மலையாளத்தில் பெண்கவிமரபு – பி. ராமன்
(தமிழில் ஆனந்த் ஸ்ரீநிவாசன்)
*
(சில பொது அவதானிப்புகள்)
பழந்தமிழகத்தின் கவி மரபு மலையாளத்திற்கும் உரியது என்பதால் சங்ககாலம் முதலே மலையாளத்திலும் பெண்குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்று சொல்லலாம். ஒளவையாரும் காக்கைப்பாடினியாரும் நச்செள்ளையாரும் வெள்ளிவீதியாரும் அடங்கிய அந்தப் பொது மரபைப் பற்றி இங்கு விரித்துச் சொல்ல வேண்டியதில்லை. மலையாளம் தனிமொழியாக வளர்ந்தபின் ஆரியமயமாக்கலின் ஆதிக்கம் காரணமாக சமஸ்க்ருதத்தில் உள்ள புராண இதிகாசங்களின் மறுஆக்கமே கவிதைகளாக எழுதப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் கவிதையில் பெண்குரல் என்பதே இல்லாமல் போனது.

பின்னர் அயல்நாட்டு மிஷனரிகள் முன்னெடுத்த முயற்சிகளின் பகுதியாக சமூக இலக்கிய அரங்கில் புதிய மாற்றங்கள் தென்படத் தொடங்கிய வரலாற்றுத் தருணமான பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் மலையாளக் கவிதையில் பெண்குரல்கள் மீண்டும் எழுந்தன. மலையாள இலக்கியத்தில் கூட்டுக்குரல்களைத் தாண்டி தனிக் குரல்கள் முதன்முதலாக கேட்கத் தொடங்கிய காலமது. நமக்கு தெரியவரும் முதல் பெண்கவி குட்டிகுஞ்ஞு தங்கச்சி. ‘ஓமனத்திங்கள் கிடாவோ’ எனும் புகழ்பெற்ற தாலாட்டை எழுதிய இரயிம்மன் தம்பியின் மகள் அவர். அதற்கு முன்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மனோரமா தம்புராட்டி என்றொரு கவியைப் பற்றி கேள்விப்படுகிறோம். ஆனாலும், சில சமஸ்கிருத சுலோகங்கள் அல்லாது மலையாளத்தில் அவரெழுதிய எதுவும் கிடைக்கப்பெறவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோட்டய்க்காடு இக்காவம்மா முக்கியமான கவிகளில் ஒருவராய் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோட்டய்க்காடு இக்காவம்மா, தரவத்து அம்மாளு அம்மா, டி.ஸி. கல்யாணி அம்மா, டி.ஸி. கொச்சுகுட்டியம்மா, கெ.எம்.குஞ்ஞுலக்ஷ்மிக்கெட்டிலம்மா, முதுகுளம் பார்வதியம்மா, சிஸ்டர் மேர் பனீஞ்ஜா, கூத்தாட்டுகுளம் மேரி ஜான், கடத்தநாட்டு மாதவியம்மா, லலிதாம்பிகா அந்தர்ஜனம், பாலாமணியம்மா முதலான பலரும் அன்றைய இதழ்களில் எழுதிய கவிகள் என்ற அளவில் அறியப்பட்டிருந்தனர்.
நவீனத்துவத்திற்கு முன்பு உள்ள பெண் கவிதையின் இந்த போக்கு, பாலாமணியம்மாவின் கவிதையில் அதன் கலாபூர்வமான முழுமையை எட்டியது. ஆன்மீகம், பாலினச் சார்பு (சமத்துவம்), அன்றாட அனுபவங்களை வெளிப்படுத்தும் ஆர்வம் போன்றவை இந்தக் கவிமரபின் பொதுப்போக்காக இருந்ததை அறியமுடிகிறது. புது நாகரீகத்தின் மீதான ஆர்வத்தோடு மானுடநேயமும் கலந்திருந்ததால் பாலாமணியம்மாவின் கவிதைகள் இக்கவி மரபில் சிறப்பிடம் பெற்றன. இந்த நவீனத்துவத்திற்கு முந்தைய பெண்கவி மரபின் தொடர்ச்சியை சுகதகுமாரியிலும் ஓ.வி. உஷாவிலும் காண முடிகிறது. கற்பனாவாதம், நவீனத்தன்மை, சூழியல்பிரக்ஞை, பெண்ணியம் போன்ற உணர்வுநிலைகளிலிருந்து தங்களுக்கான அம்சங்களை எடுத்துக்கொண்டு இருவரது கவிதையும் முன்னேறியது. மானுடம் உணரும் கைவிடப்பட்டதன்மையை நவீன மனிதனின் தனிமையுணர்வுடன் பொருத்திப்பார்க்கவும், அந்நிலையில் நவீனத்துவத்தை கடந்துசெல்லவும், பாவியல்புகொண்ட(Lyrical poetry) காவிய வடிவை புதிய தலைமுறைக்கு கையளிக்கவும் சுகதகுமாரியின் கவிதைகளால் இயன்றது. மலையாளக் கவிதையின் நவீனத்துவ அலையிலிருந்து தப்பிய ஒரே பெண்மொழி சுகதகுமாரியின் கவிதை மட்டுமே.

1950-களில் மலையாளக் கவிதையில் உருவெடுத்த நவீனத்துவம் 1960-களில் வலுப்பெற்று 1970-களின் தொடக்கம் முதல் அரசியல் நிலைப்பாடுகளை உயர்த்திப்பிடித்தபடி மக்களிடையே செல்வாக்கும் பெற்றது. பெண்ணிய நிலைபாடுகளும் நவீனத்துவத்தை போற்றின. ஆனால் மலையாளத்தில் பெண்கவி மரபுக்கு நவீனத்துவத்தில் தொடர்ச்சி இல்லை என்பது வியப்பூட்டக்கூடியது. நவீனத்துவத்தின் கவிமொழியிலிருந்து பெண்குரல்கள் விலகியே இருந்தன. நவீனத்துவ காலகட்டத்திற்கு முன்பு பல பெண்கவிகள் கவனிக்கப்பட்டார்கள் என்றாலும் நவீனத்துவ எழுத்தாளர்களின் வரிசையில் பெண்களின் மரபென்று ஒன்றும் உருவாகவில்லை என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். முன்னரே கூறியதுபோல், சுகதகுமாரியின் கவிதைகள் நவீனத்துவ கூறுகள் சிலவற்றை உள்ளடக்கியிருந்தாலும் அடிப்படையில் நவீனத்துவ அழகியலுக்கு முன்புள்ள எழுத்துமுறையின் தொடர்ச்சியாகவே தென்படுகின்றன. 1972-இல் வெளியான ஓ.வி. உஷாவின் தியானம் என்னும் தொகுப்பு சிறப்பான ஒன்று என்றாலும் நவீனத்துவ சலசலப்பில் அது கவனிக்கப்படாமலே போனது. அத்துடன் அக்கவிஞர் ஏறக்குறைய காணாமலானார் என்றே சொல்லிவிடலாம். ஓ.வி. உஷாவின் கவிதை நவீனத்துவத்தின் பொதுஉணர்வோடு பொருந்திப் போகவில்லை. அவர் கவிதைகளில் ஆன்மீக உள்ளடக்கத்திற்கு அளிக்கப்பட்ட முதன்மை நவீனத்துவத்தால் ஏற்கமுடியாத ஒன்றாக இருந்தது. மலையாள நவீனத்துவத்தின் கல்விப்புலச் சார்பு, தன்னை முன்வைக்கும் தன்மை(Demonstrativeness), எதிர்மறைத்தன்மை, ஆன்மீக விலக்கம் என்றிவையெல்லாம் சேர்ந்து அதன் பெண்மொழிகளை அகற்றி அதையொரு ஆண்பால்சார் நவீனத்துவமாக மாற்றின. மலையாளத்தில் கதைகள் எழுதிய கமலா சுரய்யா கவிதைகளை ஆங்கிலத்தில் எழுதினார் என்பதை நினைவில் கொள்க! 1990-களில் நவீனத்துவ அலை அடங்கிய பின்னர் அவர் மலையாளத்தில் கவிதைகள் எழுதி வெளியிட்டார்.

நவீனத்துவம் ஒரு இயக்கமாக பரவத்தொடங்கிய 1980-களின் தொடக்கத்தில் வெளியான ‘மழக்காடுகள்’ என்ற தொகுப்பின் மூலம் மலையாளக் கவிதையில் பெண்கவிகளின் நிரை மீண்டும் தொடங்கியது. ஏ.பி. இந்திராதேவி எழுதி 1984-இல் வெளியான அக்கவிதைத்தொகுப்பை மலையாளப் பெண்ணெழுத்தின் அறிமுகமாகவும், பெண்ணியக் கவிதைத் தொகுப்பாகவும் அடையாளப்படுத்தலாம். அதிலுள்ள கவிதைகள் ஆண்மைய சமூகத்தை வலுவான மொழியில் கேள்விக்குட்படுத்துபவை. சாரா ஜோசப்பின் ‘பாபத்தற’ என்ற கதைத்தொகுப்பும், அதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வெளியான ‘மழக்காடுகள்’ கவிதைத் தொகுப்பும் இன்றுவரை சரியான முறையில் அடையாளம் காணப்படவில்லை. அதற்குப் பின்னர் லலிதா லெனின், சாவித்ரி ராஜீவன், விஜயலக்ஷ்மி, கீதா ஹிரண்யன், சுஜாதாதேவி, ரோஸ் மேரி, ரோஸி தம்பி, தித்திக்குட்டி முதலான ஒரு கவிஞர் நிரை வலம்வந்தது. இப்புதிய தெறிப்புகள் பொதுத் தன்மை கொண்டவையாக இல்லாமல், பலவகையான வெளிப்பாடுகளின் தொகுப்பாக இருந்ததே அவற்றின் சிறப்பு. இக்கவிஞர்களில் பலரும் நவீனத்துவத்தின் தொடர்ச்சியாய் திகழ்வதை விரும்பவில்லை. விஜயலக்ஷ்மியும், சுஜாதா தேவியும் நவீனத்துவ அழகியலுக்கு முன்புள்ள கவிதை மரபோடு உணர்வுபூர்வமான நெருக்கம் கொண்டிருந்தனர். தித்திக்குட்டியின் கவிதைகள் கேரள சூஃபி மரபைச் சேர்ந்தவை.

அதன் பிறகு 1990-களில் புதிய கவிஞர் திரள் ஒன்று உருவானது. இந்தத் தலைமுறையின் கவிதைகள் நவீனகால வாழ்வனுபவங்களிலிருந்து பெண்ணியக் கருத்துகளை முன்வைத்தன. வி.எம். கிரிஜா, ஆஷாலதா, அனிதா தம்பி, ஶ்ரீதேவி எஸ் கர்த்தா ஆகியோரைக் கொண்ட முதல் நிரை இன்றுவரை தீவிரமாக எழுதிவரும் ஒன்று. இக்கவிஞர்களால் உடலரசியலை முன்வைக்க முடிந்தது. அத்துடன், வி.எம். கிரிஜாவின் கவிதைகள் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும், கற்பனாவாதம் சார்ந்த அடியொழுக்கும் கலந்தவை. ஆஷாலதாவின் கவிதைகள் ஆணாதிக்கத்தை விடாது கேள்விக்குள்ளாக்குபவை. அனிதா தம்பியின் கவிதைகள் வட்டாரத்தன்மையையும் உலகமயமாக்கலையும் பெண்ணடையாளத்துடன் இணைப்பவை. நவீன நாகரிகம் ஏற்படுத்தியுள்ள குழப்பங்களிடையே ஆன்மீகத் நாட்டங்களின் இயல்கைகள் எவ்வளவு பொருத்தமானவை என்ற தேடலைக் கொண்டவை ஶ்ரீதேவி எஸ். கர்த்தாவின் கவிதைகள். மலையாளக்கவிதையின் மரபார்ந்த கருக்களையே பேசுபொருளாகக் கொண்டிருந்தபோதும் கவிமொழிசார்ந்தும் அழகியல்சார்ந்தும் உலகளாவிய தன்மை கொண்டிருப்பவை அனிதாவின் கவிதைகள்.

ரஜனி மன்னாடியார், வி.கெ. ஹேமா, சரினா, ப்ரபா ஸக்கரியாஸ், ஜானி ஆண்ட்ரூஸ், லோபா, ஆர்யாம்பிகா, கணிமோள், ஷீஜா வக்கம், ஆர்யா கோபி ஆகியோர் அடங்கியது தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத்தொடங்கிவர்களின் நிரை. இவர்களில் ரஜனி மன்னாடியாரும், வி.கெ. ஹேமாவும் பின்னர் எழுத்துலகிலிருந்து விலகினர். மற்ற கவிஞர்களில் சரீனாவின் கவிதைகளிலும் ப்ரபா ஸகரியாவின் கவிதைகளிலும் நவீன நாகரிகத்திற்கும் பெண்ணியத்திற்கும் இடையிலான மோதல் முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக மலையாளக் கவிதைகளில் அரிதாக இடம்பெறும் நகர்ப்புறச்சூழல் ப்ரபா ஸகரியாவின் கவிதைப்பரப்பை வேறுபடுத்திக்காட்டுகிறது. விவிலியத்தன்மை கொண்ட மொழி ஜானி ஆண்ட்ரூஸின் கவிதைகளுக்கு தனியிடம் பெற்றுத்தருகிறது. இந்நிரையில் உள்ள கவிஞர்களின் படைப்புகள் நவீனத்துவத்திற்கு முன்புள்ள அழகியலை கைக்கொண்டவை. மிகையுணர்ச்சிக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான மோதலை லோபாவின் கவிதைகளில் உணர முடிகிறது. ஆர்யாம்பிகா செவ்வியல் அழகியலையும் நவீன வாழ்வனுபவங்களையும் இணைக்கிறார். கணிமோளும் ஷீஜா வக்கமும் கதையாடலையும் மிகையுணர்ச்சியையும் ஒன்றாக சேர்க்கின்றனர். அண்மையில் ஷீஜா வக்கத்தின் படைப்புகள் கவிதை வாசகரிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பது, இவ்வகை எழுத்து மலையாள அழகியலில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை தெளிவாக்குகிறது.

2000-க்குப் பிறகு பல புதிய கவிஞர்கள் தீவிரமாக எழுதி வருகின்றனர். சமகால கேரள தலித் பெண்களின் அனுபவங்களைப் பேசும் கவிதைகள் கவனம் பெற்றதே இக்காலகட்டத்தின் முக்கிய நகர்வு. விஜிலாவின் கவிதைகளில்தான் கேரள தலித் மகளிர்வாழ்வு முதல்முறையாக பேசப்பட்டது. 2010-க்குப் பிறகு அலீனாவின் கவிதைகளில் அதிகமாக இதை காண முடிகிறது. பழங்குடிப் பெண்களின் நிலையை வலுவாக முன்வைக்கும் தன்யா வேங்கச்சேரி, சாந்தி பனக்கள், லிஜினா கடுமேனி ஆகியோரது கவிதைகளை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர்கள் மலையாளத்திலும் பழங்குடியினரின் கோத்ர மொழியிலும் எழுதுபவர்கள். இவர்களில் தன்யா வேங்கச்சேரி, லிஜினா கடுமேனி ஆகியோரது கவிதைகள் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்துவதோடு தலித் அரசியல் பார்வைகளையும் முன்வைப்பவை. வாழ்வையும், உலகையும் பழங்குடி மனநிலையில் இருந்தபடி நோக்குபவை சாந்தி பனக்கனின் கவிதைகள். இக்காலத்தில்தான், விஜயராஜமல்லிகாவின் கவிதைகள் வழியாக, மலையாளத்தில் முதல்முறையாக திருநங்கையரின் உலகு வெளிப்பட்டது. டோனா மயூராவின் கவிதைகள், கேரளச் சூழலுக்கு வெளியே மலையாளம் பரவுகையில் பெண்கவிதையில் நிகழக்கூடிய சோதனை முயற்சிகளை அடையாளப்படுத்துவனவாக இருக்கின்றன. கவிதைக்கும் உடலுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்ட டோனா மயூராவின் கவிதை வடிவமைப்புகள் (poetry installations) குறிப்பிடத்தக்கவை. இந்தப் பத்தாண்டைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க மற்றொரு கவிஞர் சிந்து கெ.வி. நைல், வட இந்திய நகரப் பின்னணியில் அமைந்த உணர்வுபூர்வக் கவிதைகளை எழுதுபவர்.

முன்-நவீனத்துவக் கவிதைகளில் காணப்பட்ட பாலினச் சார்பு நவீனகால உணர்வுகளில் ஊடுருவுவதை 2000-க்குப் பின்னர் கவனம் பெற்ற சந்தியா என்.பி.-யின் கவிதைகளில் காணமுடிகிறது. இன்றைய மலையாளக் கவிதையில் மிக முக்கியமான பெண்குரல் என்பது அம்மு தீபாவுடையது. புதிய கால வாழ்வின் சிக்கலை பண்டைய, திராவிடக் கண்ணோட்டத்தின் வழி வெளிச்சமிட்டுக் காட்டுவதே அம்மு தீபா கவிதைகளின் சிறப்பு. மலையாளக் கவிதையிலிருந்து மெல்ல மெல்ல மறைந்துகொண்டிருக்கும் பரிசோதனை முயற்சிகளை அம்முவின் கவிதைகள் ஓரளவு காப்பாற்றக் கூடும். நோக்குரீதியாகவும் அழகியல்ரீதியாகவும் தயக்கமின்மையை ஒரு அடையாளமாக அம்முவின் கவிதைகளில் காணமுடிகிறது. மலையாளப் பெண் கவிதையின் தத்துவார்த்த மரபை புதுப்பிப்பவை சாந்தி ஜயாவின் கவிதைகள். சூழல்சார்ந்த விழிப்புணர்வை உணர்வுபூர்வ வாழ்வுடன் பிணைக்க முயல்பவை சித்திரா குசுமனின் கவிதைகள். ரேஷ்மா.ஸி எழுதும் கவிதைகள் அனுபவங்களின் கூர்முனைகளை சென்று தொடுபவை. உளக் கொந்தளிப்புகளை வண்ணமயமான துடிப்பான மொழியில் முன்வைப்பவை ஜாஹிரா குற்றிப்புறத்தின் கவிதைகள். ஆர்த்ரா என்.ஜி.-யின் கவிதைகள், கல்விக்காகவும் தொழிலுக்காகவும் கேரளத்தைவிட்டு நீங்கி வாழும் புதிய தலைமுறையின் மாறுபட்ட நாட்டங்களை அடையாளப்படுத்துபவை. இப்புதிய கவிஞரால் கவிமொழியை அருவமாக்கி, சிதறடித்து உணர்வுகளுக்கு வண்ணம் கொடுத்து துடிப்புள்ளதாக்கமுடிகிறது.
புதிய தலைமுறையில் ஏற்பட்டுள்ள அழகியல் மாற்றங்களை அண்மையில் வாசித்த ஆர்ச்சா எம்.ஆரின் கவிதைகளில் தெளிவாகக் காணமுடிகிறது. இவரது குரலில் உணர்வாழம் வெளிப்பட்டாலும் கூடவே ஒரு விலக்கமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதுவே அந்த அழகியல் மாற்றத்தின் அறிகுறி என்று தோன்றுகிறது. புதிய தலைமுறை முடிந்தவரை இலக்கியத்தன்மையிலிருந்து(Literariness) விலகி நின்றபடி எழுத விரும்புகிறது என்பதற்கு ஆர்ச்சாவின் கவிதைகள் சாட்சியாக இருக்கின்றன. இந்தச் சிறிய குறிப்பில் வேறு எவரது கவிதையையும் மேற்கோள் காட்டவில்லை என்றாலும் புத்திளம் தலைமுறையின் அழகியல்நோக்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடையாளப்படுத்தும் கவிஞர் என்ற நிலையில் ஆர்ச்சா எம்.ஆரின் ஒரு கவிதையை மட்டும் இங்கு தருகிறேன்.
ஒரேயொரு பாட்டு
அம்மாவிடம் எப்படி கேட்பது
எனக்கு தெரியவில்லை
ஹாட்ஸ்பாட் ஆன் செய்யும்படி
அம்மா எனக்கு போட்டுத்தந்த
டாடா முழுக்க தீர்ந்தபின்
அம்மாவிடம் எப்படி கேட்பது
எனக்கு தெரியவில்லை
ஹாட்ஸ்பாட் ஆன் செய்தால்
இந்தப் பாட்டை கேட்பேன்
எப்படி சொல்வேன் அம்மாவிடம்
இந்தப் பாட்டை கேட்பதற்காக
எவ்வளவு வெறியோடிருக்கிறேன் என்று
எப்படி சொல்வேன்
இந்த ஒரு பாட்டே
என் நோயெல்லாம் போக்கிவிடுமென்று
அம்மாவிடம் எப்படி
சொல்வதென்று எனக்கு தெரியவில்லை
இந்த ஒரேயொடு பாட்டிற்குப் பின்
துணி துவைப்பேன்
பாத்திரம் துலக்குவேன்
வீடு பெருக்குவேன்
என்று
எப்படி சொல்வேன் அம்மாவிடம்
எனக்கு தெரியவில்லை
நான் படுக்கையோடு ஒட்டிக்கிடக்கிறேன்
இந்தப் பாட்டை கேட்காமல்
என்னால் அசைய முடியாது
யாராவது சொல்லுங்களேன்
அம்மாவிடம்
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மலையாளப் பெண்கவிதை பல பாதைகள் கொண்டது. பெண்ணிய ஆன்மீகத்தின் (Feminine spirituality) ஒரு மரபு நவீனத்துவத்துக்கு முன்பே தொடங்கி புதியகாலத்தை எட்டி நிற்கிறது. மிகையுணர்ச்சிப் பாடல்களும் அவ்வாறே. மற்றொன்று உடலரசியலை ஏற்றிப்பிடிக்கும் கவிதை மரபு. அதேபோல, சாதியம், பழங்குடியினர் வாழ்வு போன்றவற்றை எதிர்கொள்ளும் மரபொன்றும் அண்மைக்காலத்தில் வலுப்பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை முன்வைப்பது ஒரு மரபு. உலகளாவிய பரவலில் நாட்டம் கொண்ட கவிதை மரபு இன்னொன்று. பாலியல்சார்பு கொண்டது மேலும் ஒன்று. பண்டைய வேர்களிலிருந்து சூரியனை நோக்கிப்பாயும் ஆர்வம் கொண்டது இன்னொரு கவிமரபு. அதனுடன் புதுமைப்பண்புகளை போற்றுவதும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதுமான கவிமரபும் துலங்கி வருகிறது. இப்படி பன்முகத்தன்மை கொண்டதாக இருந்தாலும், காலப்போக்கில் அளவு சுருங்கிக்கொண்டே வருகிறது (இது எனக்கும் தெளிவாக புரியவில்லை. பெண்கவிஞர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? அல்லது எழுதுபவர்களும் மிக குறைவாக எழுதுகிறார்கள் என்றா? என்பது குழப்பமாக இருக்கிறது). இது மலையாளப் பெண் கவிதையின் ஒரு முக்கிய போதாமையாக இருக்கிறது. மலையாள பெண்ணெழுத்தின் ஒவ்வொரு தலைமுறையை கடக்கும்போதும் இந்த அளவுச் சுருக்கம் நிகழ்கிறது. பாலாமணியம்மாவின் கவிதையிலிருந்து விஜயலக்ஷ்மியின் கவிதைக்கும், பின்னர் அங்கிருந்து அனிதா தம்பியின் கவிதைக்கு செல்லும்போது படிப்படியாக நிகழ்ந்த அளவுச் சுருக்கத்தை காணமுடிகிறது. இது எதனால் என்பதை இன்னும் தீவிரமாக ஆராயவேண்டியிருக்கிறது.

மலையாளக் கவிதையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சில விரும்பத்தகாத மாற்றங்கள் நமது பெண்கவிதையையும் இயல்பாக பாதித்திருக்கிறது என்பது நான் முன்வைக்க விரும்பும் மற்றொரு விமர்சனம். கவிதையில் ஏற்பட்டுள்ள அழகியல் மாற்றங்களோடு முன்பிருந்த சமூக அரசியல் ஆதரவு இன்று அருகிவிட்டது. இலக்கிய உலகு இயங்க சந்தையைத் தவிர வேறொன்றும் இன்றில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் வலுவாகத் தொடரும் சிற்றிதழ் மரபு மலையாளத்தில் கிட்டத்தட்ட மறைந்தே விட்டது. அந்த சிற்றிதழ் மரபை இணைய வெளிக்கு கொண்டு செல்லும் அளவு மலையாளம் இன்னும் முன்னேறவில்லை. இன்று தென்படுவது சந்தையும் சமூக ஊடகங்களும்தான். இந்நிலையில் புதுமைகளும் பரிசோதனை முயற்சிகளும் தேங்கி நிற்கின்றன. கடந்துபோன கற்பனாவாத அழகியல் மீண்டும் தன்பிடியை இறுக்குகிறது. மலையாளக் கவிதையில் பொதுவாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இத்தகைய சரிவுகள் நம் பெண்கவிதை அழகியலையும் பாதித்துக்கொண்டிருக்கின்றன.

தமிழில் பெண்கவி மரபுடனான ஒரு ஒப்பீடு இங்கே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆண்டாள், காரைக்கால் அம்மையாருக்குப் பிறகு மற்றொரு பெண் கவிஞரை தமிழில் நாம் காண்பது 1960-களின் இறுதியில்தான். இரா. மீனாட்சிதான் அவர். ஆண்மைய நவீனத்துவ அலையில், அவரது கவிதைகள் கவனிக்கப்படவே இல்லை. இவ்வளவு நீண்ட மௌனம் மலையாளப் பெண்கவிதையில் நிலவவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே மலையாளத்தில் பெண்கவிமரபு எழுந்து வந்தது. ஆனால் 1950-60-களில் நவீனத்துவம் மலையாளத்திலும் தமிழிலும் ஒன்றேபோல் பெண்குரல்களை விலக்கி வைத்தது. நூற்றாண்டுகளாக நிலவிய மௌனத்தை தகர்த்து தமிழ்க் கவிதையை உயிர்ப்புகொள்ளச் செய்த முதல் பெண்குரல் 1980-களில் ஒலித்த சுகந்தி சுப்ரமணியனுடையது. அந்தக் கவிதைகளுக்கடியில் நூற்றாண்டுகள் நீடித்த மௌனத்தின் சுமையை காணமுடிகிறது. அந்தச் சுமையை ஒரு பெண்குரல் தனித்து தாங்குவது எவ்வளவு கடினம் என்பதற்கு சாட்சியாக இருப்பது சுகந்தியின் கவிவாழ்வு. சுகந்தி தொடங்கிவைத்த பின்னர்தான் பிற்காலத் தமிழ்ப் பெண்கவிதை அலைவிரிந்து பரந்தது. சுகந்தியின் கவிதை தியாகத்தின் நிழல் பிற்காலத் தமிழ்ப் பெண்கவி மரபில் வீழ்ந்துகிடக்கிறது. அத்துணை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பெண்குரல் நவீனத்துவ மலையாளக் கவிதையில் எழவே இல்லை. மலையாளத்தில் போலவே தமிழிலும் 1990-களில் வலுப்பெற்ற தலைமுறையில் பெண்கவிகள் பெண்ணிய அரசியலையும் உடலரசியலையும் தூக்கிப்பிடித்தனர். கனிமொழி, சல்மா போன்றவர்களை தொடர்ந்து வந்த மாலதி மைத்ரி, குட்டி ரேவதி முதலியவர்களின் கவிதைகள் இந்தச் சூழலில் நினைவுக்கு வருகின்றன. தலித்-பெண் அனுபவங்களின் உலகம் மலையாளத்தில் திறக்கப்படுவதற்கு முன்பே தமிழில் சுகிர்தராணியின் கவிதைகள் மூலம் திறக்கப்பட்டுவிட்டது. உமா மகேஸ்வரி, லாவண்யா சுந்தரராஜன் போன்றவர்களின் கவிதைகளில் ஆன்மீகத் தேடலின் பெண்கவி மரபை பார்க்கிறோம். 1980-களில் பெருந்தேவியின் கவிதைகள் வழியாக உலகமயமாக்கலுக்குப் பிறகான வாழ்வனுபவங்களும் புதுநாகரிக உலகப் பார்வையும் தமிழ்ப் பெண்கவிதை மொழியில் நுழைந்தன. அவரது கவிதைகளில் உள்ள துணிச்சல்மிகு பரிசோதனைகள் கவிதைக் கலையை முன்னோக்கி நகர்த்தும் தூண்டுகோல்களாக இருக்கின்றன. வட்டாரம் சார்ந்த வண்ணமயமான குரல்களை சந்திரா தங்கராஜின் கவிதைகளில் பார்க்கிறோம். அதே போல் பழம் நினைவுகள் புதுவாழ்வுடன் இழைவதை பொன்முகலியின் கவிதைகளில் உணர்கிறோம். மலையாளப் பெண்கவிஞர்கள் பலர் பேசும் அரசியல் கவலைகளும், விழிப்புணர்வும் கவின்மலர் போன்றோரின் கவிதைகளில் இடம்பெறுகின்றன.
(பி.ராமன் நீலிக்காக மலையாளத்தில் அளித்த இக்கட்டுரையை ஆனந்த் ஸ்ரீநிவாசன் தமிழில் மொழிபெயர்த்தார்.)
*
- பி.ராமன் – தமிழ்விக்கி
- ஆனந்த் ஸ்ரீநிவாசன் – தமிழ்விக்கி
- ஆனந்த் ஸ்ரீநிவாசன்: மொழிபெயர்ப்பாளர், பிழைதிருத்துநர்.’குரு நித்யா’ என்ற வலைத்தளத்தை ஆரம்பித்து குரு நித்ய சைதன்ய யதியின் எழுத்துக்களை மொழிபெயர்த்து வருகிறார். கூண்டுக்குள் பெண்கள் (2019, நற்றிணை), குரு பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள் (2019, நற்றிணை), உயிர்த்தெழல் (2022, தமிழ்வெளி), தெய்வ தசகம் (விஷ்ணுபுரம், 2025)
