மனைவியரின் பலிபீடம் – ஜெயமோகன்
(அலக்ஸாண்டிரா போபாஃப் எழுதிய ‘ஒரே நிழல்’ நூலுக்கு எழுதிய முன்னுரை)

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விமர்சகர், இலக்கிய ஆய்வாளர் வேதசகாய குமார் என் இல்லத்திற்கு ‘பேயறைந்த’ முகத்துடன் வந்தார். புதுமைப்பித்தன் தன் மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதங்களை இளையபாரதி ‘கண்மணி கமலாவுக்கு’ என்ற பெயரில் நூலாக்கியிருந்தார். அது வேதசகாயகுமாரை கொந்தளிக்கச் செய்தது.
அதற்கும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வேதசகாயகுமார் தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக புதுமைப்பித்தன் படைப்புகளின் முழுமையான ஒரு பட்டியலை உருவாக்கும் முயற்சியில் பலமுறை கமலா விருத்தாசலத்தைத் தொடர்பு கொண்டிருந்தார். புதுமைப்பித்தன் கதைகளின் முழுமையான பட்டியல் உருவாவதற்கு வேதசகாயகுமாரின் முனைவர் பட்ட ஆய்வுதான் முதன்மைக் காரணம். அதற்கு உதவியவை கமலா அளித்த தரவுகள்.
புதுமைப்பித்தனின் அரிய கடிதங்கள், குறிப்புகள் ஆகியவற்றை கமலா வேதசகாயகுமாருக்கு அளித்தார். குறிப்பாக புதுமைப்பித்தன் மலேசிய இதழ்களில் புனைபெயர்களில் கதை எழுதி பணம் பெற்றுக்கொண்டமைக்கான சான்றுகள். அன்று அவர் தினமணியில் பணியாற்றியமையால் அது நெறிமீறல். ஆனால் வறுமையில் இருந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு அந்த வருமானம் பெரிய துணையாக இருந்தது. புதுமைப்பித்தன் வேறுபெயர்களில் எழுதிய படைப்புகள் அவ்வாறுதான் ஆதாரபூர்வமாக கண்டடையப்பட்டன.
பல ஆண்டுகள் தொடர்ச்சியாக கமலா விருத்தாசலத்துடன் தொடர்பிலிருந்தார் வேதசகாயகுமார். புதுமைப்பித்தனின் எல்லா ஆவணங்களையும் அவருக்கு அளித்துவிட்டதாக கமலா சொன்னார். ஆனால் அரிய ஆவணத்தொகையாகிய அந்த காதல் கடிதங்களை மறைத்துவிட்டார். மிக முதிய அகவையில் அவற்றை இளையபாரதிக்கு அளித்தார். வேதசகாயகுமார் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார்.
நான் சொன்னேன். ‘மிக இயல்பானது அது. கமலாவுக்கு அந்தக் கடிதங்கள் இலக்கிய ஆவணங்கள் அல்ல. தனிப்பட்ட பதிவுகள், ஆகவே அத்தனை அந்தரங்கமானவை, சாகும் தருவாயில் அவற்றை வெளியிட அவர் முடிவெடுத்ததே கூட அரிதான செயல்தான். அவற்றை தன்னுடன் எரித்துவிட அவர் எண்ணியிருந்தால் கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை’
எழுத்தாளனின் மனைவி என்பது ஒரு சாபம், ஒரு வரம். எழுத்தாளனின் உலகியல் பொறுப்பின்மை, கனவுத்தன்மை, உணர்ச்சிநிலையின்மை ஆகியவற்றை அந்த மனைவி சுமக்கவேண்டியிருக்கும். ஆனால் அந்த மனைவிக்கு கொஞ்சம் இலக்கியம் தெரியும் என்றால் தன் கணவனுடன் இலக்கியத்தின் உலகுக்குள் செல்லமுடியும், உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்தில் வாழமுடியும்.
அது சாதாரணமானது அல்ல. சாதாரணமாக ஆண் பெண் உறவு மிகமிக இயல்பாக, மிகச் சாதாரணமாகச் சலித்துவிடக்கூடியது. குழந்தைகள் அமைந்தபின் அவை மட்டுமே கணவன் மனைவிக்கான பொதுக்கவலையாக நீடிக்கின்றன. அந்த கவலையே அவர்களை இணைக்கிறது. மணவாழ்க்கை என்பதுபோல சலிப்பூட்டக்கூடி இன்னொன்று இல்லை. ஏனென்றால் அவர்கள் பேசிக்கொள்ள ஒன்றுமில்லை. உடல்காமம் சலித்தபின் பொதுவாக நினைவுகளன்றி ஏதுமில்லை.
ஆனால் கணவன் மனைவிக்கு இடையே இலக்கியம், கலை, சமூகப்பணி போல ஓர் உலகியலுக்கு அப்பாற்பட்ட களம் இருக்கும் என்றால் அவர்கள் பேசிக்கொள்ள முடிவேயற்ற ஓர் உலகம் எஞ்சுகிறது. அதிலுள்ள ஆன்மிக அம்சம் அவர்களை எல்லா அன்றாடச் சலிப்புகள், கசப்புகளில் இருந்தும் மேலெழச்செய்கிறது. அவர்களின் உறவு சலிப்பற்ற இனிமைகொண்டதாக ஆகிறது.
இதை நான் என் வாழ்க்கையில் இருந்தே சொல்கிறேன். எனக்கு அருண்மொழி வாசகியாகவே அறிமுகமானாள். அவளிடம் இலக்கியத்தைப் பற்றித்தான் மிகப்பெரும்பாலும் பேசியிருக்கிறேன். இப்போதும் இலக்கியம் மட்டும்தான் எங்களுக்குள் பேசுபொருளாக உள்ளது. பிற எதையாவது பேசுவது அரிதினும் அரிது. ஆனால் ஒவ்வொரு நாளும் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டும் இருக்கிறோம். எனக்கும் அருண்மொழிக்குமான ஏராளமான பகடிச்சொற்கள், சொலவடைகள் உண்டு. எல்லாமே இலக்கியம் சார்ந்தவை. ஒரு சொல்லுக்கு அவள் ஏன் வெடித்துச் சிரிக்கிறாள் என இன்னொருவர் உணரமுடியாது.
ஒரு முறை நானும் அருண்மொழியும் பேருந்தில் பேசிச்சிரித்துக்கொண்டே செல்ல ஒரு போலீஸ் ஏட்டு நாங்கள் கள்ளக்காதல் ஜோடி என சந்தேகப்பட்டு விசாரித்தார். ‘கணவன் மனைவின்னா எதுக்குச் சிரிச்சுப் பேசணும்?’ என்று உண்மையான சந்தேகத்துடன் கேட்டார். அது பொதுச்சமூக மனநிலையேதான். விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்தபோது அதன் முன்னுரையில் திருமணமான நாட்களில் நான் அவளிடம் அந்நாவலைப் பற்றி மட்டுமே பேசினேன் என்று எழுதியிருந்தேன். அதற்கு விமர்சனம் எழுதிய பொ.வேல்சாமி என்பவர் ‘மனைவியை கொடுமைப்படுத்தியவர்’ என்று நையாண்டியாகச் சொல்லியிருந்தார். அதாவது பெண்களிடம் என்ன இலக்கியப்பேச்சு?
என் எழுத்துக்களின் முதல்வாசகி அருண்மொழிதான், விஷ்ணுபுரம் முதல் அண்மையில் எழுதிய காவியம் வரை. அதன் ஆக்கத்தில் அவளுடைய பங்களிப்பு உண்டு. அதற்கு அப்பால் அவளுக்கான இலக்கியத்தேடல், வாசிப்பு உண்டு. அவள் தன் நினைவுகளை எழுதியபோது (பனி உருகுவதில்லை) என் நடையின் சாயலே அதில் இல்லை. அது எனக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரம் என்றே கொள்கிறேன்.
நான் இலக்கியவாதிகளின் மனைவிகளாக ஆகி, அந்த இலக்கியவாதிகளின் உலகுக்குள் நுழைந்து அவர்களின் ஆன்மாக்களின் தோழிகளாக ஆன பல மனைவியரை முன்னரும் கண்டிருக்கிறேன். ஆற்றூர் ரவிவர்மாவின் மனைவி ஶ்ரீதேவி வர்மா, சுந்தர ராமசாமியின் மனைவி கமலா ராமசாமி போன்றவர்கள் உதாரணம். ஆனால் இந்தியாவில் நேர் எதிரானவர்களே மிகுதி. கணவனின் எழுத்துபற்றி ஒரு வரி கருத்து சொல்லும் மனைவியர் தமிழில் அனேகமாக இல்லை.
ரஷ்ய இலக்கிய மேதைகளான தல்ஸ்தோயின் மனைவி சோபியா, தஸ்தயேவ்ஸ்கியின் மனைவி அன்னா, மாண்டில்ஸ்டமின் மனைவி நடேஷ்டா, நபக்கோவின் மனைவி வியரா, பல்ககாவின் மனைவி மார்கரீட்டா, மண்டல்ஸ்டமின் மனைவி நடேஷ்டா, சோல்செனிட்ஸினின் மனைவி நட்டாலியா ஆகியோர் பற்றிய நூல் இது. அலக்ஸாண்டிரா போபாஃப் எழுதிய நூலை நண்பர் சிறில் அலெக்ஸ் கவனமாகவும், நுணுக்கமான குறிப்புகளுடனும் மொழியாக்கம் செய்துள்ளார். அந்த இலக்கிய ஆளுமைகள் பற்றிய குறிப்புகளும், மொழிபெயர்ப்பு பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன.

இந்த ஆளுமைகளில் சிலர் நான் முன்னரே அறிந்தவர்கள்- சோபியா, அன்னா, வியரா, நடேஷ்டா. சிலரின் பங்களிப்பை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அறிந்தவர்களைப் பற்றிக்கூட இத்தனை நுணுக்கமாகவும் தீவிரமாகவும் நான் அறிந்திருக்கவில்லை. வியராவுக்கு நபக்கோவ் எழுதிய கடிதவரி “நீயும் நானும் முற்றிலும் தனித்துவமானவர்கள். நாம் அறியும் அற்புதங்களை வேறெவரும் அறிந்ததில்லை, நம்மைப்போல் வேறெவரும் காதலிப்பதில்லை” வழக்கமான காதல்கடிதங்களில் வருவதுபோன்ற மேலோட்டமான உணர்வுகளின் வரி அல்ல இது. உண்மையில் ஓர் எழுத்தாளன் தன் உலகுக்குள் வரமுடிந்த பெண்ணுக்கு அளிப்பது முற்றிலும் தனித்துவமான, முற்றிலும் அவர்களுக்கு மட்டுமேயான ஓர் அற்புத உலகை.
நான் அருண்மொழியிடம் அவள் வாழ்வின் உச்சதருணங்கள் எவை என கேட்டிருக்கிறேன். காதல், குழந்தைபிறப்பு எல்லாவற்றையும் விட அவள் முதன்மையாகச் சொல்வது விஷ்ணுபுரம் எழுதப்பட்ட நாட்களில் என்னுடன் அவளும் அந்த மாயநிலத்தில் வாழ்ந்ததைத்தான். அதை இன்னொருவருக்குச் சொல்லி புரியவைக்கவே முடியாது.
ஆசிப் மாண்டல்ஸ்டம் (பின்தொடரும் நிழலின் குரலில் நாடகக்கதாபாத்திரமாக இவரை எழுதினேன்) ஸ்டாலின் காலகட்டத்தின் கொடிய அடக்குமுறையின் பலி. அவருக்கு மனைவியாகியபோதே நடேஷ்டாவுக்கு என்ன நிகழும் என நன்கு தெரிந்திருந்தது. முற்றிலும் தெளிந்துதான் ஆசிப்பின் விதியை நடேஷ்டா தொடர்ந்தார். அவருடைய எழுத்துக்களை தொகுக்க, மிகக்கொடிய அடக்குமுறைச் சூழலில் அவற்றைப் பாதுகாக்க, வெளியிட தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்டார்.
உலகமெங்கும் அப்படிப்பட்ட பெண்களை திரும்பத் திரும்பக் காணலாம். அவர்களில் ஒருவர் புகாரினின் மனைவி அன்னா புகாரினினா (அன்னா மிகலோவ்னா லாறினா). ஸ்டாலினின் கொடிய ஆட்சியால் கொல்லப்பட்ட தன் கணவரின் இறுதி வாக்குமூலத்தை மந்திரம்போல அரைநூற்றாண்டுக்காலம் சொல்லிக்கொண்டு சைபீரிய வதைமுகாமில் வாழ்ந்தவர். வரலாற்றின் முன் வந்து நின்று அதைச் சொல்லி அவர் மீதான களங்கத்தை துடைத்தவர். பின்தொடரும் நிழலின் குரல் அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
நோயாளியும் கட்டற்றவருமான தஸ்தயேவ்ஸ்கியின் மனைவியான அன்னா அவருக்கு முற்றிலும் பணிந்தவராக, விட்டுக்கொடுப்பவராக, மென்மையாக அவரை அணைத்துச் செல்பவராக இருந்தார். திடமானவரும், ஆன்மிகக்கிறுக்கருமான தல்ஸ்தோயின் மனைவி சோபியா அவர்மேல் தன் ஆளுமையைச் செலுத்த தொடர்ச்சியாக முயன்றவராக இருந்தார். தன் நகைகளை தஸ்தயேவ்ஸ்கி அடகு வைப்பதை, அதன்பொருட்டு அவமானமாக உணர்வதை இயல்பான புன்னகையுடன் எடுத்துக் கொள்கிறார் அன்னா. ஆனால் தன் கணவனின் உடைமைகள் தன் மைந்தர்களுக்கும் உரியவை என நம்பினார் சோபியா. ஒவ்வொரு மனைவியும் ஒவ்வொரு வகையானவர்கள். ஆனால் கணவர்கள் ஒரே வகையாகத்தான் இருக்கிறார்கள். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி இருவருமே மனைவி விஷயத்தில் மிகவும் பொறாமைகொண்டவர்கள்.
இந்த மனைவிகளின் உலகம் வழியாகச் செல்லும் இந்நூல் ஒரு மிகப்பெரிய நாவலை வாசிக்கும் உளஎழுச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது. இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் மகத்தான கதைநாயகியராக திரண்டு வருகிறார்கள். சில இடங்கள் பெரும் புனைகதை போன்றவை. தஸ்தயேவ்ஸ்கி இறந்தபோது அன்னாவிடம் வந்து ‘ருஷ்யாவின் இழப்பை’ பற்றி பேசுபவர்களை எண்ணி அன்னா கொள்ளும் சீற்றம் அப்படிப்பட்ட ஓர் இடம். “கடவுளே என்னை ஏன் இப்படி துன்புறுத்துகிறார்கள்? ருஷ்யாவின் இழப்பு பற்றி எனக்கு என்ன கவலை?நான் ஏன் ருஷ்யா குறித்து இந்நேரத்தில் கவலைப்படவேண்டும்? நான் எதை இழந்திருக்கிறேன் என்று உங்களால் புரிந்துகொள்ள முடியாதா? உலகத்திலேயே சிறந்த மனிதனை நான் இழந்திருக்கிறேன். என் வாழ்வின் இன்பத்தை, பெருமிதத்தை, மகிழ்ச்சியை, என் சூரியனை இழந்திருக்கிறேன்”

அந்தச் சொற்கள் நுணுக்கமானவை. அந்த மனைவிகள் அடைந்தது ஒரு தனியனுபவத்தை. உலகம் அறிந்த தஸ்தயேவ்ஸ்கி அல்ல அன்னா இழந்தது. அவர் இன்னொருவர். அவருடன் இணைந்து அன்னா சென்ற உலகங்களுக்கு எந்த வாசகரும் செல்ல முடியாது. அதே சமயம் ‘தஸ்தயேவ்ஸ்கியின் நூல்களைப் படிக்கும் எவரும் என் குடும்பத்தில் ஒருவர்” என்று உணர்பவராகவும் அன்னா இருந்திருக்கிறார். சோல்செனிட்ஸினின் மனைவி அவருடன் பதினெட்டு ஆண்டுகள் மானுடவாசமே இல்லாத இடங்களில் வாழ்ந்திருக்கிறார். அவருடைய ஆய்வுகளுக்கு உதவியிருக்கிறார்.
இந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் தனித்தனி நாவல்களாக விரிவாக்கிவிடலாம். ஒரு புனைவெழுத்தாளனாகிய எனக்கு பலநூறு மானுடத்தருணங்களின் பெருந்தொகுப்பாகவே இந்நூல் தோற்றம் அளிக்கிறது. தமிழுக்கு ஒரு முக்கியமான நல்வரவு இது.
இயல்பாக இங்கே எழும் ஒரு கேள்வி உண்டு. ‘ஆண்களின் நிழல்களா பெண்கள்? ஏன் ஓர் ஆணின் நிழல் என பெண் தன்னை உருவாக்கிக் கொள்ளவேண்டும்? அவள் ஏன்தனித்தன்மையை விட்டுக்கொடுக்க வேண்டும்?’ இன்று பெண்ணியச் சூழலில் இப்படி கேட்பது ஒரு மோஸ்தராகவும் உள்ளது. சாமானியச் சூழலில் பொருத்தமான கேள்விதான் இது, ஆனால் கலையும் இலக்கியமும் மெய்யியலும் சாமானியதளம் சார்ந்தவை அல்ல. இக்கேள்விக்கு அங்கே இடமே இல்லை.
என்னுடைய துணைவியாக இருப்பது ‘ஆளுமையை இழப்பது’ அல்லவா என்னும் கேள்வி அருண்மொழியிடமும் அடிக்கடி வரும். அவள் ஒருமுறை பதில் சொன்னாள். ‘நான் அந்தக் கணக்கைப் பார்ப்பதில்லை. என் ஆளுமையை நிலைநிறுத்துவதை விட என்னால் அடையத்தக்க உச்சநிலைகளை அடைவதுதான் முக்கியம். அந்த கணக்குகளைப் பார்ப்பவர்களால் அதை அடைய முடியாது’
இந்த மனைவியரும் அதைத்தான் சொல்லியிருப்பார்கள். அவர்கள் இழந்தது ஆளுமையை மட்டும் அல்ல. தங்கள் உலகியல் இன்பங்கள் அனைத்தையும்தான். மாபெரும் வதைகளைக்கூட அனுபவித்தனர். சாவுக்கும் துணிந்திருந்தனர். பதிலுக்கு அவர்கள் எதை அடைந்தனர் என்பதை அவர்களால் இந்த ஆளுமைக் கணக்கு பார்ப்பவர்களுக்குப் புரியவைக்க முடியாது. பொதுவாக அளிப்பதைக் கணக்கு பார்ப்பவர்கள் எதையும் அடைவதில்லை. ஒரு தந்தையாக நான் அளிப்பவற்றின் கணக்கை என் குழந்தைகளிடம் விவாதிப்பேன் என்றால் அவர்களின் தந்தையாக நான் அடைந்த பேரின்பத்திற்கு என்ன மதிப்பு போடுவேன்?
ஆண்களிடம் பெண்கள் அடையும் இணைவும் முன்னகர்வும் தானா அது? நான் அவ்வாறு நினைக்கவில்லை. ஆன்மிகமான, அழகியல் சார்ந்த, அறிவார்ந்த பயணம் என்பது மிக அரிதாகவே சிலரிடம் தீவிரம் அடைகிறது. மிகச்சிலரில் மட்டுமே அவர்களின் முழுவாழ்வும் அப்படிப்பட்ட ஒன்றுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாக நிகழ்கிறது. கணவன் மனைவி இருவரில் ஒருவர் அந்த வகையில் முன்னோக்கிச் சென்றால் அந்த விசை மற்றவரை இட்டுச் செல்கிறது. அந்த மற்றவர் தன் ஆளுமை, தன் ஆணவம் ஆகியவற்றை பற்றிக்கொண்டால் முன்னால் செல்பவரை பின்தொடர்வதில்லை. எதையும் அடைவதுமில்லை.
அவ்வாறு மேதைகளின் துணையாக அமைந்து, அவர்களை சற்றும் உணராமல் நின்றுவிட்ட ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு. அதேபோல தங்கள் துணையின் அகப்பயணத்துடன் இணைந்து எழுந்தவர்களில் ஆண்களும் பெண்களும் உண்டு. முன்செல்பவரின் மேதமையின் அளவு, அவருடைய தீவிரம்தான் இன்னொருவரை அர்ப்பணிப்புடன் தொடரச் செய்கிறது.
இதை எழுதும்போது அப்படிப்பட்ட சில கணவர்களையும் நான் அறிவேன் என்று சொல்லியாகவேண்டும். மலையாளக் கவிஞர் சுகதகுமாரியின் கணவர் வேலாயுதன் நாயர் அப்படிப்பட்டவர். தன் மனைவியின் மேதமைக்கு முன் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கணவர். ஆனால் அவர் சாதாரணமானவர் அல்ல. சமூகப்படிநிலை, படிப்பு அனைத்திலும் சுகதகுமாரியைவிட பலமடங்கு மேலானவர். அவரும் இலக்கியவாதிதான். “கவிஞரின் கணவர் என்னும் தகுதி கொண்டவன். அவள் கவிதையின் உள்ளுணர்ந்தவன்” என்று தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டவர் அவர்.
தமிழில் இருவரை எனக்குத் தெரியும். மாபெரும் ஆசிரியரான பேரா.ஜேசுதாசன் தன்னை “ஹெப்ஸிபாவின் கணவர்” என்று முதன்மையாக அறிமுகம் செய்துகொண்டவர். ஹெப்ஸிபாவின் கணவராக இருப்பது சாதாரண காரியம் அல்ல. சுந்தர ராமசாமி சொல்வார், “பக்கத்திலே உக்காந்து ஒருத்தர் நம்மை ஊசியாலே குத்திக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கும் ஹெப்ஸிபா கூட இருக்கிறது”. எழுத்தாளர்களுக்கான எல்லா கொந்தளிப்பும், பித்தும் கொண்ட ஆத்மா ஹெப்ஸிபா. என் அனுபவங்களும் அன்று எரிச்சலாகவும் இன்று வேடிக்கையாகவும் தோன்றுபவை.
இன்னொருவர் ராஜம் கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணன். தேசத்தின் முதன்மைப் பொறியியலாளர்களில் ஒருவர் அவர். ஆனால் தன் மனைவியின் இலக்கிய ஆளுமையை முன்வைப்பவராகவே திகழ்ந்தார். ராஜம் கிருஷ்ணனின் இலக்கியக் கூட்டங்களில் அவருடன் வந்து, ராஜம் கிருஷ்ணனின் பையுடன் முன்னணியில் அமைதியாக அமர்ந்திருந்தவர் இந்தியாவின் பல புகழ்பெற்ற அணைகளின் வடிவமைப்பாளர் என பலருக்குத் தெரியாது.
நான் ஜேசுதாசனிடம் அவர் தன் மனைவியை ஆராதிப்பதைப் பற்றி ஒரு முறை கேட்டேன். “நீங்க எல்லா வகையிலயும் ஒரு இலக்கியப் பேரறிஞர். ஏன் நீங்க உங்களை எப்பவும் பின்னால வைச்சுக்கிடறீங்க?”

ஜேசுதாசன் சொன்னார். ”நான் புக்கு வாசிச்ச அறிஞன், பைபிளும் கம்பராமாயணமும் எனக்கு அத்துபடி. ஆனா என்னாலே சில கோடுகளை தாண்டமுடியாது. அவளுக்க பைத்திய வேகத்திலே அவ மனசு போற சில இடங்கள் உண்டு. அவகூட நானும் அங்க போவேன். அது ஆர்ட்டிஸ்டு மட்டும் போகிற எடம். எனக்கு வேற வழி இல்லை. அங்கதான் நான் கம்பனையும் கிறிஸ்துவையும் நேருக்குநேர் பாக்கமுடியும்”
மானுடன் அடையும் முதன்மை இன்பம் என்பது இங்கே கண்கூடாகக் காணும் அனைத்துக்கும் அப்பால், முற்றிலும் நுண்மையான ஒரு வெளியில் உள்ளது. அதைப் பகிர்வதைப்போல மகத்தான இன்னொன்றில்லை. இந்த மனைவியர் ஒருவகையில் பலிபீடங்களில் தலைவைத்தவர்கள். ஆனால் மகத்தான ஒன்றுக்காக தலைகொடுப்பவரைப்போல மகிழ்ச்சியானவர் எவர்?
*

இக்கட்டுரை ஒரு நுணுக்கமான அவதானிப்பு. படைப்பூக்கம் பக்கத்திலிருப்பவர்கள் கொடுக்கும் வார்த்தைகளின் மூலமும் வலிமை அடைகிறது. அதிலும் மனைவிமார்கள் கணவன்மார்கள் தன் இணையரின் படைப்பாற்றலை மேலோங்கச் செய்பவர்களாக இருப்பின் அது ஒரு வரமாகும். பலருக்கு அப்படி வாய்ப்பதில்லை. அவர்களின் படைப்பூக்கம் நாளடைவில் நலிந்துபோவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இக்கட்டுரை வற்றாத ஆதரவை நல்கும் இணையர்களைத் தொட்டுப் பேசி ஓர் உற்சாக மனநிலையை பதிவு செய்திருக்கிறது. தனித்துவமான கட்டுரை ஜெ மோ.