தேவரடியார் விவாதம் – அ.கா.பெருமாள், ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

(ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்களுடன் ஜி.எஸ்.எஸ்.வி நவின் நடத்திய உரையாடல்)

திருவாரூர் கோவில் ஶ்ரீபலியின் போது ஆடல்மகளிர் நாட்டியம் ஆடி வருதல்

ஜி.எஸ்.எஸ்.வி. நவின்:

தேவரடியார் விவாதம் சார்ந்து ஆய்வாளர் அ.கா.பெருமாள் என்ன நினைக்கிறார் எனக் கேட்டு தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்திலும், அது எனக்கான சில தெளிவுகளையும் அளிக்கும் என்ற காரணத்தினாலும் இந்த உரையாடல் செய்யப்பட்டது. அதன் எழுத்து வடிவின் சுருக்கத்தை இங்கே தருகிறேன். அதன் காணொலி விரையில் சுருதி டி.வியில் பதிவேற்றப்படும்.

பொ.யு. 1920-ல் அதாவது தேவதாசி ஒழிப்பு மசோதாவின் முதல் வரையறை தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படுவதற்கு பத்து ஆண்டுகள் முன்னரே தேவதாசிகள் திருமணம் செய்து கொள்ளும் முறை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அமலுக்கு வருகிறது. அதே வேளையில் திருவிதாங்கூர் தமிழகத்துடன் இணைந்து பதினைந்து ஆண்டுகள் கடந்த பின்பும் (1969ல் அ.கா. பெருமாள் கல்லூரி கால நினைவிலிருந்து) தேவதாசிகள் இணைந்து கோவிலில் விழாக்கள் நடத்தும் வழக்கம் இருந்துள்ளதை ஆய்வாளர். அ.கா. பெருமாள் பதிவு செய்துள்ளார்.

1955-ல் சாரங்கதரா நாடகம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முக்கிய கோவிலான சுசிந்திரம் கோவிலில் தேவதாசிகள் ஒருங்கிணைப்பில் நிகழ்த்தப்பட்டது. (பார்க்க: தேவதாசிகள் நடத்திய சாரங்கதாரா நாடகம் – அ.கா. பெருமாள்) இந்த முரணே நான் சொல்ல வருவது.

தேவதாசி முறை தமிழகத்திற்கு மட்டுமானதா? இந்தியாவில் வேறெங்கும் இல்லையா? பிற மாநிலங்கள் இந்த விஷயத்தில் என்ன செய்தனர் என்பதும் இங்கே கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று இல்லையா? இன்று நிகழும் பொதுப்படையான விவாதங்களில் இத்தகைய அடிப்படை கேள்விகளை நாம் எழுப்பிக் கொள்ள வேண்டியுள்ளது. அதிலிருந்து நாம் சில புரிதல்களுக்கு வரலாம். அப்படி நான் சில கேள்விகளை அ.கா.பெருமாள் அவர்களிடம் கேட்டேன். அவரின் பதில் பின்வருமாறு:

அ.கா.பெருமாள்

ஆய்வாளர் அ.கா.பெருமாள்:

நம் புரிதலில் இருக்கும் முதல் பிழை தேவதாசி முறை தமிழகம் நெடுக ஒரே மாதிரியாகவும், ஒரே சாதியினர் நிகழ்த்தி வந்தனர் என்பதும். தேவதாசியின் ஆகமங்கள், நடைமுறைகள், கோவில்களுடன் உள்ள உறவு முறை என்பது ஒரு கோவிலுக்கும், இன்னொரு கோவிலுக்குமே மாறுபாடு கொண்டது. வட்டாரத்திற்கு வட்டாரம் கிட்டதட்ட தமிழகம், கேரளம் போல் பண்பாட்டு வேறுபாடு கொண்டது.

திருவிதாங்கூர் தேவதாசிகளை தஞ்சாவூர் பகுதியில் வாழ்ந்தவர்களோடு ஒப்பிடவே முடியாது. மேலே சொன்னது ஒரு உதாரணம். தேவதாசியின் திருமணம் 1920களில் இருந்து திருவிதாங்கூரில் நடைமுறையில் உள்ளது. அக்காலத்தில் அவர்கள் இரண்டு தாலி அணிந்துக் கொள்வர். ஒன்று தெய்வத்திற்காக பொட்டு கட்டும் போது கட்டுவது. இரண்டு ஆணுடனான திருமணத்தின் போது அணிவது. இந்த இரண்டு தாலியின் அமைப்பும், வடிவும் வேறு. இவர்கள் திருமணத்திற்கு பின் நான் கோவிலுக்கு வரமாட்டேன் என அறிவித்தும் செல்லலாம். திருவிதாங்கூரில் வாழ்ந்த தேவதாசிகளில் கூட ஒன்றிலிருந்து ஒன்பது வரை எனப் பிரிவுகள் கொண்டிருந்தனர். இதில் முதல் நிலையில் உள்ளவர்கள் மட்டுமே தங்க பாத்திரங்களை கழுவும் அதிகாரம் கொண்டிருந்தனர்.

தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் உள்ள மோடி ஆணங்களைத் தொகுத்து, ‘மராட்டியர் கால சமூகப் பழக்க வழக்கங்கள்’ என்ற புத்தக்கத்தை வெங்கட்ராமையா வெளியிட்டுள்ளார். அதில் தேவதாசியின் ஆடைகள், ஆபரணங்கள் அனைவருக்கும் ஒன்றில்லை. தஞ்சாவூர் கோவிலுக்கும், திருவாரூர் கோவிலுக்கும் முற்றிலும் வேறானது என்கிறார்.

பாண்டிச்சேரியில் வலங்கை தேவதாசி, இடங்கை தேவதாசி இடையே நிகழ்ந்த சண்டை பதிவாகியுள்ளது. வலங்கை, இடங்கை வெவ்வேறு சாதிய அமைப்பின் கூட்டு. (பார்க்க: சமூக மாற்றம் மற்றும் வலங்கை – இடங்கை பிரிவு – எ.சுப்பராயலு)

இத்தனை பிரிவுகளும் உட்சிக்கல்களும் கொண்ட தேவதாசி அமைப்பு மொத்தமும் கோவில்களில் அடிமையாக இருந்தார்கள், பாலியல் சுரண்டலுக்கு ஆளானார்கள் என்ற ஒற்றைப் பார்வை இங்கே திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகிறது. இந்த வரலாறு காலந்தோறும் மாறி வருவதும் கூட. இது கணக்கில் கொள்ளப்படவில்லை.

என்ன செய்திருக்கலாம்? திருவிதாங்கூரில் ஒழிப்பு சட்டத்திற்கு பின்பும் கோவில்களின் பராமரிப்பும், கலையும் தேவதாசிகளிடமே இருந்ததை அறிய முடிகிறது. அங்கே 1921ல் தேவதாசி முறை அதிகாரப்பூர்வமாக நியமிப்பது நிறுத்தப்படுகிறது. 1934ல் சேது லட்சுமிபாய் தேவதாசிகளுக்கு ஒரு நாளுக்கு ஒரு கட்டி முதல் ஒன்பது கட்டிச் சோறு வழங்குவதும், மாதம் ஒன்றுக்கு ஒன்பது ரூபாய் வரை வழங்குவதும் எனச் சட்டமாக்கியுள்ளார். கவனிக்க, அன்றைய தங்கத்தின் விலை மூன்று ரூபாய். திருவிதாங்கூரில் உயர்ந்த சம்பளம் பெறுபவர்கள் நிரையில் தேவதாசிகள் இருந்தனர். ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதன் தன்மையையும் அதற்கான பயன் பாதிக்கப்படுபவர்களுக்கு நேரடியாக சென்று சேர்வதையும் பாருங்கள். அதுவே 1955ல் சாரங்கதரா நாடகம் ஒருங்கிணைக்கப்பட்டதற்கான பதில். அது ஒரு உதாரணம் தான்.

காரணம், திருவிதாங்கூரில் அரசியல் புரட்சி இயக்கமாக நிகழவில்லை. மாறாக, இயல்பான சமூக மாற்றமாக நிகழ்ந்தது. எனவே எந்த விதப் பண்பாட்டு இழப்பும் நிகழவில்லை.

தமிழகத்தில் இதனை ஒழிக்கப் பாடுபட்டவர்களுக்கு இதன் முழுமையான வரலாறு தெரியுமா என்பது சந்தேகமாக உள்ளது. தேவதாசிகள் ஒழுக்கக் குறைவான காரியத்தில் ஈடுபடுபவர்கள், வறுமையின் காரணமாக அதில் ஈடுபடுபவர்கள் என்ற தகவல் மட்டுமே கொண்டிருந்தனர். எனவே இம்முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருந்தனர்.

அந்தத் தகவல் எங்கே யாரிடமிருந்து கிடைத்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். 1901ல் இருந்து சென்செஸ் எடுக்கும் முறை ஆரம்பித்த பிறகு பாலியல் நோய் தொற்று ஏற்படும் பகுதிகள் என தமிழகத்தின் சில பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு தேவதாசிகள் காரணம் என்றும் சொல்லப்பட்டது. அது தமிழகத்தின் மிக குறுகிய பகுதி மட்டுமே. சோழ நாட்டிலேயே மூன்று, நான்கு ஊர்களே. இந்த தகவலை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த தமிழக தேவதாசிகளுக்கும் பொருத்திப் பார்ப்பது தவறு. இவர்கள் சொல்வது போல் எல்லோரும் ஒழுக்கக் கேடான காரியம் செய்தனர் எனச் சொல்வது தவறு. ஏனென்றால் கல்வெட்டுச் சான்றுகள் படி தேவதாசிகள் நிலம் வழங்கும் அளவு செழிப்புடன் இருந்தது அறிய முடிகிறது. ஆய் மன்னன் ஒருவன் தன் மகளை தேவதாசியாக பொட்டு கட்டும் படி செய்துள்ளான். சேரனில் ஒரு அரசனும். தேவதாசி என்னும் சொல்லின் வேர் தெய்வத்திலிருந்தே வருகிறது. இவர்கள் சொல்வது போல் கெட்டவார்த்தையல்ல. தெய்வத்தின் பணியாளர்கள்.

எனவே வரலாற்று ரீதியாகவும் சரி, மசோதா நிகழ்ந்த காலகட்டத்திலும் சரி இவர்கள் கையிலிருக்கும் சிறு தகவல் கொண்டு ஒட்டுமொத்த தமிழகத்தின் தேவதாசிகளையும் ஒற்றைப்படையாக முத்திரை குத்துவது தவறு.

இறுதியாக ஒன்று, தேவதாசி ஒழிப்பு முறைக்காக போராடியவர்கள் காராண்மை பற்றி ஏதேனும் பேசியுள்ளனரா? உண்மையிலேயே அன்று தேவதாசிகளுக்கு தமிழகத்தில் இருந்த சிக்கல் அது. அதாவது அன்றைய கோவில் நிர்வாகிகள் சிலரால் ஏற்பட்டுத்தப்பட்டது. காராண்மை என்பது கோவில் நிலத்தை தேவதாசிகளுக்கு உரிமை அல்லாமல் கொடுப்பது. ஒரு குறிப்பட்ட நிலத்தை அவள் பயிரிட்டு அதன் விளைச்சலை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நிலம் கோவிலின் சொந்தம். இதே அமைப்பு கோவில் பணியாளர்கள், பூசகர்கள் அனைவருக்கும் இருந்தது.

1947 அக்டோபரில் தேவதாசி ஒழிப்பு அதிகாரப்பூர்வ சட்டமான பின் இந்த காராண்மை நிலம் யாரிடம் சென்றது? இந்த கேள்வியை இந்நாள் வரை யாரும் எழுப்பவில்லையே. இதனை நான் தேவதாசி முறை பற்றி விரிவாக ஆய்வு செய்த என் நண்பர் சதாசிவத்திடம் கேட்ட போது அந்த நிலங்கள் எல்லாம் குறிப்பிட்ட சில சாதிகளிடம் சென்றதைச் சொன்னார். நிலமெல்லாம் கோவிலுக்கும் செல்லவில்லை. தேவதாசி ஒழிப்பு சட்டத்தினால் ஏற்பட்ட அரசியல், சமூக ஆதாயத்தை நான் மேற்சொன்ன திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், தமிழகத்திலும் உள்ள வேறுபாட்டை கவனிக்க.

இதனை ஆய்வாளர்கள் யாரும் பேசத்துணியவில்லை. சதாசிவம் கூட இதனை தன் ஆய்வில் குறிப்பிடவில்லை. இதனை சொன்னால் குறிப்பிட்ட சில சாதிகளைப் பற்றிப் பேச வேண்டி வருமென தவிர்த்துவிட்டார்.

இத்தனை குறைகளையும் சொல்லும் இடத்திலும் தேவதாசி கலையை வேறு நிலைக்கு மாற்ற நினைத்தவர்களைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். கிருஷ்ணன் ஐயர், ருக்மணி தேவி அருண்டேல் இருவரும் சதிரை பரதமாக மாற்றிக் காட்டினர். இதே போல் கேரளாவில் சுவாதி திருநாளும் செய்துள்ளார். பின்னாளில் அங்கே மோகினியாட்டமாக மாற்றப்படுகிறது. தஞ்சாவூர் தேவதாசிகள் இதற்கு முக்கியமான காரணமாக இருந்தனர்.

கேரளாவில் சுவாதி திருநாள் அரசர் செய்த காரியத்தை தமிழகத்தில் சில தனி நபர்கள் நிகழ்த்தினர். காரணம் இங்குள்ள அரசியல்வாதிகள் இதனை அரசியலாக பார்த்தார்களே ஒழிய சமூக, பண்பாட்டு தரப்பாகப் பார்க்கவில்லை. ஆனால் கிருஷ்ணன் ஐயர் போன்ற தனிநபர் அதனை செய்துக் காட்டினர். தமிழக பண்பாட்டு மலர்ச்சி என்பது தனி நபர் சாதனைகளாக மட்டுமே நிகழ்ந்துள்ளது

*

ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

பின்னாளில் இதனை முன்னெடுத்த சே. ராமானுஜமும் அவர்களுள் ஒருவர். அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். அவர்கள் நம் நன்றிக்கு உரியவர்கள்.

-ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *