ஒரு காதல், இரு புதினங்கள் – எம். கோபாலகிருஷ்ணன்

(மைத்ரேயி தேவியின் ’கொல்லப்படுவதில்லை’ நாவலை முன்வைத்து)

மைத்ரேயி தேவி

*

இந்திய நாவல்களின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு நூலகங்களில் தேடியெடுத்து வாசித்த காலத்தில் வங்க நாவல்கள் பெரிதும் ஈர்த்தன. ‘நீலகண்ட பறவையைத் தேடி’ நாவலைத் தேடி அலைந்து கண்டடைந்த கதை புதையல் வேட்டைக்கு நிகரானது. ஈரோட்டில் இளந்தென்றலைப் பற்றி அறிய நேர்ந்தது. இடதுசாரி கட்சி உறுப்பினரான இளந்தென்றல் கொள்கைக்கும் நடைமுறைக்குமிருந்த இடைவெளியைப் பற்றி எதுவுமறியாதவர். கட்சியின் கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றுபவர். மார்க்சீய கொள்கையின் மீதும் கட்சியின் மீதும் அளப்பரிய விசுவாசம். தீவிரமான வாசகர். சாகித்திய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருந்த மொழியாக்க நாவல்கள், ராதுகா பதிப்பகம் வெளியிட்ட ரஷ்ய நாவல்கள் அனைத்தும் அவரிடம் இருந்தன. நேர்த்தியாக பைண்ட் செய்யப்பட்டு மிக ஒழுங்காகப் பராமரிக்கப்பட்ட அந்த நாவல்களிலிருந்துதான் முக்கியமான வேறெவரிடமும் கிடைக்காத நாவல்களை வாசிக்க வாய்த்தது. வங்க மொழியிலிருந்து பதினெட்டு நாவல்களை சாகித்திய அகாதமியும் எட்டு நாவல்களை தேசியப் புத்தகக் கழகமும் வெளியிட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருந்த நாவல்களைப் பற்றியும் அவற்றின் ஆசிரியர்கள் பற்றியும் தகவல்களை தேடிக் கொண்டிருந்தபோது ‘கொல்லப்படுவதில்லை’ என்ற நாவலைப் பற்றி அறிய நேர்ந்தது. நாவலின் ஆசிரியர் மைத்ரேயி தேவி எழுதியிருக்கும் ஒரே நாவல் அதுதான் என்பதும் அந்த நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது என்ற தகவல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

‘கொல்லப்படுவதில்லை’ ஒரு காதல் கதை. ஆனால், எளிமையான காதல் கதை மட்டுமல்ல. பதின்வயது தொடங்கி முதுமைக் காலம் வரைக்குமான ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதை என்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். 1930களிலிருந்து 1972 வரைக்குமான நாற்பதாண்டு காலத்தில் வங்காள உயர்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பாதையைச் சொல்கிறது. பதின்வயதில் தன் வீட்டில் வசிக்கும் தனது தந்தையின் அயல்நாட்டு மாணவனோடு நெருங்கிப் பழக நேர்கிறது. அது காதலா, பதின்பருவ ஈர்ப்பா என்று வகைப்படுத்த முடியாத நிலையிலேயே பெற்றோர்களால் அவன் வெளியேற்றப்படுகிறான். அவனைப் பிரிந்த வேதனை இருந்தபோதும் வேறொருவரை மணந்து குடும்ப வாழ்வில் ஈடுபடுகிறாள். அந்த இளைஞன் தனது பெயரையே தலைப்பாகக் கொண்டு எழுதி, தனக்கு சமர்ப்பணம் செய்திருக்கும் ஒரு நாவலைக் குறித்து பதினெட்டு வருடங்கள் கழித்து அறிகிறாள். தங்களுக்கிடையே இருந்த உறவை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்த நாவலில் தன்னைப் பற்றி உண்மைக்கு மாறான, களங்கம் கற்பிக்கும் வகையில் எழுதியிருப்பதை அறிந்து கோபமும் வருத்தமும் அடைகிறாள். ஒருமுறை அவனை நேரில் பார்த்து ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்கும் தீவிரம் அவளுக்குள் வளர்கிறது. பல முயற்சிகளுக்குப் பிறகு, 1973ஆம் ஆண்டு கணவனின் சம்மதத்துடன், சிகாகோ பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியரைச் சந்திக்கிறாள். இந்தியாவுக்கு திரும்பி வந்த பின், அந்த நாவலுக்கு எதிராகவும், பதில் சொல்லும் விதமாகவும் 1974ஆம் ஆண்டு ஒரு நாவலை எழுதுகிறாள்.  

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெண் கல்வி என்பது ஒரு சில குடும்பங்களுக்கு, சமூகங்களுக்கு மட்டுமே சாத்தியமாயிருந்தது. இசை, இலக்கியம், நாட்டியம், நாடகம் போன்ற பிற துறைகளில் பெண்கள் ஈடுபடுவதென்பதும் அத்தனை எளிதாக ஒப்புக்கொள்ளப்படாத சூழல். பெண் சுதந்திரம் என்ற கருத்தும் எண்ணமும் அவ்வளவாக திரண்டு உருவாகாத நிலை. அதிகாரிகள், பேராசிரியர்கள் போன்ற சில இந்திய உயர்குடியினர் பலருக்கும் ஆங்கிலேய வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலம் தங்களை நாகரிகம் மிக்கவர்களாகக் காட்டிக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. மேற்கத்திய இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் செல்வது, குறிப்பாக பெண்களை அழைத்துச் செல்வது, அயல்நாட்டிலிருந்து வருகை தரும் கலைஞர்களை, அறிவுஜீவிகளை வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் ரசனை மிக்கவர்களாகவும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாகவும் காட்டிக் கொள்ள விரும்பினார்கள். வீட்டுக்குள் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளையும் ஓரளவு தளர்த்தினார்கள். ஆண்களுடன் சமமாக உட்கார்ந்து பேசவும் உண்ணவும் அனுமதிக்கப்பட்டார்கள். பகட்டாக உடுத்திக் கொள்ளவும் அலங்காரம் செய்யவும் வெற்றிலைச் சிவப்பேற்றிக் கொண்டு வெளியில் நடமாடவும் முடிந்தது.    

கிழக்கிந்திய கம்பெனி முதலில் காலூன்றிய இடமென்பதால் வங்காளத்தில், மேல்தட்டு வர்க்கத்தினரிடையே ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முறையின் அழுத்தமான பாதிப்பு இயல்பாகவே ஏற்பட்டது. அவர்களைப் போலவே உடுத்தவும் உண்ணவும் தலைப்பட்டார்கள். ஆங்கிலக் கல்வி அறிமுகமானது. பொதுவான கல்வியறிவு மேம்பட்டது. கலை, இலக்கியத்தில் மேற்கத்திய சாயல்களும் பாதிப்புகளும் உண்டாயின. தங்களை ஆங்கிலேயர்களுக்கு சமமாக காட்டிக்கொள்ள முயன்றபோதும் இந்தியர்களை ஆங்கிலேயர்கள் ‘கருப்பர்’கள் என்றே கருதினார்கள். அவர்களின் மீது கடுமையான விலக்கம் கடைபிடிக்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், கல்கத்தாவில் இந்தியவியல் பேராசிரியரிடம் சமஸ்கிருதத்தையும் இந்தியவியலையும் கற்றுக் கொள்ளவென ரொமானியாவிலிருந்து வருகிறான் மிர்சா காலியத். வெளியில் தங்கிப் படிப்பதில் உள்ள சிரமத்தை உணர்ந்து அவனை தன் வீட்டிலேயே தங்க அனுமதிக்கிறார். பேராசிரியரின் மனைவியும் அவனுக்கு பரிவுடன் ஆதரவளிக்கிறாள். அதைத் தொடர்ந்து பேராசிரியரின் மூத்த மகள் மைத்ரேயிக்கும் மிர்சாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்படுகிறது. வீட்டில் உள்ள பலருக்கும் இது தெரிந்தபோதும் அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால், இது சாதாரணமான நட்பு இல்லை என்று பேராசிரியருக்கு தெரியவரும்போது அவன் உடனடியாக வெளியேற்றப்படுகிறான். தன்னை ஒரு மேதாவியாக, நாகரிகமிக்க பரந்த மனப்பான்மைகொண்ட மனிதராக காட்டிக் கொள்வதை மட்டுமே உத்தேசமாகக் கொண்டிருந்த பேராசிரியருக்கு அந்நிய நாட்டவனை தன் மருமகனாக ஏற்றுக் கொள்வதில் மனத்தடை. தேசமே விடுதலைப் போராட்டத்தின் பொருட்டு கொந்தளித்துக் கொண்டிருந்தபோதும் அவர் அதைச் சற்றும் பொருட்படுத்துவதில்லை. போராட்ட நடவடிக்கைகள் குறித்து உரையாடல்கள் இல்லை. அவற்றில் கலந்துகொள்ளக்கூடாது என்று தன் மகளுக்கு கட்டுப்பாடுகளையும் விதிக்கிறார். தாகூரை நேருக்கு நேராக சந்திக்கும்போது அவரையும் அவரது கவிதைகளையும் கருத்துகளையும் பாராட்டிப் பேசினாலும் பிற சமயங்களில் தாகூருக்கு எதிரான கருத்துகளையே உரக்க வெளிப்படுத்துகிறார். இந்த இருநிலைத்தன்மையை நாவலின் முக்கிய சரடாக அமைந்திருப்பதன் மூலம் மைத்ரேயியின் புனைவு நுட்பத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நாவலின் முக்கிய கதாபாத்திரமாக அமைந்திருப்பவர் தாகூர். இந்த நாவலின் இரண்டாவது பகுதியில் மைத்ரேயி தேவி நமக்குக் காட்டும் தாகூரின் சித்திரம் மிக அழகானது, உணர்வுப்பூர்வமானது. திருமணத்துக்குப் பிறகு ஒரு மலை நகரில், தனிமையில் வசிக்க நேரும் மைத்ரேயி தேவிக்கு குருதேவரின் கவிதைகளும் கடிதங்களுமே துணையாகின்றன. அவளது அழைப்பின் பேரில் 1938 முதல் 1940 வரையிலான மூன்று ஆண்டுகளில் நான்கு முறை அந்த மலைநகரத்துக்கு வந்து தங்குகிறார். தாகூரின் வாழ்விலும் இந்தப் பயணங்கள் முக்கியமான சம்பவங்களாக அமைந்துள்ளன. இந்த அனுபவங்களை மைத்ரேயி தேவி தனி நூலாகவே எழுதியிருக்கிறார்.

மிர்சா அலியதே, ரொமானிய மொழியில் மைத்ரேயி தேவியை கதாபாத்திரமாகக் கொண்டு எழுதிய நாவல் குறித்த கேள்வியுடன் தொடங்குகிறது ‘கொல்லப்படுவதில்லை’. வீட்டிலிருந்த ஒரு சில மாதங்களில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமும், அதனால் விளைந்த மகிழ்ச்சியும் நிறைவும் இருவருக்குமானது. அந்தரங்கமானது. அது காதலாகக் கனிந்து திருமண உறவாக மாறவில்லை என்றாலும் இருவரைப் பொறுத்தவரை அது என்றும் மறக்க முடியாதது. மாறாததும்கூட. ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு உண்மைக்கு மாறானவற்றை புனைவாக எழுதி, எப்படி தன்னை அவன் கேவலப்படுத்த முடிந்தது என்ற கேள்வியே மைத்ரேயியை வருத்துகிறது. நேசித்த ஒருத்தியை இப்படி தரக்குறைவாகச் சித்தரிக்கும் கேவலத்தை எப்படி எட்ட முடிந்தது என்று அவனைப் பார்த்து கேட்கவேண்டும் என்று சீற்றம் கொள்கிறாள். அவனை நேரில் பார்த்த பின் என்ன உணர்கிறாள் என்பதுடன் நாவல் நிறைகிறது.

கட்டுப்பெட்டித்தனமான சமூகச் சூழலில் கவிதையும் இலக்கியமும் கலையும் கற்றுக்கொள்ளும் சுதந்திரம் அமையப்பெற்ற இளம்பெண்ணாகவும், மிர்சாவின் அருகாமையின் மகிழ்ச்சியைப் பூரணமாக அனுபவிக்கும் மங்கையாகவும், தாகூரின் மாணவியாக கவிதையை, தத்துவத்தை ஆழ்ந்து கற்கும் மாணவியாகவும், காதலுறவு முறிந்த பின்னான தனிமையில் வாடுபவளாகவும், மணமான பின் பொறுப்பான மனைவியாக, தாயாகவும் பருவந்தோறும் தனக்களிக்கப்படும் பாத்திரங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் மைத்ரேயி தேவியின் வழியாக பல நூறு இந்தியப் பெண்களின் வாழ்க்கையையும் காண முடிகிறது. இத்தனைத் திருப்பங்களினூடேயும் இழந்த காதலின் வலி அவளுக்குள் கனன்றபடியே உள்ளது. அந்தக் காதலின் வலியே, தன்னைப் பற்றிய தவறான சித்தரிப்பினைக் குறித்த ஆற்றாமையையும் சீற்றத்தையும் எழுப்பி அவனை நோக்கிச் செலுத்துகிறது. நேரில் சந்தித்த பின் எதையும் நேரடியாக சந்திக்க மறுக்கும் ஒரு கோழையாக, தலை தாழ்த்தி நிற்பவனைக் கண்டு பரிதாபப் படுகிறாள். உடல் அழிந்துவிட்டது, ஆனால் ஆன்மா அழிவதில்லை என்றுணர்ந்து ஒளியற்ற அவன் கண்கள் தரும் சோர்வுடன் திரும்புகிறாள்.

மைத்ரேயி தேவி (1914 – 1990 )தாகூரின் மாணவி. வாழ்வின் எல்லா தருணங்களிலும் அவர் சரணடைவது தாகூரின் எழுத்துகளில்தான். தாகூரின் கவிதைகள் அனைத்துமே அவருக்கு மனப்பாடம். அதேயளவுக்கு சமஸ்கிருத காவியங்களிலும் இந்திய தத்துவங்களிலும் ஆழ்ந்த புலமை உண்டு. பதினாறு வயது முதல் கவிதை எழுதுபவர். வங்காளத்தின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். இந்த நாவலைத் தவிர தாகூரைப் பற்றிய முக்கியமான நூல்களையும் எழுதியிருக்கிறார்.

‘நா அன்யதா’ (கொல்லப்படுவதில்லை) என்ற தலைப்பே மைத்ரேயி தேவியின் கலைத்திறனை அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளது.  கவிதையிலும் தத்துவத்திலும் கொண்டிருக்கும் ஆழமான புரிதலை நாவலின் மொழியிலும் நடையிலும் காண முடிகிறது. கவிதையும் தத்துவமும் இணையும்போது உருவாகும் தனித்தன்மைமிக்க அனுபவத்தை நாவலின் பல இடங்களிலும் காண முடியும். அந்த ஆழமும் அனுபவமுமே நாவலுக்கு இப்படியொரு தலைப்பை இடச் செய்திருக்கிறது. ‘கொல்லப்படும் உடலில், இது கொல்லப்படுவதில்லை’ என்று ஆத்மாவைக் குறித்து பகவத் கீதையில் சொல்லப்பட்டிருப்பதே இந்த நாவலின் தலைப்பாக அமைந்திருக்கிறது. உயர்ந்த காதல் அனுபவம் அழிவதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை என்பதே இந்த நாவலின் சாரம். ஒரு புத்தகத்தின் வழியாக தனது பெயரில் ஏற்படுத்தப்பட்ட களங்கம், அது பொய்யாக இருந்தபோதும், காலத்தில் நிலைத்துவிடும் என்ற கவலையே அவளது ஆற்றலை, அறம் நோக்கிய கேள்வியை உரக்க எழுப்பச் செய்திருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு மொழியில் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும் இன்றும் உயிரோடு இருக்கிறது, அவளுடைய பெயரை களங்கத்துடன் சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை அவளால் தாங்க முடிவதில்லை. தாகூரின் மாணவி எழுத்தின் வலிமையை உணர்ந்தவள். எழுத்தில் சேதமடைந்த தன் பெயரை எழுத்தைக் கொண்டே சரிசெய்ய தீர்மானிக்கறாள். மிர்சாவுக்கும் உலகத்துக்கும் தனது தரப்பை எடுத்துச் சொல்வதற்காக நாவலை எழுதுகிறாள். நான்கு பகுதிகளைக் கொண்ட இந்த நாவலின் முதல் பகுதி 1930களில் பவானிபூரில் நடந்த சம்பவங்களை எண்ணி அசைபோடுவதாக அமைந்துள்ளது. இரண்டாவது பகுதி முழுக்க தாகூர் நிறைந்திருக்கிறார். மூன்றாவது பகுதியில், மிர்சாவை சந்திக்க வேண்டும் என்று உறுதியுடன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறாள். நான்காவது பகுதியில், பல்கலைக் கழகத்தில் மிர்சாவை அவள் சந்திக்கிறாள். ஊருக்குத் திரும்புகிறாள்.

மைத்ரேயி தேவி வங்க மொழியில் எழுதிய இந்த நாவல் 1974ஆம் ஆண்டு வெளியானது. பிறகு, மைத்ரேயி தேவியே அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். 1976ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி பரிசை வென்றது. இதனுடைய தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் 1999ஆம் ஆண்டு சாகித்திய அகாதமியால் வெளியிடப்பட்டது.

இந்த நாவலை வாசிக்கும்போதே, மிர்சா அலியத் ( Mircea Eliade 1907 – 1986 ) எழுதிய நாவலைக் குறித்து அறியும் ஆவல் ஏற்பட்டது. உடனடியாக முடியாதபோதும் சில மாதங்களுக்குப் பிறகு அந்த நாவலின் மென்பிரதியை Internet Archieveஇல் இரவல் வாங்கி வாசிக்க முடிந்தது. மிர்சா அலியத் ரொமானிய மொழியில் எழுதிய நாவலின் பெயர் ‘மைத்ரேயி’. ஆம், மைத்ரேயியின் பெயரை அப்படியே பயன்படுத்தியதோடு நாவலுக்கு தலைப்பாகவும் வைத்திருக்கிறார் மிர்சா. அத்துடன் நாவலை மைத்ரேயிக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். 1933ஆம் ஆண்டு புகாரெஸ்டில் இது வெளியானது. பிறகு 1950ஆம் ஆண்டில் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பின்புதான் பலரது கவனத்தையும் கவர்ந்தது. தான் உயிரோடுள்ளவரை இந்த நாவல் ஆங்கிலத்தில் வெளியாகாது என்று மைத்ரேயிக்கு வாக்களித்திருந்தார் மிர்சா. அதன்படி இருவரும் உயிரோடு இருந்த வரை ஆங்கில மொழியாக்கம் வெளியாகவில்லை. 1994ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக் கழகம், மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ நாவலுடன் சேர்த்து ‘பெங்கால் நைட்ஸ்’ நாவலின் ஆங்கில மொழியாக்கத்தையும் வெளியிட்டது.

ஆங்கில மொழியாக்கத்தில் வெளியாகியிருக்கும் நாவல் அலெய்ன் என்கிற இளம் பொறியாளருக்கும் கல்கத்தாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பொறியாளர் நரேந்திர சென்னின் மகள் மைத்ரேயிக்கும் இடையிலான நெருக்கமான காதலையும் பிரிவையும் விவரிக்கிறது. மைத்ரேயி தேவியின் நாவலில் சொல்லப்பட்டுள்ள ஒருசில சம்பவங்கள் இந்த நாவலிலும் உண்டு. ஆனால், இருவருக்குமிடையிலான உறவு பலப்பட்ட பிறகு ஓரிரு மாதங்கள் வரை, மைத்ரேயி ஒவ்வொரு இரவிலும் குடும்பத்தினரின் அனைவரும் உறங்கிய பிறகு அலெய்னின் அறைக்கு வருவதும் காமம் துய்ப்பதும் விடிகாலையில் நீங்குவதும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மைத்ரேயி தேவி தன் நாவலில் சில சந்தர்ப்பங்களில் இருவரும் முத்தமிட்டுக் கொண்டதை எழுதியுள்ளார். அதனையும் தாண்டி இருவருக்குமிடையே உடலுறவு தொடர்ந்தது என்று எழுதியிருப்பதைத்தான் மைத்ரேயி தேவி கடுமையாக மறுக்கிறார். தாகூரை மைத்ரேயி தேவி காதலித்தார் என்று ஆணித்தரமாக மிர்சா குறிப்பிடுவதை கடுமையாக கண்டிக்கும் மைத்ரேயி இது உண்மைக்கு மாறானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தன்னுடைய நாவலில் தாகூரைப் பற்றி மிர்சா தந்திருக்கும் சித்திரம் அத்தனை உவப்பானதாயில்லை. அத்துடன் இந்தியர்களைப் பற்றி, குறிப்பாக இந்தியப் பெண்களைப் பற்றிய ஆங்கிலேயர்களின் பார்வை கடுமையான இனவெறி மிக்கதாக இருந்ததையும் இந்த நாவல் வெளிப்படுத்தியுள்ளது. மைத்ரேயி தேவியின் பெற்றோர் திட்டமிட்டே தன்னை வீட்டில் தங்க வைத்ததாகவும், மைத்ரேயியுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியதாகவும், பின்னர் அவற்றையெல்லாம் மறைத்துவிட்டு தன்னை குற்றவாளியாக்கி வெளியேற்றிவிட்டார்கள் என்றும் சித்தரித்திருக்கிறார். புனைகதைக்கான சுதந்திரம் உண்டு என்றாலும், மிர்சா தன்னுடைய நாவலை ‘பாதியளவு சுயசரிதை’ என்று அடையாளப்படுத்தியதன் காரணமாகவும், மைத்ரேயி தேவியின் பெயரை உள்ளபடியே குறிப்பிட்டிருப்பதாலும் நாவலில் உள்ள பிற அம்சங்களும் உண்மையே என்று நம்புவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

இரண்டு நாவல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு புனைவாக மைத்ரேயி தேவியின் நாவல் பல படிகள் மேலே நிற்கிறது. கவித்துவமான மொழி, மன ஆழங்களினூடே பயணம் செய்யும் லாகவம், செறிவான சித்தரிப்பு என நுட்பங்கள் மிகுந்த ஒரு ஆக்கமாக உருவாகியுள்ளது. மைத்ரேயி தேவிக்கும் தனக்குமான உறவு, நெருக்கம், பிரிவு ஆகியவற்றை மட்டும் மையப்படுத்தி நாவலை ஒரு கற்பனாவாத படைப்பாக மட்டும் நிறுத்திவிட்டார். இந்த நாவலுக்கு முன்பே இரண்டு நாவல்களை எழுதியிருந்தாலும், மிர்சாவுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது ‘மைத்ரேயி’தான்.

‘மைத்ரேயி’ நாவலில் மிர்சா தன்னைக் குறித்தும் தங்கள் இருவருக்குமிடையே இருந்த உறவைக் குறித்து தவறாக சித்தரித்ததை அறிந்து மனம் வெதும்பிய மைத்ரேயி முதலில் தன் எண்ணங்களை கவிதைகளாகவே வடித்தார். அந்தக் கவிதைகள் அனைத்தும் ‘ஆதித்ய மரிச்சி’ (சூரியனின் கிரணங்கள்) என்ற பெயரில் சிறிய தொகுப்பாக 1972ஆம் ஆண்டிலேயே நபஜாதக் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ‘ஆதித்ய மரிச்சி’ என்பது மிர்சாவுக்கு மைத்ரேயியின் தந்தையார் இட்ட செல்லப் பெயர் என்பது கவனிக்கத்தக்கது. 42ஆண்டுகளுக்கு முன்பு தீண்டிய காதலின் வேதனையை 58 வயதில் எப்படி அவர் சந்தித்து சமாளித்தார் என்பதை உணர்த்தின இக்கவிதைகள். ‘பல முறை உன்னை நினைத்தேன்’, ‘காலங்கள் பல கழிந்தன’, ‘ஒருமுறை உன்னை காணவேண்டும்’, ‘இப்படி என்னை படுத்தாதே’, ‘திடீரென்று ஒரு முறை நாம் சந்திக்க நேர்ந்தால்’, ‘காதல் கவிதைகளை வாசிக்கிறேன், தனித்திருந்து’ போன்ற தலைப்புகளிலிருந்தே மைத்ரேயி தேவியின் மனக் கலக்கங்களை புரிந்துகொள்ள முடியும். இதன் பிறகு 1973ஆம் ஆண்டு அவர் அமெரிக்காவிக்கு சென்று மிர்சாவை நேரில் சந்தித்து பின் 1974இல் நாவலை எழுதினார்.

மிர்சாவின் ‘பெங்கால் நைட்ஸ்’ நாவலை மையமாகக் கொண்டு 1986ஆம் ஆண்டு நிகோலஸ் கிளாட்ஸ் என்கிற இளம் பிரெஞ்சு இயக்குநர் ஒரு திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டார். இதற்கான உரிமையை அவர் மிர்சாவின் மனைவி கிறிஸ்டினலிடமிருந்து வாங்கியிருந்தார். மிர்சாவின் கதாபாத்திரத்தில் ஹியூ கிராண்ட் என்ற இளம் நடிகரும் மைத்ரேயியின் கதாபாத்திரத்தில் சுப்ரியா பதக்கும் நடித்திருந்தனர். நவம்பர் 1987 முதல் பிப்ரவரி 1988 வரையிலான காலத்தில் இதற்கான படப்பிடிப்பு கல்கத்தாவில் நடைபெற்றது. மைத்ரேயி தேவியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவரது பெயர் காயத்ரி என்று மாற்றப்பட்டதாக இயக்குநர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். இந்தப் படப்பிடிப்புக்கு எதிராக வழக்கு தொடுத்தார் மைத்ரேயி தேவி. பரபரப்பான இந்த வழக்கின் மூலம் மைத்ரேயி தேவியின் மீது அனுதாப அலை எழுந்தது. முடிவாக, இந்தப் படம் இந்தியாவில் வெளியிடப்படாது என்று தயாரிப்பாளர் உத்தரவாதம் அளித்ததன் பெயரில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு நடந்த இந்தியத் திரைப்பட விழாவின்போது ஒரே ஒரு முறை மட்டுமே இந்தப் படம் திரையிடப்பட்டது. 

எம். கோபாலகிருஷ்ணன்

மிர்சா எலியத்தின் ‘பெங்கால் நைட்ஸ்’, மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ ஆகிய இரண்டு நாவல்களின் ஆங்கில மொழியாக்கங்களையும், ‘ஒரே காதலின் இருவேறு கோணங்கள்’ என்ற அடிக்குறிப்புடன் சிகாகோ பல்கலைக் கழகம் ஒருசேர வெளியிட்டது. மிர்சா எழுதிய நாவலை நாற்பதாண்டுகளுக்குப் பிறகே வாசிக்கிறார் மைத்ரேயி தேவி. அதன் பிறகே தனது தரப்பை விளக்கும் வகையில் நாவலை எழுதியுள்ளார். இரண்டு நாவல்களிலும் இடம் பெற்றுள்ள காதல் ஒன்றுதான். காதலர்களும் அவர்களேதான். ஆனால், ஒருவரின் கோணத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டதை இன்னொருவரின் கோணம் மறுத்து சரிசெய்ய முனைகிறது. காதலில் எது சரி, எது தவறு என்பதை யார் தீர்மானிக்க முடியும், காதலைத் தவிர. ஆனாலும், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தன்னைப் பற்றி தவறாக எழுதப்பட்டிருப்பதை அறிந்த மைத்ரேயி தேவி அதை அப்படியே விட்டுவிடவில்லை. புலம்பி அழுது நின்றுவிடவில்லை. தவறான அந்த சித்தரிப்பு எக்காலத்துக்கும் நிலைத்துவிடும் என்பதை உணர்ந்து தனது தரப்பை எழுதி தன்னை நிறுவியிருப்பதே அவரது மன உறுதியையும் இலக்கியத்தின் மீதான அவரது நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.

*

கொல்லப்படுவதில்லை – வங்க மூலம் – மைத்ரேயி தேவி – தமிழில் – சு.கிருஷ்ணமூர்த்தி – சாகித்திய அகாதமி வெளியீடு, 1994 – (இப்போது அச்சில் இல்லை ) 

*

*

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *