மெய்மை தேடிய முன்னத்தி ஏர்கள் – வீ.ரா.ராஜமாணிக்கம்
“I happen to have no mean teacher of oratory’ — and that teacher was Aspasia“
– Socrates
மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலகட்டத்திலேயே தத்துவம் பிறந்துவிட்டது. ஆனால் முதன்முதலில் நாட்டார் தன்மைத் தனத்திலிருந்து ஆசிரியத்தன்மை திட்டமாக வரையறுக்கப்பட்டு தத்துவம் கடத்தப்பட்ட காலத்தைப் பொருத்து இந்திய தத்துவத்தின் வேர் வேதத்தில் தொடங்குகிறது. அறிவு, சிந்தனை, தத்துவம் ஆகிய துறை சார்ந்து பெண்களின் பங்கு மிகக் குறைவானதகவே உள்ளது அல்லது இல்லை என்ற பிம்பமே பெரும்பாலும் அறிவுத்துறை சார்ந்தவர்களிடம் நிலவும் கருத்து. ”பெண்களில் குறிப்பிடத்தகுந்த தத்துவவாதி உண்டா?” என்ற கேள்வியை இக்கட்டுரை அலசுகிறது.
ஐநூறுக்கும் மேற்பட்ட வேத ரிஷிகளுள் இருபத்தியாறு பெண் ரிஷிகள் இருந்ததாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கார்கியும், மைத்ரேயியும், லோபமுத்திரையும், ஜாபாலாவும், யமியும் வேத மரபில் நாம் அறிந்த ‘சூ’ பக்கத்தினர் (தன் தத்துவத் தரப்பு). பரபக்கத்தில் (பிற தத்துவத் தரப்பு) இருக்கும் நீலகேசி, குண்டலகேசி, அஞ்சனகேசி, பிங்கலகேசி, காலகேசி எல்லாம் புனைவு பாத்திரங்கள். அஸ்பெசியா, டயோட்டிமா மற்றும் சோஷிபத்ரா ஆகியோர் அறிவு கொந்தளிப்பின் காலத்தில் கிரேக்க மெய்யியலில் சாக்ரடிஸின் குருவாக திகழ்ந்தவர்கள்.
உலகெங்கும் தத்துவம், மெய்யியலில் ஆர்வமுள்ள அனைவரின் ஆவலையும் ஆர்வத்தையும் ஒருங்கே கோரி நிற்பவை கிரேக்க தத்துவங்களும், கிழக்கத்திய மெய்யியல் தரப்புகளும் தான். அந்த வகையில் இரண்டாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து ஆர்வமுட்டும் தத்துவ தரப்பாக நீடித்துவரும் கிரேக்கத்தத்துவ தரப்பின் மகத்தான பெண் ஆளுமைகள் முக்கியமானவர்கள்.
அஷ்பஷியா (Aspasia) (பொ.மு. 470 – 410) பழங்கால கிரேக்கத்திலுள்ள (தற்போதைய துருக்கி) மிலிட்டிஸில் (Miletus) பிறந்தவர். பெரிக்ளிஸின் (Pericles) அறிவுத்துணைவி, அரசியல் ஆலோசகராக இருந்தவர். பொதுயுக துவக்கத்திற்கு முன்பான 5-ஆம் நூற்றாண்டு ஏதென்ஸின் முக்கிய பேசு பொருளாக இருந்தவர். இளைய பெரிக்ளிஸின் தாயாகவும், நவீன மேற்கத்திய பெண்ணியலின் முதன்மையான சிந்தனைகளை பல்வேறு விமர்சனங்களுக்கிடையே வாழ்க்கையாகவே வாழ்ந்து காட்டியவர். ’பாலியல் சுதந்திரம்’; ’கற்பென்றால் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்று தான்’; ’சிந்தனையில் ஆண் சிந்தனை, பெண் சிந்தனை என்ற பிரிவினை இல்லை’; ’அரசியல் அரங்குகள்’; ’ஆலோசனைகளில் பெண்களுக்கான இடம்’ ஆகியவை பற்றி பல்வேறு விமர்சனங்கள், அவதூறுகளுக்கு இடையில் தொடர்ந்து பேசி வந்தவர். ஆண்மைய கிரேக்க, ரோமானிய அரசியலில் பெண்ணிய தரப்பாக தொடர்ந்து முன்னின்றவர்.
ஆனால் இந்த செயல்பாடுகளுக்காக ஏதெனிஸிலிருந்து பத்து ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டார். ஏதென்ஸில் பெண் முதன்மை வகிக்கும் தத்துவ மன்றுகளை தொடர்ந்து ஒருங்கிணைத்தார். பெண் ஆளுமைகளால் நடத்தப்பட்ட அகாடெமிக்களை ஏதென்சில் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அஷ்பேஷியா சலூனில் (Salon – சிந்தனைவாதிகளும், தத்துவவாதிகளும் கூடி விவாதிக்கும் இடம்) சாக்ரடிஸ், பிளாட்டோ ஆகியோருடன் ஆதி இயற்கையிலாளர்களும், கிழக்கத்திய தத்துவ பள்ளிகளில் இருந்து வந்தவர்களும், பெரும் பயணிகளும் கலந்து கொண்டனர். சோபிஸ்ட் (sophist) அனைவரின் புறக்கணிக்க முடியாத மையமாக இருந்தது. அரசியலில் ரெடோரிக் (Rhetoric) பேச்சில் தனித்திறன் வாய்ந்தவராகவும், அதற்காக தனி இலக்கணங்களை பல்வேறு உதாரணங்களோடு விளக்கியவர்.
சாக்ரடீஸின் டயலாக்குகளில் (Socratic dialogue) சில அத்தியாயங்களில் அஷ்பேஷியாவின் ரெட்டோரிக் வாதங்கள், ஜனநாயகம் பற்றிய கருத்துக்கள் இடம் பெறுகின்றது. அஷ்பேஷியாவின் ரெட்டோரிக் பேச்சினால் தான் ஏதென்ஸின் சமியன் (samian) போரை ஒட்டு மொத்த ஏதென்சும், பெரிக்ளிஸும் ஒப்புக்கொண்டார்கள் என ப்ளுடார்க்கின்(plutarch) வரலாற்று குறிப்பு சொல்கிறது. சமியன் தீவிற்கும் எதென்ஸிற்கும் நேரடி பகை இல்லாத போதும், மிலிட்டியஸின் மீதான சமியர்களின் அடக்குமுறைக்கு பதிலடியாக அஷ்பேசியாவால் உருவேற்றப்பட்டு நிகழ்ந்ததே சமியன் போர் என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ப்ளேட்டோவும் (plato), க்ஸெனோஃபோனும் (xenophon) அஷ்பேசியா பற்றியும் அவரின் அரசியல் ரெட்டோரிக் அரிச்சுவடி பற்றியும் குறிப்பிடுகிறார்கள். ப்ளாட்டோ மட்டும் இவரின் பாலியல் ரீதியான சுதந்திர நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடுகிறார். ராஜ தந்திர ஆலோசனை இலக்கணங்கள், அரசியல் இயக்கங்கள், உணர்வு பூர்வமாகவும், தர்க்கபூர்வமாகவும் மக்களையும் வீரர்களையும் வழி நடத்தும் கலை, சுதந்திர சிந்தனை, சம வாய்ப்பு ஆகியவைகளை 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு கலையாக, அறிவுத்தரப்பாக ஆக்கியவர் அஷ்பேஷியா. சாக்ரடீஸ் இவர் பற்றி சொல்கையில்,
“I happen to have no mean teacher of oratory’ — and that teacher was Aspasia“ என்கிறார்.
”Winning the soul through discourse” என்று பின்னாளில் அரிஸ்டாட்டில் ரெட்டோரிக் பேச்சை ஒரு கலையாக, தத்துவத்தின் உபகிளையாக வளர்த்தெடுத்தார். அதற்கான முழுமையான அஸ்திவாரம் அஷ்பேஷியாவால் உருவாக்கப்பட்டது. உண்மையைக் கூட புறக்கணித்து விட்டு நாடகீயமாக உணர்வு தூண்டுதலோடு மக்களிடையே பேசுபவர் உருவாக்கும் உணர்வலையில் அடித்து செல்லப்படுதல் சாத்தியம் என்றும் அது குழு பேச்சில், ராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் பெரிதும் பயனளிக்கும் என்றும் துவக்க கால சோபிஸ்ட்களில் அஷ்பேஷியாவும் அவரின் சலூன் விவாதங்களில் பங்கேற்றவர்களும், நிரூபித்தார்கள்.
அலெக்ஸாண்டரின் போர்களப்பேச்சுகள், சீசர், மார்க் ஆண்டனி ஆகியோரின் போர் உரைகள் முதல் மார்ட்டின் லூதர் கிங்-ன் I have a dream சுதந்திர பிரகடன உரை தொட்டு ஒபாமாவின் ப்ரெசிண்டின்ஷியல் கன்வென்ஷனில் பேசிய பேச்சு வரை ரெட்டோரிக் பேச்சுக்கலையின் தாக்கத்தைக் காணலாம். அஸ்பேஷியாவும் அவரால் உந்தப்பட்ட ஷோபிஸ்ட்களும் உருவாக்கி வீசிச்சென்ற “rhetoric speech idea” விதைகள் இன்று பெரும் காடாகி இருக்கின்றன.
வரலாற்றில் முதல் போர்க்களத்தில் பல உயிர்களை பலியாக்கப் பயன்பட்ட உணர்வுப் பேச்சுக்கள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மேன்மையாக்கம் பெற்று அநீதிக்கு எதிராகவும், மானுட விடுதலைக்கான கருவியாகவும் வளர்ச்சி அடைந்தது. காந்தியின் பல்வேறு கடிதங்கள், உரைகள் ரெட்டோரிக் தன்மையானவை தான். ஜனநாயகத்தை, அதன் இன்றைய வடிவத்தை உருவாக்கியதில் உணர்வுப் பூர்வ பேச்சுகளுக்கு நாம் நன்றி கடன் பட்டிருக்கிறோம். அஷ்பெஷியாவிற்கும்!
ராஜதந்திர நடத்தைகள் பற்றி தனியாக ஒரு நிபுணத்துறையை வளர்த்ததிலும் அஷ்பேஷியாவின் பங்களிப்பு மகத்தானது. சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரத்தின் பல்வேறு கூறுகளை, அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே அஷ்பேஷியா விவாதித்திருக்கிறார். பிளேட்டோ, சாணக்கியர் முதல் மாக்கியவெல்லி, மார்க்ஸ் வரை முன் வைத்த அரசியல் தத்துவம், ராஜதந்திர நடத்தைகளை முன்னரே விவாதித்தவர் அஷ்பாசியா. அரசியல் தத்துவம் எனும் தனித்துறையை ஒரு தத்துவ தரப்பாக எடுத்து கிளைத்து விவாதித்து உருவாக்கியவர் என்ற பெருமைக்குறியவர் அஷ்பேஷியா.
அரசியல், தத்துவம் மற்றும் ரெட்டோரிக் உரைகளின் அடிப்படைகளை Knowledge, truth, critical thinking and culture என்ற நான்கு கூறுகளைக் கொண்டு விளக்கி 2500 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இன்றும் அவரின் சிந்தனையும் வழிகாட்டுதலும் மகத்தான மானுட வாழ்விற்கான ஒரு ஒளி காட்டுதலாகவே உள்ளது.
மிகு அழகியல், ரசனை, நளினம், மெல்லுணர்வு, கதார்சிஸ் (catharsis), பேரன்பு, மட்டற்ற காதல், பாவங்களில் இருந்து தியாகத்தின் மூலம் தூய்மையாக்கல், அழகை ஆராதித்தல், தெய்வீக அனுபவம், தன்மீட்சி, கருணை மூலம் இறையனுபவம் ஆகியவைகள் பற்றிய மூல முதல் கருத்தாக்கங்களை தத்துவார்த்தமாக்கி அதை கிரேக்க மெய்யியலின் ஒரு பகுதியாக்கிய முதல் சிந்தனையாளர் டயோட்டிமா (Diotima of Mantinea). கிரேக்க ஆலயபூசகராகவும் இருந்தார்.
டயோட்டிமாவின் அழகியல் பற்றிய ஏணி கோட்பாடு (beauty: diotima ‘s ladder) சாக்ரடீஸின் டயாலாகிலும், ப்ளாட்டோவின் சிம்போஸியத்திலும் (The Symposium) குறிப்பிடப்பட்டுள்ளது. டயோட்டிமா அழகை உணர்தல், ஆராதித்தல், அதன் மூலம் மேன்மையான இறையனுபவங்களை உணர்தல் மற்றும் மட்டற்ற பேரன்பு அல்லது காமத்திலிருந்து உயர் அற நெறிக்கு செல்லும் ஆன்மீகம் ஆகியவற்றைப் பற்றிச் சொல்கிறார்.
காமத்திலிருந்து கடவுளுக்கு செல்லும் படிநிலையை தத்துவார்த்தமாக மூன்றாகப் பிரிக்கிறார். இதன் முதல் படிநிலை அழகை உணர்தல், ரசித்தல், அதன் மூலம் பிரபஞ்சப் பேரழகை உணர முயற்சித்தல், உடல் ரீதியான ஸ்தூல அழகை, வடிவை ரசித்தல், அங்கீகரித்தலில் துவங்குகிறது. இரண்டாவது படிநிலை தோற்றத்தைத் தாண்டிய அறிவு, கருணை, தியாகம் ஆகியவற்றை உணர்தல். மூன்றாம் நிலை அழகு எனும் இறை நிலையை முழுமையாக உணர்தல்.
”For the sake of immortality this zealous love accompanies everything in the world”
கிரேக்க மெய்யியலில் டயோட்டிமாவின் முக்கிய பங்களிப்பு என மூன்றைக் குறிப்பிடலாம். முதலாவது 1. பர்கேட்டரி 2. காதல், பேரன்பு, பெருங்கருணை பற்றிய கோட்பாடுகள். 3. இருமைவாதம் மற்றும் ஆனால்வாதம் ஆகியவைகள் பற்றிய முதல் சிந்தனைகளை தத்துவார்த்தமாக தொகுத்தது. இரண்டாவது சாக்ரடீஸ், ப்ளாட்டோ இவர்களுக்கு முதன்மை ஆசிரியராக இருந்து வழிகாட்டியது. மூன்றாவது காதல் அல்லது பேரன்பு பெருங்கருணை என்பதெல்லாம் முதலில் உடல் சார்ந்து தான் ஆரம்பிக்கும் பின் அது மெதுவாக உயர்ந்த ஆன்மீக அனுபவமாக மெய்மையை நோக்கிய பயணமாக மாறும். அழகான வடிவங்களைப் பார்த்தல், ரசித்தல் இவைகள் மூலமும் ஆன்மீக அனுபவம் சாத்தியம் என்றும் கூறினார்.
கலையனுபவம், கதார்சிஸ் கோட்பாடுகள் மூலம் அடுத்த 2500 ஆண்டுகள் கலை, இலக்கியம், காவிய உலகையே முன் நடத்தி சென்ற தத்துவ அன்னையாக தனித்து மிளிர்கிறார் டயோட்டிமா. ”Idea of metaxy” (நடு நிலை) என்ற கோட்பாட்டை ஒரு முக்கிய தரப்பாக அரசியலில் துருவமாக்கலுக்கு எதிரான ஒரு நிலைப்பாடாக முன்வைக்கிறார்.
இளம் சாக்ரடீஸ் டயோட்டிமாவிடம் காதல் பற்றிய கோட்பாடுகளை மட்டும் பாடம் கேட்கவில்லை. அவரின் கூரிய நகைச்சுவைத் திறன், அபாரத் திறனறிவு, மீமெய்மை பற்றிய அறிதல்கள், ஆழ்ந்த மருத்துவ ஞானம், தூய்மை நடைமுறைகள் (ப்ளேக் பரவலை கட்டுப்படுத்த) ஆகியவற்றைப் பற்றியும் சாக்ரடீஸ் குறிப்பிடுகிறார். சாக்ரட்டீஸின் சிம்போஸியத்தில் பல ஆண்களுக்கு மத்தியில் நின்று தன் அறிவால் அவர்களை வெல்கிறார். அவரின் பேச்சு டெல்பி ஆரக்கிள் (Delphic oracle) போல, மக்களை மெய்மையின் முன் மண்டியிட்டு கேட்பவர்களைப் போல ஆற்றுப்படுத்தியது.
”டயோட்டிமா டெல்பி ஆலயத்தின் பூசகர் மட்டுமல்ல, அதையும் தாண்டிய மெய்யறிதலை எனக்கு காண்பித்தவர்” என சாக்ரடீஸ் குறிப்பிடுகிறார். சாக்ரடீஸ் பாராட்டிய இரு முதற் சிந்தனையாளர்கள் அஷ்பேசியாவும், டயோட்டிமாவும். நாடகம், இலக்கியம், காவியம், உரைநடைகளில் இன்றும் சொல்லப்படும் கதார்சிஸ் எனும் உணர்வு தூய்மையாக்கம் பற்றிய கோட்பாட்டை முதன் முதலில் தத்துவப்படுத்தியது டயோட்டிமா தான். கதார்சிஸ் மூலம் எண்ணம், செயல், சிந்தனை தூய்மையாக்கல் நிகழ்வதைக் குறிப்பிடுகிறார்.
“Empathy” வழியாக ஆன்மீக அனுபவம் அடைதல் பற்றி தத்துவத்தில் குறிப்பிட்ட முதல் சிந்தனையாளர் டயோட்டிமா. அரிஸ்டாட்டில் இசையிலும், துன்பியலிலும் பார்வையாளர்கள் உளம் தூய்மையாக்கலுக்கு உட்படுகிறது என்று நிறுவுவது டயோட்டிமாவின் கருதுகோளைத் தான். ரத்ததால் செய்த பாவம் ரத்தத்தால் தான் சரி செய்யப்பட வேண்டும் என்ற செமிட்டிக் ஐடியாவிற்கு மாற்றாக தூய்மையாக்கல் மூலம் ரத்தக்கறையை கழுவலாம் என்ற கருத்துருவை முன் வைக்கிறார். குற்றத்தை உணர்தலும், பிழையீடும், கண்ணீரும் பாவத்தை போக்கும் என்கிறார்.
பெரும்பாலான மேலை தத்துவவாதிகள் புற உலகம் சார்ந்த கோட்பாடுகள், அறிவியல் தரவுகள், லாஜிக்கல் கோட்பாடுகளுக்கு தான் புகழ் பெற்றவர்கள். டயோட்டிமா உள்ளூர உணரும் உணர்வு நிலை, அகத்தரிசனம், கலை வழியிலான ஆன்மீகவய அனுபவம் என உள்முகமாக பயணித்து அதை தத்துவப்படுத்தியவர்.
”வடிவங்கள் தான் அழகு” என்று ப்ளேட்டோவின் தத்துவப்பள்ளியும், ”பண்புகள் தான் அழகு” என்று அரிஸ்டாட்டிலும் சொல்லிக்கொண்டிருந்த போது ”அழகுணர்வு என்பது அதையும் தாண்டிய பல்வேறு காரணிகளால் ஆனது” என அதை ஒரு தனித்தத்துவ பார்வையாக முன்வைத்த்து டயோட்டிமாவின் முக்கியப் பங்களிப்பு. பலரும் அழகியல் கோட்பாடுகள் ஐரோப்பிய மறுமலர்ச்சி கால கட்டத்திற்கு பிறகு வந்த புதிய கோட்பாடு என்பது போல சொல்வார்கள்.
டயோட்டிமாவின் தனித்த ஒருங்கிணைந்த ஆன்மீக அழகியல் தரிசன பார்வை ஒரு பெண்தன்மை வாய்ந்தது, ஒயிலானது. ப்ளாட்டோவும், அரிஸ்டாட்டிலும் அதில் லாஜிக்கையும் வடிவத்தையும், முன் வைத்ததை ஆண் மைய பார்வை என்றே கொண்டு, டயோட்டிமாவிற்கு முதன்மையான மூல முதல் சிந்தனையின் இடத்தைக் கொடுக்கிறார்கள் அழகியல் தத்துவவாதிகள். Order, symmetry இவைகள் தான் அழகை உருவாக்குகிறது என்றெல்லாம் லாஜிக்கலாக ப்ளாட்டோனியர்கள் சொல்வதை இன்று வரை இலக்கிய படைப்புகளும் சரி, நவீன ஓவியம், சிற்பக்கலைகளும் இடங்கையில் புறந்தள்ளி விட்டு சோபிஸ்ட்டான டயோட்டிமாவுக்கு சிம்மாசனத்தை அளிக்கின்றன.
சுவை, புலனுணர்வு ஆகியவை உருவாக்கும் அழகியல் மற்றும் உணர்வுகள் கால, நேர, புவி, கலாச்சார வார்த்தமானங்களை தாண்டியது. இந்த அழகியல் தத்துவார்த்த கோட்பாடுகளின் ஆதிக்கம் ஐரோப்பிய வாழ்வியலில் பெரும் புரட்சியை தோற்றுவித்த ஒன்று. சிற்பக்கலை, ஓவியக்கலை, நவீன ஓவியங்கள் துவங்கி கட்டுமானம், உள் அலங்காரம், கொள்கலன்கள், இயந்திர வடிவமைப்பு, உடைகள், வாகன வடிவமைப்பு துவங்கி நாம் உணரும் நாகரீகங்கள் அனைத்திற்கும் அழகே முதன்மையானது எனும் அடிப்படையை டயோட்டிமா முன் வைக்கிறார்.
சுவை சார்ந்து இன்று witicture & enology அடைந்திருக்கும் வளர்ச்சி, கட்டுமானம், நகரத்திட்டமிடல் துவங்கி உணவுத் தோற்றம், சுவை என்று எவ்வளவோ தொலைவு நாம் முன்னகர்ந்து வந்திருக்கும் பாதையை காண்பித்தது டயோட்டிமா. சுவைஞர்கள், கலை விமர்சகர்களுக்கான அங்கீகாரத்தின் துவக்கப்புள்ளி என்ற அளவில் இவரின் முக்கியத்துவத்தை உணரலாம். இன்று ஒயின் சுவைஞர்களுக்கு இருக்கும் மதிப்பை இந்தச் சிந்தனையின் நீட்சியாகக் கொள்ளலாம். இசை மேதைகள், இலக்கிய கலை விமர்சகர்களுக்கு இருக்கும் அறிவுலக அங்கீகாரம், அழகை உணர்தல், அங்கீகரித்தல் அதன் மூலம் ஆன்மீக அனுபவம் எனும் சிந்தனை, கிழக்கத்திய மேற்கத்திய தத்துவ உலகங்களிலும், நம் வாழ்விலும் செலுத்தி இருக்கும் செல்வாக்கை உள்வாங்கினால் தான் டயோட்டிமாவின் பங்களிப்பை நம்மால் உணர முடியும்.
ஜே.ஜே சில குறிப்புகளில் ஜே.ஜே சொல்வார் “உலகமெங்கும் எவன் எவன் தன் உள்ளொளியைக் காண எழுத்தையோ, கலைகளையோ அல்லது தத்துவத்தையோ, விஞ்ஞானத்தையோ அல்லது மதத்தையோ (இக்காலத்தில் நான் எப்படி அரசியலைச் சேர்க்க முடியும்) ஆண்டானோ அவன் எல்லாம் நம்மைச் சார்ந்தவன். நம் மொழிக்கு உடனடியாக அவன் மாற்றப்பட்டு நம் உடம்பின் உறுப்பாகிவிட வேண்டும். அவ்விணைப்பையும் பரவசத்துடன் உணர்ந்து மேற்கொண்டு நாம் சிந்திக்க வேண்டும். நமக்குச் சிந்திக்கத் தெரியும் என்றால். முடியும் என்றால்.“ டயோட்டிமாவும், அஷ்பெஷியாவும் கிரேக்க ஷோபிஸ்ட்கள் ஆனாலும் தங்கள் உள்ளொளியால் தத்துவத்தை அழகாக்கியவர்கள். அதற்கு அணி சேர்த்தவர்கள். அவர்களின் அறிவு நம்மை இன்றும் காலத்தைக் கடந்து வழி நடத்துகிறது.
*
அடிக்குறிப்புகள்:
- Rhetoric – the art of observing ‘in any given case the available means of persuasion.
- Delphic oracle – most famous ancient oracle, believed to deliver prophecies from the Greek god Apollo. She was based in his temple at Delphi, located on the slopes of Mt. Parnassus above the Corinthian Gulf.
- catharsis – the process of expressing/relieving strong feeling, for example through plays or other artistic activities, as a way of getting rid of emotions.
Well Articulated….No words ..just applause
Kudos to you