மஞ்சள் சுவர்த்தாள் – 2 – சார்லெட் பெர்கின்ஸ் கில்மேன்

(தமிழில்: விக்னேஷ் ஹரிஹரன்)

சார்லெட் பெர்கின்ஸ் கில்மேன்

4

நான் இதை ஏன் எழுத வேண்டும் என்று தெரியவில்லை.

எனக்கு எழுத விருப்பமில்லை.

என்னால் முடியவும் இல்லை.

ஜான் இவற்றையெல்லாம் அபத்தம் என்று நினைப்பான் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் நான் உணர்பவற்றையும் நினைப்பவற்றையும் எப்படியாவது வெளிப்படுத்தியாக வேண்டும் – அதில்தான் எத்தனை நிம்மதி!

ஆனால், அந்த நிம்மதியை விட அதற்காகச் செலவிடும் உழைப்பு தான் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

இப்போதெல்லாம் நான் பெரும்பாலான நேரம் மிகவும் சோம்பலாக உணர்கிறேன். அடிக்கடி படுத்தும் விடுகிறேன்.

நான் என் பலத்தை இழக்கக் கூடாது என்று ஜான் சொல்கிறான். அதற்காக என்னை மீன் எண்ணெய்யும், சத்து மருந்துகளும், ஏலும், ஒயினும் மென்மையாகச் சமைத்த இறைச்சியும் சாப்பிட வைக்கிறான்.

எனதருமை ஜான்! அவன் என் மீது அளப்பரிய அன்பு வைத்திருக்கிறான். நான் நோயுற்று இருப்பதை அவனால் தாங்க முடியவில்லை. அன்றொருநாள் நான் அவனிடம் மிகவும் தண்மையாகப் பேசி, என்னை ஹென்றியையும் ஜூலியாவையும் சென்று பார்க்க அனுமதிக்குமாறு கேட்டுப் பார்த்தேன்.

ஆனால், என்னால் அந்த பயணத்தை செய்ய முடியாது என்றும், செய்தாலும் அங்கு சென்ற பிறகு அதன் சோர்வை என்னால் தாங்க முடியாது என்றும் கூறிவிட்டான். நானும் என் தரப்பு நியாயங்களை அவ்வளவு சரியாக முன்வைக்கவில்லை – ஏனென்றால் நான் பேசி முடிப்பதற்குள்ளேயே அழத் தொடங்கிவிட்டேன்.

இப்போதெல்லாம் எனக்கு தெளிவாகச் சிந்திப்பதே பெரும் போராட்டமாக இருக்கிறது. எல்லாம் இந்த நரம்புத் தளர்ச்சியால்தான் என்று நினைக்கிறேன்.

அதற்குப் பிறகு என் அருமை ஜான்தான் என்னை அள்ளியெடுத்து, மாடிக்குச் சுமந்து சென்று, கட்டிலில் படுக்க வைத்து, நான் சோர்ந்து உறங்கும் வரை என் பக்கத்தில் அமர்ந்து எனக்காக ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான்.

அவன், நான்தான் அவனது செல்லம், அவனது ஒரே ஆறுதல், அவனது எல்லாம், அவனுக்காகவேனும் நான் என்னை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறான்.

என்னை இந்த நிலையிலிருந்து மீட்க என்னைத் தவிர வேறு யாராலும் முடியாது. நான் என் மன உறுதியையும் சுயக்கட்டுப்பாட்டையும் பயன்படுத்தி இதுபோன்ற வீண் கற்பனைகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்கிறான்.

இதில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், குழந்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அது இந்த அருவருப்பான சுவர்த்தாள் ஒட்டப்பட்ட அறையில் இருக்க வேண்டியதில்லை.

நான் மட்டும் இந்த அறையை எடுத்துக்கொள்ளாமல் இருந்திருந்தால், அந்த அருமையான குழந்தைதான் இதில் இருந்திருக்கும்! எத்தனை பெரிய ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறோம்! என் குழந்தையை, எல்லாம் மனதில் பதியும் வயதிலிருக்கும் அந்தச் சின்னக் குழந்தையை, உலகமே சொன்னாலும் இந்த அறையில் இருக்க அனுமதிக்க மாட்டேன்.

இதற்கு முன் இதை நான் இப்படி யோசித்ததே இல்லை, ஆனால் ஜான் என்னை இங்கே இருக்க வைத்திருப்பதும் ஒருவகையில் நல்லதுதான் போலும். ஒரு பச்சிளம் குழந்தையை விட நான் இதை எளிதாகத் தாங்கிக் கொள்ள முடியுமே!

இப்போதெல்லாம் அவர்களிடம் நான் இதைப்பற்றி பேசுவதே இல்லை – நானும் விவரமானவள்தான் – ஆனாலும் நான் அதைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அந்தச் சுவர்த்தாளில் எனக்கு மட்டுமே தெரியும், வேறு யாருக்குமே தெரியாத, இனி எப்போதும் தெரியப்போவதும் இல்லாத, ஏதேதோ வடிவங்கள் இருக்கின்றன.

அதன் வெளிப்புற அமைப்புக்குள் இருக்கும் மங்கலான வடிவங்கள் நாளுக்கு நாள் தெளிவாகிக் கொண்டே வருகின்றன.

அதே வடிவம்தான், ஆனால் அதன் எண்ணிக்கை கூடியிருக்கிறது.

அந்த அமைப்புக்குப் பின்னால் ஒரு பெண் குனிந்து என்னை ரகசியமாகப் பார்ப்பதுபோல் போல் இருக்கிறது. எனக்கு அது துளியும் பிடிக்கவில்லை.  இப்போதேல்லாம், ஜான் என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறேன்.

ஆனால் என் நிலையைப் பற்றி ஜானிடம் பேசுவதே கடினமாக இருக்கிறது. ஏனென்றால் அவன் மிக அறிவாளியாக இருக்கிறான்; மேலும் என்னை அபரிமிதமாகக் காதலிக்கிறான்.

இருந்தும் நேற்று இரவு அதை முயன்று பார்த்தேன்.

நிலவு சூரியனைப் போல் நாற்புறமும் ஒளிர்ந்திருந்தது.

சில சமயங்களில் எனக்கு அதைப் பார்க்கவும் பிடிப்பதில்லை. ஆனால் அது மெல்ல ஊர்ந்து, ஏதேனும் ஒரு ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்துவிடுகிறது.

ஜான் உறங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்பவும் எனக்கு மனமில்லை. எனவே அமைதியாக, அந்த அலையடிக்கும் சுவர்த்தாளின் மீது விழும் நிலவொளியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன் – என்னை அது பயமுறுத்தும் வரை.

அந்த வடிவங்களின் பின்னால் இருந்த மங்கலான உருவம், சுவர்த்தாளின் அமைப்பை உலுக்குவது போலவும், அதனுள்ளிருந்து அவள் வெளியேறத் துடிப்பது போலவும் தோன்றிற்று.

மெல்ல எழுந்து, அது மெய்யாகவே அசைகிறதா என்று தொட்டுப் பார்க்க அதன் அருகில் சென்றேன். நான் திரும்பி வந்தபோது ஜான் விழித்திருந்தான்.

“என்னடா குட்டி? இப்படி இரவில் நடந்து திரியாதே. ஜலதோஷம் பிடித்துவிடும்.” என்றான்.

அதுவே சரியான சமயம் என்று நினைத்து, என் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை, இந்த நிலையில் அவன் என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றாலே போதும் என்று கூறினேன்.

“ஏன் கண்ணே? நம் வாடகை ஒப்பந்தம் முடிய இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன. அதற்கு முன் நாம் எப்படி இங்கிருந்து போவது?” என்றான் அவன்.

“நம் வீட்டு மராமத்துப் பணிகள் இன்னும் முடியவில்லை. தற்போதயைச் சூழலில் நானும் இந்த ஊரை விட்டுச் செல்ல முடியாது. நிச்சயமாக உனக்கு ஏதேனும் ஆபத்து என்றால் செல்லலாம். ஆனால், உனக்குத் தெரிகிறதோ இல்லையோ கண்ணே, ஒரு மருத்துவனாக எனக்குத் தெரிகிறது – உண்மையில் நீ தேறி வருகிறாய். உன் உடம்பில் சதை பிடிப்பும், முகத்தில் பொலிவும் கூடியிருக்கிறது. நன்றாக உண்ணவும் செய்கிறாய். இப்போதுதான் எனக்கு நம்பிக்கையே வருகிறது.”

“என் எடை கொஞ்சம்கூட கூடவில்லை, அப்படியே நிலையாக இருக்கக்கூட இல்லை, மாறாகக் குறைந்திருக்கிறது” என்றேன். “மாலையில், நீ இருக்கையில், நான் நன்றாக உண்ணலாம். ஆனால் காலையில் நீ இல்லாதபோது நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது.”

“என் செல்லமே!” என்று கூறி என்னை கட்டியணைத்துக் கொண்டான், “உன் விருப்பம்போல் நீ நோயுற்றிருக்கலாம்! ஆனால் இன்று இந்த வெள்ளி மின்னும் பொழுதை நாம் கொஞ்சம் உறங்கி பயன்படுத்திக்கொள்வோம். மற்றதைக் காலையில் பேசுவோமே!”

“அப்படியானால் நீ சம்மதிக்கமாட்டாயா?” என்று நான் சோகமாகக் கேட்டேன்.

“என்னால் முடியாது கண்ணே! இன்னும் மூன்றே வாரங்கள்தான், பிறகு ஜென்னி வீட்டைச் சரிசெய்யும் வரை வேண்டுமானால் நாம் சில நாட்கள் ஒரு சிறு சுற்றுலா சென்று வரலாம். நிஜமாகவே இங்கு நீ தேறித்தான் வருகிறாய் அன்பே!”

“உடலளவில் வேண்டுமானால் தேறியிருக்கலாம் -” என்று தொடங்கி, சட்டென்று நிறுத்திவிட்டேன். அவன் நிமிர்ந்தமர்ந்து என்னை கடுமையாகப் பார்த்தான். என்னால் அதற்கு மேல் ஒரு சொல்கூட பேச முடியவில்லை.

“என் அன்பே” என்றான், “நான் உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன், எனக்காக, நம் குழந்தைக்காக, உனக்காகவும் கூட, இந்த எண்ணத்தை விட்டுவிடு; இதை ஒரு கணமும் உன் மனதில் வளர விடாதே. உன்னைப் போன்ற மன அமைப்பு கொண்டவர்களுக்கு இதைவிட ஆபத்தானது வேறு எதுவும் கிடையாது. இது ஒரு பொய்யான, முட்டாள்தனமான கற்பனை. ஒரு மருத்துவனாகவேனும் நான் சொல்வதை நம்ப மாட்டாயா?”

அதற்குப் பிறகு நான் அதைப் பற்றிப் பேசவேயில்லை. விரைவில் நாங்கள் உறங்கச் சென்றோம். அவன் நான் முதலில் உறங்கிவிட்டேன் என்று நினைத்தான், ஆனால் இல்லை – அந்த சுவர்த்தாளின் முன் அமைப்பும் பின் அமைப்பும் ஒன்றிசைந்து நகர்கின்றனவா அல்லது தனியாக இயங்குகின்றனவா என்று தீர்மானிக்க முயன்றபடி பல மணி நேரம் அப்படியே படுத்துக் கிடந்தேன்.

பகல் வெளிச்சத்தில், இதுபோன்ற அமைப்புகளில் வெளிப்படும் தொடர்ச்சியற்ற, விதிகளுக்கு உட்படாத தன்மை, இயல்பான மனதுடைய எவருக்கும் கடும் எரிச்சலையே ஊட்டும்.

அதன் நிறமே அருவருப்பானதுதான், நம்ப முடியாததுதுதான், எரிச்சலூட்டக்கூடியதுதான், ஆனால் அதன் அமைப்போ நம்மை சித்திரவதை செய்வது.

அதை நீங்கள் புரிந்து கொண்டுவிட்டீர்கள் என்று நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் அதைப் பின்தொடர்ந்து செல்லும்போதே, அது தலைகீழாக ஒரு குட்டிக்கரணம் அடித்து உங்களை ஸ்தம்பித்து நிற்க வைக்கும். உங்களை முகத்தில் அறைந்து, கீழே தள்ளி, மிதிக்கும். அது ஒரு கெட்ட கனவைப் போன்றது.

அதன் வெளிப்புற அமைப்பு காளான்களை நினைவுபடுத்தக்கூடிய ஆடம்பரமான அராபியக் கலை பாணியில் அமைந்தது. உங்களால் தொடர்ச்சியாக, முடிவில்லாத சுழற்சியாக, அரும்பி முளைக்கும் நாய்க்குடைகளை கற்பனை செய்ய முடிந்தால், அது போன்றதுதான் இதுவும்!

அதாவது, சில நேரங்களில்!

இந்த சுவர்த்தாளில் உள்ள, என்னைத்தவிர பிறர் எவரும் கவனிக்காத, ஒரு பிரத்தியேகமான விசித்திரம், அது வெளிச்சத்திற்குத் தகுந்தாற்போல் மாறக்கூடியது என்பது.

சூரிய ஒளி கிழக்கு ஜன்னல் வழியாகப் பாயும்போது – அந்த முதல், நீண்ட, நேரிய கிரணத்தை நான் தினமும் எதிர்பார்த்திருப்பேன் – அது உருமாறும் வேகத்தை என்னால் நம்பவே முடிவதில்லை.

அதனால் தான் நான் அதை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

நிலவொளியிலோ – நிலவு, இருக்கும் இரவுகளில் முழுமையாக ஒளி வீசும் – இது அதே சுவர்த்தாள்தானா என்று கண்டுபிடிக்கவே முடியாது.

இரவொளியில் – அது அந்திக் கருக்கலோ, மெழுகுவர்த்தி வெளிச்சமோ, விளக்கு வெளிச்சமோ, அல்லது அவை அனைத்தையும்விட மோசமான நிலவொளியோ – அது கம்பிகளாக மாறிவிடுகிறது! அந்த வெளிப்புற அமைப்பைத்தான் சொல்கிறேன். அதற்குப் பின்னால் அந்தப் பெண் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறாள்.

இத்தனைக் காலமாக அது என்னவென்று எனக்குப் புரியவில்லை – அந்த உட்புற அமைப்பின் பின்னால் தெரியும் மங்கலான உருவத்தைச் சொல்கிறேன் – ஆனால் இப்போது அது ஒரு பெண் என்பது எனக்கு உறுதியாகத் தெரிகிறது.

பகல் வெளிச்சத்தில், அவள் அமைதியாக, அடங்கியிருக்கிறாள். அந்த வெளிப்புற அமைப்புதான் அவளை அடக்கி வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதன் குழப்பமான அமைப்பு என்னையே மணிக்கணக்கில் அமைதியாக இருக்க வைக்கிறது.

நான் இப்போதெல்லாம் அடிக்கடி படுத்து விடுகிறேன். அது நல்லதுதான் என்று ஜான் சொல்கிறான். நான் முடிந்தவரை உறங்கவேண்டும் என்கிறான்.

உண்மையில், அவன்தான் இந்த பழக்கத்தைத் தொடங்கி வைத்தான். ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னும் என்னை ஒரு மணி நேரம் படுக்கப் பழக்கினான்.

இது ஒரு கெட்ட பழக்கம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால், நான் தூங்குவதே இல்லை.

அதன் விளைவாக நான் விழித்திருப்பதை மறைக்க மற்றவர்களை ஏமாற்ற வேண்டியிருக்கிறது – அய்யோ! நிச்சயமாக இல்லை!

உண்மையைச் சொன்னால், எனக்கு இப்போதெல்லாம் ஜானைப் பார்க்கவே கொஞ்சம் பயமாக இருக்கிறது.

அவன் சில நேரங்களில் விசித்திரமாக நடந்துகொள்கிறான். ஜென்னியின் பார்வையில்கூட ஏதோ ஒரு விளக்க முடியாத சாயல் தெரிகிறது.

சில நேரங்களில், ஒரு அறிவியல் பூர்வமான ஊகமாக, எனக்கு இப்படித் தோன்றுகிறது: ஒருவேளை இதுவும் அந்த சுவர்த்தாளின் வேலைதானோ!

ஜானுக்குத் தெரியாமல் நான் அவனைக் கவனித்திருக்கிறேன், மிக இயல்பான காரணங்களைச் சொல்லிக்கொண்டு திடீரென்று அவன் எதிர்பார்க்காத நேரத்தில் எங்கள் அறைக்குள் நுழைந்து, அவன் அந்த சுவர்த்தாளை உற்றுப் பார்ப்பதை கையும் களவுமாகப் பிடித்துமிருக்கிறேன்! ஜென்னியையும் தான். ஜென்னி ஒருமுறை அதைத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தபோது நான் அவளைப் பிடித்துவிட்டேன்.

நான் அறைக்குள் இருப்பதை அறியாத அவளிடம், மிக அமைதியான குரலில், கட்டுப்படுத்தப்பட்ட தண்மையான முறையில், அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்று கேட்டபோது, ஏதோ கையும் களவுமாக மாட்டிக்கொண்டவள் போல் பதட்டத்துடன் திரும்பி, கோபமாக, “ஏன் இப்படி பயமுறுத்துகிறீர்கள்!” என்று கேட்டாள்.

பிறகு, அந்த சுவர்த்தாள் தொடும் எல்லாவற்றிலும் கறை படிவதாகவும், ஜானின் உடைகள், என்னுடையவை என எல்லா துணிகளிலும் மஞ்சள் கறைகளைக் கண்டதாகவும், நாங்கள் இன்னும் கொஞ்சம் கவனமாகவாவது இருக்க வேண்டும் என்றும் கூறினாள்!

எவ்வளவு கள்ளமற்ற பதில் இல்லையா? ஆனால் அவள் அந்த அமைப்பைத்தான் படிக்க முயன்றுகொண்டிருந்தாள் என்று எனக்குத் தெரியும். என்னைத்தவிர வேறு யாராலும் அதைப் புரிந்துகொள்ள முடியாது என்பதும் எனக்கு உறுதியாகத் தெரியும்!

5

வாழ்க்கை முன்பை விட இப்போதுதான் சுவாரஸ்யமாக இருக்கிறது. பார்க்கப்போனால், நான் எதிர்நோக்கவும், காத்திருக்கவும், கண்காணிக்கவும் ஏதோ ஒன்று இருக்கிறதே! நான் இப்போது உண்மையாகவே முன்பைவிட நன்றாகச் சாப்பிடுகிறேன், அமைதியாக இருக்கிறேன்.

என் முன்னேற்றத்தைக் கண்டு ஜான் மிகவும் மகிழ்கிறான்! ஒருநாள் அவன் லேசாகச் சிரித்தபடி, உன் சுவர்த்தாளையும் மீறி நீ செழிப்பாக  இருப்பது போல் தெரிகிறதே! என்றான்.

நான் அதை ஒரு சிரிப்புடன் கடந்துவிட்டேன். இந்த செழிப்பே அந்த சுவர்த்தாளால்தான் என்று அவனிடம் சொல்லும் உத்தேசம் எனக்கு இல்லை – அவன் என்னைக் கேலி செய்வான். என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லக்கூட முடிவு செய்துவிடலாம்.

அதைக் கண்டுபிடிக்கும் வரை நான் இங்கிருந்து போகக் கூடாது. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அது போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

6

நான் முன்னெப்போதையும்விட நலமாக உணர்கிறேன்! நான் இரவில் உறங்குவதில்லை – மாற்றங்களை கவனிப்பது மிகச் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் பகலில் நிறைய உறங்குகிறேன்.

பகலில் அது சலிப்பூட்டுவதாகவும் குழப்பமானதாகவும் மாறிவிடுகிறது.

காளான்களில் எப்போதும் புதிய அரும்புகளும், புதிய மஞ்சள் நிறங்களும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. உளப்பூர்வமாக முயன்றும், என்னால் அவற்றைக் எண்ணிவிட முடியவில்லை.

அது மிக விசித்திரமான மஞ்சள் நிறம் கொண்டது, அதான் அந்த சுவர்த்தாள்! அது நான் என் வாழ்வில் பார்த்த அத்தனை மஞ்சள் நிறப் பொருட்களையும் நினைவூட்டுகிறது. பட்டர்கப் மலர்கள் போன்ற அழகியவற்றை அல்ல, பழைய, அருவருப்பான, அசிங்கமான மஞ்சள் நிறப் பொருட்களை.

அந்த சுவர்த்தாளில் வேறொன்றும் இருக்கிறது – அதன் மணம்! நாங்கள் அறைக்குள் நுழைந்த கணத்திலேயே நான் அதை உணர்ந்தேன்.  ஆனால் காற்றும் சூரிய ஒளியும் இருக்கும் நாட்களில் அது அவ்வளவு மோசமாக இல்லை. இப்போது ஒரு வாரமாகப் பனியும் மழையுமாக இருக்கிறது, அதனால் ஜன்னல்கள் திறந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்த மணம் இங்கேயே இருக்கிறது.

வீடு முழுவதும் ஊர்கிறது.

சாப்பாட்டு அறையில் மிதக்கிறது, வரவேற்பறையில் ஒளிந்திருக்கிறது, கூடத்தில் பதுங்கியிருக்கிறது, படிக்கட்டுகளில் எனக்காகக் காத்திருக்கிறது.

அது என் முடியில் ஏறுகிறது.

நான் குதிரையேற்றத்திற்குச் செல்கையில், திடீரென்று தலையைத் திருப்பினால் – அங்கேயும் இருக்கிறது!

மிக விசித்திரமான மணம் அது! அது என்ன மணம் என்று கண்டறிய நான் பல மணிநேரத்தை செலவழித்திருக்கிறேன்.

அதுவொன்றும் அவ்வளவு மோசமாக இல்லை – தொடக்கத்தில். நான் நுகர்ந்ததிலேயே மிக நுட்பமான, நீட்டித்து நிலைக்கக்கூடிய மணம் அதுதான்.

ஆனால் இந்த ஈரமான வானிலையில் மிக மோசமாகத் தெரிகிறது. இரவில் விழித்துப் பார்த்தால் என் மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது.

தொடக்கத்தில் தொந்தரவாகத்தான் இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த வாசனையை அடைய வீட்டையே கொளுத்திவிடலாமா என்று கூட சிந்தித்தேன்.

ஆனால் இப்போது அதற்குப் பழகிவிட்டேன்.  அதைப் பற்றி என்னால் சொல்ல முடிந்த ஒரே விஷயம், அது அந்த சுவர்த்தாளின் நிறத்தைப் போன்றது என்பதுதான்! அதுவொரு மஞ்சள் வாசனை.

இந்தச் சுவரில், கீழே, தரைப் பலகைக்கு அருகில், ஒரு விசித்திரமான அடையாளம் இருக்கிறது. அறையைச் சுற்றி நீளும் ஒரு கறை. அறையிலிருக்கும் அத்தனை அறைக்கலன்களுக்குப் பின்னும் செல்லும், கட்டிலைத் தவிர, தேய்த்துச் சீர்செய்யப்பட்டது போன்ற நீண்ட, சமமான, நேரிய கறை.

அது எப்படி செய்யப்பட்டது? யார் செய்தார்கள்? எதற்காகச் செய்தார்கள்? என்று வியக்கிறேன். சுற்றிச் சுற்றிச் சுற்றி – சுற்றிச் சுற்றிச் சுற்றி – யப்பா! தலையே சுற்றுகிறது!

7

இறுதியில் நான் உண்மையாகவே ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டேன்.

இரவில் அதன் மாற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து, இறுதியாக நான் கண்டுபிடித்துவிட்டேன்.

முன்பக்க அமைப்பு உண்மையாகவே அசைகிறது – அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை! ஏனென்றால் அதைப் பின்னால் இருக்கும் பெண்தான் அசைக்கிறாள்!

சில சமயங்களில் பின்னால் பல பெண்கள் இருப்பதாகத் தோன்றும், ஆனால் சில சமயங்களில் ஒரு பெண்தான் இருக்கிறாள். அவள் வேக வேகமாக ஊர்ந்து செல்வதால்தான் அந்த சுவர்த்தாள் அசைகிறது.

அதன் பிரகாசமான இடங்களில் அவள் சலனமின்றி இருக்கிறாள். ஆனால் இருண்ட முனைகளிலோ அவள் சிறைக்கம்பிகளை பலமாக உலுக்குகிறாள்.

ஆனால் அவள் எப்போதும் அதிலிருந்து வெளியேறவே முயல்கிறாள். ஆனால் யாராலும் அந்த இறுக்கி நெரிக்கும் அமைப்பிலிருந்து வெளியேறவே முடியாது. அதனால்தான் அதில் இவ்வளவு தலைகள் இருக்கிறதென்று நினைக்கிறேன்.

அவை வெளியேற முயல்கின்றன, ஆனால் அந்த அமைப்பு அவற்றின் கழுத்தை நெரித்து, தலைகீழாகத் தொங்கவிட்டு, அவற்றின் கண்களில் வெள்ளை படரச் செய்கிறது!

அந்தத் தலைகள் மூடப்பட்டாலோ அகற்றப்பட்டாலோகூட அது இவ்வளவு மோசமாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

8

அந்தப் பெண் பகலில் வெளியேறிவிடுகிறாள் என்று நினைக்கிறேன்!

ஏனென்று சொன்னால் – ரகசியமாக – நான் அவளைப் பார்த்திருக்கிறேன்!

என் அறையின் அத்தனை ஜன்னல்களின் வழியாகவும் அவளை என்னால் பார்க்க முடிகிறது!

அவளேதான்! எனக்குத் தெரியும்! ஏனென்றால் அவள் எப்போதும் ஊர்ந்துதான் செல்கிறாள். பெரும்பாலான பெண்கள் பகலில் ஊர்வதில்லை.

நிழலடர்ந்த அந்த நீண்ட பாதையில் அவள் மேலும் கீழும் ஊர்ந்துகொண்டே இருக்கிறாள். இருண்ட திராட்சைப் பந்தல்களின் வழியே அவள் மொத்த தோட்டத்தையும் சுற்றி ஊர்ந்து செல்வதை நான் பார்க்கிறேன்.

மரங்களடர்ந்த அந்த நீண்ட சாலையிலும் அவள் ஊர்ந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் குதிரை வண்டிகள் வந்தால் அவள் பிளாக்பெர்ரி கொடிகளுக்கு அடியில் சென்று ஒளிந்துகொள்வாள்.

அவளையும் குறை சொல்ல முடியாது. பகலில் ஊர்ந்து செல்கையில் மாட்டிக்கொள்வது மிகவும் அவமானமானது!

பகலில் நான் அவ்வாறு ஊர்கையில் எப்போதும் கதவைத் தாழிட்டுக்கொள்வேன். இரவில் அதைச் செய்ய முடியாது, ஜான் சந்தேகப்படத் தொடங்கிவிடுவான்.

மேலும் ஜான் இப்போதெல்லாம் மிக விசித்திரமாக நடந்துகொள்கிறான். நான் அவனைக் கோபப்படுத்த விரும்பவில்லை. அவன் வேறு அறைக்குச் சென்றால்கூட நன்றாக இருக்கும். தவிர, இரவில் என்னைத்தவிர வேறு யாரும் அந்தப் பெண்ணை வெளியே கொண்டுவருவதை நான் விரும்பவில்லை.

நான் அடிக்கடி யோசிப்பதுண்டு, ஒரே சமயத்தில் அவளை எல்லா ஜன்னல்கள் வழியாகவும் பார்க்க முடியுமா என்று.

ஆனால், நான் எவ்வளவு வேகமாகத் திரும்பினாலும், என்னால் ஒரு நேரத்தில் ஒரு ஜன்னல் வழியாகதானே பார்க்க முடிகிறது.

தவிர நான் கண்கொட்டாது பார்த்துக்கொண்டே இருந்தாலும், நான் திரும்பும் வேகத்தை விட வேகமாக அவளால் ஊர்ந்து செல்ல முடியலாமே!

சில சமயம், திறந்தவெளிகளில், வேகக் காற்றில் நகரும் மேக நிழல் போல், அவள் வேகமாக ஊர்ந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன்.

9

அந்த மேல் அமைப்பை கீழ் அமைப்பிலிருந்து அகற்றிவிட முடிந்தாலே போதும்! நான் சிறுகச் சிறுக அதைச் செய்ய முயல்கிறேன்.

இன்னொரு வேடிக்கையான விஷயத்தையும் கண்டுபிடித்துள்ளேன். ஆனால் இம்முறை நான் அதைச் சொல்லப்போவதில்லை. மற்றவர்களை அளவுக்கு அதிகமாக நம்புவதும் அவ்வளவு சரியில்லை.

இன்னும் இரண்டு நாட்களில் இந்த சுவர்த்தாளை அகற்றியாக வேண்டும். ஜான் அதைக் கவனிக்கத் தொடங்கிவிட்டான் என்று தோன்றுகிறது. அவன் பார்வையே எனக்குப் பிடிக்கவில்லை.

மேலும் அவன் ஜென்னியிடம் என்னைப் பற்றி தொழில்முறையாக விசாரிப்பதையும் நான் கேட்டேன். அவள் எனக்கு ஒரு நற்சான்றிதழ் கொடுத்தாள்.

நான் பகலில் நிறைய உறங்குவதாகச் சொன்னாள்.

நான் எவ்வளவு அமைதியாக இருந்தபோதும், இரவில் நான் சரியாக உறங்குவதில்லை என்பது ஜானுக்குத் தெரியும்.

அவன் என்னிடமும் பல கேள்விகளைக் கேட்டான் – மிகவும் அன்பாகவும் கனிவாகவும் இருப்பதுபோல் நடித்தான்.

ஏதோ என்னால் அவனை ஊடுருவிப் பார்க்க முடியாதது போல!

ஆனால் இதில் எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை – மூன்று மாதங்களாக இந்தச் சுவர்த்தாளின் கீழ் உறங்குபவன் அவன்.

இது என் ஆர்வத்தை மட்டுமே தூண்டுகிறது. ஆனால் ஜானும் ஜென்னியும் இந்த சுவர்த்தாளால் மறைமுகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

10

ஆஹா! இன்றுதான் கடைசி நாள். ஆனால் இது போதுமானது. ஜான் இரவு நகரத்திலேயே தங்கிவிட்டான், இன்று மாலை வரை அவன் வரமாட்டான்.

ஜென்னி இன்றிரவு என்னுடன் தூங்க விரும்புவதாகச் சொன்னாள் – தந்திரக்காரி! ஆனால் நான் தனியாக உறங்கினால்தான் எனக்கு நல்ல ஓய்வு கிடைக்கும் என்று அவளிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டேன்.

அது ஒரு சாமர்த்தியமான செயல்தான், உண்மையில் நான்தான் இரவில் சிறிதும் தனியாக இருப்பதில்லையே! நிலவொளி வந்தவுடன், அந்தப் பாவப்பட்ட பெண் ஊர்ந்து-ஊர்ந்து சுவர்த்தாளை அசைக்கத் தொடங்க, நான் அவளுக்கு உதவ ஓடிவிடுகிறேன்.

நான் இழுக்க, அவள் அசைக்க; நான் அசைக்க, அவள் இழுக்க; விடியும் முன் நாங்கள் சில கெஜ நீளத்திற்கு அந்தச் சுவர்த்தாளை உரித்துவிடுகிறோம்.

என் உயரத்திற்கு, அறையின் பாதி சுற்றளவிற்கு ஏற்கனவே உரித்துவிட்டோம்.

ஆனால் விடிந்ததும், மீதமுள்ள அந்தக் கொடூரமான அமைப்பு என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தபோது, அதை இன்றே முடித்துக் கட்டுவதாகச் சபதம் ஏற்றேன்!

நாங்கள் நாளை இங்கிருந்து புறப்படுகிறோம். அதனால் என் அறைக்கலன்களை எல்லாம் மீண்டும் பழையபடி கீழே இறக்கி வைக்கிறார்கள்.

ஜென்னி ஆச்சரியத்துடன் சுவரைப் பார்த்தபோது, வெறுமனே, அந்த சுவர்த்தாளின் மீது ஏற்பட்ட வெறுப்பால்தான் இப்படிச் செய்தேன் என்று மகிழ்ச்சியாகச் சொன்னேன்.

அவள் சிரித்துவிட்டுத் தானும் இதைத்தான் செய்திருப்பேன், ஆனால் நான் சோர்வடையக் கூடாது என்று கூறினாள்.

அந்த நொடியில் அவள் எப்படித் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினாள்!

ஆனால் நான் இங்கே இருக்கும்வரை, என்னைத்தவிர வேறு யாரும் இந்தச் சுவர்த்தாளைத் தொட முடியாது – உயிரோடு இருப்பவர்கள்!

மாலையில் அவள் என்னை அறையை விட்டு வெளியேற்ற முயன்றாள் – அது வெளிப்படையாகவே தெரிந்தது! ஆனால் இப்போதுதான் அறை அமைதியாகவும் காலியாகவும் சுத்தமாகவும் இருப்பதாகவும், நான் முடிந்தவரை இங்கு உறங்கப்போவதாகவும், இரவு உணவுக்குக்கூட என்னை எழுப்ப வேண்டாம் என்றும், நான் விழித்ததும் அழைப்பதாகவும் கூறி அனுப்பிவிட்டேன்.

எனவே இப்போது அவள் போய்விட்டாள், வேலைக்காரர்களும் போய்விட்டார்கள், பொருட்களும் போய்விட்டன, அந்த அறையில் ஆணியடித்து நிறுத்தப்பட்ட அந்தப் பெரிய கட்டிலையும், அதில் நாங்கள் போட்டு வைத்த மெத்தையையும் தவிர இங்கு வேறு எதுவும் இல்லை.

இன்றிரவு நாங்கள் கீழறையில் தூங்கி, நாளை படகில் ஊருக்குப் புறப்படுகிறோம்.

இந்தக் காலியான அறையை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அந்தக் குழந்தைகள் இதன் மூளையை எப்படிக் கிழித்தார்கள்!

இந்தக் கட்டில்தான் எவ்வளவு தேய்ந்திருக்கிறது!

ஆனால் நான் வேலையைத் தொடங்க வேண்டும்.

நான் கதவைப் பூட்டி, சாவியைக் கீழே, முன்வாசல் பாதையில் எறிந்துவிட்டேன்.

நான் வெளியே செல்ல விரும்பவில்லை, ஜான் வரும் வரை வேறு யாரும் உள்ளேயும் வரக்கூடாது.

நான் அவனை ஆச்சரியப்படுத்த விரும்புகிறேன்.

ஜென்னிக்குக்கூட தெரியாமல் நான் ஒரு கயிறு கொண்டுவந்திருக்கிறேன். ஒருவேளை அந்தப் பெண் வெளியே வந்தவுடன் தப்பியோட முயன்றால், என்னால் அவளைக் கட்டி வைக்க முடியும்!

ஆனால் ஏறி நிற்க எதுவுமில்லாமல் என்னால் மீதமுள்ளத் தாளை எட்டவே முடியாது என்பதை நான் மறந்துவிட்டேன்!

இந்தக் கட்டிலோ நகரவே நகராது!

என்னுடல் அயர்ச்சியில் மரத்துப்போகும்வரை அந்தக் கட்டிலை தூக்கவும் தள்ளவும் முயன்றேன். பிறகு, ஆத்திரத்துடன் அதன் ஒரு மூலையைக் கடித்தேன் – ஆனால் என் பற்கள்தான் காயப்பட்டன.

பிறகு தரையில் நின்றுகொண்டே என்னால் எட்ட முடிந்த வரை இருந்த சுவர்த்தாள் அத்தனையையும் உரித்தெடுத்தேன். அது மோசமாக ஒட்டிக்கொள்கிறது – அதையும் அந்த அமைப்பு ரசிக்கிறது! அந்த நெரிக்கப்பட்ட தலைகளும், பிதுங்கிய விழிகளும், ஊரும் காலங்களும் என்னை ஏளனம் செய்கின்றன!

ஏதேனும் விபரீதமாகச் செய்துவிடும் அளவுக்கு எனக்குக் கோபம் வருகிறது. ஜன்னலிலிருந்து கீழே குதிப்பது ஒரு நல்ல செயலாக இருக்கும். ஆனால் அதன் கம்பிகள் மிகவும் பலமானவை, முயன்று பிரயோஜனம் இல்லை.

தவிர நான் அப்படிச் செய்ய மாட்டேன். நிச்சயமாக மாட்டேன். அது தவறானது என்பதும், தவறாகப் புரிந்துகொள்ளப்படும் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.

எனக்கு ஜன்னல் வழியே பார்க்கக் கூடப் பிடிக்கவில்லை – அங்கே ஏராளமான ஊரும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேகவேகமாக ஊர்ந்து செல்கிறார்கள்.

அவர்கள் அனைவருமே என்னைப் போல் சுவர்த்தாளிலிருந்து வெளியே வந்தவர்கள்தானா?

ஆனால் நானோ நான் ஒளித்து வைத்திருந்த கயிற்றாலே இப்போது பலமாகக் கட்டப்பட்டிருக்கிறேன் – என்னை நீங்கள் வெளியே, அந்தச் சாலையில், பார்க்க முடியாது.

இரவு வந்தால் நான் மீண்டும் அந்த அமைப்புக்குப் பின்னால் செல்ல வேண்டி வரும் என்று நினைக்கிறேன், அது மிகவும் சிரமம்!

இந்தப் பெரிய அறையில் என் விருப்பம்போல் ஊர்வது எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது!

நான் வெளியே செல்ல விரும்பவில்லை. ஜென்னி அழைத்தாலும் போகமாட்டேன்.

வெளியே சென்றால் தரையில் ஊர்ந்து செல்ல வேண்டும். அங்கோ மஞ்சளுக்கு பதிலாக எல்லாமே பச்சையாக இருக்கிறது.

ஆனால் இங்கோ, என்னால் தரையில் சுமூகமாக ஊர்ந்து செல்ல முடியும். சுவரைச் சுற்றியுள்ள அந்த நீண்ட கறையில் என் தோள்கள் சரியாகப் பொருந்துகின்றன. எனவே நான் வழி தவறவும் வழியில்லை.

அட! கதவருகே ஜான் நிற்கிறான்!

ஏய் இளைஞனே! உன்னால் அதைத் திறக்க முடியாது! வீணாக முயலாதே!

அவன் எப்படிக் கத்துகிறான்! கதவை இடிக்கிறான்!

இப்போது அவன் கோடாரியைக் கொண்டுவரச் சொல்லிக் கூவுகிறான்.

அந்த அழகான கதவை உடைப்பது எவ்வளவு மோசமான செயல்!

மிக மென்மையான குரலில், “அன்பே ஜான்! சாவி முன்வாசல் படிகளுக்கு அருகில், ஒரு வாழை இலையின் அடியில் இருக்கிறது!” என்றேன்.

அது சில நொடிகள் அவனை அமைதிப்படுத்தியது.

பிறகு அவன் மிகவும் தாழ்ந்த குரலில், “கதவைத் திற, என் கண்ணே!” என்றான்.

“என்னால் முடியாது” என்றேன். “சாவி முன்வாசல் கதவுக்கு அருகில் ஒரு வாழை இலையின் அடியில் இருக்கிறது!”

பிறகு, நான் அதையே, மீண்டும் மீண்டும், பலமுறை, மிக மென்மையாகவும் பொறுமையாகவும் சொன்னேன். நான் அதையே திரும்பத் திரும்பச் சொன்னபோது அவன் வேறு வழியின்றி கீழே சென்று பார்க்க வேண்டியதாயிற்று. அவன் அதைக் கண்டுபிடித்தான். பிறகு உள்ளே வந்தான். ஆனால் உள்ளே வந்ததும் கதவருகிலேயே உறைந்து நின்றுவிட்டான்.

“என்ன ஆயிற்று?” என்று அலறினான். “ஐயோ கடவுளே! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்!”

நான் அதேபோல் தொடர்ந்து ஊர்ந்து கொண்டிருந்தேன். ஆனால் என் திரும்பி அவனைப் பார்த்தேன்.

“நான் வெளியே வந்துவிட்டேன்!” என்றேன், “உன்னையும் ஜேனையும் மீறியும் வெளியே வந்துவிட்டேன்”

“பெரும்பாலான சுவர்த்தாளையும் கிழித்துவிட்டேன். உன்னால் என்னை மீண்டும் உள்ளே தள்ள முடியாது!”

இப்போது எதற்காக அந்த மனிதன் மயங்கி விழ வேண்டும்? ஆனால் அவன் விழுந்துவிட்டான். அதுவும் சுவரை ஒட்டி நான் ஊரும் பாதையிலேயே விழுந்துவிட்டான். எனவே நான் ஒவ்வொரு முறையும் அவன்மேல் ஏறித்தான் ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது!

*

மஞ்சள் சுவர்த்தாள் 1: வாசிக்க

*

விக்னேஷ் ஹரிஹரன்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *