நினைவிலிருந்து மீளுதல் – சக்திவேல்
(சந்திரா தங்கராஜின் இரு நாவல்கள்: மலையேற்றம், கனவிலிருந்து புறப்பட்ட மஞ்சள்நிற முகங்கள்)

வாழ்க்கையில் குறைந்தது ஒருமுறையேனும் அன்றாடத்தின் ஒழுக்கு தடைப்பட்டு முட்டுச்சந்தில் நிற்கும் அனுபவம் பலருக்கு வாய்ப்பதுண்டு. எதிர்வரும் அத்தகு சிக்கல்களை தீர்க்க வழி தெரியாத போது மனம் இருவேறு வழிகளில் செயல்படுவதைக் காண்கிறோம். ஒன்று கடந்த காலத்தில் வலுவான தாக்கம் ஏற்படுத்திய அனுபவத்தினை நினைவில் மீட்டெடுத்து அதுவே இப்போதுள்ள சிக்கலின் ஆணிவேர் என்று புனைந்து கொள்வது. குறிப்பிட்ட நினைவை சுற்றி மேலும் நினைவுத் தொகுப்புகளை பின்னிப்பின்னி மாயப் புனைவு ஒன்றை உருவாக்கிக் கொண்டு பல்வேறு வகை உணர்வுகளுக்கு ஆளாவது. இரண்டாவது வழி, நிகழ்காலத்தில் இருந்து முடிந்தவரை துண்டித்து கொண்டு கடந்த கால நினைவுகளில் உழலுதல். இருபாதைகளும் மனித மனத்தை நினைவுத் துளிகளாக சிதறடித்து சோர்வுக்கும் இருளுக்கும் அழைத்துச் செல்கின்றன. சந்திரா தங்கராஜின் மலையேற்றம் நாவலை முதல் வழிக்கும் கனவிலிருந்து புறப்பட்ட மஞ்சள்நிற முகங்கள் நாவலை இரண்டாவது வழிக்கும் உதாரணமாகக் கொள்ள முடிகிறது. இருநாவலின் கதை மாந்தர்களின் பயணமும் அப்படிப்பட்ட நினைவுச் சுழலில் இருந்து மீளும் வழியை பேசுவதாக அமைகின்றன.
*
மலையேற்றம் நாவல் ராசபாண்டிக்கு அவனது அப்பா முத்துக்கலுவன் மேல் உள்ள வன்மத்திற்கான காரணங்களை, ராசபாண்டியே கூறுவதாக அமைந்துள்ளது. நூறு பக்கம் உள்ள இந்தக் குறு நாவல் முழுக்கவே ராசபாண்டி தன் நினைவுகளை தனக்கு முன்னுள்ள ஒருவரிடம் கூறும் (அநேகமாக வாசகரிடம்) வடிவில் உள்ளது. கதை நடக்கும் யதார்த்த காலம் இரண்டு நாட்களில், ராசபாண்டி தனது தந்தை முத்துகலுவன், மாமா, அவரது மகன் செல்லத்துரை ஆகிய நால்வரும் மங்களதேவி மலைக்கு சென்று காட்டில் மரம் வெட்டி விறகை கரியாக்கி கொண்டு வரும் நிகழ்வாக இருக்கிறது. அவ்விரு நாட்களிலும் ராசபாண்டிக்கு முத்துக்கலுவன் மேல் உண்டாகும் வன்மத்திற்கு காரணமான நினைவுகளை ஊடுபாவாக வெவ்வேறு நிலக்காட்சிகள் முன்வைத்து ராசபாண்டி தன்னிலையில் கூறுவதாக கதையோட்டம் பயணிக்கிறது. தேனி மாவட்டத்தின் தென்பகுதியில் என்பதை ஆங்கூர்பாளையம், ஓடப்பட்டி ஆகிய ஊர் பெயர்களை கொண்டும் மோட்டார் பம்ப் செட், ட்ராக்டர் வருகையை கொண்டு கதை எழுபதுகளில் நடப்பதாக புரிந்து கொள்ள முடிகிறது.
முத்துக்கலுவன் மனைவி அமராவதியை அடித்து நொறுக்கி குடும்ப வன்முறையில் ஈடுபடுகையில் சிறுவனான ராசபாண்டி, அப்பா முத்துக்கலுவனை களைக்கொத்தியால் தாக்குகிறான். கோபத்தில் ராசபாண்டியும் தாக்கப்படுகிறான். மகனும் அம்மாவும் முத்துக்கலுவனின் வன்முறைக்கு அஞ்சி தங்கள் பிறந்த வீட்டிற்கு வந்து சேர்கிறார்கள். மன்னிப்பு கேட்க வரும் முத்துக்கலுவனை நிராகரித்துவிட்டு அமராவதி மகன் ராசபாண்டியுடன் பிறந்தகத்திலேயே தங்கி விடுகிறாள். பின்னர் தாத்தா, பாட்டி ஆதரவில் வளரும் ராசபாண்டி காலவோட்டத்தில் தாத்தா, பாட்டி, அம்மா என்று மூவரையும் இழந்து தனித்தவனாக நிற்கிறான். அம்மாவுடன் பிறந்த மாமன்காரர்கள் சொத்து தருவதில் பாரபட்சம் பார்ப்பது முதல் நூதனமாக ராசபாண்டியின் மாட்டுத் தரகு வியாபாரத்தை கெடுக்கும் காரியம் வரை ஈடுபடுகிறார்கள். மூத்த மாமா அய்யாத்துரை தனது மகள் மீனாட்சியும் ராசபாண்டியும் ஒருவரையொருவர் விரும்புவதை விரும்பாதவர். எனவே அக்கா அமராவதி இறந்தவுடன் முத்துக்கலுவனிடம் தன் மகள் மீனாட்சிக்கு திருமணம் நடக்கும் வரை மகனை அழைத்து செல்லுங்கள் என்று கூறுகிறார். சண்டையை தவிர்க்க நினைக்கும் ராசபாண்டி, இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இருமகள்களை பெற்ற தந்தை முத்துக்கலுவனுடன் ஒருமாதம் தங்குகிறான். ஒருமாதம் முடிய இருக்கையில் நால்வரும் மங்களதேவி மலையில் விறகு வெட்டி கரியாக்க செல்கிறார்கள். அம்மலையேற்றத்தில் இருந்து கதை தொடங்குகிறது. மலையில் இருந்து இருவரும் திரும்புகையில் ராசபாண்டியின் வன்மம் நீங்கிய சித்திரம் காட்டப்படுகிறது.
விரும்பிய மாமன் மகளை மணக்க இயலவில்லை. மாமன்களை சம்மதிக்க வைக்கும் அளவுக்கு பொருள் வளம் இல்லை. தனக்கு ஆதரவாக நின்று அரவணைத்த தாத்தா, பாட்டி, அம்மா மூவரும் இல்லை. சிறுவயதில் தன்னையும் அம்மாவையும் காரணமற்ற குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கிய அப்பாவுடன் வேண்டா வெறுப்பாக வாழ வேண்டியுள்ளது. இதுவே ராசபாண்டியின் நிலை. இத்தகைய மூட்டுச்சந்துகளில் அனேகமாக மனிதர்கள் எப்போதேனும் ஒருமுறையாவது நிற்கிறார்கள். பெரும்பாலும் அத்தகைய நேரங்களில் தீர்வுக்கு பதில், மனம் வெவ்வேறு கடந்த கால நினைவுகளை தொட்டு எழுப்பி கொண்டு தன்னிரக்கமும் முடிந்தால் முன்னிலையில் உள்ள ஒருவரின் மேல் குரோதமும் கொள்கிறது. ராசபாண்டியும் அதையே செய்கிறான். கதை முடிவில் தன்னிடம் எஞ்சியிருப்பது, அப்பாவை பழிவாங்கும் உணர்ச்சி அல்ல, சிறுவனாக தற்காத்து கொள்ள விழையும் பாதுகாப்புணர்வு மட்டுமே என்று உணர்ந்து ஆசுவாசமடைகிறான்.
ராசபாண்டிக்கு அப்பா முத்துக்கலுவனை குறித்து இருவகை உணர்வுகள் இருக்கின்றன. ஒன்று சிறுவயதில் அவரோடு நீச்சல் பழகி, ஆற்றில் மீன்பிடித்து வந்த இனிமையான காலம். மற்றொன்று அவரால் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட கொடு நினைவு. அந்த கொடு நினைவு ஒரு அஞராக (Trauma) அவனுள் படிந்து மாமிச உணவு, சிவப்பு நிறம், ரத்தம் ஆகியவற்றின் மீதான கடும் ஓவ்வாமையை உண்டாக்குவதை வெவ்வேறு காட்சிகளில் காண்கிறோம். மிக கடுமையான இந்த வகை அஞர் போன்ற நிலைகளையே நிகழ்கால சிக்கலில் இருந்து தப்பிக்க விரும்பும் மனம் மேற்கொள்கிறது.
நிகழ்காலத்தில் தன் கையறு நிலையை உணரும் ராசபாண்டி, கடந்த கால நினைவுகளில் அதே போன்ற சம்பவங்களை மீள மீள நினைத்து சொல்லி கொள்கிறான். மன அழுத்தம் கொண்டவர்களின் அக புலம்பல் என்பதே இக்கதை சொல்லலின் தன்மையாக உள்ளது. செல்லப்பாண்டியுடன் பீடி பிடிக்க தனியாக சென்று அமர்பவன், தனிமையில் மாமன் மகள் மீனாட்சியை நினைத்து கொள்கிறான். அவளுக்கும் தனக்குமான உறவு எப்படி படிப்படியாக வளர்ந்தது என்பதை நினைத்து கொண்டிருக்கும் போதே சட்டென்று சம்பந்தமில்லாமல் தாத்தாவின் இறப்பு நிகழ்வுகளை நினைத்து கொள்கிறான். நாவலின் சாதகமான அம்சம் என்னவென்றால், இவ்வாறு நினைவுகளின் தொடர்ச்சியின்மையை கிடைமட்டத்தில் வேகமாக வீசப்படும் தட்டையான கூழாங்கல் நீர் மேல் பட்டு தெறித்து தாவி செல்வது போல படம்பிடித்து காட்டுவதே. மன அழுத்தம் கொண்டவர்கள் ஒரு இழப்பின் போது தங்கை அறியாமலேயே மற்றொரு இழப்பின் நினைவை இணைத்து கொள்வதை மீனாட்சியை நினைத்தவுடன் தாத்தாவின் இறப்பை நினைத்து கொள்வதில் உணர முடிகிறது. இதே போல ஒவ்வொரு முறையும் ராசபாண்டி வாழ்க்கை முன்னேற நினைக்கையில் இழந்தவை என்னவெல்லாம் – தாத்தா, பாட்டி, அம்மா, மாட்டு வியாபாரத்தில் ஏமாறுதல் – என்று எண்ணி, அவையனைத்துக்கும் முழு முதல் காரணம் கண்ணெதிரே உள்ள அப்பா தான் என்ற முடிவுக்கு வருகிறான். சுழல் வட்டம் போல தனக்குத்தானே நஞ்செழும் நினைவுகளை விதைத்து கொண்டு, அதை உணர்ந்து வெளிவர முடியாமல் இருக்கும் ராசப்பாண்டியின் நிலை இயல்பாக காட்டப்பட்டுள்ளது.
இது தவிர கதையில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய சில இடங்கள் உள்ளன. முத்துக்கலுவன் தனது வம்ச கதையை கூறிய பிறகு கடும் வன்முறையை தன்னுள் உணர்ந்து காட்டிற்குள் தனித்து செல்லும் ராசபாண்டி சந்திக்கும் கருஞ்சிறுத்தை. அது வெறும் காட்டு மிருகமாக மட்டுமல்லாமல், அவனது அகத்தில் கொந்தளிக்கும் வன்முறையின் உருவகமாக இடம்பெறுகிறது. கதை முடிவில் கருஞ்சிறுத்தையால் தாக்கப்படும் அப்பாவை காப்பாற்றுவது, ராசபாண்டி தனக்குள்ளிருக்கும் வன்முறையை வெல்வதன் உருவகமாக கொள்ள முடிகிறது. முடிவில் அப்பாவும் மகனும் இறங்கி செல்லும் வழி நெடுக மரங்கள் பூத்திருப்பது மனம் திருந்தி மலர்வதன் சித்திரமாக உள்ளது. முத்துக்கலுவனின் மேல் அமரும் பட்டாம்பூச்சிகள், கதை தொடக்கத்தில் புதிய இடம் கொடுக்கும் இனிய உணர்வுகள் எவ்வளவு எளிதில் நினைவில் மூழ்கும் ஒருவனால் இழக்கப்படுகின்றன என்று காட்டும் சித்திரம், ராசபாண்டி தாத்தாவின் இறப்பின் போது காணும் கனவு ஆகியவை கவனிக்க தக்கதாக உள்ளன.
*
தொண்ணூறுகளுக்கு பிறகான பொருளாதார வளர்ச்சியினால் உருவாகி வந்த நடுத்தர வர்க்கம் பெண்களின் வாழ்க்கை நிலையில் குறிப்பிடத்தகுந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. மேல்தட்டு நடுத்தர குடும்ப பெண்கள் வீட்டு வேலை தவிர வேறெதும் செய்ய வேண்டிய அவசியமில்லை. வீட்டு வேலைகளிலும் பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், வீடு பெருக்குதல் போன்றவற்றிற்கு ஆட்களை வேலைக்கு வைக்குமளவு வசதி வந்ததால் இப்பெண்களில் தனக்கென தனியாக பணிக்கு செல்லாதவர்களிடம் மிகுதியான நேரம் உள்ளது. பெண்களின் இந்நிலைக்கும் தொலைக்காட்சி தொடர்களின் பெருக்கத்திற்கும் நேர் தொடர்புள்ளது. இப்படிப்பட்ட வாழ்க்கையில் வசதியின் பெயரால் பெண்கள் இழப்பது சுதந்திரத்தை தான். கணவன், குழந்தைகள் என்னும் உறவுகளின் பெயரால், அன்பெனும் வலையால் நவீன பெண்களில் ஒரு சாரார் தாமே மனமுவந்து இந்த கூண்டுகளுக்குள் அடைபட்டு இன்பம் காண்கிறார்கள். ஆனால் தன்னுடைய சுதந்திரத்தை நாடும், தன்னடையாளத்தை விரும்பும் நுண்ணுணர்வுள்ள எந்தவொரு பெண்ணுக்கும் இத்தகு அமைப்பில் வாழ்வது கூண்டில் அடைபட்ட சிறுத்தையின் நிலை தான். அவர்களின் உள்ளம் தொடர்ச்சியாக சீற்றம் கொண்டபடியே இருக்கிறது. நுட்பமான வழிகளில் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள். தப்பி செல்வதற்கான வழிகளை தேடுகிறார்கள். அப்படி வழிகள் கிடைக்காத போதும், கிடைத்த வழிகளில் செல்ல துணிவில்லாத போதும் தங்களுக்கான அந்தரங்கமான கனவும் நினைவும் கலந்த ஒரு உலகத்தை உண்டாக்கி கொள்கிறார்கள். நினைவுகளாலான அவ்வுலகில் தொடர்ந்து உழன்று தன்னிரக்கமும் அரதியும் கொண்ட மாய இன்பத்தை நுகர்கிறார்கள். கனவிலிருந்து புறப்பட்ட மஞ்சள்நிற முகங்கள் நாவலின் நாயகி, லீலா இப்படிப்பட்ட நடுத்தர வர்க்கத்துக்கு பெண்களில் ஒருத்தி. அவளது கனவுகளே கதைகளாக சொல்லப்பட்டுள்ளது.

லீலாவுக்கு 46 வயது. கணவர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர். சொந்த வீடும் போதுமான வசதியும் உண்டு. குழந்தைகள் இல்லை. சிறுவயதில் லீலா ஆசைபட்டது போல அவளை படிக்க வைத்து ஆசிரியர் பணிக்கு அனுப்பாமல் திருமணம் செய்து வைக்கிறார்கள். சமூகத்தில் லீலாவின் இடமென்பது கௌரவமான குடும்பத்தலைவி. ஆனால் லீலாவின் மனதில் அவளது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைத்தமை, ஆழமான வடுவாக தங்கி விடுகிறது. எனவே உறவினர்களிடம் இயல்பாக முகம் கொடுத்து பேசுவதில்லை. அந்நிலையில் உறவினர் ஒருவர் வீட்டுக்கு செல்கையில் தூண்டப்படும் பழைய நினைவுகள் கடந்த காலத்தை அசைப்போடும் வாயில் ஒன்றை அவள் முன் திறக்கிறது. லீலாவே தன்னிலையில் தனக்கு முன்னுள்ளவரிடம் கூறுவது போன்ற அமைப்பில் எந்தெந்த நினைவுகளை தொடர்ச்சியாக எழுப்பி கொள்கிறேன் என்று சொல்வதாக நாவல் அமைந்துள்ளது. மொத்தம் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள கதை, இறுதியில் லீலாவே தான் மாட்டிக்கொண்டுள்ள நச்சுத்தன்மை மிக்க நினைவு சுழலை ஒப்புக்கொள்ளும் சுய வாக்குமூலத்துடன் முடிவடைகிறது.
முதல் பகுதி தவிர, பிற நான்கு பகுதிகளும் லீலாவின் இளம் பருவம் தொடங்கி பதின்வயது வரை நடந்த நிகழ்வுகளில் அவள் திரும்ப திரும்ப நினைத்து கொள்ளும் நான்கு முக்கியமான நினைவுகளை கூறுவதாக உள்ளது. நாவல் தொடக்கத்தில் தனது மூத்தவர்களிடம் இருந்து ஏராளமான பழங்கதைகளை கேட்கும் பழக்கமுள்ளதாக சொல்லும் லீலா, குறிப்பிட்ட இந்த நான்கு கதைகளை மட்டும் சொல்வது ஏன்? இவை நான்கும் முறையே சிறுவயதில் பாட்டி வீட்டிற்கு சென்ற அனுபவம், கணவன் – மனைவி சண்டையில் கோபித்து கொண்டு தலைமறைவான அம்மாவை அப்பாவுடன் தேடச் சென்ற கதை, பிரியதர்ஷினி என்ற பணக்கார வீட்டு பெண்ணுடனான ஓராண்டு நீடித்த குறுகிய கால நட்பு, உன்னி என்னும் இளைஞன் மேல் ஏற்படும் பதின்பருவ ஈர்ப்பு ஆகியவற்றை கதைகளாகக் கொண்டுள்ளன. இந்நான்கு நிகழ்வுகளில் ஒளிமிக்க பகுதியும் இருளின் சிறு துளியும் கலந்து வந்து கொண்டே இருக்கின்றன. நான்கு நினைவு தொகுப்புகளும் பசுமையாக இருப்பதன் காரணம், அவை ஒவ்வொன்றிலும் லீலாவின் அனுபவ உலகம் விரிவடைந்திருக்கிறது என்பதே. ஒவ்வொரு முறையும் அவளது அன்றாட வாழ்க்கையின் எல்லை உடைபட்டு புதிய அனுபவங்களை பெற்றிருக்கிறாள். சிறந்த உதாரணம், பிரியதர்ஷினியின் வருகை. பிரியதர்ஷினி என்ற நகரத்தை சேர்ந்த மேல்தட்டு நடுத்தர வர்க்கத்து இளம்பெண் ஒருத்தியின் வருகை கிராமப்புற சிறுமியரின் அனுபவ உலகத்தை மாற்றும் விதம் நாவலின் சிறந்த பகுதிகளில் ஒன்று.
லீலாவின் கதையை மற்றொரு கோணத்தில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்த சிறுமியரின் அக யதார்த்தத்தின் ஆவணமாக வாசிக்க முடிகிறது. வரலாற்று நூல்களின் வழியாக அறிய கிடைக்கும் வரலாறு, சமூக நிகழ்வுகளின் புறவயமான சித்திரத்தை மட்டுமே வழங்க முடியும். அதன் மறுபாதியாக குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரு நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் எதையெல்லாம் நினைவு கொண்டிருந்தார்கள் ? எவற்றிற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தார்கள்? என்ற கேள்விகளுக்கு பதிலான அக யதார்த்தத்தைக் காட்டும் ஆவணமாக புனைவுகளே செயல்படுகின்றன. அவ்வகை நாவல்களின் பட்டியலில் எண்பதுகளின் இறுதி/தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வாழ்ந்த சிறுமியர்களின் அக யதார்த்தத்தை காட்சிப்பூர்வமாக படம்பிடித்ததற்காக, கனவிலிருந்து புறப்பட்ட மஞ்சள்நிற முகங்கள் நாவலும் இடம்பெறும்.
*
தமிழில் நாவல்கள் தோன்றி ஒன்றரை நூற்றாண்டை நெருங்க இருக்கிறது. இக்காலக்கட்டத்தில் நாவல் வடிவத்தில் செவ்வியல் படைப்புகள் என்று கருதப்படும் பல படைப்புகள் தோன்றி நிலைபெற்றுவிட்டன. யதார்த்தவாதம், இயல்புவாதம், கற்பனாவாதம் என இலக்கிய வகைமைகள் ஒவ்வொன்றிலும் சாதனை என்று சொல்லத்தக்க படைப்புகள் வெளிப்பட்டுள்ளன. எனவே இன்றைய நாவலாசிரியரின் முன் பெரும் சவால் ஒன்றுள்ளது. நீண்ட இலக்கிய மரபு கொண்ட வாசகர் எளிதில் நிறைவுறுவதில்லை. புதிய கதைக்களங்களோ, முன்பே கூறப்பட்ட கதைக்களங்களின் மேலான ஒரு புதிய பார்வை கோணம் மட்டுமோ போதுமானதாக இருப்பதில்லை. நாவல் என்ற கலைவடிவம் எதிர்கொள்ள வேண்டிய விரிவான அக மோதல்களும் வரலாற்று தரிசனமுமே எழுதப்படும் புதிய நாவல்களை கலைத்தரம் கொண்டவையாக மாற்றுகின்றன.

சந்திரா தங்கராஜின் இருநாவல்களும் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல, நிகழ்கால சிக்கலை எதிர்கொள்ளத் தடுமாறும் மனங்கள் நினைவுகளில் தஞ்சமடைந்து வெவ்வேறு உணர்வுநிலைகளை எழுப்பிக் கொள்வதை காட்டுவதாலேயே கவனிக்கத்தக்கவையாக இருக்கின்றன. அதே நேரம் நாவல் நெடுக முதன்மை கதாப்பாத்திரம் மட்டுமே முன்னிலையில் உள்ள ஒருவரிடம் சொல்வது போல கதை அமைவதால் நாவலுக்குரிய விரிவு நிகழவில்லை. மேலும் குறிப்பிட்ட புலனறிதல்கள் எந்த நினைவைத் தூண்டுகிறது என்னும் இணைப்பை தெளிவாக காட்டும் போதே, மனித மனங்களின் சொல்ல முடியாத உணர்வுகளை வாசிப்பின் மூலம் உணர்ந்தறிய வாயில் திறக்கிறது. இருநாவல்களிலும் புலனறிதல்களுக்கும் நினைவு தொகுப்புகள் தூண்டப்படுவதற்குமான இணைப்பு மிக பலவீனமாக உள்ளன. எனவே இவ்விரண்டு நாவல்களும் கவனிக்கத்தக்கவை என்ற அளவில் நின்றுவிடுகின்றன.
*
