ஒரு காலகட்டத்தின் பெண்கள் – ஆனந்தாயி – ரம்யா
(ப.சிவகாமியின் ஆனந்தாயி நாவலை முன்வைத்து)

”இந்தியப் பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் முக்கியமான நாவல்களில் ஒன்று” என எழுத்தாளர் ஞானி ஆனந்தாயி நாவலைப் பற்றி குறிப்பிடுகிறார். உண்மையில் சாதி, மதம் சார்ந்த எந்த மட்டத்திலும் பெண்களின் நிலை ஒன்றாகத்தான் இருக்கிறது என்ற பட்சத்தில் இந்த மதிப்புரை சரியானதே. ஆனால் ஆனந்தாயி நாவலை வாசித்து முடித்தபின் இது அப்படி மட்டும் வரையறுக்கப்பட வேண்டியதல்ல என்று தோன்றியது.
2025-ல் நின்று கொண்டு 1992-ல் எழுதப்பட்ட ஆனந்தாயி நாவலைப் பார்க்கும் போது கடந்துவந்துவிட்ட ஒரு தலைமுறைக்குள் நுழைந்து எழுந்த எண்ணம் வருகிறது. ஆண்-பெண் உறவுச்சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் இன்று வெவ்வேறு பரிமாணங்களை அடைந்துவிட்டது. பெண்ணுக்கு உறவில் பெருமளவு சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரம் இன்று உள்ளது. ஆனால் எல்லாப் பெண்களுக்கும் அல்ல. ஏனெனில் அரசியல், அதிகாரம், பொருளாதாரம், சமூகம் என எல்லா மட்டத்திலும் ஆண்மையப் பார்வை அகலாத காலகட்டத்தில் வாழ்கிறோம் என்ற பிரக்ஞையுடன் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. எனில் யாருக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது? முதலாவது பொருளாதாரத் தன்னிறைவு அடைந்த பெண்களுக்கு. கல்வியாலும், கல்வியல்லாமல் சுயமான உடலுழைப்பினாலும் இதுவரை சமூகம் பொருளாதரம் சார்ந்து அங்கீகரிக்காத வீட்டு வேலைகளிலிருந்து வெளியேறி அல்லது அதையும் செய்து கொண்டே பொருளாதார தன்னிறைவு அடைந்தவர்கள். இரண்டாவது நவீனச்சிந்தனை கொண்ட பெற்றோர்களுக்குப் பிறந்த பெண்களுக்கு. இந்த இரண்டும் கூட சில சமயம் சமூகக் கட்டமைப்பின் காரணமாக அந்த சுதந்திரமான முடிவிற்குத் தடையாக இருந்திருக்கிறது.
”முதலாளித்துவ ஆணாதிக்க மனோபாவத்தின் வழியாகவே சமகாலத்தின் பொருளாதாரக் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. போர் மற்றும் வன்முறை, இயற்கை மற்றும் பன்மைத்துவ கலாச்சாரத்துக்கு எதிரான போராட்டங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆகியவற்றின் வழியாகவே இந்தப் பொருளாதாரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது” என செயற்பாட்டாளர் வந்தனா சிவா ஒரு உரையில் குறிப்பிடுகிறார்.
இந்த ஒடுக்குமுறைகளும் வன்முறைகளுமே மெல்ல குடும்பம், சமூகம் என்ற கட்டமைப்பின் மீதான நம்பிக்கையைக் குலைத்து மனிதர்களைத் தனியர்களாக்கியிருக்கிறது. இந்த நூற்றாண்டின் பிரச்சனையே இந்த தனித்தலையும் உடலும், மனமும் தான். இந்தப்போக்கிற்கான மூல காரணத்தின் சுவடுகள் ஆனந்தாயி நாவலில் தென்படுகிறது. பெண் நோக்கில் பெண்களின் மனம் மற்றும் புற வெளியை விரித்துக் கூறும் இந்நாவலில் நாம் வந்தடைந்திருக்கும் நூற்றாண்டின் ஆதிச்சுவடுகள் தெரிகின்றது.
”ஆனந்தாயி” எழுத்தாளர் ப.சிவகாமியின் இரண்டாவது நாவல். 1992-ல் வெளியானது. 1975-களிலிருந்தே சிறுகதைகள் எழுத ஆரம்பித்தவர். பெண்ணாக, தலித்தாக ஒடுக்குமுறை பற்றிய அனுபவத்தை உணர்ந்தவர் எனினும் இணையாக அதிகாரம் சார்ந்த சமூக-பொருளாதார கட்டுமானத்தை ஆட்சிப்பணி, அரசியல், களப்பணி, அமைப்புச் செயல்பாடுகள் வழியாக உணர்ந்தவரும் கூட. இந்தப்பின்னணியில் நின்று கொண்டு அவர் வாழ்க்கை நோக்கு விரிவடைவதையே நாவலின் கட்டுமானம் காண்பிக்கிறது.
ஆனந்தாயி நாவலின் கட்டுமானத்தை சிந்தித்துப்பார்க்கையில் இது ஒரு காலகட்டத்தின் சமூக-பொருளாதார-அரசியல் கட்டமைப்பின் மேல் நின்றிருக்கும் சமூகம், ஊர், குடும்பம், கதைமாந்தர்கள், மதிப்பீடுகள், அறம், உணர்வுகள் சார்ந்த கதை என்பதைக் காணலாம். ஒட்டுமொத்தமாகவே இந்தக் கட்டமைப்பு ஆண்மையமானது. இதற்குள் ஆனந்தாயி உள்ளிட்ட பெண்களின் வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது. இந்த அடுக்கின் மேல் மட்டத்தில் காண்பிக்கப்படுவது எம்.எல்.ஏ-வான ராசு முதலியார். அவருக்குக் கீழ் இயங்கும் பல்வேறு அதிகாரம், பொருளாதாரம் சார்ந்த போட்டிகளில் பங்கு பெரும் ஆண்களில் ஒரு மிகச்சிறு துளியே பெரியண்ணன் மற்றும் கங்கானி. அவர்கள் குடியிருக்கும் கிராமம் மெல்ல நகரமாக உருவாகி வரும் காலத்தில் இவ்விருவரின் குடும்பங்களின் வாழ்வே நுணுக்கமான வடிவில் கதையாகியுள்ளது.
மேலோட்டமாக வாசித்தால் இது ஆனந்தாயியில் தொடங்கி ஆனந்தாயியில் முடியும் அவளின் பாடுகளைச் சொல்லும் நாவலாக மட்டுமே வாசிக்கச் சாத்தியமுள்ளது. இன்னும் கூர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் அவளின் ஐந்தாவது மகளின் பிரசவத்தில் ஆரம்பித்து மூத்து சுருண்டு பேத்தியுடனான உரையாடலில் முடிவடையும் நாவலாக மட்டுமே வாசிப்பு நிகழும் வாய்ப்புள்ளது. ஆனால் நாவல் செல்லச் செல்ல அது மட்டுமல்ல என்பதை உணர முடியும். உணர்வுகளின் சிதைவு, பெண்களின் சிதைவு, குடும்பத்தின் சிதைவு என சிதைவின் கதையாக மட்டும் வாசிக்கச் சாத்தியமும் உள்ளது. ஆனால் ஆனந்தாயி மேலதிக வாசிப்பைக் கோரும் நாவல்.
இந்த நாவலின் மையமாக இருப்பது பெரியண்ணன் மற்றும் அவனைச்சுற்றியுள்ள ஆண்கள், அவனின் எதிரிகளாக இருக்கும் ஆண்கள், அவனுடைய அதிகார வேட்கை பண வேட்கைக்கும் உடன் இருக்கும், குறுக்கே நிற்கும் ஆட்கள். பெரியண்ணன் முதலில் அறிமுகமாவது ஒரு காமுகனாகவே. அவனால் தன் வாழ் நாளின் இறுதிவரை அடக்க முடியாததாக இருப்பது காமம். பெண், பெண் உடல் மீதான பெரும்பித்தனாகவே அவன் நாவல் முழுவதும் சித்தரிக்கப்படுகிறான். ஆனால் அவன் அதுவாக மட்டுமல்லாமல் தகப்பனாகவும், பணம் சம்பாதிப்பவனாகவும், பிற ஆண்களுக்கு முன்னால் கெளரவமாகவும் ஆணவத்துடன் வாழ வேண்டிய நிர்பந்தங்களை இந்த சமூகமும் அதனால் உந்தப்பட்ட அவனின் உடலும், உள்ளமும் அளிக்கிறது. இந்தப் பெரியண்ணனின் மனைவியாக ஆனந்தாயியும், இவ்விருவருக்கும் பிறக்கும் பிள்ளைகளாக மணி, கலா, பாலன், தனம், அன்பு, அருள் ஆகியோரும் அறிமுகமாகிறார்கள். இவர்களின் உறவினரான வடக்கத்தியான் குடும்பம், அவர்களின் மகள் பூங்காவானம் ஆகியோர் நாவலின் மைய கதாப்பாத்திரங்கள். வடக்கத்தியான் குடும்பத்தை கவனிக்காத ஆளாகவும், இதனால் பாதிக்கப்படும் பூங்காவனத்தின் கல்வியும் நெருடலை அளிக்கிறது.
பெரியண்ணனின் மகனான மணி உருவாகி வருவதன் வழியாக இத்தகைய கட்டமைப்பு உருவாக்கச் சாத்தியமான அடுத்த தலைமுறை ஆண்களைக் கண்டுகொள்ள முடிகிறது. மணியின் குரூரம் வெளிப்படும் இடம் பெரியண்ணன் இரண்டாவது மனைவியாகக் கூட்டிவந்த லஷ்மிக்கும் பெரியண்ணனுக்குமான தகறாரில் அவளை ஓங்கி நெஞ்சில் மிதித்த இடம் தான். அதன்பின் அவன் பெரியண்ணனாக ஆகி வருவதையே நாவலில் பார்க்க முடிகிறது. கங்கானியின் மகன்களில் நொள்ளைக்கண்ணன் வன்முறையாளனாகவும், ராஜமாணிக்கம் ஒழுக்கக் கேடானவனாகவும் உள்ளனர். பூங்காவனத்துடன் உடல் பிணைப்பு ஏற்பட்டு குழந்தை உருவான பின் ஓடிப்போன துரையும், தனம் கிடைக்காததால் உயிரை மாய்த்துக் கொண்ட டேனியல் கூட இதே தலைமுறையைச் சேர்ந்த ஆண்கள் தான்.
இவற்றைக் கொண்டு ஆனந்தாயி நாவலை வெறும் ஆணாதிக்கத் தளத்தில் புழங்கும் பெண்கள் பற்றிய நாவல் என்று சொல்லிவிட இயலுமா? சுயம் மீது மோகம் கொண்டவர்களை ஆண்-பெண் என்று பிரிக்கத் தேவைவில்லை. இது சுயநலம் கொண்டவர்களுக்கும் அன்பாளர்களுக்கும் நடக்கும் உரையாடல் என்று பொதுவாகச் சொல்லலாம். காலம்காலமாக அன்பாளர்கள், கருணையுடன் அரவணைத்துக் கொள்ளும் இன்னொரு தரப்பு பற்றிய நாவல் இது. ஆனால் அன்பாளர்கள் ஒரு தலைமுறையில் அடையும் வீழ்ச்சியும், இன்னொரு தலைமுறையில் அதன் வீரியம் குறைவதற்கான வாய்ப்பாக பொருளாதார சுதந்திரத்தை நோக்கிச் செல்வதையும், அவர்களுடைய கொடுமையை சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற நிலை இனி வரும் தலைமுறைக்கு இல்லை என்பதைச் சுட்டும் விதமாகவே பூங்காவனத்தின் வாழ்வு சொல்லப்படுகிறது. அதே தலைமுறையைச் சேர்ந்தவர்களாக கருதச் சாத்தியமுள்ள அருள், தனம், கலா ஆகிய பெண்களின் வாழ்வுடன் ஒப்பிட்டால் பூங்காவனத்தின் இந்த முடிவு எப்படி மெல்ல மெல்ல எட்டப்பட்டிருக்கிறது என்பது புலனாகும்.
தனம் தன்னளவில் சுயநலவாதி என்றாலும் அவள் பெரியண்ணன் அளவுக்கு சுயநலவாதி இல்லை. டேனியேல் என்ற காதலனைப் பரிகொடுத்தவளாக, திருமணமான இடத்தில் கொடுமையை அனுபவிப்பவளாகவும் இருந்தாலும் எந்தவித மாற்றத்தின் மேலும் சிரத்தையில்லாதவளாக இந்த சுயநல உலகத்தின் விளைபொருளாகவே இருக்கிறாள். காரணம் தன் பொருளாதாரத்தை தான் பார்த்துக் கொள்ளவே சுயம் மீதான மோகம் சற்று அமிழ வேண்டியுள்ளது. பிறர் தான் மகிழ்வாக இருப்பதற்காகவே இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் வரும் அசிரத்தையே தனத்திற்கு இருப்பது. கலா நல்ல குணமுடையவள் என்றாலும் தன் அறியாமையினால் பொருளாதாரத் தன்னிறைவைக் கை கொள்ளாதவள். ”அருள்” என்ன மாதிரியான ஆளாக வருவாள் என்பது பற்றிய திட்டவட்டவட்டமான குறிப்பு நாவலில் இல்லை என்றாலும் அப்பா மீது பாசம் கொண்டவள். கலா அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழப் பழகியவள். இந்த மூன்று பெண்களுமே பெரியண்ணனின் மகள்கள் என்பதால், அவன் பொருள் தேடுவதில் சிறப்பாக செயல்பட்ட காலத்தில், வீடு செழிப்புடன் இருந்த காலத்தில், சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்பதாலும், கல்வி பெரிய அளவு குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததாலும் இவர்கள் பொருளாதரத் தன்னிறைவு நோக்கிச் செல்ல வாய்ப்பமையாமல் ஆனது எனலாம்.
ஆனால் பூங்காவனம் இவையாவற்றையும் வெளியில் இருந்து பார்க்கும் குடும்பத்தைச் சேர்ந்தவள். சுயமாக உழைக்கத் தெரிந்தவள். துரை அவளைக் காதலித்து பிள்ளை கொடுத்து குடும்பத்திற்கு அல்லது பொறுப்பேற்க பயந்து ஓடிச் சென்றபோது உடைந்து போனாலும், அவன் திரும்பி வந்தபின் அவனை ஏற்க மறுக்கிறாள். சுற்றியிருப்பவர்கள் அவனை ஏற்றுக் கொள்ளச் சொன்னாலும் அவள் முடிவில் திடமாக இருப்பது முந்தைய தலைமுறையின் தாக்கம் என்பதாகவே தெரிகிறது. சிறந்த முடிவு என்று சொல்வதை விடவும் ”முதல் மீறல்” என்று வரையறுக்கலாம். “பொம்பளைங்க புருஷனோடு வாழ்ந்தால் தான் அழகு” என்று சொல்லும் ஆனந்தாயியிடம் “ஒரு தடவை பட்டாச்சு, பட்டும் புத்தி வர்லன்னா” என்று கூறுகிறாள். இதைக் கேட்டவள் தான் எப்படி பெரியண்ணனிடம் அத்தனை கொடுமைகளுக்குப் பின்னும் காலந்தள்ளினோம் என சிலிர்த்துக் கொள்கிறாள்.
அருள் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்னரே அம்மா மீது பாசம் கரை புரள்வதாக சொல்லப்படுகிறது. கலாவிற்கும் அதே நிலைமை தான். அம்மா ஆகும்போதே அம்மாவின் நிலைமையை அறிந்து கொள்கிறார்கள் என்ற வரிகள் இயல்பாக நாவலில் வருகிறது. தன் அம்மா அப்பாவிடம் எதன் பொருட்டு பொறுத்துக் கொண்டாள் என்றும், எதனால் இன்னொருத்தருடன் ஓடிவிடாமல் அவனுடனான தாம்பத்தியத்துக்கு மட்டும் காத்திருந்தாள் என்றும் புரிந்து கொள்கிறார்கள்.
ஆனால் வாசகர்களுக்கு இறுதியில் தான் ஆனந்தாயியின் முன்வரலாறு கனவு போல, ஒரு புகை போல சொல்லப்படுகிறது. அதன் வழியாக அவளைப் புரிந்து அணைத்துக் கொள்ள முடிகிறது. சிறுமியாக இருக்கும்போது திருமணம் செய்து கொண்டவள் ஆனந்தாயி. காமம் மகிழ்வான, கொண்டாட்டமான ஒன்றாக அல்லாமல் அருவருப்பும், வெறுப்புமான ஒன்றாக பெரியண்ணன் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டவள். காமத்தை எல்லா இடங்களிலும் தேடுபவனாக பெரியண்ணன் இருக்கிறான். அடங்கிப் போய் அடிவாங்கிக் கொள்பவளாக சிறுவயதிலிருந்தே உடன் இருப்பவளை அவன் பொருட்படுத்தத் தகுதியில்லாதவளாகக் கருதுகிறான். அவன் காமத்தில் மயங்கிப் போய் விழுந்து கிடந்த லஷ்மி மாதிரியான ஒரு பெண்ணை ஒருவேளை பெரியண்ணன் திருமணம் செய்து கொண்டிருந்தால் அவன் நிலைமை சற்று கட்டுக்குள் இருந்திருக்கலாம். லஷ்மியின் வாழ்க்கையும் நன்றாக இருந்திருக்கும். ஆனந்தாயி – பெரியண்ணன் – லஷ்மி ஆகிய மூன்று பேருக்கும் இடையிலான முக்கோணக் காதல் வழியாக வரும் உறவு, உணர்வுச் சிக்கலும் நாவலில் தீவிரமாக உள்ளது.

லஷ்மி முதலில் நமக்கு அறிமுகமாவது அவளின் உடல் அழகைக் கொண்டு தான். சீனித்தேவனின் மகள், மூணாறு என்னும் மலை நாட்டைச் சேர்ந்தவள். ஏழைக் குடும்பம். காடும், மலைத்தேனும் என கனவுகளைச் சுமந்தலைபவள். கடைசி வரை ஒரு இணையான காதலைத் தேடிக் கொண்டிருந்தவள் எனலாம். பெரியண்ணன் – லஷ்மி என்ற இருவரின் வழியாக ஆண்- பெண் உறவிலுள்ள ஆணவ விளையாட்டு உச்சமாக வெளிப்படுகிறது நாவலில். ஆண்மைய சமூகத்தில் பொருளாதாரம், அதிகாரம் ஆகியவற்றில் உயர்ந்து இருப்பதால் பெரியண்ணனால் இயல்பாக லஷ்மியை வெல்ல முடிகிறது. பிடிக்கவில்லை எனில் பிரிந்து செல்ல முடியாதபடிக்கு கையறு நிலையில் அவள் இருப்பதே இந்த உறவைத் தொடரச் செய்கிறது.
இறுதியில் லஷ்மியின் இறப்பு நிகழ்கிறது. அது நாவலில் பெரும் அலைக்கழிப்புடன் கூடிய இடம். பெரியண்ணன் உடையும் இடமும் கூட. அவனை உடைக்கக்கூடிய ஒன்று என உலகில் இருந்த ஒரே கருவி தான் மட்டுமே என்று உணர்ந்த லஷ்மி எடுத்த முடிவே அவளின் மரணம். உடலைத் தவிரவும் வேறு எதுவாகவும் பார்க்கப்படாதவள் லஷ்மி. உண்மையான அன்பிற்காக ஏங்கியவள். பெரியண்ணன் அவள் மேல் அளவுக்கு அதிகமாக அன்பு வைத்திருந்தாலும் அவன் அவளிடம் மரியாதைக் குறைவாக நடந்ததால் இரண்டு முறை வெவ்வேறு நபர்களுடன் ஓடிப்போகிறாள். எத்தனையோ பெண்களைக் கூடியிருந்த பெரியண்ணன் லஷ்மியை மட்டும் மிகச் சாதரணமாகக் கடந்து போக முடியவில்லை. நாவலில் அழகியாக, சாமி வந்து ஆடுபவளாக, வேறு எந்தப் பெண்ணைப் போலவும் அடங்கிச் செல்லாமல், கனவுலகத்தில் மிதக்கும் ஒருவளாக லஷ்மியின் பாத்திரப்படைப்பு வாசித்து முடித்தபின் யட்சியாக எழுந்து வருவது.
இக்கதையில் வரும் பாட்டி மற்றொரு முக்கியமான கதாப்பாத்திரம். அவள் தான் நாவலின் ஆரம்பத்திலேயே “புருஷன் ஒன்னுதானா ஆயிசுக்கும்? புள்ளங்க இல்ல. சொத்து இல்ல. பத்து இல்ல? காடு கரையில்ல? அவன் எவளோடையோ போனா இவ ஏங்கிச் சாவுறாளாம். அஞ்சு புள்ளைகளாச்சு. அந்தக் கருமாந்திரத்தை தலை முழுவித் தொலைச்சாத்தான் என்ன?” என்கிறாள். ஆனந்தாயி அந்த முடிவை இறுதிவரை எடுக்கவில்லை. எட்டணாவைத் தூக்கி எறியும் பெரியண்ணனின் காசை அவன் முகத்தில் விட்டெறியும் கிழவியாக நாவலின் இறுதியில் ஆனந்தாயி மாறிப் போனபின்னும் அந்த அமைப்பைக் கைவிடவில்லை. ஆனால் பூங்காவனம் என்ற உறவுமுறைப்பெண் தன்னை ஏமாற்றிய துரையைக் கைவிட்டு தனித்து வாழ்வதை ஆமோதிக்கிறாள். எல்லாமும் தெரிந்து தான் இந்த அதிகார அடுக்கிற்குள் இருக்கிறாள் என்பது ஆறுதலைத் தருகிறது. பூங்காவனம் எடுக்கு முடிவு நமக்கு உடனடியாக நினைவுறுத்துவது இந்த நாவலில் தொடர்ந்து உறவுகளை, உணர்வுகளை முதிர்வாகக் கையாளும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பாட்டியின் நினைவைத்தான். அவளின் தொடர்ச்சியாகவே பூங்காவனத்தை நம்மால் பார்க்க முடிகிறது.
*
இத்தனைக்கு மத்தியிலும் காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. இடம் அக்காலத்தைப் பொறுத்து மாறுகிறது. ஊரில் டூரிங் டாக்கீஸை வேணு செட்டியார் கட்டுகிறார். லைன் வீடுகளாக்கி வாடகைக்கு விடுகிறார் திருவேங்கடம் பிள்ளை. புஞ்சை நிலங்கள் மனைகளாக மாறுகின்றன. ராசு முதலியார் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகிறார், நாவலின் இறுதியில் வேறு யாரோ எம்.எல்.ஏ. ஆகிறார்கள். மேலும் மாற்றம் நிகழ்கிறது. மனிதர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை மாறிக் கொண்டே இருக்கிறது. இயற்கையும், சமூகமும், அரசியலும் மாறிக் கொண்டே இருக்கிறது. அதன் பாதிப்பு இதிலும், இதன் பாதிப்பு அதிலும் என பெரிய சித்திரம் விரிந்து கண் முன்னே நின்றிருக்கிறது. இவை இந்த நாவலின் மெல்லிய கோடாக வந்தாலும் இந்த நாவலின் கதைமாந்தர்கள் நின்றிருக்கும் கட்டுமானத்தைக் காண்பிக்கிறது.
ஆனால் ஆசிரியர் நம்மை இறுதியில் ஆனந்தாயியை மட்டும் பார்க்கச் சொல்லிக் கேட்கிறார். அவளை ஏளனப்படுத்தும் பெரியண்ணனின் வரிகளோடு நாவல் முடிகிறது. ஆனந்தாயி மேல் பரிதாப உணர்ச்சியோ, வீழ்ச்சியின் சித்திரமோ நமக்கு படிய விடாமல் செய்வது அவள் இங்கு நடக்கும் யாவற்றையும், தனக்கு நடக்கும் யாவற்றையும் அறிந்திருந்தாள் என்பது தரும் ஊக்கமே. பெரியண்ணனின் ஆசை நாயகியான லஷ்மியிடம், “நானெல்லாம் வாங்காத அடியா, ஒதையா… எல்லாம் ஒருத்தனோட இருந்திடல. இதைக் கேட்டாக்க எனக்கு பிள்ளைங்க குட்டிங்க வேறு வழி இல்லனு சொல்லுவ. அப்படியே அறுத்துக் கட்டினாலும் தனியாத்தான் இருப்பேங்காட்டியும் வேற பயல் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன்.” என்று சொல்லும் இடத்தின் வழியாக அதை அறிய முடிகிறது. நாவல் முழுவதும் அவள் வீட்டிலும், காட்டிலும் என வேலை செய்து கொண்டே இருக்கிறாள். அத்தனை இன்னல்கள், வலிகளுக்கு மத்தியிலும் திருவிழாக்களைடும், பண்டிகைகளையும், மகிழ்ச்சிக்கான நிகழ்வுகளையும் உருவாக்கி தன் விருந்தோம்பல், அன்பு வழியாக தன் வாழ்க்கையையும், பிறரின் வாழ்க்கையையும் அழகாக்கிக் கொண்டே இருக்கிறாள். அவள் தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களுக்கும் சூழலுக்கும் தன்னிலிருந்தே மகிழ்வையும், அன்பையும் அகழ்ந்தெடுத்து பொலியச் செய்கிறாள். எப்போதும் அவை தீர வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையை இறுதி வரை அளிக்கும் மன உறுதி கொண்டவளாக ஆனந்தாயியைப் பார்க்க முடிகிறது. கடந்து சென்ற தலைமுறைகளிலிருந்து நினைவிற்கு வரும் பல அம்மாக்களின் பாட்டிக்களின் முகங்கள் ஆனந்தாயியிற்கு பொருந்தக்கூடியது.
*
தொண்ணூறுகளின் ஆரம்பம் தமிழ் இலக்கியத்தில் நாவல்களின் காலம் என்றே வரையறுக்கலாம். சிறுகதைகள் உச்சத்தை எட்டிய நவீனத்துவ காலகட்டத்தின் இறுதியில் பின் நவீனத்துவம் சார்ந்த உரையாடல்கள் தீவிரமாக பேசப்பட்டு பல வித புது முயற்சிகள் எடுக்கப்பட்டதைக் காண முடிகிறது. பின் நவீனத்துவம் சார்ந்த உரையாடல்களே தலித்தியம், பெண்ணியம் சார்ந்த படைப்புகள் உருவாகி வந்ததற்கான காரணம். இக்காலகட்டத்தில் யதார்த்தவாத அழகியல் கொண்ட நாவல்களை எம்.கோபாலகிருஷ்ணன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன், உமாமகேஸ்வரி போன்ற முக்கியமான நாவலாசிரியர்கள் தமிழில் எழுதினார்கள். ஆனந்தாயி நாவலை அந்த வகையில் ஆண்மைய சமுதாயத்தின் பின்னணியில் ஆண்-பெண் உறவு, உணர்வுச்சிக்கல், பெண்ணின் வாழ்க்கையை வைத்து உண்மையாக சொல்லப்பட்ட யதார்த்தவாத அழகியல் கொண்ட கதை என வரையறுக்கலாம்.
ஆனந்தாயி நாவலை 1999-ல் சாரா ஜோசஃபின் “ஆலாஹாவின் பெண் மக்கள்” நாவலுடனும் ஒப்பிட முடிகிறது. ஆலாஹாவின் பெண் மக்கள் நாவல் காலத்தைப் பொறுத்து இடம், மனிதர்கள், உறவுகள், உணர்வுகளின் உருமாற்றத்தைச் சொல்லக் கூடியது. அரசமைப்பும், அதிகாரமும் அதில் செயல்படும் தன்மையால் அலைக்கழிக்கப்படும் பெண்கள், மனிதர்கள் பற்றிய பெருஞ்சித்திரத்தை அளிக்கிறது. அதனுடன் இயற்கையாலும், மனிதர்களாலும் பிய்த்து எறியப்பட்ட அவரைச் செடியிலிருந்து பெரிய ஒற்றை இலையையும், மந்திரக் கோலையும் கைகளில் கொண்டு எளிய மனிதர்களை மாணிக்கக் கற்களாக மாற்றும் மந்திரவாதியாக ஆன்னி தன்னை உருவகிக்கத் தேவையான தொன்மக் கதையும், படிமங்களும் நாவலை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. ஆன்னி என்ற சிறுமியின் பார்வை வழியாக சொல்லப்பட்ட கதையில் இது சாத்தியமாகியிருக்கிறது. ஆனந்தாயி முதிர்ச்சியான கதைசொல்லி வழியாக வெளிப்படும் நாவல். அதனால் நாவலில் அப்படி ஒட்டுமொத்தத்தையும் கோர்க்கத்தேவையான படிமமோ, தொன்மமோ கைகூடவில்லையெனினும் “உலகத்துப் பொம்பளைங்கள்லாம் கஷ்டப்படச் சொல்லி பார்த்துக் கொண்டிருப்பவனா கடவுள்” என்ற ஆத்திகக் குரலும், தெய்வத்தை பற்றுக்கோலாக் கொண்டு சாமியாடியாக இருக்கும் கிழவியும், அவள் இறந்தபின் சாமி ஏறப்பெற்று ஆடும் லஷ்மியும், நடுச்சாமம் சிறுநீர் கழிக்கச் சென்று என்ன காரணமென்றே தெரியாமல் பயத்தினால் இறந்து போகும் பாலனும், பெண்விரும்பியாக பல பெண்களை உறவு கொண்டிருந்தாலும் பெரியண்ணனால் விட்டுத்தொலைக்க முடியாத லஷ்மியும் என விளக்கவியலாத கேள்விகளுடன் நாவல் உள்ளது அந்த நாவலிலிருந்து இவற்றை வேறுபடுத்துகிறது.
ஆனந்தாயி நாவலுடன் ஒப்பிட முடிந்த இன்னொரு நாவலான உமா மகேஸ்வரியின் “யாரும் யாருடனும் இல்லை” நாவல், ஆண்களின் உலகத்தை விரிவாகச் சொல்லாமல் பெண்களின் உலகத்தை விரிவாகக் காண்பிக்கிறது. கண்ணுக்கு புலப்படாத கட்டமைப்பு ஒன்றினால் ஆட்டுவிக்கப்படுபவர்கள் போல பெண்களின் அலைக்கழிப்பைச் சொல்லி இறுதியில் “யாரும் யாருடனும் இல்லை” என்ற வரி வழியாக மட்டுமே தத்துவார்த்தமாக நாவலின் கணத்தை அதிகரித்தது. மாறாக ஆனந்தாயி எந்த படிமத்தையும், தத்துவத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்ளாமல் யதார்த்தமாக காலத்தைப் பொறுத்து ஒரு குடும்பத்திலுள்ள பெண்களின் கதையை சொல்லிச் செல்கிறது. இதன் வழியாக வாசகர் அடைந்து கொள்ள வேண்டிய கற்பனை மற்றும் சிந்தனைகளுக்கான மூலப் பிரதியாக ஆனந்தாயி தனித்து நிற்கிறது. அப்பட்டமான வாழ்வை மட்டும் விரிவாக உண்மையாக சொன்ன வகையில் ஆனந்தாயி தனித்துவமான படைப்பு. இங்கிருந்து மேலும் இந்த வகையான கதைகள் விரிவதற்கான சாத்தியத்தையும், ஒரு காலகட்டத்தின் மனிதர்களை ஒட்டி மேலும் சிந்திப்பதற்கும், அடுத்த காலகட்டத்திற்கான மதிப்பீடுகளை, அறத்தை, நெறியை சிந்திப்பதற்கான களமாகவும் ஆனந்தாயி நாவல் அமைகிறது.
*

உலக நாடுகள் அனைத்தையும் உள்ளடக்கிய சூழலியல் சார்ந்த விழிப்புணர்வு உருவாகி வந்த புத்தாயிரம் ஆண்டுகளில் சூழலியல்-பெண்ணியம் (Eco-feminism) சார்ந்த புது வகைமை கொண்ட சிந்தனையாளர்கள் உருவாகி வந்தார்கள். அவர்களில் ஒருவரான வந்தனா சிவா நீடித்த நல்வாழ்வு நிலைக்கான செல்வத்தை உருவாக்குவதற்கான வழியாகக் கூறிய வரி:
”பெண்கள் என்றால் சக்தி. ஆக்கப்பூர்வமான, வன்முறையற்ற வடிவில் உள்ள சக்தியின் உருவகம் நாங்கள். பெண்கள் உண்மையான செல்வத்தை உருவாக்குபவர்கள். இதன் பொருள் மானுடத்தின் முதல் தேவை “நல்வாழ்வு நிலை” (the state of well being) – பணம் அல்ல, மூலதனம் அல்ல. பெண்களையும் அவர்களின் பங்களிப்புகளையும் ஓரங்கட்டுகின்ற பொருளாதார வலுவிழப்புக்கான கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகளை நீக்குதல்; பூமியைப் பராமரித்தல், மனித சமூகத்தின் மீது அக்கறை காட்டுதல், வாழ்வாதாரப் பணியில் அவர்களின் உண்மையான பங்களிப்பு ஆகியவற்றில் பெண்களின் அறிவையும் வேலையையும் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பாக அங்கீகரித்தல் ஆகியவையே நல்வாழ்வு நிலையை அடைவதற்கான வழிகள்”
இன்று அவற்றை நாம் பெண்களுக்கு மட்டும் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. முதலாளித்துவம்-ஆணாதிக்க நோக்கிலிருந்து பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யாதவை என்று தவிர்க்கப்பட்ட பலவற்றுக்கும் கவனத்தை அளிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். ஆனந்தாயியைப் போல வைராக்கியத்துடனும், பொறுமையுடனும் இந்த பாகுபாடுடன் கூடிய அமைப்பில் உயிர்பிழைத்தவர்களின் தயவால் எஞ்சியிருப்பவற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையை நமக்கு நாவல் உணர்த்துகிறது.
வீழ்ந்து போன ஒரு ஆளாக பெரியண்ணனின் பார்வையில் தெரியும் ஆனந்தாயியிடம், “நீ ஆடுன ஆட்டத்துக்கு கடவுள் எங்கக் கொண்டாந்து நிறுத்திட்டான் பாத்தியாடி… வெத்திலைப் பாக்குக்குக் கூட வக்கில்லாத… இந்தா பிடி” என்று பெரியண்ணன் சொல்லும்போது புன்னகையுடன் “இல்லை” என்றே வாசகர் சொல்ல முடிகிறது. எட்டணாவை விட்டெறியும் பெரியண்ணன் நின்றிருப்பது எந்த கட்டுமானத்தின் மேல் என்ற பிரக்ஞையே அதை ஆனந்தாயியின் வீழ்ச்சியின் கதையாக மட்டும் ஆக்க விடாமல் ஒட்டுமொத்த மானுடத்தின் வீழ்ச்சியின் சித்திரமாக எடுத்துக் கொள்ளச் செய்கிறது. இதிலிருந்து வெளியேற முடிவெடுக்கும் பூங்காவனத்தை ஆனந்தாயி மறுக்கவில்லை. மாறாக இதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை பெருமூச்சாக கடந்து செல்லவும் தன் பாடுகளை நினைத்து பெருமூச்சு விடவும் புல்லரித்து சிலிர்த்துக் கொள்ளவும் மட்டுமே அவளால் முடிகிறது. பூங்காவனம் என்ற அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பெண் வன்முறை தோய்ந்த அதிகாரக் கட்டமைப்பை விட்டு வெளியேறும் விடுதலையின் கதையாக வாசிக்கச் சாத்தியமான ஒரு காலகட்டத்தின் கதை ஆனந்தாயி. தமிழ் இலக்கியத்தில் வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான நாவல்கள் பட்டியலில் இடம்பெற வேண்டிய நூல். தொண்ணூறுகளில் வெளியான யதார்த்தவாதம் சார்ந்த நாவல்கள் வரிசையில் மிக முக்கியமான நாவல்.
*
சிறப்பான கட்டுரை ரம்யா. ஆனந்தாயியை வாசித்து இருக்கிறேன். நீங்கள் தொட்டுக்காட்டிய நுட்பம்க்களுக்காக மீண்டும் வாசிக்கலாம்.
நன்றி