சக்தி ரூபேணம் – ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

சமீபத்தில் அபுதாபி சென்றிருந்த போது அங்குள்ள லூவர் கலை அருங்காட்சியகத்தில் (Louvre Museum) ஓர் அன்னை தெய்வத்தின் உருவ சிலையிருந்தது. சிகையும், உடல் முழுவதும் கம்பளியால் மூடப்பட்ட பெண்ணின் வடிவம். பொ.மு. 2-ஆம் நூற்றாண்டு இளவரசியின் சிற்பமது. பாக்திரியா என்ற பழைய மத்திய ஆசியாவில் வழிபடப்பட்டது. உதட்டில் இளம் பெண்களுக்கே உரிய குறுநகையோடு, கண்ணுக்குழியில் கண்கள் விரிய திறந்திருப்பதாகவும், காது மடல் கம்பளியால் மூடப்பட்டு மேலும் பெரிதாக காட்டப்பட்டதாகவும் இருந்தது. ஒரே நேரத்தில் அன்னையெனவும், சிறுமி எனவும் காட்டக்கூடிய சிற்ப அமைதி கொண்டது. சாந்தமும், வீரியமும் ஒருங்கே கூடியது.
இனம் தெரியாத ஒரு பழங்குடி அரசின் இளவரசி. கன்னி தெய்வம். அதிலிருக்கும் முரண் அவள் அன்னையென என் கண்களுக்கு தெரிந்தாள் என்பதே. கீழே வாசகத்தை வாசித்த போது அது மேலும் உறுதியானது. இயற்கையிலுள்ள பெரும் சக்திகள் அனைத்தையும் சாந்தமாக்கும் ஆற்றல் கொண்ட கடவுள் இவள். நம் சாக்த மரபின் படி ஆதிபராசக்தி. அதே வேளையில் அன்பின், கருணையின் கடவுள். செல்வத்தையும், வளத்தையும் வழங்கக்கூடியவள். பேராற்றலும், பேரன்பும் ஒருங்கே இணைய பெற்றவள். இதிலென்ன வியப்பு என ஒருவர் யோசிக்கலாம். ஆனால் இதிலுள்ள அன்னையெனும் ஆழ்படிமத்தின் சூக்ஷ்மமான விரிவையும், உளவியல் சாத்தியங்களையும் அறிந்துக் கொள்ள இப்படிமத்தை மேலும் அகம் நோக்கி ஆராய வேண்டியுள்ளது.
இந்த நூற்றாண்டில் நம் சிந்திக்கும் முறையை உருவாக்குபவர்கள் மேலை நாட்டு அறிஞர்கள். ஏனென்றால் அதற்கான அறிவியல் ரீதியான கோட்பாடு அவர்கள் உருவாக்கி நமக்களித்தது. அதன் வழியே மேலை மத, தத்துவ நம்பிக்கையின் செல்வாக்கும் நம் சிந்தனையில் பெருமளவு ஊடுருவியிருக்கிறதோ என்ற சந்தேகமும் எனக்குண்டு. அன்னையெனும் ஒரு படிமத்தைக் கொண்டு அதனை அறிய முயற்சிக்கிறேன். அதற்கு பெண்ணெனும் கருதுகோளை முதலில் தெளிவாக நான் புரிந்துக் கொள்ள முயல்கிறேன்.
ஒரு கேள்வியிலிருந்து இதை நான் விரித்தெடுக்கிறேன். பெண்ணென்பவள் இரண்டாம் பாலினம் என்ற கோட்பாடு இன்று தமிழ் சூழலில் பரவலாக அறியப்பட்டது. சிமோன் தி புவா இன்று இங்கே பெண்ணியர்களின் கையேடு. பெண்ணிய இதழான நீலி தொடங்கப்பட்ட காலத்திலேயே சிமோன் தி புவாவை விரிவாக புரிந்துக் கொள்ளும் முயற்சிகள் நிகழ்ந்தன. ஆனால் பெண்ணென்பவள் இரண்டாம் பாலினம் என்ற கருத்திலிருந்து பெண்ணெனும் கருத்துருவகத்தை அறிய தொடங்க வேண்டுமா? அப்படி தான் நம் மரபு இங்கே முன்வைக்கிறதா என்பது நாம் நமக்கே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி.
இந்த இரண்டாம் பாலினம் என்ற கொள்கையை மேலை சிந்தனை எப்படி வந்தடைந்தது என்று நோக்கினால் அதிலிருந்து நாம் நமக்கான விடையை நோக்கிச் செல்வதற்கு வசதியாக இருக்கும்.
‘ஒரு பெண் குழந்தை தன் இளம் பருவத்தில் தன்னிடம் இல்லாத ஒன்றை ஆண் குழந்தையின் உடலில் காண்கிறாள். அதன் மேல் பொறாமை கொள்கிறாள். அந்த பொறாமை அவளுள் தாழ்வுணர்ச்சியாக எஞ்சுகிறது. தன் தாழ்வுணர்ச்சியே அவளை இரண்டாமவளாக எண்ணச் செய்கிறது. தன் வாழ்நாளெல்லாம் அந்த தாழ்வுணர்ச்சியை சுமந்து வாழ்கிறாள். பொறாமை, தாழ்வுணர்ச்சி சூழல் அவள் உளவியலை தீர்மானிக்கிறது.’ உளவியல் பகுப்பாய்வின் தந்தையென கருதப்படும் சிக்மெண்ட் ப்ராய்டு முன்வைத்த ‘Penis Envy’ என்னும் கோட்பாடு இது.
ப்ராய்டின் இந்த கொள்கைக்கு எதிரான தரப்பை முன்வைத்தவர் என ஹேரன் கார்னே என்பவரை சைதன்யா துபாயில் ‘பெண்ணியம்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் சொன்னார். ஹேரன் கார்னே ப்ராய்டின் கொள்கைக்கு எதிராக ‘Womb Envy’ என்னும் கருதுகோளை உருவாக்கியவர். அதாவது, ஒரு ஆண் குழந்தை ஏக்கம் கொள்வது தன்னிடம் இல்லாத உருவாக்கும் ஆற்றலை தான். இந்த மேல்-கீழ் அடுக்கு மேற்சொன்ன இரண்டு நிலையிலும் சராசரியான ஒன்று தான். சைதன்யா அதனைச் சொல்லி பரபலாக அறியப்படும் மேலே சொன்ன சிந்தனையாளர்களிடமிருந்து அசல் பெண் சிந்தனையாளர்களை நோக்கிச் சென்று பெண்தன்மை (Femininity) என்ற கோட்பாட்டிற்குள் சென்றார்.
ப்ராய்டின் மாணவரான கார்ல் யுங் ’அன்னை’யை தன் நான்கு ஆழ்படிமங்களுள் முதன்மையானவளாக முன்வைத்தவர். அன்னையே உலகளாவிய ஆழ்படிமம் என ஒப்புக் கொண்டவர் யுங். ஆனால் யுங் சொன்ன முதல் ஆழ்படிமம் ‘தந்தை’. தந்தை என்ற படிமத்திற்கு எதிரிணையானது அன்னை. இந்த தீர்க்கமான முடிவிற்கு ப்ராய்டும், யுங்கும் வருவதற்கு காரணமென்ன? ஒரு கட்டுரையில் நித்ய சைதன்ய யதி இதனை விரிவாக விவாதித்து இரண்டு காரணங்களைச் சொல்கிறார். அதன் வழியே நாம் இச்சிந்தனைகளைப் புரிந்துக் கொள்வதிலுள்ள போதாமைகளை நாம் உணரலாம்.
முதற் காரணம், ஆப்ரகாமிக் மதம் என்பது முழுக்க முழுக்க தந்தை வழி சமுகத்தால் உருவானது. கிறிஸ்துவ மதத்தின் முன்னோடியான யூத மதத்தின் பிரபஞ்ச உருவாக்க கொள்கை படி, பிதாவென்னும் கடவுள் இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டி, இப்பிரபஞ்சம் பிதாவின் உருவாக்கம். அதாவது, உலகை குடும்பமென கொண்டால், தந்தை அதன் சிருஷ்டிகர்த்தா. அன்னையென்பவள் அவனுக்கு எதிரிணையாக உருவானவள். ஆதாமை படைத்த தோட்டத்தில், அவனுக்கு துணையாக வேண்டி ஏவாளை பிதா உருவாக்குகிறார். இந்த சிந்தனை மேற்சொன்ன அனைத்து சிந்தனையாளர்களிடமும் தீவிர செல்வாக்கு செலுத்தியிருப்பதைக் காணலாம். நாம் அதனை அப்படியே நம் கொள்கையாக பொருத்திக் கொண்டோம்.
நித்யாவின் இரண்டாவது காரணம் மேலும் நுட்பமானது. அதாவது, நமக்கு புறவயமாக தெரியும் பௌதீகமான விஷயங்கள் வழியே அகவயமான ஒன்றை அர்த்தப்படுத்திக் கொள்வது என்பது மேலை சிந்தனை முறை. ப்ராய்டு தூலமாக தெரியும் ஒன்றின் வழியே உளவியலை ஆய்வு செய்கிறார். யுங் உருவாக்கும் ஆழ்படிமங்களும் அத்தகையதே.

நம் மரபிலுள்ள சிந்தனையை நித்யா இதற்கு நேர் எதிரானது என்கிறார். ”அகத்தில் தோன்றி அவை புறவயமாக விரிந்து பின்னர் அகத்தே குவியும் தொடர் செயல்பாடே அறிதல்” என்கிறார் அவர். நம் பிரபஞ்ச உருவாக்கம் பற்றிய புரிதல் நமக்கு கிடைப்பது வேத, உபநிட மந்திரங்கள் வழியே தான். அதனைத் தொகுத்து நித்யா நம் சிந்தனை முறையை உருவாக்குகிறார். பிரபஞ்ச உருவாக்கம் பற்றி ஐத்ரேய உபநிடதத்தின் பாடல் வரி இது,
“ஆரம்பத்தில் கடவுள் ஒருவர் மட்டுமே இருந்தார். இமைக்கின்ற வேறு எதுவும் அப்போது இல்லை ‘நான் உலகங்களைப் படைப்பேன்’ என்று அவர் நினைத்தார்.
அம்பலோகம், மரீசீலோகம், மரலோகம், ஆபலோகம் ஆகிய உலகங்களைக் கடவுள் படைத்தார். அம்பலோகம் சொர்க்கலோகத்திற்கு மேலே உள்ளது. அம்பலோகத்திற்குச் சொர்க்கம் ஆதாரமாக உள்ளது. மரீசீலோகம் ஒளியுலகங்கள் நிறைந்த இடைவெளி. மரலோகம் என்பது பூமி, பூமிக்குக் கீழே உள்ளது ஆபலோகம்”
கடவுளின் நினைவிலிருந்து நீராலான நான்கு உலகங்கள் தோன்றுகிறது. அம்ப, மரீசி, மரம், ஆப் ஆகிய நான்கு அம்சங்களையும் தன்னுள் கொண்டு உயிரண்டம் உருவானது. அந்த உயிரண்டத்தின் செயற்புலன்கள் மேலே சொன்ன நான்கு அம்சங்களுடன் தொடர்புக் கொண்டு உருவாகிறது. அண்டமெனும் முட்டை உடைந்து கண்ணாகிறது. அதிலிருந்து சூரியன் தன் கண்ணை திறந்து பார்க்கிறான். அவன் ஒளி வழியாக நம் கண் (செயற்புலன்) காட்சியை காண்கிறது. அதிலிருந்து நம் அறிபுலன் அறிகிறது. இவ்வாறு அருவமான ஒன்று துலங்கி நம் செயற்புலன் வழியே அகத்தை நோக்கி குவியும் தொடர் செயல்பாடு நம்முடையது என்கிறார் நித்யா.
இதில் ஐத்ரேய உபநிடதம் முன்வைக்கும் கடவுள் யார் என்பது இங்கே அடுத்த வினா? இங்கே குறிப்பிடும் கடவுள் என்பது பிரம்மன் இல்லை. உலகங்கள் உருவானதும் உலகின் காவலர்களைப் படைக்க பிரம்மனை கடவுள் உருவாக்குகிறார் (ஐத்ரேய உபநிஷத்தின் அடுத்த பகுதி). இங்கே கடவுள் என்பது அறிய முடியாமையின், சொல், பொருள் கொள்ள முடியாமையின், வடிவமற்ற ஒன்று. அந்த ஏதுமில்லாத ஒன்று உருவாக்கிய சிறப்பம்சங்களை தன்னுள் கொண்டு முதலில் உதித்த அக்னியை ‘வைஸ்வாநரன்’ என ரிக் வேதம் சொல்கிறது (மண்டலம் – 1, பாடல்: 98). நித்யா இந்த வைஸ்வாநரன் என்னும் முதற் ஆழ்படிமத்திலிருந்து தொடர்ந்து நம் நினைவிலியை உருவாக்கும் பல ஆழ்படிமங்கள் உருவாக்குவதைப் பற்றி விவரிக்கிறார்.
ரிஷி குத்ஸ ஆங்கிரசன் அக்னியை நோக்கி பாடுவது,
“நாங்கள் வைஸ்வநரனுடைய சுமதியில் இருப்போமாக. ஏனெனில் அவன் ஜீவன்களுக்கு போற்றத் தகுந்த அரசனாகிறான். அவன் இங்கு கட்டையிலிருந்து பிறப்பிக்கப்பட்டவுடன் விசுவத்தைக் கவனிக்கிறான். எழும் சூரியனைத் தொடர்கிறான்.”
உலகம் முழுக்க உண்டு எரியும் நெருப்பை வைஸ்வநரன் என்று ரிஷி சுட்டுகிறார். அவன் பசிக்கு அன்னமாக வேண்டி மனிதன் உருவாகிறான். அன்னம் (மனிதன்) நெருப்பை உண்கிறது. நெருப்பு அவனை உண்கிறது.
இந்த நெருப்பு அன்னம் என்னும் இருமையிலிருந்து அடுத்தக்கட்டமாக ஆண் – பெண் என்னும் படிமம் உருவாகிறது. பெண்ணின் பிறப்புறுப்பில் ஆணைத் தின்னும் பசி உள்ளது. ஆணின் பிறப்புறுப்பில் பெண்ணை உண்ணும் பசி உள்ளது. நெருப்பும், அன்னமும் அவர்கள் இருவருமே. அவை ஒன்றை மற்றொன்று வளர்க்கின்றன, பின்பு அவற்றை உண்டு இவை வளர்கின்றன. இதிலிருந்து செயல் என்னும் அடுத்த நிலை தொடர்கிறது. இப்படி படிமங்களின் சாத்தியங்கள் தொடர்ந்த படி உள்ளன.
முழுமை எனப் பொருள்படும் ‘பிரம்ம’ என்னும் ஒலியிலிருந்து தொடங்கிய அறிதல் பிற அறிதல்களை உருவாக்கும் தொடர் சங்கிலியாய் ஆவது நம் மரபின் சிருஷ்டி தத்துவம். அதில் ஆண் – பெண் என்பது நெருப்பும், அன்னமும் போல ஒன்றிணைவின் அம்சம். யுங் முன்வைப்பது போல் எதிரிணையின் அம்சம் அல்ல. இந்த புரிதலில் இருந்தே திருவிளையாடலில் வரும் ‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை; சிவம் இல்லையேல் சக்தி இல்லை’ என்னும் இரண்டும் ஒருசேர சுட்டப்படும் வசனத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். இதில் ஒன்று மேல் கீழ் என்பதில்லை. இரண்டில் ஒன்று குறைப்படும் போது மேலே சொன்ன தொடர் அறிதல் சங்கிலி அறுபடுகிறது. சிவன் உமையை இடம் ஒரு பாகனாக கொண்டான் என்பதல்ல, அர்த்தநாரி என்பதே சரி.
மேலை சிந்தனை முறையிலிருந்து நாம் வேறுபடும் ஆரம்ப புள்ளியே இது தான். ஒன்றிணைவே நம் சிந்தனை முறை. எதிரிணைவு இல்லை. மேலைப் புராணங்களிலுள்ள எதிரிணைவுகளை கவனித்தால் இது புரியும். அங்கே எல்லாம் பைனரி (Binary) பிரிவுகளே. ஒன்று அது, இல்லாதது பூஜ்யம். பூஜ்யமாக இல்லாதது ஒன்று. நன்மை, தீமை; ஒளி, இருள்; கடவுள், சாத்தான்; இயேசு, லூசிஃபர்; ஆண், பெண் என எதிர் தர்க்கங்களால் ஒன்றை முன்வைப்பது அவர்கள் சிந்தனை முறை. நம் சிந்தனையில் முதல் அறிதலிலேயே ஒளியும், இருளும் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டது. அதன் தொடர் நேர்-எதிர்-நேர் நிலைகளே நம் அறிதல்.
எனவே நாம் யுங் முன்வைக்கும் அன்னை என்னும் ஆழ்படிமத்தை அணுகும் போது நித்யா மேலே சொன்ன மூன்று புரிதல்களை நிகழ்த்திக் கொண்டே அணுகவேண்டியுள்ளது.
ஒன்று, ஆப்ரகாமிக் மதங்கள் முன்வைப்பது போல் நமக்கு பிதா என்னும் ஆண் வடிவம் பிரபஞ்ச சிருஷ்டிகர்த்தா இல்லை. நாம் முழு தந்தை வழி சமூகமும் இல்லை.
இரண்டு, அறிதல் தொடங்கும் இடம் புறவயமான ஒன்றிலிருந்தில்லை.
மூன்று, அறிதலென்பது தொடர் வளர்சிதை மாற்றங்களால் ஆனது. நெருப்பும், அன்னமும் போல. அதிலிருந்தே நம் ஆழ்படிமங்கள் உருவாகுகின்றன. இதன் வழியே அன்னை என்னும் படிமம் நம் மரபில் எவ்வண்ணம் பரிணமித்து வந்துள்ளது என்பது புரிந்து கொள்ளலாம்.
யுங் ஆழ்படிமங்களில் நான்கு உலகளாவியது என்று தன் ‘Four Archetypes’ நூலில் குறிப்பிடுகிறார். ’அன்னை’, ’மறுபிறப்பு’, ’மந்திரவாதி’, ’தந்திரக்காரன்’ ஆகிய நான்கின் வழியே மனித மனத்தின் கூட்டு நினைவிலி உருவாகுகிறது என்கிறார். நம் மரபின் கூட்டு நினைவிலி எண்ணற்ற ஆழ்படிமங்களின் உருவாக்கத்தால் நிகழ்கிறது என்கிறார் நித்யா.
யுங் சொல்லும் நான்கில் அன்னை என்பது முதல் ஆழ்படிமம். ஆனால் அவர் அதை விரித்துச் செல்வது கிறிஸ்துவ மத பின்னணியிலிருந்து. கன்னிமேரி இயேசு கிறிஸ்துவின் அன்னையாகவும், சிலுவையாகவும் இருக்கும் படிமத்திலிருந்து அன்னை என்ற அருவமான ஒன்றிற்கு செல்கிறார். அதனை மற்ற சிந்தனை மரபிலுள்ள அன்னையெனும் படிமத்துடன் பொருத்திப் பார்க்கிறார். உதாரணமாக, யுங் அன்னையெனும் ஆழ்படிமம் கீழத்தேய மரபில் எண்ணற்ற வடிவங்களில் வெளிப்படுகிறது என்கிறார். ஆனால் அவற்றையும் மேற்சொன்ன கன்னிமேரியின் மாதிரியிலேயே பகுப்பாய்வு செய்கிறார். அதாவது, தூய்மை என உணரப்படும் நதியை பெண்ணென உருவகிக்கின்றனர். அவளே கவர்ந்திழுக்கும் கட்டற்ற தன்மையையும் தன்னுள் கொண்டிருக்கிறாள் என்கிறார். அவள் இந்திய மரபில் உமையென்றும், காளி என்றும் இருமையில் உருவகிக்கப்படுகிறாள்.
நம் தமிழ் பழங்குடி மரபிலிருந்து வழிபடப்பட்டு வரும் தெய்வம் இசக்கி. சங்க காலம் தொடங்கி இன்று வரை அவளது வெவ்வேறு வடிவங்களை நாம் பார்க்கிறோம். நம் பழங்குடி மரபின் ஆதி அன்னை தெய்வம் அவள். அவள் சங்ககாலம் தொடங்கி இன்று வரை நம் நாட்டார் மரபில் வளத்தின் தெய்வம், காவல் தெய்வம், அருளும் தெய்வம், செழிப்பின் தெய்வம். ஆனால் அவளே கவர்ந்திழுக்கும் தன்மைக் கொண்டவள். விஷத்தை தன்னுள் வைத்திருப்பவள், கட்டற்றவள், கொலை செய்பவள். அவள் நன்மை, தீமை என்ற பாகுபாடற்றவள். இங்கே இருமையென்பது இரண்டு எதிர் நிலைகளை தன்னுள் கொண்டவள் என்ற அர்த்தமல்ல. அந்த இரண்டு எல்லைக்குள்ளும் சாத்தியமான அனைத்து அம்சங்களையும் கொண்டவள் என்பது. அனைத்தும் அவளாகி நிற்பது. முப்பெரும் தேவர்களும் அவளது குழந்தைகள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய தேவி கதையில் எனக்கு பிடித்த ஒரு வரி வரும், “கங்கைக்கு கோடி முகம்…” நம் மரபில் சாக்த தெய்வத்திற்கு வழங்கப்படும் இந்த முழுமை தன்மை சைவ, வைணவம், சௌரம், குமாரம், காணபதியம் என பிற ஐந்து மத தெய்வங்களுக்கும் வழங்கப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
வேத உபநிடத காலங்களுக்கு அடுத்த ஆகம, காவிய காலங்களை நோக்கினால் இதில் ஒரு தெளிவு கிடைக்கும். ஆகமங்கள் பெருமதங்களை உருவாக்கிய போது எண்ணற்ற அன்னை தெய்வங்கள் இணைந்து சாக்த மதம் உருவானது. சாக்த ஆகம நூல்களில் ஆதிபராசக்தியிலிருந்து ’சாந்தை’, ’வாமை’, ’ஜேஷ்டை’, ’ரௌத்ரி’ முதலிய தேவியர் உருவாகினர். இவர்கள் சத்வ, தமோ, ரஜோ குணங்களை தன்னகத்தே கொண்டவர்கள். இந்த தேவியரில் எழும் குணசாத்தியங்களிலிருந்து எண்ணற்ற தேவியரின் படிமங்கள் உருவாயின. சாக்த ஆகமங்கள் இந்த எண்ணற்ற தேவியரை அவர்களின் தன்மைக்கு ஏற்ப தொகுத்து ஏழு வழிபாட்டு முறைகளை தேவியருக்கு உருவாக்கியது. இந்த இரண்டாம் கட்ட தொகுப்பு என்பது அதற்குள் சாத்தியமான அனைத்து மாதிரிகளையும் மேலும் தூல வடிவாக விரித்துப் பார்ப்பதற்காகவே.
ஆகமங்கள் பற்றிய விரிவான விளக்கத்திற்கு பதில் நம் காவியங்கள் காட்டும் இந்த எண்ணற்ற சாத்தியங்களைக் கவனிக்கலாம். அது நாம் புரிந்துக் கொள்ள தெளிவான உதாரணங்களை அளிக்கும். அவற்றின் மூலம் நாம் நம் தேவியரின் வடிவை புரிந்துக் கொள்ளவும். பெண்ணெனும் ஆழ்படிமத்திலுள்ள எண்ணற்ற உளவியல் மாதிரிகளை அணுகவும் ஏதுவாக இருக்கும்.
நவீனத் தமிழ் சமூகத்தில் மேலே சொன்ன மேலை தத்துவங்கள் தாக்கம் செலுத்திய போது தான் சீதை என்னும் பூமாதேவியின் அம்சம் மட்டும் பெண்ணின் அம்சமாக கருதும் நிலை உருவானது. அதன் இரண்டாம் நிலை சீதை, திரௌபதி/கண்ணகி என்னும் எதிரீட்டை உருவாக்குவது. அதுவும் நம்முடைய ஒரு குறைப்பட்ட சாத்தியம் தான். இந்த இரு எல்லை உருவக மாதிரிகள் யுங் சொன்ன உமை/காளி என்னும் பார்வையிலிருந்து எழுவது.
நம் காவியங்களின் வீச்சை எடுத்தாராய்ந்தால் அதன் சாத்தியங்கள் புரியும். மகாபாரதம் என்னும் ஒற்றை காவியத்தில் குந்தி, காந்தாரி, பானுமதி, திரௌபதி என விரிந்துக் கொண்டே செல்லும் எத்தனை பெண் கதாபாத்திரங்கள். அவை ஒவ்வொன்றிலும் உருவாகும் உளவியல் சாத்தியங்கள் எத்தனை என ஆராய்ந்தால் நம் அன்னை தெய்வம் பற்றிய சாத்தியத்தின் விரிவும் நமக்கு புரியும். நித்யா, நம் நவீன இலக்கியம் அன்னையெனும் ஆழ்படிமத்துள் ஒளிந்துள்ள இந்த அனைத்து சாத்தியத்தின் புரிதலில் இருந்து தொடங்க வேண்டுமென்கிறார்.
இங்கே, அன்னையெனும் படிமத்தின் மேல் வரலாற்று ரீதியாக நாம் நிகழ்த்திவரும் தொகுக்கும், பகுக்கும் அம்சமே நாம் கவனிக்க வேண்டியது. சங்க காலத்திற்கு முன் வழிபடப்பட்ட இசக்கி என்னும் ஒரு தெய்வம் எத்தனை கோடியாக மாறி இங்குள்ளது. அவை அனைத்தும் மீண்டும் தொகுக்கப்பட்டு நம் தேவி என உள்ளது. இந்த ஒரு புள்ளியே நாம் அன்னை எனச் சொல்லும் நம் ஆழ்படிமத்தின் சிறப்பம்சம். அதுவே நம் காவியங்களிலும், இலக்கியங்களிலும் பரிணமித்து வருவதைப் பார்க்கிறோம்.
கார்ல் யுங் தன் நூலில் குறிப்பிடும் போதே காளியும், பார்வதியும் கீழை மரபில் ஒரே தெய்வம் என்பதை கவனிக்க வேண்டும் என வலியுறுத்தி சொல்கிறார். மேலை மதங்களில் தற்போது அத்தகைய ஒரு அரிதான கருதுகோள் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
இத்தகைய அர்த்தப்படுத்துதல் நமக்கு எங்கிருந்து கிடைக்கிறது. ஒன்று, நம் வேதங்கள் உருவான காலத்திலும் சரி, பின்னாளில் பெருமதங்கள் உருவான காலத்திலும் சரி. நாம் நம் நாட்டார்/பழங்குடி மரபை இழக்காமல் இன்று வரை உடன் அழைத்து வருகிறோம் என்பதே. எனவே இசக்கியில் குறிப்பிட்ட அந்த சக்தியின் வடிவம் இன்று வரை தொடர்ந்து வருவதைப் பார்க்கலாம். மாறாக மேலைப் பெருமதங்கள் உருவானதே பழங்குடி மனநிலைக்கு நேர்-எதிர் மனநிலையில் நின்று தான். நான் மேலே சொன்னது போல் எதிரிணைவு அவர்களின் தேர்வு. ஒருங்கிணைவு நம்முடையது. இந்த இணை உருவாக்கம், அறிதலின் அறுபடாத தொடர் சங்கிலி இரண்டும் தான் நம் கூட்டு மனதின் நினைவிலியை உருவாக்குபவை. அந்த கூட்டு நினைவிலியில் இருந்தே நம் ஆழ்படிமங்கள் தோன்றுகின்றன. அவற்றிலிருந்தே நம் தெய்வங்கள் உருவாகின்றன.

எழுத்தாளர் ஜெயமோகனின் கொற்றவை நாவல் அந்த சவாலை ஏற்று எழுதப்பட்ட நவீன காவியம். மகாபாரதத்தின் நவீன நாவலான வெண்முரசு நாவல் வரிசைகளில் வரும் பெண்/அன்னையர் கதாபாத்திரங்கள் எண்ணற்று விரிவதற்கான வாய்ப்பு நிகழ்ந்தது மேலே சொன்ன இந்த புரிதலின் வழியே தான்.
இந்த கணக்கில்லாத கோடி வடிவங்களின் ஒருங்கிணைவே நான் முதலில் சொன்ன பாக்தேரிய இளவரசி. அவள் கொண்டிருப்பது அவளுள் இருக்கும் அனைத்து வடிவையும் தான்.
சக்தி ரூபேணம் அனைத்தும், அனைத்தெல்லாம் ஆதிபராசக்தியே.
***
