பெண்மை எனும் முடிவுறாக் கதையாடல் – எலிஃப் ஷஃபாக்

(தமிழில்: விக்னேஷ் ஹரிஹரன்)

எலிஃப் ஷஃபாக்

எலிஃப் ஷஃபாக் துருக்கியின் “முதன்மையான பெண் நாவலாசிரியர்” (உபயம்: Financial Times) ஆக அறியப்படுபவர். சொற்பமான பெண் படைப்பாளிகளே உலகளவில் அடையாளம் காணப்பட்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த தனித்துவமான குரல் அவர். மத்திய கிழக்கு நாடுகளில் துருக்கியே மிகவும் தாராளமயமானது என்றாலும் அங்கும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மிகுந்தே இருக்கின்றன. ஓரான் பாமுக்கும், அகமத் ஹம்தி தன்பினாரும் உலகை ஆட்கொண்ட பிறகே ஷஃபாக் ஆங்கில இலக்கிய உலகத்தால் அடையாளம் காணப்பட்டார். அதற்குப் பிறகே அவரது படைப்புகள் துருக்கிய மொழியிலும் ஆங்கிலத்திலும் பரவலான கவனத்தைப் பெற்றன. துருக்கிய மொழியிலும் ஆங்கிலத்திலும் நேரடியாகவே எழுதக்கூடிய ஷஃபாக், நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், அரசியல் ஆய்வு, மேடைப் பேச்சு என பல்வேறு துறைகளில் செயல்படுகிறார். அவரது புகழ்பெற்ற நாவலான “காதலின் நாற்பது விதிகள்” தமிழில் ரமீஸ் பிலாலியின் மொழிபெயர்ப்பில் சீர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. நாவலாசிரியராக பெரும் புகழை அடைந்த ஷஃபாக்கின் கட்டுரைகளும் தனித்துவமானவையாகவே இருக்கின்றன. பெண்ணியச் சமூகச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஷஃபாக் பல புகழ்பெற்ற ஆங்கில நாளேடுகளிலும், பத்திரிக்கைகளிலும் அசலான பெண்ணியக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவற்றுள் ஒன்றையே இங்கு மொழியாக்கம் செய்திருக்கிறேன்.

இந்தக் கட்டுரையில் மேற்கத்திய பெண்ணிய எழுத்தின் முன்னோடிகளாகக் கருதப்படும் மூன்று பெண் படைபாளிகளின் ஆளுமைகளையும் படைப்புகளையும் பெண்ணிய நோக்கில் புரிந்துகொள்ள முயல்கிறார் ஷஃபாக். சிமோன் தி பொவாவின் “பெண், ஒரு முடிவுற்ற யதார்த்த நிலையினள் அல்ல. அவள் ஒரு ஆகி வருதலே (Becoming)” எனும் கூற்றை அடிப்படையாகக் கொண்டு லூ ஆந்த்ரேயாஸ் சாலோமே, மார்கரிட் டுரஸ், ரெபெக்கா வெஸ்ட் ஆகிய மூன்று பெண் எழுத்தாளர்களின் வாழ்வுகளையும் படைப்புகளையும் புரிந்துகொள்ள முயல்கிறார் அவர். பெண் படைப்பாளிகள் சார்ந்த நமது பொதுப் புரிதல்கள் பெரும்பாலும் அவர்களது தனி வாழ்வு சார்ந்த தகவல்களோடு கலந்தே இருக்கின்றன. ஆனால் அந்த தகவல்களில் அவர்களது தனி ஆளுமைகளும் செயல்களும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அவர்கள் மீதான விமர்சனங்களிலும் கூட அவர்கள் வினைபடு பொருட்களாகவே கருதப்படுகிறார்களே தவிர வினை ஆற்றுபவர்களாக இல்லை. எனவே இந்த மூன்று எழுத்தாளர்களின் தனி ஆளுமைகளும் செயல்களும் அவர்களது படைப்புகளில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை முன்வைப்பதன் வழியே இந்த கட்டுரை சில அசலான புரிதல்களை அளிக்கிறது. அந்த வகையில் இது பெண் படைப்பாளிகள் சார்ந்தும் அவர்கள் மீதான பொதுப் புரிதல்கள் சார்ந்தும் சில உரையாடல்களை தொடங்கி வைக்குமேயானால் நலம்.

இல்லையென்றாலும் பாதகமில்லை. அவரது கட்டுரைத் தொகுப்பான “Black Milk”இல் (கரும்பால்) உள்ள இந்த கட்டுரையை நீலி இதழுக்காக பரிந்துரைத்த கவிஞர் வே.நி. சூர்யாவுக்கு என் நன்றிகள்.

-விக்னேஷ் ஹரிஹரன்

*

Black Milk (கரும்பால்)

பெண்மை எனும் முடிவுறாக் கதையாடல்எலிஃப் ஷஃபாக்

இன்று லூ ஆந்த்ரேயாஸ் சாலோமேயை (Lou Andreas Salomé) நினைவு கூறுபவர்கள் எவரும் அவரை தனித்த எழுத்தாளராகவோ அறிவுஜீவியாகவோ நினைவு கூறுவதில்லை. மாறாக அவர் பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை பின்னின்று இயக்கிய சர்ச்சைக்குறிய பெண்ணாகவே நினைவு கூறப்படுகிறார். ரில்கே, நீட்சே, ஃபராய்ட் போன்றவர்களை பெண்மை குறித்தும் பெண்மையின் படைப்புத் திறன் குறித்தும் நுட்பமாக சிந்திக்கத் தூண்டிய பெண்ணாகவே அவர் பொதுவாக சித்தரிக்கப்படுகிறார். இத்தகைய சித்தரிப்புகள் நம் ஆர்வத்தைக் கிளர்த்துபவையாக இருந்தாலும் அவை சாலோமேயின் தொலைநோக்குச் சிந்தனைக்கும் பன்முகத் திறமைக்கும் நியாயம் செய்வதில்லை. அவர் காலத்தில் சாலோமே ஒரு புகழ் பெற்ற எழுத்தாளராகவே இருந்திருக்கிறார். அப்படியிருந்தும் அவர் எவ்வாறு முற்றிலுமாக மறக்கப்பட்டார் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. அவர் புனைவுகளும் நாடகங்களும் மட்டுமின்றி ருஷ்யக் கலை, இறையியல், நாடகம், பாலியல் எழுத்து போன்ற பல்வேறு தலைப்புகள் சார்ந்த அசலான ரசனைக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் ஐந்து சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்த சாலோமே, தந்தையின் செல்லமாகவே வளர்க்கப்பட்டார். இளம் பிராயத்திலேயே பிறருக்குக் கதைகள் சொல்லும் தனித்திறன் படைத்திருந்த சாலோமேயால் அவரது கதைகள் முடிந்த பிறகும் அந்தக் கற்பனை கதாபாத்திரங்களை கைவிட முடியவில்லை. அவற்றை கைவிடும்பொழுதெல்லாம் குற்றவுணர்ச்சிக்கு ஆளானார். இவ்வாறு தான் செய்யாத தவறுகளுக்கும் தன்னையே குற்றம் சாற்றிக் கொள்ளும் பழக்கம் சாலோமேயை அவர் வாழ்நாள் முழுவதும் பீடித்திருந்தது.

லூ ஆந்த்ரேயாஸ் சாலோமே

1880ஆம் ஆண்டு, தன் பத்தொன்பதாவது வயதில், ஜூரிச் நகரத்திற்கு வந்தார் சாலோமே. அழகும் அறிவும் தளறாத செயலூக்கமும் கொண்டிருந்த அவரை அன்றைய புத்தலைச் (New-wave) சிந்தனைக் குழுக்கள் உடனடியாக ஈர்த்தன. அங்குதான் அவர் அன்றைய ஐரோப்பாவின் முதன்மையான சிந்தனையாளர்களையும் கலைஞர்களையும் சந்தித்தார். அவர்களுடன் அவர் நிகழ்த்திய தொடர் விவாதங்களும் அவற்றில் சாலோமே வெளிப்படுத்திய தன்னம்பிக்கையும் கற்றல் திறனும் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பெண்களின் கடமை என்பது வெறுமனே தாயாகவோ தாரமாகவோ ஒதுங்கி வாழ்வதாகவும் அமைதியாக பணிபுரிந்து ஆண்களின் வாழ்வை நிறைவுறச் செய்வதாகவும் மட்டுமே இருக்க முடியாது என்று சாலோமே நம்பினார். பெண்களும் சுயாதீனமான படைப்பாளிகளாக மதிக்கப்பட வேண்டுமே தவிர அவர்களை ஆண்களுக்கான வாழ்க்கைத் துணைகளாகவோ கற்பனை ஊக்கிகளாகவோ மட்டுமே கருதிவிடக்கூடாது என்றார். பெண்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் அத்தனை முயற்சிகளும் அவர்களது இயல்பான கற்பனைத் திறனையும் படைப்பூக்கத்தையுமே சிதைக்கின்றன என்றார் சாலோமே.

ரில்கே சாலோமேயை பெண்மையின் உன்னத வடிவமாகவே கருதினார். சாலோமேயால் உந்தப்பட்டே அவர் “கலைஞர்கள் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்களுக்குள் இருக்கும் பெண்மையின் ஆற்றலை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும்” என்று கூறினார். ஒரு கலைஞன் கலைப்படைப்பை உருவாக்குவதென்பது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமமானதே என்றார் அவர். இதன் காரணமாகவே “ஒரு நாள், பெண்மை என்பது ஆண்மையின் எதிர்பதமாக மட்டுமின்றி தன்னளவிலேயே முழுமையான ஒன்றாக புரிந்துகொள்ளப்படும்.  அதற்கான வரையரைகளாலும் அதன் நிறைவுகளாகலும் அன்றி அது ஒரு தனித்த வாழ்வாகவும் உயிர்ப்பாகவுமே புரிந்துகொள்ளப்படும்” என்றார் ரில்கே.

ஆனால் இத்தகைய சாலோமேதான் ரில்கேவின் முழுப்பெயர் ‘அதீத பெண்மை’ மிக்கதாக இருப்பதாகக் கூறி அவர் பெயரை மாற்ற வைத்தார் என்பது ஒரு விந்தையான முரண். அதனால்தான் ரில்கே தன் பெயரில் இருந்த ‘ரெனே’வை ‘ரெய்னர்’ஆக மாற்றிக் கொண்டார். ஆனாலும் அவர் தன் பெயரில் இருந்த ‘மரியா’வை மாற்றவில்லை. இப்படித்தான் அவர் ரெய்னர் மரியா ரில்கேவானார்.

எழுத்தாளர் பால் ரீயுடன் நீண்ட காலமாக உறவு கொண்டிருந்த சாலோமே, பிறகு மொழியியல் அறிஞர் கார்ல் ஃப்ரெட்ரிக் ஆண்ட்ரெயாஸை மணந்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் பூஷ்வா திருமணம் எனும் அமைப்பின் மீதான தன் விமர்சனங்களை மாற்றிக்கொள்ளாத சாலோமே, தொடர்ந்து பல ஆண் அறிவுஜீவிகளுடனும் கலை ரசிகர்களுடனும் பழகி வந்தார். திருமணம் ஆன பிறகும், பல காதலர்கள் இருந்த போதும், சாலோமே எவ்வாறு கண்ணியாகவே பல காலம் இருந்தார் என்பது ஒரு புரியாத புதிர்தான். திருமணத்திற்குப் பிறகும் சாலோமே உடலுறவு கொள்ளவில்லை. சுதந்திரமான எழுத்தாளராகவும் சிந்தனையாளராகவும் இருந்த சாலோமே, காமத்தை அஞ்சினார். அல்லது தன்னை முற்றிலுமாக வேறு ஒருவரிடன் ஒப்புக்கொடுக்கத் தயங்கினார்.

“பெண்ணுக்கு ஆண் ஒரு பாதை மட்டுமே. அவளது இலக்கு குழந்தைப் பேறுதான்” என்றார் நீட்சே. இத்தகைய கூற்றுகள் கேட்கக் கவர்ச்சிகரமாக இருந்தாலும் அவற்றை சாலோமேயிடம் பொருத்திப் பார்க்க முடியாது. அவர் குழந்தைகளை வெறுக்கவில்லை. அவரும் குழந்தை பெற்றுக் கொள்ளவே விரும்பினார். தாய்மையே பெண்களின் மகத்தான லட்சியம் என்றும் மொழிந்தார். ஆனால் அவரது குழந்தையின்மையே அவருக்குப் பெரும் வேதனையாகவும் துயராகவும் இருந்தது. அது குறித்து அவர் சில நேரங்களில் ஆற்றாமையும் துயருமாக பிறரிடம் கூறவும் செய்தார். தாய்க்கும் குழந்தைக்குமான உறவே உலகில் “சுயத்துக்கும்” (Self) “பரத்துக்கும்” (Other) இடையில் சாத்தியமாகும் ஒரே உண்மையான உறவு என்று கருதினார் சாலோமே.

ஆனால் அவர் ஆண்களையும் விரும்பவே செய்தார். அவர் விரும்பிய ஆண்களை அவர் ஒரு பாதையாக மட்டுமே கருதவில்லை. அவர்கள் ஒவ்வொருவரையும் சாலோமே ஒரு தனிப் பிரபஞ்சமாகக் கருதினார். சட்டையில் உள்ள சுறுக்கங்களை நீக்குவதில் நிறைவுறும் இல்லத்தரசியைப் போல் தன் நண்பர்களின் ஆளுமைகளில் உள்ள குறைபாடுகளை நீக்குவதிலேயே சாலோமே நிறைவுற்றார். உள்ளுணர்வும், நுண்ணறிவும் கொண்டு வலுவான கருத்துக்களை முன்வைக்கும் சர்ச்சைக்குறிய எழுத்தாளராக திகழ்ந்தார் சாலோமே. அவர் மீது காதல் கொண்டவர்கள் – பெரும்பாலும் ஆண்கள் – அவரை ஆழமாக காதலித்தனர். அதேபோல் அவர் மீது வெறுப்பு கொண்டவர்களும் – பெரும்பாலும் பெண்கள் – அவரை தீவிரமாக வெறுத்தனர்.

ஃபிரெஞ்சு இலக்கியத்தின் தேவி (Diva) என்று பலராலும் கருதப்படும் மார்கரிட் டுரஸ் (Marguerite Duras) 1914இல் சையகோனில் பிறந்தார். அவரது பெற்றோர் ஃபிரெஞ்சு அரசு ஆசிரியர்களாக பணி புரிந்தனர். டுரஸின் இளம் பிராயத்திலேயே அவரது தந்தை இறக்கவே, அவரது தாய் தன் மூன்று குழந்தைகளுடன் இந்தோ-சீனாவிலேயே தங்கிவிட்டார். அதற்குப் பிறகான அவர்களது வாழ்க்கை சுலபமாக இல்லை. தொடர் பொருளியல் சிக்கல்களில் சிக்கித் தவித்த அந்த குடும்பத்தை குடும்ப வன்முறையும் சண்டைகளும் மேலும் துன்புருத்தின. இந்த சூழலில் தன் பதின் பருவத்திலேயே மார்கரிட் ஒரு சீனச் செல்வந்தருடன் உறவு கொண்டிருந்தார். அவ்வுறவைக் குறித்து அவர் தனது புனைவுகளிலும் நினைவுக் குறிப்புகளிலும் விரிவாக எழுதவும் செய்தார்.

மார்கரிட் டுரஸ்

தன் பதினேழாவது வயதில் ஃபிரான்சுக்குச் சென்ற மார்கரிட், அங்கேயே திருமணம் புரிந்துகொண்டு நாவல்கள், நாடகங்கள், திரைக்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதத் தொடங்கினார். இந்த அத்தனை இலக்கிய வகைமைகளுக்கும் இடையே அவரால் திறம்பட ஊடாட முடிந்தது. தன் இந்தோ-சீன அனுபவங்களைக் கொண்டு அவர் தனது “The Seawall” நாவலை எழுதியபோது, அதில் அவர் தனது குடும்பத்தைச் சித்தரித்த விதத்திற்காக அவர் தாய் அவருடன் கடுமையாக சண்டையிட்டார். ஆனால் மார்கரிட்டோ, “சிலருக்கு இந்த புத்தகம் அவமானகரமானதாக இருக்கலாம். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என்னிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. என் மானம் உட்பட” என்றார்.

அவருடைய நினைவுக் குறிப்புகளில் ஒரு காட்சி சித்தரிக்கப்படுகிறது. மார்கரிட்டின் தாய் அவர் வீட்டு மாடியில் முதல் முறையாக அவரது நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறார். கீழே, மார்கரிட் தன் தாயின் ஒப்புதலுக்காக பதற்றத்துடன் காத்திருக்கிறார். கீழே இறங்கி வந்த தாயின் இருக்கமான முகம் அவருடைய அதிருப்தியைக் காட்டுகிறது. மார்கரிட் உண்மைகளை திரித்துக் கூறி வாசகர்களை மகிழ்விக்க முயல்வதாக குற்றம் சாற்றுகிறார் அவரது தாய். அதனை மறுத்து தன் புத்தகத்தை நியாயப்படுத்தும் மார்கரிட், நிஜத்துக்கும் புனைவுக்கும் இடையிலான எல்லைகளை அழிக்கும் உரிமை தனக்கு உண்டு என்கிறார்.

இறந்த காலம் ஒரு அந்நிய நிலமென்றால், அந்நிலத்துக்குள் தொடர்ந்து பயணிக்கும் பயணியாக இருந்தார் மார்கரிட். ஒவ்வொரு பயணத்திலும் ஒரே நிகழ்வைப் பற்றிய வெவ்வேறு நினைவுகளுடன் திரும்பி வந்தார். “என் நினைவுகளை அகழ்ந்தாய்வதற்கான உந்துதலைத் தவிர, நான் அவற்றைத் தொடர்ந்து எழுதுவதற்கு என்னிடம் வேறு எந்த காரணங்களும் இல்லை” என்றார் மார்கரிட். “The Lover” நாவலில் தன்னைவிட பன்னிரெண்டு வயது மூத்த சீனச் செல்வந்தரோடு தான் கொண்ட உறவைப் பற்றி மார்கரிட் முதன்முதலாக முன்வைத்த அவரது பார்வை, அதற்குப் பிறகு அவர் எழுதிய ஒவ்வொரு புத்தகத்திலும் மாறிக்கொண்டே இருந்தது. அபரிமிதமான திறனும் செய்நேர்த்தியும் மிக்கவராக இருந்தபோதும், அதே கதைக் கருக்களின் புதிய பரிமாணங்களை கண்டடைவதற்காக அவற்றை மீண்டும் மீண்டும் எழுதிப் பார்க்கத் தயங்காதவராக இருந்தார் டுரஸ். 1968இல் ஃபிரான்சில் நிகழ்ந்த கிளர்ச்சிக்குப் பிறகு டுரஸின் படைப்புகளில் அரசியல் குரல் ஓங்கியிருந்தது. அந்த காலகட்டத்திற்குப் பொருத்தமாக அப்போது வெளியான அவரது நாவலின் பெயர் “Destroy, She Said”.

அவரது முதல் குழந்தையின் மரணம் தந்த வலியையும் வேதனையையும் அவர் வாழ்நாள் முழுவதும் சுமந்தளைந்தார். இருப்பினும் அவரது இரண்டாவது குழந்தையின் பிறப்பே அவர் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதற்குப் பிறகே அவர் தன்னை ஒரு கண்மூடித்தனமான பல்துறை வித்தகராக மாற்றிக் கொண்டார். தாய்மை, வீட்டு வேலை, எழுத்து என்று பகலிலும்; மது, கூடுகைகள் என இரவிலும் களமாடினார். வாழ்வில் அத்தனை அனுபவங்களையும் பெற்றுவிடத் துடித்தார். இப்படியான பல நெருக்கடிகளுக்கு இடையே அவரது திருமணமும் முறிந்தது. அவரும் அவரது கணவரும் மணமுறிவு பெற்ற பிறகும் அவர்களது மகனின் படிப்பைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு இடையிலான தொடர்பை முற்றிலுமாக முறித்துக் கொள்ளாமல் இருந்தனர். அதற்குப் பிறகும் டுரஸ் பல காதல்களைக் கொண்டிருந்தார். ஆண்களைக் காதலிக்காமலும் புத்தகங்கள் எழுதாமலும் வாழ முடியாத பெண்ணாக இருந்தார் அவர்.

எழுத்தின் மீதான அவரது ஆர்வம் அபாரமானது. ஆனால் அவரது ஆளுமையை அவரது அதீத சுயவிருப்பும் தன்முனைப்பும் முற்றிலுமாக மறைத்தன. பிறரால் ஆராதிக்கப்படுவதிலும் புகழப்படுவதிலும் அதீத ஆர்வம் கொண்டிருந்தார் டுரஸ். ஆனால் இறுதிவரை அவர் தனது போட்டி மனப்பாண்மையையும் உடைமையுணர்வையும் தக்கவைத்துக் கொண்டார். இதனாலேயே தன் குடும்பத்தினர் பலருடனும் அவருக்குத் தொடர்புகள் அற்றுப் போயின. அதேபோல் அவரது ஆணவப் போக்கிற்காகவே அவரது சக எழுத்தாளர்களாலும் இலக்கிய விமர்சகர்களாலும் டுரஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதன் விளைவாக டுரஸ் தன் வாழ்வில் பல முறை குற்றவுணர்ச்சிக்கும், கழிவிரக்கத்திற்கும், மதுப் பழக்கத்திற்கும் ஆளானார்.

ரெபெக்கா வெஸ்ட் ஒரு நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், பயண எழுத்தாளர், பத்திரிக்கையாளர். 1982இல் செசில் இசபெல் ஃபேர்ஃபீல்டாகப் பிறந்த ரெபெக்கா, ஹென்ரிக் இப்சென்னின் “Rosmersholm” நாடகத்திலிருந்து தனது புனைப் பெயரைப் பெற்றுக்கொண்டார். தனது எழுத்து வாழ்க்கையைப் பெண்களுக்கான வாக்குரிமைச் செயற்பாட்டு வாராந்திரி ஒன்றன் பத்தி எழுத்தாளராகத் தொடங்கினார் ரெபெக்கா. இளமையிலேயே தீவிரப் பெண்ணியச் சிந்தனைகளாலும் சமநலச்சமூகச் சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டார் ரெபெக்கா. அவரது அரசியல் நிலைப்பாடுகளை காலத்திற்கேற்ப மறுசீரமைத்துக் கொண்டாலும் அவரது சமூக நீதி சார்ந்த அக்கரையும் சமத்துவச் சிந்தனையும் அவரிடம் இறுதிவரை நிலைத்திருந்தன. 1913இல் ஹெச் ஜி வெல்சின் “Marriage” நாவலை கடுமையாக விமர்சித்த பிறகே அவரை முதன் முதலாகச் சந்தித்தார் ரெபெக்கா. தன்னை விட இருபத்து ஆறு வயது மூத்த வெல்சுடன் காதல் வயப்பட்டார். அவர்களது உறவு பத்து வருடங்கள் தொடர்ந்தது. அந்த உறவாலேயே 1914 ஆம் ஆண்டு அவரது ஒரே மகனான ஆண்டனி பிறந்தார்.   

ரெபெக்கா வெஸ்ட்

அதற்குப் பிறகு ஒரு ஒற்றைத் தாயாகவே வெஸ்ட் பல்வேறு நாளிதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் விமர்சனக் கட்டுரைகளை எழுதினார். அவர் காலத்தின் முதன்மையான அறிவுஜீவியாகவும் நாவலாசிரியராகவும் விளங்கினார். ஆனால் அவரது தனி வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவோ வெற்றிகரமானதாகவோ இல்லை. வெல்சுடனான அவரது உறவு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருந்தது. மேலும் அதே காலத்தில் வெஸ்ட் வேறு உறவுகளும் கொண்டிருந்தார். ஒரு விதத்தில் வெஸ்டும் லூ ஆந்த்ரேயாஸ் சாலோமேயைப் போன்றவர் தான். ஆண் அறிவுஜீவிகளும் கலைஞர்களும் நிறைந்திருந்த குழுக்களில் தோழியாகவும் காதலியாகவும் பாவிக்கப்பட்ட கூரறிவு மிக்க பெண் அவர்.

அவரது கடைசிக் காலத்தில் அவரது மகனுடனான உறவும் முற்றாக முறியும் நிலையிலேயே இருந்தது. திறன் மிக்க எழுத்தாளரான ஆண்டனி வெஸ்ட் எழுதிய அவரது தாயின் வாழ்க்கை வரலாறு பரவலாக புகழ் பெற்றபோதும் அது ரெபெக்காவை அதிருப்தி கொள்ளவே செய்தது. ரெபெக்கா வெஸ்ட் தன் மகன் உண்மைகளைத் திரிப்பதாகவும் தனிப்பட்ட நினைவுகளைப் பொதுவில் பகிர்வதாகவும் குறிப்பாக தன்னை ஒரு மோசமான தாயாக வளிந்து சித்தரிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாற்றினார். ஆண்டனி வெஸ்டின் தன்வரலாற்று நாவலான “Heritage”ஐ பிரசுரிக்கவிடாமல் தடுப்பதற்காக அவர் மீது வழக்கு தொடுத்தார். ஒரு ஒற்றைத் தாயாக தான் தனியே வளர்த்த மகன், அவனது தன்வரலாற்று நாவலில் தன்னை விடவும் அவனோடு நேரமே செலவிடாத அவன் தந்தையைப் பற்றி உயர்வாக எழுதியிருந்தான் என்பதே அவரை அத்தனை துன்புருத்தியிருக்க வேண்டும். அவர்களுக்கு இடையிலான பரஸ்பர குற்றச்சாட்டுகளும் காயங்களும் இறுதிவரை ஆரவே இல்லை. 1983ஆம் ஆண்டில் ரெபெக்கா வெஸ்ட் இறந்தபோது ஆண்டனி அவருடன் இல்லை. தன் தாயின் மரணத்துக்குப் பிறகே ஆண்டனி வெஸ்ட் தன் தன்வரலாற்று நாவலான “Heritage”ஐப் பிரசுரித்தார். அதில் அவர் தாயைப் பற்றி எழுதிய பகுதிகளில் அவரது துவணி விமர்சனமும் கசப்பும் நிறைந்ததாகவே இருந்தது.

மொழிபெயர்ப்பாளர்: விக்னேஷ் ஹரிஹரன்

“பெண், ஒரு முடிவுற்ற யதார்த்த நிலையினள் அல்ல. அவள் ஒரு ஆகி வருதலே (Becoming). அவளது “ஆகி வரும்” நிலையினைக் கருத்தில் கொண்டே அவளது சாத்தியங்களும் வரையருக்கப்பட வேண்டும்” என்றார் சிமோன் தி பொவா. லூ ஆந்த்ரேயாஸ் சாலோமே, மார்கரிட் டுரஸ், ரெபெக்கா வெஸ்ட் ஆகிய மூவரும் வெவ்வேறு கதைகளையும் வெவ்வேறு சிந்தனைகளையும் கொண்ட தனித்துவமான பெண்களாக இருந்தாலும் அவர்கள் மூவருமே வாழ்க்கையின் அலைக்கழிப்புகளாலும்; தங்களது உடல், காதல், பெண்மை சார்ந்த கேள்விகளாலும், “ஆகி வந்த” பெண்களே.

நம் அனைவரையும் போல் பெண் “ஆகி வரும்” பெண்கள்.              

-தமிழில்: விக்னேஷ் ஹரிஹரன்      

***   

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *