இப்போது எல்லாவற்றிலும் நடுப்பாதையைத் தேர்வு செய்கிறேன் – ப.சிவகாமி

1975-இல் ப.சிவகாமியின் முதல் சிறுகதை வெளியானது. சரியாக 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. எழுத்து, களச்செயல்பாடுகள், இதழியல், அரசியல் என பல தளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருபவராக சிவகாமி உள்ளார். தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவ அலைக்குப்பின் உருவான அரசியல்சார்ந்த யதார்த்தவாத எழுத்துக்களை முன்வைத்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தமிழகத்தின் தலித் அரசியலியக்க முன்னோடிகளில் ஒருவராகவும், தலித் பண்பாட்டியக்கத்தை முன்னெடுப்பவராகவும் செயல்பட்டு வருகிறார்.
எழுத்தைத் தாண்டி ஒரு ஆளுமையின் நேர்காணல் ஏன் அவசியம் என்று யோசித்ததுண்டு. ஒரு நாளில், சில உரையாடல்களில் அவர்களிடமிருந்து இயல்பாக வெளிப்படுவது என்ன என்று பார்க்கும் ஆர்வம் என்று மட்டும் குறுக்கிவிட இயலாது. புனைவுகளைத்தாண்டி இயல்பாக அத்தருணத்தில் வெளிப்படும் ஒரு ஆளுமையின் தெறிப்பு வாசகராக அவரின் படைப்பை அணுக முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில் இந்த நேர்காணல் அமைந்திருக்கிறது. அவருடைய திடமான, அமைதியான, சிரிப்பொலியுடன் கூடிய உரையாடல் இந்த நேர்காணலை இனிய அனுபவமாக ஆக்கியது. இந்த நேர்காணலுக்கு உதவிய ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களுக்கும், படங்கள் அனுப்பி உதவிய நீலம் இதழாசிரியர் வாசுகி பாஸ்கர் அவர்களுக்கும் மிக்க அன்பு.
ப.சிவகாமி சிறப்பிதழுக்காக கட்டுரைகள் எழுத ஒப்புக் கொண்ட நண்பர்கள் நூல்கள் திரட்ட சிரமமாக உள்ளதாகக் குறிப்பிட்டனர். சில நண்பர்கள் நாவல்கள் புத்தகங்கள் கிடைக்காததால் கட்டுரை எழுதவில்லை. சிலர் நூலகத்தில் எடுத்தும் நண்பர்களிடம் கடன் பெற்றுமே வாசித்திருக்கின்றனர். எவ்வளவு தேடியும் “நாளும் தொடரும்”, “குறுக்கு வெட்டு” ஆகிய நாவல்களைக் கண்ணால் கூட பார்க்க இயலவில்லை.
பழையன கழிதலும் மற்றும் ஆனந்தாயி ஆகிய இரு நூல்கள் அடையாளம் பதிப்பகத்தில் கிடைக்கின்றன. ஆனால் அது ஏதோ பழைய வணிக எழுத்து பாக்கெட் சைஸ் நாவல் போல அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போதும் இந்த இரண்டு நாவல்கள் வாங்க முடிகிற காரணத்தால் அடையாளம் பதிப்பகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். சிறுகதைகள் மொத்த தொகுப்பும் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சிவகாமியின் ஆறு நாவல்களும் கிடைக்க வேண்டும். ஆனந்தாயி நாவல் கிளாஸிக் வரிசையில் வைக்கப்பட வேண்டிய நாவல். அது நல்ல கெட்டி அட்டைப்படத்துடன் தரமான தாளில் அழகாக அச்சிடப்பட்டு கிடைக்க வேண்டும் என்பதை நீலி குழுவினர் சார்பாக பதிப்பகங்களிடம் கோரிக்கையாக வைக்கிறோம்.
-ரம்யா
*

அறத்தீ ஆவணப்படத்தில் பதினேழு வயதில் முதல் காதல் கதையை எழுதியதாகச் சொன்னீர்கள். அதன்பிறகு உங்கள் நாவல்களில் அவை தென்படுவதேயில்லை. இப்போ எதுவும் அதுபோல எழுதும் எண்ணம் உள்ளதா?
அதான் முளையிலேயே கிள்ளி எறிஞ்சிட்டாங்களேம்மா (சிரிக்கிறார்)
இப்படி நீங்கள் சொல்லும் போது உங்கள் நாவலில் வரும் கெளரி கதாப்பாத்திரம் தான் நினைவுக்கு வருகிறது. அப்பாவுக்குத் தெரியாமல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் சிறுமி.
அது நாவல். அது எழுதும்போது நமக்கு சில நினைவுகள். கனவுகள். அப்பறம் அதைவிட்டு வெளி வந்துவிடுகிறோம். அவ்வளவுதான் அது.
உங்கள் நாவல்கள் பெரும்பாலும் யதார்த்தவாதம் சார்ந்த நாவல்களாகவே உள்ளது. உங்கள் அனுபவம், நீங்கள் அறிந்த உண்மை அதற்கு நெருக்கமாக உள்ளது.
அதை போதாமைனு நினைக்கறீங்களா?
நிச்சயமாக இல்லை. அதை ஒரு வகைமையாகப் பார்க்கிறேன். நீங்கள் ஏன் அந்தக் கதை சொல்லல் முறையைத் தேர்ந்தெடுத்தீர்கள்.
அதைத்தான் நானும் இன்னும் தேடிட்டு இருக்கேன்.
உங்கள் சிறுகதைகள் அப்படியில்லை. கடைசி மாந்தர், பறவைகள் பறந்தன ஆகியவை. அதில் ஒரு கனவுத்தன்மை உள்ளது. கட்டற்று மொழி புரண்டோடுவதைப் பார்க்க முடிகிறது. நாவல்களில் ஒரு அமைதி உள்ளது.
அது எதைச் சொல்கிறோம் என்பதைப் பொறுத்தது. எந்த கதைக்களத்தை நாம் தேர்ந்தெடுக்கிறோமோ அதைப் பொறுத்து அதற்கான சூழலும் மொழியும் உருவாகி வருகிறது. ’பறவைகள் பறந்தன’ ஒரு காதல் கதை இல்லயா, மனிதருக்கான உணர்வை பறவை மேல் ஏற்றிச் சொல்வது. எனவே அதற்கான மொழியை அது தேர்ந்தெடுத்துக் கொண்டது..
ஆனால் அன்றாடம் வேலைக்குப் போகும் கூலியாட்கள், அவர்களின் வாழ்க்கையைச் சொல்லும்போது இடம், சூழல், மொழி என அவர்களின் கதையைச் சொல்வதற்கு ஏற்றாற்போல மாறிக் கொள்கிறோம். ஒவ்வொரு கதாபாத்திரமாகவும் நாம் அவர்களுள்ளே நுழைந்து விடுகிறோம். அந்தக்கதையை நான் தான் சொல்கிறேன். என் வழியாக சொல்லப்படுகிறது. உதாரணமாக மூன்று கதாப்பாத்திரம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். மூன்றுமே வித்தியாசமான கதாப்பாத்திரங்கள். ஒரு கதாப்பாத்திரம் நல்லா வாழ்ந்து பேரன் பேத்திகளெல்லாம் எடுத்து அப்படியே வாழுது. அந்த கதாப்பாத்திரத்தை எழுதும்போது அதன் பல சிந்தனைகளோட நாம (எழுத்தாளர்) முரண்பட்டாலும் அதன் இயல்பு என்னவோ அதை எழுத வேண்டியது அவசியமா இருக்கு. அந்த சிந்தனைகள் நமக்கு முரண்பட்டால் கூட அதை நாம இன்னொரு கதாப்பாத்திரத்தின் வழி தான் சொல்ல இயலும். இரண்டாவது கதாப்பாத்திரம் வீட்டை விட்டு ஓடிப் போகிறது என வைத்துக் கொள்ளலாம். மூன்றாவது கதாப்பாத்திரம் பழையவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது, ஆக்கபூர்வமான செயல்களில் தன்னை கட்டமைத்துக் கொள்கிறது என வைத்துக் கொள்ளலாம். இப்படி பலதரப்பட்ட கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் வாசகர்கள் ஏதாவது ஒரு கதாப்பாத்திரத்தோடுதான் தன்னைப் பிணைத்துப் பார்ப்பார்கள். எந்தக்கதாப்பாத்திரம் சிறந்ததோ அதனுடன் தன்னை பிணைத்துக் கொள்வதில் தான் நம்முள் மகிழ்ச்சி ஏற்படும். புரட்சி செய்யாதாவர்கள் கூட ஒரு புரட்சிக்காரியை விரும்புவது போல தான் அது.
ஒரு தொடர்புபடுத்திக் கொள்ளும் அம்சம் என்று சொல்லலாமா?
ஆம். தங்களை படைப்புடன் இணைத்துப் பார்த்துக் கொள்ளக்கூடிய அம்சத்தை மனம் தேடிக் கொண்டே இருக்கும். எழுத்தாளர்களுக்கும் அது இருக்கும். எல்லாமே கதாப்பாத்திரம் தான் என்றாலும் சில கதாப்பாத்திரத்தில் அதிகம் விளையாடிப்பார்ப்பதைப் பார்க்கலாம். கொஞ்சம் நுணுகிப் பார்த்தால் ஆசிரியர் எந்தக் கதாப்பாத்திரத்தில் அப்படி விளையாடிப்பார்த்திருக்கிறார் என்று கண்டுபிடித்துவிடலாம்.

பழையன கழிதல், ஆனந்தாயி இந்த இரண்டில் எனக்கு ஆனந்தாயி மிகப்பிடித்திருந்தது. உங்களுடைய விருப்பத்தேர்வு எது. இரண்டும் ஒரே கதைக்களத்தைக் கொண்டது என்பதால் கேட்கிறேன்.
குடும்பம், சமூக நாவல் என்றளவில் ஒற்றுமை உள்ளது தான். பழையன கழிதலும் நாவலில் நான் பிற்பகுதி பெரும்பாலும் புதியதாக கற்பனையாக கட்டமைக்க வேண்டியிருந்தது. ஆனால் ஆனந்தாயிக்கு நான் எந்த மெனக்கெடலும் எடுத்துக் கொள்ளவில்லை. இயல்பா அப்படியே வந்தது
அந்த கதையோட்டம் ஆனந்தாயியில் தெரிகிறது. பழையன கழிதலும் நாவலில் ஒரு இளம் மனம் திரும்பி நோக்கி எதையெல்லாம் கழிக்க வேண்டும் என்று பட்டியலிடுவது போல இருந்தது.
இல்லை. பழையன கழிதலும் நாவலில் ஒரு பெண்ணுக்கு பிரச்சனை வருகிறது. அவள் காவல் நிலையத்திற்கு போகிறாள். அவள் ஜெயித்தாளா? தோற்றாளா? அது யாருடன் தொடர்பு கொண்டுள்ளது. தீர்வு என்ன? இப்படிப் போகிறது. “Knots” னு சொல்லுவோம் இல்லயா. அங்க அங்க பிரச்சனைக்கான முடிச்சுகள் இருக்கு. அதை நமக்குத் தெரிந்த வழிகளில் எப்படி அவிழ்த்துக் கொண்டே செல்கிறோம் என்ற சவால் அதில் உள்ளது. ஆனால் ஆனந்தாயி அப்படி இல்லை. அது ஒருவருடைய வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் அவர் சந்திக்கக்கூடிய சவால்கள், மகிழ்ச்சி என எல்லாமும் எந்தக் கட்டுப்படும் இல்லாமல் உள்ளது. அது தான் இரண்டுக்குமான வேறுபாடு.
பழையன கழிதலும் நாவலில் கெளரியின் இடையீடு அதிகம் இருந்தது. கெளரியை உங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ளக்கூடிய அளவில் அதில் வெளிப்பட்டிருப்பாள். ஆனந்தாயி நாவலில் அவள் சுத்தமாக இல்லை. அந்த வகையில் ஒரு இயல்பான கதையோட்டம் அமைந்திருந்தது என்று தோன்றியது.
ஆம். ஆசிரியர் காணமல் போகுதல்னு சொல்லலாம். ஆசிரியரே அதில் இல்லை என்றும் சொல்லலாம். அதைத்தான் நான் மீள எடுத்து பழையன கழிதலும் ஆசிரியர் குறிப்பு (ப.க.ஆ.கு) என மீட்டு எடுத்து விமர்சனமாக எழுதிக் கொண்டேன். நீங்கள் சொல்லும் கேள்விகள் எல்லாத்தையும் நானே கேட்டு மீள எழுதினேன்.
உண்மைக்கு முன்னும் பின்னும் நாவல் பற்றி என்ன நினைக்கிறீங்க?
உண்மைக்கு முன்னும் பின்னும் நாவலில் நீலா பிரதானமாக எழுந்து நிற்கிறாள். அதிகாரம், ஆதிக்கம், அரசியல் என யாவற்றையும் சார்ந்து அவளுடைய பார்வை, செயல்பாடுகள் வழியாகவே நாவல் விரிகிறது. துண்டு துண்டான அம்சம் கதைசொல்லல் முறையில் தெரிந்தது. மேலும் இந்த நாவல் தனித்தனி அத்தியாயங்களாக ஆழமாக எழுதப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக கோர்த்துக் கொள்ள வேண்டிய பணியை வாசகருக்கே அளித்தவிட்ட பின்நவீனத்துவ நாவல் என்று சொல்லலாம்.
பின்நவீனத்துவம் என நீங்கள் எடுத்துக் கொண்டால் ஓகே. அது பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நீலா மையம் என நீங்கள் சொல்கிறீர்கள். நான் ஒட்டுமொத்தமாக “பெண்” என்ற வகைமையை எடுத்துக் கொண்டேன். ஒரு பெண் ஆட்சிப்பணி, அதிகாரம் சார்ந்த இடத்தில் இருக்கும் நிலை பற்றியது அது. பெண் என்றாலே அழுதுகொண்டு வெளிவருவது, திட்டு வாங்குவது, பாலியல் சீண்டலுக்கு ஆளாவது என்றில்லாமல் அதை ஆற்றலுடன் எதிர்கொள்வது பற்றியது. என்னளவில் அது புனைவு தான். ஏனெனில் இன்னும் கூட வெளிப்படையாக எழுத முடியாத நிலைமை உள்ளதால் அப்படிச் சொல்கிறேன். அதனால் சொல்கிறேன். தோன்றுவதையெல்லாம் எழுத இயலாது. எது நாவலுக்கு மிகவும் அத்தியாவசியமோ சொல்லப்பட வேண்டியதோ அதை மட்டுமே எழுதுகிறோம். இந்த நாவல் புதிய கோடாங்கி இதழில் தொடராக வெளிவந்தது. அதனால் நீங்கள் சொன்ன தன்மை அதில் தெரிந்திருக்கலாம்.
தொடராக வெளிவந்த நாவல்களில் உள்ள தன்மை தெரிகிறது.
தொடர்ச்சியின்மை என்று நீங்கள் உணர அது காரணமாக இருக்கலாம். இப்போ நீலாவுடைய பணி சார்ந்த பிரச்சனை முதல் சில அத்தியாயங்களில் வருகிறது. அடுத்து குடும்பத்தைப் பற்றி, அதன் தலையீடு பற்றி சொல்ல வேண்டும் இல்லயா. ஆனால் அது இருக்காது. ஏனெனில் அது முக்கியமானதாக இல்லை. ஆனால் வேலைக்காரர்கள் பற்றி அதிகம் வரும். அவள் அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் எப்படி அவளைப் பார்க்கிறார்கள். Upward mobility – அதாவது பணம், பதவி, அதிகாரம் வரும்போது பாகுபாடு மறைந்துவிடும் என்று நினைக்கிறோம். அது மறையவில்லை என்பதைச் சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் மறையும் என்ற நம்பிக்கையுடன் தான் நாம் செயல்படுகிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. நான் எழுதும் அந்த காலகட்டத்தில் அது அத்தனை மோசமாகத்தான் இருந்தது. நீலா ஏன் இப்படி புரட்சிகரமா இருக்கா. அவளை எது அப்படி ஆக்கியது என்ற கேள்வி முக்கியம். ஏனெனில் நம்ம இயல்பு வாழ்க்கையில் பல பெண்களைப் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் அத்தனை தைரியமாக இல்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. சமீபத்தில் எங்கள் பள்ளியில் (புனித டொமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) ஒரு கோல்டன் ஜூப்லி கொண்டாட்டத்திற்காக அழைத்திருந்தார்கள். எல்லா பள்ளிகளிலும் பொதுவாக ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவுடன் அழைத்து கெளரவப்படுத்துவார்கள். எனக்கு அது நிகழவேயில்லை. என்னுடைய அடையாளத்தை அவர்கள் விரும்பவில்லை என்று நினைக்கிறேன். ஹோலிக்ராஸ் காண்வெண்டில் அழைத்து அலுமினய் என்ற வகையில் கெளரவித்தார்கள். நான் என்னை எல்லோரும் கெளரவிக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. மற்ற பெண்களுக்கு அது எவ்வளவு தூண்டுகோலாக இருக்கும் என்பதற்காகச் சொல்கிறேன். நான் ஐ.ஏ.எஸ் ஆகி ஐம்பது வருடங்கள் கழித்தும் அந்தப் பள்ளியிலிருந்தோ, ஏன் அந்த மாவட்டத்திலிருந்தோ (பெரம்பலூர்) கூட ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வெளிவரவில்லை என்பதை அந்த விழாவின் போது வந்திருந்த எம்.எல்.ஏ சொல்கிறார். இத்தனைக்கும் 2016-ல் பெரம்பலூர் தொகுதியில் நிற்க முன்மொழியப்பட்டவர்களில் ஒருவர் அவர். ஆனால் அந்த டிக்கெட்டை கலைஞர் எனக்குத் தான் அளித்தார். ஒரு பள்ளிக்கூடம் ஒரு பெண்ணை அழைத்து கெளரவப்படுத்துவதில் அத்தனை தயக்கம் ஏன் காட்டவேண்டும் என்பது ஆச்சர்யமாக இருந்தது. இதை ஏன் சொல்கிறேன் எனில் ஒரு பெண் ஏன் எல்லாவற்றிலும் அத்தனை புரட்சியாக இருக்க வேண்டும். பள்ளியிலிருந்து எல்லாமும் அவளுக்கு இயல்பாக கிடைக்கவில்லை.
நான் குயின்மேரிஸ் கல்லூரியில் படித்தேன். நான் தான் அங்க வரலாற்றுத் துறையில் சுதர்சன் கோல்ட் மெடல் பெற்றேன். 1978 ஏப்ரலில் கல்லூரி தேர்ச்சி பெற்ற பின். செப்டம்பரில் ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுதறேன். எங்கள் கல்லூரி நூலகத்தில் நல்ல புத்தகங்கள் இருக்கும். அதைக் கேட்பதற்காக கல்லூரி சென்றிருந்தேன். என்னை நன்றாகத் தெரிந்த, என் திறமையை அறிந்த ஒரு பேராசிரியரே எதிர்மறையாப் பேசினார். “ஐ.ஏ.எஸ் பரிட்சைனா என்ன அவ்வளவு சுலபமா? அதில் தேர்ச்சி பெறுவது சிரமம். கல்லூரி முடித்து சென்ற பிறகு நூலகத்திலிருந்து புத்தகங்கள்லாம் தர முடியாது” என்று சொல்லிவிட்டார். அந்த காலத்துல வெளியில் புத்தகங்கள் கிடைப்பது சிரமம். இதையெல்லாம் நான் தடையாகப் பார்த்ததில்லை. சவாலாகவே பார்த்தேன். எவ்வளவுக்கு எவ்வளவு தடைகள் இருக்கோ அவ்வளக்கவ்வளவு எழுச்சியும் அதிகமா இருக்கும். நான் எழுச்சியாகப் பார்த்தேன்.
நீலாவோட கஷ்டங்களை எழுதுவது என் நோக்கமல்ல. அவளுடைய பயணம் எப்படி இருக்கு. ஒரு அரசு இயந்திரத்தின் வாகனத்தில் ஏறிய ஒரு அதிகாரி. அந்தப் பயணம். அதுதான் முக்கியம். அதை உதறுவதும், வேண்டாம் என விட்டுச் செல்வதும் கூட மகிழ்ச்சியான ஒன்றாகத்தான் பார்க்கிறேன். அது ஒரு கொண்டாட்டத்தின் கதையாகவே நான் பார்க்கிறேன்.

இந்த நாவல் முடித்த போது எழுந்த இன்னொரு கேள்வி, ‘எந்த உண்மைக்கு முன்னும் பின்னும்’ என்பது. ஏன் அந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
உண்மை என்பது முப்பரிமாணங்கள் கொண்டது. இன்று உண்மையாக இருப்பது நாளை உண்மையாக இருக்குமா என்று தெரியாது. வரலாற்றைப் பார்த்தாலே அது தெரியும். இன்னொன்று நேற்றை வைத்து தான் நாம் இன்றைப் பேசுகிறோம். உண்மை முப்பரிமாணம் என்பதை விடவும் பல பரிமாணம் கொண்டது என்பது சரியாக இருக்கும். ஒவ்வொருவரும் அவரவரின் தரப்பைச் சொல்கிறார்கள். அது பொய்யாகவும் இல்லை. அவர்களின் புரிதல் அப்படியாக இருக்கிறது. நான் சாதி அபிமானத்தினால் இதைச் சொல்லவில்லை.
உதாரணமாக நாவலில் நீலா கேபினட்டுக்கு ஒரு ப்ரொபோசல் எடுத்துச் செல்வாள் இல்லயா? அதை அவர்கள் மறுக்கும்போது எனக்கு சந்தேகம் தான் வந்தது. அவர்கள் உண்மையாகவே மறுக்கிறார்களா? ஏன் மறுக்கிறார்கள்? ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கு கிறிஸ்தவ டீச்சர், பழங்குடி பள்ளிக்கு பழங்குடி டீச்சர் என்ற விஷயமெல்லாம் ஒற்றுமையைக் கொண்டு வரும் என்கிறார்கள். அதுதான் அவர்கள் நோக்கமா என்ற கேள்வி எழுந்தது. இந்தத் திட்டத்தைப் பற்றி பழங்குடி மக்களிடம் கேட்கிறேன். எந்த டீச்சரும் இங்க வரமாட்டேன்றாங்க. வர்றவங்க வாழ்க்கை சிரமமா இருக்கும்னு சொல்றாங்க. என்ன செய்யலாம்னு அவங்கள கேக்கறேன். அவங்க எளிமையா சொல்றாங்க. நாங்க படிச்சு நாங்களே எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தறோமேன்னு சொல்றாங்க. ஒட்டுமொத்தமாக ஊர் மக்களிடம் கேட்கும்போது எங்கள் ஊரிலேயே படிச்சுட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களே சொல்லித்தரட்டும்னு சொல்றாங்க. இது வெறும் காமன்சென்ஸ் தான். அதை அவர்கள் வேற்றுமை என்றே நினைக்கவில்லை. நல்ல டீச்சர்னா ஃபார்வர்ட் க்ளாஸ் டீச்சர் கிட்ட தான் படிப்பேன் என்று சொல்வது அறிவல்ல. யாராக இருந்தாலும் நல்லா சொல்லிதரும் ஆசிரியர் இருந்தாலே போதும் என்ற புரிதல் அனுபவ அறிவின் வழியாக வருவது. பயிற்சியின் வழியாக வருவது.
இந்த மாதிரி காலியாக இருக்கும் இடங்களை இதுபோல நிரப்பினால் நம்மால் பள்ளிகளை நடத்த முடியுமே என்ற எண்ணத்துடன் வரைந்த திட்டத்தை ஏன் அரசாங்கம் மறுக்கிறது என்ற கேள்வி எழுந்தது. அப்ப அரசாங்கம் நினைக்கும் உண்மை ஒன்று, மக்கள் நினைக்கும் உண்மை ஒன்று, இது இரண்டையும் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மை இன்னொன்று. இதுபோல ஒவ்வொரு பிரச்சனையிலும் அப்படித்தான் இருக்கிறது. அப்படி உண்மையின் பல பரிமாணங்களைச் சொல்வது பற்றியது.

”அவர்கள்” சிறுகதை கனகசபாபதி என்ற ரேஷன் கடையில் வேலை பார்க்கும் ஒருவரின் வாழ்க்கை வருகிறது. அதில் மக்கள் உட்பட ஊழல் எல்லா நிலையிலும் புரையோடிபோயிருப்பதை சொல்வீர்கள். அதை மாற்ற வழியில்லை என்பது போல இயல்பாக அமைந்திருந்தது.
அதை நியாயப்படுத்தவும் விரும்பவில்லை. அதே சமயம் அதை capital punishment போல பாவிக்கவும் விரும்பவில்லை. அந்தக்கதையிலேயே வரும். ”உங்களுக்கு கீழே இருப்பவர்களை தண்டிக்கலாம். ஆனால் மேலே இருப்பவர்களை என்ன செய்யலாம்?”. அந்தக்கேள்வியைக் கேட்கும்போது நமக்கு குழப்பம் வருகிறது இல்ல. ஒருபோதும் மேலிருப்பவர்களை தண்டிக்கும் அதிகாரத்திற்கு நம்மால் செல்ல முடியாது. ஓரளவுக்கு கீழிருப்பவர்களை முழுமையாக தண்டிக்காமல் அவர்கள் திருந்துவதற்கு ஒரு எச்சரிக்கை கொடுத்து திருத்தப் பார்க்கலாம். அவ்வளவு தான்.
யார் அறத்தில் நலிந்திருக்கிறார்களோ அவர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் அவ்வளவு தான். அவரவர் சக்திக்கு ஏற்ப சிறிய பெரிய அளவில் ஊழல்வாதிகளாகத்தான் இருக்கிறார்கள். அஷிஷ் நந்தி ஒரு இலக்கியத்திருவிழாவில் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதால் தான் ஊழல் நிகழ்கிறது என்று சொல்லி அது சர்ச்சை ஆனது. ஆனால் ஊழல் என்பது சாதி பார்த்து வருவதில்லை. நான் இருக்கும் சூழலில் யார், எவ்வளவு ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் என்பது தெரியும். நாவலில் அதை சொல்லியிருக்கிறேன். நான் பொதுமையாக்கவில்லை. புரிகிறதா?
நீங்கள் சொல்வதும் அந்த இடத்தில் நிலவக்கூடிய உண்மையைத்தானே. சொல்லலாம்.
ஆமாம்.

உயிர் நாவலும் ஒரு குடும்ப, சமூக நாவல் தான். ஆனால் அதில் உயிர்த்தல் என்பது முதன்மையாக உங்களை ஆட்கொள்வதைப் பார்க்கிறேன். அது பழையன கழிதலும், உண்மைக்கு முன்னும் பின்னும் ஆகியவற்றிலிருந்து ஒரு தாவலான சிந்தனையாகத் தோன்றியது. ஏனெனில் உயிர் நாவலில் மையமாக வரும் லட்சுமி எந்த வகையிலும் உங்கள் வாழ்க்கைப் பயணத்துடன் தொடர்பு படுத்த இயலாது. ஆனால் அவளுக்கு நீங்கள் அளிக்கும் இறுதியும், அவளுக்கு எதிர்த்தரப்பில் இருக்கும் சிவமணிக்கு அளிக்கும் இறுதியும் நீங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று காட்டியது. லட்சுமியின் வாழ்க்கை எந்த லட்சியவாதம் சார்ந்ததும் இல்லை. ஆனால் சிவமணிக்கு வேலைக்காரியாக இருந்து இறுதியில் ஒரு நல்ல கணவன், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக முடிவது. சிவமணிக்கு அனைத்தும் பறிக்கப்படுகிறது. லட்சுமியின் அந்த இறுதி நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் ஒரு பார்வையைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
வாழ்க்கையில் பணத்தை சம்பாதிக்கும் எல்லாரும் பிரச்சனை இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒரு மினிமலிஸ்டிக் லைஃப் இருக்குல. அந்த வாழ்க்கையை நம்மால் ஏன் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருக்கு. மூன்று வேளை சாப்பாடு இருக்கு, வீடு இருக்கு. நாம் ஒருபோதும் பயன்படுத்தாத சாமான்கள் வீட்டில் இருக்கும், சில விஷயங்களை செண்டிமெண்டலாகவும், சோம்பேறித்தனத்தாலும், பேராசையினாலும், பழக்கத்தாலும் சேர்த்து வைத்துக் கொள்வோம். மத்தவங்க கீழ இருக்கனும், நாம மேல இருக்கனும்னா நம்மகிட்ட காசு இருக்கனும்; நம்ம சுத்தி ஆட்கள் இருக்கனும்னா காசு இருக்கனும்னு நினைக்கிறோம். அது ஒரு பாதுகாப்பின்மை சார்ந்த எண்ணம்னு நினைக்கிறேன். ஏன் அந்த மாதிரி இருக்கனும்? வாழனும்? நாம அப்படி வாழறதுக்காக நிறைய ஏழைகள் விளிம்புல வாழ வேண்டியிருக்கு. அவர்களைப் பார்த்து வெறுப்பு கொள்வது, சோம்பேறி என்று சொல்வது நிகழ்கிறது. ஆனால் பணக்காரர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள். நேர்மையாகவே சம்பாரிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த இடத்தில் அத்தனை போட்டியும், பேராசையும், பொறாமையும் இருக்கிறது. புகழைத்தேடி ஓடுவது, அமைதியின்மைனு நிறைய இருக்கு. சோற்றுக்கில்லாதவர்களுக்கு அந்த வாழ்க்கை பெரிய பிரம்மாண்டமாக இருக்கலாம். ஆனால் அது அவ்வளவு சிறப்பானதல்ல.
இதே விஷயத்தை ஒரு ஏழை கேள்வி கேட்டால் அந்தப்பார்வை வித்தியாசமா இருக்கும். பணம் சம்பாதிப்பது தான் அவருடைய ஒரு வாழ்க்கை நோக்காக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் ஏழையிடம் நான் சொல்ல முடியுமா?
ஆம். அது தன் கனவுகளை கட்டுப்படுத்தச் சொல்வதாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.
ஆமா. அந்தக் கேள்விக்குள்ளும் போக வேண்டியுள்ளது. ஏழைக்கு நீதி வேண்டும். ஆனால் பணம் முழுமையைத் தருவதில்லை என்பதை உணரனும். நாம் எல்லாரும் கச்சிதமாக சரியாக வாழ்கிறோம் என்றும் சொல்ல முடியாது. மனிதர்களால் அப்படி வாழவும் முடியாது. ஆனால் புத்தர் சொல்வது போல ஒரு நடுப்பாதையை தேர்ந்தெடுக்கலாம். பெளத்தத்தில் சொல்லும் எட்டு மார்க்கம் இருக்கிறதில்லயா. அதை முடிந்தளவு ஒரு உயிர் கடை பிடித்து வாழ முயற்சி செய்யலாம். என் வாழ்க்கைக்கு அத்தகைய நடுப்பாதையை தான் தேர்ந்தெடுக்கிறேன்.

உங்களை எழுத்து வழியாகவும், செயல்பாடு வழியாகவும் நோக்கினால் ஒரு வெளியேறிக் கொண்டே இருக்கும் ஆளாகத் தெரிகிறீர்கள். அமைதல் என்பது உங்களுக்கு என்ன?
(சிரிக்கிறார்) எப்படிச் சொல்றது. கடந்த சில வருடங்களாக நான் எந்த ஒரு நிரந்தரமான பணிச்சூழலிலும் இல்லை. யாரையும் பகைத்துக் கொள்ளவோ, யாரும் பார்த்து பொறாமை கொள்ளும் நிலையிலோ இல்லை. அதே சமயம் பரிதாபப்படும் நிலையிலும் இல்லை. (சிரிக்கிறார்). மறந்துட்டாங்கன்னு கூட நினைச்சுக்கலாம். இல்லயா? அமைதி இருக்கு. என்னுடைய வேலை என்பது அரசாங்க வேலை மட்டும் இல்லை. எழுதுவது மட்டும் கூட இல்லை. நடைமுறையில் என்ன செய்யலாம் என்று சிந்தித்து அந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். ஒரு ஐந்து வருடம் நட்பைத் தொடர்வது எவ்வளவு பெரிய அனுபவம்? அதற்குப் பிறகு பிரிந்தாலும் எதிரியாகவோ துரோகியாகவோ ஆகாத நட்பு கிடைப்பது இன்னும் பெரியது. இரண்டு வருடம் கல்லூரிக்கு சென்று பட்டமளித்து பெரும் அனுபவத்தை விடவும் பெரியது. அந்த மாதிரி நிறைய நண்பர்களைப் பெற்றிருக்கிறேன்.
மனிதர்கள் இந்த பூமியைத்தவிர வேறு எங்கும் இல்லை. பிரபஞ்சத்தில் ஆயிரம் லட்சம் கோள்கள் இருந்தாலும் நாம் இங்கு தான் இருக்கிறோம். வேற எங்கையும் நம்மால போய் வாழ முடியாது. இங்க தான் இருக்கனும். நாம் பழகக் கூடிய நபர்கள் என அதிகபட்சமாக வைத்தால் கூட ஆயிரம் பேர் தான் இருப்பார்கள். இதற்குள் தான் நாம் நம்முடைய வலைப்பின்னலை பிண்ணிக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் இந்த வலைப்பின்னலை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். நம் சிந்தனை வழியாக எழுத்து வழியாக அதைச் செய்யலாம்.
நான் ஜப்பானில் மூன்று வருடம் இருந்தேன். அவர்களுடனும் என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது. ஆனால் என்னுடைய தொடர்பு எல்லை மொழி சார்ந்ததாக, இடம் சார்ந்ததாக இருந்தது. அதிலிருந்து விடுபடுவது வழியாக அந்த எல்லையை விரிவாக்கிக் கொள்ளலாம்னு தோணுது. யாதும் ஊரே யாவரும் கேளீர்னு சொல்லிருக்காங்க இல்லையா?
என்னுடைய பையன் கிட்ட ஒரு பெண்ணைக் காட்டி இவ ஏண்டா இப்படி சாய்ந்து சாய்ந்து நடக்கறான்னு கேட்டேன். அவன் உடனே ஏன்மா இப்படி ஜட்ஜ் பண்றனு கேட்டான். நான் எங்கடா ஜட்ஜ் பண்ணறேன். அப்சர்வ் தானே பண்றேன்னு சொன்னேன். இப்ப சாய்ந்து நடக்கறான்னு சொன்னா அடுத்த முறை அவளைப் பார்த்தா அந்த சாய்ந்து நடப்பால்ல அது மாதிரின்னு அவங்களை ஒரு கட்டத்துக்குள்ள அடச்சிடுவ. ஒருத்தர பார்த்தா அதை எதற்குள்ளும் அடைக்காம ஃப்ரியா பாருன்னு சொன்னான். சரி நம்மள விட இளைய சமுதாயம் உலகத்தை சரியா எதிர்கொள்றாங்கன்னு தோணுச்சு. நான் புதுசா கத்துட்டே இருக்கேன். மாற்றம் தேவைப்பட்டா மாத்திட்டே அப்படியே போறேன். வாழ்க்கை முழுவதும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.
நல்ல மனிதராக ஆவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதுன்னு சொல்லலாம். பெரும்பாலும் மதங்களில் அதற்கு குடும்பமே போதும்னு சொல்லுது. ஆனால் அது மட்டும் இல்லை. குடும்பம், சமூகம் எல்லா மட்டத்திலும் அதிகாரம், சுரண்டல் இல்லாமல் இருக்கனும்.

பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களிடம் அல்லது பொதுவாக எழுத்தாளர்களிடம் குடும்பம் எந்த அளவுக்கு சுமையாக இருந்தது அல்லது உதவி செய்தது என்று கேட்பது வழக்கம். உங்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்கத் தோன்றவில்லை. நீங்கள் உரிமையை எடுத்துக் கொள்பவராக வெளியிலிருந்து பார்க்கும்போது தோன்றுகிறது. அது உண்மையா?
(சத்தமாகச் சிரிக்கிறார்) நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அது உங்களுக்கு நடக்கும். ஒரு உறவில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அது நடக்கும். உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல உங்களை நீங்கள் முதலில் வார்த்துக் கொள்ள வேண்டும். உங்களை வார்த்துக் கொள்வதன் வழியாக அந்த இன்னொரு நபரையும் வார்த்துக் கொள்ளலாம். அது தான் என்னுடைய நம்பிக்கை.
அப்பறம் நான் இந்த வீட்டு வேலைகளையெல்லாம் கணக்குப் பார்க்க மாட்டேன். ஏன்னா எனக்கு அது பிடித்த வேலை. எனக்கு ஒரு டைவர்ஷன் வேணும். சமைப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாத்திரம் கழுவுவது எல்லாம் செய்வேன். அடுக்குவதை மாதத்திற்கு ஒரு முறை அல்லது தோணும்போது பண்ணுவேன். நேரமில்லாமல் சில சமயம் செய்ய முடியாது. ஒரு போதும் கஷ்டமாக இருக்குன்னோ, செய்ய மாட்டேன் என்றோ எந்த வேலையையும் செய்யாமல் இருந்ததில்லை. நான் மட்டும் ஏன் இந்த வேலையைச் செய்யனும், அவங்க ஏன் அதைச் செய்யக்கூடாது என நான் எப்பவும் கணக்கு பார்க்க மாட்டேன். சந்தோஷமா வேலை செய்வேன். என் கை, கால் நல்லா இருக்கு. இரண்டு மணி நேரம் என்னால் சமயலறையில் நிற்க முடிகிறது என்பதை உயிர்ப்பா உணர்வேன்.
ஒருவேளை நான் திருமணம் செய்யாமல் நான் தனியாக இருந்தால் எல்லா வேலையையும் நான் தான் செய்யனும். பில் கட்டுவது, கேஸ் கணெக்ஷன் என எல்லாமும். நோய்வாய்ப்பட்டால் தனியா போகனும். வேண்டியவங்களுக்கு எதும் நோய் என்றாலும் தனியாகச் செல்லனும்.

இப்ப எல்லாவற்றுக்கும் எனக்கு ஒரு இணை இருக்கு.
ஆமாம். அவங்களால முடிஞ்சத அவங்க செய்யட்டும். செய்யவே இல்லன்னாலும் துணையாக இருக்காங்கள்ல. ஒரு நல்ல இடத்துக்கு போறோம், சினிமா பாக்கறோம். கூட இன்னொருத்தர் இருப்பது மகிழ்வானதுதான். அந்நியரை விட நமக்குத் தெரிந்தவர், நம்மைத் தெரிந்தவர் நம் அருகில் இருப்பதன் மகிழ்ச்சி. கணவருக்கு என்னைப் பற்றித் தெரியும். எந்த இடையீடும் செய்ய மாட்டார். சின்ன வயதிலிருந்தே நிறைய வேலை செய்து நானும் பழக்கப்பட்டவள் தான்.
ஆனந்தாயி நாவலில் பெண்களின் உடல் உழைப்பு பற்றி பெரிய சித்திரம் கிடைக்கிறது.
ஆமா. ஆனந்தாயி செய்வதில் பாதி வேலைகள் நானும் செய்து வளர்ந்தவள் தான். மட்டுக்கு தண்ணிக்காட்டுவதிலிருந்து, பாத்திரம் கழுவுவது வரை. அம்மில மிளகாய் அரைப்போம். கையெல்லாம் எரியும். நெல்லுக்கட்டு தூக்கறது, மூட்டை எடுத்துட்டு போறது. இப்படி பல. அதனால வேலைப்பளுவா எதையும் நினைக்கறதில்ல. இதக் கூட செய்யலைனா எதுக்கு நம்ம உடம்புன்னும் தோணும். கை சோறு திங்கறதுக்கு மட்டும் இல்ல. வேலை செய்யவும்தான்னு தோணும்.
இன்னொன்னு ”caring”. இன்னொரு உயிர்ல. எங்க மாமியார் கல்யாணத்துக்கு அப்பறம் நீதான் அவனுக்கு இனி அம்மான்னு சொன்னாங்க. நான் அதை அப்படியே லிட்ரலா எடுத்துக்கிட்டேன். நம்ம கூட இருக்கற இன்னொரு உயிருக்கு அந்த அரவணைப்பு முக்கியம். சண்டை வரும். அதெல்லாம் என்னை பாதிக்காது. சண்டை வந்தாலும் டைம் கொடுக்கனும். ஆனால் டைம் எல்லை மீறக்கூடாது. உறவுல நீண்ட அமைதி கூடாது. தேவைப்படற நேரம் குரலை உயர்த்தனும். பாம்பு அது பாட்டுக்கு போய்ட்டு இருக்கும். தடையை வைத்தால் படம் எடுக்கும் அது போல. தேவைப்படும் நேரத்தில் சாம, தான, பேத, தண்டம் என நான்கையும் பயன்படுத்தலாம் தப்பில்ல. (சிரிக்கிறார்)
உணர்வாவும் இருக்கனும் அறிவாகவும் இருக்கனும்னு சொல்றீங்க
ஆமா. Emotional attachment இல்லாம உறவு இல்ல. ஆனால் அது அதிகமாகிவிடக்கூடாது. இளமையில் அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு அதிகமா இருந்திருக்கு. அதனால் நிறைய பாதிப்படைபவர்களை பார்த்திருக்கிறேன். அது இருக்கக் கூடாது.

உங்கள் இளமை காலம் முழுவதும் படிப்பு, போட்டித்தேர்வு என கழிந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. கிட்டத்த துறவறம் போன்றது தான். எப்படி உணர்வு சார்ந்து அத்தனை கட்டுப்பாடுதல்களோடு இருக்க முடிந்தது.
உணர்வு சார்ந்து நான் ரொம்ப செலவிடுவதற்கு நேரம் இல்லை. நினைத்த சில விஷயங்கள் கடைசி நேரத்தில் நடக்காமல் போன சம்பவமும் உண்டு. ஆனால் நான் அதற்காக உடைந்துவிடவில்லை. என்னை வேறு ஒன்று கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தது.
எம்.ஏ படிக்கும்போது ஒரு அசைன்மண்ட் கொடுத்திருந்தாங்க. இரண்டு குழுக்களாக பிரித்திருந்தார்கள். ஒரு புக் தான் இருந்தது. அதை முதல் குழு முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டார்கள். திங்கள்கிழமை சமர்ப்பிக்கனும். ஞாயிறுவரை எங்களுக்கு புத்தகம் வரல. எப்படி எழுதியிருக்காங்கன்னு பார்த்தாகூட எழுதிடலாம்னு அதைக் கேட்டோம். கொடுக்கமாட்டேனுட்டாங்க. எனக்கு அப்பல்லாம் அசைன்மண்ட்னா என்னன்னு கூட தெரியாது. நாங்கள் ஆசிரியரிடம் நேரம் கேட்டுக் கொண்டோம். நான் நூலகத்தில் உட்கார்ந்து பல புத்தகங்கள் ரெஃபர் செய்து எழுதினேன். இறுதியில் என் அசைன்மண்ட் தான் சிறந்தது எனவும், அதைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஷாலினி கோபிக்கர் (ஆசிரியர்) சொன்னார்கள். கடினமாக உழைக்க வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்தது. அதனால் எனக்கு பெரிய அளவில் டைவர்ஷன் இல்லை.
ஐ.ஏ.எஸ் கிடைச்சப்பறம் அகாடமியில் எல்லாரும் ஜோடி ஜோடியாக சுற்ற ஆரம்பித்துவிட்டார்கள். கேடர் மேரேஜஸ் இருக்கும்ல. ஊர், சர் நேம் வச்சு டக்கு டக்குன்னு ஆளுங்கள பிடிச்சிட்டாங்க. நாங்கள்லாம் அங்கையும் லெஃப்ட் அவுட் தான். (சிரிக்கிறார்) அதெல்லாம் எனக்கு வொர்க் அவுட் ஆவல. அதுமேல எனக்கு பெரிய விருப்பமும் இருந்ததில்ல.
உங்கள் போட்டித்தேர்வு காலகட்டம் பற்றி சொல்லுங்க.
சென்னை சி.ஐ.டி நகரில் எஸ்.சி; எஸ்.டி கோச்சிங் செண்டர் இருந்தது. பிரசிடண்ஸி காலேஜ்ல தங்கும் விடுதி. 1978 கல்லூரி முடிந்ததும் முதல் அட்டெம்ட் சும்மா எழுதிப்பார்க்கலாம்னு கொடுத்தேன். க்ளியர் பண்ணிட்டேன். ஆச்சர்யமாக இருந்தது. வருமானவரித்துறை கிடைத்தது. ஆனால் நான் அந்த முறை அகாடமி (Foundation course) செல்வதைத் தவிர்த்து இரண்டாவது முறை எழுதினேன். எங்க அப்பா எம்.எல்.ஏ வாக இருந்தபோது தலைமை என்ஜினியராக இருந்த நண்பரின் மகன் அப்போது ஐ.ஏ.எஸ் ஆக இருந்தார். அவரிடம் அழைத்துச் சென்றார். அவருக்கு என்னைப்பார்த்து, என் தோற்றத்தைப் பார்த்து பெரிய நம்பிக்கை இல்லை. ஐ.ஏ.எஸ் ஆவது அவ்வளவு சாதாரணம் இல்லை என்றார். பதினான்கு மணி நேரம் படிக்கனும் என்று சொன்னார். எப்படி கூட்டி கழிச்சுப் பார்த்தாலும் பதினான்கு மணி நேரம் படிப்பது சாத்தியமில்லை என்று தோன்றியது. ஆனால் அவர் சொன்னதை அப்படியே சவாலக எடுத்துக்கிட்டேன். குளிக்கறது, சாப்பிடறது இந்த நேரம் தவிர எப்படியாவது பதினான்கு மணி நேரம் படிக்கனும்னு வெறியா படிச்சேன். அந்த சமயம் பார்த்து தேர்வு முறையை வேற மாற்றிட்டாங்க. அகாடமிக்ல ஸ்ட்ராங்கா இருந்தா தேர்ச்சி பெற்றுவிடலாம். நான் வரலாறுல கோல்ட் மெடல். ஓரளவு இரண்டாவது முறை எழுதுறப்பவே தெரிந்துவிட்டது. கிடைச்சிடும்னு. அந்த முறை ஐ.ஏ.எஸ் கிடைத்துவிட்டது.
*
ஓவியர் சந்ரு அவர்களின் சிறுகதையை ‘ஊடாக’ என்ற குறும்படமாக இயக்கியிருந்தீர்கள். அதுவும் ஓவியம் சார்ந்தது தான். புதிய கோடாங்கியில் சந்ரு மாஸ்டரின் நவீன ஓவியங்கள் பிரசுரமாகி வந்தன. தலித் ஓவியம் பற்றிய உங்கள் உரையும் கட்டுரை வடிவில் வாசிக்கக் கிடைத்தது. உங்கள் சமீபத்திய ஆவணப்படத்தில் ஓவியம் வரையப்போவதாகச் சொல்லியிருந்தீர்கள். ஓவியத்துடனான உங்கள் பயணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.
ஓவியம் வரைவதை ஒரு திரை போட்டு இப்போ மூடி வச்சிருக்கேன். இப்போது என்னுடைய கைகள் நிறைய வேலையில் மூழ்கிக் கிடக்கிறது. ஒரு Manuscript எழுதிக் கொண்டிருக்கிறேன். நவம்பரில் டெல்லியில் ‘Land Justice Now – Safeguarding Marginalized Communities and Advancing Equitable Distribution Marginalised communities” என்ற தலைப்பில் ஒரு கூட்டம் நடத்தப்போகிறேன். தேசிய அளவில் அதில் உரையாற்றுபவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் இருக்கிறேன். இந்த வருடம் மார்ச் மாதம் சென்னையில் ”Land and politics” என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தேன். இப்படி நிறைய இருக்கு.

அந்த உரையின் காணொளியைக் கண்டேன். நில உரிமை சார்ந்து வினோபா பாவே தொடங்கி வைத்த பூதான் இயக்கம்; 1981-ல் சங்கரலிங்கம் ஜெகந்நாதன், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆரம்பித்த Land For Tiller’s Freedom அமைப்பு ஆகியவற்றை நினைவு கூர்கிறேன். நீங்கள் தலித் நில உரிமை மீட்பு இயக்கத்தை ஆரம்பித்தீர்கள். அதன் முக்கியமான விளைவுகள் பிறவற்றை ஒப்பு நோக்க என்னவாக உள்ளது.
“State” தான் நிலம் சார்ந்த பிரச்சனைகளுக்கான முக்கிய தீர்வு வழங்கும் அமைப்பு. அவர்கள் தான் அதற்கான உரிய திட்டத்தை வகுக்க வேண்டும் இல்லயா. அதற்கு மக்களாக நாம் எத்தனை தூரம் குரல் கொடுக்க வேண்டுமோ அதைச் செய்வது முக்கியம். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் செய்தது மிக முக்கியமான பாராட்டப்பட வேண்டிய திட்டம். ஒரு தனி மனிதராக ஆயிரம் பேருக்கு நிலம் வாங்கிக் கொடுக்க முடியுமானால் ஒரு அரசாங்கத்தால் ஏன் முடியாது என்ற கேள்வியை அது எழுப்பியது. அதற்கு காரணம் என்ன என்பதை சிந்திக்க வைக்கிறது. அரசாங்கத்தைக் கேள்வி கேட்கிற, அரசாங்கத்திற்கு முன்னுதாரணமாக விளங்குகிற, திரும்பிப் பார்க்க வைக்கிற திட்டங்களில் ஒன்றாகவே நான் அவ்வமைப்பைப் பார்க்கிறேன்.
நாங்கள் அழுத்தம் கொடுப்பது ஏற்கனவே இருக்கும் நிலத்திற்கான சட்டத்தை திருத்தியமைப்பது பற்றி. ஒரு குடும்பத்துக்கு ஐந்து ஏக்கர் விவசாய நிலம் கொடுக்க வேண்டும். அது விவசாயம் சார்ந்து இயங்கும் குடும்பங்களுக்கு மட்டும். நிலத்தை தரிசாக விடுவது நியாயமில்லை. இங்கு தலித்து நிலம் கொடுத்தால் விற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அது ஏன் என்று யோசித்துப்பார்க்க வேண்டும். அதைத் தவிர்க்க விவசாயத்தை தொழிலாக செய்யத் தயாராயிருப்பவர்களுக்கு மட்டும் அது அளிக்கப்பட வேண்டும். இப்போது மக்களிடம் நிலத்தை சொத்தாகப் பார்க்கும் மனப்பான்மை உள்ளது. அந்த மனநிலை நிலத்தை சேர்த்து வைக்கும் எண்ணத்தை அளிக்குமேயன்றி விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அளிக்காது. Land ceiling சட்டத்தை திருத்தியமைப்பதன் வழி இதை மாற்றலாம்.
விவசாயம் ஒரு லாபகரமான தொழில் இல்லை அல்லது செத்துப்போச்சு என்ற கட்டுக்கதை மக்களிடம் புழக்கத்தில் இருக்கு. பண்ணை விவசாயம் தான் லாபகரம் என்ற நோக்கும் திணிக்கப்பட்டுள்ளது. அது மேலிருந்து உருவாக்கப்படும் ஒரு போலிப் பிம்பம். அறிவாளிகள், அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் கூட இதை உண்மை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதை நாம் களச்செயல்பாடுகள் மூலம் களைய வேண்டியுள்ளது. அதைச் செய்கிறோம்.
இயற்கை விவசாயத்தை நோக்கிய நம்முடையை பயணத்திற்கு விவசாயம் சார்ந்த அதைச் செய்யக்கூடிய விவசாயிகளின் தரப்பிலிருந்து சரியாக lobbying செய்ய வேண்டும். இல்லையெனில் பசுமைப் புரட்சியில் அரிசியும், கோதுமையும் மட்டும் பிரதானமாகி பிற நாட்டுப் பயிர்களை அழித்தது போல ஆகிவிடும். அதை மாற்றி அமைக்க நமக்கு வலுவான குரல் வேண்டும். அதைச் செய்கிறோம். நிலம், விவசாயம் சார்ந்த திருத்தங்கள் பற்றி பேசினா நிறைய பேசிட்டே இருப்பேன்.

தலித் ஓவியம், தலித் இலக்கியம் என்ற இயக்கம் தொண்ணூறுகளில் ஆரம்பித்தது. கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. தலித் எனும் அடையாளத்துடனும், அதைக் கடந்தும் எழுதும் போக்கு எவ்வாறு மாறி வந்திருப்பதாக நினைக்கிறீர்கள். அதன் செல்திசை பற்றிய உங்கள் அவதானிப்புகளைச் சொல்லுங்கள்.
ஓவியத்தைப் பற்றி ஒரு கலை நுகர்வராக சிலவற்றை சொல்ல முடியும். கண்ணுக்கு காட்சியைத் தூண்டக்கூடிய, ஒரு புதிர் தன்மையுடன் கூடியவற்றை விரும்புகிறார்கள். புனைவுகளும், கதைகளும் ஏற்றப்பட்ட ஒன்றாக ஓவியங்கள் காலத்தில் மாறுகின்றன. பிக்காஸோ துண்டு துண்டான ஓவியம் வரைந்ததற்கான தூண்டுதலாக உலகப்போர் காட்சிகள் அமைந்தது. அது அவருக்கு தூண்டுதலாக அமைந்தது. உடனேயே அதைப் பார்த்து தூண்டப்பாடாதவரும் அதே போல வரைகிறார். ஒரு பேட்டர்னை உருவாக்கிக் கொள்கிறார்கள். எழுத்திலும் அந்த பேட்டர்ன் இருக்கிறது. அதை மறுக்க முடியாது. சில சமயம் சாருநிவேதிதாவின் எழுத்துக்களைப் படிக்கும் போது நான் எழுதியது போல இருக்கிறதே என்று நினைப்பதுண்டு. அந்த நக்கல், நையாண்டி ஆகியவைகளை ஒப்பிட்டு அவ்வாறு தோன்றும். அப்படி ஒருவர் எழுதுவதன் வழியாக அவரவருக்கான பாணி உருவாகி வருவதை மறுக்கமுடியாது தான். ஆனால் நகல் செய்வதன் மேல் எனக்கு ஒவ்வாமை உள்ளது.
ஓவியம், கலை இவற்றில் நம்மை அமைதிக்கு அழைத்துச் செல்லக்கூடியவற்றை விரும்புகிறோம். கொண்டாடுகிறோம். எல்லா ஓவியங்களையும் Decode செய்ய முடியாது. ஆனால் ஓவியர் பற்றிய அறிமுகத்துடன் அதைச் செய்ய முடியும். ஆசிரியர் செத்துவிட்டார் என்று சொல்வார்கள். ஆசிரியரே கடந்துவிட்டார் என்று சொன்னாலும், ஒரு காலகட்டத்தின் எழுத்தாக இருக்கும்போது அந்த காலகட்டத்தில் அவர் இயங்கிய விதத்தை அறிந்து கொள்வதன் வழியாக Decode முழுமையாக அமையும். எப்படி பிக்காஸோவை அறிந்து கொண்டவுடன் அவரைத் தேடிச் செல்கிறோம் இயல்பாக அதுபோல.
இப்போது உள்ள காலகட்டம் எனக்கு அத்தனை மோசமாகப் படவில்லை. கடந்த காலத்தின் வசதிக் குறைவுகள் இப்போது இல்லை. ஆனால் மனிதர்களுடைய அடிப்படை குணாதிசையங்கள் மாறவில்லை. இவை எல்லாவற்றுடனும் தான் நாம் வாழ்கிறோம். தனிமனிதரின் மனமாச்சர்யங்களை வெளிக்கொணர்வதும், அதன் மேல் கவனம் செலுத்துவதும் முக்கியம். அதை மறைக்க வேண்டாம். யார்வேண்டுமானாலும் தலித் எழுத்தை எழுதலாம். ஆனால் எழுதும் நபர் சாதியம் இயங்கும் விதத்தை சரியாக புரிந்து கொள்பவராக, தன்னையே சுய விமர்சனம் செய்பவராக இருக்க வேண்டும். அது இல்லையென்றால் தலித் எழுத்து என்று சொல்லிக் கொள்வதில் நியாயம் இல்லை. எழுத்தாளர்களின் பெற்றோர்கள், சுற்றத்தார், சமூகம் என எல்லோரும் எந்தளவு யோக்கியர்களாகவும் அல்லது அயோக்கியர்களாவும் இருந்திருக்கிறார்கள் என்ற புரிதல் அவர்களுக்கு வேண்டும்.
ஒரே வாழ்க்கை நம்முடையது. இந்த வாழ்க்கையில் ஏற்கனவே நம் பெற்றோர்கள், வழி வழியாக வந்த விஷயங்களை எந்தவித மதிப்பீடும் செய்யாமல் கையில் எடுத்துக் கொள்வது நல்லதா? காலம் காலமாக வந்தது என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. பல புரட்சிகள், மறுமலர்ச்சிகள் என அனைத்தையும் தாண்டி தான் நாம இங்க இருக்கோம். சமூகத்தின் அரசியல், கட்டமைப்பை சரியாக அவதானிக்க வேண்டும். குறுகிய வட்டத்தில் இயங்கக் கூடாது. குறுகிய மனப்பான்மையுடன் தான் தலித் இலக்கியத்தைக் கேள்வி கேட்பார்கள்.
ஒரு பெண்ணாக அடிப்படையில் அவள் உணர்வதை, அவளை பாதிப்பதை, அவளுடைய சிந்தனைகள் ஆண்களை, சமூகத்தை பாதிப்பதைப் பற்றி எழுதுவதை நிறுத்திக் கொள்ளச் சொல்லலாமா?
அதை இயல்பு எனலாமா?
இயல்பு மட்டுமல்ல. அதை ஒவ்வொரு முறையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன். என்னுடைய நண்பர் ஒருவரை ஒரு உரைக்காக பேச அழைத்திருந்தனர். ”தலித் – இலக்கியம் என்று சொல்கிறார்கள். இலக்கியத்துக்கும் தலித்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இது அவசியமில்லாதது” என்று அவர் உரையில் பேசினார். நல்ல வேளையாக அவர் பேசி முடித்தவுடன் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது. ”இலக்கியத்திற்கும் நாட்டிற்கும் என்ன தொடர்பு? இந்திய இலக்கியம் என்கிறோம், மேற்கத்திய, கீழைத்தேய என்கிறோம். பெண்ணுக்கும் இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு? பெண் எழுத்து என்று கூறுவதில்லையா என்று கேட்டேன். இந்த முன்னொட்டுக்கள் என்ன வேலை செய்கின்றன? அதிலிருக்கும் கேள்விகள் என்ன? அது சூழலில் ஏற்படுத்தும் தொந்தரவு என்ன? அதெல்லாம் முக்கியமில்லையா” என்று கேட்டேன். கேள்விகளின் பின்புலத்தைப் பார்ப்பதில்லை நான். ஒன்றை எழுத வேண்டாம் என்று சொல்வதோ மறுப்பதோ தேவையில்லை. அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டால் தன்னியல்பாக அது இல்லாமலாகிவிடும்.
தலித் இலக்கியம், ஓவியம் சார்ந்து வெறும் தன் அனுபவத்தை அப்படியே சொல்வதின் மேலும் எனக்கு உடன்பாடு இல்லை. வெறும் சமபவங்களை சொல்லிக் கொண்டே போவதில்லை இலக்கியம். ஒரு சிந்தனை இருக்க வேண்டும். கேள்விகளை நோக்கி, ஒன்றின் எல்லா சாத்தியங்களையும் செய்து பார்க்க வேண்டும். அது நம் அறிவை/மகிழ்வை/உணர்வை மேம்படுத்த வேண்டும். எழுத்து அறம், விழுமியங்கள் சார்ந்த கருவியை நம் கையில் அளிக்கிறது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.

உங்கள் கதைகளில் கனவு முக்கிய இடத்தை வகிக்கிறது. கெளரிக்கு, நீலாவுக்கு, லட்சுமிக்கு வரும் கனவுகளை உதாரணமாகச் சொல்லலாம். அது அக்கதைக்கு சிறிய அளவிலேனும் விளங்கிக் கொள்ள இயலாத அம்சம் சார்ந்த கேள்வியை எழுப்புகிறது.
“Language of Mirror” என்ற என்னுடைய ஆங்கில நாவலில் எப்படி கனவுகள் தனக்கு முன் கூட்டியே நடக்கவிருப்பதை அறிவித்தது என்பதை உணரும் தருணம் இருக்கும். எல்லா கனவுகளும் நமக்கு நினைவில் இருப்பதில்லை. எப்போதாவது அது முன்னறிவித்ததை உணரும் வாய்ப்பு நமக்கு அமைகிறது. ஃப்ராய்டும், ஓரளவு சார்த்தரும் கனவுகள் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். சமயத்தில் கனவு என்னை வழி நடத்துவது போல இருக்கும். மோசமான கனவுகள் வரும்போது அன்று முழுவதும் ஒரு பாதுகாப்பு உணர்வுடன் இருப்போமில்லயா. உடலும் சோர்வடையும். இரண்டு மூன்று படிகள் தாண்டி குதிக்கனும்னு திட்டம் போட்டால் கனவு சற்று அமைதிப்படுத்தும். தடுக்கும். ஏதோவகையில் மனிதனுக்கு அது பாதுகாப்பு வழிமுறையாக இருந்திருக்கலாம். அதற்கு பெரிய முக்கியத்துவமும் இல்லை. அதே சமயம் முக்கியத்துவம் இல்லாமலும் இல்லை. கனவு பற்றிய வரிகளைக் குறிப்பிட்டு சிலர் என்னை மாறிட்டிங்க என்பார்கள். (சிரிக்கிறார்..)
ஆனந்தாயியில் ஒரு சகோதரன் ஏன் இறந்தான் என்றே தெரியாமல் சிறுநீர் கழிக்கப்போகும்போது இறந்தது; பல பெண்களுடன் தொடர்பிலிருந்த பெரியண்ணன் லஷ்மியை உதற முடியாமல் இருப்பது. அவளை யட்சி நிலையாக சித்தரிப்பது என சிலவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு சாமியாடி கதாப்பாத்திரம் கூட உண்டு. ஒரு குழந்தை முதன்முதலில் சந்திக்கும் மரணம் மிகவும் தொந்தரவு தரக்கூடியது. முழு வயது வந்து சாகாமல் இடையில் மரணிக்கும் நிலை மனச்சிக்கலுக்கு ஆளாக்கும். நம்மைப் பற்றி, வாழ்வு பற்றி, மரணத்தைப் பற்றி என ஆழமாக யோசிக்க வைக்கிறது. விடுபட்டுவிடலாம். சில காலம் எடுத்துக் கொள்ளும். ஆனால் சிலரால் தாங்கிக் கொள்ளவியலாமல் அதீத உணர்ச்சிவசப்படுவாங்க. அந்த உணர்ச்சிவசம் அவர்களுடனேயே பிறந்தது என நினைக்கிறேன்.

பிறழ்வு நிலைக்கு சென்று அந்த நிலையிலிருந்து எழுத்தும் உண்டு.
ஆமாம். உண்டு. நமக்கு இல்லை என்பதால் யாருக்கும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. நம்மளும் சில சமயம் ஒரு பிறழ்வு நிலையிலிருந்து சில உறவுகளை எதிர்கொள்கிறோம் தான். எழுதறோம் தான். முழுவதும் மறுக்க முடியாது. கதையில் இதெல்லாம் வரக்கூடாது. சரியாக ஒரு அரசியல் புனைவாக மட்டுமே வர வேண்டும் என்று நினைத்து எழுதினால் அது சரியில்லை.
அந்த நிலையும் சுயத்தின் ஒரு பகுதி தானே.
மனித வாழ்வின் ஒரு பகுதி என்று சொல்வது சரியாக இருக்கும். எழுத்தை வாசிக்கும் ஒரு நபர் நமக்கும் இப்படி ஒரு கனவு வந்தது என்று தொடர்பு படுத்திக் கொள்வார்கள்.
வேறு எந்த இடத்தையும் விட கனவுப்பகுதி எல்லாரையும் தொடர்புபடுத்துவதாக உள்ளது. அங்கு நாம் எந்த தடையும் இல்லாமல் எல்லோரையும் சந்திக்கிறோம்.
ஆமாம். எல்லா மனிதர்களையும் மிக இயல்பாக சந்திக்கிறோம். தொடர்புபடுத்திக் கொள்கிறோம்.
சிவகாமி குரல்:
*

***
ப.சிவகாமியின் புனைவுலகம் சார்ந்த கட்டுரைகள்:
- மாபெரும் இயந்திரம் – ஜெயமோகன்
- சிவகாமியின் உண்மைக்கு முன்னும் பின்னும் நாவல் பற்றிய விவாதம் – ஜெயமோகன்
- சிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம் – அ.ராமசாமி
- ஒரு காலகட்டத்தின் பெண்கள் – ஆனந்தாயி – ரம்யா
***
