மோர்டோவிய பின்னல் (சிறுகதை) – யெவ்ஜினியா நிக்ரஸோவா

(தமிழில் நரேன்)

யெவ்ஜினியா நிக்ரஸோவா

யெவ்ஜினியா நிக்ரஸோவா: Evgenia Nekrasova (1985) – ரஷ்ய எழுத்தாளர், கவிஞர். இவரின் கதைகள் நாடகமாக்கம் செய்யப்பட்டு மாஸ்கோவின் பிரபலமான நவீன நாடக அரங்குகளில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதுவரை இவரின் ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும் இரண்டு நாவல்களும் வெளிவந்துள்ளன. இளம் ரஷ்ய எழுத்தாளருக்கான விருதை வென்றிருக்கிறார். எழுத்தாளர் ஆக விரும்பும் இளைஞர்களின் மத்தியில் தற்போது மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கும் இலக்கிய பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். தன்னை ஒரு பெண்ணியவாதி என்று அறிவித்துக்கொண்டவர், சமகாலப் பெண் கலைஞர்களைப் பற்றித் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். இவரது படைப்புகள் ஆங்கிலம், செக்கோஸ்லோவிய, லாட்விய மற்றும் இத்தாலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘மாய எதிர்மறைவாதம்’ (Magical Pessimism) என்ற வகைமையைத் தோற்றுவித்தவராகக் கருதப்படுகிறார். இவரது கதைகள் பெரும்பாலும் நாட்டார் கதைகளின் பாதிப்பிலிருந்து உருவானவையாக இருக்கின்றன. பெண்கள் மீதான வன்முறைக்கும் அடக்குமுறைகளுக்கும் தீர்வுகளை அல்லது பதில்களை தன் மண்ணின் தொன்மங்களில் தேடுகிறார்.

நிகரஸோவாவின் புதிய சிறுகதையான ‘மோர்டோவிய பின்னல்’ மிகக் கச்சிதமான வடிவத்திற்காகவும் எளிமையான கதை சொல்லலுக்காகவும் வெளியான உடனே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பின்னர், விமர்சகர்களால் இச்சிறுகதை வெறும் பரபரப்பான கதையோ அல்லது பெண்கள் மீதான வன்முறையை யதார்த்தமாக விவரிக்கும் கதையோ மட்டுமல்ல என்று முன்னிறுத்தப்பட்டது. இதன் அடுக்குகளில் ரஷ்ய ஆண்களிடம் பல்லாண்டுகளாக நீடிக்கும் ஆதிக்க மனோபாவத்தையும் எளிமையாக வெட்டி வீசக்கூடிய சிறு நூல் முடிச்சின் பலம் போலத்தான் பெண்களின் வாழ்வு இருப்பதும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வலிமையற்ற நாடுகளின் மீது தொடர்ந்து போர் தொடுக்கும் ரஷ்ய ஆண் மனதின் ஊற்று முகத்தையும் சுட்டிக்காட்டுகிறது. ஒரு சிறிய நிற மாறுபாட்டினால் மனித குலத்தின் ஆதி உறவு எனப் போற்றப்படும் தாய்-சேய் உறவு கேள்விக்குள்ளாக்கப்படும் ஆதிக்க வெறியை மிக இயல்பாக இக்கதை காட்டுகிறது. தன் மகன் திடீரென சுழலும் நாக்குடன் ‘ர’ உச்சரிப்பது கதையில் நகைமுரணாக வெளிப்பட்டாலும் ஆணினத்தின் ஆழ்மனதில் உறைந்திருக்கும் சுயநலக் கூப்பாடு என்றும் இதைப் புரிந்துகொள்ளலாம். இக்கதையின் பரபரப்பு, இந்நிகழ்வு உண்மையில் எந்நிலத்திலும் நிகழக்கூடும் என்ற உண்மையை நம் அகம் உணர்வதால் உண்டாவதுதான்.

மோர்டோவிய பின்னலிட்ட அழகிய தையற் வேலைப்பாடுகள் மோர்டோவிய நிலத்தின் தொன்மைக் கதைகளைத் தாங்கி வருபவை. தம் குடும்பப் பெண்களுக்குப் பாட்டிகளும் அம்மாக்களும் கையளிக்கும் கலாச்சார காவலாக இது கருதப்படுகிறது. அவர்களின் ஒவ்வொரு ஆடை வடிவங்களுக்கும் தொன்மக் கதைகள் முக்கியத்துவம் அளிக்கிறது. உதாரணமாக, புறாவின் பாதங்களோ அல்லது நரியின் பாதங்களோ கொண்ட ஆடை அணிந்தவன் வேடன் என்பதன் குறியீடு – வேடன் மட்டுமல்ல இயற்கையுடன் ஒன்றிணைந்தவன், பறவையின் ஒரு பகுதியாகவோ, மரங்களினத்தின் ஒருவனாகவோ தன்னை உணர்பவன் என்று அர்த்தம். புராணக் கதைகளில் கடவுள்களின் தாய் தன் குழந்தைகளுக்கு தன் கையால் பின்னித் தைத்த ஆடையை அளிப்பது மிக முக்கியமான உருவகம். நூல்களின் வண்ணங்களுக்குத் தனித்த பொருளுண்டு – கறுப்பு வண்ணம் பூமியையும் வளத்தையும் குறிக்கிறது; சிவப்பு சூரியனையும் பாதுகாப்பையும். முற்றிலும் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின், அன்னையின், ஒரே பாதுகாப்பாக, விடுதலையாக எஞ்சுவது மூதாதைகள் வண்ணமயமாக, அழகிய வடிவங்களாகப் பின்னித் தையலிட்டு கையளித்த கனவுகள்தான் போலும்!

-நரேன்

*

யெவ்ஜென்யா நிக்ராஸவா

*

மோர்டோவிய பின்னல் (சிறுகதை) – யெவ்ஜினியா நிக்ரஸோவா

(தமிழில் நரேன்)

காவல் சீருடையில் அந்த மனிதன் காட்யாவிடம் அவள் குழந்தைகளைத் திருடிவிட்டாள் என்று கூறினான். ‘ஒன்று’ மற்றும் ‘இரண்டு’ – இருவரையும். அவளே அக்குழந்தைகளைப் பற்றி அப்படித்தான் நினைத்துக்கொள்வாள்: ‘ஒன்று’ பிறந்து இருபது நிமிடங்களுக்குப் பிறகு ‘இரண்டு’ பிறந்தாள். சுரங்க ரயிலின் நடைவழியின் குறுக்கே கருங்காரையில் அழுக்குச் சேறு குழைந்தோடியது. ஈரமான பூட்ஸ்கள் அவளின் பாதங்களை நெரித்தன. குழந்தைகள் அவள் கரங்களில் கீழிழுக்கும் கனமான பையைப் போலத் தொங்கிக்கொண்டிருந்தனர்.

அவள் மாஸ்கோவிற்கு சென்றிருக்கவே கூடாது. ஒரு மணி நாற்பது நிமிட நேர ரயில் பயணத்தில் அவர்கள் பெட்டிகளுக்கிடையில் சிக்கி நின்றுகொண்டிருந்தனர். அந்நிய உடல்களுக்குக்கிடையில் பிழிந்து அடைபட்ட சக்கைகளைப் போல் சிக்கிக்கொண்டிருந்தனர். நெரித்து நுழைவதற்கு ரயில் பெட்டிக்குள் இடம் இல்லை.

ஒரு வார நாள் காலையின் அன்றாட பரபரப்பு. குழந்தைகளுக்கான காட்சி என்பதால் நண்பகல் நேரத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இரட்டையர்கள் திகைப்புடன் சுற்றி முற்றிப் பார்த்தனர், பின்னர் சிணுங்கத் தொடங்கி இறுதியில் அமைதியடைந்து  ரயில் சுவரில் அழுந்திக்கொண்டிருந்த காட்யாவின் மீது சாய்ந்தனர். காட்யாவிற்கு இப்பயணம் செய்வதில் விருப்பமில்லை, ஆனால் மாஸ்கோ சர்க்கஸின் உண்மையிலேயே கிடைத்தற்கரிய டிக்கெட்டுகளுடன் அவளின் மாமியார் அவளைச் சம்மதிக்கச் செய்தாள். அல்லது மாமியாரின் கையில் இருந்த டிக்கெட்டுகள் அவளைச் சம்மதிக்கச் செய்தன. குழந்தைகள் போக வேண்டுமெனக் கூப்பாடு போட்டனர். ‘ஒன்று’ சர்க்கஸ் பார்க்க வேண்டுமென அலறினான். ‘இரண்டு’ வெளியே போக வேண்டுமெனக் கத்தினாள்.

காட்யாவிற்கு தூங்க வேண்டும் என்பது மட்டும்தான் விருப்பம். மனித வடிவிலான உருவெளித்தோற்றத்தில் ஒரு போலீஸ்காரனை புகைமூட்டமாகப் பார்த்தாள். உருவத்தின் விளிம்புகள் முழுச்சோர்வினால் மங்கலாகத் தோன்றின. அவன், “ஏய் ஜிப்ஸி, அந்தக் குழந்தைகளை எங்கிருந்து திருடிக்கொண்டு வருகிறாய்?” என்று கேட்டான்.

***

பெண் யானைகள் துர்நாற்றம் வீசின. காட்யாவும் குழந்தைகளும் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த போதும் அந்த வீச்சம் அவர்களை எட்டியது. பளபளப்பான ஆடைகளைப் போர்த்தியிருந்த பசுக்கள் சோர்வாக இருந்தன, காட்யாவைப் போல. ஒரு பகட்டான சர்க்கஸ்காரி அவற்றின் சுருங்கிய சாம்பல் நிற தோளை நீண்ட கூர்மையான குச்சியால் குத்தினாள். யானைகள் நாய்களைப் போல பின்னங்கால்களில் நின்றன அல்லது மண்டியிடும் மனிதர்களைப் போல முன்னங்கால்களில் நின்றன. சர்க்கஸ்காரி அழகியவளாக இருந்தபோதிலும் யானைகளைக் குச்சியால் குத்துகிறாள் என்று சுட்டிக் காட்டினாள் ‘இரண்டு’.

அவள் ஒரு காபரே நடனக்காரியைப் போல கழுத்து முதல் தொடை வரை இறுக்கமான ஆடையும் அதன் மேல் நீண்ட பின்வெட்டு கொண்ட மேல்சட்டையும் உயரமான பூட்ஸ்களும் அணிந்திருந்தது காட்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. மேற்சட்டையின் விளிம்பு தங்க ரோஜாக்களின் தையல் வேலைப்பாட்டுடன் இருந்தது. அது யானை காதுகளைப் போல அசைந்தது, அவள் புட்டங்கள் வெளிப்படும்படி சுருண்டு மேலெழுந்தது. உள்ளாடையின் அடிப்பகுதி அவள் பிறப்புறுப்பில் இறுக்கமாக ஒட்டிக்கொண்டது. ஒவ்வொரு சாகசத்திற்கு முன்பும் அவள் தன் கால்களை விரித்தாள். காட்யா தன் குழந்தைகளையும் பார்வையாளர்களையும் சுற்றிப் பார்த்தாள் –  ஒருவரும் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

‘ஒன்று’ நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை; மாறாக, பக்கத்திலிருந்த சிறுவனின் உள்ளங்கையில் அசைந்த இயந்திர சிங்கம் அவனது கவனத்தை எடுத்துக்கொண்டது. நிகழ்ச்சியில் சிங்கங்கள் எதுவும் இல்லை. கோமாளிகளும் கழைக்கூத்து கலைஞர்களும் தோன்றினர். ‘இரண்டு’ நிகழ்ச்சியை உன்னிப்பாகக் கவனித்தாள். ‘ஒன்று’, தன்னுடைய முரட்டுத்தனங்களையும் மீறி தன் தாயை மிக அணுக்கமாகப் புரிந்துகொள்பவன். இந்நிகழ்ச்சி அவளுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதை அவன் உணர்ந்துகொண்டான். அதனால் அவன் உடனடியாக சர்க்கஸை மறந்துவிட்டு தன் பக்கத்துச் சிறுவனின் பிளாஸ்டிக் பொம்மையின் மீது தன் கவனத்தை மாற்றிக்கொண்டான். ‘இரண்டு’ இந்த உலகின் மீதான கருத்துகளைத் தானே உருவாக்கிக் கொள்பவள். மற்றவர்களுடன் ஒருபோதும் இசைந்து போவதில்லை, உலகத்தை நேரடியாக எதிர்கொண்டாள்.

“ஏ கறுத்த பெண்ணே, இந்தக் குழந்தைகளை எங்கேயிருந்து எடுத்தாய்? இந்த ரயில் நிலையத்தில்தான் அவர்களை புடிச்சியா?” காட்யாவிற்கு பெரிய அடர் பழுப்பு நிற கண்கள், தோள்கள் வரை நீளும் அடர்த்தியான கருப்பு முடி, கருப்பு கண் இமைகள், கருப்பு புருவங்கள், மேலுதட்டில் மெல்லிய கருப்பு மீசை, கைகளிலும் கால்களிலும் திட்டுத் திட்டாகக் கருப்பு முடிகள். “உங்கூடத்தான் பேசறேன், நாடோடியே… உனக்கு ரஷ்யன் பேச வராதா?”

சர்க்கஸ் முடிந்ததும் காட்யா இரண்டு குழந்தைகளுக்கும் மேக உருண்டை போன்ற பஞ்சு மிட்டாய்களை வாங்கி கொடுத்தாள். அவர்களின் தலைகள் அவற்றில் மறைந்துவிட்டன. குளியறைத்தொட்டியில் இரட்டையர்களின் முகங்களைக் கழுவ காட்யாவிற்கு அதிக நேரம் பிடித்தது. அதற்கு முன் வெளியே வாசலில் அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். ‘ஒன்று’ முதலில் ஆண்களின் படம் போட்டிருந்த அறைக்குள் நுழைய முயன்றான், காட்யா தடுத்து நிறுத்தினாள். அதன்பின் கூடத்தில் இயந்திர சிங்கங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதைக் கண்டதும் ஒப்பாரி வைக்கத் தொடங்கினான். காட்யாவிடம், அதிகமில்லையென்றாலும், பணம் இருந்தது. அவள் ஒன்றுக்கு ஏதாவது வாங்கினால் இரண்டுக்கும் ஏதாவது வாங்கியாக வேண்டும். இரண்டுக்கு பஞ்சு பொம்மைகள் மட்டுமே பிடிக்கும். நல்லவேளையாக அவை இங்கே விற்கப்படவில்லை. இரண்டு ஒன்றை நச்சரிப்பு என்று சலித்தாள். அவர்கள் சண்டையிட்டனர். காட்யா அவர்கள் இருவரையும் தூரப் பிரித்து உங்களை வெளியே கூட்டி வருவது இதுவே கடைசி முறை என்றாள்.

அழுதுகொண்டிருந்த ஒன்றையும் சோகமாயிருந்த இரண்டையும் காட்யா சர்க்கஸ் பகுதியிலிருந்து வெளியே இழுத்து வந்தாள். அவர்கள் அருகிலிருந்த கடையில் ரப்பர் போலிருந்த பீட்ஸாவை அமைதியாக மென்றுகொண்டிருந்தனர். பெப்பரோனி துண்டிலிருந்து ஆவி சாம்பல் நிற மாஸ்கோ வானத்தை நோக்கி எழுந்தது. சர்க்கஸுக்குள்ளிருந்த உணவுக்கடையில் நீண்ட வரிசை இருந்தது. வெளியே எங்காவது சாப்பிடுவதுதான் விலை குறைவாக இருக்கும் என்று காட்யா முடிவு செய்தாள். சர்க்கஸ் உணவுக் கடையில் விற்கப்படும் கையால் செய்யப்பட்ட ’ப்பை’[1] இறந்து போன பழைய யானைகளால் செய்யப்பட்டதா என்று இரண்டு முன்னரே சந்தேகப்பட்டிருந்ததும் ஒரு காரணம். பகிர்ந்து அருந்திக் கொள்ள காட்யா ஒரே ஒரு தேநீர் வாங்கி வந்தாள். குழந்தைகளுக்குக் கழிப்பறை தேவைப்படுமென்றால் இரயில் நிலையத்தில் உள்ளதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தாள்.

***

ஒரு புதிய அதிகாரி பணிக்கு வந்திருந்தான். அவனும் காட்யாவின் பெயர், அவள் தந்தை பெயர், இடம், பிறந்த தேதி ஆகியவற்றைக் கேட்டான். அவன் இன்னும் அவள் மீது எந்த அவதூறுச் சொற்களையும் பிரயோகப்படுத்தவில்லை. காட்யா சோர்வாக தனது பெயர் எகடெரினா இவனோவா என்று மீண்டும் கூறினாள். இயற்பெயர் போகோஸோவா. அவன் நாடக பாணியில் எக்களித்தான், நிஜ மனிதர்களை விடவும் தொலைக்காட்சியில் தோன்றும் நடிகர்களைத் தான் அது அதிகமும் நினைவுபடுத்தியது. காட்யா அவனிடம் தான் பென்ஸா பகுதியைச் சேர்ந்தவள் என்றும் தற்போது மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் வசிப்பதாகவும் கூறினாள். தன்னுடைய முகவரியை அவனிடம் கொடுத்தாள். அந்தப் புதிய போலீஸ்காரன் சட்டென காட்யாவின் தோல் நிறத்தைக் குறிப்பிட்டான். குழந்தைகளை யாரிடமிருந்து பறித்துக்கொண்டு வருகிறாய் என்று கேட்டான்.

அவர்கள் தன் குழந்தைகளே என்று காட்யா மீண்டும் ஒரு முறை கூறினாள். அவர்களின் பெயர்களையும் பிறந்த தேதிகளையும் சொன்னாள். புகை பிடிக்கப் போயிருந்த முதல் போலீஸ் திரும்ப வந்ததும் சற்றும் தாமதிக்காமல் காட்யாவை நாடோடி நாய் என்று ஏசினான். குழந்தைகளின் முன்னால் தகாத வார்த்தைகளைக் கூற வேண்டாம் என்று அவள் பணிவுடன் கேட்டாள். காட்யாவிடம் ஒழிந்து போடி என்று கத்தினான். இந்தத் தேவுடியாளுக்கு பாஷை கூட ஒழுங்காக உச்சரிக்க வரவில்லை என்று கூட்டமாகக் கூச்சலிட்டனர். ஒன்று தூங்கிவிட்டான். இரண்டு பயத்தில் அங்கேயே அமர்ந்திருந்தாள். அவள் நேரடியாக இந்த உலகத்துடன் தன்னை இணைத்துக்கொண்டாள், இது கொஞ்சம் கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. குழந்தைகள் ஒரு தேய்ந்த மர நீள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அதன் மறு முனையில் சிறுநீரும் மது வாடை வீச்சத்துடனும் ஒருவன் குந்திக்கொண்டிருந்தான். காட்யா மேசைக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். கதவு விரிசலளவு திறந்திருந்தது, வெளியே நிலையத்தில் அறிவிப்புகளை வெளியிடும் ஒரு அலங்காரமான பெண் குரல் அவர்களுக்குக் கேட்டது.

தான் ரஷ்யன் அல்லாதவளாகக் கருதப்பட்டது காட்யாவை காயப்படுத்தியது. அவள் ஒரு சுத்த ரஷ்யன். அவளே ரஷ்யன் அல்லாதவர்களின் மீது நம்பிக்கை இல்லாதவள், அவர்களிடமிருந்து தள்ளியே இருப்பவள். அவள் அம்மா ரஷ்யன். அவள் அப்பா பாதி மோக்‌ஷா[2] பாதி எர்ஸியா[3]. ஆனால் இதைப் பற்றி அவள் அதிகம் சிந்தித்ததில்லை, ரஷ்ய மொழியைத் தவிர அவளுக்கு வேறு எந்த மொழியும்  தெரியாது. அவள் அப்பாவும் சரியான ரஷ்யன்தான், இன்னும் எளிதாகச் சொல்வதானால் சோவியத்காரன். யூதர்களும் அர்மேனியர்களும் காட்யாவை தங்கள் ஆள் என்று தவறாக நினைத்துக்கொள்வார்கள். ஜிப்ஸி பெண்களும், அப்படித்தான் காட்யாவும் ரஷ்யர்களும் அவர்களை அழைப்பார்கள், தெருவில் பார்த்தால் தங்கள் மொழியிலேயே அவளுடன் பேசுவார்கள். ஒரு கோடை நாளில் காட்யா அழகான, மிகப் பெரிய, வண்ணமயமான பாவாடை ஒன்றை அணிந்துகொண்டு சந்தைக்குச் சென்றாள். அவள் கண்களைக் கவர்ந்த உள்ளாடை கடையைத் தயங்கியபடியே சுற்றி வந்தாள். கடைக்காரன் வசைச் சொற்களை ஏவி அவளை விரட்டினான்.

அவர்கள் வீடு திரும்பும் ரயில் வேறொரு நிலையத்திலிருந்து புறப்படுவதாக இருந்தது. காட்யாவின் மோர்டோவிய பாட்டிகளிடமிருந்து வந்திருந்த பொட்டலத்தை வாங்குவதற்காக அவர்கள் முதலில் பாவெலெட்ஸ்கி நிலையத்திற்குச் சென்றார்கள். காட்யாவிற்கும் அவள் கணவனுக்கும் குழந்தைகளுக்காகவும் அவர்கள் இரண்டு துவாலைகளும் நான்கு தலையணை உறைகளும் தைத்து அனுப்பியிருந்தனர். அவர்கள் அனைத்தையும் அழகிய பூ வேலைப்பாடுகளுடன் பின்னியிருந்தனர். காட்யாவிற்கு தலையணை உறைகள் தேவையில்லை. ஆனால் அவள் தன் உறவினர்களைக் காயப்படுத்த விரும்பவில்லை. அதற்கும் மேலாக அவர்களின் இக்கவனத்தை அவள் மிகவும் மதித்தாள்.

மோர்டோவிய பின்னல்

இன்று, அவளும் அவள் குழந்தைகளும் அக்கவனத்தை அளவுக்கு அதிகமாகவே ஈர்த்துவிட்டார்கள். கையில் நிறையப் பைகளை வைத்துக்கொண்டு ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்த பெண் ஒருத்தி அதிகாரியை அணுகி காட்யாவை நோக்கிச் சுட்டி அந்த ஜிப்ஸி ரஷ்யக் குழந்தைகளைத் திருடி வைத்திருக்கிறாள் என்றாள். ஒன்று, இரண்டு, இருவரின் கண்களுமே காட்யாவின் கண் நிறத்தைக் கொண்டிருந்தன; அவர்களின் கண் இமைகளும் புருவங்களுமே கூட கறுப்பு நிறம்தான். அவர்களின் தாடையும் கூட அவளின் கூர்மையான முக வடிவையே ஒத்திருந்தது. ஆனால் இரட்டையர்களின் தலைமுடி சோளப்பட்டு போல மெல்லியதாக ரஷ்யப் பொன்னிறத்தில் இருந்தது. மேலும் அவர்களின் தோலின் நிறம் காட்யாவின் கருமையுடன் ஒப்பிடும்போது மாறாகக் கண்ணைப் பறிக்கும் வெண்மையாக இருந்தது. அதிகாரி அவர்களின் ஆவணங்களைச் சரி பார்க்க அவர்களை அணுகினான். காட்யா தனது கைப்பையைத் தோண்டியபோது தன் பாஸ்போர்ட்டை மறந்துவிட்டதை உணர்ந்தாள். அதில்தான் அவளுடைய பெயர், குடும்பப் பெயர், பதிவு எண், மிக முக்கியமாக ஒன்று மற்றும் இரண்டின் தகவல்கள் என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.

விசாரணை அறைக்கு அழைத்து வரப்பட்டபோது ஒன்றால் தன் அம்மாவின் பயத்தை நன்றாக உணர முடிந்தது. சிங்க பொம்மை வாங்கித் தராமல் போனதால் தன் அம்மாவைப் பழிவாங்க வேண்டுமென ஒன்று முடிவெடுத்தான். அதனால் அவள் உன் அம்மாவா என்று அவனிடம் கேட்கப்பட்டபோது இல்லையென்று சத்தம் போட்டான். போலீஸ்காரனின் வார்த்தைகளை வேறு அவன் திரும்பத் திரும்பச் சத்தம் போட்டுச் சொன்னான்: ‘கடத்தல்காரி’, ‘கடத்தல்காரி’, ‘கடத்தல்காரிரிரிரி…’, மிகத் திருத்தமாக ‘ரி’ அவன் நாவில் சுழன்றது. அவனுக்கு ‘ர’ உச்சரிப்பதில் சிரமம் இருந்தது. காட்யா அவனைப் பேச்சு நிபுணரிடம் அழைத்துச் சென்றாள். மாலைகளில் வீட்டில் உச்சரிப்பைச் சரிசெய்வதற்கென உருவாக்கிய பிரத்தியேகமான சிறு குழலை நாவில் அதிரச் செய்து பயிற்சி மேற்கொண்டனர். இரண்டு உடனடியாக காவல் துறையின் உலகத்திற்குள் தன்னைப் பொருத்திக் கொண்டாள், இது தன்னுடைய அம்மாதான் என்று உறுதியாகச் சொன்னாள். முதல் காவல்காரன் அவள் ஒரு சிறுமி என்பதால் அவளை நம்பவில்லை. இந்தக் கடத்தல்காரி சிறுமியைக் கொன்றுவிடுவதாக மிரட்டினாள் என்று காட்யா மற்றும் குழந்தைகள் முன்னாலேயே தன் சக அதிகாரியிடம் கூறினான்.

முதலில் அவர்கள் ரயிலுக்காக நாற்பது நிமிடம் காத்திருந்தனர், வருவது தாமதமானது. இப்போது அவர்கள் தொடர்ந்து மூன்று மணி நேரம் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தனர். குழந்தைகள் கழிப்பறையைப் பயன்படுத்தத் தேவையிருக்குமே என்று காட்யா கவலையுற்றாள். ஆனால் இருவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். காட்யா உணர்விழந்த தொனியில் ஒரே மாதிரியான கேள்விகளுக்கு ஒரே மாதிரியான பதில்களைச் சொல்லிக்கொண்டிருந்தாள். போலீஸார் அவளைப் பழித்தனர், கீழ்மையான பெயர்களால் அவளை ஏசினர். அவர்கள் மாறி மாறி புகை பிடிக்க வெளியே சென்று வந்தனர், அலைக்கொம்பு நீண்டிருந்த அலைபேசியில் பேசினர். காட்யாவிற்கு சட்டென ஒரு எண்ணம் தோன்றி, தன் கணவனின் அலுவலகத்திற்கு அழைக்க முடியுமா என்று கேட்டாள். அந்த புதிய போலீஸ்காரன், கூடவே ஏதாவது பஜ்ஜி போண்டாக்கள் வேண்டுமா என்று கேட்டான். ‘பஜ்ஜி போண்டா’ என்று காதில் விழுந்ததும் ஒன்று விழித்துக்கொண்டு உணவு வேண்டும் என அடம் பிடித்தான். தன் மாமியார் கொடுத்த இரண்டாவது ஆப்பிளைப் பையிலிருந்து வெளியே எடுத்து அவனிடம் நீட்டினாள். சர்க்கஸில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே அவன் முதல் ஆப்பிளை சாப்பிட்டு விட்டிருந்தான். முதல் போலீஸ்காரன் காட்யாவின் கையை அடித்துத் தூரத் தள்ளினான். அடுத்தவரின் குழந்தைகளுக்கு உணவளிக்கக்கூடாது என்றான். தரையில் விழுந்து சேற்றுச் சகதியில் உருண்டோடியது ஆப்பிள். இரண்டு குழந்தைகளும் சடாரென வெடித்து கண்ணீர் விட்டு அழுதனர், காட்யாவும் அழ ஆரம்பித்தாள். ஆப்பிளைத் துடைப்பதற்கு தன் பைக்குள் கைக்குட்டையைத் தேடத் தொடங்கினாள். மனித வேடத்தில் இருந்த போலீஸ்காரன் அவள் பையைப் பிடுங்கிக் கிழித்து உள்ளிருந்த பொருட்களை மேசை மீது கொட்டினான்.

பொருட்குவியலை தோண்டித் துழாவினான்: கைக்குட்டை, உதட்டுச்சாயம், ஆப்பிளின் நடுத்துண்டு, சவ்வுமிட்டாய், மேலுமொரு கைக்குட்டை, ஒரு பேனா, ரசீதுகள், சிறிய பணப்பை, கவனமாக வண்ணத்தாள்களால் சுற்றப்பட்ட பரிசு பொருள் கொண்ட ஒரு பிளாஸ்டிக் பை. மனித வேடத்தில் இருந்த போலீஸ்காரன் முதலில் பையைக் கிழித்தான், பிறகு பரிசுப் பொட்டலத்தைக் கிழித்தான், அதனுள்ளிருந்து அழகிய பின்னல்களுடன் நெய்யப்பட்டிருந்த துணிகளைப் பரிசோதித்தான். “இது என்ன எழவு?” தன்னுடைய உறவினர்கள் கொடுத்த பரிசு என்று காட்யா கூறினாள். “இது என்ன நாடோடிகளின் ஏதாவது பில்லி சூனிய கருமாந்திரமா? இதெல்லாம் என்ன எழவுச் சின்னங்கள்?” இது அவர்களின் பாரம்பரிய வடிவமைப்புகள் என்று காட்யா பதில் சொன்னாள், தனித்துவமான மோர்டோவிய குறுக்கு பின்னல்களின் நுட்பத்தைப் பயன்படுத்தித் தைக்கப்பட்டவை – இரண்டு பக்கமிருந்தும் நூல்களைக் கோர்த்துக் கோர்த்து துணியின் மீது ஒரு மேலெழுந்த வடிவம் உருவாக்கப்படும். காட்யாவின் பாட்டியும் சகோதரியும் இந்த தொழில் நுட்பத்தை காட்யாவிற்கு சொல்லிக் கொடுக்க முயற்சி செய்தனர் ஆனால் அவளுக்கு இதைக் கற்றுக் கொள்ளும் பொறுமையில்லை. இந்தத் துண்டுகள் மிக அழகாக இருப்பதாகத் தோன்றியது இரண்டுக்கு. மனிதர்களாக வேடமணிந்திருந்த இரண்டு போலீஸ்காரர்களும் குழந்தைகள் பாதுகாப்புத் துறையின் பெண் அதிகாரி வருவதற்கு ஏன் இவ்வளவு நேரமெடுக்கிறது என்று யோசித்தனர். இந்நேரம் வந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் வேறிடத்தில் தங்க வைத்திருக்க வேண்டும். குழந்தைகளை எப்போதும் பெண் அதிகாரிகள்தான் கையாளுவார்கள். அதன் பின்னர் இந்த ஜிப்ஸியை சமூகப் பாதுகாப்புத் துறையினரிடம் அழைத்துச் செல்லலாம்.

புதிய போலீஸ்காரன் புகை பிடிக்கவும், அலைபேசியில் பேசவும் வெளியே சென்றான். பழைய போலீஸ்காரன் தலையணை உறைகளைப் பரிசோதனை செய்ய உள்ளே வந்தான் – முதலாவதை எடுத்துத் தடவிப் பார்த்தான், பிறகு இரண்டாவதை… மூன்றாவது, நான்காவது! அதன் மேலிருந்த வடிவப் பின்னல்கள் அளவிற்கு அதிகமாகவே சற்று மேலெழும்பியிருந்தது. அதற்குள்ளே வேறு எதுவோ பொதித்து வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது என்று நினைத்தான். மனித வேடத்தில் இருந்த போலீஸ்காரன், மேசை டிராயரை திறந்து பாக்கெட் கத்தியை வெளியில் எடுத்தான். கத்தியிலிருந்த வைன் திறக்கும் திருகியைத்தான் அவன் இதுவரை பயன்படுத்தியிருக்கிறான். முதன்முதலாகக் கத்தியின் கூர்மையைக் கொண்டு ஒரு தலையணை உறையில் துருத்தி மேலெழும்பியிருந்த அலங்காரப் பின்னலைப் பிரித்தெடுத்தான்.

நரேன்

இரண்டு உறுமியபடி அவன் கையிலிருந்த துணியைப் பிடுங்குவதற்காக வேகமாக அவனை நோக்கிச் சீறிப் பாய்ந்தாள். போலீஸ்காரன் இரண்டை கீழே தள்ளி விட்டான். காட்யா அவளை தன்னிடம் இழுத்துக் கொண்டாள். ஒன்று ஓடிவந்து அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். மனித உருவிலிருந்த போலீஸ்காரன் சடாரென ஓங்கி அலறினான், தலையணை உறையைக் கீழே போட்டுவிட்டுத் தடுமாறித் திகைத்து தன் கைகளை உற்று நோக்கினான். அவன் உள்ளங்கைகளின் வெள்ளைத் தோலின் மீதும், பின் கையின் கறுப்புத் தோலிலும், முழங்கைகள் வரை, அடர்த்தியான சிவப்பு, நீலம், மஞ்சள், கருப்பு மற்றும் பச்சை நிறங்கள் குறுக்கு நெடுக்கு வடிவங்களாகவும், சாய்வுச் சதுரங்களாகவும், நட்சத்திரங்களாகவும் வெளியேறும் அடர் சிவப்பு குருதியுடன் கலந்து தோன்றத் தொடங்கின. அவை தனித்துவமான மோர்டோவிய குறுக்கு பின்னல்களின் நுட்பத்தைப் பயன்படுத்தி, இரண்டு பக்கமிருந்தும் கோர்த்துக் கோர்த்து மேலெழுந்த வடிவங்களாக உருவாக்கப்பட்டவை.     

***  

அடிக்குறிப்புகள்:

[1] Hand pies

[2] Moksha – மோர்டோவிய பகுதியில் வாழும் ஒரு பழங்குடி இனத்தின், அவர்களின் மொழியின் பெயர். அந்நிலத்தின் நதியின் பெயரையே தன் இனத்திற்கும் மொழிக்கும் சூட்டிக்கொண்டனர்.  மோர்டோவியாவின் இரண்டு அலுவல் மொழிகளில் ஒன்று.

[3] Erzya – மோர்டோவிய பகுதியில் வாழும் மற்றொரு பெரும் பழங்குடி இனத்தின் பெயர், மொழியின் பெயர். மோர்டோவியா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 3 லட்சம் மனிதர்கள் பேசும் மொழி. மோர்டோவியாவின் அலுவல் மொழிகளில் ஒன்று.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *