்கு பொருந்தாது என்று முடிவு எடுத்தேன்.
இந்த முரணைப் பற்றி சிந்தனையில் ஆழ்ந்திருந்த ஒரு பொழுதில், துருக்கியின் பெருமதிப்புக்கு உரிய ஓர் இலக்கிய இதழ் எனது சிறுகதை ஒன்றை வெளியிடுவதாக முடிவு செய்தது. அதன் ஆசிரியர், நாற்பதுகளில் இருந்த ஒரு அறிவுஜீவி, என்னை இலக்கிய உலகத்தில் அரவணைத்துக் கொள்ள தொலைபேசியில் அழைத்தார். இந்த உலகம், “ஆணவ விலங்குகள் உலவும் காட்டிற்கு சற்றும் குறைந்தது அல்ல” என்று விளக்கினார். விடை பெரும் முன்பு எனது சிறுகதையை பதிப்பிக்கும் முன் ஏதும் மாற்றங்கள் செய்ய விரும்புகிறேனா என்று கேட்டார்.
“ஆம்,” என்று அவசரமாக சொன்னேன். “எனது குடும்பப்பெயர். அதை மாற்ற வேண்டும். “
“திருமணம் செய்து கொள்ள போகிறாயா? வாழ்த்துக்கள்!”
“இல்லை. அவ்வாறு இல்லை,” இடை மறித்தேன். “நான் எனது பெயரை மாற்றிக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்.”
அவர் சிரித்தார், என்ன சொல்வது என்று அறியாத போது எழும் சங்கட சிரிப்பு. பிறகு காது கேளாத குழந்தையிடம் பேசுவதை போல, மிகப் பொறுமையாக, மிகவும் சத்தமாக அவர் சொன்னார், “ச-ரி, ச-ரி, ஆனால் என்னவென்று நாங்கள் உன் பெயரை அச்சிடுவது?”
“எனக்கு இன்னும் சரியாக ஒன்றும் தோன்றவில்லை,” என்று உண்மையை ஒப்பித்தேன். “வாழ்வில் ஒரே ஒரு முறை எடுக்க கூடிய முடிவு. நான் நிறைய சிந்திக்க வேண்டும்.”
மறுபுறம் ஒரு சங்கடமான மௌனம், பிறகு அவர் மீண்டும் சிரித்தார். “சரி, ஆகட்டும், நீ சொல், அதற்கென்ன? நீயோ பெண், இதை இவ்வளவு தீவிரமாக நீ எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நீ எவ்வளவுதான் கவித்துவமான ஒரு பெயரை தேர்வு செய்தாலும், நாளை உன் கணவருடைய பெயரை தான் எப்படியும் வைத்துக்கொள்ள போகிறாய்.”
“ஒரு நாள் கொடுங்கள். எனக்கு என்றென்றும் மாறாத ஒரு பெயரை கண்டுபிடித்து வருகிறேன், திருமணம் ஆனாலும் சரி, இல்லையென்றாலும் சரி.”
ஒவ்வொரு பெயரும் ஒரு மாய சூத்திரம். எழுத்துகள் ஒன்று கூடி நடனமிடுகின்றன. ஒவ்வொன்றும் தனக்கென ஒரு வசீகரம் சூடி, பிரத்யேகமான ஒரு சுழற்சி கொண்டு, ஒன்றை ஒன்று அறியாமல், ஆனால் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு மாயமாக பெயரில் எஞ்சுகின்றன. இரவின் யட்சிகளென, ஓர் எழுத்துடன் இன்னொன்றை இணைத்து, ஒவ்வொரு பொருளாக சேர்த்து, மொழியின் ஒரு துளியென திரண்டு நம்மை அந்த மாயத்தில் கட்டிப்போடுகிறது. சில பெயர்கள் வான்வெளியில் சிறகு விரித்து பறக்கச் செய்பவை, சில பெயர்கள் தோளில் சுமை ஆகி நிலம் நோக்கி சரிய வைப்பவை.
தன் பெயரை மாற்ற வேண்டும் என்ற எண்ணமே ஆண்களுக்கு வருவதில்லை. அவர்களுக்கு அது பிறக்கும் பொழுதில் கொடுக்கப்படுகிறது. நிலையானதாக, மாறாததாக. தனது தந்தையிடமும், பாட்டனிடமும் அதை அவர்கள் பெறுகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் அதை கொடுத்து செல்கிறார்கள்.
அதுவே பெண்கள், அவர்கள் அறிந்தோ அறியாமலோ, பெயர் நாடோடிகள் அல்லவா? அவர்களின் குடும்பப்பெயர் இன்று இருக்கும், நாளை மாறும். தனது வாழ்க்கை முழுவதும் படிவங்களை வெவ்வேறு வகையில் நிரப்பிக்கொண்டும், வேறு வேறு அடையாள அட்டைகளை சுமந்து கொண்டும், வெவ்வேறு வகையில் கையொப்பம் இடப் பழகியும் அலைகிறார்கள். வளரும் பருவத்தில் ஒரு பெயரும், பிறகு கணவர் பெயரும் கொள்கிறார்கள். மணமுறிவு ஏற்பட்டால் மீண்டும் தந்தையின் பெயருக்கு செல்ல வேண்டும், சிலர் தங்களது முறிந்த வாழ்வின் பெயரையே நிலைத்து கொள்கிறாகள், எளிமைக்காக, ஆனால் உண்மையில் அது எந்த விதத்திலும் எளிமையாக ஆவது இல்லை. பிறகு இன்னொரு மனம் கொண்டால், முற்றிலும் புதியதாய் இன்னொரு பெயர்.
ஆண்களுக்கு ஒரு கையொப்பம். தங்களுக்கு விருப்பமான வடிவில் அதை அமைத்து கொண்டதும், தங்கள் மரணம் வரை அந்த ஒன்றுடன் அதில் ஒரு புள்ளியை கூட மாற்றாமல் வாழ்ந்து விட முடிகிறது. அதுவே பெண்களானால், கட்டாயம் இரண்டு கையொப்பங்களாவது இருக்கும். பழையது ஒன்று, புதியது ஒன்று, சில தருணங்களில் குழப்பிக்கொள்ள வேறு செய்வார்கள். திருமணத்திற்கு முன்பிருந்தது, பின் ஒன்று, மண முறிவு ஆகி இருந்தால் இன்னொன்று.
இந்த பெயர் மாற்றும் படலத்தில் பெண் எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல. பின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் உதுமானிய எழுத்தாளர் ஃபத்மா அலியே (Fatma Aliye) தனது “சுதந்திரமான போக்கை” கண்டு தனது குடும்பம் வருத்தப்படக் கூடாது என்பதற்காக, தனது படைப்புகளை ரகசியமாகவே எழுதினார். ஒரு நாள் தன் பெயரில் எழுதுவதை நிறுத்திவிட்டு தனது அடுத்த படைப்பை “ஒரு பெண்” என்ற புனைப்பெயரில் வெளியிட்டார்.
ஏனெனில் அந்த புனைப்பெயர் தான் அவர். ஒரு பெண். ஏதோ ஒரு பெண். எல்லா பெண்களும். கரையோடு பிணைத்திருந்த தளையை அவிழ்ப்பதைப் போல அவர் தனது பெயரை விடுவித்து கொண்டார். பெருமதிப்பிற்கு உரிய ஃபத்மா அலியே, வெறும் “ஒரு பெண்” ஆனதும் அவரால் எங்கும் தன் படகை செலுத்த முடிந்தது.
1950களில் வின்சென்ட் எவிங் என்பவரின் “இளம் பெண்கள்” என்ற காதல் கதை நாவல் துருக்கியில் வெளிவந்தது. அதி விரைவில் மிகுந்த புகழும் அதிக எண்ணிக்கையில் விற்பனையையும் எட்டியது. வின்சென்ட் எவிங்கை பற்றி உதிரியாக மூன்றே செய்திகள் அறியப்பட்டது. அமெரிக்கர், கிறித்தவர், ஆண். துருக்கிய மக்கள் இந்த தகவல்களை மனதில் கொண்டே அந்த நூலை வாசித்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஓர் அறிவுப்பு வெளியிடப்பட்டது. அதை எழுதியது ஒரு இளம் இஸ்லாமியப் பெண், நிஹால் யஜினோபலி.
அவர் தனது அடையாளத்தை ஏன் மறைத்து வைத்தார் என்று கேட்கப்பட்ட போது அவர் அளித்த பதில் சுவாரஸ்யமானது:
“இளம் பெண்கள் நாவல் எழுதும் போது நானே ஓர் இளம் பெண் தான். அதில் கணிசமான பகுதி பாலியல் உணர்வு கொண்டது. அது என்னைப் போன்ற இளம்பெண்களுக்கு ஏற்புடைய ஒரு களம் அல்ல. அதனாலாயே ஒரு ஆண் பெயரை தேர்வு செய்தேன். அந்நாட்களில் மொழிப்பெயர்க்கப் பட்ட நாவல்களுக்கு என ஒரு தனி வாசக வெளி இருந்தது. அதற்காகத்தான் எனது நாவலாசிரியர் ஒரு அமெரிக்கர் என்று முடிவு செய்தேன். எனது பதிப்பாளர் அதை ஆங்கில மொழிப்பெயர்ப்பு என்றே வெளியிட்டார்.”
‘வின்சென்ட் எவிங்’ போன்ற ஆண் புனைப்பெயரையோ அல்லது ‘ஒரு பெண்’ போன்ற பொதுவான பெயரையோ பெண்களால் கேடயமாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. பாலியல், பெண்ணியம், உடல் போன்றவற்றை எழுதும் போது இன்னும் கூடுதலான பாதுகாப்பு தேவைப்படுகிறது. நான் அறிந்து எந்த ஒரு ஆண் படைப்பாளியும் இப்படி பாலியலை கூட்டியோ குறைத்தோ எழுதுவதற்கு தன் அன்னை (அல்லது பாட்டி, மூதன்னையர், அல்லது சுற்றம், அல்லது அண்டை வீட்டினர்) மனம் வருந்துவாரோ என்று உள்ளத்தை வருத்திக் கொள்வதில்லை. அப்படிப்பட்டவர்கள் இருந்தால், எண்ணிக்கையில் அவர்கள் சொற்பமாகவே இருக்க முடியும். இந்த விசாரத்தை பற்றி மார்கரெட் அட்வூட் தனது மூதன்னையர் என்ற ஆழமான கட்டுரையில் எழுதுகிறார், “குடும்பங்களில், அதுவும் இன்றும் நெருங்கிய வலுவான கட்டமைப்பு உள்ள குடும்பங்களில், இந்த விசாரம் பெண்களால் மிக ஆழமாக உணரப்படுகிறது.” துருக்கியிலிருந்து கனடா வரை, அன்றிலிருந்து இன்று வரை, எழுத வரும் பெண்கள் தங்களின் மணவாழ்வில், குடும்பத்தில், சமூக நிலையில், வர்க்கத்தில் என அனைத்திலும் புலனுக்கு எட்டாத பல நூறு கட்டுப்பாடுகளை தாண்டியே எழுத வருகிறார்கள். ஒவ்வொரு கட்டுப்பாடும் தன் பெயரை மாற்றிக்கொள்ள அல்லது தான் பெண் என்பதை மறைத்து கொள்ள ஒரு காரணத்தை கொடுக்கிறது.
அப்படி ஒன்றும் இல்லாமலா உலகப்புகழ் பெற்றவரும், விக்டோரிய காலத்தின் மிகச் சிறந்த படைப்பாளியும், உறுதியுள்ளம் கொண்ட, தன்னிகரற்ற, விடா முயற்சி கொண்ட மேரி ஆன் எவன்ஸ், தன்னை ஜார்ஜ் எலியட் ஆக்கிக்கொள்வார்? 1800களிலும் இங்கிலாந்தில் பெண் எழுத்தாளர்களுக்கு குறைவு இருந்ததில்லை, ஆனால் அவர்கள் மீள மீள எழுதியது காதலை பற்றி, காதலின் தோல்விகளை பற்றி, பெண்கள் எழுதுவதற்கு ஏற்புடையதாக கருதப்பட்ட களங்கள். ஆனால் ஜார்ஜ் எலியட் அத்தகைய நூல்களை வெறுத்தார், வெளிப்படையாகவே. தன்னை ஆண் படைப்பாளிகளோடு இணை நிலையில் வைத்து மதிப்பளிக்க பட வேண்டும் என்று விரும்பினார். அவர், “ஒரு ஆண் போல எழுத விரும்பினார்”, “பெண் போல அல்ல”.
பெண்கள் எழுதும் நூல்களை பற்றிய ஜார்ஜ் எலியட்டின் வெறுப்பு உச்சத்தில் வெளிப்பட்ட படைப்பே, அவர் 1856இல் எழுதிய, “பெண் எழுத்தாளர்களின் சிறு பிள்ளை தனமான நாவல்கள்,” என்ற கட்டுரை. அவர் அதில் பெண் எழுத்தையும், எழுத்தாளர்களையும் அந்த சிறுபிள்ளைத்தனத்தின் அளவு கொண்டு நான்கு வகைகளாக பிடிக்கிறார்: frothy – தூசு, prosy – எழுதி குவிக்கப்படுவது, pious – நிறை ஒழுக்கவாதம், மற்றும் pedantic – இலக்கணவாதிகளின் இலக்கியம். இந்த கூர்ந்த கட்டுரையை, அது மேற்கத்திய இலக்கிய மரபின் ஒரு குறுக்குவெட்டு சித்திரத்தை அளிப்பதற்காக மட்டும் நான் வாசிப்பதில்லை. அது ஒரு பெண் எழுத்தாளர் எப்படி தன் வர்க்கத்தையே குத்தி கிழிக்க முடியும் என்பதற்காகவும் அதை நிறைய வாசித்திருக்கிறேன்.
ஆனால் அப்படி தனது பெண் வர்க்கத்திலிருந்து தனித்து நிற்பது ஒன்றும் அவருக்கு புதியதல்ல. உயிரியலாளரும், சிந்தனையாளருமான ஹெர்பர்ட் ஸ்பென்சருக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில் அவர் மரபார்ந்த சமூகத்தின் விதிகளிலிருந்து, பெண்மை சார்ந்த சமூக கட்டமைப்புகளில் இருந்து இயல்பாக தன்னை விலக்கி நிறுத்திக்கொண்டு சொல்கிறார், “இப்படி இதற்கு முன்னால் ஒரு பெண் எழுதியிருக்க வாய்ப்பில்லை, ஆனால் எனக்கு அதில் வெட்கம் இல்லை. காரணங்களும், தூய அறிவும் நயமும் கூடிய இடத்தில் நான் உங்கள் மரியாதைக்கும் மென் உணர்வுக்கும் பாத்திரமானவளே. கீழ்மையான ஆண்களும் இழிமனம் கொண்ட பெண்களும் என்னை என்ன நினைத்தாலும் எனக்கு அது பொருட்டல்ல.”
ப்ரோன்டே சகோதரிகளுக்கு கூட தங்கள் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இருந்திருக்கிறது. தங்கள் புனைப்பெயரின் முதல் எழுத்துகள் தங்கள் பெயரின் முதல் எழுத்துகளாக இருக்கும் படி அவர்கள் தேர்வு செய்தார்கள். ஷார்லட், கர்ரர் பெல் என்ற பெயரை கொண்டார். ஆன், ஆக்டன் பெல் என்ற பெயரையும் எமிலி, எலிஸ் பெல் என்ற பெயரையும் கொண்டனர். இருபாலருக்கும் பொதுவான பெயர்களை எடுத்துக்கொள்வது பெண் பெயர்களின் மேல் வரும் பாரபட்சத்தை தவிர்க்க உதவியானது. அவர்களால் முடிந்த வரையில் இந்த விளையாட்டை அவர்கள் தொடர்ந்தனர். அவர்கள் ஊரின் தபால் ஊழியர்களை ஏமாற்றுவது தான் அவர்களின் சவாலாக இருந்தது. அதற்கும் உரிய தீர்வை அவர்கள் கண்டு கொண்டார்கள், “கர்ரர் பெல், c/o ஷார்லட் ப்ரோன்டே”, அவ்வளவே, சிக்கல் முடிந்தது.
இதை போல தன் பெயரில் எதிர்பால் தோலை போர்த்திக் கொள்பவராக இருந்த இன்னொரு பெண் எழுத்தாளர், ஜார்ஜ் சாண்ட். ஆனால் யார் கண்டது, அமான்டின்-அரோர்-லூசில்-டூபின், பரோனெஸ் டூட்வென்ட் என்ற பெருநீள பெயரின் சுமையை உதறுவதற்காக கூட அப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஜார்ஜ் சாண்ட் 1822இல் பரோன் கேசிமிர் டூட்வென்ட்டை மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. சில ஆண்டுகளிலேயே பிரிந்தனர். பிணைப்பில்லாத தன்னிலையை சமூகத்தின் தளைகளில் இருந்து விடுபட்ட நிலையாகவே அவர் கொண்டார். தனி ஒருவராக, மணமுறிவு ஆனவராக செல்வம் கொண்டவராக அவர் இருந்தது, வேறு எந்த பெண்ணை விடவும் துணிவுள்ளவராக, அவர்கள் யாரும் நினைத்தும் பார்க்க முடியாததை செய்ய கூடியவராக அவரை ஆக்கியது.
சாண்ட் ஆண்கள் போல உடை அணிய தொடங்கினார் – வம்பர்கள் உவகையில் துள்ளி குதித்தனர். ஓர் பிரபுக்குல பெண் எந்நிலையிலும் மிகுந்த கவனத்துடனும், நயத்துடனும் மட்டுமே உடை அணிந்திருக்க வேண்டும், உடுக்கும் ஆடைகளிலும் பூணும் அணிகளிலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்க வேண்டும், பேசும் பழகும் விதத்திலும் அவ்வாறே ஒரு நெறி முறை எதிர்பார்க்க பட்டது. சாண்ட் அதை அப்படியே புறக்கணித்து அதற்கு நேர்மாறாக, உடுக்க வசதியான ஆண்களின் உடைகளை தேர்ந்தெடுத்தார். அவருக்கு குழலில் புகைப்பதில் இருந்த ஆர்வம் மிக பெரிய வம்புக்கு பேச்சானது. சொன்னதை கேட்டுக்கொண்டு வெறும் கைப்பாவைகளாக பெண்கள் இருக்க எதிர்பார்க்கப்பட்ட காலத்தில், ஆண்களின் உடையணிந்து, குழாயில் புகை பிடித்துக்கொண்டு, அதிதீவிர சிந்தனைகளை மூளையில் சுமந்தபடி அவர் அலைந்து திரிந்தார். உயர வளர்ந்த மரம் மின்னலை ஈர்ப்பதை போல, அவர் கவனத்தையும் சினத்தையும் தன்பால் ஈர்த்தார். முடிவில் அவரது அரசகுல பட்டம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது, ஆனால் அவர் தனக்கு வைத்து கொண்ட ஜார்ஜ் சாண்ட் என்ற பெயரை எவரும் பறித்துக்கொள்ள முடியவில்லை. அவர் அன்றும், இன்றும் கூட ஜார்ஜ் சாண்ட்.
இவான் துர்கன்யேவ் சொன்னது போல அவர், “கனிவுள்ளம் கொண்ட பெண், ஒரு துணிச்சலான ஆண்!”
ஜேன் ஆஸ்டன் ஒரே ஒரு முறை காதலித்தார். பொதுவாக சமூக அங்கீகாரத்திற்காக, பணத்திற்காக, பாதுகாப்பிற்காக மணம் செய்து கொள்வதை பெரிதும் விமர்சனம் செய்தவர் அவர், காதலுக்காக மட்டுமே மனம் செய்து கொள்ள வேண்டும் என்றுகூறி வந்தவர். ஆயினும் சமூக வர்க்க பேதங்களால் அவர் தான் காதலித்தும், காதலிக்கப்பட்டும் கூட, அந்த மணம் கைகூட முடியவில்லை. அவர் பெயர் டாம் லெஃப்ராய், தனக்கென எந்த வளமும் இடமும் இல்லாதிருந்தவர், ஆனால் பின்னொரு நாள் அயர்லாந்தின் தலைமை நீதிபதி பொறுப்பை அடைந்தார். 1796இல் தன் சகோதரி கஸான்ட்ராவுக்கு எழுதிய கடிதத்தில் ஆஸ்டின் டாம் லெஃப்ராயை பற்றி எழுதியுள்ளார். ஆனால் உடனே மறுத்தும், “உனக்கு இது கிடைக்கு போது, அனைத்துமே முடிந்து போயிருக்கும். அந்த அவலத்தை நினைத்தாலே என் கண்கள் கலங்குகின்றன,” என்று எழுதியுள்ளார். மனம் உடைந்து தன் இடத்திற்கே செல்கிறார், “என் எழுத்திற்கே”.
“நான் மிகுந்த கர்வத்தோடு சொல்லிக்கொள்ள வேண்டும், இந்த உலகிலேயே அறியாமையின் முட்டாள்தனத்தின் உச்சத்தில் நின்று கொண்டு படைப்பாளி ஆனவள் நானாகவே இருக்க முடியும்,” என்று எழுதியிருக்கிறார். அது நிச்சயமாக உண்மையல்ல, அது அவருக்கும் தெரியும். ஜேன் ஆஸ்டன் நிரம்ப வசித்தவர். அவரது பாதிரியார் தந்தையால், சகோதரர்களால், அத்தைகளால், பிறகு தனக்கே ஆன கூர்ந்த வாசிப்பால் பல விதமான துறைகளில் தேர்ச்சி பெற்றவர். கூர்மையான பேச்சும், விளையாட்டுத்தனமும், அங்கதமும் நிரம்பியவர்.
வருடங்கள் கழிந்து ஒரு கணவான் அவரை மணமுடிக்க விழைந்தார், முன் போல அல்ல, செல்வ செழிப்பு நிறைந்த இடம். தன் “நயம் மிகுந்த தனிமை” பற்றி விதந்தோதி இருந்தாலும், அவர் அந்த மண விருப்பத்திற்கு ஒப்புக்கொண்டார். முடிவில் அவரும் ஒரு மனைவியாக போகிறார், தனது குடும்பத்தைப் பேணப் போகிறார். இந்த எண்ணங்களுடனும், மனக்கிளர்ச்சியுடனும் இரவு விரைவாகவே உறங்க சென்றார். மறுநாள் விழித்த பொழுது அவர் செய்த முதல் காரியம் அந்த கணவானுக்கு மன்னிப்பு கோரி கடிதம் எழுதி அனுப்பியது தான். அவர் மணமுடிவிலிருந்து தன் விருப்பத்தை மாற்றிக்கொண்டிருந்தார்.
அந்த இரவு அப்படி என்னதான் நடந்திருக்கும் என்று நான் பல முறை வியந்திருக்கிறேன். எத்தகைய மாய நினைவுகளும், கனவுகளும் நிரம்பிய ஓர் உலகத்திற்கு அன்று ஜேன் ஆஸ்டன் பயணம் செய்திருந்தால் அவர் தன் மனதை மாற்றிக்கொண்டிருப்பார்? கொடும் கனவுகள் கண்டாரா? நூறு மாடிகள் கொண்ட ஒரு காகித மாளிகையை தன் பேனாவின் மையால் துடைக்க துடைக்க அது நொறுங்கி விழுவதை போல கற்பனை செய்தாரா? எந்த காரணம் அவரை தன் மண வாழ்வின் பாதையில் இருந்து விலக்கி வைத்தது?
முந்தைய தலைமுறை அமெரிக்க எழுத்தாளர்களில் என் மனதில் பெருமதிப்பு கொண்டவராக இருப்பவர், கார்சன் மெக்கல்லர்ஸ். ஒருவேளை, நான் இன்னமும் என்னை முழுதறிய என் எண்ணங்களை அறிய முயன்று கொண்டிருந்த இளமையில் நான் அவரை கண்டறிந்தேன் என்பதே அதற்கு காரணமாக இருக்கலாம். அவரது எழுத்து என்னை சிதறியடித்தது. நான் பள்ளியின் இறுதி வருடத்தில் இருந்த போது ‘இதயம் ஒரு தனித்த விலங்கு’ என்ற அவரது நாவலை கண்டு கொண்டேன். அந்த நூலின் மேல் கொண்ட ஈர்ப்பு அந்த தலைப்பு, அந்த ஆசிரியரின் பெயரை விட ஒரு முக்கிய காரணம். அதற்கு முந்தைய வருடம் தான் அந்த பள்ளிக்கு நான் புதிதாக வந்திருந்தேன். மாட்ரிடில் (Madrid) என் முன் பதின்ம வயதுகளில் இருந்து விட்டு அந்த வருடம் தான் அங்காரா (Ankara) வந்திருந்தேன். எனக்கு ஸ்பானிய மொழி தெரியும், நான் ஒரு காளை சண்டையை நேரில் கண்டிருந்தேன் என்பது என் வகுப்பில் இருந்தவர்களுக்கு அத்தனை கிளர்ச்சி ஊட்டுவதாக இருந்தது. ஆனால் பொதுவாகவே ஆழமைதி கொண்ட என் மீது வெகு விரைவில் அவர்களுக்கு ஆர்வம் இழந்து விட்டிருந்தது. முதலில் ஒரு அலட்சியம் வந்து, பிறகு அதை அவர்கள் ஒரு வித குறையாக எடுத்துக்கொண்டார்கள். பெண் பிள்ளைகளுக்கு நான் இறுக்கமானவளாக, ஆண் பிள்ளைகளுக்கு நான் இனம் புரியாதவளாக, ஆசிரியர்களுக்கு நான் ஓட்டுதல் இல்லாதவளாக தெரிந்தேன். ஆகையால் நான் நூல்களை தவிர எதையும் நம்பியதில்லை. அப்பொழுது எனக்கு கிடைத்தவர் கார்சன் மெக்கல்லர்ஸ்.
அமெரிக்காவை நேரே கண்டிருக்காத ஒரு துருக்கிய பெண் நான், ஆனால் அந்த தென் அமெரிக்க நாட்டு மக்களின் தனிமை என்னை அத்தனை ஆழமாக பாதித்தது. ஆனால் அதை தாண்டிய முக்கியமான ஒன்று, வெறும் இருபதே பக்கங்களுக்குள் இவ்வளவு அழகாக எழுதக்கூடியவர் யார் என்பதை அறிவதற்காக நான் துடித்துக்கொண்டிருந்தேன்.
அவரது பெயர், லூலா கார்சன் ஸ்மித். கார்சன் என்று தன் பெயரை சுருக்கிக்கொண்டதன் மூலம் அவர் தன்னை தனித்து நிறுத்திக்கொள்ள முயன்றார், மேலும் தான் பெண் என்பதை அத்தனை எளிதில் யாரும் அறியமுடியாததாக பார்த்துக்கொண்டார். அத்தனை எளிதில் யாரிடமும் பேசியோ பழகியோ விட முடியாத குணம் கொண்டவர், கூட்டத்தில் ஒருவராக ஆகி விடக்கூடியவரும் அல்ல. 1930களில் ஸ்டாக்கிங்ஸ் (stockings) எனும் மெல்லிய கால் சராய் ஒன்றை அணிந்து, உயர குதிகால் கொண்ட காலணிகள், இடை ஒட்டிய பாவாடை அணிவதே பெண்களுக்கு தகுந்த உடையாக அறியப்பட்டது. அதை விடுத்து, நீள சாக்ஸ் மற்றும் டென்னிஸ் ஷூக்கள் அணிந்து தனது வகுப்பில் உள்ளவர்களை திடுக்கிட செய்தவர் அவர். பொதுவான வெளித்தோற்றத்தின் அழகு அளவுகோல்களை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், தனது காதலரை சந்தித்த அந்த முதல் கணத்தில் அவரது மனம் அவரது புறத்தோற்றத்தையே பதிவு செய்கிறது, “என் மனம் அதிர்ந்தது. அவனை பார்த்த முதல் நொடி, என்ன ஒரு தூய அழகு.” அவரே ரீவ்ஸ் மெக்கல்லர்ஸ். பல ஏற்ற இறக்கங்கள் கொண்டிருந்தது அவர்களின் வாழ்வு, மணமுடித்து, பிறகு பிரிந்து, மீண்டும் மணந்து கொண்டு, 20 ஆண்டுகள் ஒருவரை இன்னொருவர் அத்தனைக்கு மத்தியிலும் இணை பிரியாமலேயே இருந்தனர், ரீவ்ஸின் மரணம் வரை.
ஆக, இலக்கிய உலகில் பல பெண்கள் விரவிக்கிடந்தனர், மனம் மாற்றிக்கொண்டவர்கள், தங்கள் விதியை மாற்றிக்கொண்டவர்கள், ஆம் பெயரை மாற்றிக்கொண்டவர்களும் கூட.
மறு நாள் காலை அந்த பதிப்பாசிரியரை தொலைபேசியில் அழைத்தேன்.
“சொல் எலிஃப், நீயே கூப்பிட்டு இருக்கிறாய், நல்லது,” வேகமாக பேசியவர், ஒரு கணம் நிறுத்தி பின் தொடர்ந்தார். “எலிஃப் தானா, அல்லது அதற்குள்ளாக பெயரை மாற்றிக்கொண்டாயா? வேறு பெயர் சொல்லி அழைக்க வேண்டுமா?”
“அதற்காகத்தான் உங்களை அழைத்தேன். என் பெயரை கண்டு கொண்டேன். எனது சிறுகதையை நீங்கள் பதிப்பிக்கும் போது அந்த பெயரையே நீங்கள் அச்சிட வேண்டும்.”
“ச — ரி,” அன்று போலவே மிகவும் சத்தமாக பேசினார். ஆனால் இப்பொழுது நான் அறிந்திருந்தேன். ஒரு விவாதம் எங்கே செல்கிறது என்று அறியாப்பொழுதில், அவர் அப்படித்தான் பேசினார். “உன் பழைய பெயரை உதிர்த்து விட்டபின் எப்படி இருக்கிறது?”
“அது மிகவும் எளிது. புதிய பெயரை கண்டடைவது தான் கடினம்.”
“ம்ம்… ஹ்ம்ம்,” என்றார் அவர் பரிவுடன்.
“நான் ஒரு வேறுபட்ட பெயருக்காக எழுத்தாளர்களின் வாழ்க்கையை, அகராதியில் பெயர்களின் பொருள்களை, இலக்கிய மேற்கோள்களை என அனைத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தேன். வித்யாசமான பெயர் என்றால் அதற்காக டேவிட் போவியின் குழந்தை ஃஜோவி போலவோ, அல்லது ஃபிராங்க் ஃஜப்பாவின் குழந்தை மூன் யூனிட் (Moon unit) அளவுக்கோ இல்லை. ஆனால் புத்தம் புதியதாய் பிறந்த பல சாத்தியங்களை உள்ளடக்கிய குழந்தையை போல இல்லாமல், வளர்ந்து நிற்கும் ஒருவருக்கு பெயர் வைப்பது என்னவோ அவ்வளவு எளிதல்ல.”
“டேவிட் போவி தன் குழந்தைக்கு, ஃஜோவி போவி என்றா பெயர் வைத்துள்ளார்?” என்று அவர் கேட்டார்.
“ஆம்.”
“சரி, நீ சொல்.”
“எனக்கு காதலன் ஒருவன் இருந்தான். தன்னை அனைவரும் ‘பாதி நிரம்பிய கோப்பை’ என்று அழைக்க வேண்டும் என்று விரும்பினான். தேர்வுகளில் கூட தன் விடைத்தாளில் அந்த பெயரை எழுதி வைப்பான், எங்கள் பேராசிரியர்களின் மெல்லிய இளிவரலை அன்றி வேறு எதையும் அது பெற்றுத்தரவில்லை. பிறகு ராணுவத்தில் சேர்ந்தான். திரும்பி வந்த பொழுது, அந்த ‘பாதி நிரம்பிய கோப்பை’இன் பக்கம் கூட அவன் போகவில்லை. அவனுடைய இயற்பெயருக்கே மீண்டிருந்தான், கயா – பாறை என்று பொருள்.
“ச — ரி,” என்றார்.
“நான் அவ்வளவு தொலைவு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றியது. சொல்லப்போனால் எங்குமே செல்ல தேவையில்லை. என்னிடம் இப்போது இங்கே உள்ளதை கொண்டால் போதும். என் தந்தையின் குடும்ப பெயரை என்னுடையதாக கொள்வதை விட, என் அம்மாவின் முதல் பெயரை என் குடும்ப பெயராக எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்திருக்கிறேன்.”
“என்ன சொல்கிறாய், புரியவில்லை எனக்கு,” என்றார் அவர்.
“விடியல். ஷஃபக், என் அம்மாவின் முதற் பெயர். அதையே என் குடும்ப பெயராக இன்று முதல் எடுத்துக்கொள்ள போகிறேன்.”

ஒரு மாத காலம் கழிந்து அந்த இதழ் பதிப்பிக்க பட்டபோது நான் முதன் முதலாக என் புது பெயரை அச்சில் கண்டேன். அந்நியமாக இருக்கவில்லை. பிழையானதாகவும் இல்லை. கச்சிதமாக இருந்தது. நிழல்களும் எதிரொலிகளுமாக நிரம்பிய இந்த உலகில் நானும் என் பெயரும் முடிவில் ஒன்று சேர்ந்துவிட்டோம்.
*
