ரீட்டா லெவி மொந்தால்சினி – வெங்கட்ரமணன்
அது 1942-ஆம் ஆண்டு. பிரிட்டன், பிரான்சு உட்பட்ட நேசநாடுகள் பாசிஸ ஆட்சி நடந்துவந்த இத்தாலியின்மீது விமானங்களால் குண்டுகளைப் பொழிந்து கொண்டிருந்தன. வட இத்தாலியின் கலாச்சார மையமான டூரின் நகர் அவர்களுடைய முக்கியமான இலக்குகளில் ஒன்று. இரவுகளில் சைரன்களின் ஒலியைக் கேட்டு நிலவறைகளிலும் பதுங்கு குழிகளிலும் மக்கள் முடங்கிக் கொண்டார்கள். முன்னிரவில் ஏற்பட்ட சேதத்தைப் பகலில் விரைவாக சுத்தம் செய்து குண்டுகளால் காயமடைந்தவர்களின் உடல்களையும் பிணங்களையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது முப்பத்திரண்டு வயதான ரீட்டா கூடையை எடுத்துச் சென்று அருகிலிருந்த பண்ணையிலிருந்து கோழிமுட்டைகளை வாங்கி வருவார். போர்ப் பஞ்சகாலத்தில் முட்டைக்குப் பலத்த தட்டுப்பாடு. கடைக்காரர் முட்டைகள் அவளுடைய குழந்தைகளுக்கு என்றுதான் நினைத்திருந்தார். ரீட்டாவும் அப்படியான ஒரு தோற்றத்தையும் எண்ணத்தையுமே விரும்பினார். உண்மையில் ரீட்டாவுக்குக் குழந்தைகள் கிடையாது, திருமணம் ஆகியிருக்கவில்லை. சொல்லப்போனால் நூற்றுமூன்று வயதில் அவர் இறந்துபோகும்வரை அவருக்கென்று ஒரு குடும்பம் கிடையாது. அவர் முட்டை வாங்கியது சோதனைகளுக்காக. அவருக்குப் பல வருடங்கள் கழித்து நோபெல் பரிசு கிடைத்தது, அந்தக் கண்டுபிடிப்புகளுக்கான விதை இரண்டாம் உலகப்போரின் இடிபாடுகளுக்கிடையே சோதனைக் கூடமாக மாற்றியமைக்கப்பட்ட அவருடைய படுக்கை அறையில் கருக்கொண்டு வந்தது.
ரீட்டா-பாவ்லா இரட்டையர் 22 ஏப்ரில் 1909 அன்று டூரின் நகரில் பிறந்தார்கள். தாயார் அடேல் மொந்தால்சினி (Adele Montalcini) ஒர் ஓவியர்; தந்தை அடாமோ (Adamo Levi) லெவி கணிதர், பொறியியலாளர். ரீட்டாவும் பாவ்லாவும் தாய்-தந்தை குடும்பப்பெயர்களைத் தங்களுடன் இணைத்துக்கொண்டார்கள். ஓரளவுக்கு வசதியான குடும்பம்தான். ரீட்டா லெவி-மொந்தால்சினி (Rita Levi-Montalcini) தந்தையின் வழியில் அறிவியலாளர் ஆனார்; பாவ்லா தாயைப் போல ஒரு கலைஞரானார். ஆரம்பப் பள்ளியில் படிக்கும்பொழுது சக-மாணவர்கள் எல்லோரிடமும் இரண்டு கேள்விகளைத்தான் கேட்பார்கள் – “உன் தகப்பனார் பெயர் என்ன?” “உன் மதம் என்ன?” முதலாவது கேள்விக்கு விடை சுலபம். அந்த விடையான அடாமோ லெவியிடமே இரண்டாவது கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று ரீட்டா கேட்டாள். அதற்கு அவர் “நாங்கள் சுதந்திர சிந்தனையாளர்கள்” என்று சொல்லச் சொன்னார். யூதர்களான ரீட்டாவின் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது எந்த மதக் கட்டுப்பாடுகளையும் திணித்ததில்லை. ரீட்டாவுக்கு முதலில் ஒரு எழுத்தாளராகத்தான் ஆர்வம் இருந்தது. அடாமோ லெவியின் குழந்தைகளை ஒரு செவிலித்தாய் பராமரித்து வந்தார். ரீட்டாவுக்கு அவர் மீது அளவுகடந்த பற்றிருந்தது. தன் செவிலித்தாய் குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு இறந்ததைக் கண்டபிறகு அவருக்கு மருத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்டது. என்னதான் சுய சிந்தனையாளரானாலும் ரீட்டாவின் தந்தை மேற்படிப்பு படிக்க உடனே ஒத்துக்கொள்ளவில்லை. வாழ்காலத்தின் சமூகச் சிந்தனைகளைத் தாண்டுவதற்குத் தன் மனைவியின் வற்புறுத்தல் அவருக்குத் தேவைப்பட்டது. ரீட்டா டூரின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1936 ஆம் ஆண்டு அதி உயர் தகுதியுடன் (summa cum laude) மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பட்டம் பெற்றார்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும்பொழுது ரீட்டாவுக்கு ஜியூஸெப் லெவி (Giuseppe Levi) என்ற பேராசிரியரின் நரப்புச் செல்லியல் (neurohistology) ஆய்வுகளின்மீது ஆர்வம் ஏற்பட்டது. நரம்புத் தொகுதிகள் உருவாகும் விதம் குறித்து புரிந்துகொள்ள வேண்டும் என்ற தேடல் உருவானது. பேராசிரியர் லெவியின் (இவர் ரீட்டா லெவி-மொந்தால்சினியின் உறவினர் இல்லை) உதவியாளராகச் சேர்ந்த ரீட்டா, நரம்புகளை வெள்ளிப் பூச்சுகள் மூலம் நுண்ணோக்கியில் துல்லியமாகக் காணும் முறையைக் கற்றுக்கொண்டார். இந்த முறை கமீலியோ கோல்ஜி (Camillo Golgi) என்ற இத்தாலியரால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு ஸந்தியாகோ ரமோன் யி கஹால் (Santiago Ramón y Cajal) என்பவரால் மேம்படுத்தப்பட்டது. இது நரம்பமைப்புகளையும் செல்தொகுதிகளையும் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது. இந்த நுட்பத்தைக் கொண்டு பேராசிரியர் லெவியின் கீழ் தன் ஆய்வுகளை ரீட்டா துவங்கினார்.
ஆனால் மிகச் சில மாதங்களிலேயே, 1938-ஆம் ஆண்டு இத்தாலியில் முஸோலினியின் பாசிஸக் கட்சி ஜெர்மனியில் ஹிட்லரின் நாட்ஸிகளைப் பின்பற்றி யூதர்கள் உயர்பதவிகளை வகிக்கத் தடைவிதித்தது, குறிப்பாகக் கல்வி நிறுவனங்களில் ஆராச்சியாளர்களாக இருந்த யூதர்கள் வேலை இழந்தார்கள். ஜெர்மானிய யூதர்களைப் போல, இத்தாலிய யூதர்களும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பிற நாடுகளில் தஞ்சமடையத் தொடங்கினார்கள். ரீட்டா பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகர நரம்பியல் நிறுவனத்தில் சேர்ந்தார். ஆனால் மிகச் சில மாதங்களிலேயே பெல்ஜியம் ஜெர்மானியர்களின் கட்டுப்பாட்டுக்கு வர, மீண்டும் தன் உயிருக்குப் பயந்து இத்தாலிக்கே திரும்ப வந்தார்.
முட்டைக் கரு வளர்ச்சியின்பொழுது கோழிக்குஞ்சாக உருவெடுக்கும் கருவின் முதுகெலும்பிலிருந்து தோன்றும் நரம்புகள் எப்படி தாங்கள் இறுதியாகப் பரவவேண்டிய கால்களையோ, சிறகு நுணியையோ சென்றடைகின்றன என்ற கேள்வி அவருக்கு மிகவும் ஆர்வமூட்டியது. அதற்கு முக்கிய காரணம் அவர் சமீபத்தில்தான், 1940-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்டர் ஹாம்பர்கர் (Viktor Hamburger) என்ற பேராசிரியரின் ஆய்வுக்கட்டுரையை வாசித்திருந்தார். அவர் கருவின் துவக்க காலத்தில் தோன்றும் தண்டுவடத்தில் சற்றே உருக்கொண்டு வரும் புறப்பகுதிகளை வெட்டியெடுத்தார். அதாவது, சிலுவையின் நடுவில் கிடைமட்டமாக இருக்கும் சிறு கட்டையைப் போன்ற, (அல்லது ஆங்கில எழுத்து ‘f’ என்பதில் உள்ள சிறிய நடுக்கோட்டைப் போன்ற) தண்டுவடத்திலிருந்து கிளைக்கும் நீட்சி, சிறகு எலும்புகளின் துவக்கம் என்றால், அந்த குறுக்குக்கோட்டின் நுணிகளை முழுவதுமாக சிதைத்து, சிறகை வளரவிடாமல் செய்வது. அந்த நிலையில் தண்டுவடத்தின் அந்தப் பகுதியில் நரம்புத் திரள்கள் (ganglia)) ஒரு சிறு தானியத்தைப் போலச் சிறுத்துப் போகும், மேற்க்கொண்டு வளராது. இந்தச் சிதைவுக்குக் காரணம் புற உறுப்பிலிருந்து (இங்கே சிறகிலிருந்து) செல்கள் நரம்புகளாக உருவெடுக்கத் தேவையான தூண்டல் காரணி கிடைக்காததே, என்று ஹாம்பர்கர் தீர்மானித்தார். அதாவது உருவெடுத்துவரும் உயிரியின் புறப்பகுதிகள் மையத்திலிருக்கும் தண்டுவட நரம்பு மண்டலத்தின் உருவாக்கத்தைத் தீர்மானிக்கின்றன என்பது அவர் முடிவு. ஆனால் இந்தச் சோதனை இன்னும் தீர்க்கமாக, பல படிகளில் ஆராயப்பட வேண்டும் என்று ரீட்டா லெவி-மொந்தால்சினி க்குத் தோன்றியது.
இந்த ஆய்வை அவர் முன்னெடுக்க முனைந்த நாட்களைத்தான் நாம் துவக்கத்தில் பார்த்தோம். ஒரு யூதராக வளர்க்கப்படாவிட்டாலும் யூத குடும்பத்தில் பிறந்த ரீட்டாவுக்கு இத்தாலிய பல்கலைக்கழங்களில் வேலை சாத்தியமில்லை. அதற்கும் மேலாக, அந்தக் காலங்களில் பெண்கள் பல்கலைக்கழக வேலையைப் பெறுவது கொஞ்சமும் எளிதில்லை. அது போர்க்காலம்; நேச நாடுகள் டூரின் நகர் மீது குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தன. அவற்றுக்கிடையே ரீட்டா தினமும் மிதிவண்டியில் சென்று நகருக்குப் புறத்திலிருந்த கோழிப்பண்ணையிலிருந்து முட்டைகளை வாங்கி வருவார். அவருடைய படுக்கை அறை இப்பொழுது ஆய்வகமாக மாறியது. பேராசிரியர் லெவியும் ஒரு யூதர் என்பதால் அவருக்கும் வேலை பறிபோயிற்று, 1941-ல் அவர் ரீட்டாவின் வீட்டில் அவருடைய ஆய்வுகளுக்கு உதவியாளராக மாறினார். ரீட்டாவின் சோதனைகளுக்குத் தேவையான அடைகாப்புச் சாதனத்தையும் (incubator), அதன் வெப்பக் கட்டுப்பாடுகளையும் அவருடைய சகோதரர் வடிவமைத்துத் தந்தார். சாதாரண தையல் ஊசிகளைப் பட்டைதீட்டி முட்டைக்கருவின் பகுதிகளை வெட்டியெடுக்கும் பல்வேறு அளவு மெல்லிய அறுவைக்கத்திகளை (scapels) ரீட்டாவே செய்துகொண்டார். ஆனால் கலாச்சார மையமான டூரின் நகர்மீது 1942-ஆம் ஆண்டு நேசநாடுகளின் குண்டுப் பொழிவு அதிகரிக்கத் தொடங்கியது. உயிரைக் காப்பாறிக்கொள்ள அடாமோ லெவியின் குடும்பம் இப்பொழுது தென் இத்தாலியின் கிராமப்புறத்தில் இருந்த அவர்களின் சிறிய விடு ஒன்றுக்கு இடம்பெயர்ந்தது. அந்த நிலையிலும் சோதனைக் கருவிகளைத் தன்னுடன் எடுத்து வந்த ரீட்டா, அவ்வீட்டின் நிலவறையில் தனக்கான சோதனைக் கூடத்தை மீண்டும் உருவாக்கிக் கொண்டார்.
முட்டைகளின் கருக்களை அடைகாக்கும் கருவியில் வளர்த்தார். மிகக் கவனமாக கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் அவற்றின் தண்டுவடப் பகுதியை வெட்டியெடுத்தார். கமீலியோ கோல்ஜி வடிவமைத்த வெள்ளிப் பூச்சு முறையின் மூலம் பல்வேறு கட்டங்களில் அவற்றை நுண்ணோக்கி கொண்டு கவனமாக ஆராய்ந்தார். கடுமையான போருக்கு நடுவே இடைவிடாமல் தன் சோதனைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். அந்தச் சோதனைகளில், வளரும்பொழுது தண்டுவடத்தில் சாதாரணமான அளவில் நரம்புச் செல்கள் கனிசமாக உருவாகின்றன, ஆனால் அவை சிதைக்கப்பட்ட தண்டுவடத்தின் பகுதியை அடையும்பொழுது செயலிழந்து சிதைந்துபோகின்றன என்பது அவருக்குத் தீர்க்கமாகப் புலப்பட்டது. அதாவது ஹாம்பர்கர் சொல்வதைப் போல புறக்காரணிகளின் தூண்டுதல் இல்லாததால் நரம்புகள் உருவெடுப்பதில்லை என்பது தவறு. நரம்புகள் நிச்சயம் தோன்றுகின்றன, ஆனால் தொடர்ந்து வளரத் தேவையான ஊட்டம் தரும் காரணி ஏதுமில்லாததால் அவை அழிந்துபோகின்றன. இந்தச் சோதனையின் முடிவுகளை லெவி-மொந்தால்சினி உடனே பதிப்பிக்க முயன்றார். ஆனால் இத்தாலியில் யூதர்கள் அறிவியல் கட்டுரைகளைப் பதிப்பிக்கத் தடையிருந்தது. எனவே, பெல்ஜியத்திலிருந்து வெளிவரும் ஒரு சிறிய அறிவியல் சஞ்சிகையில் அதைப் பதிப்பித்தார். போர் தணிந்துவந்த நிலையில் 1944-ல் ரீட்டா காயமுற்றவர்களுக்கான மருத்துவச் சேவையிலேயே முழு நேரத்தையும் செலவிட வேண்டியிருந்ததால் அவருடைய சோதனைகள் தடைப்பட்டன.

ரீட்டா லெவி-மொந்தால்சினியின் சோதனை முடிவுகள் அமெரிக்காவில் பேராசிரியர் ஹாம்பர்கருக்கு வாசிக்கக் கிடைத்தன. அவர் ரீட்டா தன்னைக் காட்டிலும் இன்னும் அதி கவனமாகவும் நுணுக்கமாகவும் ஆய்வுகளைச் செய்திருப்பதை அறிந்தார். உடனே அவரைத் தொடர்புகொண்டு அமெரிக்காவில் தன் ஆய்வகத்துக்கு வந்து சோதனைகளைத் தொடர அழைப்பு விடுத்தார். போரில் பலத்த சேதமடைந்திருந்த இத்தாலியில் அறிவியல் ஆராய்ச்சிகள் உடனடியாகச் சாத்தியமில்லை என்பதால் ரீட்டாவும் அவர் அழைப்பை ஏற்று மிஸிஸிபி மாநிலத்தின் செயிண்ட் லூயிஸ் நகர் வாஷிங்டன் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். அப்பொழுது வெறும் ஆறு மாதங்களுக்கு மாத்திரமே அங்கிருந்துவிட்டு உடனடியாக டூரின் நகருக்குத் திரும்ப வேண்டும் என்பது அவர் முடிவு. ஆனால் நடந்ததென்னவோ அங்கேயே அவர் 31-ஆண்டுகள் தங்கினார்.
தொடர்பான ஆய்வு ஒன்றை ஹாம்பர்கரின் இன்னொரு மாணவர் எல்மர் புக்கெர் (Elmer Bueker) என்பவர் செய்து வந்தார். அதில் வளர்ந்து வரும் கோழிக்குஞ்சுக் கருவில் எலியின் புற்றுநோய்ச் செல்களை உள்ளிட்டால் அங்கே நரம்பு இழைகள் மிக அதிகமாக வளர்வது தெரியவந்தது. புற்றுச் செல்களின் கூடுதல் புறப்பரப்பு அதிக நரம்பு இழைகளை உருவாக்க இடமளிக்கின்றன என்பது புக்கெரின் முடிவு. ஆனால் இந்தச் சோதனையும் இன்னும் தீர்க்கமாக, பல்வேறு படிநிலைகளில் ஆராய்ந்து அதிக நரம்பு இழைகள் எப்படி உருவெடுக்கின்றன என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று ரீட்டாவுக்குத் தோன்றியது. புற்றுச் செல்கள் நரம்பு வளர்ச்சிக்கு உதவும் ஏதோவொரு வேதிப்பொருளைக் கொண்டிருக்கக் கூடும், அதுவே அதீத நரம்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது என்ற உள்ளுணர்வு அவருக்கு இருந்தது. ப்ருக்கரைப் போல நேரடியாக புற்றுச் செல்களை முட்டைக்கருவுக்குள் செலுத்தாமல், அவற்றை மிகக் கவனமாக கருவின் தோலுக்கு வெளியே, மிக அருகில், வைத்தார். இப்பொழுது நரம்புகள் நேரடியாக புற்றுச் செல்களின் மீது வளரப்போவதில்லை. மாறாக, புற்றுச் செல்களில் உள்ள வேதிப்பொருள்கள் மெல்லிய தோலில் ஊடுபரவி கருவை அடையக் கூடும். ஆனால் இந்தத் துல்லியமான சோதனையைச் செய்யத் தேவையான கருவிகள் ஹாம்புர்கரின் ஆய்வகத்தில் இல்லை. இத்தாலியில் ரீட்டாவுக்கு ஆசிரியராக இருந்த ஜியுஸெப் லெவியின் இன்னொரு முன்னாள் மாணவர் ஹெர்த்தா மேயர் (Hertha Meyer) பிரேஸிலின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் தேவையான கருவிகளைக் கொண்ட ஆய்வகத்தை வைத்திருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு பிரேஸிலில் மேற்கொண்டு ஆய்வை நடத்த ரீட்டா முடிவெடுத்தார்.
ஆனால் பிரேஸிலில் சோதனைக்குத் தேவையான புற்றுச் செல்கள் கிடைக்காது. எனவே இரண்டு எலிகளுக்குப் புற்றுநோயை உருவாக்கி அவற்றைத் தன் கைப்பையில் வைத்து ரியோ நகருக்குக் கடத்தி வந்தார். நல்லவேளையாக விமான நிலையங்களில் யாரும் எலிகளைப் பறிமுதல் செய்யவில்லை. ரியோவில் திட்டமிட்டபடி கருவுக்கு வெளியே புற்றுச் செல்களைச் செலுத்திய 24-மணி நேரத்தில் கருவின் மையத்திலிருந்து கற்றையாக நரம்பு இழைத் தொகுதிகள் (nerve fibre bundles) வளர்வதை நுண்ணோக்கியில் பார்க்க முடிந்தது. இது சந்தேகத்துக்கு இடமின்றி நரம்பு வளர்ச்சிக்கு உறுதுணையான காரணியின் தேவையை நிரூபித்தது. அடுத்த கட்டம் அந்தக் காரணியின் வேதிப்பொருள் என்ன என்று கண்டுபிடித்தாக வேண்டும்.

படம் 3 வளர்நிலை முட்டைக் கருவில் நரம்பு வளர்ச்சிக் காரணியைச் செலுத்த கருமையத்திலிருந்து அடர்த்தியான கற்றைகளாக நரம்பு இழைத் தொகுதிகள் வளர்கின்றன என்று ரீட்டா லெவி-மொந்தால்சினி பிரேஸில் நாட்டில் செயத சோதனைகளில் நிரூபணமாகியது. இது நரம்பு வளர்ச்சிக் காரணியின் முக்கியத்துவத்தை உறுதிசெய்கிறது.
ரீட்டா பிரேஸிலில் இருந்து திரும்ப ஹாம்பர்கர் ஆய்வகத்துக்கு வந்தபொழுது அங்கே ஸ்டான்லி கோஹன் (Stanley Cohen) என்ற புதிய மாணவர் சேர்ந்திருந்தார். அவர் திறமையான உயிர்வேதியியலாளர் (biochemist). அவரும் ரீட்டாவும் இணைந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஆய்வுகளைத் தொடர்ந்தனர். முடிவில் அவர்கள் நரம்பு வளர்ச்சிக் காரணி (Nerve Growth Factor) குறித்த கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்கள். முதலில் நரம்பியல் ஆய்வாளர்கள் இந்தக் கண்டுபிடிப்புகளை நம்பவில்லை. தொடர்ச்சியான சோதனைகளில் இதுபோன்ற நரம்பு வளர்ச்சிக் காரணிகள் பாம்பின் விஷத்திலும், எலிகளின் உமிழ்நீரிலும்கூட இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்தார்கள். இந்தக் கூடுதல் கண்டுபிடிப்புகள் வளர்ச்சிக் காரணியின் இருப்பை உறுதிப்படுத்துகின்றன என்று அவர்கள் நம்பியிருக்க, இந்தச் சோதனைகள் விளையாட்டுத்தனமானவை, பாம்பிலும் எலியிலும் இப்படி எளிதாகக் கிடைக்கும் ஒரு வேதிப்பொருள் எப்படித் துல்லியமான முறையில் நரம்பு வளர்ச்சிக்கு உதவும் எனப் பிற நரம்பியல் நிபுணர்கள் ஒதுக்கித் தள்ளினார்கள்.
எதிர்ப்புகளால் ரீட்டா கொஞ்சமும் தளரவில்லை, மாறாக இன்னும் துல்லியமாகக் கண்டறிய வேண்டிய ஆர்வத்தை ஊட்டின. 1959-ஆம் ஆண்டு அவர் நரம்பு வளர்ச்சியைத் தடுக்கும் எதிர்-சீரத்தையும் (antiserum) கண்டுபிடித்தார். இது நரம்பு வளர்ச்சி மற்றும் வளர்ச்சிச் குறைவை பல்வேறு வேதிப்பொருட்கள் தீர்மானிக்கின்றன என்று இன்னும் கொஞ்சம் உறுதிப்படுத்தியது.
கோஹன் வேறு சில சோதனைகள் வாயிலாகப் புதிதாகப் பிறந்த எலிக்குஞ்சின் கண்களைத் திறக்க உதவும் புரத்த்தை அடையாளம் கண்டு பிரித்தெடுத்தார். இது நரம்பு வளர்ச்சியைப் போலவே புறத்தோலின் வளர்ச்சிக்கும் இன்னொரு வேதிப்பொருள் காரணியாக இருக்கிறது (புறத்தோல் வளர்ச்சிக் காரணி, epidermal growth factor) என்று விளக்கியது. 1971-ஆம் ஆண்டு ரீட்டாவின் மாணவர் ரூத் ஆஞ்ஞலேட்டியும் (Ruth Angeletti) சகஆய்வாளர் ராஃப் ப்ராட்ஷாவும் (Ralph Bradshaw) வளரும் எலியின் சுரப்பி ஒன்றிலிருந்து நரம்பு வளர்ச்சிக் காரணியைப் பிரித்தெடுத்து அதன் மூலக்கூறு அமைப்பைத் துல்லியமாகக் கண்டுபிடித்து வெளியிட்டார்கள். இந்தச் சோதனைகள் நரம்பு வளர்ச்சிக் காரணியின் இருப்பைச் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்ததுடன் அது செயல்படும் விதத்தையும் மிகச் சரியாக விளக்கின. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு ரீட்டாவும் கோஹனும் தொடர்ச்சியாக, முழுமையான நம்பிக்கையுடன் செயற்பட்டு தங்கள் கண்டுபிடிப்பை உறுதிசெய்ய வேண்டியிருந்தது. இதற்கான முழுமையான அங்கீகாரமாக 1986-ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் உடற்ச்செயற்பாட்டியலுக்கான நொபெல் பரிசு இருவருக்குமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது. ரீட்டா லெவி-மொந்தால்சினி மருத்துவத்திற்கான நொபெல் பரிசு பெற்ற நான்காவது பெண்மணி.

அமெரிக்காவின் ஆராய்ச்சிச் சூழல் ரீட்டாவுக்கு மிகவும் பொருந்தியிருந்தது. குறிப்பாக, தன் சோதனைகளை மறுதலித்த ரீட்டாவுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த பேராசிரியர் விக்டர் ஹாம்பர்கர், இணைந்து பல ஆய்வுகளை நடத்திய உயிர்வேதியியலாளர் ஸ்டான்லி கோஹன் உள்ளிட்ட பல நல்ல ஆய்வாளர்களும் நண்பர்களும் அவருக்கு மிக நெருக்கமாக இருந்தார்கள். ஆனாலும் 1960-வாக்கில் நரம்பு வளர்ச்சிக் காரணி குறித்த எல்லாவித சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் ஆய்வுகளை முடிக்கும் சமயத்தில் ரீட்டாவுக்கு இத்தாலிக்குத் திரும்ப வேண்டும், தன் குடும்பத்துடன் இணையவேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டது. அப்பொழுது அவருக்கு ஐம்பத்தொரு வயது. இரண்டாம் உலகப்போரிலிருந்து மீண்டு வளர்ந்து வரும் இத்தாலில் அவருக்கான நல்ல ஆய்வுக்கூடம் தேசிய ஆராய்ச்சிக் கழகத்தில் அமைத்துத் தரப்பட்டது. அங்கே பல இளைஞர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, அவர் நல்ல ஆசிரியராகவும், முன்மாதிரியாகவும் இன்னும் ஐம்பது வருடங்களுக்கு வேலை செய்தார். ஆனாலும் அமெரிக்காவிலும் தன் ஆய்வுக்கூடத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு அங்கும் திறமையான இளம் விஞ்ஞானிகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். அந்தக் காலங்களில் காலை ஏழுமணிக்கெல்லாம் ஆய்வகம் வந்து தன் மாணவர்களிடம் முந்தைய நாள் சோதனைகளைப் பற்றி விவாதிப்பார். அவருடைய மாணவிகளுள் முக்கியமான ஒருவரான ரூத் ஆஞ்ஞலேட்டி, “அவரைப் போன்ற மிகத்திறமையான, ஊக்கமிகுந்த, கருணை பொழியும் ஒருவரிடம் பணியாற்ற, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள, நான் மிகவும் அதிருஷ்டம் கொண்டிருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார். மாணவர்கள் அவரைப் ‘பேராசிரியர்’ என்று அழைப்பதைக் காட்டிலும் ‘ரீட்டா’ என்பதையே விரும்பினார். அவரை மரியாதையுடன் ‘நீங்கள்’ (lei) என்று சொல்வதற்குப் பதிலாக நெருக்கத்துடன் ‘நீ’ (tu) என்றே விளிக்க வற்புறுத்தினார்.
ரீட்டாவுக்கும் கோஹனுக்கும் நொபெல் பரிசு வழங்கப்பட்டபொழுது அவருடைய நோபெல் உரையில் ஸ்டான்லி கோஹனின் ஆராய்ச்சித் திறமைக்கும் இத்தாலியில் தனக்கு நுண்ணோக்கி நுட்பங்களைக் கற்றுத்தந்த ஜியூஸெப் லெவிக்கும் நன்றி சொன்ன ரீட்டா, அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அவருக்கு முழு ஆதரவு தந்த விக்டர் ஹாம்பர்கரின் ஆரம்பகால ஆய்வுகள் தன் நோபெல் பரிசுக் கண்டுபிடிப்பை எப்படி வழிநடத்தின என்று கொஞ்சம்கூடச் சொல்லவில்லை. நொபெல் பரிசு அறிவிக்கப்பட்ட பொழுதே அது ஹாம்பருக்கும் பகிர்ந்து அளித்திருக்கப்பட வேண்டும் என்ற சலசலப்பும் கூட இருந்தது. அதில் எந்த நியாயமும் இல்லை. ஹாம்பர்கரின் ஆரம்பகால ஆய்வுகள் நரம்பு வளர்ச்சி குறித்த சில புரிதல்களை உருவாக்கியிருந்தாலும், அவை தவறானவை என்று ரீட்டா லெவி-மொந்தால்சினியால் நிரூபிக்கப்பட்டன. ஆனால் இருபது வருடங்களுக்கு மேலாக இவர்கள் இருவரும், கிட்டத்தட்ட தினசரி, தொடர்ந்து தங்கள் சோதனைகளையும் கருத்துக்களையும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ரீட்டாவின் கண்டுபிடிப்புகளை ஹாம்பர்கருடனான உரையாடல்கள் வழிநடத்தின என்பது மறுக்க முடியாத உண்மை. அவரை முழுவதுமாக ஒதுக்கியது நூறு வயதுக்கு மேல் வாழ்ந்த ஹாம்பர்கருக்கும் ரீட்டாவுக்கும் இடையே மனக்கசப்பை உருவாக்கியது.
இந்த அமெரிக்கச் சலசலப்புகள் இத்தாலியில் அவருக்கு இருந்த மதிப்பைச் சற்றும் பாதிக்கவில்லை. சொல்லப்போனால் நொபெல் பரிசுக்குப் பிறகு அவர் இத்தாலியின் தேவதையாகவே மாறிப்போனார். அவருடைய ஆய்வகம் மாபெரும் வளர்ச்சியைக் கண்டது. அடிப்படையில் சமதர்மம் விழையும் சோஷலிஸ்டான ரீட்டா, 92-ஆவது வயதில் 2001-ஆம் ஆண்டில் இத்தாலியத் தலைவர் கார்லோ அட்ஸேல்யோ ச்யாம்பியால் (Carlo Azeglio Ciampi) இத்தாலிய மேலவையின் வாழ்நாள் அங்கத்தவராக நியமிக்கப்பட்டார். இது ஒரு கௌரவப் பதவி என்று நம்பியிருந்த பலருக்கும் பலத்த ஏமாற்றம். முதிர்ந்த வயதிலும் தனக்கு அளிக்கப்பட்ட வேலையை, பல நேரங்களில் அது சலிப்பூட்டுவதாக இருந்தபோதும், அவர் மிக முக்கியமாகக் கொண்டு அரசு விவாதங்களில் பங்கேற்றார். குறிப்பாக அறிவியல் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், அரசியல் நேர்மை போன்ற விவாதங்களில் தொடர்ச்சியாகப் போராடினார். 2006-ஆம் ஆண்டு அப்பொழுதைய பிரதமர் ரொமானோ ப்ராடியின் (Romano Prodi) இடதுசாரி அரசு வரவுசெலவு விவாத்தில் தோல்வியடைந்து ஆட்சியை இழக்கும் நிலை உருவானது. இந்த நிலையைச் சாதுர்யமாகப் பயன்படுத்திக்கொண்ட ரீட்டா, ப்ராடியிடம் அறிவியலுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடுக்கான உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டு சமநிலையை முறிக்கும் வகையில் தன் ஒற்றை வாக்கை அளித்து அரசைக் காப்பாற்றினார். இது வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவர் ஃப்ரான்செஸ்கோ ஸ்டொரெஸ்க்குப் (Francesco Storace) பலத்த எரிச்சலைத் தந்தது. ஊன்றுகோல் தேவைப்படும் வயதில் ரீட்டா அரசாங்கத்தின் ஊன்றுகோலாக இருக்கிறார் என்று கேலி செய்தார்.

*

படம் 5b: ரீட்டாவின் 102-வது பிறந்தநாளையொட்டி Molecular Neurobiology சஞ்சிகை Synapses to Neurodegeneration என்ற தலைப்பில் வெளியிட்ட சிறப்பு மலர். இந்த இதழில் ரீட்டாவின் கண்டுபிடிப்புகளின் முன்னெடுப்பாக நவீன நரம்பியல், மூளை வளர்ச்சி, மூப்படைதல், மற்றும் நரம்புச் சீரழிவு மருத்துவத்தின் வளர்ச்சிகளை விவரிக்கும் பல கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன.
“போர்க்கலை முழுதுமாக ஆண்களால் வடிவமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு, வழிநடத்தப்படுகிறது. ஏவாளின் வழித்தோன்றிய பெண்கள் அமைதியை உருவாக்கி, பேணி, வளர்க்கும் கடினமான பொறுப்பைச் செய்துவருகிறார்கள்”
– ரீட்டா லெவி-மொந்தால்சினி
டி.என்.ஏ கண்டுபிடிப்புக்கான நொபெல் பரிசு பெற்ற அமெரிக்க சூப்பர் ஸ்டார் விஞ்ஞானி வாட்ஸன் பல சந்தர்ப்பங்களில் நிறவெறிக் கருத்துகளைச் சொன்னவர். ஒருமுறை “வெள்ளையர்களுடன் ஒப்பிடும்பொழுது கருப்பர்கள் அறிவு-ரீதியாகத் தாழ்ந்தவர்கள்” என்ற கூற்றை (தவறான) மரபியல் விளக்கங்களுடன் ஆதரித்துப் பேசினார். அதைக் கேட்ட ரீட்டா லெவி-மொந்தால்சினி “இனவித்தியாசம் என்று ஒன்றும் கிடையாது, ஆனால் இனவெறியர்கள் நிச்சயம் உண்டு” என்று கடுமையாகச் சாடினார். தன் பெயரில் உதவி அமைப்பை உருவாக்கிய அவர், கிட்டத்தட்ட 6,000 ஆப்பிரிக்கப் பெண்கள் ஐரோப்பாவின் பல்கலைக்கழங்களுக்கு வந்து செவிலியர் மற்றும் மருத்துவர் படிப்புகளை மேற்கொள்ள உதவித்தொகைகளை வழங்கினார். சிறுவயதிலிருந்தே அவருக்கு இலக்கியத்தின்மீது ஆர்வம் இருந்தது. ஸ்வீடன் நாட்டின் செல்மா லாகர்லாஃப் (Selma Lagerlöf) போன்ற எழுத்தாளராக வேண்டும் என்பது அவர் முதற்கனவு. எமிலி ப்ராண்டேயின் (Emily Brontë) ‘வுதரிங் ஹைட்ஸ்’ அவருக்குப் பிடித்தமான புத்தகம். ஆனால் அந்த நாவலில் வருவதைப் போன்று அவர் காதல் வயப்பட்டதேயில்லை. மருத்துவக் கல்லூரியில் படிக்கும்பொழுது மிகச் சில நாட்களுக்கு ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருந்தார். அதைத் தவிர வாழ்நாள் முழுவதும் அவர் தனியளாகவே வாழ்ந்தார். இதைப் பற்றி ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட பொழுது, “இரண்டு பேரும் மிக புத்திசாலிகளாக இருந்தபோதும் ஒருவரின் வெற்றியை மற்றொருவர் பொறாமையுடனும் விசனத்துடனும்தான் பார்க்கமுடியும்” என்று சொன்னார். அவர் வாழ்நாள் முழுவதையும் நரம்பியல் ஆய்வுக்காகவும், தன் மாணவர்கள், பெண்கள், நிறவெறியால் தாழ்த்தப்பட்ட ஆப்ரிக்கர்களின் மேம்பாட்டிற்க்காக மாத்திரமே செலவிட்டார். இத்தாலிய மொழியில் இருபது அறிவியல் பரப்புரை மற்றும் பெண் முன்னேற்றம் குறித்த நூல்களை எழுதியிருக்கிறார். அவருக்கு அசாத்தியப் பொறுமையும் போராட்ட குணமும் ஒருங்கே வாய்த்திருந்தது. “பசியானவர்களைப்போல முழுவதும் நிரம்பியவர்கள் ஒருபோதும் உணவினால் திருப்தியடைவதில்லை. பெண்கள் எப்பொழுதுமே பசியுடன் இருக்கிறார்கள் ஏனென்றால், அவர்களுக்கான சமூக, அரசியல், அறிவியல் வாழ்வை ஆண்கள் காலம்காலமாக மறுத்தே வந்திருக்கிறார்கள்” என்று சொல்வார்.

அவருடைய இறுதி தசாப்தத்தில் இத்தாலியில் மாபெரும் முதல்தர நரம்பியல் ஆய்வுக்கழகத்தை நிறுவவேண்டும் என்ற ஆவல் அவருக்கிருந்தது. தன் 93-ஆவது வயதில் அவர் ஐரோப்பிய மூளை ஆய்வுக்கழகம் (European Brain Research Institute (EBRI)) என்ற மாபெரும் நிறுவனத்தைத் துவக்கினார். இதற்குத் தேவையான அரசாங்க உதவிகளைப் போராடிப் பெற்றார். இது இப்பொழுது ஐரோப்பாவின் முக்கிய மூளை மற்றும் நரம்பியல் ஆய்வுக்கூடங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

மனித உயிர் ஒற்றைச் செல் பிளவுண்டுப் பெருகுவதிலிருந்து துவங்குகிறது. இந்தப் புதிய செல்கள் மீண்டும் பிளவுருகின்றன, பல்கிப் பெருகுகின்றன. சிறிது சிறிதாக இவை தோல், எலும்பு, நரம்பு, திசு எனப் பல்வேறு தரப்பட்ட செல்களாக மாற்றமடைகின்றன. நரம்பியல் வரலாற்றில் முதல் முறையாக நரம்புகளின் தோற்றம் பற்றிய புரிதல் ரீட்டா லெவி-மொந்தால்சினி, ஸ்டான்லி கோஹன் ஆய்வுகளால் நமக்குக் கிடைத்தன. இது இன்றளவும் பல நரம்புச் செயற்பாடுகள், செயலிழப்புகள், அல்ஸைமர் போன்ற நரம்பியல் நோய்கள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்த ஆய்வுகளின் அடிநாதமாக இருக்கின்றது. தன் 103-ஆம் வயதில் இறக்கும் வரை ரீட்டா அன்றாடம் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார், சமதர்மத்திற்காகப் போராடிக்கொண்டே இருந்தார்.
“வாழ்க்கை மரணத்துடன் முடிவதில்லை. நீங்கள் பிறருக்குத் தருவன எப்பொழுதும் நிலைத்திருக்கும். அழியாமை என்பது உடலில் இல்லை; உடல் ஒருநாள் அழிந்துபோகும். எனக்கு மரணம் குறித்த கவலையோ பயமோ இல்லை. அது ஒரு பொருட்டே இல்லை… மற்றவர்களுக்கு விட்டுச் செல்லும் செய்திதான் முக்கியம். அதுவே அழிவின்மை”
–ரீட்டா லெவி-மொந்தால்சினி
***
மேலதிகத் தகவல்களுக்கு:
- In Praise of Imperfection: My Life and Work, (translated from Elogio dell’imperfezione), Levi-Montalcini, Rita, Basic Books, New York (1988).
- பேராசிரியர் விக்டர் ஹாம்பர்கரின் வாழ்க்கை, அறிவியல் ஆய்வுகள், மற்றும் பெற்ற விருதுகள் குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகம் அமைத்திருக்கும் தகவல் தளம்: https://wayback.archive-it.org/4359/20200924163622/http://omeka.wustl.edu/omeka/exhibits/show/vhamburger
- The Nobel Prize in Physiology or Medicine 1986, awarded jointly to Stanley Cohen and Rita Levi-Montalcini “for their discoveries of growth factors” https://www.nobelprize.org/prizes/medicine/1986/summary/
- Levi-Montalcini Foundation: https://www.levimontalcinifoundation.org/
- Effects of mouse tumor transplantation on the nervous system, Levi-Montalcini R. Annals of the New York Academy of Science, Vol. 55, Page 330-44 (1952).
- Destruction of the sympathetic ganglia in mammals by an antiserum to a nerve-growth protein. Levi-Montalcini R, Booker B. Proceedings of National Academy of Science USA. Vol. 46, Page 384-91 (1960).
- Isolation of a mouse submaxillary gland protein accelerating incisor eruption and eyelid opening in the new-born animal. Cohen S, Journal of Biological Chemistry, 1962 Vol. 237, Page 1555-62 (1962).
***
