அரச பரம்பரை பிறந்தவீடு – நிடமோலு கல்யாணசுந்தரி ஜெகந்நாத்

(தமிழில் – அவினேனி பாஸ்கர்)

நிடமோலு கல்யாணசுந்தரி ஜெகந்நாத்

அம்மன் கோவில் பாழடைந்து கிடந்தது. தலைவாசல் முழுக்க தூசியும், சிலந்தி வலைகளும்.

முனிசீப் வீட்டுத் திண்ணைகள் காரை பெயர்ந்து கற்கள் வெளியே தெரிந்தன. திண்ணைகள் மேலுள்ள சுதைத் தூண்களிலிருந்தும் கூட கற்கள் பெயர்ந்து விட்டிருந்தன. மாளிகையின் முன் வாசல் படிக்கட்டுகளின் சுண்ணாம்பும், கற்களும் பெயர்ந்த இடங்களில் அரசமரச் செடிகளும், சிறு புற்களும் முளைத்திருந்தன. மேல்மாடி ஜன்னல்களில் புழுதி படிந்து, சிலந்தி வலைகள் பின்னியிருந்தன. கட்டிடத்தின் சுவர்கள் எல்லாம் கறுத்துப்போய், அங்கங்கே பூச்சு உதிர்ந்து, வெடிப்புகள் விழுந்திருந்தன. மாளிகையின் கொல்லைப்புறத்தில் ஒரு பக்கச் சுவர் இடிந்த கிணற்றைச் சுற்றியிருந்த கொஞ்ச இடத்தைத் தவிர மற்ற இடமெல்லாம் இடுப்பளவுக்கு புல் வளர்ந்து விட்டிருந்தது. காலியாக கிடக்கும் தானியக் கிடங்குகளிலெல்லாம் பெருச்சாளிகளின் பொந்துகள்.

மாளிகைக்கு ஒட்டியுள்ள பெரிய புழக்கடையில் வைக்கோல் போர்கள் இருந்த இடத்தில், வைக்கோல் அழுகி முழங்கால் அளவு ஆழத்தில் கிடக்கிறது. அதன் அருகில் பாதி இடிந்து போயிருந்த தொழுவத்தின் தரையில் ஆங்காங்கே பெயர்ந்திருந்த கற்கள். தொழுவத்தின் ஒரு மூலையில் பழைய கயிற்று கட்டில்களும், உடைந்த சாக்கு மடக்கு கட்டில்களும் குவியலாகக் கிடக்கின்றன. இன்னொரு பக்கம் உடைந்த மரக்கலப்பைகளும், துருப்பிடித்த இரும்பு கொழுக்களும், அறுவடை அரிவாள்களும், கோடாரிகளும், கிழிந்து போன சாக்குகளும், தென்னை நார் கயிறுகளும் குப்பையாகக் கிடந்தன. மாடுகளைக் கட்டும் தூண்கள் எல்லாம் வெறிச்சோடி இருந்தன. கூரையில் உடைந்திருந்த ஓடுகள். பெரும் புயலில் முறிந்த சில தென்னை மரங்களும், பாதாம் மரங்களும் விழுந்த இடத்திலேயே காய்ந்து போய்க் கிடந்தன. பாதி சரிந்த இலந்தை மரங்கள் இரண்டு தாய் மரத்தோடு தொங்கியபடியே காய்ந்து போயிருந்தது. இலவம், பூந்திக்கொட்டை மரங்களினடியில் உதிர்ந்த பழுத்த இலைகள் முழங்கால் உயரத்திற்கு இருந்தன. சுற்றிலும் ஊமத்தை, எருக்கம் புதர்கள் மண்டிக் கிடந்தன.

புன்னைய்யா குளத்தில் படிக்கட்டுகள் உடைந்து குளத்திற்குள் சரிந்து விட்டிருந்தன. அவற்றில் சில பெரிய கற்களை மட்டும் சற்றுத் தள்ளிப் போட்டு ஊர்க்காரர்கள் துணி துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். வயல் நடுவே இருந்த புன்னைய்யா, அவர் மனைவி சின்னாயம்மாளின் கல்லறைகளின் காரை பெயர்ந்து, சுற்றிலும் புல் முளைத்து மூடி விட்டிருந்தது. கல்லறைகளின் மேல்கற்கள் உடைந்து போயிருந்தன. 

பனை மரங்களின் மேல் அமர்ந்து ‘கா கா’ என்று கத்தும் காக்காய் கூட்டம். மாளிகையின் பின்பக்கத்தில் கருவேல மரங்களுக்கு அப்பால் சூரியன் மறைந்து கொண்டிருந்தான். அந்த அந்தி நேரத்து சிவந்த வானத்திற்கு முன்னால், கருப்பாக, நெட்டையாக ஒரு மொட்டைப் பனைமரம். தாமரைக் குளத்திற்கும் பனைமரத்திற்கும் இடையில் மண் பாதையில் ஒரு ரிக்ஷா வந்து கொண்டிருந்தது. தாமரைக் குளம் முழுவதும் பாசி படிந்திருந்தது. சுற்றிலும் தண்ணீர்ப் பாம்புகள் தலைகளை மட்டும் தண்ணீருக்கு வெளியே நீட்டி கொண்டிருந்தன.

ரிக்ஷா மாளிகையின் முன் வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து முதுமையை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்மணி கையில் பையுடன் இறங்கினார். வெறிச்சோடிய அந்த மாளிகை உள்ளே இருந்து காலடிச் சத்தம் எதிரொலித்தது. இவரை விட சற்று வயது மூத்த இன்னொரு பெண்மணி வெளியே வந்தார். வெயிலிலும் மழையிலும் அலைந்து கறுத்த முகம்; இன்று அந்த முகத்தை சோகமும் அப்பியிருந்தது. “வந்துட்டீங்களா, அக்கம்மா! நீங்க வர்ற வரைக்கும் தாங்குமோ தாங்காதோன்னு பயந்துகிட்டே இருந்தோம்” என்றார். அக்கம்மா தனது புடவையில் முடிந்திருந்த சில்லறையை எடுத்து ரிக்ஷாக்காரனிடம் கொடுத்த பிறகு, கீழே வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு சந்திரம்மா சிதிலமடைந்த படிகளில் ஏறி முன்னால் செல்ல, அக்கம்மா பின்னால் அந்த நிசப்தத்திற்குள் நடந்தார். அதுவரையில் வீதித் திண்ணையில் அசைவற்று படுத்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டி, இந்தச் சிறு சலசலப்பிற்கே ‘மே மே’ என்று கத்திக்கொண்டே துள்ளி குதித்து ஓடியது. 

உள்ளே நுழையும்போது, வாசலில் தொங்கிக் கொண்டிருந்த சிலந்தி வலை அக்கம்மாவின் முகத்தில் பட்டு ஒட்டிக் கொண்டது. “வீடெல்லாம் சுத்தம்பண்ணி பெருக்கிட்டேம்மா, இங்க எப்படியோ கொஞ்சம் ஒட்டடை விட்டுபோயிருக்கு. இந்தப் பெரிய கதவக் கூட நான் வந்தப்புறந்தான தொறந்தேம்மா. நாலு நாள்தான் ஆகுது. இப்போ நாலு பேரு வரணும், போகணுமின்னு தொறந்து விட்டேன்” என்றார் சந்திரம்மா. அக்கம்மா தன் மேல் ஒட்டிய நூலாம்படையை துடைத்துக் கொண்டிருக்க, உயரமான தூண்களுக்கு இடையில் சந்திரம்மாவின் குரல் ‘போம்-போம்’ என்று எதிரொலித்தது. முன் கூடத்தின் தரை வெடிப்புகளில் புற்கள் முளைத்திருந்தன. கூடத்தின் தாழ்வார விளிம்புகளில் ஆலங்கன்றுகளும், அரசங்கன்றுகளும் துளிர் விட்டிருந்தன. நடுக்கூடத்தில் ஓர் ஓணான் குறுக்காக விரைந்து ஊர்ந்தது. “ஆகாரம் எதனாச்சும் எறங்குதா?” என்று அக்கம்மா நடந்து கொண்டே கவலையோடு கேட்டார். “கொஞ்சமா கஞ்சி” என்றார் சந்திரம்மா.  இரண்டாம் கூடத்தைக் கடக்கும்போது, “இந்நேரம் எல்லாருக்கும் கடிதாசி சேர்ந்திருக்கும். வர்ர நேரந்தான்” என்றார் அக்கம்மா. அந்தக் கூடத்தின் பின்னால் தாழ்வாரத்தில் கயிற்று கட்டிலில் ஒரு முதியவர் படுத்திருந்தார். கழுத்து வரை கம்பளி போர்த்தப்பட்டிருந்தது. தரையில் ஆங்காங்கே குழி விழுந்திருந்தது. கட்டிலுக்கு அப்பால் சற்றுத் தள்ளி தாழ்வாரத் திண்ணையில் துருப்பிடித்த ஒரு பழையக் கிளிக்கூண்டு தொங்கிக் கொண்டிருந்தது. அக்கம்மா கட்டிலுக்கு அருகே சென்று குனிந்து “அண்ணா!” என்று மெதுவாக அழைத்தார். முதியவர் பதில் பேசவில்லை. “அரமணி நேரமா அமைதியா இருக்காரும்மா. எந்த முனகலும் இல்ல” என்றார் சந்திரம்மா.

உள் அறையிலிருந்து கால்களை இழுத்துக்கொண்டு தளர்ந்த நடையில் சுப்பாராயுடுவின் மனைவி வெளியே வந்தார். “டாக்டர் என்ன சொன்னாரு, அண்ணி?” என்று கேட்டார் அக்கம்மா. “வந்துட்டியாம்மா? கை கால் கழுவிட்டியா? யார் என்ன சொல்ல முடியும்? ஒன்னும் பயனில்லியாம். பேரண்ட்டாலய்யா மகன் சொன்னான்” என்றார் சுப்பாராயுடுவின் மனைவி. “இங்கிலீசு டாக்டர கூப்பிட்லயா?” என்றார் அக்கம்மா. “சரிதான்! மருந்தும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்! டாக்டரே வேணாமுன்னு அவர் எவ்வளோ பிடிவாதம் பிடிச்சாருன்னு  சந்திராவ கேளு. அவர்தான் பிடிவாதக்காரராச்சே… உனக்கு தெரியாததா?” அலுத்துக்கொண்டார் சுப்பாராயுடுவின் மனைவி. “அவரு இத்தன வருஷத்துல எப்பன்னா மருந்து சாப்ட்டிருக்காரா என்ன?” என்றார் சந்திரம்மா. உள்ளிருந்து ஒரு வௌவால், அறையைத் தாண்டிப் பறந்து வந்து, நோயாளியின் கட்டிலையும், பெண்களையும் கடந்து அடுத்த அறைக்குள் சென்று மறைந்தது. கீழே கிடந்த விசிறியை எடுத்து நோயாளிக்குச் சிறிது நேரம் வீசினார் அக்கம்மா. “நான் சமைக்கிறேன். களைச்சி போயி வந்திருப்ப, நீ போயி கொஞ்ச நேரம் தெருத் திண்ணையில காத்தாட உட்காரு, உள்ளே வெக்கையா இருக்கும்” என்றார் சுப்பாராயுடுவின் மனைவி. “எதுக்கு அண்ணி, நான் சமைக்கிறேன். நீங்க அண்ணா பக்கத்துல உட்காருங்க” என்றார் அக்கம்மா. “நாளையிலேர்ந்து எப்படியும் உனக்கும் இந்தப் பணிவிடை தப்பாதும்மா” என்றார் அவர். “இப்போது ஐயா தூங்குறாரில்ல! நீங்களும்தான் களைச்சி போயிருக்கீங்க, கை கால் கழுவிட்டு வாங்க, வெளியே உக்காரலாம்” என்றார் சந்திரம்மா. 

அக்கம்மா வெளிப்புறச் சுவரில் சாய்ந்துகொண்டு திண்ணையில் அமர்ந்தார். சந்திரம்மா ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்தார். தூரத்தில் எங்கோ ஒரு பசு ‘அம்மா’ என்று கத்தியது. “எப்பேர்பட்ட மகாராசன்! எவ்ளோ இளகிய மனசு! அவருக்கு இப்பிடி ஆயிபோச்சே!” என்று தலையைத் தாழ்த்திக் கொண்டார் சந்திரம்மா. “ஒரு காலத்துல என் வீட்டுக்காரன்…” என்று மீண்டும் தலையை நிமிர்த்திச் சொல்லத் தொடங்கினார் – “என்னை அடிச்சான். நான் ஒரே ஓட்டமாக ஓடியாந்து இங்க வந்து விழுந்துட்டேன். இந்த மகாராசன் இங்கதான் உட்காந்திருந்தாரு. எனக்கு வேறவழியே தெரியல, ரெண்டு காலையும் கெட்டியாகப் பிடிச்சிகிட்டேன். என் வீட்டுக்காரன் பின்னாலயே கைல தடியோடு வந்துட்டான். இந்த ஐயா எழுந்து அவன் கன்னத்தில் விட்டாரு ஒரு அறை, அவ்வளவுதான் அந்த மனுஷன்! ரெண்டு கையும் முகத்துல அழுத்திப் புடிச்சிகிட்டான். என் வீட்டுக்காரன் கண்ல தண்ணி கொட்டிருச்சி. என் மனசு கேக்கல, போயி அய்யா கால கெட்டியா புடிச்சிகிட்டேன், ‘ஐயா, ஐயா, அடிக்காதீங்க, விட்ருங்க’ன்னு அழுது புலம்புனேன். அவரு என் அழுகையப் பாத்து, பையிலேர்ந்து கைக்கு கெடச்ச ரூபாய்கள எடுத்து என் வீட்டுக்காரன் கையில கொடுத்தாரு. என் வீட்டுக்காரன் அப்போ, ‘ஐயா, நான் இவள சும்மா அடிக்கலைங்க, நான் காட்டிலயும், மேட்லயும் போயி கஷ்டப்பட்டு வேல செஞ்சுட்டு வீட்டுக்கு வந்தா, இவ வயித்துக்கு எதுவும் ஆக்கி வெக்காம அந்தக் காலிப்பய கண்ணப்பனோட சிரிச்சி பேசிக்கிட்டு ஒக்காந்துட்டு இருக்காய்யா… அந்த வீணாபோனவன் கண்ட கண்ட கதையெல்லாம் சொல்றான், இவ அதக்கேட்டு இளிச்சிகிட்டு இருக்காய்யா’ என்றான். ஒடனே ஐயாவோட கண்ணெல்லாம் செவந்துருச்சி. ‘இனிமே இவ அவனோட பேசினாள்ன்னா, இவள ஒரே வெட்டா வெட்டிடு’ன்னு என் வீட்டுக்காரன்ட்ட சொன்னாரு. அப்போ அவரு முகத்துல இருந்த கோபத்த பார்த்தப்போ பயத்துல என் ஒடம்பு நடுங்கிப் போச்சு – அந்த பயம் இப்போ வரைக்கும் என்ன விட்டுப் போகல. ஐயா அவ்ளோ கண்டிப்பானவரு! நேர்மையானவரு! கோவம் இருந்தாலும், ரொம்ப எளகின மனசுக்காரரு. அவரு குடுத்த பணத்த வெச்சிதான் நாங்க வயிறாற சாப்ட்டோம். எங்க ஆளுங்க எத்தனையோ பேரு நிலைச்சு ஒரு எடத்துல இல்லாம குப்பைமேட்ல  பொறுக்கியும், திருடியும் சாப்டிட்டு இருக்காங்க. இந்த மகாராசன் எங்கள கூட்டினுபோயி புன்னைய்யா கொளத்துக்கு காவலுக்கு வெச்சாரு. வீடும் வாசலும் கொடுத்தாரு. மகாராசன் போவும்போது புஷ்பக விமானத்தில தான் போவாரு…” என்று சொன்னார். சற்று நேரம் அமைதி நிலவியது.

எதிரே இருந்த தாமரைக் குட்டையில் தவளைகள் கத்திக்கொண்டிருந்தன. சுற்றிலும் சில்வண்டுகளின் சத்தம். மெதுவாக இருட்டத் தொடங்கியது. “இத்தன வருஷமாகியும் இது இன்ன வியாதின்னு எந்த வைத்தியராலும் சொல்ல முடியலையே” என்றார் அக்கம்மா. “அவரு எங்க வைத்தியர்களப் பேசவுட்டாரு? இத்தன வருஷமாக யாரோடயாவது பேசுனாரா? ஏதோ திடமான ஒடம்புங்கறதால இத்தன வருஷம் தள்ளிக்கிட்டு வந்துட்டாரு” என்றார் சந்திரம்மா. அக்கம்மாவுக்கு இந்த வீட்டில் கழித்த சிறுவயது நினைவுகள் எல்லாம் மனதிற்குள் வந்தன. “இந்த வீட்டுச் செல்வச் செழிப்பெல்லாம் எல்லாம் இப்போ எங்கே போச்சோ சந்திரா! காலம் எப்படி எல்லாம் மாறிபோச்சோ!” என்றாள் அக்கம்மா மெதுவாக. “அதையேன் கேக்கறீங்கம்மா, அந்த சத்தியவதியம்மாவுக்கு கல்யாணம் ஆனதுமே லட்சுமி இங்கேயிருந்து போயிட்டா. ஒருவேள ஏதாவது சாபமோ, இல்ல ஆகாதவங்க யாராவது செஞ்ச சூனியமோன்னு தோணுது எனக்கு” என்றார் சந்திரம்மா.

சத்தியவதியின் பெயரைக் கேட்டதும் அக்கம்மாவின் மனம் கனத்தது. சத்தியவதியும் அக்கம்மாவும் ஒன்றாக வளர்ந்தவர்கள். தூரத்து உறவு. ஏழ்மை துரத்த அக்கம்மாவின் தந்தை வீரய்யா, சுப்பாராயுடுவின் தந்தை முனிசீபிடம் தஞ்சம் புகுந்து இந்த வீட்டிலேயே தங்கிவிட்டார். தாய் இல்லாத சத்தியவதிக்கும் அக்கம்மாவின் தாய்தான் பாலூட்டினாள். அக்கம்மாவுக்கும், சத்தியவதிக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது; இருவர் நடுவிலும் எந்த ஒளிவு மறைவும் இல்லை. உயிர் தோழிகளானார்கள். 

சந்திரம்மா லாந்தர் விளக்கேற்றிக் கொண்டு வர உள்ளே சென்றார். அக்கம்மாவின் மனதிற்குள் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவைகளெல்லாம் நினைவுகளாய் வேதனையோடு அலைமோதின. 

*

அது சுப்பாராயுடுவின் இளமைக் காலம்.

நிலவு உதித்து, இரவு இரண்டு ஜாமம் ஆகியிருந்தது. பகல் நேரத்து கோடை வெப்பத்தை மறந்து உறங்கிக் கொண்டிருந்தது ஊர்.

தனது வழக்கப்படி எழுந்து, கையில் ஹரிக்கேன் லாந்தரை பிடித்துக்கொண்டு, மாட்டுத் தொழுவம் முழுவதையும் சுற்றிப் பார்த்து, தானிய அறைகளின் பூட்டுகளை இழுத்துப் பார்த்து, வாசலில் உள்ள பத்தாயங்களை ஒரு முறைச் சுற்றி வந்து, செருப்பைக் கழற்றிவிட்டு, கூடத்துக் கட்டிலில் படுக்கப் போனார் சுப்பாராயுடு. முன் வாசலருகே உள்ள தானிய நிலவறையின் மேல் வைக்கோல் பரப்பி, அதன் மேல் பாய் போட்டுப் படுத்திருந்த சிந்தாலுவும், நல்லியனும் விடும் குறட்டைச் சத்தம் தவிர மற்றபடி எங்கும் அமைதி. வீட்டின் முன்னால் இருந்த தாமரைக் குளத்திலிருந்து காற்று வீசியது; பெரிய வாசலில் கட்டப்பட்டிருந்த காய்ந்த மாவிலைத் தோரணங்கள் ‘சலசல’வென சத்தமிட்டன. எங்கோ லேசாக காலடிச் சத்தம் கேட்டது. படுக்கப் போன சுப்பாராயுடு மீண்டும் எழுந்து உட்கார்ந்தார். உற்றுக் கவனித்தார். ஆம், காலடிச் சத்தம் தான்! காலடிகள் முன் வாசலுக்குள் வருகின்றன – தானியக் கிடங்கு பக்கமாக வருவது போல் இருந்தது. மண் குதிர்களுக்கு அருகே வந்து நின்றது போலத் தோன்றியது. ஊரில் திருட்டுக் கும்பல் நடமாடுவதாகப் பேச்சு இருந்தது. சுப்பாராயுடு மூட்டைகளின் மேல் இருந்த வெள்ளிக் காப்பு போட்ட கைத்தடியை எடுத்துக் கொண்டு, திறந்து கிடந்த வாசல் வழியாக வெளியே வந்தார். குதிர்களுக்கு அருகே யாரும் இல்லை.

ஒருமுறை தொண்டையைச் செறுமிக்கொண்டு, “யார் அது?” என்று உறுமலாகக் கேட்டார். பதில் வரவில்லை. மீண்டும் “யார் அது?” என்று கர்ஜித்தார். எங்கும் அமைதி. ஆனால் குதிருக்கு பின்னால் காற்றில் துணி படபடத்தது. சுப்பாராயுடு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு குதிரின் மறுபக்கம் சென்றார். “யார் அது?” என்று கேட்டார். வாடிய பூக்களின் வாசனை வீசியது. அந்தப் பக்கம் வேப்பமரத்தின் நிழல் விழுந்திருந்தது. அந்த நிழலில், மங்கலான நிலவொளியில், ஒரு பெண் தனது இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டிருந்தாள். இம்முறை “யார் நீ?” என்று கர்ஜித்தார். பதில் இல்லை. ஆனால் அந்தச் சத்தத்தைக் கேட்டு, வீட்டுக்குத் தொலைவில் இருந்த மொட்டைப் பனைமரத்தில் இரண்டு கயிறுகளால் கட்டப்பட்டிருந்த ஒரு கரிய எருமைக்கடா, தலையைத் தாழ்த்தி ‘ஹூ! ஹூ!’ என்று ஆங்காரமாய் கத்தி, நான்கைந்து முறை முன்னங்கால்களால் தரையைப் பின்னோக்கி பிறாண்டியது. புழுதி மேலெழும்பியது. அது கயிற்றை அறுத்துக்கொள்ள முயன்றது. சுப்பாராயுடு ஒரு கணம் அங்கேயே நின்றார். அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தார். அவள் தலையில் இருந்த வாடிய சாமந்தியும், வாடாமல்லி சரமும் அந்த மங்கலான நிலவொளியில் கருமையாகத் தெரிந்தன. இன்னும் அருகில் சென்றார். சுப்பாராயுடுவுக்குப் பல எண்ணங்கள் ஒரே நேரத்தில் தோன்றின.

“சத்தியவதி!” என்றார்.

“அண்ணா!… நான் தான்,” சத்தியவதியின் தீனமான குரலைக் கேட்டதும் சுப்பாராயுடுவின் மனம் உருகிப்போனது. அதே சமயம் பயமும் உண்டானது.

“உன்னுடன் வந்தது யார்?” என்று கேட்டார். சத்தியவதி பேசவில்லை. இவ்வளவு நள்ளிரவில் சத்தியவதி ஏன் வந்தாள்? எப்படி வந்தாள்? என்ன ஆபத்து நேர்ந்ததோ? அவளுக்கு என்ன ஆபத்து நேரமுடியும்?

சத்தியவதிக்குத் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆகியிருந்தன. கல்யாணத்திற்கு போட்ட பந்தல் கூட இன்னும் பிரிக்கவில்லை. எவ்வளவு பெரிய ஆபத்தாக இருந்தாலும், ஒரு பெண் நள்ளிரவில் வீட்டை விட்டு இவ்வளவு தூரம் நடந்து வருவதா? அதுவும் புகுந்த வீட்டை விட்டு பிறந்த வீட்டிற்கு! என்ன விபரீதம்! பூமி பிறந்ததிலிருந்து இந்த வீட்டில் பெண்கள் இப்படிச் செய்ததுண்டா? இல்லை, ஊர் உலகத்தில்தான் யாராவது இப்படி கேள்விப்பட்டதுண்டா? விடிந்தால் நாலு பேருக்கு மத்தியில் எப்படி தலை நிமிர்ந்து நடப்பது? சுப்பாராயுடு தனது கோபத்தை அடக்கிக்கொண்டு, “உள்ளே வா” என்றார். அண்ணனும் தங்கையும் நேருக்கு நேர் நின்று பேசிக்கொள்வதே அரிது, அதுவும் அவர்கள் பெரியவர்களான பிறகு. சொல்லப்போனால், பெரிய அண்ணனாகிய சுப்பாராயுடுவிடம் அவருடைய ஆறு தம்பிகளுமே எதிரே நின்று ஒரு சொல்லும் பேசமாட்டார்கள்; அவராக அழைக்காமல் அவர் முன்னால் வரமாட்டார்கள். அவர் கூடத்தில் இருக்கும் வரை பெண்களின் குரல் வெளியே கேட்காது. அதிலும் மூத்த மகன் என்றால் தந்தை முனிசீப்புக்கும் கூட ஒரு தனி மரியாதை.

சத்தியவதி பெண்கள் எல்லோரும் படுத்திருந்த இரண்டாவது கூடத்திற்குச் சென்றாள். அங்கே கிழக்குப்புற வராந்தாவில், அவளது அறைக்கு முன்னால் தொங்கிக்கொண்டிருக்கும் கூண்டிலிருந்த கிளி, சத்தியவதியைப் பார்த்ததும் தனது கீச்சுக்குரலில் பாடத் தொடங்கியது:

“வருகின்றாய் போகின்றாய் செல்லக்கிளியே, 

பேர்பெற்ற பிறந்தவீட்டுச் சேதி என்னவோ? – 

பட்டுச் சீலைகள் வாங்கீனார் – பெண்ணே உன் அண்ணன்மார், 

வண்டிச் சீர் கொண்டு வருகின்றார் – பெண்ணே உன் அண்ணன்மார்!” 

சத்தம் கேட்டதும் படுத்திருந்த அண்ணிமார்கள் விழித்தனர். “என்ன அக்கிரமம்டீ இது! இப்படி ஒரு விசித்திரத்தை நாங்க பாத்ததில்லடீ. குடும்பத்தோட மானமும், மரியாதையும் மண்ணோடு மண்ணா போயிடிச்சே” என்றனர். “குடும்ப கௌரவத்த சந்திக்கு கொண்டாந்துட்டாளேப்பா இவ! இனிமே இந்த வீட்ல மத்த பொண்ணுங்களுக்கு எப்படி கல்யாணம் நடக்கும்?” என்று கேட்டாள் சத்தியவதியின் மாற்றாந்தாய், கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டு விசிறியை கையில் எடுத்தபடி. இதைக் கேட்டு அவளது நான்கு மாற்றாந்தாய் தங்கைகளும் கொட்டாவி விட்டபடி எழுந்தனர். சித்தி நேராகச் சென்று கூடத்தில் பெரிய கட்டிலில் படுத்திருந்த முனிசீப்பின் காதில் இதைப் போட்டுவிட்டாள். அவருக்குப் பக்கத்தில் மடக்கு கட்டிலில் படுத்திருந்த வீரய்யா திடுக்கிட்டு எழுந்து, துண்டால் கழுத்து வியர்வையைத் துடைத்துக்கொண்டார். மாடியில் படுத்திருந்த முனிசீப்பின் மற்ற மகன்களுக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. அந்த இரவு முனிசீப் வீட்டில் யாரும் தூங்கவில்லை.

அக்கம்மா சத்தியவதியின் அறைக்குள் வந்தாள். அவளைக் கண்டதும் சத்தியவதி கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். அக்கம்மா கதவைச் சாத்திவிட்டு அருகில் வந்து அமர்ந்தாள். “வெளிய திருடங்க நடமாட்றதா சொல்றாங்க, நீ எப்படி வந்தே சத்தியவதி?” என்று கேட்டாள். “இதோ பாரு, கொலுசுகளையும் வளையல்களையும் சத்தம் வராம இருக்க கயிறுவெச்சி கட்டிட்டேன். மத்த நகை எல்லாம் கழட்டி அவங்க வீட்டிலயே போட்டுட்டு வந்துட்டேன்” என்றாள் சத்தியவதி தலைகுனிந்தபடி. சிறிது நேரம் மௌனம். “என்ன நடந்துச்சு?” என்று கேட்டாள் அக்கம்மா. சத்தியவதி மேலும் தலை குனிந்தாள். “சாயங்காலம் எனக்கு வலுக்கட்டாயமா அலங்காரம் செஞ்சாங்க. படுக்கையறைப் பக்கம் திரும்பி கூட பாரக்காம நான் தப்பிச்சு வந்துட்டேன்”. அக்கம்மா தனது முந்தானையால் சத்தியவதியின் கண்களைத் துடைத்துவிட்டாள், “ஆத்து வெள்ளத்துல எதிர் நீச்சல் கஷ்டம்டீ, சத்தியவதி” என்று ஆறுதல் கூறியபடி.

மறுநாள் மதியத்திற்கெல்லாம் புகுந்த வீட்டுப் பண்ணையாள் வந்துவிட்டான்.

சிந்தாலு பயணத்திற்கு கூட்டு வண்டியைத் தயார் செய்தான். வீரய்யாவும், அக்கம்மாவும் சத்தியவதியைப் புகுந்த வீட்டில் விட்டுவரப் புறப்பட்டனர். 

“நல்ல குடும்பத்து பொண்ணுக்கு புடிக்கும், பிடிக்காது அப்படீன்னு எங்கயாச்சும் இருக்கா?” என்றாள் மாற்றாந்தாய். “நம்ம குடும்ப கௌரவத்த வீதிக்கு இழுக்காத, அம்மா” என்றார் முனிசீப் மெதுவாக இருமியபடி. “இனிமே திரும்பி வந்தேன்னா, வாசப்படியிலேயே வெட்டிப் போட்டுருவேன்!” என்று கோபமாகக் கத்தினார் சுப்பாராயுடு.

வண்டியில் யாருமே பேசவில்லை. சத்தியவதி தனது துயரங்களை மனதிற்குள் நினைத்துப் பார்த்தாள். ஒரு வாரத்திற்கு முன்பு கூட இப்படித்தான் யாருக்கும் தெரியாமல் இருட்டில் தட்டித் தடுமாறி புகுந்த வீட்டிலிருந்து தப்பித்துக்கொண்டு வெளியேறினாள். வெளியே எங்குமே ஆள் நடமாட்டமில்லை. விளைந்த வயல்களுக்குப் பக்கத்தில் வண்டிப்பாதையில் நடந்தாள். சிறிது தூரம் வந்ததும் நிலவு உதித்தது. எவ்வளவு தூரம் பார்த்தாலும் நிலவொளியில் பரந்த வயல்களைத் தவிர மனித நடமாட்டமே இல்லை. வயல்களில் எங்கோ ஒரு நரி ஊளையிட்டுக் கொண்டு ஓடியது. தனது காலடிச் சத்தமே தனக்குச் சத்தமாகக் கேட்டது. குறுக்கு வழியில் நடந்து கோணலாற்றை அடைந்தாள். கோடையில் நீர் வரத்து குறைந்து இடுப்பளவுதான் இருக்கும். ஆறு அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அலைகளின் மேல் நிலவொளி மின்னியது. தீடீரென ஏதோ பயம் தொற்றிக்கொண்டது. நீரில் கால் வைக்கும் துணிவு வரவில்லை – சிறுவயது பயம் இன்னும் போகவில்லை. சிறுவயதில் மூன்று நாட்கள் காய்ச்சல் வருமளவுக்கு பயந்துபோனது இந்தக் கோணலாற்றில்தான். அன்று அக்னி நட்சித்திர வெயிலில் மண்ணெல்லாம் தகித்துப்போயிருந்தது. வைகாசி கடைசி வாரம். பாசனத்திற்காக வாய்க்கால்களில் நீர் திறந்துவிடும் பருவம். யாருக்கும் தெரியாமல் அக்கம்மாவும், சத்தியவதியும் மணல் சொறிந்த ஆற்றின் அடுத்தக் கரையில் விளையாடுவதற்காக ஆற்றில் இறங்கினார்கள். அக்கரையில்தான் பக்கத்து ஊர் பிள்ளைகள் ஈர மணலில் வாரி இறைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஆற்றின் மேல் பகுதியிலிருந்து பாசனத்திற்கு திறந்து விட்டிருந்த புதிய நீர் வந்துகொண்டிருந்தது. அதை கவனிக்கவில்லை. செம்மண்ணும், சகதியுமாய் கலங்கலான வெள்ளம் நுரையுடன் பொங்கி வந்தது. வெள்ளம் இவர்களைத் தாண்டிப் பாய்ந்தது. திடீரென்று பிள்ளைகள் கரைநோக்கி தள்ளப்பட்டனர். முட்செடிகளும், மரக்கட்டைகளும், உடைந்த கிளைகளும் நீரில் அடித்து வந்தன. கரைக்கு ஓட முயன்ற சத்தியவதியின் காலில் ஒரு முள்செடி கீறியது. அந்தக் காயத்தைத் தடவிக்கொண்டு தலையை உயர்த்திய போது, நீரில் ஒரு பெண்ணின் கை தெரிந்தது. வளையல் அணிந்திருந்த அந்தக் கைக்கு பக்கத்திலேயே கரிய கூந்தல் பாதியளவு நீரில் மூழ்கித் மிதந்து வெள்ளத்தில் அடித்துச் சென்றுகொண்டிருந்தது. அந்தப் பிணமும், பெருவெள்ளத்தின் வேகமும் அவள் கண் முன்னே இப்பொழுது நிழலாடியது. அந்தக் காட்சி நினைவு வந்ததற்கே வியர்த்துக் கொட்டி, கால்கள் பலமிழந்து நடுங்கின. ஒரு நிமிடம் கழித்து, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, வந்த வழியே திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென நடந்து வீட்டை அடைந்தாள். காலடிச் சத்தத்தில் விழித்த அத்தைக்காரி கொல்லைப்புறம் சென்று வருகிறாள் என நினைத்து, “ஏன் தனியா எழுந்து போன?” என்று கேட்டாள்.

வண்டி புகுந்த வீட்டை நெருங்கிக்கொண்டிருந்தது – சத்தியவதிக்கு இவை எல்லாம் மனதில் தோன்றி பயத்தை அதிகப்படுத்தின.

இங்கே பாலூரில், வண்டி செல்லும் வழியையே பார்த்தபடி நின்றிருந்தார் சுப்பாராயுடு. வண்டி சற்று தூரம் சென்றதும் மாளிகையை நோக்கித் திரும்பினார். திண்ணையில் அமர்ந்து கீழே இருந்த வளர்ப்பு மான்களாகிய கௌரிக்கும், ராஜாவுக்கும் இளம் புல் கட்டுகளைப் பிரித்து தின்னக் கொடுத்தார். உள்ளேயிருந்து கொண்டலய்யா வந்தான். அம்மன் கோவில் திருவிழாச் செலவுகள் மற்றும் பிற விபரங்களைப் பேசிவிட்டு, இரும்புப் பெட்டியின் சாவியை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான். கொண்டலய்யா முனிசீப்பிற்கு தூரத்து உறவு, அடைக்கலமாக வந்த ஆள். முனிசீப்பின் வயதான காலத்தில் இந்த நிர்வாகம் முழுவதையும் செங்கல்வராயுடு கவனித்துக்கொண்டிருந்தான். அவன் பெயர் நினைவுக்கு வந்ததும் சுப்பாராயுடுவின் கண்கள் சிவந்தன. ‘என்ன ஒரு அழுத்தக்காரன்! போகும்போது பணம் கொடுத்தா வாங்கலயே! வேண்டாமுன்னு மறுத்துட்டான்! அவன் இன்னும் இங்கேயே இருந்திருந்தால் விவகாரம் முற்றியிருக்கும். இங்கிருந்து அனுப்பிவிட்டது தான் நல்லது. இல்லையேல் இந்தக் குடும்பத்தின் கௌரவத்திற்கு எத்தனை பெரிய அவமானம் வந்திருக்கும்! விவகாரம் அரசல் புரசலாக வெளியே தெரிந்திருந்தால் என்ன கதியாவது? அவ்வளவுதான், ஒட்டு மொத்த குடும்பமும் சாக வேண்டியதுதான்.’

கையிலிருந்த புல் கட்டு தீர்ந்துவிட்டது. திண்ணையிலிருந்து இறங்கி உள்ளே சென்று சாய்வு நாற்காலியில் அமர்ந்து புகையிலைகளைச் சுருட்டி வாயில் அதக்கிக்கொண்டார். மனம் மெல்ல அமைதியடைந்தது. வாசலில் எருமைக்கடாக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான் நல்லியன். சுப்பாராயுடு, “டேய் நல்லீ, மயிலுக்கெல்லாம் தீனி போட்டியா?” என்று கத்தினார். அவரது குரலைக் கேட்டதும், எருமைக்கடா ஒன்று ‘ஹூ! ஹூ!’ என்று கத்தி, தலையை வளைத்து கொம்புகளை நேராக உயர்த்தி கால்களால் தரையைத் பிராண்ட ஆரம்பித்தது – கயிற்றைத் தறிக்க முயன்றபடி. மற்ற பண்ணை ஆட்கள் ஓடிவந்து கயிற்றை பலமாக இழுத்து அதைப் பிடித்துச் சென்றார்கள். ஒற்றை ஆளாய் நல்லியனால் அதை அடக்க முடியவில்லை. செங்கல்வராயுடு இருந்தவரை அவன் ஒருவனே அந்த எருமைக்கடாவை அடக்கி வந்தான், இப்போது நான்கு பேர் தேவைப்படுகிறார்கள். மீண்டும் சுப்பாராயுடுவுக்கு அவன் நினைவு வந்தது. அவன் ஒன்றும் இவர்களை விடப் பலசாலி அல்ல, ஆனால் என்ன மாயமோ, அவன் “வா வா” என்று அருகில் சென்றாலே அந்த முரட்டு எருமைக்கடா தலையைத் தாழ்த்தி ஒரு குழந்தையைப் போல மாறிவிடும்.

சுப்பாராயுடு எழுந்து மாட்டுத் தொழுவம் நோக்கி நடந்தார். இரு பக்கமும் வைக்கோல் போர்களுக்கு இடையே, வைக்கோலை ஒருவர் மீது ஒருவர் இழுத்து போட்டபடி விளையாடிக்கொண்டிருந்த பண்ணையாட்களின் பிள்ளைகள் இவரைக் கண்டதும் சத்தம் போடாமல் அப்படியே நின்றனர். அவர் கைகளைக் பின்னால் கட்டிக்கொண்டு தலைகுனிந்தபடி ஏதோ யோசனையில் மூழ்கியவரைப்போல் மெதுவாய் முன்நோக்கி நடந்து சென்றார். பந்தயக் கோழிகளுக்கு தவிடு கலந்து வைத்துக் கொண்டிருந்த பண்ணையாட்கள் எழுந்து நின்றார்கள். ஆனால் சுப்பாராயுடு அங்கும் நிற்காமல் முன் நகர்ந்தார். ஏழு ஆண்டுகளாகச் செங்கல்வராயுடு படுத்திருந்த மடக்குகட்டில் அங்கே கிடந்தது. ஒரு பக்கம் விறகுக்காக கருவேலமரங்களும், சுள்ளிகளும் கூரை உயரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பெரிய தொழுவத்தில் வாய்க்கூடு போடப்பட்ட ஆறு கன்றுகுட்டிகள்  படுத்திருந்தன. தூண்களுக்கு கட்டப்பட்டு படுத்திருந்த வயதான நான்கு  எருதுகள் மெதுவாய் அசைபோட்டுக்கொண்டிருந்தன. எழமுடியாமல் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த முதிய எருதின் முதுகில் இருந்த ஈயை அவர் கையால் தட்டினார். அது நன்றியுடன் தலையை உயர்த்தித் திரும்பிப் பார்த்தது. அங்கிருந்து புறாக் கூடுகளுக்குச் சென்று புறாக்களை ஒவ்வொன்றாக வெளியே எடுத்துப் பறக்கவிட்டார். புறாக்கள் கால்களில் இருந்த மணிகளின் சத்தத்துடன் வானில் கூட்டமாகப் வட்டமடித்துக்கொண்டு பறந்தன. சுப்பாராயுடு ஒரு கருவேலமரக் கட்டையின் மேல் கால்களை இறுக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து, திருப்தியாக சுருட்டுப் பிடித்தார். ஒரு பண்ணையாள் புறாக்களுக்காக ஒரு கூடையில் பச்சைப்பயறு கொண்டுவந்து அவர் கால்களுக்கு அருகே வைத்துச் சென்றான். ‘சே! கௌரவம், மரியாதை  என்னவாயிருக்கும்? திரும்பி வரட்டும், பாக்குறேன்!’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு பற்களைக் கடித்து, புருவத்தைச் சுருக்கினார்.

*

அக்கம்மாவின் மனதில் இந்தக் கதை இன்னும் ஓடிக்கொண்டே இருந்தது. எதுவும் பேசவில்லை. சந்திரம்மாவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். இருவருக்கும் இடையில் லாந்தர் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. தூரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. தாமரைக் குட்டையில் தவளைகள் சத்தம் இன்னும் அதிகமாகியது. வாசலில் இன்னொரு ரிக்ஷா வந்து நின்றது. சுப்பாராயுடுவின் மூன்றாவது தம்பியும், அவரது மனைவியும், பேரனும் வந்தனர். லாந்தர் ஒளியைக் காட்டி அவர்களை அழைத்துக்கொண்டு அக்கம்மாவும் சந்திரம்மாவும் உள்ளே சென்றனர்.

“அண்ணா… அண்ணா, இதோ பார். கண்ணத் தொற. யாரு வந்திருக்காங்கன்னு பாரு” என்று சுப்பாராயுடுவின் நெற்றியில் கை வைத்தபடி கூறினாள் அக்கம்மா. “நீ யாரு? சத்தியவதியா….!” என்று கண்களைத் திறந்து கூர்ந்து பார்த்து, “ஓ, அக்கம்மாவா! வந்துட்டியா?” என்றார். “ஆமாண்ணா, வந்துட்டேன்.” “சத்தியவதி எங்கே? இன்னும் வரலியே?” என்று சிரமத்துடன் கேட்டு பெருமூச்சு விட்டார். அக்கம்மா கண்களைத் துடைத்துக்கொண்டு, ஒரு பாயை விரித்தாள். வந்த அண்ணியை அமரச் சொன்னாள். சுவரோரம் இருந்த பெஞ்சில் படிந்திருந்த தூசியைத் துடைத்து, சின்ன அண்ணனையையும் பேரனையும் அமர வைத்தாள் சந்திரம்மா.

மீண்டும் வெளியே வரும்போது, கூடத்து வராந்தாவில் தொங்கிக்கொண்டிருந்த பழைய கிளிக்கூண்டு அக்கம்மாவின் தலையில் இடித்தது. கிளி இல்லை, கூண்டு மட்டுமே இருந்தது. அந்தக் கூண்டைப் பார்த்ததும் அக்கம்மாவிற்குச் செங்கல்வராயுடுவின் நினைவு வந்தது. வெளியே வந்து திண்ணையில் அமர்ந்த அக்கம்மாவிற்கு, கூண்டைப் பார்க்காவிட்டாலும் அந்த நினைவு வராமல் இருக்காது. அவன் பிறந்தது எங்கே? வந்து சேர்ந்தது எங்கே? இந்த மாளிகையின் செல்வச் செழிப்போடும், வாழ்வோடும் அவனது வாழ்க்கை எப்படிப் பின்னிப் பிணைந்துவிட்டது! விதியின் விளையாட்டுகளும், இறைவனின் லீலைகளும் எவ்வளவு விசித்திரமானவை! “அந்தச் செங்கய்யா பாவம் எங்கே இருக்கிறாரோ! சத்தியவதி அம்மாவை நினைத்துக் கொண்டால் அவருக்குப் பைத்தியமே பிடித்துவிடும்… அவரும் நல்ல மனுஷன்தாம்மா. அப்போ ஊரெல்லாம் பொறளி பேசிச்சில்ல…” என்று பாதி சத்தமாகவும் பாதி தனக்குள்ளும் சொல்லிக்கொண்டாள் சந்திரம்மா. எதிரே இருந்த தூணில் சாய்ந்து, தலையைச் சுவற்றில் சாய்த்து அமர்ந்திருந்த அக்கம்மாவின் மனதில்  நிழலாடிய கடந்த காலத்தின் காட்சிகள் தொடர்ந்தன..

*

சுப்பாராயுடு இளமைப் பருவத்தில் இருந்த நாட்கள். தங்கை சத்தியவதி காற்றிலாடும் மலரைப் போல, தங்க ஜடை குஞ்சலங்களுடனும், காலில் கொலுசுகளுடனும், கை நிறைய வளையல்களுடனும் அந்த மாளிகை முழுவதும் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தாள்; அவளுக்கு அப்போது எட்டு வயது.

ஒரு காலை வேளையில் செங்கல்வராயுடு வந்தான். அவன் கையில் பலத்த சிராய்ப்புக் காயங்கள் இருந்தன. கையில் இரத்தம் கோடுகளாக வழிந்து கொண்டிருந்தது. கையைச் சற்று உயர்த்திப் பிடித்திருந்தான். முனிசீப்பின் வீட்டு வாசலில் அவனுடன் வந்த வண்டிக்காரர்கள் நின்றிருந்தனர். முனிசீப் கட்டிலில் அமர்ந்திருந்தார். சுப்பாராயுடு வந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். ஒரு வண்டிக்காரன் சொல்லத் தொடங்கினான்: “ஐயா, காலைல குளத்தாங்கரை பக்கத்துல இந்தத் தம்பி சமைக்கிறதுக்கு காஞ்சக் கிளைங்கள்ல விறகு ஒடிக்க மரத்துல ஏறினாருங்க. அவங்க அப்பாரு – பெரியவரு – கொடத்த கொண்டுபோயி கொளத்துல நீர் மொண்டுக்கிட்டு கரைக்கு வந்து சேர்ந்தாரு. அவ்வளவுதான்! வந்ததும் ‘ராமா’ன்னு தரையில சாஞ்சிட்டாருங்க. விஷப் பூச்சி எதனா தீண்டிச்சோ என்னவோ தெரியலைங்க. நாங்க ஓடி போறதுக்குள்ள, பதட்டத்துல இந்தத் தம்பி மரத்திலிருந்து இறங்க பாத்திருக்காரு. காஞ்ச கிளை ஒன்னு உடைந்து அவரு கைய கீழிச்சிருச்சீங்க. ரத்தத்த பாருங்க. ரொம்ப நல்ல மனிசன். அக்கம் பக்கத்துல கேட்டு பாத்தோம். எஜமான்களெல்லாம் வயலுக்கு போயிருக்காங்க, காத்திருங்கன்னு சொன்னாங்கய்யா. இப்போ இங்கே வந்தோம். ஐயா தான் தயவு காட்டணும். கொண்டாந்த தானியமெல்லாம் அப்படியே இருக்கு, கையில காசில்லை. வீட்டுக்கொரு பூ கொடுத்தாத்தானே ஈஸ்வரனுக்கே ஒரு மாலையாகும்? அதுபோலத்தானுங்க ஐயா” அதுவரை மௌனமாக இருந்த சுப்பாராயுடு, “அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. எல்லாத்தையும் நாங்களே பாத்துக்கிடறோம். மத்தவங்க யாரையும் தேடிப் போகவேணாம். அப்படி அனுப்பி நமக்கு பழக்கமில்லை” என்று கடுமையாகக் கூறினார்.

அதுவரை கலக்கத்தில் இருந்த செங்கல்வராயுடு, சுப்பாராயுடுவைப் பார்த்து, “தானியத்துக்கு ஒரு வெலப்போட்டு நீங்களே எடுத்துக்கோங்க” என்றான். சுப்பாராயுடு ஏளனமாகச் சிரித்தார். முனிசீப் மெதுவாக, “உன் பேரென்ன தம்பி?” என்று கேட்டார். “இனுகண்ட்டி செங்கல்வராயுடு, ஐயா”. “இனுகண்ட்டியா?” என்று முனிசீப் வியப்புடன் கேட்டார். “எங்க ஊர்ல இவங்களத் தெரியாதவங்களே இல்லைங்கய்யா. ஒரு காலத்துல ஓகோன்னு வாழ்ந்த  மகாராசா குடும்பமுங்க. ஒங்களுக்கு ஏதேனும் தூரத்து ஒறவுமுறையா இருக்குமோ என்னவோங்க” என்றான் வண்டிக்காரன். “இல்ல, இல்ல!” என்றபடி சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்தார் சுப்பாராயுடு. செங்கல்வராயுடு சட்டென்று தலை நிமிர்ந்தான். புருவம் வழியாக வழிந்த கறுத்த தலைமுடி சற்று சிதறியது. “இனுகண்ட்டி பேர எங்கோ கேட்டமாதிரி இருக்கே” என்றார் முனிசீப். விளையாட்டில் மூழ்கி மூச்சிரைக்க வாசலுக்கு வந்த சத்தியவதி, அவனைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டாள். அவனது முகத்தில் நிலைகொண்டிருந்த துயரத்தைப் பார்த்து அவள் சிலையாகிப் போனாள். செங்கல்வராயுடு ஒரு கணம் சத்தியவதியையே பார்த்தான்.

“கூட பொறந்தவங்க எத்தன பேர்?” என்றார் முனிசீப். “இவரு ஒருத்தருதாங்க ஐயா. நெலபொலம் எதுவுமில்ல. இப்போ எல்லாம் கைவிட்டு போயிருச்சு. குத்தகைக்குத் எடுத்து தான் வெவசாயம் செய்றாங்க. இந்தப் பக்கமா பொழைப்புக்கு வழி இருக்கும்னு சொன்னார்கள், அதான் எங்களோட வண்டி கட்டிக்கிட்டு வந்தாருங்க” என்றான் இன்னொரு வண்டிக்காரன். இதற்குள் சத்தியவதி ஒரு ஈரத் துணியைக் கொண்டு வந்து வாசலுக்கு வெளியே நீட்டினாள். யாரும் வாங்கவில்லை. சுப்பாராயுடு, “சத்தியவதி! என்ன இது?” என்று கர்ஜித்தார். வாசலிலேயே அந்தத் துணியைப் போட்டுவிட்டு சத்தியவதி ஓடிவிட்டாள். இரண்டடி முன் நடந்து செங்கல்வராயுடு அந்தத் துணியை எடுத்து கையில் வழிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்டான்.

விபரங்களைக் கேட்டறிந்த பிறகு, “இங்கேயே இருந்துக்க தம்பி, பாவம்! நல்லது கெட்டதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம், கவலைப்படவேணாம்” என்றார் முனிசீப்.

இறந்துபோன அவன் தந்தையின் இறுதிச் சடங்கை முனிசீப்பே முன்நின்று தன் வீட்டிலேயே நடத்தினார். தானியத்தை விற்று அந்தக் காசை அவனிடமே வைத்துக்கொள்ளச் சொன்னார். அன்றிலிருந்து முனிசீப்புக்கு வலது கரம் போல அந்த மாளிகையிலேயே தங்கிவிட்டான் செங்கல்வராயுடு.

செங்கல்வராயுடுவைச் சந்தித்த நாளிலிருந்து சத்தியவதிக்குத் தனது தாய் மீண்டும் உயிரோடு வந்தது போல இருந்தது. அவன் வயலுக்குச் சென்றாலும் வெளியே சென்றாலும் சத்தியவதிக்குப் பிடித்தமான எதையாவது ஒன்றைக் கொண்டு வந்து கொடுப்பான். சத்தியவதி காய்ச்சலில் படுத்திருந்தால், கறந்த பாலைக் கொண்டு வந்து அவள் கட்டிலருகே வைப்பான். யாராவது கேட்டால், ‘சுடச்சுடக் கறந்த பாலு ஒடம்புக்கு நல்லதும்மா’ என்று மட்டும் சொல்வான். நாட்கள் நகர்ந்தன.

சத்தியவதி வயதுக்கு வந்தாள். வீட்டுப் பெரியவர்களும், பழக்கவழக்கங்களும் அவளை வாசற்படியைத் தாண்ட விடவில்லை. ஆனால் செங்கல்வராயுடுவை நினைத்தாலே சத்தியவதிக்குத் தேவகானம் கேட்பது போல இருக்கும். அவன் முன்னால் இருக்கும்போது அவள் முகம் பொலிவடையும்.

ஒருநாள் செங்கல்வராயுடு வயலில் வாய்க்கால் ஓரம் அடர்ந்த புதரில் படர்ந்திருந்த மல்லிகைக் கொடியிலிருந்து பூப்பறித்துக் கொண்டு வந்தான். “அந்தப் புதர்ல பாம்பு இருக்குங்கறாங்க. அங்கே ஏன் போற? பூ இல்லாட்டி போகுது, இனிமே போகாத” என்றாள் சத்தியவதி பூக்களை வாங்கியபடி. “உன் பார்வை என்மேல இருக்குற வரைக்கும் எந்தப் பாம்பும் என்னை ஒன்னும் செய்யாது” என்றான் அவன் தரையைப் பார்த்தபடி. முழுநிலவைப் பார்த்து கடல் பொங்குவது போல சத்தியவதியின் உள்ளம் பொங்கியது.

நாட்கள் கழிந்தன. ஒருநாள் வயலிலிருந்து வரும்போது மொட்டைப் பனைமரத்தின் அடியில் பறக்க முடியாமல் விழுந்திருந்த ஒரு கிளிக்குஞ்சைக் கண்டான். அதைச் சத்தியவதியிடம் கொடுத்தான். அவள் அதை ஒரு கூடையில் வைத்து வாழைப் பழங்களைக் கொடுத்தாள்.

அன்று மாலை வீட்டுத் தேவைகளுக்காகச் செங்கல்வராயுடு வண்டி கட்டிக்கொண்டு சந்தைக்குக் கிளம்பினான். அவன் எப்போதும் தனது சொந்த வண்டியையும் எருதுகளையுமே பயன்படுத்துவான். சிறிது தூரம் சென்றதும் சத்தியவதி பாதையின் குறுக்கே வந்து நின்றாள். முதல் நாள் மழையில் நனைந்த செம்மண் சாலையில் நடந்து வந்த சத்தியவதியின் கால்களில் ஒட்டிய ஈரச்செம்மண் மருதாணி போல் இருந்தது. சத்தியவதியைக் கண்டு அவன் திகைத்தான். “ஏன் இவ்வளவு தூரம் வந்த? இப்போ உன்ன எப்படி வீட்டுக்குக் கூட்டிப் போறது?” என்றான் பயமும், சந்தோஷமும் கலந்த குரலில். “பயப்படாத, என்னை இங்க எல்லாருக்கும் நல்லாத் தெரியும். என்னை யாரும் ஒன்னும் பண்ணமாட்டாங்க. நீ பத்திரமா போயிட்டு வா” என்று கூறித் தனது தலையில் இருந்த வாடிய மல்லிகைப் பூச்சரத்தை எடுத்து எருதுகளின் கொம்புகளில் கட்டினாள். “இதோ அம்மன் குங்குமம்” என்று தன் முந்தானையிலிருந்து குங்குமத்தை எடுத்து அவனுக்குப் பொட்டு வைத்தாள். “உன் கூட நான் மட்டுமில்ல, சந்தையில் அம்மன் கூட உனக்குத் துணையிருப்பா” என்றாள். அவனுக்கு நெஞ்சில் பூப் பூத்தது போல் இருந்தது.

அன்று மாலை திரும்பி வரும்போது, கிளிக்கு ஒரு கூண்டும், சத்தியவதிக்கு பாசிமணியும் வாங்கி வந்தான். அவர்களிடையே வளர்ந்து வரும் நட்பு சுப்பாராயுடுவுக்குப் பிடிக்கவில்லை. அண்ணிகள் சினந்து முணுமுணுத்தார்கள்.

ஒரு வருடம் கழிந்தது. செங்கல்வராயுடு வாங்கி வந்த பாசிமணிகளைத் தனது ரவிக்கையின் ஓரங்களில் தைத்தபடி கிளிக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் சத்தியவதி. மதியம் உறங்கிக்கொண்டிருந்த சுப்பாராயுடு தூக்கம் கலைந்து எரிச்சலுடன் எழுந்தார். “சத்தியவதி! என்னது இந்த சனியன்! கீச்சு கீச்சுன்னு கத்திக்கிட்டு… இந்தக் கிளிய எப்போவோ கழுத்தை நெரிச்சுடப்போறேன். நிம்மதியா தூங்கக்கூட முடியல…” என்று கத்திவிட்டு வெளியே சென்றார். புதிதாய் பிடித்து வந்த எருமைக்கடாக்களைக் தொழுவத்தில் கட்டிக் கொண்டிருந்தான் சிந்தாலு. புதிதாய் மூக்கனாங்கயிறு போட்டு எருமைக்கடாக்கள் குட்டி யானைகளைப்போல் இருந்தன. கோபத்தில் இருந்த சுப்பாராயுடு ஒரு கட்டையை எடுத்து அந்த எருமைக்கடாக்களை அடித்தார். ஒரு எருமைக்கடாயின் முதுகில் பலமான அடி விழுந்தது. அன்றிலிருந்து அந்த எருமைக்கடா சுப்பாராயுடுவின் குரலைக் கேட்டாலே அவர் திசைப்பார்த்து உறுமி, அவர் மேல் பாய்ந்து பழிவாங்கப் பார்த்தது..

“முத்தும், நவரத்தினமும் புழங்குற வீட்ல ஆனிப்பொன்னாட்டம் பொறந்தவ நீ. நான் யாரு? என் கிட்ட ஏன் இத்தன பாசமா இருக்க?”  என்று  நுனிக் கிளையில் செம்பருத்திப் பூக்களை எட்டிப்பறித்துக் கொண்டு கேட்டான் செங்கல்வராயுடு. இரு கைகளையும் ஏந்திக்கொண்டு தங்கப் பதுமையென நின்றிருந்தாள் சத்தியவதி.

“என் பிறப்பப் பத்தி எனக்கு கவலையில்ல, எனக்கு நீதான் சொக்கத் தங்கம்” என்றாள் சத்தியவதி குறும்பாக. 

“எனக்கும் யோசனதான். ஒன்னுவிட்ட சித்தப்பா ஒருத்தரு இருக்காரு. அவரவிட்டு உன்னைக் கேட்கச் சொல்லலாமான்னு. ஆனா பணம் சம்பாதிக்கணும், அதுதான் சிக்கல்” என்றான் வருத்தத்துடன்.

ஒருநாள் சுப்பாராயுடுவிடம் அவரது மனைவி, “வயசு பொண்ணுக்கு அவனோட என்ன சினேகிதம்?” என்று கேட்டாள். அவர் திடுக்கிட்டார். கோபமாகப் பார்த்தார். “ஊர்ல யாராவது ஏதாவது பேசினாங்களா?” என்று கேட்டார்.

அன்று சுப்பாராயுடு தனது மாடி அறையில் தனியாக நடந்துகொண்டிருந்தார். சில நாட்களுக்கு முன் அந்த நகை மூட்டை விவகாரமும் அப்படித்தான். இந்தக் குடும்பத்தின் மான மரியாதைகளைப் பற்றித்தானே அவ்வளவு பயந்தது? யாரும் அருகில் செல்லாத அந்த மல்லிகைப் புதருக்குச் செங்கல்வராயுடு ஏன் சென்றான்? சத்தியவதிக்கு பூ பறித்து வர! அந்தப் புதருக்குள் திருடர்கள் யாரோ ஒளித்து வைத்திருந்த ஒரு கறுப்புத் துணி மூட்டை அவன் கண்ணில் பட்டது. வந்து சுப்பாராயுடுவிடம் சொன்னான். சுப்பாராயுடு நடுங்கிப்போனார். “நம்ம வயல் புதர்லயா? திருட்டு சொத்தா? இது வெளியில யாருக்கும் தெரியவேணாம்” என்று அந்தப் பொதியைக் கோணலாற்றில் வீசச் சொன்னார். ஊர் பழிக்கு ஆளாக நேரிடுமே அஞ்சினார். செங்கல்வராயுடுவை இங்கிருந்து அனுப்பி விடுவதே நல்லது என்று முடிவு செய்தார். ஜன்னல் வழியாகப் பார்த்தார்; எதிரே தாமரைக் குளத்தில் முனிசீபின் வாத்துகள் நீந்திக் கொண்டிருந்தன. கரையில் வளர்ப்பு நாய்கள் வாலை மடித்து அமர்ந்து கொண்டு நாக்கால் ஈக்களை பிடித்துக் கொண்டிருந்தன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் போர்வை போர்த்தியது போல வயல்வெளிகள்.

அன்று இரவு வயலிலிருந்து வந்ததும் வீரய்யா சொன்னார்; சுப்பாராயுடு அழைப்பதாக. செங்கல்வராயுடு அறைக்குள் சென்றான். அரை மணி நேரம் கழித்து மாடியறையில் தண்ணீர் வைப்பதற்கு சென்ற அக்கம்மா பார்த்தாள் – செங்கல்வராயுடு அறையிலிருந்து வெளியே வந்து தனது மேலாடையால் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியேறினான்.

மறுநாள் காலை விடிவதற்கு முன்பே சத்தியவதி அறையில் இல்லை என்பதை அக்கம்மா கவனித்தாள். செங்கல்வராயுடு தனது வண்டியை கட்டிக்கொண்டு சென்ற வழியாகத் தேடிச் சென்றாள் அக்கம்மா. ஊருக்கு வெளியே புன்னைய்யா குளத்தருகே, புன்னைய்யா கல்லறைக்கு எதிரிலுள்ள ஒரு மரத்தடியில் சத்தியவதி சுருண்டு படுத்துக் கிடந்தாள். அவளது கைகளில் இறுகப்பற்றிய ஒரு வெள்ளை மேலாடை இருந்தது; அது நேற்று இரவு செங்கல்வராயுடு தோளில் போட்டிருந்தது. அழுது அழுது அவள் கண்கள் வீங்கியிருந்தன. சற்று நேரத்திற்கு முன்புதான் தூங்கியிருக்கிறாள். அக்கம்மா யாருக்கும் தெரியாமல் அந்தத் துணியை வாங்கித் தன் மடியில் மறைத்துக் கொண்டாள். சாலையிலிருந்து புன்னய்யா குளத்துக்கு செல்லும் மண் பாதையில் ஒரு ஜோடி பெரிய காலடிகளும், ஒரு ஜோடி சிறிய காலடிகளும் தெரிந்தன. அக்கம்மா அவற்றை கையால் தேய்த்து அழித்தாள்.

அந்தக் கோடையில் சத்தியவதிக்குத் திருமணம் நடந்தது.

பதினைந்து நாட்களுக்குள் அவள் புகுந்த வீட்டிலிருந்து தப்பி வந்ததும், அக்கம்மாவும் வீரய்யாவும் அவளைத் திருப்பி அழைத்துச் சென்றதும் நடந்தது. ஒரு வாரம் கழித்து, முனிசீப்பின் மகள் சத்தியவதி தலைவிரி கோலமாக வயல்களில் அலைவதாகவும், வாய்க்கால் ஓரம் அமர்ந்திருப்பதாகவும் பலவிதமான செய்திகள் பாலூர் வரை வந்தன. ஊரில் கதைக் கதையாகப் பேசிக்கொண்டனர். ஊர் குளத்தங்கரையில் தண்ணீரெடுக்க வரும் பெண்கள் “கண்டிப்பான அண்ணன்மார் இருந்தும் அந்தப் பொண்ணு இப்படி இருக்காளே! பய பக்தியே இல்லாம…”, “அந்த அண்ணன்மார்களப் பார்த்தா நமக்கே பயமா இருக்கே, இவ என்னடான்னா புகுந்த வீட்ல குடும்பம் நடத்தாம பைத்தியமாட்டம் அலையிறா…” என்று பேச ஆரம்பித்தார்கள். மாட்டைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்த ஒருவன், “மனசு எங்கேயோ இருந்தா கட்டுனவனோட எப்பிடி குடித்தனம் பண்ணுவா?” என்றான். “வயசுக்கு வந்த பொம்பளப் புள்ளைங்க இருக்குற வீட்ல, வயசு பையன் செங்கல்வராயுடுவ வீட்ல வெச்சிருந்தா இப்படித்தான் ஆவும்…” என்றாள் குடத்தை இடுப்பிற்கு தூக்கிக்கொண்ட ஒரு சிறுக்கி. ஊர் பேச்சுகளெல்லாம் வேலையாட்கள் மூலம் முனிசீப்பின் மருமகள்களுக்கு வந்து கொண்டிருந்தன. சுப்பாராயுடு இதை அறிந்து கோபமடைந்தார். செய்வதறியாது எரிந்து விழுந்தார்.

முனிசீப்பின் வற்புறுத்தலால் சத்தியவதிக்கு பேய் ஓட்டுவதற்காக அவளைப் பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்தனர். சத்தியவதியை தீய சக்தி ஆட்கொண்டுவிட்டது என்றார் வைத்தியர். அக்கம்மாவின் மைத்துனர் ரங்கூனிலிருந்து கடிதம் எழுதினார்; செங்கல்வராயுடு அங்கே இருப்பதாகவும், இரண்டு ஆண்டுகள் அங்கேயே தங்குவார் என்றும் தெரியப்படுத்தினார். அக்கம்மா இதைச் சத்தியவதியிடம் சொன்னாள். “ஆமாம், பணம் சம்பாதித்து வருவதாகச் சொன்னார்” என்றாள் சத்தியவதி வேதனையுடன். “இனி என்ன பயன் சத்தியவதி?” என்றாள் அக்கம்மா. சத்தியவதி முகத்தை மூடிக்கொண்டு விம்மி அழுதாள்.

சத்தியவதியை மீண்டும் புகுந்த வீட்டுக்கு அனுப்பும் அன்று சுப்பாராயுடு எரிமலை போலக் கொதித்துக் கொண்டிருந்தார். வாசலில் கட்டப்பட்டிருந்த எருமைக்கடா இன்னும் வேகமாக மூச்சுவிட்டது; அது மிகுந்த வன்மத்தோடு இருந்தது.

நாட்கள் நகர்ந்தன. கோடை முடிந்து முதல் மழை பெய்தது. தாமரைக் குளத்தில் தவளைகள் கத்தின. புன்னய்யா குளத்திலும், தாமரைக் குளத்திலும் தாமரைப் பூக்கள் நைந்து போயிருந்தன. மொட்டைப் பனைமரத்திற்கு மேலே சிவப்பு நிறத்தில் உதித்த பௌர்ணமி நிலவு, இரவுப்பெண்ணின் நெற்றிப்பொட்டாய் காட்சியளித்தது. இரவு நேரம் ஆக ஆக வெண்ணிலா பிரகாசமார பொழிந்தது. இரவு சாப்பிடும் வேளையில் சத்தியவதி வந்தாள்; இம்முறை நகைகளைக் கழற்ற வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. அவளைப் பார்த்ததும் கூண்டிலிருந்த கிளி சிறகுகளை அடித்துக்கொண்டு பாடத் தொடங்கியது. அந்தக் சத்தம் கேட்டு வளர்ப்பு நாய்களை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த சுப்பாராயுடு தலை தூக்கிப் பார்த்தார். கண்கள் சிவந்தன. கோபத்தில் உடல் நடுங்கியது. “இந்த வாசப்படிய மிதிக்காதேன்னு சொன்னேன்லா? இந்த சனியன் எங்கள விடாதா? எங்கள மானத்தோடு வாழவிடமாட்ட போலிருக்கே” என்று கத்தி்க் கொண்டே, வேகமாய் எழுந்து, தாழ்வாரத்தில் சுவற்றில் மாட்டியிருந்த மேலாடையை எடுத்துப் போர்த்திக்கொண்டு, செருப்பில் கால்களை நுழைத்தவாறே “வந்த வழியிலே திரும்பி நட!” என்றார். சத்தியவதி தலையைத் திரும்பி பின்னால் பார்த்தபடி முன்னால் சென்றாள். கிளி அவளையே பார்த்தபடி பாடிக் கொண்டிருந்தது.

“மானமுள்ள அண்ணன்மார் கிளம்பினாரா? 

அரக்கி அண்ணிமார் உன்னை வரவிடுவாரா?”

கூடத்திற்கு வந்த பெரிய அண்ணி, “பொழுது விடிஞ்சதும் அழைச்சிட்டு போங்க” என்றாள். “யாராவது பாத்தா, மீண்டும் வந்துட்டதா பேச்சு கிளம்புமே?” என்று கூறியபடி, சுப்பாராயுடு முன்னால் செல்ல, சத்தியவதி பின்னால் நடந்து போய்க்கொண்டே இருந்தனர். வழியில் கருவேல மரங்கள் நிலவொளியில் இன்னும் கருப்பாக ஓவியங்களாய் நின்றிருந்தன. புதுத்துளிர் விட்டிக்கொண்டிருந்த மற்ற மரங்கள் எல்லாம் அந்தப் பௌர்ணமி நிலவொளியில் விபூதியில் நனைந்ததைப் போல வெளுத்துக் காணப்பட்டன. அவர் செருப்பு சத்தத்தைக் கேட்டு, பாதையின் குறுக்கே இருந்த ஒரு பெரிய பாம்பு விலகிச் சென்றது. வயல் வரப்புகளில் நீர் மின்னிக்கொண்டிருந்தது.

சுப்பாராயுடு வீட்டிற்குத் திரும்பியபோது விடிவெள்ளி முளைத்திருந்தது. “அவங்க வீட்டு வாசல் வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டேன். உள்ள போறதுக்கு எனக்கு முகமில்லை” என்றார் மனைவி கேட்டதற்கு.

மறுநாள் புகுந்த வீட்டிலிருந்து சத்தியவதியை தேடிக் கொண்டு ஆட்கள் வந்தனர். வாசலில் விட்டுவிட்டு அண்ணன் திரும்பிய அந்தச் சிறு இடைவெளியில், வீட்டிற்குள் செல்லாமல் சத்தியவதி எங்கோ ஓடிவிட்டாள். கிணறுகள், ஏரிகள், குளங்கள் என எங்கும் துழாவித் தேடினார்கள். சுற்றுவட்டாரத்தில் எங்குமே சத்தியவதி கிடைக்கவில்லை.

தேடல் பல நாட்கள் தொடர்ந்தது. தேடித்தேடி மனம் நொடிந்து போன முனிசீப் சில நாட்களிலேயே படுத்த படுக்கையானார். கையில் அணிந்திருந்த ‘ஷாவுக்கார’ காப்பு கழன்று விழும் அளவுக்கு உடல் மெலிந்தது. மூன்று மாதங்களுக்குள் அவர் காலமானார்.

சுப்பாராயுடு வீட்டு விவகாரங்களிலோ, சொத்து விவகாரங்களிலோ எதிலும் கவனம் செலுத்தமுடியாமலானார். எப்பொழுதும் ஏதோ சிந்தனையுடன் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார். சத்தியவதி ஓடிப்போன அதே ஆண்டிலேயே எருமைக்கடாக்கள் விற்கப்பட்டன. அடுத்தடுத்து ஏர் மாடுகள், கறவை மாடுகள் என ஒவ்வொன்றாக அனைத்தும் விற்கப்பட்டன. சுப்பாராயுடு தன் அறையில் மெத்தைக் கட்டிலில் படுப்பதை நிறுத்திவிட்டார். திண்ணையிலேயே ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டார். உணவும் உறக்கமும் அங்கேயே. அம்மன் கோவில் பக்கம் போவதை நிறுத்திவிட்டார். சத்திம்மா திருவிழா கொண்டாட்டம் நின்றுபோனது. சொத்துக்கள் கரையத் தொடங்கின. ஆட்களும் வேலைக்காரர்களும் ஒவ்வொருவராக மாளிகையை விட்டு வெளியேறினர். பெண் பிள்ளைகளை ஏதோ ஒரு சாதாரண வீடுகளில் திருமணம் செய்து கொடுத்தனர். “கௌரவமா வாழ்ந்து, எல்லாத்துக்கும் மான மரியாதை பார்க்குற மனுஷன், இந்த மாதிரி சாதாரண வீடுகள்ள பொண்ணுங்கள கொடுக்க எப்படிச் சம்மதிச்சாரோ? தங்கச்சியால வந்த அவமானத்தால அவருக்கு புத்தி கலங்கிருச்சு” என்று ஊரார் பேசிக்கொண்டனர். சொத்துக்கள் எல்லாம் போயின. அந்த மாளிகை ஒன்று மட்டும் மிஞ்சியது. அதற்கும் பாதுகாப்பு இல்லை, அதன் மேலும் கடன் ஏறியது.

சுப்பாராயுடு சீக்கிரமே மூப்படைந்தார். தீராத சோகத்தால் அவர் முகத்தில் சுருக்கங்கள் விழுந்தன – சுட்டெரிக்கும் வெயிலுக்கு நஞ்சை நிலத்தில் விழும் வெடிப்புகள் போல.

அவரைப் பார்த்தாலே கூண்டிலிருந்த கிளி பயந்து சிறகுகளைத் ‘பட பட’வென அடித்துக்கொண்டு வெளியே பறக்க முயலும். சுப்பாராயுடு கிளியின் மேல் கோபம் கொள்ளவில்லை. சத்தியவதி சென்ற நாளிலிருந்து கிளியும் உணவைத் தவிர்த்தது – அக்கம்மா கொடுத்தாலும் உண்ணாமல் மூக்கைச் சிறகுக்குள் புதைத்துக்கொண்டு அப்படியே கிடக்கும்.

ரங்கூனிலிருந்து வந்த மைத்துனர், செங்கல்வராயுடு காய்ச்சலில் அங்கேயே இறந்துவிட்டதாக அக்கம்மாவிடம் சொன்னார். அக்கம்மா கனத்த இதயத்துடன் சென்று, கிளிக்கூண்டைத் திறந்து கிளியை வெளியே பறக்கவிட்டாள்.

வறுமை தாளாமலும், ‘பூ விற்ற ஊரில் விறகு விற்பது’ கஷ்டமாக இருந்ததாலும், தம்பிகள் அனைவரும் ஒவ்வொரு திசையாகப் பிரிந்து நகரங்களுக்குச் சென்றுவிட்டனர் – அங்கே சிறிய கடைகள் வைத்தும், குமாஸ்தா வேலைகள் செய்தும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

*

நடந்த இந்தக் கதையையும், இந்த மாளிகைக்கு நேர்ந்த விசித்திரமான மாற்றங்களையும் திண்ணையில் அமர்ந்திருந்த அக்கம்மா நினைத்துப் பார்த்தாள்.

வந்திருந்த சில உறவினர்கள் அன்று இரவெல்லாம் சுப்பாராயுடுவின் கட்டிலைச் சுற்றி அமர்ந்து விழித்திருந்தனர். நள்ளிரவில் அந்த முதியவருக்கு மீண்டும் நினைவு வந்தது. “சத்தியவதி இன்னும் வரலியா?” என்றார். “இல்ல அண்ணா” என்றாள் அக்கம்மா. “அக்கம்மா, இனிமேலாவது சத்திம்மா திருவிழாவ நடத்துறியா? அந்த அம்மன் பேருதான் சத்தியவதிக்கும் வெச்சோம்” என்றார் மூச்சிரைக்க. “அப்படியே அண்ணா, கண்டிப்பாக நடத்துறோம்” என்று அவரது நெற்றியில் கை வைத்தபடி கூறினாள்.

சுப்பாராயுடுவுக்கு மூச்சிரைப்பு அதிகமானது. வெளியிலிருந்து காற்று சில்லென்று வீசியது. அந்தச் சிறு காற்றில் பழைய கிளிக்கூண்டு லேசாக ஆடியது. மேகங்களுக்குப் பின்னாலிருந்து சந்திரன் வைரத்தைப் போலப் பிரகாசித்தான். நள்ளிரவு கடந்துவிட்டது.

அவினேனி பாஸ்கர்

அதிகாலை முதல் கோழி கூவும்போது, “சத்தியவதி, சத்தியவதி!” என்று சத்தமாகக் கத்தினார். “அண்ணா, அண்ணா, சத்தியவதி இன்னும் வரலண்ணா” என்றாள் அக்கம்மா. “ஆ! ஆ! கோணலாத்துல வெள்ளப் பெருக்கு. நுரையும், வெள்ளமும்… பொங்கி வருது….. கண்ணய்யா இல்ல” என்றார் மூச்சிரைத்தபடி. சற்று நிறுத்திவிட்டு, “பரிசல் கண்ணய்யா இல்ல… அக்கம்மா… நானே பரிசல போட்டேன், அக்கம்மா, நான்தான்… அவ ஏறமாட்டேன்னுட்டா… என் கையால நானே அவள இழுத்துப் பரிசலில் தள்ளினேன்… அக்கம்மா… அவ்ளோதான்!” என்றார். எங்கும் அமைதி நிலவியது. மீண்டும் “சத்தியவதி!” என்ற அலறல். “வருவா அண்ணா, படுத்துக்கோ” என்றாள் அக்கம்மா மென்மையாக. சுப்பாராயுடு கண்களைச் சற்றுத் திறந்தார். “அடிப் பைத்தியக்காரீ… சத்தியவதி வரமாட்டா… கோணலாறு அவளை விழுங்கிருச்சி. பரிசல்லிருந்து தண்ணீருக்குள்ள போயிட்டா… இதோ இதோ… நாந்தான்… என் கையாலயே…” பாதி திறந்து நீர் பொங்கிய கண்கள் நிரந்தரமாக மூடிக்கொண்டன.

அறையில் இருந்தவர்கள் கண்களில் கண்ணீர் உறைந்து நின்றது. சுப்பாராயுடுவின் மூச்சு நின்றது.

ஒரு நிழலைப் போல அகல் விளக்கை ஏற்றி, காற்றுக்குக் கையை அணைத்துக் கொண்டு, அந்த விளக்கைத் தலைமாட்டில் வைப்பதற்காக உள்ளேயிருந்து வந்தாள் சந்திரம்மா.

தெலுங்கு கதை: அலராச புட்டிள்ளு  (ஏப்ரல், 1962)

***

(நிடமோலு கல்யாணசுந்தரி ஜெகந்நாத் (1922 – 2002): ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் ஜூன் 22, 1922-ல் பிறந்தார். நாற்பதாண்டுகளில் வெறும் இருபது கதைகள் மட்டுமே எழுதினார். 1941-ல் தன் முதல் கதையை பாரதி இதழுக்கு எழுதினார். ஜகந்நாத் என்பவரை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார். ஜூலை 19, 2002-ல் காலமானார்)

***

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *