விதையின் சிறகுகள் – கமலதேவி

(மமங் தாய்-ன் கருங்குன்றம் நாவலை முன்வைத்து)

காட்டுவாசிகளாக இருந்த நாம் இடம்பெயர்ந்து நகர்ந்து நகர்ந்து ஆற்றங்கரைகளோரம் குடியிருப்புகளை அமைத்து அவை ஊர்கள்  நகரங்களாகி, நாடுகளாகி, அரசுகள் உருவாகி வந்தது என்பது மானுட வரலாற்றின் அடிப்படையான சித்திரம். இதில் அதிகம் இடம்பெயராமல் நின்று போன சமூகங்கள் பழங்குடிகளாகவே இன்றும் கூட இருக்கிறார்கள். அதற்கு அடிப்படையான காரணம் இடபெயர்ச்சிக்கான வாய்ப்புகள். வெளியேறி செல்லமுடியாத நில அமைப்பும் மற்றவர்கள் ஊடுருவ முடியாத தன்மையும் எண்ணிக்கையில் குறைவான மக்களும், அவர்களின் மனநிலையும் இதற்கு அடிப்படையான காரணங்களாக இருக்கும்.

காட்டிலிருந்து ஒதுங்கி தனக்கான குடிருப்புகளை உருவாக்கிக்கொள்வதும், தங்களை பாதுகாத்துக் கொண்டு, தங்கள் எல்லைகளை வகுப்பதும் எப்போதுமே நமக்கு சவாலாக இருந்திருக்கிறது.

இத்தனையும் எதற்காக என்று பார்த்தால் மனிதனுக்கு பாதுகாப்பான, நிம்மதியான, வாழ்க்கைக்கான கனவு எப்போதுமே உண்டு என்று புரிகிறது. மனிதனால் உண்டு, பெற்று, இறப்பது என்ற வழக்கத்திற்கு அப்பால் ஏதோ ஒன்று வேண்டியிருக்கிறது. ஒரு சிங்கத்தை போலவோ மானை போலவோ அன்றி வேறெதுவோ அவனுக்கு தேவையாய் இருப்பதை அவனுடைய குகை ஓவியங்களில் இருந்தும், மொழியை உருவாக்கிக் கொண்டதிலிருந்தும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதற்கு அவனுக்கு பாதுகாப்பான வாழ்க்கை தேவைப்படுகிறது.

அப்படி உலகலாவிய அளவில்  நன்கு உருவாகி வந்த வலுவான அரசும், பழங்குடிகளாகவே ஒரு மலை பள்ளத்தாக்கில் வசிக்கும் சில குழுக்களுக்கும் இடையேயான கதையே அருணாச்சலபிரதேசத்தை சேர்ந்த எழுத்தாளரான மமாங் தய் எழுதிய கருங்குன்றம் என்ற நாவல்.

இந்தக்கதையை ஊடுருவ முயற்சிக்கும் அதிகாரத்திற்கும், ஊடுருவலை அனுமதிக்காத மக்களுக்கும் இடையேயான  துவந்தம் என்று சொல்லலாம். மல்லுக்கு நிற்பது என்பது துவந்தம் என்ற சொல்லின் கிராமிய வழக்கு. தீவிர எதிர்ப்பும் தடுத்தலுமாக இருப்பதை மல்லுக்கு நிற்றல் என்று சொல்லலாம். அப்படி ஒரு நிலை இந்த நாவலில் உள்ளது. ஐரோப்பாவின் ஊடுருவலும், வடகிழக்கு இந்தியாவின் அஸ்ஸாம் பள்ளத்தாக்கு பழங்குடிகள் தங்களை அந்த ஊடுருவலுக்கு அனுமதிக்காத தடுப்பு முயற்சியுமாக நாவல் அஸ்ஸாமிற்கும் திபெத்திற்கும் இடையிலான மலை பள்ளத்தாக்கில் நிகழ்கிறது.

உலகம் முழுவதும் தம் மதத்தையும் அதன் மூலம் தன் அதிகாரத்தையும் விரிக்க எத்தனித்த ஐரோப்பாவால் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திம காலம் வரை இந்தியாவின் வடகிழக்கு பிரதேசத்தில் தன் மிஷினரியை நிறுவ இயலவில்லை. அவர்களின் முக்கியமான குறிக்கோளாக திபெத் இருக்கிறது. அஸ்ஸாமில் தங்களின் ஒன்றிரண்டு சிறிய மிஷினரிகளை கொண்டு வந்து விட்ட ஐரோப்பா திபெத்தை ஊடுருவ வேண்டும் என்றால் அந்த பள்ளத்தாக்கை கடந்து திபெத்திற்குள் செல்ல வேண்டும். சீனா அவர்களை ஊடுருவ விடுவதில்லை. அதனால் ஃப்ரான்சின் கிருத்துவ மிஷினரி அந்த அமைதியான பள்ளத்தாக்கை குறிவைக்கிறது. சீனாவும் வலுவான அரசு. ஐரோப்பாவும் வலுவான அரசு. திபெத்தும் அவ்வாறு வலுவானதாக இருக்கிறது. திபெத் எந்த மிஷினரியும் புத்தரின் பூமிக்குள் வரக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கிறது. இவர்களுக்குள்ளான மோதல் மலைஅடுக்குகளுக்குள் உள்ள இந்த பள்ளத்தாக்கையும் அதன் மக்களையும் நிம்மதியாக வாழவிடாமல் அலைகழிக்கிறது. இந்தியாவிலிருந்து இந்த பள்ளத்தாக்கின் வழியே திபெத்தை அடைவது மட்டுமே இவர்களுக்குள்ள ஒரே வாய்ப்பாக இருக்கிறது.

ப்ரான்சின் ஒரு கிராமத்தில் சகோதர சகோதரிகளுடன் பிறக்கும் க்ரிக் தன் சிறு வயதில் தாயை இழந்து ஆழ்ந்த தனிமையை உணர்கிறார். அந்தத்தனிமை அவரை கிருஸ்துவிற்கு நெருக்கமாக்குகிறது. மேலும் விவசாயியான அவருடைய தாத்தாவின் அருகாமை அவரை இயற்கைக்கு நெருக்கமாக்குகிறது. ஃப்ரான்ஸில் இறையியல் படிப்பை முடித்து இறை தொண்டாற்றுவதற்காக கடல் கடந்து அனுப்பப்படுகிறார்.

க்ரிக் அஸ்ஸாம் பள்ளதாக்கிற்கு செல்லும் போது உயிரை பாதுகாத்துக்கொண்டு திரும்பி செல்லும்படி அனைவராலும் எச்சரிக்கப்படுகிறார். அவருக்கு முன்பே சில பாதிரிகள் அந்த பள்ளத்தாக்கை கடந்து செல்வதில் தோல்வி அடைந்து இறந்திருக்கிறார்கள் அல்லது திரும்பி சென்றுவிட்டார்கள் என்று அவருக்கு சொல்லப்படுகிறது. தான் நம்பும் பணியை  செய்வதற்காக தன் உயிரை பணையம் வைக்க க்ரிக் உறுதி கொள்கிறார். மேலும் தன்னால் இறை பணியை செய்ய முடியும் என்று நம்புகிறார்.

இதே காலகட்டத்தில் பள்ளத்தாக்கின் நுழைவாயிலான மெபோ கிராமத்தில் பழங்குடிகளின் கூட்டம் நடக்கிறது. வரிசையாக அமைந்த கணப்புகளின் வெளிச்சத்தில் பழங்குடிகளில் முக்கியமானவர்கள் கூடுகிறார்கள். அன்னியர்களை கண்காணி்ப்பது பற்றியும் திபெத்தின் கெடுபிடிகளில் இருந்து தப்புவது பற்றியும்  பேசுகிறார்கள். எப்போதும் அங்கு இது போன்ற கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. தங்களுக்குள்ளே எல்லைகளை வகுத்துக்கொண்டு மோதல்களை கூடுமானவரை சரி செய்து வாழும் அவர்கள் அன்னியர்களின் ஊடுருவலை தடுக்க ஒன்றாக இணைக்கிறார்கள். மலைஉச்சியிலிருந்து அந்த கூட்டத்திற்கு ஒரு இளம் பழங்குடி தலைவனான கஜின்ஷா வருகிறான்.

அவர்கள் தங்களுக்கான வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்களில் விடாப்பிடியாக இருப்பது மட்டுமே அன்னியர்களை நுழைய விடாமலிருப்பதற்கான காரணமாக இருக்கிறது. மேலும் இந்த ஊடுருவலை அனுமதித்தால் தங்களை விட அதிகாரம் மிக்க திபெத்தின் நடவடிக்கைகளுக்கு அஞ்சுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

மெபோ கிராமத்தின் தலைவராக இருந்தவரின் மகளான கிமூர் பள்ளத்தாக்கின் ஒரு பாறை உச்சியில் படுத்துக்கொண்டு சியாங் ஆற்றையும் பள்ளத்தாக்கையும் பார்த்து கொண்டிருப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. அவள் பதினேழு வயதான இளம்பெண்.அந்த கிராமத்தின் அப்போதைய தலைவரின் மகனான லெண்டம் அவளுடைய நண்பன். அவனும் அந்த பள்ளத்தாக்கை பார்க்கிறான்.

“இந்த ஆறு எங்கு செல்லும்,” என்று அவள் கட்கிறாள்.

“சூரியன் அஸ்தமிக்கும் இடத்திற்கு” என்று சொல்கிறான். இப்படியான கவித்துவமான வெகுளித்தனங்களால் ஆனது அவர்களின் வாழ்க்கை.

அந்த பெரிய பள்ளத்தாக்கு முழுவதும் பல குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. எங்கிருந்து பார்த்தாலும் சுற்றிலும் பனிமூடிய கரிய குன்றுகளும் அவற்றில் வெள்ளி நாளங்கள் போல ஆறுகளும் ஓடுகின்றன.

ஃபாதர் க்ரிக் பல மாதங்களான காத்திருப்புகளையும், தடைகளையும் கடந்து அந்த பள்ளத்தாக்கினுள் நுழைகிறார்.  கேள்விபட்டிருந்ததற்கு மாற்றாக அந்தப்பழங்குடிகள் உணவுக்காக பயிரிட்டு கொண்டும், தங்கள் நம்பிக்கைகளுடனும் அமைதியாக வாழ்கிறார்கள். எப்போதும் பழங்குடிகளுக்குள் மோதல் நடந்து கொண்டிருக்கும் என்ற அவரின் எண்ணத்தில் மாற்றம் வருகிறது.

அந்த அமைதியை உணரும் ஃபாதர் க்ரிக்கிற்கு தன்னால் இந்த பள்ளத்தாக்கிலும் இதைக்கடந்து திபெத்திலும் சுவிஷேசத்தின் சொற்களை நிலை நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை உருவாகிறது. அதே நேரத்தில் பள்ளத்தாக்கில் பயிருடும் காலம் வருகிறது. நிலத்தில் பரண்கள் அமைத்து அங்கேயே தங்கி மெபோ கிராமத்து மக்கள் தானியங்களை விதைத்து பாதுகாக்கிறார்கள். தனக்கும் அம்மாவிற்குமான உணவிற்காக கிமூர் பரணில் தங்கி நிலத்தில் பாடுபடுகிறாள். அவள் தோழி நாகோவின் நிலமும் அருகில் இருக்கிறது. நாள் முழுவதும் நிலத்தில் உழைத்தப்பின்  அந்தியில் பரணில் உள்ள கணப்பின் முன் அமர்ந்து சுற்றிலும் சூழ்ந்திரும் கரிய குன்றுகளை பார்த்தபடி இருக்கிறார்கள்.

மமங் தாய்

ஒரு கனத்தமழை நாளில் கிமூர் அங்கு அமர்ந்தபடி தனக்கு ப்ரியமான மலைக்குன்றுகளை பார்த்தவாறு இருக்கிறாள். கருத்த குன்றுகளில் இருந்து வலிய தோள்களுடன் இறங்கி வரும் கஜின்ஸாவிற்கும் அவளுக்கும் காதல் உண்டாகிறது. அவர்களின் குலவழக்கபடி அவர்களின் உறவு ஏற்கப்படாது. சிலநாட்கள் அவளுடன் தங்கிவிட்டு அவன் திரும்ப வருவதாகக்கூறி மலையேறி செல்கிறான். தான் கருவுற்றிருப்பதை உணரும் கிமூர் தனக்கான பொருட்களை எடுத்து வைத்து காத்திருக்கிறாள். ஒருநாள் யாரும் அறியாமல் கஜின்ஷாவுடன் மலையேறி செல்கிறாள். பள்ளத்தாக்கின் நுழைவாயிலில் இருக்கும் மெபோ கிராமத்திலிருந்து குன்றுகள் கடந்து ஒரு மலையுச்சியில் திபெத்தின் நுழைவாயிலில் இருக்கும் கஜின்ஷாவின் இருப்பிடத்திற்கு அவர்கள் பயணப்படும் அதே நேரம் க்ரிக்கும் திபெத்தை நோக்கி அதே வழியில் தன் பயணத்தை தொடங்குகிறார்.

இவர்களின் பயணங்கள் முடிவில் என்னாகிறது என்பது நாவலின் மைய சரடுகளாக உள்ளது. இந்த இரு சரடுகளின் வழியாக பழங்குடி இனக்கதைகளும் ,பழக்க வழக்கங்களும் ,பல குழுக்களின் வாழ்க்கையும்,அந்த குன்றுகள் சூழ்ந்த பளளத்தாக்கும் சித்தரிக்கப்படுகின்றன. க்ரிக் மற்றும் கிமூரின் பயணத்தில் உள்ள தீவிரம் நாவலின் சாரமாக உள்ளது. அவர்கள் சந்திக்கும் உயிர் ஆபத்துகளும், அவமானங்களும், உடல் வலிகளும் அவர்களை உணர்வுரீதியாக நம்முடன் பிணைக்கின்றன. இருவருக்குள்ளும் உள்ள தீவிரமான காதலே அவர்களை மனஉறுதி மிக்கவர்களாக பள்ளத்தாக்கில் பயணப்பட செய்கிறது.க்ரிக்கிற்கு யேசுவின் மீதும் கிமூருக்கு கஜீன்ஷா மீதும் உள்ள ஆழமான ஈர்ப்பும் அன்பும் அவர்களை அந்த குன்றுகள் நிறைந்த கடினமான பள்ளத்தாக்கை கடந்து செல்ல உதவும் வலிமையாக இருக்கிறது.

கிமூர் மலையேறி சென்று கஜின்ஷாவின் மனைவியாகி இரட்டை பிள்ளைகளை பெறுகிறாள். இரட்டை பிள்ளைகள் துரதிர்ஷ்ட்டம் என்று கருதப்படும் நம்பிக்கை அங்கு உள்ளது. அதில் ஒன்று இறந்துவிட மற்றொன்று வலுவில்லாத குழந்தையாக இருக்கிறது. கஜின்ஷாவின் இனத்திற்குள் அவனுக்கு மணம் செய்விக்கப்பட்ட பெண் ஒருத்தி  நோயாளியாக அவள் தந்தையின் வீட்டில் இருக்கிறாள். அங்கு இருப்பவர்கள் அவளின் தங்கை மூலம் கஜின்ஷாவை தங்களுடையவனாக்க முயற்சி செய்கிறார்கள். அதன் விளைவாக கஜின்ஷாவிற்கும் கிமுரூக்கும் உள்ள பிணைப்பு குறைந்து அவள் அவனைவிட்டு குழந்தையுடன் தன் ஊருக்கு திரும்புகிறாள். தனியாக கிளம்பும் அவளுடன் கஜின்ஷாவின் முதல் மனைவியின் மகன் அசோவா அவனாகவே துணைக்கு வருகிறான்.

கிமூருக்கும் அசோவாவுக்கும் உள்ள உறவு விலகலில் தொடங்கினாலும் அசோவாவின் அன்பினால் அவர்களின் பிணைப்பு இறுகுகிறது.அங்கு தொடங்கும் அவர்களின் பிணைப்பு நாவலின் இறுதி வரை வலுவாக இருக்கிறது. மூன்று பயணங்களில் அசோவா அவளுக்கு துணையாக வருகிறான். முதல் பயணத்தில்  குழந்தை இறக்கும் போது அதை வைத்துக்கொண்டு இருவரும் அந்த பள்ளத்தாக்கின் பனிவெளியில் ஒரு முழுநாள் துக்கத்தில் கழிப்பது நாவலின் உணர்வுபூர்மான இடம். அவளை ஒவ்வொரு முறையும் சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பித்துவிட்டு அவன் விலகி செல்கிறான்.  பதின் வயதின் தொடக்கத்தில் உள்ள அசோவா ஒரு ஔி போல நாவலில் வந்து வந்து போகிறான்.  பனிகாலத்து  சிறு வெயில் போல கிமூரின் வாழ்வில் அவன் இடம் இருக்கிறது.

அதே போல பாதிரியும் பல இயற்கை இடர்களை, மக்களின் கண்காணிப்புகளை, உடல் நலிவுகளை,தீவிர பசி வலிகளை கடந்து மலையேறினாலும் திபெத்திற்குள் செல்ல முடியாமல் துரத்தப்படுகிறார். அவர் கீழிறங்கி மெபோ கிராமத்திற்கு வருகிறார். அங்கு அவரை தங்க வைக்கிறார்கள். தாயையும் குழந்தையையும் இழக்கும் கிமூர் அங்கு வாழத்தொடங்குகிறாள். இரண்டாவது முறையாக மலையேறும் க்ரிக்கும் கிமூரும் தங்கள் வாழ்வில் பல உச்சங்களை அடைகிறார்கள். இரண்டாவது முறை க்ரிக்குடன் புரே என்ற இளம்பாதிரியும் செல்கிறார்.

க்ரிக் பழங்குடி ஆட்களால் கொலை செய்யப்படுகிறார். அவரை காப்பாற்ற வரும் கிமூரின் மடியில் உயிரிழக்கிறார். அந்தப்பழி கஜின்ஷா மீது விழுகிறது. இறுதியில் கஜின்ஷா தம்மவர்களாலேயே அந்நியர்களின் கைகளில் வீழ்த்தப்டுகிறான். இந்த பழங்குடிகள் சார்ந்த விஷயங்களில் ப்ரிட்டிஷ் படையும் ஃப்ரான்சிற்கு உதவுகிறது. ஒரு காட்டை போல தன்னிச்சையாக இருக்கும் இவர்களை எப்படி தங்கள் கட்டுக்குள் கொண்டுவருவது என்று புரியாமல் பிரஞ்சு மிஷினரிகளும் ப்ரிட்டிஷ் ராணுவமும் சேர்ந்து கொள்கிறது.

இறக்கும் தருவாயில் கிமூரின் மடியில் கிடக்கும் க்ரிக் கிமூரை ‘ஏஞ்சலாக’ உணர்கிறார். தன்னுடைய சுவிஷேசத்தை இவளிடம் சொல்லமுடியும் என்று அவர் மனதில் தோன்றுகிறது. அவர் உண்மையாகவே ஒரு இறை பணியாளராகவே தன்னை உணர்கிறார். ஆனால் அவருக்கு மேலே உள்ள அதிகாரம் அப்படியானது அல்ல. அது மதத்தை ஆயுதமாகக்கொண்ட வேறு ஒன்று என்று அவர் உணர்வதில்லை.

அதே போல கஜின்ஷாவின் தந்தை வரும் பகுதி நாவலின் ஆன்மாவாக உள்ளது. பழங்குடிகளுக்குள்ளாகவும் ,ப்ரிட்டிஷாராலும் தொடர்ந்து சண்டைகள் நடந்து இரத்தமும், பதட்டமும், இழப்புமாக இருக்கிற காலகட்டத்தில் அவர் அவற்றில் இருந்து விலகி வாழ விரும்புகிறார். ஆனால் அவரை மீறிய சூழல் அவரை விடுவதில்லை.

‘நாம் எதற்கு எங்கிருந்தோ இங்கு வந்தோம். பாதுகாப்பாக வீடு கட்டி பிள்ளைகள் வளர்த்து அமைதியாக வாழத்தானே..இப்படி சண்டையிட்டு மாய்வதற்காக இல்லை’ என்கிறார். ‘நீ பயப்படுகிறாய்’ என்று சொல்பவர்களிடம் ‘பயமில்லை அமைதியாக வாழப்போகிறேன். அந்த மலையுச்சியில் என் மகனிற்காக ஒரு வீடு கட்டுவேன். அவனுக்கு திருணம் செய்து வைப்பேன்’ என்கிறார். அவரின் அந்த குணம் கஜின்ஷாவிடமும் இருக்கிறது. அவனுக்கும் கிமூருக்கும் எப்படி விலக்கினாலும் விலகாத ஒரு காதல் அமைகிறது. என்றாலும் வாழ்க்கை போராட்டத்தில் அவனுடைய தந்தையைப் போலவே அவனுக்கும் வாழ்க்கை அமைவதில்லை.

இறந்த பாதிரியின் உடலை பார்த்தபடி கஜின்ஷா மனம்கசிந்து , “மனிதனுக்கு எவ்விதமான நம்பிக்கையாவது இருந்து விட்டு போகட்டுமே..உமது நம்பிக்கையிலிருந்து வேறுபட்டிருந்தால் என்ன ஆகிவிடப்போகிறது? ..பாரும் உமது உயிரே போய் விட்டது..எனக்காக நீர் காத்திருந்திருக்கக்கூடாதா” என்று வருந்துகிறான். அந்தப்பழங்குடிகள் சாதுவான அந்த பாதிரியை விரும்புகிறார்கள். ஆனால் அவரை உடன் வைத்துக்கொள்ள முடியாமல் திண்டாடுகிறார்கள். அவர் வாசிக்கும் புல்லாங்குழல் இசை கிமூரை அவருடன் பிணைக்கிறது. ஆனால் அவரிடம் பேசுவதற்கு தயங்குகிறாள். மனிதர்களுக்குள் இருக்கும் அன்புணர்ச்சி,வெறுப்பு,பயம் போன்ற உணர்வுகள் நாவல் முழுவதும் உயிர்ப்புடன் நம்மை நாவலுடன் பிணைக்கிறது.

கஜின்ஷாவும் அவனுடைய தந்தையும், இன்னும் சில பழங்குடிகளும் அந்த பள்ளத்தாக்கில் எளிய அமைதியான வாழ்க்கை வாழ போராடுகிறார்கள். அவர்களுக்கு அரசோ அதிகாரமோ ஒரு பொருட்டல்ல. நிம்மதியான வாழ்க்கை மட்டுமே அவர்களின் விழைவாக இருக்கிறது.

இந்த நாவலில் பல்வேறு இனக்குழுக்களின் சித்திரம் உள்ளது. பள்ளத்தாக்கு பயணத்தில் துணைக்கு வந்து கொள்ளையடிக்கும் மனிதர்கள். குலபூசாரிகள், குலங்களின் தலைவர்கள், பெண்கள், நண்பர்கள் என்று விரிந்த மனித வாழ்க்கையும் விரிந்த நிலமும் நாவலில் உள்ளது.

மொழிபெயர்ப்பாளர்கண்ணையன் தட்சிணாமூர்த்தி

நாவலை முடிக்கும் போது குடியிருப்புகளாக சிதறிக்கிடக்கும் மக்கள் அனைவரும் ஒரு இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்று உணரமுடிகிறது. அதன் பின் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஆறுகளும் பள்ளத்தாக்குகளும் நம் மனதில் ஒரே நிலமாக ஆகிறது. கிமூரிடம் அவன் நண்பன் லெண்டம் இந்த நதி நம்மை இணைக்கும் வெள்ளிக்கயிறு..என்று கூறுவது போல அது ஒரே நிலம். அவர்கள் ஒரு குடியிலிருந்து பிரிந்தவர்கள். இந்த மனநிலை அப்படியே விரிந்து ப்ரிட்டிஷ் ,ஃப்ரான்ஸ் என்ற எல்லைக்கோடுகளை அழித்து கஜின்ஷாவின் தந்தையுடன் நம்மை பிணைக்கிறது.

வஞ்சகங்களும், அதிகார ஆசையும் அந்த நிலத்தை குத்திக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த நிலத்தில் உள்ள கலையாத அமைதியைப்போல எதனாலும் அதை ஒன்று செய்ய முடிவதில்லை. ஏதோ ஒரு சக்திக்கு கட்டுப்பட்டதைப் போல இன்றும் அது அப்படியே உள்ளது என்று ஆசிரியர் பின்குறிப்பில் கூறுகிறார்.

நாவலில் வரும் வாழ்க்கை  அமைதியான இடத்தில் அமைதியை வேண்டி நிற்கிறது. அதே போல கிமூரும் கஜின்ஷாவும் அன்பிற்கு பணிபவர்களாக இருக்கிறார். பாதிரியை காப்பாற்றும் போராட்டத்தில் அவர்கள் தங்கள்  வாழ்க்கையை இழக்கிறார்கள்.

கிமூரும் பாதிரியும் இறுதியில் உணரும் இடம் ஒன்றே தான். இவள் ஏஞ்சல் என்று அவர் உணர்கிறார். இந்த வானமும் மண்ணும் போல நானும் கஜின்ஷிவும் பிரிவதில்லை என்று நினைத்தபடி அவனை இழந்து அவள் காட்டிற்குள் நுழைகிறாள்.

அந்தக்காடு டிப்டேரோகார்பஸ் வகை உயர்ந்த மரங்கள் சூழ்ந்தகாடு. அதன் விதைகளுக்கு இரு சிறகுகள் உண்டு. அவை அவற்றை காற்றில் ஏந்திச் சென்று எந்த இடத்தில் விடும் என் று தெரியாது. ஆனாலும் விழும் இடம் அதனுடையது. அது போலவே நாம் ஏற்படுத்திக்கொண்ட நாடுகளும் நம்பிக்கைகளும் அந்த மண் சார்ந்தவை.பனி நிலத்தில் புத்தர், பாலைவனத்தில் கொற்றவை, மணல்வெளியில் பிதா என்று  எத்தனையோ ரூபங்கள். அவற்றை ஏன் மாற்ற வேண்டும் என்ற கேள்வியை வைக்கிறது நாவல். மேலும் அந்த ரூபங்கள் அதிகாரத்தின் கருவியாவதை இந்த நாவலின் பாத்திரங்கள் விசனத்துடன் எதிர்கொள்கிறார்கள். எந்த வகை மண்ணில் எந்த வகை மரம் முளைக்கும் என்பது இயற்கையின் நியதி.

மெபோ கிராமத்தின் சித்திரம் சங்கப்பாடல்களில் வரும் தினைப்புனம் காத்தல் என்ற திணையின் கீழ் வரும் பாடல்களை ஒத்துள்ளது. சிறுவயதில் கேட்ட ஒரு சில கதைகள் எப்போதும் நினைவில் இருக்கும். எழுதியவரின் பெயர் நினைவில் இல்லாத ஒரு ஆங்கில சிறுகதை இந்த நாவலுடன் இணைந்து கொண்டது.

ஒரு அழகான மலையில் இரவு நேரத்தில் காட்டுத்தீ பற்றிக்கொள்கிறது. தனித்திருக்கும் அந்த குடியிருப்பில் தந்தையும்.மகனும் உறங்குகிறார்கள்.. மகன் எட்டுவயது பையன். தீயின் வெப்பத்தை உணர்ந்து அவர்கள் விழிக்கும் போது தீ வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தந்தை மகனை முன்னே அமர்த்தி குதிரையை விரட்டுகிறார். தீ பரவிக்கொண்டிருக்க குதிரையால் வேகமாக விரையமுடியவில்லை. தந்தை குதிரையிலிருந்து இறங்கி கொண்டு மகனை குதிரையுடன் பிணைத்து கட்டுகிறார். அப்போது காட்டுதீயின் ஜூவாலையில் செந்நிறமாகத் தெரியும் தந்தையின் முகத்தையும் தாடியையும் மகன் பார்த்துக்கொண்டிருக்கிறான். ‘கீழே உள்ள கிராமத்திற்கு சென்று நம் உறவுக்காரர்களுடன் இரு. நான் வந்துவிடுவேன்’ என்று சொல்லி குதிரையை தந்தை  தட்டிவிடுகிறார். அவன் தந்தையை பார்த்தபடியே மலையிறங்கி மறைகிறான். கீழே கிராமத்திலிருந்து விடியும் வரை  மலையை அன்னாந்து பார்த்தபடி அவன் தன் தந்தைக்காக காத்திருக்கிறான். குதிரையும்  கனைத்துக்கொண்டு கொட்டிலில் இருந்து கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடுகிறது. அவன் தந்தை திரும்பி வரவில்லை. தீ எரிந்து கொண்டிருந்தது என்று கதை முடியும்.

இந்த நாவலில் எதிரிகளால் குடியிருப்புகள்  எரிக்கப்படும்  போது கஜின்ஷா அவன் தந்தையுடன் வெளியேறுகிறான். அங்கு நடந்த சண்டையில் வயிற்றில் ஆழமான காயம்பட்ட தந்தை இறந்துவிடுகிறார்.

முந்தின கதையில் நான் இளமையில் விட்டு வந்த சிறுவனாக கஜின்ஷாவை உணர்ந்தேன். புனைவுகள் அளிக்கும் மாயம் இது.

மேலும் இந்த நாவல் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. ஏன் மதத்தை பரப்ப வேண்டும்? ஏன் தேவையில்லாமல் அதிகாரத்தின் பொருட்டு எளிய மக்களின் வாழ்க்கையை சிக்கலாக்க வேண்டும்? பெரிய மதங்கள் தங்கள் சிக்கலை எதிர்கொள்ள எளியவர்களை ஏன் அலைகழிக்க வேண்டும்? நம்பிக்கை என்னவாக இருந்தால் என்ன? போன்ற கேள்விகளை இந்த நாவல் முன் வைக்கிறது.

மேலும் இதில் மிதுன் [ மாடு அல்லது காளை] ஒரு குறியீடாக உள்ளது. பெரிய மிதுன் ஒன்று கொல்லப்பட்டு அந்தப்பழி பாதிரியார் மீது போடப்படுகிறது.  அந்த மிதுனின் இறப்பும் அது கொல்லப்படும் முறையும் பழங்குடிகளை ப்ரிட்டிஷ் ராணுவம் நடத்தும் விதமாகவே இருக்கிறது. கஜின்ஷாவுக்கு நேர்வதும் அதுவே. விடாபாபிடியான அந்த நிலத்தையே சுற்றி வரும் க்ரிக்கிற்கு மெபோ கிராமமும் கஜின்ஷாவும் ஒரு கட்டத்தில் தங்கள் நிலத்தில் வாழ அனுமதிக்கிறார்கள். மற்ற பழங்குடிகளிடமிருந்து எதிர்ப்பு வரும் போது வேறு வழியின்றி அவரை வெளியேற்றுகிறார்கள். மனித மனம் கொடுக்கும் வழிகளில் நுழைந்து தங்களை அன்னியநிலங்களில் நிலைநிறுத்தியது ஐரோப்பா. அவர்களின் ராணுவங்கள் நுழைய முடியாத இடங்களுக்கு  சாந்தமான பாதிரிகளை அனுப்பி வைக்கிறது. கல்வியும் மருத்துவமும் கூட அவர்கள் கையில் அதிகாரத்தின் ஆயுதங்களாகவே செயல்படுகின்றன. ஆனால் மருத்துவத்திற்கும் கல்விக்கும் உள்ள இயல்பால் அவை தான் சென்றடையும் மக்களை வலியிலிருந்தும் அறியாமையிலும் மீட்டன. இது ஐரோப்பாவின் செயல்பாடுகளுக்கு கிடைத்த நேர்மறையான எதிர்விளைவு என்று சொல்லலாம். ப்ரிட்டிஷ் காலனிகளுக்கு வந்த ஒரு சில அதிகாரிகள் ,பாதிரிகளிடம் உண்மையாகவே மனிதர்கள் மீதான கரிசனமும் அவர்களின் தேவனும் இருந்தார்கள். எழுத்தாளர் ஜெயமோகனின் வெள்ளை யானை நாவல் இந்த நாவல் வாசிப்பில் இணையாக மனதில் வந்து போனது. எப்போதும் அதிகாரம் முழுமுற்றாக வெல்லமுடியாததற்கு இவர்களே காரணம். இவர்கள் ஒரு கட்கத்தை சல்லடையாக்கும் வலிமை கொண்டவர்கள். எத்தனை அழிவுகளுக்குப் பிறகும் மிக மெதுவாகவேனும் அந்த சிறுதுளைகளின் வழி மானுடம் வென்றுவிடுகிறது. இந்த நாவலை வாசிக்கும் போது ஐரோப்பாவின் காலனியாதிக்கத்தின் பல வரலாறுகளை மனம் இணைத்து கொள்கிறது. இது இந்த நாவல் வாசிப்பில் நிகழ்ந்த முக்கியமான அனுபவம்.

இரத்ததை விரும்பாதவனான கஜின்ஷாவை இரத்தப்பழி சூழ்கிறது. சிறையில் சிதைந்த அவன் முகத்தை காணும் கிமூர் கொள்ளும் மனவேதனை மிகஆழமானது. எங்கேயோ  இருக்கும் அதிகாரமும், நாடுபிடிக்கும் விழைவும் அவனை வாழவிடாமல் அழிக்கிறது. பாதிரியை அழிப்பதும் அதுவே தான். அது சொந்த மக்களையும் அந்நிய மக்களையும் வேட்டையாடுகிறது. ஒரு ப்ரிட்டீஸ் பெண்மணி மோயி என்ற பழங்குடி பெண்ணிற்கு அளிக்கும் பென்சிலும் புத்தகமும் ஒரு குறீயீடாக உள்ளது. அது கைமாறி கமூரிடம் வந்து சேர்கிறது.

வன்முறை தூண்டப்படும் விதமும் அது செயல்படுத்தப்படும் விதமும் நாவலில் மிக இயல்பாக வருகிறது. க்ரிக்கையும் புரோவையும் கொலை செய்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டு செய்வதில்லை. க்ரிக்கை கில செய்துவிட்டு தப்பி ஓடும் லாமெட்டும் யஞ்சியும் சிறுபதட்டமும் அடைவதில்லை. சிரித்துகொண்டு காட்டிற்குள் ஓடும் யஞ்சி நமக்கு ஒரு யட்சி போல தெரிகிறாள்.

கமலதேவி

இது போன்ற நாவல்கள் நமக்கு ஏற்படுத்தும் ஆழமான உணர்வு நிலைகள் முக்கியமானது. வழக்கமான வார்த்தை என்றாலும் ‘வாழ விடு’ என்பதே நாவலின் ஆன்மா. அந்த விரிந்த பள்ளத்தாக்கில் அவர்களின் மூதாதையர்கள் ஆவிகளாக உடன் இருப்பதாக அந்தப்பழங்குடிகள் நம்புகிறார்கள். இந்த நாவல் கூட அந்தப்பள்ளத்தாக்கில் மறைந்து போன மூதாதைகளால் ஆன கதையே.

***

நூல் பற்றி: தமிழில் கண்ணையன் தட்சிணாமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார். சாகித்ய அகாதமி வெளியீடாக வந்துள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்பு விருது பெற்றது.

***

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *