ஹன்னா ஆரெண்ட் – சர்வாதிகாரத்தின் வேர் – சைதன்யா
1941இல் நாசி ஜெர்மனியிலிருந்து தப்பி போர்ச்சுகல் வழியாக அமெரிக்கா சென்றடைந்த ஹன்னா ஆரெண்ட் இரு கேள்விகளை எதிர்கொண்டார். ஒன்று: நாசி வரலாற்றை, அதன் வளர்ச்சியை புரிந்துக்கொள்ள முயற்சிப்பதா? அல்லது அதை முழுவதுமாக தவிர்ப்பதா? இரண்டு: ஒரு தத்துவவாதியாக சிந்தனை (contemplation) என்னும் தளத்திற்குள் ஒடுங்கிவிடுவதா? அல்லது தொடர்ந்து பேரழிவுகள், படுகொலைகள் என்று தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்த அக்காலகட்டத்துடன் உரையாட முயல்வதா?
பத்து வருடங்களுக்குப் பின் அவர் எழுதி வெளிவந்த Origin of totalitarianism (1951) என்னும் நூலின் முன்னுரையில் அக்கேள்விகளுக்கு விடையளித்துள்ளார்.

”இனிமேலும் நாம் கடந்த காலத்தின் நன்மைகளை மட்டும் பேசிகொண்டு, வரலாற்றில் நிகழ்ந்த பேரழிவுகள் அனைத்தும் காலத்துள் புதைந்து அழிந்துவிடும் என எண்ண இயலாது. மேற்கத்திய வரலாற்றின் அடி நாதமாக இருந்தவை இருபதாம் நூற்றாண்டில் மேற்பரப்பிற்கு வந்துள்ளன.”
அவை ஐரோப்பிய ஏகாதிபத்தியம், காலனியம், சர்வாதிகாரம், யூதப் படுகொலை, சோவியத் படுகொலைகள், உலகப்போர்கள் என தவிர்க்கமுடியாத யதார்த்தங்களாக உருக்கொண்டன. அந்த நிலையில் கடந்த காலத்திற்கான ஏக்கமோ முற்றிலும் புதிய ஒரு எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்புகளோ இரண்டுமே வீண்செயல்கள் என்று ஆரெண்ட் கூறுகிறார்.
அவ்வரலாற்றுண்மைகளை மானுடத்தின் கரிய பக்கங்கள் என்று விலக்கி வைப்பதல்ல. நாம் செய்யவேண்டியது அவற்றை புரிந்துக்கொள்ள முயல்வது. அந்த புரிதல் எந்த நிதர்சனத்தையும் மறுதலிப்பதாக அமையக் கூடாது. எதிர்பாராத நிகழ்வுகளை முன்னறிவதற்காக அல்லது யதார்த்தத்தின் அதிர்ச்சியை தவிர்ப்பதற்காக என்று அப்புரிதலை சுருக்கிவிடுவதும் அபத்தம்.
அரசியல் கணிப்புகள், பொருளாதார கணிப்புகள், சமூக கணிப்புகள் என அனைத்துமே எந்த நிகழ்வுகளும் அற்ற ஒரு தளத்தில் சமைக்கப்படுகின்றன. அங்கு மனிதன் வெறும் எண்களாக இருக்கிறான். இன்றுவரை நிகழ்ந்த சம்பவங்களை வைத்து ஒரு கணிப்பை அறிஞர்கள் உருவாக்குகிறார்கள். வரலாற்றில் ஒரு சம்பவம் பதிவாவதன் காரணமே அது எதிர்பார்த்திராத நிகழ்வு என்பதால் தான். நாசிச வளர்ச்சியின் காரணிகளுக்கும் அதன் விளைவுகளுக்கும் இடையில் வெகு தொலைவு இருப்பதே அதை வரலாற்று பெருநிகழ்வாக்குகிறது. இதிலிருந்து கணிப்புகளை உருவாக்குபவன் எந்த ஒரு தனிமனித செயல்பாடுகளும் அற்ற ஒரு தளத்தை கற்பனை செய்கிறான். அதன் மூலம் தன் தர்க்கத்திற்குள் வரலாற்றுப் போக்கை கொண்டுவர முயற்சிக்கிறான். வரலாற்றை ஒற்றைப்படையான ஒரு ஒழுக்காக புரிந்துக்கொள்ள முயல்வதன் விளைவுகள் இவை.
ஒரு தனிமனிதனின் பங்கு இப்பெரும் வரலாற்று நிகழ்வுகளில் என்னவாக இருக்கிறது என்பதை முந்தைய கட்டுரையில் ஜெரூஸலேமில் ஐக்மன் (Eichman in Jerusalem) என்னும் நூல் வழியாக புரிந்துக்கொள்ள முயன்றோம். இக்கட்டுரையில் ஹன்னா ஆரெண்ட் எழுதிய origin of totalitarianism (சர்வாதிகாரத்தின் தோற்றம்) என்னும் நூலில் ஒரு சமுதாயம் எப்படி முழுமுதல் தீமை நோக்கி செலுத்தப்படுகிறது என்பதைக் காணலாம்.
”மனிதனின் முழுமையான ஒத்திசைவுக்காக அவனது தன்மானத்தின் ஒரு சிறு தடயம் கூட இல்லாமல் அழிக்க வேண்டியது ஒரு சர்வாதிகார அரசின் கடமையாகிறது.”
ஐரோப்பாவில் சர்வாதிகாரம் வளர முக்கியமான காரணம் காலனிய விரிவாக்கம் (Colonial expansion) என்கிறார் ஆரெண்ட். முதலாளித்துவத்தின் தேவைகள் ஐரோப்பாவை ஆப்ரிக்க, ஆசிய கண்டங்களை நோக்கிச் செலுத்தியது. முதலாளித்துவம் என்பது தன்னைத்தான் உண்டு வளரும் மிருகம். ஐரோப்பிய தொழிற்புரட்சி (Industrial revolution) உருவாக்கிய பூதாகரமான பூர்ஷ்வா (Bourgeoisie) சமுதாயமும் அதன் அடுக்குகளும் அதற்கு போதாமலானது. இரு விடைகள் ஐரோப்பாவின் முன் இருந்தன. ஒன்று: மேலும் மூர்க்கத்துடன் தன் அடித்தள சமுதாயத்தை சுரண்டுவது. இரண்டு: புதிய சந்தைகளை கண்டடைவது. ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே இரண்டையும் தேர்ந்தெடுத்தன.
இதைத் தொடர்ந்து அதிகாரத்திற்கும், மூலதனத்திற்கும் இடையிலான கூட்டணி உருவானது. ஐரோப்பிய ஆதிக்கத்தின் நியாயீகரணங்களில் ஒன்றாக இனவாதம் கூறப்பட்டது. இனவாதத்தை நிலைநாட்ட அதிகாரம் பயன்படுத்தப்பட்டது. மேலும் காலனிய ஆதிக்கம் ஐரோப்பியர்களிடம் நாடு – எல்லை – தேசம் (people-territory-state) என்னும் நிலைத்த அடையாளங்களைக் குலைத்தன. குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில். ஜெர்மானியர்களும், ஸ்லாவிக் இன மக்களும் நாடு/தேசம் என்னும் அடையாளங்களை கைவிட்டு இன அடையாளங்களை பற்றிக்கொண்டனர்.
இவையே ”இயற்கையான” பாகுபாடுகள் என்றும் கூற துவங்கினர். இன்றும் இனவாதம் பேசும் பலர் பயன்படுத்தும் சொல்லாட்சி இவ்வாறாகவே உள்ளது. ’மனிதர்கள் மத்தியில் இருக்கும் இயற்கையான வேறுபாடுகள் இவை’. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலும் இதே ”இயற்கையான ஏற்றதாழ்வுகள்”. பரிணாமம், இயற்கையின் விதிகள் என்று இவர்கள் பயன்படுத்தும் சொல்லாட்சிகளில் பெரிய மாற்றமேதும் நிகழவில்லை.
பரவலாக கடவுளின் அதிகாரம் இல்லாமலாகி மனிதன் அனைத்தையும் முடிவெடுக்கும் இடத்தை அடைந்த காலம் 19ஆம் நூற்றாண்டு. இயற்கையின் விதிகள் என்றும், மனித அறம் என்றும் வெவ்வேறு விதமாக அவ்வதிகாரம் உருமாறியது. அமெரிக்கா Inalienable rights of man (மனிதனின் இன்றியமையாத உரிமைகள்) என்று சட்டசாசனத்தில் எழுதிய உடன் பல கேள்விகள் எழுந்தன. யார் வழங்கும் உரிமைகள் அவை? ஒரு தேசம் தன் குடிமகனுக்கு வழங்கும் உரிமைகளா? கடவுளின் அல்லது இயற்கையின் ஆணைப்படி அனைத்து மனிதர்களுக்கும் வழங்கப்படும் உரிமைகளா? ஹன்னா ஆரெண்ட் தன் நூலில் ஒரு நாட்டின் பிரஜையாக அல்லாதபோது தனிமனிதனுக்கு உலகம் எந்த உரிமையையும் அளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
”மனிதனாக இருப்பதன் அடிப்படை சாராம்சத்தில் உலகம் எதையும் புனிதமாகக் காணவில்லை என்பதே உண்மை.”
மனிதனின் ”இயற்கையான” வேறுபாடுகள், ஒற்றுமைகள், அவனது ”இயல்பான உரிமைகள்” என்று கூறுவதனைத்துமே வெறும் வார்த்தைகள் தான். மனிதன் உண்மையில் சரிசமமாக படைக்கபடுவதில்லை. சமத்துவம் அவனுக்கு இயற்கை வழங்கிய ஒன்றல்ல. அது மானுடத்தின் கொடை. மனிதர்கள் பரஸ்பரம் உரிமைகளை கொடுத்தும் பெற்றும் சமத்துவத்தை அடைகிறார்கள். தனிமனிதன் தன்னளவில் எந்த உரிமையையும் சமத்துவத்தையும் இயற்கை விதியால் அடைவதில்லை.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஐரோப்பிய தேசங்களின் அரசு செல்வத்தின் கணிசமான பகுதி வெளிநாட்டு முதலீடாக மாற்றப்பட்டது. அச்செல்வம் lumpenproletariat எனப்படும் வர்க்கபோதமற்ற அடித்தள மக்களின் பாதுகாப்பிலிருந்தது. பின் அது அதிகரிக்க அதிகரிக்க அரசதிகாரத்தின் கைக்குள் மெல்லச் சென்றது. இராணுவமும் காவல்துறையும் தலையிட வேண்டிய கட்டாயம் உருவாகியது. ஆயுதப் படைகளால் அவர்களின் இடம் கைப்பற்றப்பட்டவுடன் lumpenproletariat ஒருவித அடையாளமற்ற தனிமை, வெறுமை, பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றால் ஆட்கொள்ளப்பட்டனர். காலனிகளில் இருந்து ஐரோப்பாவிற்கு திரும்பிய இவர்கள் ’இன அடையாளம் சார்ந்த தேசம்’ என்னும் புதியக் கோட்பாட்டை கொண்டு வந்தனர். டச் மக்களின் போயர் (Boer) என்னும் அடையாளம், ஜெர்மானியர்களின் ஆரியன் (Aryan) என்னும் அடையாளம், கிழக்கு ஐரோப்பியர்களின் ஸ்லாவிக் (Slavic) அடையாளம் இவ்வாறு பல இன அடையாளங்கள்.
முன்பு எப்போதும் அரசியல் செயல்பாடுகளில் ஆர்வமற்றிருந்த இது போன்ற மக்கள் கூட்டம் வெவ்வேறு இயக்கங்களில் இணைந்து செயல்பட துவங்கியது தான் ஜெர்மனியிலும் ருஷ்யாவிலும் சர்வாதிகார ஆட்சியை நிலை நாட்டியது என்கிறார் ஹன்னா ஆரெண்ட். இந்த மக்கள் கூட்டம் முடிவில்லாத மாற்றங்களும் சிக்கல்களும் நிறைந்த அவர்களின் யதார்த்தத்திலிருந்து தப்ப முயல்கிறது. அனைத்தும் முழு ஒத்திசைவுடனும், காரண காரியங்கள் முழு சமன்வயத்தில் இயங்கும் ஒரு பொய்யுலகை கற்பனை செய்கிறார்கள். அரசியல் பிரச்சாரகர்கள் இதையே அவர்களுக்கு வழங்குகிறார்கள். இன்றும் அரசியலில் இது நிகழ்கிறது. சமூகத்தில் அனைத்து தீங்கிற்கும் ஒரு மத, இன அல்லது மொழி அடையாளம் கொண்ட மக்களே காரணம் என கூறிவிடுவது எளிதாக இருக்கிறது.
இவ்வாறு வழி நடத்தப்படும் மனிதனின் தனிமையை குறித்தும் ஆரெண்ட் கூறுகிறார். இந்த இன அடையாளம் தவிர அவனுக்கு வெறெதுவும் இருப்பதில்லை. தனிமனிதனாக தன் மீதோ தன் எதிர்காலம் மீதோ கூட பெரும்பற்று அவனிடம் இருப்பதில்லை. தன் அடையாளத்தை மட்டுமே பற்றிக்கொண்டு ஒரு வித தற்கொலை மனநிலையில் வாழ்கிறான்.
தன்நலத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் பற்றுள்ளவர்கள் அரசியலில் பெரும் ஆர்வத்துடன் ஈடுபடுவதில்லை. ஆரெண்ட் அன்றைய ஜெர்மானிய சமூகத்தில் பலரிடம் இருந்த தனிமையும் பற்றின்மையும் அவர்களை அடையாள அரசியலை நோக்கித் தள்ளியது என்கிறார். யதார்த்தத்தில் ஆர்வமற்று பொய் பிரச்சாரங்களால் சமைக்கப்பட்ட ஏதோ ஒரு ஒற்றைப்படையான உலகில் பெரும் பற்றுடன் இயங்கும் ஒரு பெரும் கும்பல்.
ஆரெண்ட் இவர்களிடம் இருந்த முரணை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டுகிறார். உண்மையான எதிலும் பற்றற்று அதேசமயம் எதிர்காலத்தில் கட்டப்படவிருக்கும் ஒரு கனவுலகின் மீது அதீத பற்றும், எல்லாவற்றையும் சந்தேகிக்கும் மனநிலை அதேசமயம் ஏதோ ஒருவரின் சொல் மீதோ அமைப்பின் மீதோ குருட்டுத்தனமான அதீத நம்பிக்கை.
யூத வெறுப்பு (antisemitism) இதனைத் தொடர்ந்து எவ்வாறு மேலோங்கியது? ஹன்னா ஆரெண்ட் ஐரோப்பாவில் பரவியிருந்த யூத ஒடுக்குமுறை குறித்து ட்ரைஃபஸ் விவகாரம் (Dreyfus Affair) உட்பட பல நிகழ்வுகளைக் கூறி அதன்பின் இருந்த காரணங்களையும் விவரிக்கிறார்.

20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜெர்மனியிலும் ருஷ்யாவிலும் அடித்தள வர்க்கத்திற்கு மேல்வர்க்கத்தில் இருந்த மிதமிஞ்சிய செல்வம், அதிகாரம் மீது எதிர்ப்பு உருவாகிவந்தது. ஜெர்மனியில் அது யூதர்கள் மீது குவிக்கப்பட்டது. யூதர்கள் ஐரோப்பா முழுவதும் ஒரு தனிக் குழுவாக அதிகாரத்திற்கும் (power), மூலதனத்திற்கும் (capital) நடுவில் தங்களை பொருத்திக்கொண்டிருந்தனர். ஒடுக்குமுறையிலிருந்து தப்ப அவர்கள் அதைச் செய்திருக்கலாம். ஆனால் இதனால் நாசி கட்சியின் பிரச்சாரகர்களால் சமூகத்தின் ”தேவையற்ற” (superfluous) அம்சங்களாக முத்திரையிட எளிய இலக்காக யூதர்கள் அமைந்தனர். இனவாதம் எவ்வகையிலேனும் இறுதியில் இன வெறுப்பை நோக்கிச் சென்றுவிடுகிறது.
ஹன்னா ஆரெண்ட் சர்வாதிகார ஆட்சி குறித்து பல சுவாரசியமான புரிதல்களை இந்நூலில் முன்வைக்கிறார். சர்வாதிகாரம் என்பது ’அரசியல்’ கட்டற்ற அதிகாரத்தை அடைவதல்ல. அது ஒரு வித அரசியலின்மையை (anti political movement) அடைவது என்கிறார். எந்தவித மனித வேறுபாடும் அதற்கு தடங்கலாக அமைகிறது. மனித உரிமை, மனித தன்மானம் ஏன் மனித தன்மையே கூட சர்வாதிகாரத்திற்கு எதிரான செயல்பாடாகிறது. பிரச்சாரம், பயங்கரவாதம், வன்முறை இவற்றைக் கொண்டு மனிதன் துன்புறுத்துபவன், துன்புறுத்தப்படுபவன் என்ற இரு அடையாளங்களுக்குள் திணிக்கபடுகிறான்.
சர்வாதிகாரத்திற்கு நிகழ்காலம் முக்கியமல்ல. எதிர்கால கனவுலகமே அதன் இலக்கு. அதற்காக மனிதனை ஒரு கருவியாக, எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தவியலும் ஒரு வெறும் கருவியாக மாற்றுவதையே தன் வழிமுறையாகக் கொண்டுள்ளது. அது உருவாக்கும் சட்டங்கள், அதிகார மையங்கள் அனைத்துமே பொய்யானது. உண்மையான அதிகாரம் இயக்கத்தின் மையத்தில் மட்டுமே உள்ளது. கீழுள்ள அனைவருமே கைப்பாவைகள். சர்வாதிகார அரசு நிலைத்து இருக்கும் அதிகார மையம் அல்ல. ஏதோ ஒன்றை நோக்கிச் சென்றுகொண்டே இருப்பது தான் அதன் இயல்பு. ஆகவே, தான் உருவாக்கிய அதிகாரத்துவத்தின் ஆற்றலை தானே அழிக்கும் தன்மையை அதில் காணமுடிகிறது. மிகத் தெளிவாக இதனை சோவியத்தின் வரலாற்றில் காணலாம். நாசி வரலாற்றிலும்.
சர்வாதிகாரத்திற்கும் (Totalitarianism) கொடுங்கோல் ஆட்சிக்கும் (Tyranny) இந்த வகையில் பெரும் வேறுபாடு இருக்கிறது. சர்வாதிகாரம் என்பது முடியாட்சி அல்லது குடியாட்சியின் அதிகார சீர்கேடு காரணமாக உருவாவதல்ல. அதன் முடிவையும் தன்னுள் வைத்துக்கொண்டே சர்வாதிகாரம் வளர்கிறது. ஆனால் அழிவதற்கு முன் சமூகத்தின் அடிவேர் வரைச்சென்று தன் நஞ்சைப் புகுத்திவிட்டே செல்கிறது. வெறும் அதிகார மாற்றம் மட்டும் அதன் தீர்வாக அமைவதில்லை.
அடையாள அரசியலின் வேர்கள் காலனியத்தில் துவங்கி இப்போது மத்திய கிழக்கில் நிகழும் போர்கள் வரை வளர்ந்து பரவியுள்ளது. அரசியல் செயல்பாடு என்பது அது மட்டுமே என்றாகிவிட்டது.

ஆரெண்ட் அவரது the human condition என்னும் நூலில் மனிதனின் நிலை அல்லது ’condition’ என்பதன் முக்கியமான அங்கமாக சமூக செயல்பாட்டைக் கூறுகிறார். ஜெ.எஸ்.மில் (J.S. Mill) முதலிய பல அறிஞர்கள் தனிமனித சுதந்திரம் என்பது சமூக மற்றும் அரசியல் செயல்பாட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் உரிமையை ஒருவன் பெறுவது தான் என்றனர். ஹன்னா ஆரெண்ட் அதற்கு மாறாக அரசியலில் ஈடுபடும் உரிமையே உண்மையான சுதந்திரம் என்று கூறுகிறார். அவர் கூறும் அரசியல் வெறும் இயக்க அரசியல் அல்ல. மனிதன் மனிதர்கள் மத்தியில் தன் நிலை (Human condition) என்ன, அது வரலாற்றில் எவ்வாறு பரிணமித்து வந்துள்ளது என்று அறிந்துக் கொள்ள வேண்டும். எந்த ஒருவனும் மனிதர்களற்ற வெளியில் வாழ்வதில்லை. மனித குணம், இயல்பு (human nature) போன்ற அடிப்படைக் கேள்விகளுக்குள் செல்லும் ஒருவன் அத்தேடலின் முடிவின்மையில் சென்று முட்டிக்கொள்வான். உண்மையில் மனிதன் தனக்காக இவ்வுலகில் உருவாக்கிய மனித நிலைமையை மட்டுமே முற்றறிய நம்மால் முடியும்.

வரலாற்றில் சர்வாதிகார அரசுகள் நிகழ்த்திய பேரழிவுகள் அனைத்தும் மனித நிலை குறித்த ஏதோ ஒன்றை நமக்கு கூறிச்சென்றுள்ளன. வெறும் கணிப்புகளுக்காக மட்டுமல்ல. கணிப்புகள் பெரும்பாலும் உண்மையாதில்லை என்பது ஒரு புறம். இவ்வரலாற்று நிகழ்வுகளின் முடிவில் ஏதோ ஒன்றை புதிதாக அறிகிறோம். மனிதநிலை குறித்து. மனிதனின் எல்லைக் குறித்து. அவ்வறிதல் மனிதனை மேலும் சிறிதளவு விடுவிக்கிறது. புதிய ஒரு திறப்பு. ஒரு மறுபிறப்பு.
*