பீலிபெய் சாகாடும்…? – சக்திவேல்

(அனுராதா ஆனந்த் – மயிற்பீலி சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து)

மயிற்பீலி சிறுகதைத் தொகுப்பு (சால்ட் பதிப்பகம்)

1

கடைசியாக ஒரு கூழாங்கல்லை எடுத்து பார்த்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? அதன் உறுதியும் மென்மையும் எடைமிக்கதுமான தன்மையை கைகளால் வருடி வியப்படைந்த தருணத்தை நினைவு கூர்கிறீர்களா? குழந்தைமை மாறாத சிறு வயதில் அப்படியான கூழாங்கற்களை ஆற்றங்கரையில் இருந்து பொறுக்கி வந்து சேர்த்து வைக்கும் பழக்கம் பல பிள்ளைகளுக்கு உண்டு. கூழாங்கற்கள் வியப்பில் ஆழ்த்துவது ஏன்? கற்கள் என்று நாமறிந்த வரையறைக்கப்பால் இருப்பதால். கூழாங்கற்களை முதல் முறை எடுக்கும் போது நம்மிடம் ஒரு செய்தி சொல்லப்படும், அவற்றின் பளபளக்கும் மென் பரப்பு நீரால் உருவாக்கி எடுக்கப்பட்டது என்று. அப்போது கண்கள் விரியாத குழந்தை யார் ? மென்மை * உறுதி என நாமறியும் உலகம் ஒன்றுடனொன்று கலந்து வேறொன்றாக மாறிவிடும் விந்தையில் உளம் திகைத்த தருணங்கள் இல்லாதவர் யாருண்டு!

நம் வீடுகளில் கூழாங்கற்களுக்கு வேறொரு பயன் உண்டு. அவை வெல்லம், பூண்டு என இன்னபிற பொருட்களை இடித்து கொடுப்பதற்காக காத்திருக்கும். தினந்தோறும் சமையலறையில் கண்ணிற்படும்படி இருப்பதால் கவனிப்பாரற்று வெறுமொரு கல்லாக எண்ணப்படும். அன்றாடத்தின் பழக்கத்தில் இருந்து மேலே சொன்ன விந்தையை நோக்கி வாசகனை நகர்த்துவதாக சபரிநாதனின் இக்கவிதையை குறிப்பிடலாம்.

காலடியில் தட்டுப்படும்
கல்லனைத்தும்
விண்ணின்று வந்தவையே
எரிந்து திக்கற்று திரிந்து
ஒளிர்ந்து கரைய வீழ்ந்து
குளிர்ந்து சின்ன சின்ன
கூழாங்கற்களாய்

வாழ்க்கையின் வேதனைகளால் எரிந்து திக்கற்று திரிந்து முட்டிமோதி ஒளிர்ந்து கரைய வீழ்ந்து நினைவுகளில் குளிர்ந்து போன சின்ன சின்ன கூழாங்கற்களை வைத்திருப்பவர்களையே அனுராதா ஆனந்தின் மயிற்பீலி தொகுப்பு தனது பேசுப்பொருளாக கொண்டுள்ளது. அவர்களிடம் கூழாங்கற்களாக இருப்பது என்ன? அதனை அன்பின் எடை என்று அழைத்தாலும் கூழாங்கற்களை போலவே சிறியவை/மென்மையானவை ஏற்படுத்தும் பெரிய அழுத்தங்கள் என விரிவாக்கி கொள்ளத்தக்கவை. அந்த சிறியதும் மென்மையானதுமான வலிமிக்கதுமான தருணங்கள் பூமூள்ளாகவும் தேன் துளியாகவும் அகத்தில் எஞ்சி நிற்பதை கவனப்படுத்துபவையாக மயிற்பீலி தொகுப்பின் கதைகள் அமைந்துள்ளன.

2

மெல்லிய சிலந்தி வலையில் சிக்கிய ஈக்கள் துடித்து அடங்குவது போல மனிதர்கள் நினைவுகளாலும் நிகழ்வுகளாலும் பாதிக்கப்படும் விதத்தை ஏழு கதைகளில் பார்க்கலாம். அவற்றில் சிறந்த கதைகளாக ‘பொன்வண்டு புடவை’, ‘பதினேழாவது நிறம்’ ஆகியவற்றை குறிப்பிடுவேன். பொன்வண்டு புடவையில் அம்மாவிற்கும் மகளிற்கும் இடையிலான உறவின் நெருக்கடிகள் கூறப்படுகிறது.  அம்மாவின் இறப்பிற்கு பிறகு அவரது பழைய பீரோவில் இருக்கும் புடவைகளை பங்கு பிரித்து கொள்ளும் நிகழ்வில் நாத்தனாரும் தங்கையும் ஈடுபட்டிருக்க அண்ணனுடன் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவளாக கதாநாயகி அறிமுகம் ஆகிறாள். தங்கை எடுத்து வைத்து, பின்னர் வேண்டாமென கீழே போடும் ஒரு புடவை பொன்வண்டு நிறத்தலானது. அப்புடவை கதையின் நாயகிக்குள் ஏற்படுத்தும் நினைவுப்பின்னலும் தற்போது அவளிருக்கும் அம்மா வாழ்ந்த வீட்டில் நடக்கும் சம்பவங்களும் ஒன்றுக்குள் ஒன்றாக கலந்தபடி கதை விரிகிறது. கதையின் இவ்வடிவம் ஆழப்புதைந்த நினைவுகள் நமது தினசரிகளுக்குள் ஊடுருவி நிற்பதை சுட்டி அமைகிறது.

எழுத்தாளர் அனுராதா ஆனந்த்

தாய் தன்னை விட இளமையாக துடிப்பாக, பிறர் கண்களுக்கு ஒளிமிக்கவளாக தெரிவதில் மகளுக்கு இருக்கும் எரிச்சலை தன்னிலை கூறலாக கேட்கிறோம். அதற்கப்பால் இக்கதை மேலே நகர்வது ‘அருகாமைக்கும் அன்பிற்குமான தொலைவு என்ன?’ என்ற கேள்வி எழுவதன் வழியாக எனலாம். நமது தினசரிகளில் தூணாக தாங்கி நிற்கும் உறவுகளில் வெளிப்படும் சின்னஞ்சிறு அக்கறையின்மைகளும் தொடர்ச்சியாக அத்தகு உறவுகள் மேல் கேலி என்ற பேரில் ஊதாசீனமான சொற்களை எறிவது ஏன்? இங்கே பள்ளிக்கு வரும் அம்மா, வீட்டை விட்டு ஒரு விளையாட்டு போட்டி தினத்தில் பெற்றோராக வெளிவருகையில் சுதந்திரமாக உணர்கிறார். அழகிய புடவையும் நகையும் அணிந்து தன்னை வெளிப்படுத்தி கொள்கிறார். பிற பெற்றோர்களுடன் ஒப்பிடுகையில் தான் பொருத்தமில்லாமல் இருப்பது கண்டு மகளுக்கு ஏற்படும் எரிச்சலை சிறுபிள்ளைத்தனமானது என்று ஒதுக்கி விடுகிறார். மறுபுறம், மகள் தனது தாய்க்கு அவளது தினசரி சுழற்சியில் இருந்து கிடைத்திருக்கும் விடுதலையுணர்வை பொறாமையுடன் எதிர் கொள்கிறாள். மகள் தனது உடலின் இன்பங்களை அறிவதும் அம்மா ஓட்டப்பந்தயத்தில் ஜெயிப்பதும் அடுத்தடுத்த நினைவுகளாக இடம்பெறுகையில் தாயின் இளமையை வெறுக்கும் ஒரு மகளும் தாய்மைக்கு அப்பால் இளமையில் திளைக்கும் ஒரு கன்னியும் காணக்கிடைக்கின்றனர். அம்மாவும் மகளுமாக அல்லாமல் இரு பெண்களாக, அருகருகே வளரும் இரு செடிகளை போல காட்சி அளிக்கின்றனர்.

இருவரும் அதை உணரும் போது அம்மா தனது பெருந்தன்மையால் கன்னியின் அச்சிரிப்பை என்றென்றைக்குமாக தனக்குள் ஆழ புதைத்துக் கொள்கிறார். மகளோ ஒவ்வொரு முறையும் நச்சுக் காயங்களை கொடுக்கிறாள். கதை நாயகியின் நினைவுகளின் வழி சென்று அவளது அம்மாவுடனான பிணக்குகளை அறிந்து கொண்டிருக்கும் போதே தங்கையின் மகள் பெரியம்மா என்று கட்டிப்பிடித்து பொன்வண்டு புடவையை எனக்கு கொடுக்கிறீர்களா என கேட்பதற்கு மறுப்பேதுமில்லாமல் நித்யாவிற்கு கொடுத்து கட்டியணைத்து கொள்கிறாள். தங்கை தான் மகளை வரவழைத்து புடவையை தன்னிடமிருந்து பறித்து கொண்டாள் என அறிந்தாலும் அவள் மகளை வாரியணைத்து கொள்கிறாள்.

அதன் பின் கதையில் முக்கியமான கனவு பகுதி இடம்பெறுகிறது. கனவில் வரும் திருமண காட்சி ஜஸ்டின் மேல் அவள் கொண்ட பிரியத்தை உணர்த்துகிறது. அக்கனவில் அம்மா திருமணத்தை தடுப்பதற்காக ஓடிவருவது போன்ற உணர்வை அவள் அடைவது, ஜஸ்டினுடனான காதல் புறக்கணிக்கப்பட்டது என்பதை சொல்வதாக வாசிக்கலாம். கடைசியாக கனவில் அவளை விழுங்க வரும் பொன்வண்டு என்பது அம்மாவை காயப்படுத்தியதால் உண்டான குற்றவுணர்வின் வடிவம் என்று தோன்றுகிறது. அக்குற்றவுணர்வின் பிடியிலிருந்து அவள் மீள்வது நித்யா கனவில் கொடுக்கும் பூங்கொத்து வழியாக விளங்குகிறது என்பதாக வாசிக்க இடமுண்டு.

இறுதியில் இவள் கேட்ட நெளி மோதிரத்தை அம்மா அண்ணன் மூலமாக கதை நாயகியிடம் கொடுப்பது, காயங்களை கொடுத்த மகளுக்கு கொடுக்கப்படும் அன்னையின் அன்பின் பரிசு. ’வேப்பம் பூக்களுக்கு மத்தியில் ஏற்றப்பட்ட தீபம் என தன்னை நாயகி உணர்கிறாள்’, ’இருட்டில் ஒரு மின்மினி’ என்ற வரிகள் மனதிற்குள் ஒலித்தது. அம்மாவின் மோதிரம் காரண – காரிய விதிகளுக்கு வெளியில் இருப்பதை தானும் அத்தகு ஒரு நிலையில் வந்து சேரும்போது உணர்ந்து கொள்கிறாள்.

பதினேழாவது நிறம் கதை அருகாமைக்கும் அன்பிற்குமான தொலைவில் அக்கறையுடன் பொறுப்புணர்ச்சியின் இடத்தையும் விசாரணை செய்கிறது. ஒருவர் மேல் கொள்ளும் அன்பென்பது நம் செயல்களால் அவர் பாதிப்புக்குள்ளாகும் விதத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல் என்ற எண்ணம் நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களாக தன்னியல்பில் அதனை உணரவும் செய்கிறோம். வாழ்வில் எத்தனை தூரம் அத்தகு பொறுப்புணர்ச்சியுடன் ஒருவரால் நடந்து கொள்ள முடிகிறது? அப்படி நடப்பவர்களும் நடக்காதவர்களும் ஒரு தனிமனிதனின் அகத்தில் விட்டு செல்லும் இடம் என்ன? இக்கேள்விகளின் ஊடாக பதினேழாவது நிறம் கதையின் நாயகன் முருகனின் வாழ்க்கைக்குள் செல்லலாம்.

சொந்தமாக கடை நடத்தி உணவு டெலிவரி செய்யும் முருகன், மழைநாள் இரவில் தான் சந்திக்கும் வாடிக்கையாளர் ஒருவரின் வழியாக தனது பதின்பருவ நட்பான சித்தண்ணனை நினைவு கூர்கிறான். சித்தண்ணனுக்கும் முருகனுக்குமான உறவின் வண்ணங்கள் நினைவில் நிழலாடி மறைந்து வண்டியை எடுத்து கொண்டு வீட்டிற்கு திரும்புகையில் தான் சந்தித்த வாடிக்கையாளர் சித்தண்ணன் தான் என்று சுய கற்பிதம் பண்ணிக்கொள்வதுடன் கதை முடிகிறது.

சித்தண்ணன் அகத்தில் கொண்டிருக்கும் கைகள் அன்பொழுக கூப்பி தொழுத வண்ணம் இருக்கையில் ஓவிய தீரைச்சிலையில் தன் கட்டுப்பாட்டை மீறி கழுத்தை நெறிக்கும் நரம்பு புடைத்த கைகளை வரைகிறான்.  சித்தண்ணனுக்கும் மதிக்குமான உறவு அந்தக் கைகளை போல முதல் எண்ணத்திற்கு காதலாகவும் பின்னர் வக்கிரமான மோதலின் யதார்த்தமாகவும் மாறிவிடுகிறது. பிறரிடம் தன் எண்ணங்களை தடையின்றி திறந்து வைத்துப் பகிர்பவர்கள் தானன்றி பிறரை பொருட்டென்று நினைப்பதில்லை போலும். சித்தண்ணனை மதி ஏமாற்றியதாகவே முருகன் பார்க்கிறான். ஆனால் சித்தண்ணன் வழியாக முருகனுக்கு ஏற்படுவதும் அதே போன்ற அனுபவம் தான். மதி சித்தண்ணனின் ஓவிய ஆளுமையை சிதறடித்து விடுகிறாள். ஆனால் அவர் முருகனுக்கு அப்படி ஏதும் செய்யாவிடினும் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கவே செய்கிறான். மறுபுறம் புனிதாக்கா முருகனிடம் ஏதும் பேசுவதில்லை. எனினும் அநாதையான வேலையற்ற தருணத்திலும் முருகனுக்கு தேவையான அரவணைப்பை ஒரு விலக்கத்துடன் தருகிறாள். முருகன் நெருக்கமான உளம் பகிரும் உறவிற்கு ஏங்குகையில் சொந்த காலில் நில், பிறரை நாடாதே என ஏசி பாடம் கற்பிக்கிறாள்.

முருகனின் நினைவு கூரலில் அவனை செலுத்தும் ஊக்க விசைகளாக பெற்றோரின் இறப்பிற்கு பின் வீட்டை விட்டு துரத்திய அண்ணியின் நச்சு சொற்களும் புனிதாக்காவின் நம்பிக்கையூட்டும் சுடு சொற்களும் இருக்கின்றன. கதையில் சித்தண்ணன் சிவப்புடன் கருப்பு சேர்த்து சேற்றின் பழுப்பான பதினேழாவது நிறத்தை உருவாக்குகிறான். அதனைக் கொண்டே கைகளை வரைகிறான். இறுதிவரை அவை முடிவதுமில்லை. அவன் தற்கொலை செய்து கொள்வதுடன் ஓவியம் நின்று போகிறது. அக்காட்சியை முருகனின் உறவுகளுக்கான குறியீடாக எடுத்து கொள்ளலாம். நெருங்கி இருப்பவர்கள் அன்னியமாகிப் போவதும் அன்னியம் போல் இருப்பவர்கள் அத்தியாவசியமான அன்பின் கரங்களை உரிய விலக்கத்துடன் நீட்டுகையில் அருகாமைக்கும் அன்பிற்குமான தொலைவை பார்த்து திகைக்கிறோம். சித்தண்ணன் வரைந்த கைகள் முடிவிற்கு வராதது போலவே முருகனாலும் – ஒருவகையில் நம்மாலும் – தீர்மானம் கொள்ள முடிவதில்லை. அதனால் தான் பல ஆண்டுகள் கழித்தும் அவனை முருகன் தேடுகிறான் போலும்.

பொன்வண்டு புடவை, பதினேழாவது நிறம் இரு கதைகளையும் முதன்மையான வரிசையில் வைக்க முடியும். அவை எழுத்தாளர் தன்னை கடந்து சென்று விடைகூற முடியாத வாழ்க்கை தருணங்களை காட்டி குறிப்புணர்த்தி நின்று விடுகின்றன. வானத்தின் முன் இறைஞ்சிய கைகள் போல. மயிற்பீலியில் அடுத்த மூன்று கதைகளாக ’அனாமிகா என்னும் பெரும்பூனை’, ’குரலற்றவள்’, ’அம்மாவின் இளநீல டைப்ரைட்டர்’ ஆகியவற்றை குறிப்பிடுவேன். இம்மூன்று கதைகளும் தாம் காட்டும் நுண் சித்தரிப்புகளின் வழி வெளிபடுத்தும் புதிய கோணங்களுக்காக கவனிக்கப்படத்தக்கவை.

அனாமிகா என்னும் பெரும்பூனையின் நாயகி அனாமிகா. கதை முடிவில் நாயகி பூனையாக உருமாறி படிகளில் தாவிச் செல்லும் உருவகத்துடன் அமைந்துள்ளது. சமூகத்தில் திருமணமாகாமல் தன்னந்தனியாக வாழும் பருமனான பெண்ணொருத்தியின் அகத்தனிமையை அவளது தன்னிலை கூறல் வழியாக கேட்கிறோம். அதிகமும் உருவகங்கள் அமைந்த கதையாக உள்ளது. அனாமிகா காலையில் குளியலறையில் முழு உடலையும் 360 டிகிரி கோணத்தில் இருந்து பார்க்கும்படி வைத்திருக்கும் கண்ணாடிகளின் முக்கியத்துவத்தை சொல்லி ஆரம்பிக்கும் கதை, அவளது உடலில் புள்ளிகள் தோன்றுவதும் பின்னர் கோகுலை காதலிப்பதுமாக நகர்ந்து, அவன் இவளது விலை மதிப்புமிக்க புள்ளிகளை டாட்டூக்கள் என சந்தேகப்படுவதில் காதல் முறிந்து போய், தனது புள்ளிகள் அனைத்தும் மெல்லிய பிறர் கண்ணுக்கு தெரியாத ஆரஞ்சு நிற கோடுகளாக உருமாற்றம் காண்பதில் விடுதலை கொள்ளும் அனாமிகாவை காண்கிறோம்.

அனாமிகா தனது டையரி முழுக்க தன்னைத் தானே பார்த்து அருவருப்பு கொண்ட தருணங்களையும் பிறர் தன்னை அவமதித்த தருணங்களையும் இரவில் சடங்கு போல எழுதி வைக்கிறாள். அவளது பீரோ முழுக்க டையரிகளால் நிரம்பி வழிகிறது. கதையில் அனாமிகாவின் இயல்பின் விசித்திரத்தை குறிப்புணர்த்த சொல்லப்பட்டாலும் ஒருவகையில் நம்மில் பெரும்பாலனவர்கள் மனதில் நிரம்பி வழியும்படி அப்படியான நாட்குறிப்புகளை வைத்திருப்பவர்கள் தானே. சிலரின் சொற்களில் அவை எப்போதும் வெளிவந்தபடியே இருப்பதையும் பார்த்திருப்போம். அடுத்து கண்ணாடியில் பார்த்தல் என்ற செயல்பாடு ஒரு பக்கத்தில் அகவயமாக தன்னைத்தானே நேர்மையாக பார்த்து கொள்ளல் என்பதற்கும் சமூகவியல் நோக்கில் பெண் தன் உடலை தானே முழுதும் பார்த்து ரசித்து கொள்ள அனுமதிக்காத மனத்தடைகளை உருவாக்கும் கலாச்சார கூறுகளை குறித்தும் கேள்வியை எழுப்புகிறது. அவள் உடலில் ஏற்படும் புள்ளிகளை இதுவரையிலான தன் மேலான பிறர் சொற்களின் சுமையை ரத்து செய்து கொள்வதன் தொடக்கமாக காணலாம். அப்போது நம்முள் மலர்கள் பூக்க தொடங்குகின்றன. அது மலர்ந்தவுடன் காதல் நிகழ்கிறது.

காதல் நிகழ்ந்தவுடன் எதிர்பாலினத்தை சந்திப்பதில் இருக்கும் சிக்கல்கள் உடன் கோகுலின் கேள்வி தான் அனாமிகாவை நொறுங்க செய்கிறது. அவள் மதிப்புமிக்கவை என நினைக்கும் புள்ளிகளை டாட்டூ என்று அலட்சியமும் கிண்டலும் சந்தேகமுமாக கடந்து செல்வது. அந்த புள்ளிகள் அனாமிகாவிற்கு தன் இயல்பை சுவீகரித்தல் எனும்போது கோகுலுக்கு அது பாவனையாக தெரிகிறது. இவ்விடத்தில் அருகாமைக்கும் அன்பிற்குமான அம்மையக் கேள்வி மீண்டும் எழுந்து வருகிறது. நமக்கு மிக நெருக்கமானவர்கள் என நினைப்பவர்களால் கூட நமது தன்மதிப்பை முழுமையாக அங்கீகரீக்க ஏன் முடிவதில்லை? அவர்களுக்கு எவ்விதத்திலும் நமது வலிகள் பொருட்டாகவதில்லை. அந்த உறவுகளை வெட்டிக் கொள்வதை விடுத்து விடுதலை வேறில்லை. அனாமிகா அதனை வெட்டியவுடன் மறைந்த புள்ளிகள் கோடுகளாக பரிணமிப்பதை அறிகிறாள். அவை பிறர் கண்ணுக்கு தெரியாமல் இருப்பது என்பது கவித்துவமான இடத்திற்கு நகர்கிறது. மனதின் காயமிக்க வடுக்கள் புள்ளிகளாக இருக்கையில் பழைய நினைவுகளின் வழியான இனிமையை நினைவூட்டுகையில் கோடுகளாக நிரம்பி வழிகையில் வாழ்க்கையின் பொருளுணர்ந்து வருவதை ஏற்றல் என்று அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறாள்.

கதை முடிவில் அனாமிகா ஒரு பெரும்பூனையாக மாறி படிகளில் தாவி இறங்குவது வசீகரமான மாயத்தை வழங்கினாலும் வடிவ ரீதியாக அதற்கு முன்னுள்ள கதை பகுதிகளுடன் சீர்மையாக இணையாமல் தொக்கி நிற்கிறது. அது இல்லாவிட்டாலும் இழப்பு இல்லாத அளவுக்கு தனியாக தெரிந்து சிறுகதையின் ஒருமையைக் குலைக்கிறது.

குரலற்றவள் கதையில் காந்திக்கும் முருகேசன் இணையருக்கு இடையில் தனித்து விடப்படும் காந்தியின் நிலையைக் காண்கிறோம். இராணுவத்தில் பணியாற்றும் முருகேசன் குண்டடி காயத்தில் கழுத்துக்குக் கீழ் செயலற்று படுத்துவிடுகிறான். தன் இயலாமையின் மீது கொண்ட வெறுப்பை பணிவிடைகள் செய்யும் காந்தியின் மீது வன்மத்தில் ஊறிய வசைச் சொற்களாகப் பொழிகிறான். விளைவாக மகன், மகள் என எல்லோரும் தங்கள் குடும்பங்களுடன் ஒண்டிக் கொண்டு காந்தியை தனியாக விட்டுவிடுகிறார்கள். அவர்களது தெருவில் இருக்கும் புஷ்பா மட்டும் தான் தினமும் ஒருமணி நேரம் முருகேசனை பார்த்துக் கொண்டு காந்திக்கு சிறியதொரு விடுதலையை அளிக்கிறாள். அந்நேரத்தில் சுதந்திரமாக ஒரு நடை சென்று சிறிது நேரம் இசக்கி கோயிலில் அமர்ந்து, பூசாரி நம்பியின் சொற்களை கேட்டுவிட்டு வருவது அவளுக்கு ஆறுதலளிப்பதாக உள்ளது.

இக்கதையை முன்வைத்து பேசுகையில் காந்தி முருகேசனை விட்டுவிட்டு ஓடிவிட நினைப்பதும் அஃது இயலாமல் மீண்டும் மீண்டும் வீடு வந்து சேர்வதும் அவளது நினைவுகளின் நமக்கு சொல்லப்படுகிறது. இது போன்ற பெண்களை நாம் பார்த்திருப்போம். எவ்வகையில் மகிழ்ச்சியளிக்காத கணவர்களைக் கைவிடாதவர்கள். ஒரு உறவை தொடர்வதற்கு அர்த்தம் என்ன? துன்பமே எனினும் தனது இருப்பிற்கு அர்த்தம் சேர்க்கும் ஒன்றை மனிதர்கள் கைவிடுவதில்லை. அதனால் முருகேசனின் இல்லாமையை உணரும் அந்நள்ளிரவில் அழுகிறாள் போலும். நம்பிக்காக காந்தி காத்திருப்பது தான் கதையின் முக்கியமான பகுதி என்று சொல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் தன்னை நம்பி இதயத்தை திறந்து காட்டும் ஒரு உறவின் அவசியம் இருக்கிறது. நம்பியின் சொற்கள் காந்திக்கு அப்படியாக இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் நம்மால் உறுதியாக காரணம் சொல்ல முடிவதில்லை.

அம்மாவின் இளநீல டைப் ரைட்டர் இக்கதைகளில் தனிப்பட்ட முறையில் நெருக்கமான ஒன்று. அக்கதையின் வழி அம்மாவின் சில செயல்களை நினைவோட்டி பார்த்து புன்னகைத்து கொண்டேன். பிரம நாயகம் தனது அம்மாவின் இறப்பிற்கு பிறகு அவரது முன்னாள் பழங்காதலரான எடியன் தேவமனிதனை சந்தித்து வருவதே கதையின் சாரம். அம்மா இறக்கும் போது பிரம நாயகத்திடம் முதல் முறையாக எடியன் தேவமனிதன் என்று பெயர் மட்டும் சொல்லி தன்னுடைய ஆலிவெட்டி லெட்டரா 22 டைப் ரைட்டரை அவரிடம் ஒப்படைக்கும்படி சொல்லிவிட்டு மறைந்து விடுகிறாள். எடியனை பிரமநாயகம் சந்திக்கப் போகும் தருணம் முக்கியமானது. தன்னுடைய அம்மாவின் இறுதி விருப்பம் என்பதற்காக செல்லவில்லை. ஆண்டுகள் கழித்து தனது வீட்டில் தன்னுடைய சொல்லுக்கு மனைவியிடமே மதிப்பு இல்லை என்று உணர்ந்து வருந்திய தினத்தில், மனைவியை காட்டிலும் தனது சின்னஞ்சிறு மகளும் அப்பா எது யோசித்தாலும் தப்பு தான் என விளையாட்டுத்தனமாக உச்சரிக்கும் சொல்லின் காயத்தில் இருந்தே ஒரு பழிவாங்கல் போல ஞாயிற்றுகிழமையில் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக எடியனை சந்திக்க சென்னையில் இருந்து புதுச்சேரி புறப்படுகிறான்.

அம்மா – பிள்ளை பற்றி நம்மிடம் ஏராளமான உயர்வு நவிற்சிகளும் மிகை உணர்ச்சிகளும் கேட்டு நாள்தீர அழ ஒருபாடு சினிமா பாட்டுக்களும் உண்டு. யதார்த்தம் என்னவோ அதற்கு நேர்மாறானது. அம்மாவின் அகத்தின் தனிமையை, ரகசிய இனிமையை, வலியை புரிந்து கொள்ள வாழ்க்கையில் நீண்ட தூரம் ஓடி தானும் தனித்தவனாக மகன் தன்னை உணர வேண்டி இருக்கிறது. அப்போது தான் எடியனை சந்திக்க முடிகிறது. அவரது வீட்டில் நுழைந்தவுடனே எடியன் அம்மாவிற்கு யார் என்று அறிந்து கொள்கிறான். எடியன் தனித்து இருக்கிறார். அவரது மனைவி சார்லெட் தான் வசிக்கும் ஐரோப்பிய தேசத்திற்கு அழைத்தும் டைப் ரைட்டர் மேலுள்ள பற்றால் புதுச்சேரியிலேயே தங்குகிறார். பிரம நாயகத்தை பார்ப்பது அவருக்கு கிளம்பி செல்வதற்கான உத்வேகத்தை அளிப்பது போலவே இவனுக்கும் மனைவியின் அருமை புரிகிறது. மனிதர்களின் வார்த்தைகள் எப்படி நம்மை அவர்கள் பால் ஈர்த்து அன்பு கொள்ள வைக்கிறது என்பது எடியனின் குணச்சித்திரத்தில் நன்கு வெளிப்படுகிறது.

சக்திவேல்

தொகுப்பின் கடைசியான இரு கதைகளில் மஞ்சள் குருவி அழகிய குறுஞ் சித்தரிப்பாக உளம் மலர வைக்கிறது. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கம் தன் மகளை சான்றோள் என கேட்ட தாய் எனும் குரலின் வாழ்க்கை காட்சியாக அமைகிறது. மங்களநாதனின் கதை இக்கதைகளின் மைய ஓட்டத்தில் இருந்து விலகி நிற்பதுடன் உணர்வு ரீதியான இணைப்பை ஏற்படுத்துவதில்லை. ஒரு தனிமனிதரின் கதை மூன்றாம் நபர் பார்வையில் இருந்து கூறப்படும் போது பெரும்பாலும் செய்தி சித்தரிப்பாக நின்று எந்த தனித்துவமான அறிதலையும் தருவதில்லை. மங்களநாதனின் கதைக்கும் அதுவே நடந்துள்ளது.

3

இறப்பு பெரும்பாலான கதைகளில் பின்புலமாக உள்ளது. இன்மை தான் இருப்பை உணர்த்துகிறது என்பதாக. அது பருவடிவிலும் அகவடிவிலும் கதைகளுக்குள் விரவி இருப்பதைப் பார்க்கிறோம். இக்கதை உலகின் மனிதர்கள் தங்களுக்குள் தனிமை கொண்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் நிலைகுலையச் செய்வது பெரிய விஷயங்களல்ல. மிகச் சின்ன விஷயங்கள் என நாம் நினைத்திருப்பவை தான். உதாசீனமிக்க கேலிச் சொல் ஒன்றில் தொடங்கி எளிய புடவை, ஒரு நபரின் தோற்றம் என அது பலவாறாக விரிகிறது. மயிற்பீலி என்று தொகுப்பு பெயரிட்டிருப்பது பொருத்தமானதாக இருக்கிறது. எடையற்றவை என்று எண்ண செய்பவற்றின் எடை. வள்ளுவர் மயிலிறகின் எடையால் அச்சு முறியும் வண்டியைப் பாடுகிறார். இக்கதைகளில் மயிலிறகின் எடை ஏறி கொண்டே செல்வதை பார்க்கிறோம். கூழாங்கற்கள் மலைகளாவது போல். அதன் வண்ணங்களை காட்டும் நல்ல தொகுப்புகளில் ஒன்று.

***

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *