நீலி – தேவரடியார் – விவாதம்
நீலி நவம்பர் இதழில் வெளியான வீர. ராஜமாணிக்கத்தின் “தேவரடியார் உரிமைகளும் பெருமைகளும்”; ஜி.எஸ்.எஸ்.வி நவினின் “அன்றிருந்தது…” ஆகிய கட்டுரைகளுக்கு சில எதிர்வினைகள் வந்துள்ளது. இன்றைய சிற்றிதழ் சூழலில் நீலி இதழ் வந்ததும் உடனே வாசித்துவிட்டு அதை உரையாடும் வாசகர்கள் இருப்பது மிகவும் அரிது. முக்கியமானதும் கூட. அவர்களுக்காக இந்த விளக்கத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
-ரம்யா
1
இசை வேளாளர்கள் பற்றிய தேடல் எனக்கு நாடக நடிகை பாலாமணியைப் பற்றிய தமிழ்விக்கி பதிவிலிருந்து ஆரம்பித்தது. நாடக உலகில் ஓர் அரசியைப் போல வாழ்ந்தவர். நாடக வரலாறு தவிர்க்கவே முடியாத பெயராக தன் முத்திரையைப் பதித்துவிட்டுச் சென்றவர். எழுபதுக்கும் மேற்பட்ட பெண்களை மட்டுமே கொண்ட குழுவை 1920களில் வைத்திருந்தார். பாலாமணி வழியாக, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி, கெளரி அம்மாள், வீணை தனம்மாள், பெங்களூர் நாகரத்தினம்மாள் என ஒரு பெரிய நிரையை அதன் வழியாகச் சென்றடைந்தேன். கலை மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகள் வழியாக எழுந்து வந்த பேராளுமைகள் அவர்கள். உணர்வுகளும் போராட்டங்களும் நிறைந்த கதைகளை அவர்கள் வாழ்க்கை வழியாக புனைந்து பார்த்துக் கொண்டு உழன்ற நாட்களை நினைத்துக் கொள்கிறேன். பாலசரஸ்வதியும், எம்.எஸ். சுப்புலட்சுமியும் சிகிரெட் பிடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை அதில் தென்படும் குறும்பு மற்றும் மீறலை ரசித்திருந்திருக்கிறேன். தஞ்சாவூர் பாலசரஸ்வதியைப் பற்றி வாசிக்கும்போது ருக்மிணிதேவி அருண்டேல் என்ற பெயர் வந்து சேர்ந்தது. சதிராட்டம் பற்றி தெரிந்து கொள்ளும்போது பரதநாட்டியம் பற்றி ஏற்கனவே இருந்த பிம்பம் மாறுபட்டது. இதன் வழியாக உருவான கேள்விகளை கலைஞர்களை நேர்காணல் செய்யும்போது தவறாமல் கேட்டு அவர்களின் நிலைப்பாட்டைப் பதிவு செய்கிறோம். அவர்களின் வரலாறும், பண்பாடும், வாழ்க்கை முறையும், பங்களிப்பும் சார்ந்த கலைப்பூர்வமான மற்றும் தகவல் சார்ந்த கட்டுரைகள் நீலியில் பிரசுரமாகியுள்ளன.

1930கள் என்பது இலக்கியம், இசை, நாடகம், சினிமா என பல துறைகளிலும் நவீனம் எழுந்து வந்து கொண்டிருந்த காலகட்டம். அறிவு, கலை சார்ந்த இந்த முக்கியமான துறைகளில் செயல்பட்ட பெண்களைப் பொறுத்து ஒரு போக்கைக் காண முடிந்தது. அதில் செயல்பட்ட பெரும்பாலான பெண்கள் இசை வேளாளர்கள், பிராமணர்கள் இனக்குழுவைச் சார்ந்தவர்களாக இருந்தனர். ஏன்? என்ற கேள்வி எழுந்தது. இந்த இரண்டு இனக்குழுவிலும் கைம்பெண்கள் அதிகமிருந்ததும், ஆங்கிலக் கல்வி கற்ற, மேற்கத்திய கலாச்சாரத்தை அறிந்த ஆண்கள் அவர்களின் குடும்பத்தில் உருவாகியிருந்ததும், செல்வ செழிப்பும், அரசியல் அதிகார செல்வாக்கும் இருந்தது முக்கியமான காரணமாக இருக்கலாம். அங்கு தான் மாற்றம், மறுமலர்ச்சி சார்ந்த முதல் விதை முளைக்க முடியும் என்று தோன்றியது.
தேவதாசி இனக்குழுவைப் பொறுத்து பொ.யு. 19ஆம் நூற்றாண்டில் அதில் சிறிய பகுதியினர் மட்டுமே பரத்தைமையில் ஈடுபட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இக்காலகட்டத்தில் நிலவிய கடும் பஞ்சத்தையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. வரலாற்று நெடுகவும் எடுத்துப் பார்த்தாலும் இந்த பொதுமைப்படுத்தல் உண்மையில்லை.
பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பின்னரே சாதியக் கட்டமைப்பில் இறுக்கம் அதிகமானது என்பதை ஆய்வாளர்கள் எ.சுப்பராயலு, வெ.வேதாச்சலம் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். உதாரணமாக இன்று இருக்கும் தலித் ஈராயிரம் ஆண்டுகளாக தலித்தாக இல்லை. அவர் பிரிடிஷ் ஆட்சியின் போது தலித்தாக இருந்திருக்கலாம் என்ற ஒரு பார்வைக் கோணத்தை அடைய வாய்ப்புள்ளது. சாதிகளுக்குள் மனிதர்களின் போக்கும் வரத்தும் அவரவர் வேலையின் இயல்புப்படி அமைந்திருக்கலாம் என்பது அத்தனை ஆசுவாசத்தை அளிக்கிறது (எல்லோருக்கும் அளிக்க வாய்ப்பில்லை தான்). எனில் ஒரு சாதி அல்லது இனக்குழுவின் பண்புகளும், பழக்கவழக்கங்களும் அத்தனை இறுக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை தானே? இந்த நேர்வில் ஒரு இனக்குழு சார்ந்த சீர்திருத்தம் என்பது அந்த இனக்குழுவின் ஒட்டுமொத்த நன்மைக்காக செய்யப்பட வேண்டும்.
ஆனால் சீர்திருத்தவாதிகள் ஒட்டுமொத்தமாக தேவதாசி மரபை ஒழுக்கமின்மை, பரத்தைமை எனும் சட்டகத்துள் அடைத்தனர். இந்த இனக்குழுவைச் சார்ந்த மக்கள் பலரும் சமூகத்திற்கும், கலைக்கும், பண்பாட்டிற்கும் ஆற்றிய பணிகள் அளப்பறியது. தாய்வழிச் சமூகமாக (matriarchal) கருதச் சாத்தியமான அவர்களின் வாழ்வியல் முறையை முற்றிலும் ஒழுக்கக்கேடானது என்று வரையறுத்தது பிராமணிய, ஆணாதிக்க, விக்டோரியன் ஒழுக்கவியல் சார்ந்த பார்வை தான். இன்றைய பெண்ணிய நோக்கில் அவை மீட்டு பார்க்க வேண்டியதன் அவசியம் உள்ளதை நீலி உணர்கிறது. மேலும் முத்துலட்சுமி ரெட்டி பரத்தைமைக்கு எதிர் தராசில் முன்வைத்த ஆசாரவாதத்தையும், ஒழுக்கவாதத்தையும் நீலி கேள்வி கேட்கத் தயங்காது. அவற்றால் மாற்றத்திற்கு உள்ளான குடும்ப அமைப்பில் உருவான சிக்கலை உணரவே நாம் அரைநூற்றாண்டைக் கடக்க வேண்டியிருந்தது.
மறுமலர்ச்சியும் சீர்திருத்தமும் சமூகத்தில் வேண்டும் தான். முத்துலட்சுமி ரெட்டியின் பெரும்பகுதி வாழ்க்கை சமூகச் செயல்பாட்டினால் ஆனது. அவர் முன்னெடுத்த பல போராட்டங்களில் ஒன்று தேவதாசி ஒழிப்பு முறை. அவரின் நோக்கம் உன்னதமானதும் கூட. ஆனால் அதை கேள்வி கேட்காமல் பகுத்தாராயாமல் எல்லா காலகட்டத்திலும் முழுமையாக ஏற்றுக் கொள்வது அறிவார்ந்தவர்கள் செய்யும் செயல் அல்ல. இந்த சீர்திருத்தங்களின் வழியாக பண்பாட்டு ரீதியாக நாம் இழந்தது/ பெற்றது என்ன என்பதை பெண்ணிய நோக்கில் ஆராய்வதை ஏற்கனவே சூழலில் நமக்கு திணிக்கப்பட்ட வெற்று உணர்ச்சிகளால் உடனடியாகத் தடுப்பது புதிய சிந்தனைப்போக்குகள் உருவாகி வருவதைத் தடுப்பதாகும்.
எவ்வகையிலும் மரபை வெறுமே வியந்தோதுவதும், அதை எந்தவித கேள்விக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக்கொள்வதும் நீலியின் நோக்கமல்ல. போலவே உணர்வு மட்டுமே மேலோங்கிய வெற்றுப் புரட்சிக் கருத்துகளை ஆதரிப்பதும் அதன் நோக்கம் அல்ல. மாறாக புரட்சியின் பெயரால் கைவிடப்பட்ட ஆனால் தக்கவைக்கப்பட வேண்டிய பண்பாடு, மரபு, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்து பெண்ணிய நோக்கில் ஆராய்வதே நீலியின் நோக்கம்.
என் இளமைக்காலத்திலிருந்து தேவதாசி ஒழிப்பு முறை என்று சொன்னதும் நினைவுக்கு வரும் சம்பவம் ஒன்றுண்டு. முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்புமுறைக்கு எதிராக நின்றவர்களைப் பார்த்து அவர்கள் வீட்டுப் பெண்களை ஆறு மாதம் தேவதாசிகளாக இருக்கச் சொன்ன சம்பவமது. இதைக் கேட்டவுடன் நம் இளமையின் ரத்தம் கொதிக்கிறது. முத்துலட்சுமியையும், அவரின் சீர்திருத்தத்தையும் கேள்வி கேட்டு அணுக முடியாத உன்னத இடத்திற்கு கொண்டு சென்று வைத்துவிடுகிறோம். தான் உட்பட எதையும் கேள்வி கேட்டு பகுத்தாய்ந்து அதன் பின் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன ஈ.வெ.ரா-வையுமே நாம் அதே உன்னத இடத்திற்கு கொண்டு சென்று வைத்து விட்டதும் நம் அறிவுத்தேக்க நிலைக்குக் காரணம். அந்த கேள்வி கேட்க முடியாத பீடத்தை நீலி எந்தத் தலைவருக்கும், எந்த அமைப்புக்கும் அளிக்காது.
2
நீலியின் நோக்கத்தை மீள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீட்டுப் பார்த்துக் கொள்கிறேன். நீலி முதன்மையாக பெண் படைப்பாளர்களுக்கான ரசனை விமர்சனக் கட்டுரைகள் வரும் தளமாக ஆரம்பிக்கப்பட்டது. அதை கலை, பண்பாடு, களச்செயல்பாடு சார்ந்த பெண்கள் என விரித்துக் கொண்டுள்ளோம். நீலி பண்பாட்டுப் பெண்ணியம் (cultural feminism) சார்ந்த உரையாடலை முன்னெடுக்கிறது. பண்பாட்டுப் பெண்ணியம் அரசியல், சமூகவியல் சார்ந்து முயங்கும் புள்ளிகளை நோக்கியும் விவாதத்தை முன்னெடுக்கிறது. இவையாவும் பெண் படைப்புகளை மதிப்பிடுவதற்கான சரியான கருவிகளை அளிக்கும் என்ற நோக்கிலும், இனி வரும் பெண் படைப்புகளின் புனைவுக்களத்திற்கான ஊக்கியாவும் அமையலாம் எனும் நோக்கிலும் செய்யப்படுகிறது.
நீலியில் வெளியாகும் கட்டுரை முழுக்க முழுக்க அந்தக் கட்டுரையை எழுதிய கட்டுரை ஆசிரியரின் பார்வையைச் சார்ந்தது. அப்பார்வைக்கு நீலி இதழ் ஒருபோதும் பொறுப்பேற்காது. மாறாக நீலி முன்னெடுக்கும் பண்பாட்டுப் பெண்ணியம் சார்ந்த உரையாடலுக்கு அது உதவும் எனும் பட்சத்தில் அக்கட்டுரை பிரசுரமாகிறது என்பதையும் மறுக்கவில்லை. அது நீலியின் தேடலுக்கு ”ஒரு” பார்வைக்கோணத்தை அளிக்கும் என்ற பட்சத்தில் அக்கட்டுரை பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
நீலியின் ஒரு இதழில் வெளிவரும் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு புனைவுகள் (ஏனெனில் நீலி புனைவுகளைப் பிரசுரிப்பதில்லை) பலவும் ஒன்றை ஒன்று நிரப்புவனவாக இருப்பதை வாசகர்கள் கவனிக்கலாம். ஒரு இதழ் இன்னொரு இதழுடன் உள்ள கட்டுரைகளுடன் கோர்த்துக் கொள்வதாக அமைந்திருக்கும். அந்த வகையில் கட்டுரைகள் வழியாகவே உரையாடலின் தொடர்ச்சி அமைகின்றன. ஒரு கட்டுரை ஆசிரியரின் தொடர்களைப் பொறுத்தும், உரையாடல் தேவைப்படும் தலைப்புகளைப் பொறுத்தும் ஜூம் செயலியில் நண்பர்களுடன் உரையாடலை முன்னெடுக்கிறோம்.
அந்தவகையில் ராஜமாணிக்கம் எழுதிய “தேவரடியார்கள் உரிமைகள் பெருமைகள்” கட்டுரையும், ஜி.எஸ்.எஸ்.வி நவின் எழுதிய “அன்றிருந்தது…” கட்டுரையும் என்னால் வாசிக்கப்பட்டு நீலியின் தேடலை ஒட்டியதாக உணர்ந்ததால் மட்டுமே பிரசுரிக்கப்பட்டது. பொதுவாக நீலி கட்டுரையாசிரியர்களின் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மதிக்கிறது. சிற்றிதழ் சூழலில் அது கட்டற்று இருப்பது அவசியம் என்பதை மணிக்கொடி , எழுத்து உள்ளிட்ட சிற்றிதழ்களில் நிகழ்ந்த கட்டற்ற விவாதத்தினால் விளைந்த நன்மையைக் கருத்தில் கொண்டு இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

நீலி வழியாக நாங்கள் உரையாட விரும்புவது ஏற்கனவே செய்யப்பட்ட சீர்திருத்தங்களை குறை சொல்வதோ, பழித்து நோக்குவதோ அல்லது வரலாற்றுத் தலைவர்களை பழித்துரைப்பதோ அல்ல. இன்னும் மேலதிகமாக பண்பாட்டு நோக்கில், பெண்ணிய நோக்கில் செய்ய வேண்டியது என்ன? இதுவரை செய்யப்பட்டதில் விடுபடல் என்ன? என்பதையே நீலி பிரதானமாக ஆராய்கிறது. அது புதிய கேள்விகளை எழுப்புவனவாக, ஏற்கனவே உள்ளவற்றுக்கு பதில் கண்டடைவதாக அமைய வேண்டும்.
மேலும் இந்த இரு கட்டுரைகளுடன் சுசித்ராவின் ‘தூரங்கள்’ கட்டுரை, தேஜாஸ்ரீ இங்கவ்லெ மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் கெளரி ஆகியோரின் நேர்காணல்கள், தொடர்பான தமிழ்விக்கிப் பக்கங்கள் ஆகியவையும் இணைத்து வாசிக்கலாம். அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட தலைப்பு சார்ந்து வாசகர்கள் முரண்படவும், உரையாடவும் ஒரு களம் உருவாகி வந்திருப்பதைப் பார்க்கலாம். அதுவே ஒரு சிற்றிதழ் அறிவுச்சூழலில் செய்யும் பங்களிப்பு என்பதை நம்புகிறேன்.
இத்துடன் பெரும் உழைப்பைச் செலுத்தி எழுதப்படும் பேராசிரியர் வெங்கட் ரமணன் (குறைவாக கவனம் கிடைப்பதால் இதைச் சொல்ல நேரிடுகிறது) அவர்களின் கட்டுரைக்கும் கவனம் வர வேண்டும் என விரும்புகிறேன். மேலும் இந்த நவம்பர் 2025 இதழ் எழுத்தாளர் ப.சிவகாமியின் நேர்காணல், அவரின் படைப்புகள் சார்ந்த கட்டுரைகளுடன் சிறப்பிதழாக முதன்மையாக வந்துள்ளது. இந்த இதழின் கவனம் அதற்கு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் உரையாடலில் இணைந்திருக்கும் நண்பர்களுக்கு இந்த நேரத்தில் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ரம்யா
(நீலி இதழாசிரியர்)
An Editor’s Note (Nov 9)
*

அருமையான, காத்திரமான விளக்கம்.