”சீரியல்னாலே…” – ஜா. தீபா

(சீரியலில் பெண்கள் எழுதுவதை முன்வைத்து)

எழுத்தாளர் ஜா. தீபா

கதாநாயகிக்கு எப்போதும் தொல்லை கொடுத்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு சாலையில் விபத்து ஏற்பட்டுவிடுகிறது. ‘இதோடு ஒழிந்தாள்’ என்று பார்வையாளர்கள் நிம்மதி கொண்டிருக்கும்போது அடுத்து வரும் காட்சியில் அவளுக்கு நடு சாலையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு கதாநாயகியின் முகம் பொருத்தப்படுகிறது. அந்தப் பிளாஸ்டிக் சர்ஜரி என்பது கதாநாயகியின் முகமூடி போல் ஒன்றை எடுத்து வந்து வில்லியின் முகத்தில் ஒட்டுவதோடு முடிந்துவிடுகிறது. இப்போது கதாநாயகி இருக்கும் வீட்டிற்கே அவளைப் போல ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ செய்த வில்லி வருகிறாள். நான் தான் ஒரிஜினல் என்கிறாள். கதை மீண்டும் சூடு பிடிக்கிறது.

கணவன் ஒருவன் தன் மனைவியிடம் ‘உன் மேல வெங்காய வாசனை வருது..தூங்க வர்றதுக்கு முன்னாடி குளிச்சிட்டு வரக்கூடாதா? மனுஷன் பக்கத்துல வர முடியல” என்கிறான். மனைவி தனக்கு ஆஸ்துமா இருப்பதாகவும் பனிக்காலத்தில் மாலை நேரம் குளித்தால் இரவு தூங்க முடியாமல் போகும் என்கிறாள். கணவனுக்கு இது எரிச்சலைத் தருகிறது. காலையில் இருந்து அந்த வீட்டில் சமையலறையில் கூட்டுக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் செய்யும் வேலைகளை மனைவி பட்டியலிடுகிறாள். தனக்கு சாப்பிடக் கூடத் தோன்றவில்லை என்றும் படுக்கையில் சாய்ந்தால் போதும், அப்படி வலிக்கிறது முதுகு என்றும் சொல்ல கணவன் அவளை நோயாளி என்று திட்டுகிறான்.

மேற்சொன்ன இரண்டு காட்சிகளும் ஒரே சேனலில் இடம்பெற்ற இரண்டு சீரியல்கள். இரண்டுமே டிஆர்பியில் உச்சத்தைத்  தொட்டன. வில்லிக்கு சாலையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததைப் பார்த்த அதே பார்வையாளர்கள் தான் இரண்டாவது சொன்ன காட்சி கொண்ட சீரியலையும் பார்த்து பாராட்டியவர்கள்.

சீரியலை கேலி செய்பவர்கள் அநேகமும் முதல் காட்சியைக் கொண்ட சீரியலைப் பார்த்தவர்கள். சீரியல் என்பது பொழுதுபோகாமல் வீட்டில் இருப்பவர்கள் பார்ப்பது, வயதானவர்களுக்கானது, ஒரே மாதிரி கதையைக் கொண்டது என்கிற எண்ணம் உள்ளது. ஓரளவுக்கு அது உண்மை தான். ஆனால் முழு உண்மை இல்லை.

டீவி மெகாத் தொடர் நாடகங்களுக்கு குறைந்தது முப்பது வருட பயணம் உண்டு. தூர்தர்ஷன் பொதிகை காலகட்டத்திலேயே சீரியல்கள் அபார வரவேற்பைப் பெற்றிருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளின் காலை நேரம் இராமாயணம் செய்த மாயம் நாம் அறிந்தது. இராமானந்த சாகரின் இராமாயணம் என்கிற தொடருக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் இருந்தார்கள். ஒருபடி மேலாக சொல்ல வேண்டுமானால் பக்தர்களாகவே அவர்கள் தொலைகாட்சிப் பெட்டியின் முன் உட்கார்ந்திருந்தனர். அதன் தாக்கம் அயோத்தி பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் எப்படி மாறின என்பது தேசத்தின் வரலாறு.

90-களின் மத்தியில் பிராந்திய மொழிகளில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானபோது வாரத் தொடருக்கு கிடைத்திருந்த வரவேற்பைத் தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் தொடர்கள் வெற்றி பெற்றன. சாட்டிலைட் சேனல்கள் வந்ததும் வார சீரியல்கள் தான் சில வருடங்களுக்கு ஒளிபரப்பானது. ’மர்மதேசம்’, ’நிஷாகந்தி’ போன்ற சீரியல்கள் நினைவிருக்கலாம். இப்போது வாரத் தொடர்கள் எந்தச் சேனலிலும் இல்லை. மெகா தொடர்கள் தான். அதுவும் திங்கள் முதல் சனி வரை. ஞாயிறுகளிலும் மதியம் ஒரு மணிநேரம் சீரியல்கள் இப்போது ஒளிபரப்பப்படுகின்றன.

சீரியல்களின் தொடக்ககாலத்தில் விதவிதமான கதைகள் வெளிவந்தன. மர்மங்கள், அமானுஷ்யம், காதல் கதைகள், கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டவை, சாமிக் கதைகள், புராணக் கதைகள், இலக்கியத்தில் இருந்து எடுத்தாளப்பட்ட கதைகள் இதோடு மன்னர் கதைகளும் கூட வெளிவந்தன. இவற்றில் குடும்பங்களை மையமிட்ட கதைகளும் உண்டு. குழந்தைகள் பார்க்கும் மாயாஜாலக் கதைகள் இருந்தன. இப்போது இவை எதுவுமே இல்லை. எல்லாக் கதைகளும் ‘குடும்பக் கதைகளாகவே’ மாறிவிட்டன.  ஏன் இந்த மாற்றம்? இத்தனை வகையான கதைகள் வந்தால் எல்லோரும் பார்ப்பார்கள் தானே என்கிற இயல்பான கேள்வி வரும். யார் இப்போது பார்க்கிறார்கள் என்பது மறு கேள்வி? ஏனெனில் முன்பு திரையரங்கில் படம் பார்ப்பது என்பது கடந்து தொலைக்காட்சி மட்டுமே பெரும் பொழுதுபோக்காய் இருந்தது. மக்களை தொலைகாட்சி முன்பு அமர வைக்க ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டன. அவர்களை விட நாம் புதிதாய் யோசித்து ‘கன்டென்ட்’(Content) தர வேண்டும் என்று விரும்பினார்கள். இன்று குறிப்பிட்ட பார்வையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டாலே போதுமானது என்கிற நிலை வந்துவிட்டது. பார்வையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி ‘கன்டென்ட்’ கொடுப்போம் என்பது தான் இப்போதைய மனநிலையாக உள்ளது.

ஜா.தீபா நெறியாள்கை செய்த தொலைக்காட்சி ஊடகத்திற்கான எழுத்துப்பயிலரங்கு

தொலைக்காட்சி ஊடகம் பெரும்பாலும் விளம்பரங்களால் வருமானம் பெறுபவை. எந்த சீரியலை அதிகம் மக்கள் பார்க்கிறார்களோ அதற்குத் தான் விளம்பரமும் வரும். இங்கு தான் ’Television Rating point’ எனப்படும் டி.ஆர்.பி(T.R.P) முக்கிய வேலையைச் செய்கிறது. ஒவ்வொரு வாரமும் வெளிவருகிற டிஆர்பி தான் அந்த சீரியலின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது. விளம்பரங்களைப் பெறுகிறது அல்லது ஒதுக்குகிறது. அப்படியெனில் டி.ஆர்.பி-க்காகத் தானே ஒரு சேனல் வேலை செய்யும். எந்த நிகழ்ச்சி கொடுத்தால் மக்கள் விரும்புவார்களோ அதைத் தானே தருவார்கள்.

இவர்கள் இப்படியான நிகழ்ச்சிகளைத் தருவதால் தானே மக்கள் பார்க்கிறர்கள். வித்தியாசமான கதைக் களங்கள் கொடுத்தால் மக்கள் இன்னும் பார்ப்பார்களே என்றும் கேட்கலாம். ஆனால் பரிட்சார்த்த முயற்சிகளை எடுக்க எந்த சேனலும் தயாராக இல்லை. ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிமிடமும் தங்கம் போன்றது. அந்த இடத்தை விட்டுக் கொடுத்தால், போட்டி சேனல் முந்திவிடும். இத்தனை நாட்கள் ஒரு குழுவாக இயங்கி பார்வையாளர்களைத் தக்க வைத்து அந்த 30 நிமிடங்கள் பறிபோனால் அதை மீட்பது கடினம். அதனால் தான் ‘ரிஸ்க்’ எடுக்கத் தயங்குகிறார்கள். இப்போது ஒ.டி.டி(Over The Top), திரைப்படங்கள், ரீல்ஸ், ஷார்ட்ஸ் என காட்சி ஊடகம் பல்வேறு அவதாரங்களை எடுத்துவிட்டது. பார்வையாளர்கள் தாங்கள் என்ன பார்க்கிறோம் என்று தெரிந்து தான் பார்க்கிறார்கள். சீரியல் பார்க்கும் பார்வையாளர்கள் ஒருவித லயத்திற்கு ஆட்பட்டிருபபர்கள். அவர்களுக்கு விறுவிறுப்பாக செல்லும் ஒ.டி.டி கதையைத் தர முடியாது. அதனால் தான் சீரியல் போல நிதானமாக எல்லாவற்றையும் விளக்கும் சில ஒ.டி.டி தொடர்கள் தோல்வியடைவதும் நடக்கிறது. ஒவ்வொன்றும் வேறு வேறு தளம். காட்சியமைப்புகள், வசனங்கள், திரைக்கதைகள், உணர்ச்சிகள் என எல்லாமே ஒவ்வொன்றுக்கும் மாறும்.

ஆனாலும் தொலைகாட்சித் தொடர்களில் சில முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒரே மாதிரி கதைகள் கொடுத்தால் பார்வையாளர்கள் சலிப்பாக உணருகிறார்கள் என்பதையும் புரிந்துவைத்திருக்கின்றனர். ஒரு திரைப்படத்தில் விவேக் சீரியலுக்கு கதை எழுதும் எழுத்தாளராக வருவார்.

“இந்த எபிசோடுல ஹீரோயின் மாடிப்படி ஏறரா..அவ மாடிக்குப் போனதும் தொடரும்னு போடறோம்..”

“அப்ப, அடுத்த எபிசோட்?”

“மாடிக்கு ஏறின ஹீரோயின் படிக்கட்டுல திரும்ப இறங்கி வர்றா..கடைசி படி வந்ததும் தொடரும்னு போடறோம்” என்பார்.

இந்த ரீதியில் சொல்லப்பட்ட கதைகள் கொண்ட காலம் உண்டு. ஆனால் இப்போது அப்படியல்ல, ஒவ்வொரு முப்பது நிமிடங்கள் என்பது எழுத்தாளருக்கும், இயக்குனருக்கும் வைக்கப்பட்டிருக்கிற சவால். யதார்த்தம் என்னவென்றால் ஒரு திரைப்படத்துக்கு எழுதுவதை விட உழைப்பையும் சமமனநிலையையும் கோருவது சீரியல்களுக்கு எழுதும்போது தான்.

முப்பது நிமிடங்களில் சரரியாக 22 நிமிடங்கள் கதை சொல்ல வேண்டும். ஒவ்வொரு விளம்பர இடைவேளைக்கு முன்பும் வேறு சேனலுக்கு பார்வையாளர்கள் மாறிவிடாமல் இருக்க சுவாரஸ்யம் கூட்ட வேண்டும், முப்பதாவது நிமிடத்தின் கடைசியில்  மறுநாளைக்கு பார்வையாளர்களை வரவைக்க ஒரு திருப்பம் கதையில் இருந்தாக வேண்டும். கதையில் உள்ள கதாநாயகி, நாயகன் உட்பட முக்கியமானவர்கள் எல்லா காட்சியிலும் இடம்பெற வேண்டும். தயாரிப்பு செலவை முன்னிட்டு ஒரே இடத்தில் காட்சி அமைய வேண்டும். இதையெல்லாம் அலுப்பில்லாமலும் சொல்ல வேண்டும். இது கிரிக்கெட்டில் தரப்படும் நெட்பிராக்டிசில் மொத்த கிரிக்கெட்டையும் ஆடுவது போன்றது. குறிப்பிட்ட எல்லைக்குள் ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்தபட்சம் ஃபோர்களாவது அடிக்கப்பட வேண்டும், கடைசி பந்தில் சிக்சர் அடித்தேயாக வேண்டும். நடுவில் போனால் போகிறதென்று ரன்கள் எடுக்கலாம். ஆனால் ஒரு பந்தினைக் கூட வீணடிக்கக் கூடாது. சற்று மறந்து ஒரு பந்தினை வீண் செய்தாலும், “கதை நகரவேயில்லையே” என்று பார்வையாளர்கள் எழுந்து போய்விடுவார்கள்.

தமிழில் மட்டும் சராசரியாக ஒரு நாளைக்கு அறுபது சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. எல்லா சீரியல்களும் பார்க்கப்படுகின்றன. எண்ணிக்கை வேண்டுமானால் கூடவும் குறையவும் இருக்கலாம். இவற்றை அதிகமும் பார்ப்பவர்கள் நாற்பது வயதில் இருந்து தொண்ணூறு வயதுள்ளவர்கள். இதில் மதிய நேரம், மாலை நேரம், இரவு நேரம் என்கிற நேரத்திற்கு ஏற்றவாறு கதைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒருவர் தொடர்ந்து காலை பனிரெண்டு மணியில் இருந்து இரவு பத்தரை மணி வரை சீரியல்கள் பார்க்க முடியும். பார்க்கவும்  செய்கிறார்கள்! இவர்களுக்கு கதை சொல்வதென்பது ஒரு சவால். இவர்கள் எல்லாக் கதைகளையும், கதாபாத்திரங்களையும் நினைவு வைத்திருப்பார்கள். அந்த கதைகளின் உலகத்தோடு வாழ்வார்கள். இவர்களை ஏமாற்றவே முடியாது. இவர்கள் மனதில் ஒரு கதாபாத்திரம் என்னவாக பதிந்திருக்கிறதோ அதைத்தான் பின்பற்றுவார்கள். இதில் மாற்றம் ஏற்படுமெனில் அதை சிறிது சிறிதாகத் தான் கொண்டு வரவேண்டுமே தவிர ஒரே எபிசோடில், ஒரே வசனத்தில் மாற்றினால் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. சீரியல் பார்ப்பதையே நிறுத்திவிடுவார்கள். உதாரணத்துக்கு ஒரு சீரியலில் அன்பான கணவன் என காட்டப்பட்ட இருவர் ஒரு பிரச்சனை காரணமாக குடித்துவிட்டு மனைவியைத் திட்டுவது போல ஒரு காட்சி வந்துவிட்டது. அன்றைக்கு மட்டும் சேனலுக்கு வந்த போன் கால்கள் இருநூறைத் தாண்டும். இந்தக் காட்சிக்கு கண்டனம் தெரிவித்து கடிதங்கள் நீண்ட நாட்களுக்கு வந்து கொண்டிருந்தன “செல்வத்தை நாங்க எவ்வளவு மரியாதையா நினைச்சிருந்தோம்..அவனை இப்படி காட்டிட்டிங்களே” என்பதுதான் அத்தனை பார்வையாளர்களின் மனநிலையாக இருந்தது.

இப்படி இருப்பது சரிதானா? சீரியல்கள் பார்வையாளர்களின் மனநிலையை மாற்றுகிறதா? அவர்களை யாரோடும் கலந்து பழகவிடாமல் செய்கிறதா என்றால் இதற்கு மேலோட்டமாக பதில் சொல்ல முடியாது. இன்று கிராமங்களில் கூட கூடிப் பேசுகிற வழக்கம் குறைந்துவிட்டது. தொலைகாட்சியின் வருகை அடியோடு நமது வாழ்க்கை முறையினை இருபது வருடங்களுக்கு முன்பே மாற்றிவிட்டது. இப்போது அலைபேசி யுகமாகவும் மாறிவிட்டது, யாருக்கும் யாருடனும் நேரம் செலவழிக்க நேரமில்லை. வீட்டில் இருக்கும் முதியோர்கள் என்ன செய்வார்கள்? அவர்களின் ஒரே பொழுதுபோக்காக டீ.வி-க்கள் மாறிவிட்டன. பல வீடுகளில் வயதானவர்கள் பார்க்க ஒரு டீவி, மற்றவர்களுக்காக இன்னொரு டீவி என்றும் மாறிவிட்டன. கதை கேட்டு வளர்ந்த சமூகம் நாம். பக்கத்துக்கு வீடுகளில் தெருக்களில் ஊர்களில் நடக்கும் நிகழ்வுகளை கேட்டு கருத்து சொல்லி, பல விதமாக உரையாடி அதில் நேரம் போக்குவது மனித இயல்பு. இன்று பக்கத்து வீடுகள் கூட அன்னியமாக்கப்பட்டபின் டீவி சீரியல்களில் வருபவர்கள் வயதானவர்கள் மத்தியில் ஆதரவு பெருகின்றனர். “என்னோட நாத்தனார் இப்படியே தான் என் கூட சண்டைக்கு வருவா” என்றும் “என் அண்ணன் மாதிரியே தான் இவரும்” என்றும் பொருத்திப் பார்க்கிற மனநிலை வந்துவிடுகிறது. இதோடு ஒவ்வொரு மனிதருக்குமே குடும்பங்களில் ஆகாதவர்கள் நெருக்கமானவர்கள் என்றிருப்பார்கள். அப்படியான கதாபாத்திரங்கள் வருகையில் அவர்கள் பேச , செய்ய நினைத்ததை கதாபாத்திரங்கள் செய்யும்போது அவர்களை அது திருப்திகுள்ளாக்குகிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரை மாமியார் மருமகள் கொடுமை என்பது சீரியல்களின் கற்பகத்தருவாக இருந்தது. இன்று அப்படியான கதைகள் கொண்ட சீரியல்கள் அநேகமாக இல்லை. அது தேய்வழக்கான ஒன்றாக கருதப்படுகிறது. இப்போதைய ‘ட்ரெண்ட்’ என்பது ஒரு பெண் சுயமாக முன்னேறுவது, குடும்பத்தை முன்னேற்றுவது என்பதாக மாறியுள்ளது. சில வருடங்களில் இதுவும் மாறக்கூடும்.

கதாநாயகிக்கு ஏற்படும் பிரச்சனைகளால் அவள் அழுவதும், நிர்க்கதியாய் நிற்பதும் பார்வையாளர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது. அழுதுகொண்டே பார்த்தார்கள் என்பது உண்மை. இப்போது அப்படியெல்லாம் காட்சிகள் வைத்தால் டி.ஆர்.பி ஒரு புள்ளி கூட ஏறாது. இப்போதுள்ள கதாநாயகி தைரியசாலியாக இருக்க வேண்டும். அதே நேரம் அவளுக்கான எல்லையும் தாண்டக்கூடாது. இந்த எல்லை என்பது அவள் பெண்ணியவாதியாக காட்டிக்கொள்ள வேண்டும், ஆனால் பெண்ணியவாதியாக  இருக்கக்கூடாது. புரியவில்லை இல்லையா? புரிந்தால் நீங்கள் ஒரு தேர்ந்த சீரியல் எழுத்தாளர் என்பதை அறிக.

ஒரு உதாரணம் சொல்லலாம். ஒரு சீரியல். அதன் நாயகி தன் கண்களுக்கு இலட்சணமாக இல்லை என கணவன் வேறொரு பெண்ணை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறான். இந்த விஷயம் எப்போது அந்த கதாநாயகிக்குத் தெரிய வரும் என்று பார்வையாளர்கள் காத்திருந்தனர். நாயகிக்கும் தெரியவந்தது. அவள் வெகுண்டெழுந்து கணவனை வெளுத்து வாங்குகிறாள். டி.ஆர்.பி உச்சம் தொட்டது. இப்படியே அவள் கணவனைத் திட்டுவதும் அவன் முன்பாக நான்  ஜெயித்து காட்டுகிறேன் என்றும் சொல்லிக் கொண்டே இருக்க, பார்வையாளர்களிடமிருந்து வந்த எதிர்வினை என்பது “இப்ப அவன் என்ன செஞ்சுட்டான்? அவன் கல்யாணம் பண்ண ரெண்டாந்தாரமும் ரொம்ப நல்ல பொண்ணு தான?” என்று சொல்லிவிட்டார்கள். இப்படியான ஒரு எதிர்வினையை சேனல் தொடங்கி சம்பந்தப்பட்டவர்கள் வரை எதிர்பார்க்கவில்லை. இப்போது பெண்ணியம் பேசியவரை பெண்மணியாக்க வேண்டிய சூழல். கதையை வேறு பக்கமாகத் திருப்ப வேண்டியிருந்தது. 

ப்ரியாதம்பி, ஜா. தீபா, பாலைவனலாந்தர்

சீரியல்களில் இப்போது வேறு சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நடந்து வருகின்றன. அவை திரைக்கு பின் நடக்கிறது. தொலைக்காட்சி உலகம் என்பது எழுத்தாளர்களின் ஊடகம்.  இப்போது சில வருடங்களாக பெண்கள் இந்தத் துறைக்கு எழுத வந்திருக்கிறார்கள். இது நல்ல மாற்றம். இதனால் ஒரே இரவில் மாற்றம் நிகழ்ந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் பெண்கள் எழுதும்போது சிலவற்றை எழுத மறுப்பார்கள். பெண்களைக் கேவலமாக சித்தரிப்பது, குழந்தைகளைக் கடத்துவது, அதீத மூடநம்பிக்கைகள் போன்றவற்றை எழுத மாட்டோம் என்று சொல்கிற பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பெண்கள் எழுதும் சீரியல்கள் தொடர்ந்து வெற்றியும் பெறுகின்றன. மிக நுட்பமான குடும்ப விவகாரங்களைப் பெண்களின் பார்வையில் இவர்களால் சொல்ல முடிகிறது. மேற்கு வங்கத்திலும், மகராஷ்டிராவிலும் அதிகமும் பெண்கள் தான் சீரியலுக்கு எழுதுகிறார்கள். இந்தியிலும், வங்காளத்திலும் வெற்றி பெற்ற சீரியல்களை தமிழில் எடுக்கிறார்கள். அவை அநேகமும் பெண்களால் எழுதப்பட்டவையாக இருக்கின்றன.  அதனால் இப்போது தொலைகாட்சியில் பெண் எழுத்தாளர்களின் வருகையை விரும்புகிறார்கள்.

மாற்றங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. அவை அசாதாரணத்தில் இருந்து சாதாரண நிகழ்வாக மாறும். புதுப் புதுக் கதைகள் உருவாகும். அதற்கான வாய்ப்புகள் இப்போது தொடங்கியுள்ளன. அதனால் ‘சீரியல்னாலே..; என்று பேச்சினைத் தொடங்குபவர்கள், சிறிது காலம் பொறுத்திருந்து தங்களது உரையாடலை இது குறித்து தொடங்கலாம்.

*

ஜா.தீபா: தமிழ்விக்கி

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *