நிழலில் மலர்ந்த புதுமையின் பாடல் – பா.ரேவதி

(முரசாகியின் ’கென்ஜியின் கதை’ நாவல் குறித்து)

முரசாகி ஷிகிபு

உலகத்தின் முதல் நாவல் என்று கருதப்படும் நாவலை எழுதியவர் பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானைச் சேர்ந்த முரசாகி ஷிகிபு  என்கிற ஒரு பெண் எழுத்தாளர் என்று அறிந்தபோது எனக்கு ஆச்சர்யமாகவே இருந்தது. அவர் “கென்ஜி மோனோகடாரி(Genji Monogatari)  என்றழைக்கப்படும் ”கென்ஜியின் கதை” என்கிற நாவலை எழுதினார்.   இன்று வரை ஜப்பானின் மகத்தான செவ்விலக்கியப் படைப்பாக கொண்டாடப்படும் இந்த நாவல்  “Tales of Genji” என்றப் பெயரில் ஆறு பாகங்கள் கொண்ட நூலாக ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டது.  இந்நூல் ஐம்பத்து நான்கு நீண்ட  அத்தியாயங்களையும், எழுநூற்றி தொண்ணூற்றைந்து வாக்கா வகை கவிதைகளையும் கொண்டு அமைந்துள்ளது. முரசாகி ஷிகிபு ஜப்பானிய இலக்கியத்தின்  மிக முக்கியமான ஒரு ஆளுமையாகவும், நூற்றாண்டுகளைத் தாண்டியும் இலக்கிய ஆளுமைகளால் புகழுடன் பேசப்படுகிற, மதிக்கப்படுகிற ஒருவராகவும் கருதப்படுகிறார். இந்த நாவலைத் தவிர முரசாகியின் நாட்குறிப்பு (The Diary of Lady Murasaki) என்ற நூலும், கவிதை நினைவுகள்  (The Poetic Memoirs ) என்றழைக்கப்பட்ட நூற்றிருப்பத்தாறு கவிதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பையும் இவர் படைத்துள்ளார்.

கென்ஜி மோனோகடாரி (Genji Monogatari) 

அவரது படைப்புகள், ஹெயன்  காலத்தின் அரசவை வாழ்க்கையை,  ஆண் பெண் உறவுகளின் ஆழத்தை, சமூகப் பார்வைகளை  பிரதிபலிப்பனவாக இருக்கின்றன.  இவரின் எழுத்தில் பெண்ணியக் கருத்துகள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி அதிகம், இல்லாவிட்டாலும்   அவரது படைப்புகளில் வெளிப்படும் பொருட்செறிவும்  தீவிரச் சிந்தனையும் அவரை மரபுகளை உடைத்தவராகவும்  ஒரு புரட்சியாளராகவும் காட்டுகிறது.

முரசாகி ஷிகிபு பொ.யு 973 ஆம் ஆண்டில் ஜப்பானின் ஹெயான்-க்யோ நகரில் (இன்றைய கியோட்டோ) பிறந்தவர். அவர் வடக்கு புஜிவாரா வம்சத்தில் சேர்ந்தவர். இவர்கள்  அரசமரபில் பிறந்தவர்கள் இல்லையெனினும்,  இந்த குலத்தைச்  சேர்ந்த  பெண்களில் சிலர் அரசக்குடும்பத்தில் மணம் முடித்ததால், 11ம் நூற்றாண்டின் இறுதிவரை, புஜிவாரா குடும்பத்தினர் அரசு அதிகாரம் பெற்றவர்களாக திகழ்ந்தார்கள்.

பொ.யு. 10ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 11ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், புஜிவாரா நோ மிசிநாகா என்பவர், தனது நான்கு மகள்களை அரச குடும்பத்தில் திருமணம் செய்து வைத்து, அதிகாரமும் ஆளுமையும் பெற்றதாக சொல்லப்படுகிறது. முரசாகியின்  பாட்டனாரான புஜிவாரா நோ கனேஸுகே,  அரசாங்கத்தில் உயர்பதவி வகித்து, அரசவை வட்டாரத்தில் பெரிதும் மதிக்கப்பட்டவராக திகழ்ந்தார். ஆனால் முரசாகியின்  குடும்பம் காலப்போக்கில் அதிகாரத்தை இழந்து முரசாகியின்  காலத்தில் அவர்கள் நடுத்தர நிலைக்கு தாழ்ந்திருந்தனர்  என்றும், அரசவையில்   சாதாரண கீழ்நிலை பதவிகளில் இருந்தனர் என்றும் இலக்கிய ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

முரசாகியின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் காலங்காலமாகச்  சிறந்த கல்வியறிவைப் பெற்று அறிஞர்களாகவும் பண்டிதர்களாகவும் அறியப்பட்டனர். ஒரு நீண்ட கவிதை மரபின் நீட்சியாகவே  முரசாகி இருந்தார். முரசாகியின் கொள்ளு தாத்தா புஜிவாரா நோ கனேஸுகே ஜப்பானிய அரசவையில் வெளியிடப்பட்ட The Twenty one Imperial Anthologies “  என்றழைக்கப்பட்ட அரச மரபைப் பற்றிய   இருபத்தியொரு கவிதை தொகுப்புகளில் மொத்தம் 56 கவிதைகள் எழுதிய பெருமைக்குரியவராக அறியப்படுகிறார். இவரது கவிதைகள் பதிமூன்று தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.  இவரது படைப்புகள் “முப்பத்தாறு கவிஞர்களின்  தொகுப்பு” மற்றும் யமடோ மொனோகத்தரி” (யமடோ கதைகள்) போன்ற ஜப்பானின் குறிப்பிடத்தக்க  இலக்கியப் படைப்புகளிலும் இடம்பெற்றிருக்கின்றன.

முரசாகியின் தந்தை புஜிவாரா நோ டமேதோகி, The State Academy என்றழைக்கப்பட்ட அரசாங்கக் கல்விக்கழகத்தில் (Daigaku-ryō)-இல் கல்வி கற்றவர்.  சீன இலக்கியத்தில் சீரிய  புலமை பெற்றவர். இவர்  எழுதிய கவிதைகளும்  நூல்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

முரசாகியின் தந்தை பொ.யு. 968-இல் ஒரு சிறு அலுவலராக அரசு பணியில் சேர்ந்தார். 996-இல் மாநில ஆட்சியாளர் பதவியில் நியமிக்கப்பட்டு பொ.யு. 1018 வரை அரசுப் பணியில் இருந்தார். முரசாகியின் தாயாரும், வடக்கு புஜிவாரா வம்சத்தைச் சேர்ந்தவரே. இந்தத் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள்: ஒரு மகன், இரண்டு மகள்கள்.

ஹயன் காலத்திய  ஜப்பானில், கணவன் மனைவியர்  தனித்தனிவீடுகளில் வாழ்ந்தனர். பிள்ளைகள் அம்மாவுடன் வளர்ந்தாலும், தந்தை வழி சமூகமாகவே அவர்கள் இருந்தனர். விதிவிலக்காக , முரசாகி, தந்தையின் வீட்டிலேயே வளர்ந்தார். அவரின் தாய் அவரின் சிறுவயதில் பிரசவத்தில் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.  அவருக்கு நொபுநோரி என்னும் ஒரு இளையச் சகோதரரும்  ஒரு சகோதரியும்  உண்டு .   சகோதரியின் பெயர் தெரியவில்லை.முரசாகி தனது  ஒரே  சகோதரியுடன் நெருக்கமாக இருந்தார்  என்றும் — அந்தச் சகோதரி சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும் அறியப்படுகிறது.  அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

முரசாகி ஷிகிபு என்பது இவரின் இயற்பெயர் இல்லை.  அவரெழுதிய நாவலின் கதாபாத்திரமான முரசாகியின் பெயராலேயே அவர் அழைக்கப்பட்டார். ஹெயன் காலத்தில், பெண்களை அவர்களின் சொந்தப் பெயர்களால்  பொதுவெளியில் குறிப்பிடப்படும்  வழக்கமில்லை.  அரசவையில் பணியாற்றும் குடும்பங்களின்  பெண்கள் அவர்களின்  தந்தையோ ,சகோதரரோ வகிக்கும் பதவியின் அடிப்படையிலேயே அழைக்கப்பட்டனர்.  

முரசாகியின் தந்தை “ஷிகிபு-ஷோ” எனும்  அரசச் சடங்குகளுக்கான அமைச்சகத்தில் (Ministry of Ceremonials)  பணியாற்றினார். அதனாலேயே அவர் வீட்டுப் பெண்களுக்கு “ஷிகிபு” என்ற பெயர் அளிக்கப்பட்டது

முரசாகி” என்பது  ஆங்கிலத்தில் “Wisteria”  என்றழைக்கப்பட்டஒரு  ஊதா நிறப் பூவின் ஜப்பானியப் பெயர்.  இதை  அவர் தனது கதையில் வரும் முரசாகி நோ உஏ என்ற கதாப்பாத்திரத்துக்கு பெயராகச்  சூட்டினார்.  அவரின் கதாபாத்திரத்தின் பெயராலேயே அவர் அறியப்பட்டார். புஜிவாரா நோ கௌரிகோ எனும்  ஒரு பெண்ணின் பெயர் பொ.யு. 1007ஆம் ஆண்டின் ஒரு அரசவைக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது எனவும் அது முரசாகியின் உண்மையான பெயராக இருக்கலாம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பெண்ணின் தனி அடையாளமாக அவளின் பெயர் கூட இல்லாத காலத்தில் இருந்து ஒரு பெண் உலகின் முதல் நாவலை எழுதியுள்ளார் என்பது மகத்தான சாதனையே.

ஹயன் காலத்தில், ஜப்பான்,  சீனத்தின் ஆதிக்கத்தைக்  குறைத்துத்  தன் தனித்துவமிக்க தேசியப் பண்பாட்டு அடையாளத்தை  வலுப்படுத்தும் முயற்சியில் இருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், சீன எழுத்துக்களின்  சுருக்கப்பட்ட வடிவமான கனா (Kana) என்ற புதிய எழுத்துமுறை அறிமுகமாகி,  ஜப்பானிய எழுத்து மொழியாக  உருவெடுத்தது. சீன மொழி அரசவை மொழியாக மட்டுமே தொடர்ந்தது  . ஆண்கள் மட்டுமே சீன மொழியைக் கற்கவும், சீன இலக்கியங்களில் தேர்ச்சி பெறவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

உயர்குடி ஆண்கள்  சீன மொழியில்  எழுதியும்,  பேசியும் வந்தனர்.  அவர்கள் படைத்த இலக்கியங்களும் சீன மொழியிலேயே இருந்தன. ஆனால் பெண்கள் “கனா” மொழியையே   பயன்படுத்தினர். கல்வியறிவு பெற்ற பிரபு குடும்பங்களின் பெண்கள் கனா மொழியில் கவிதைகள் எழுதத் தொடங்கினர். பிற்காலத்தில்  ஜப்பானிய இலக்கியம்  தனித்துவம் பெற இது உதவியது.  

ஜப்பானிய இலக்கியத்தின் பொற்காலமாக ஹெயன் காலம்  கருதப்படுகிறது .  “அமைதி” என்று பொருள்படும் அக்காலகட்டத்தில் அரசவை, கலை மற்றும் இலக்கியச் செயல்பாடுகளின்  மையமாக உருமாறியது. அரசவைகளில் கவிதைகள் பெரிதும் கொண்டாடப்பட்டன.  ஆண்களோடு அரசக் குடும்பப் பெண்களுக்கு மட்டுமே  இவ்வகை இலக்கியக் கூடுகைகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் உருவான எண்ணற்ற  இலக்கியப் படைப்புகள், ஜப்பானிய இலக்கியத்தின் திசையை நிர்ணயித்தன என்று கூறலாம்.

முரசாகியின் ஓவியங்கள்

முரசாகியின் சகோதரருக்கு அரசுப் பணிக்கான பயிற்சியாகச் சீன மொழி கற்றுத்தரப்பட்டது.  அதே வீட்டில் வளர்ந்த முரசாகித் தன் சகோதரரின்  பாடங்களை அன்றாடம் கவனிக்கத் தொடங்கினார். பாடங்களை அதிவேகமாகக் கிரகிக்கும் திறமை முரசாகிக்கு இருந்தது. மொழிப்பாடங்களை அவரின் தம்பி  புரிந்துக்கொள்ளவும் மனனம் செய்யவும் சிரமப்பட்ட பொழுது, அதே பாடங்களை வெறுமே காதால் கேட்டுக் கொண்டிருந்த முரசாகிச் சுலபமாகக் கற்றார்.  இதைக் கவனித்த அவர் தந்தை முரசாகியையும் சீனமொழி  பாடங்களைக் கற்கச் செய்தார்.  மொழி  தன்னியல்பாக அவருக்கு வசப்பட்டது.  இயல்பிலேயே புத்திகூர்மையுடன் திகழ்ந்த முரசாகி சீன இலக்கியத்தில் ஆழ்ந்த திறமை பெற்றார். இத்தனை திறமை பெற்ற முரசாகி ஆணாகப்  பிறக்காமல் ஒரு பெண்ணாகப் பிறந்தது தன் துரதிர்ஷ்டம் என்று  தந்தை கூறியதாக முரசாகி தன் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.  அவர் சீன இலக்கியத்துடன், இசை,  காலிக்ராஃபி மற்றும் ஜப்பானியக் கவிதைகளிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார்.  சீன மொழியில் திறமையும்  தேர்ச்சியும் பெற்றிருந்தாலும் அவர் சீன மொழியை முற்றிலும் நிராகரித்தார் என்றும், தன் கவிதைகளை ஜப்பானிய மொழியில் எழுதுவதையே அவர் ஆதரித்தார் எனவும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அக்காலகட்டத்தில் அசாதாரணமான கல்வியைப் பெற்ற ஒரே ஆளுமை முரசாகி  என்று வரலாற்று ஆய்வாளர்  லூயிஸ் பெரஸ்  குறிப்பிடுகிறார்.

ஹெயன் காலத்துப்  பெண்கள், அதிகக்  கட்டுப்பாடுகளைக் கொண்ட தனிமையான  வாழ்க்கையையே வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குக் குடும்பத்தினரைத் தவிர வேற்று ஆண்களுடன் உரையாட அனுமதி இல்லை. முரசாகிப் பெரும்பாலும் பெண்களுடன் மட்டுமே சமூக உறவுகளைக் கொண்டிருந்தவர். தந்தை மற்றும் சகோதரனைத் தவிர மற்ற ஆண்களுடன் குறைந்த தொடர்பே  அவருக்கு இருந்தது. அவர் பெண்களுடன் கவிதைப் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர் காலத்தில் பெரிதும் பாராட்டப்பட்ட இஷுமி ஷிகிபுவை போல் ஆண்களுடன் ஒருபோதும் இத்தகைய பரிமாற்றங்களில் அவர் ஈடுபட்டதில்லை என்பது ஆச்சரியத்தையே அளிக்கிறது.  

பிரபுத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த பல ஹெயன் காலத்திய  பெண்களுக்கு  வயதுக்கு வந்ததுமே திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உடனடியாக மணமுடித்து வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் இதிலும்  முரசாகி ஒரு விதிவிலக்கே. இருபத்தைந்து வயதைத் தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் தன் தந்தையின் வீட்டிலேயே அவர் வாழ்ந்து வந்தார்.  இது அந்தக் காலத்தில் மிக அபூர்வமான ஒன்று. 

பொ.யு 996இல் முரசாகியின் தந்தை எசிசென் மாகாண ஆட்சியாளராக நியமிக்கப்பட முரசாகியும் அவருடன் சென்றார்.  இதுவும் ஒரு புரட்சிகரமான செயலாக அன்று கருதப்பட்டது. அந்தக் காலத்தில் நற்குடிப் பெண்கள் ஆண்களைப் போல் நீண்ட பயணங்களை மேற்கொள்வதில்லை. கியோட்டோவிலிருந்து ஐந்து நாள் பயணத் தொலைவில் இருந்த எசிசென் மாகாணத்துக்குத் தன் தந்தையோடு அவர் பயணித்தது கடுமையாக  விமர்சிக்கப்பட்டதாக அவர் தன் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.

இரண்டு வருடங்களுக்குப் பின் மீண்டும் கியோட்டோவுக்கு திரும்பிய முரசாகி, அவரது தந்தையின் நண்பரும் தூரத்து உறவினருமான  புஜிவாரா நோ நொபுதாகா என்பவரை மணந்தார். நொபுதாகா ஒரு அரசவைக் கண்காணிப்பாளராகவும் அரசச் சடங்குகளுக்கான அமைச்சகத்தில் (Ministry of Ceremonials)  உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

திருமணத்தின்போது அவர் நாற்பதுகளின் இறுதியில் இருந்ததாகவும், அவருக்கும் முரசாகிக்கும்  இடையே இருபது வயது வித்தியாசம் இருந்தது எனவும் சொல்லப்படுகிறது. அவருக்குப் பல மனைவிகள், பிள்ளைகள்  இருந்திருக்கக் கூடுமென என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  அவர் அரசவையில் மிகப் பிரபலமானவராகவும் சமூக உறவுகளில் விரும்பி ஈடுபவராகவும் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

அந்தக் கால மரபுப்படி,  திருமணத்துக்குப் பின்னும் முரசாகித் தந்தையின் வீட்டிலேயே தொடர்ந்து தங்கியிருக்க, நொபுதாகா அவ்வப்போது அவரது இல்லத்துக்கு வந்து சென்றுக்கொண்டிருந்தார். திருமணம் ஆகிய இரண்டு வருடங்களிலேயே அவர்  காலரா  நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவருக்கும் முரசாகிக்கும் பிறந்த பெண்குழந்தை தைனிநோ சன்மி (Daini no Sanmi) பிற்காலத்தில் தன் தாயைப் போலவே புகழ் பெற்ற கவிஞரானார்.

அதுவரை கவிதைகளை மட்டும் எழுதி வந்த முரசாகி, கணவரது இறப்புக்குப் பின் தான் தனது நெடிய நாவலை எழுதத் தொடங்கினார் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவரின் கவிதைகளுக்கு உயர்குடி மக்களின் மத்தியில்  நல்ல வரவேற்பும் புகழும் இருந்தது. முரசாகி அரச வட்டாரங்களில் சீன மற்றும் ஜப்பானிய மொழியில் புலமை பெற்றவராக அறியப்பட்டுப்  பிரபலமாக  இருந்தார். இதனால் அவரின் கணவரின் மறைவுக்குப்பின் மிச்சினாகா என்ற அமைச்சர்  முரசாகியை தன் மகள் ஷோஷிக்கு துணையாக இருக்க அரசவைக்கு அழைத்தார். ஒரு பணிப்பெண்ணாக முரசாகி அரண்மனையில் குடியேறினார். அவர்  சீனமொழியை ஷோஷிக்கு கற்றுத் தரவும் பணிக்கப்பட்டார்.

ஷோஷி பின்னர் ஜப்பானின் அறுபத்தியாறாவது பேரரசரான இஷிஜோ என்பவரை மணமுடித்தார். அரசி ஷோஷியுடன் முரசாகியும் பேரரசரின் அரண்மனைக்குச் சென்றார். அங்குத் தான் அவர் கென்ஜியின் கதை என்கிற இந்த நாவலை எழுதினார் என்று வரலாற்று ஆசிரியர்களால் கூறப்படுகிறது. அதைத் தவிர வாகா கவிதைகளையும்  அவர்  அந்த அரசவையில் அரங்கேற்றினார். பேரரசரின் இன்னொரு மனைவியான அரசி டெய்ஷியின் பணிப்பெண்ணாக இருந்த ஷெய்ஷோனகோன் என்ற பெண் கவிஞருக்கும் இவருக்குமிடையே மெல்லிய விரோதம் நிலவியதாகத் தெரிகிறது. அவரின் பில்லோ புக் (Pillow book) என்ற கவிதை நூலுக்குப் போட்டியாகவே முரசாகி இந்த நாவலை எழுதத் தொடங்கி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஐப்பானில் இன்று வரை இந்த இரண்டு பெண்கவிஞர்களின் வாசகர்களும்  இரு வேறு கட்சிகளாகப்  பிரிந்து உள்ளனர். இரண்டு பாசறைகளைச் சேர்ந்தவர்களிடையே  இன்னும் கூட விவாதங்கள் நடைப்பெறுகின்றன. ஷெய்ஷோனகோனுடன் மட்டும் இல்லாமல் அதே காலத்தில் அரசவை கவிஞராக இருந்த இஷுமி ஷிகிபுவுடனும் இவருக்கு நல்லுறவு இல்லை. இஷுமியை கனவில் மிதப்பவள், தோன்றியவற்றை எல்லாம் கவிதையாக எழுதுகிறார் எனத் தன் நாட்குறிப்பில் முரசாகிக் குறிப்பிடுகிறார்.  ஷெய்ஷோனகோனையும் மோசமான கவிதைகளை எழுதுபவராகவே அவர் பதிவு செய்துள்ளார்.

வரலாற்று ஆய்வாளரான லூயிஸ் பெரஸ் பெண்கள் அதிக அறிவாற்றல் படைத்தவர்கள் அல்ல என்று ஹயன் காலத்தில் நம்பப்பட்டதாகவும், சீன மொழிக் கல்வியில் சிறந்து விளங்கிய முரசாகியை அவர் வயதையொத்த மற்ற பெண்கள் அச்சத்துடனும் பொறாமையுடனும் பார்த்ததாகவும் தனது ”ஜப்பானின் வரலாறு” (The History of Japan ) என்ற நூலில்  குறிப்பிடுகிறார்.  

அரசவை பெண்களும், அவரின் போட்டியாகக் கருதப்பட்ட அதே காலத்தைச் சேர்ந்த ஷெய்ஷோனகோன், இஷுமி ஷிகிபு  போன்ற மற்ற பெண் கவிஞர்களும் முராசாகியை பகட்டும் பாசாங்கும் உடையவராகவும், அகந்தை பிடித்தவராகவும் கருதியதாக அவர் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். இனிமையாகப் பழகும் தன்மை கொண்டவராகப் பார்க்கப்பட்ட இஷுமியுடன் முரசாகியை அரசவை மகளிர் அதிகம் ஒப்பிட்டு  விமர்சித்ததாக லூயிஸ் எழுதியுள்ளார். இரண்டு பெண் கவிஞர்களின் நூல்களிலும் முரசாகியைப் பற்றிய இவ்வகை குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முரசாகி, மற்றவர்கள் தன்னைப் பொறாமைக்காரி, அகந்தை கொண்டவள்,  எளிதாக அணுக முடியாதவள், தொட்டாச்சிணுங்கி என்றெல்லாம் கருதுவதை அறிந்தே இருந்தார் எனவும்  ஆனால் அதைப் பற்றி அவர் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை என்றும் லூயிஸ்பெரஸ் பதிவு செய்துள்ளார்.

முரசாகி

ஆசிய இலக்கிய ஆய்வாளரான  தாமஸ் இஞ்ச், முரசாகி,  வலிமைமிக்க ஆளுமையைக் கொண்டிருந்தாலும் அது அவருக்கு நிறைய நண்பர்களைப் பெற்றுத் தர உதவவில்லை என்று எழுதுகிறார். ஔவையாரால் எழுதப்பட்ட அகநானூற்றுப்பாடலில் வெள்ளிவீதியாரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அக்குறிப்பு வெள்ளிவீதியாரை வாஞ்சையுடன் நினைவு கூறுவதாகவே அமைந்துள்ளது என்று நம் உரையாசிர்கள் கருதுகின்றனர்.

*

‘கென்‌ஜியின் கதை’ (Genji Monogatari) நாவல் ஜப்பானிய இலக்கியத்தில் ஒரு சிறந்த பண்பாட்டு வரலாற்று சின்னமாகவே கருதப்படுகிறது.  இது உலக இலக்கிய வரலாற்றின் முதல் நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ஒரு பெண் எழுதிய முதல் நாவலாகவும், உலகளவில் புகழ்பெற்ற இலக்கியமாகவும் தனி இடத்தைப் பெற்றுள்ளது. இன்று ஜப்பானில் ‘கென்‌ஜி மொனோகத்தரி’க்கு இருக்கிற பெருமை, இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியருக்குள்ள மதிப்புடன் ஒப்பிடத்தக்கது.

இந்தக் காவியம், ஹெயான் கால அரசவை வாழ்கையை விளக்கும் ஒரு அழகிய பண்பாட்டின் பதிவாக இருக்கிறது. இது பெரும்பாலும் பழமையான ஜப்பானிய எழுத்து வடிவில் (ஹிராகானா) எழுதப்பட்டதாகும். அக்காலத்தில் வழக்கமாகக் கவிஞர்கள் பயன்படுத்தி வந்த “காஞ்சி” (Kanji)  என்றழைக்கப்பட்ட சீன எழுத்துருக்கள் இந்நூலில் பயன்படுத்தப் படவில்லை இலக்கியங்களைப் போல்  புராதனமான மொழியின் செறிவும் கவித்துவமான நடையும்கொண்டமைந்த இந்த நாவலை ஆழமான மொழியறிவும் இலக்கியத் தேர்ச்சியும் இருந்தால்  மட்டுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்று மொழியியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

பொ.யு. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அகிகோ யோசானோ என்னும் பெண்பாற் கவிஞர் இதை நவீன ஜப்பானிய மொழியில் மொழிப்பெயர்த்தார். முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு 1882இல் ”சுயமத்சு கென்சோ” என்பவரால் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அது ஒரு முழுமையான மொழிப்பெயர்ப்பாக இல்லையென என மொழிவல்லுநர்களால் விமர்சிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த ஆர்தர் வாலி (1925- 1933 )  ஆறு பாகங்களைக் கொண்ட ஒரு முழுமையான நூலாக இதனை மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆர்தர் வாலி தனது ‘The Tale of Genji: A Novel in Six Parts’ என்ற மொழிபெயர்ப்பை 1933-இல் வெளியிட்டபோது, முரசாகியின் கதை, ஜேன் ஆஸ்டின், ப்ராஸ்ட் மற்றும்  ஷேக்ஸ்பியர் ஆகியோரின் படைப்புகளுடன் ஒப்பிடப்பட்டது என்று மொழி ஆய்வளர்கள்  குறிப்பிட்டுள்ளனர். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எலிசபெத்திய இங்கிலாந்தை விவரித்ததைப்போல் ஹயன் காலத்திய அரச மரபைச் சித்தரித்த வரலாற்று சாசனமாகவே இந்த நாவல் கருதப்பட்டது. அதன் பின்னர், எட்வர்ட் ஸெயிடன்ஸ்டிக்கர், ராயல் டைலர், மற்றும் டெனிஸ் வாஷ்பெர்ன் ஆகியோராலும் இந்நூல் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.  

இந்த நாவலின் மூல எழுத்துப் பிரதிகள் இப்போது கிடைக்கப்பெறவில்லை ஆனால் சுமார் 300-க்கும் மேற்பட்ட கையினால் எழுதிப் படியெடுக்கப்பட்ட  கையெழுத்து பிரதிகள் இன்றும் கிடைக்கப் பெறுகின்றன. இவை ‘ஓரிஹொன்’ (Orihon- Concertina style) என்றழைக்கப்பப்படும் ஜப்பானிய முறையில் பைண்டிங் செய்யப்பட்டவை. இந்த முறையில் காகிதங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக ஒட்டப்பட்டு எதிரெதிர் திசையில் மடிக்கப்படும். இம்முறையில் பிணைக்கப்பட்ட நூல்கள் “கான்சர்ட்டீனா” என்ற இசைக்கருவியின் வடிவத்தில் இருக்கும்.

முரசாகி ஷிகிபு மறைந்தபின் ‘கென்‌ஜியின் கதை’  ஓவியங்கள், படக்கதைகள், சிற்பங்கள் எனப் பல வடிவங்களில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. நிறைய அரிய கலை படைப்புகள் உருவாகின. அவற்றில் மிகவும் அரியதாகக் கருதப்படுவது பனிரெண்டாம் நூற்றாண்டில் ‘கென்‌ஜி மொனோகத்தரி எமாகி’ (Genji Monogatari Emaki) என அழைக்கப்படும் ஒரு கையடக்க ஓவியச்சுருள். நான்கு  காகிதச் சுருள்களில் பத்தொன்பது ஒவியங்களை கொண்ட இக்கலைப்படைப்பு புஜிவாரா நோ டகாசிகா என்பவால் வரையப்பட்டதாக நம்பப்படுகின்றது. இந்தச் சுருள் இன்று டோக்கியோவில் உள்ள கோத்தோ அருங்காட்சியகத்திலும், மத்திய ஜப்பானின் நகோயா மாகாணத்தில் அமைந்துள்ள தொக்குகாவா கலை அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Scroll painting – The Tale of Genji-லிருந்து ஒரு மரண ஊர்வலம்

பொ.யு. 17ஆம் நூற்றாண்டில் முரசாகியை மரபு, ஒழுக்கம், அறிவு போன்ற பண்புகளின் பிரதிபலிப்பாக மக்கள் பார்க்கத் தொடங்கினர். இதனால்  முரசாகி மற்றும் ‘கென்‌ஜி’-ஐ மையமாகக் கொண்ட கலைப்பொருட்களுக்கு (genji-e) அதிக வரவேற்பு இருந்தது. “கென்‌ஜியின் கதை” நாவலின் காட்சிகளால் அலங்கரிக்கப்பட்ட திருமணச் சீர் வரிசைப் பொருட்கள்(dowry sets), உயர்குடி பெண்களிடையே மிகவும் பிரபலமாகின.

முரசாகியின் உருவப்படமோ நாவல் காட்சிகளோ வரையப்பட்ட மரப்பெட்டிகள், பானைகள், திரைச்சீலைகள், சுவர் அலங்காரங்கள்  போன்ற பொருட்களை மணப்பெண்களுக்கு வரதட்சணையாக அளிப்பது பெரும் கௌரவமாகக் கருதப்பட்டது. முரசாகி ஷிகிபு நற்பண்புடைய  உயர்குடிபெண்ணின்  அடையாளமாகப் பார்க்கப்பட்டார். அவர் பெரும்பாலும் இஷியாமா கோயிலில், ஒரு மேசையருகில் அமர்ந்தபடி, நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே ஒவியங்களில் சித்தரிக்கப்பட்டார்.

“மூவாயிரம் ஆண்டுகளாக, பலவிதங்களிலும் பல வடிவங்களிலும் ‘கென்‌ஜியின் கதை’ மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுப் புதிய அர்த்தங்களையும், மதிப்பீடுகளையும் உருவாக்கி வருகிறது. இந்த நாவலைப் போலத் தொடர்ச்சியான வரலாற்று தாக்கத்தை ஏற்படுத்திய வேறு நூல் இன்று வரை ஜப்பானில் உருவாகவில்லை” என , ஹாரூ ஒ. ஷிரானே  என்னும் ஆய்வாளர் Envisioning the Tale of Genji’ எனும் நூலில் கூறுகிறார்.

நவீன இலக்கிய வடிவங்களாகக் கருதப்டும் மாங்கா(Manga), அனிமே (Anime) போன்ற படக்கதைகளாகவும், இந்த நாவல் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கென்ஜியின் கதை எழுதப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக 2008ஆம் ஆண்டில் ஜப்பானிய அரசு கியோடோ நகரில் அந்த வருடம் முழுவதும் பல இலக்கிய நிகழ்வுகளையும், கொண்டாட்டங்களையும்  முன்னெடுத்து நடத்தியது. அதே வருடம் இரண்டாயிரம் ஜப்பானிய யென் மதிப்புள்ள நோட்டில் முரசாகியின் முகத்தையும்  நாவலில் இருந்து ஒரு காட்சியும் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

முரசாகி ஷிகிபுவின் இறுதிக்கால வாழ்க்கை பற்றிய பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. பேரரசி சோஷியின்  உதவியாளராக சேவையாற்றிக் கொண்டிருந்த முரசாகி,  அவரை ஆதரித்த அமைச்சர் மிச்சினாகாவின் மறைவுக்குப் பின் அரண்மனை பதவியிலிருந்து  விலகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவர் இறப்பைப் பற்றிய குறிப்புகளோ சரியான தேதியோ தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான வரலாற்றாளர்கள் அவர் 1014 மற்றும் 1031 இடையே காலமாகியிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். அவருடைய மகள் தைனிநோ சன்மி, தாயைப் போலவே அரசவையில் புகழ்பெற்ற கவிஞராக விளங்கியதிலிருந்து, முரசாகி நீண்ட காலம் வாழ்ந்து மகளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

பா. ரேவதி

முரசாகி ஷிகிபுவின் கல்லறை பற்றிய தொல்லியல் ஆதாரம் எதுவும் இல்லை. க்யோட்டோ, உஜி மற்றும் இஷியாமா-டெரா கோயில்களில் அவரை நினைவுகூரும் சின்னங்கள் மற்றும் அவரின் உருவசிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

*

இயற்பெயரால் கூட அறியப்படாத முரசாகியின் படைப்புகள் ஜப்பானில் மட்டுமன்றி உலகளாவிய அளவிலும் இலக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மனித உணர்வுகளை நுட்பமாக  பதிவு செய்யும் திறனும், சிக்கலான கதையமைப்புகளை நெகிழ்ச்சியோடு பின்னிச் செல்லும் அவரது ஆற்றலும் வாசகர்களையும்  இளைய எழுத்தாளர்களையும் இன்றைக்கும் ஈர்த்து வருகிறது. பெண்ணைழுத்தின் தீவிரமும் மரபுகளின் மேலான ஏளனமும் இவரின் எழுத்துகளில் வெளிப்படுவதை காணமுடிகிறது.

முரசாகி ஷிகிபுவை போற்றுவது என்பது ஒரு நீண்ட பெண்ணிலக்கிய மரபை கொண்டாடுவது.  பெயரின்றி  நிழலில் வாழ்ந்தாலும் ஓங்கி ஒலிக்கும் பெண் குரலின் பிரதிநிதி முரசாகி.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *