மலையும் மலை சார்ந்ததும் – மதுமிதா

(அருணாச்சல பிரதேசத்தின் பின்புலத்தில் ஆங்கிலத்தில் படைப்புகளை எழுதும் எழுத்தாளர் மமங் தாய் அவர்களின்  படைப்புகளை முன் வைத்து)

மமங்தாய்

எழுத்துரு இல்லாத, எதையும் எழுதி வைத்து பழக்கம் இல்லாத பழங்குடிகள் தங்கள் கதைகளை நினைவில் நிறுத்தி வாய்மொழியாகவே பல நூறு தலைமுறைகள் கொண்டு வந்திருக்கிறார்கள். அத்தகைய ஒரு சமூகத்தின் பகுதியாக தன்னை முழுதுணர்த்திக் கொண்ட, முழுதுணர்ந்து கொண்ட ஒரு ஆளுமை மமங் தாய். அவர் அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட் நகரை சேர்ந்தவர். ஆதி மொழியை தாய் மொழியாக கொண்டவர்.

அவர் தனது படைப்பு மொழியாக தேர்ந்திருப்பது ஆங்கிலத்தை. அருணாச்சல பிரதேசத்தில் ஒவ்வொரு குடிக்கும் ஒரு மொழி உள்ளது. எல்லைகள் அமைத்து அக்குடிகளை ஒரு நாட்டினராக ஆக்கிய போது, தென்னிந்திய மாநிலங்களை போல, அருணாச்சல பிரதேசமும் ஆங்கிலத்தையே தனது பொது மொழியாக அதிகார மொழியாக ஆக்கிக்கொண்டது. அந்த பின்புலத்தில் ஆங்கிலத்தை புழக்க மொழியாக, பழகு மொழியாக கொண்ட மமங் தாய் அதை தனது படைப்பு மொழியாக தேர்ந்ததில் வியப்பு இல்லை. வழமையான நடையில் இல்லாமல் அவரது சொற்களின் தேர்விலும், வாக்கியங்களின் கட்டமைப்பிலும், ஆதி மொழியின் சிறப்பு சொற்களை மொழியாக்கம் செய்து தகுந்த இடங்களில் பயன்படுத்துவதிலும், சில சொற்களை ஆதி மொழியிலேயே தக்கவைத்துக்கொள்வதிலும் தனக்கென ஒரு தனி மொழியை உருவாக்கி கொண்டுள்ளார். இது அவரது ஆக்கங்களில் ஒரு ஆழ்ந்த நம்பகத்தன்மையையும் தனித்தன்மையையும் கொண்டு வருகிறது. 

வடகிழக்கு இந்தியாவின் ஆங்கில ஆக்கங்கள் பெருமளவில் அதன் அரசியல் சூழ்நிலைகளை முன்வைத்து பேசும் படைப்புகளாகவே இருக்கக்கூடியவை. அதையும் தாண்டி, அந்நிலம் மீது மீளா காதலும் அந்நிலத்தின் மக்களை கனிவோடு அளிப்பவை மமங் தாயின் ஆக்கங்கள். மெல்ல ஆனால் உறுதியாக மாறி வரும் தலைமுறைகளின் மனநிலையை தனது ஆதாரமாக கொண்டது அவரின் ‘தப்பிச்செல்லும் நிலம்’ (Escaping the land) நூல். தங்களது ஆட்சியின் வசதிக்காக  ஆங்கிலேயர்களால் முதன்முதலில் வடகிழக்கு எல்லை அமைப்பு (NEFA) உருவாக்கப்பட்டது. அந்த எல்லை வரையறை அம்மக்களுக்கு முற்றிலும் புதிதானது. அந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக அந்த ஒருங்கிணைப்பிற்கு மக்கள் ஏற்பை கொண்டு வர  இளைஞர்கள் பலரை ஊருக்கு ஒருவர் எனும் வீதம் அதிகாரிகளாக அனுப்பி வைத்தது. பிறகு இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் NEFA அமைப்பிலிருந்து அருணாச்சல பிரதேசம் பிரித்து ஒருங்கிணைக்கப்பட்டது. பற்பல சிறு இனக்குழுக்கள் தங்கள் நிலங்களை ஒன்றிணைக்கப்பட்ட மாநிலமாக  உருமாற்றிக்கொள்ள அவர்களுக்கு இருக்கும் சங்கடங்களையும், துயரங்களையும், எண்ணங்களையும் பற்றி பேசும் நூல் இது. இவற்றை வெறும் தரவுகளாக இல்லாமல், அதில் வாழ்ந்த மனிதர்களை பற்றி பேசும் ஒரு கதையில் ஊடுபாவும் பின்னணியாக இந்த செய்திகளையும் மனநிலைகளையும் அதில் கொண்டுவருகிறது. இனக்குழு மனநிலையில் இருந்து ஒன்றிணைக்கப்பட்ட ஒரு அடையாளத்தை அடைவதன் வலி, அதற்காக அவர்கள் இழக்க வேண்டியவை, மாற்றமில்லாமல் அதிலும் மேல்-கீழ் என அடுக்குகள் உருவாகும் விதம், அதற்காக செய்ய வேண்டிய சமரசங்கள். வெளியில் இருந்து வரும் அழுத்தத்தை காட்டிலும் தற்சூழல், தன்னலம், தன் மக்களால் வரும் நெருக்கடிகளையும் சொல்கிறது இந்நூல்.

மமங் தாயின் எழுத்தில் நிலம் வெறும் ஒரு பாத்திரம் மட்டுமல்ல, எல்லாவற்றின் காரணமும் காரியமும் கூட. ஊர் விட்டு ஊர் செல்லும் பொது தங்கள் வீட்டு முற்றத்தின் ஒரு பிடி மண்ணை கொண்டு செல்வதை போல, அந்நிலத்தை விட்டு சென்றாலும் அதன் மக்கள் அந்நிலத்தின் நினைவை நெஞ்சில் சுமந்து செல்கிறாகள். சென்று எட்டும் இடத்தை விட்டுவந்த இடமாக மாற்ற அதன் நினைவே போதுமென நம்புகிறார்கள், பிறகு இல்லை என்று உணர்ந்து முலை சுவை மறக்கமுடியாத மகவுகள் என மீள தங்கள் நிலம் நோக்கியே வந்து விடுகிறார்கள். கண்ணுக்கு எட்டிய வரை தெரியும் குன்றும், நதியும், காடும், அதை தாண்டி முடிவில்லாது நீண்டிருக்கும் மலையும் வீடென ஊரென பழகியவர்களால் எப்படி வேறு ஒரு இடத்தில் வாழ முடியும்? அங்கிருந்து பெயர்ந்து நகருக்கு வந்து, நான்கு சுவர்களுக்குள் மட்டும் வாழ்வதை சொற்ப காலம் மட்டுமே நடிக்க முடிகிறது இவர்களால்.

ஆங்கிலேய, பிரெஞ்சு, அமெரிக்க ஆக்கிரமிப்புகளை பற்றி எழுதும் போது, அதுவும் அந்நிலங்களிருந்து இங்கு வந்து வாழ்ந்த மக்களை எழுதுகையில் மமங் தாய் அவர்களை ஏற்றியோ இறக்கியோ சொல்லாமல் மிகவும் நிதானத்துடன் கையாள்கிறார். மிக்லூன் (migloon) என்று அந்நியர்கள், ஆங்கிலேய அல்லது பிரெஞ்சு மக்கள் ஆதி மொழியில் அழைக்கப்படுகிறார்கள். அந்த சொல் அவரின் நூல் முழுதும் விரவியுள்ளது. அதில் கசப்பு இல்லை, ஆராயும், அறிந்து கொள்ளும், புரிந்து கொண்டு கடந்து செல்லும் தன்மை இருக்கிறது. ஒரு நிலம் புது விதையை எதிர்கொள்ளும் போது, நிலமும் சரி விதையும் சரி, மலைத்து போகின்றன. பிறகு பழகிக் கொள்கின்றன, மாற்றியும் மாறியும் அதனதன் நிலையில் அமைகின்றன. இதை மனிதர்களுக்கும் அவர் பொருத்துகிறார். அதை அப்படியே ஏற்பது என்பதை காட்டிலும், எந்த நிகழவாயினும் எந்த மனிதர்களாயினும் அவர்களது ஆற்றலை, விளைவை ஏற்று உண்டு செரித்து விண் நோக்கி நீண்ட தன் சிகரக் கரங்களை போலவே அந்த நிலம் அவர்களை எதிர்கொள்கிறது. அந்த சாராம்சத்தை தனதாக்கிக் கொண்டு தனது எழுத்தில் வெளிப்படுத்துகிறார் மமங் தாய்.

மமங்தாய் நூல்கள்

கோம்சிங் சிற்றூரில் 1911 ஆம் ஆண்டு ஒரு மிக்லூனுக்கும் ஆதி பெண்ணுக்குமான காதல் அந்த ஊர் மக்களை அதீத ஆத்திரத்திற்கு உள்ளாக்கி அதன் விளைவாக ஒரு அமெரிக்க படை கொல்லப்பட்டுள்ளத. அதற்கு இணையாக ஒரு ஊரே எரித்து கொல்லப்பட்டு, பிறகு நடந்த நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு இறந்த அமெரிக்கர்களின் நினைவாக ஒரு சிலை சியாங் பள்ளத்தாக்கில் நிறுவப்பட்டு அந்த மக்களால் பாதுகாக்கப் படுகிறது. இந்த பின்புலத்தை பென்சமின் தொன்மங்கள் நூலில் ஒரு சரடாக கொண்டு வருகிறார் மமங் தாய். சியாங்கின்  நெனெம் அங்கு வந்த மிக்லூன் டேவிட் இருவரும் காதலிக்கிறார்கள். அவர்கள் அன்பு அவனது விட்டு வந்த நிலத்தின் ஈரம் அவள் புன்னகையில் இருப்பதாலும், அவளது கனவுகளில் தெரியும் விரிந்த நிலத்தின் ஏற்பு அவன் கண்களில் தெரிவதாலும் நிகழ்கிறது. அவன் அவளை கூட்டிப்போக முயல்கிறான், அவள் அந்நிலத்தோடு மண்ணின் ஈரமாகவே இருக்க விழைகிறாள். ஈடு செய்ய இயலாத துயராயினும் அதை அவர்கள் ஏற்கிறார்கள், பிரிகிறார்கள், அவ்வளவே. அவர்கள் அன்பிற்கு கிடைக்கும் நிமிர்வும், கருணையும் அரிதானவை. டேவிட் இந்திய பார்வையில் எழுதப்படும் ஒரு நூலின் ஆச்சரியமான படைப்பு, அவன் வஞ்சகனோ, சுயநலமியோ, ஏன் முட்டாளோ கூட இல்லை. ததும்பும் அன்பை அள்ளிக்கொடுக்கும் அன்புக் காதலன் மட்டுமே.

இதே அளவு அன்புடன் எழுதிபெற்ற இன்னொரு மிக்லூன், ஜெஸ்யூட் கிர்க். கருங்குன்று நூலின் பிரெஞ்சு பாதிரியார் அவர். கடல் கடந்து வரும் முதல் இறையியல் தூதர். வெறும் நம்பிக்கையில் தொடங்குகிறது அவரது பாதை, அந்நிலத்தையும் மனிதர்களையும் மெள்ள புரிந்து கொள்ள முற்படுகிறார், முதலில் திபெத் செல்வது ஒன்றே அவரது குறிக்கோளாக இருக்கிறது, யாரும் இறைவனின் சொற்களை சென்று சேர்க்க இயலாத இடத்தில் தான் சென்று சேர்த்து விட வேண்டும் என்ற வைராக்கியம் அவரிடம் நிறைந்துள்ளது. பிறகு அதையும் தாண்டி தான் இருக்கும் இடத்தில் தன்னை பாதுகாக்கும் எளிமையான உள்ளங்களின் நெகிழ்வில் இறைவனை கண்டுகொள்கிறார், அவரது அப்பழுக்கற்ற அன்பு வெளிப்படுகின்றது. தன்னை சுற்றியுள்ள அந்நிய மனிதர்களின் மீது அவர் கொள்ளும் அவநம்பிக்கையின் அதே அளவிற்கு பொதுவான மனித நேயத்தின் மீது நம்பிக்கையும் கொண்டுள்ள ஒரு முரண் நிறைந்த படைப்பு கிர்க். தான் வந்து சேர்ந்திருக்கும் இடத்தின் தலைவனான கஜின்ஷா தன்னை ஏற்கவில்லை என்று புரிந்துகொள்பவர் அதன் மறு எல்லையில் அவன் மிகவும் நம்பிக்கையானவன் நேர்மையானவன் என்பதையும் உணர்ந்து கொள்கிறார். அவர்கள் கடந்து வரும் சூழ்நிலைகளின் விளைவாக கடவுளை பற்றி அவர்கள் விவாதிக்கும் இடங்கள் தத்துவம் செறிந்தவை. ரட்சகன் ஒருவனை மையமாக கொண்ட ஒரு தரிசனமும், இருக்கும் இடத்தையும் நிலத்தையும் மையமாகக் கொண்டு தன்னை சுற்றியுள்ள ஒவ்வொரு அம்சத்தையும் கடவுள் தன்மையோடு பார்க்கும் இன்னொரு தரிசனமும் முட்டி நிற்கும் இடம். கடவுள் என்ற ஒன்றை தனியே பிரித்து அறிவதில்லை அவர்கள், அது அவர்களுடன் எப்போதும் இருப்பது, அவர்கள் துறந்தாலும் அவர்களை தறக்காதது.  அந்த மலையையும் , நிலத்தையும், நதியையும், காடையும் அவர்கள் துறக்க முடியுமா என்ன? அந்த புரிதலை மெதுவாக ஆனால் முழுமையாக கிர்க் அடைகிறார். கஜின்ஷாவின் மனைவி கிமூரின் மனதில் ஏதோ ஆறாத வலி ஒன்று இருப்பதை வெறும் சொல்லில்லா சந்திப்புகளிலேயே அவரால் உணர முடிகிறது. அவரது உயிர் பிரியும் தருவாயில் அவளை ஒரு தேவதையாகவே எண்ணுகிறார். மாற்ற முடியாத வலியை ஆழத்தில் சுமந்து அலையும் ஒரு நல்லாத்மா தேவதையாக அவருக்கு பொருள் படுகிறாள்.

அதற்காக மமங் தாயின் படைப்புகள் அந்நிய ஆதிக்கத்தின் வலியையோ, வலிமையையோ, விளைவுகளையோ புரியாதவையும் அல்ல. தாங்கள் அறியாதவற்றை அபத்தம் என்று முடிவுகட்டி விடும் அவர்களின் அவசர போக்கை, தங்கள் வசதிக்கு ஏற்ப நிலங்களை பகுத்து மக்களை நிலம் பெயர செய்யும் வன்முறை, இவற்றையும் அவர் கதையின் போக்கில் பதிவு செய்கிறார். ஆனால் அனைத்தையும், அனைவரையும், அவற்றின் நிறப்பிரிகையோடு நோக்கும் தன்மை கொண்டது அவரது ஆக்கங்கள். அந்நிலத்தை, அம்மக்களை வழி நடத்தும் டோனி போல்யாவின் கருணையும், அனைத்தையும் கடந்து நிலைக்கும் காலாதீதத்தின் தன்மையையும் உணர்ந்து,  முழு முற்றாய் அனைத்து உயிர்களின் மீதும் கருணை கொண்ட அன்பு நிறைந்த பார்வை அது.

ஆதி மக்கள் பழங்குடி மரபின் படி இயற்கையை மதமாக கொண்டவர்கள். அவர்களது தொன்மங்களும், கதைகளும் அந்த கூறிலிருந்து சற்றும் விலகாதவை, அவர்களின் நம்பிக்கையும் அவ்வாறே. மமங் தாயின் படைப்புகளின் அடித்தளமாக இந்த கூறு வெளிப்படுகிறது. அவரது கதைகளில் மழை அன்னை தனது வெள்ளிக் கொலுசுகளை அணிந்து பணி மூடிய மரங்களின் மேல் அமர்ந்து காலாட்டி சிரிக்கிறாள் மின்னலை ஊர்கிறாள். பிர்பிரிக் எனும் அதிபெரும் மீனை கனவில் கண்ட மனிதன் வெகு விரைவில் இறந்து விடுவான் என்று அந்த மக்கள் நம்புகிறார்கள், அதன் படியே ஒரு வருடத்தில் அவன் இறந்தும் போகிறான். ஆனால் இறந்தவனின் சட்டைப் பையில் அவர்கள் கண்டு கொள்ளும் ஒரு இறந்த சிறு மீனை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆதி முதல் உலகம் சிறு சிறு மனிதக்குழுக்கள் என்று பிரிந்த கோஜும் கோஜா என்ற தொன்ம வெளியாக உருவாகிறது. நமக்கு கொஞ்சம் அதிகம் பரிச்சயப்பட்ட மோகினிகளையும் யட்சிகளையும் போல பெண்ணுருவில் பேய் மனைவியர் உலவுகின்றனர். அவர்கள் தங்கள் மனித கணவர்களை அன்னை என கனிந்து உணவூட்டுகிறார்கள் காதலி என வாழ்ந்து அன்பை பொழிகிறார்கள் கூடவே மீட்டுத்தர முடியாத ஒன்றை கொண்டு சென்றும் விடுகிறார்கள். இப்படி தொன்மத்திலும் வாழ்விலும் மாயம் ஒரு சரடாக இருக்கிறது, அதை அவர்கள் மாயம் என்பதை விட வாழ்வின் ஒரு சாரமாகவே கொள்கிறார்கள். ஏனெனில் மாயம் எல்லா துன்பங்களையும் போக்கிவிடுவதில்லை. மாறாக தன்னால் இயன்ற துன்பத்தை அதுவும் விட்டுச்செல்கிறது. அவர்களின் மலையையும் காட்டையும் போல மாயமும் அவர்கள் வாழ்வில் இருக்கிறது.

தப்பிச்செல்லும் நிலம் மற்றும் கருங்குன்று, பென்சமின் தொன்மங்கள் என மூன்று நூலுமே நாவல் என்றாலும், வடிவத்தில் பென்சமின் தொன்மங்கள் நூலை ஒரு சிறுகதை தொகுப்பு என்றும் கூட வரையறுக்க முடியும். ஒவ்வொரு அதிகாரமும் ஒரு சிறுகதைக்கான வடிவத்தை கொண்டுள்ளன, ஆனால் அதன் வரைவியல், விரிவு, நோக்கு, தொடர்பின் ஊடுபாவு தன்மையில் அது நாவலாக நிறைவை தருவது. ஒப்பு நோக்கினால், பென்சமின் தொன்மங்கள் கனவுத்தன்மை செறிந்தது, ஆழ்ந்த நம்பிக்கையின் விதையில் எழுந்தது. அவரது ஆரம்பகால நூலும் கூட. அண்மையில் வெளிவந்த கருங்குன்று பென்சமின் தொன்மங்கள் நூலை விட காலத்தில் பிந்தையது ஆனால் இன்னும் கூரிய தரிசன நோக்கு கொண்டது.

மதுமிதா

வாயில்களின் வரைபடம் என்ற அவரது உரை ஒன்றில் மமங் தாய் கூறுகிறார், “கதைகள் நமக்கு அருளப்படுபவை என்று ஆதி மக்கள் நம்புகிறார்கள். பூசாரிகள், சன்னதம் கொண்டு வெறியாட்டு ஆடுபவர்கள், மரணம் நிகழ்ந்த வீட்டில் இரவு முழுவதும் அந்த ஆத்மாவை பிறப்பில் இருந்து இறப்பு வரை பாடும் பெங்ஙி என்ற ஒப்பாரி என்று அவர்களின் பண்பாட்டின் மொத்த தொகையும் கதைகளில் மட்டுமே வெளிக்கொண்டுவர முடியும்.  இணைதொடர்புறுத்தலில் (interconnectedness) மட்டுமே கதைகள் செறிந்து நமக்கு அருளப்பட முடியும், அவற்றை மட்டுமே நம்மால் என்றென்றென்றைக்கும் என நம் அடுத்த தலைமுறையினருக்காக விட்டுச்செல்ல முடியும்.”

 ***

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *