சாப(பாவ)க் கதைகள் – கிருஷ்ணமூர்த்தி
(ப்ரிம்யா கிராஸ்வினின் திருப்பண்டம் சிறுகதைத் தொகுப்பு குறித்து)

கடைசியாக ஒருமுறை செய்ய விரும்பும் பாவமும், வழிவழியாக தொடரும் சாபங்களும் அன்ராடத்தோடு இணைகின்றன. அவை எதிர்காலக் கனவுகளை அர்த்தமிழக்கச் செய்கின்றன. கடந்தகாலத்திற்குள் சிக்கவைத்து விளையாடுகின்றன. கைவிடப்பட்ட காலத்தின் இடையில் வாழும் கதாபாத்திரங்கள் தங்களின் கதையைப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நம்பிக்கைகளின் துணைகொண்டு மீண்டெழ விரும்புகிறார்கள். அப்படியான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் பேசும் கதைகள் நிரம்பிய தொகுப்பு ப்ரிம்யா கிராஸ்வின் எழுதியிருக்கும் “திருப்பண்டம்”. பத்து சிறுகதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
பாவத்தையும், சாபத்தையும் சுமக்கும் மனிதர்களை மட்டும் இக்கதைகள் பேசுவதில்லை. மாறாக அவர்களால் பாதிக்கப்படும், அவர்களைப் பாதிக்கும் சுற்றத்தையும் சேர்த்தே பேசியிருப்பது பாராட்டுதலுக்குரியது. தொகுப்பின் தலைப்புக் கதையே நல்ல ஒரு உதாரணம். நண்பனுக்காக கோயிலின் திருப்பண்டத்தை திருட நினைக்கிறான் நாயகன். தன் திருட்டுத் தொழிலைக் கைவிட்டுவிட்டு குடும்பத்தோடு வாழ நினைக்கும் ஒருவன் செய்ய முற்படும் கடைசி திருட்டு. இணைகோடாக அவனுடைய குடும்ப அமைப்பையும் அதனூடாக வாழ விரும்பும் நாயகனின் வேட்கையும் சொல்லப்படுகிறது. திருப்பண்டத்தின் மீதான மீமாயக் கதைகள் அவன் வாழ்வு செல்லும் சடுதியான நிலைக்கு வலு சேர்க்கின்றன. கதையின் இறுதி ஒரு fantasy ஆக அமையப்பெறுகிறது. ஆனால் அவை பாவத்தின் சம்பளமாக அர்த்தப்படுகிறது.
கிறித்துவம் பாவத்தை ஒரு கருத்தியலாகக் கொள்கிறது. பாவமும் தண்டனையும் இணைகோடானவை. ஒன்றை ஒன்று மேவியே வாழ்வை உருக்குலைக்கும். இறை நம்பிக்கையும் மன்றாடலும் அவர்களுக்கான தீர்வாகிறது. இக்கதையில் வரும் திருடன் அடிப்படையான கேள்வியொன்றை எழுப்புகிறான். பாவம் செய்வதற்கான தூண்டுதல் எதுவாக அமைகிறது ? பாவமும் தண்டனையும் என்று ஒரு சுற்றை முடித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மனம் மீண்டும் மற்றொரு சுழலுக்கு நகர்வது எங்ஙணம் ? இந்தக் கேள்விகளுக்கு நேரடியாக விடையளிக்காமல் கதையின் போக்கில் மீமாயக் கூறுகளோடு பதில் சொல்லியிருப்பது புனைவின் கனம் கூடிய இடங்களாகின்றன.
ஏதிலனில் வரும் Alien, நான்ஸி கதையில் வரும் பேய் ஆகியனவும் இதே மாதிரியான அர்த்தப்பாடுகளுக்கு உள்ளாகின்றன. ஏதிலன் மனவளம் குன்றிய குழந்தையின் மரணத்தைச் சுற்றி பின்னப்படும் கற்பனையான கதைகள். ஆனால் அவை யாருக்கான ஆசுவாசமாக அமைகிறது எனும் இடத்தில் வாசிப்பில் சிறப்பிடத்தை அடைகின்றன. நோய் பாவத்தின் பிரதிபலான நம் பண்பாட்டில் அர்த்தப்படுகிறது. எப்போது செய்த பாவம் இப்படி விடிகிறது எனும் தேய்வழக்கான சொலவடைகள் அதற்கு சான்று. மறுபுறம் எப்போது யாரிடம் செய்த தீச்செயல்களுக்காய் நம் மீது கவிந்த சாபம் என்றும் கருதப்படும். ஆனால் இவ்வகையான தேய்வழக்குகளிலிருந்து விலகி கற்பனையின் துணையுடன் இதைப் பேசுகிறார். மறைந்த மகளை கதைகளின் வழியே மீட்க விரும்புகிறார். ஆனால் உளவியல் ரீதியாக சிக்கிக் கொண்ட அம்மனிதன் இழப்பின் வலியை வெளிப்படுத்தத் தெரியாமல் கற்பனையிலும் விதவிதமான இழப்புகளை சந்திக்கிறார். கற்பனைகள் அவருக்கு ஆசுவாசமாக அமைவதில்லை. இழப்பை மேலும் அர்த்தமின்மை நோக்கி தள்ளுகிறது. மீளாச் சுழலுக்குள் அவரைப் போலவே தொகுப்பில் இடம்பெறும் பல கதாபாத்திரங்கள் சிக்கிக் கொள்கின்றனர். “நெடு நிசி” சிறுகதையிலும் மனவளம் குன்றிய மகளின் பாரத்தை தந்தை சுமக்கிறார். ஆனால் புதிய மனிதரிடம் அதை இறக்கி வைக்கிறார். அதற்கு பிறகாக நிகழும் சூழலும் கதையும் பாவமும் சாபமும் ஆள் மாற்றப்படுகிறது. வேறு வகையில் சொல்வதென்றால் பாவங்களும் சாபங்களும் வெறும் நிகழ்வுகளால் அர்த்தப்படுவதில்லை. நிகழ்வின் மீது நாம் கொள்ளும் நிலைப்பாடுகளால் அர்த்தப்படுகிறது. அவை காலத்தோடு உறைவதும் இல்லை.
நான்ஸி சிறுகதையில் தந்தையின் பாவம் மகளின் மீது சாபமாகக் கவிகிறது. அவை சாபத்திற்கும் பகுத்தறிவின்பால் தற்செயல் நிகழ்வுகளுக்கும் ஊடாக விரிவடைகிறது. நிகழும் விஷயங்களை பகுப்பாயத் தொடங்கும்போது அவை வேறு அர்த்தங்கள் பெறுகின்றன. அர்த்தங்களுக்கு அப்பால் நிகழும் உணர்வு சார் வாழ்க்கையில் அவை குழப்பத்தின் அம்சங்களாகின்றன. தொகுப்பில் குழப்பமான கணங்களைப் புனைவாக கொடுத்து பகுத்தறிதலை வாசகரிடம் விடும் வகையில் கதைகளை சொல்லியிருப்பது அனைத்து கதைகளிலும் சிறப்பாக வெளிப்படுகிறது.

தொகுப்பில் என்னை வெகுவாக ஈர்த்த கதை அதிரி. அசோகமித்திரன் எழுதிய “மணல்” குறுநாவலை நினைவூட்டியது. மணல் ஒரு முதிர்கன்னியின் கதை. உறவுகள் அற்றதாலேயே குடும்பம் எனும் அமைப்பில் அவளுடைய உழைப்பு சுரண்டப்படுகிறது. கிட்டதட்ட கதை முழுக்க யாருக்கேனும் சேவகம் செய்துகொண்டே இருக்கிறாள். ‘அதிரி’ சிறுகதை கைம்பெண்ணின் கதை. உறவுகளற்று இருப்பதாலேயே அவளுடைய உணர்வுகள் சுரண்டப்படுவதை நுட்பமாக கையாண்டிருக்கிறார். இந்த உணர்வுச் சுரண்டல் சமூகத்தில் நிகழும் பாலியல் சீண்டல்கள் மட்டுமன்று. குடும்பம் எனும் அமைப்பில் பொறுப்புகள் எனும் அர்த்தத்தில் உணர்வுகளற்று வாழ நிர்பந்திக்கப்படும் சூழல் என்று பொருள்கொள்ளலாம். தனக்காக வாங்கும் ஒரு பொருளை ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புகிறாள். ஆனால் அந்த ரகசியம் எந்த நேரமும் உடையலாம் எனும் நிலையிலேயே கதை நெடுக வருகிறது. அவளால் ஒருபோதும் ரகசியத்தை உருவாக்க முடியாது எனும் இடத்தில் கதை உணர்வின் கோர முகத்தை வெளிக்காட்டுகிறது. கதை, கதைசொல்லல், கதாபாத்திர வார்ப்பு ஆகிய அனைத்து அம்சத்திலும் இது ஆகச் சிறந்த சிறுகதை.
மனிதர்களிடையே கீழ்மைகளாக ஒளிந்திருக்கும் ஆசைகளையும், அதன் வெளிப்பாடுகளையும், அவை காலம்கடந்து வெளிப்படும் தருணங்களையும் சிறப்பாக புனைவாக்கியிருக்கிறார். காலத்தால் கைவிடப்பட்டவர்கள் நம்பிக்கைகளில் ஆசுவாசம் தேடுகிறார்கள். அறிவியல், இறை நம்பிக்கை, கற்பனை என்று சகலத்தின் வழியேவும் அவர்கள் தேடும் ஆசுவாசங்கள் கிட்டுவதில்லை. யதார்த்தம் அதற்கு அப்பால் சிடுக்கு நிரம்பிய விஷயங்களை அவர்களுக்காக அளிக்கிறது. வாசகர்களுக்கு அவர்களின் மீது கவியும் கருணையே எட்டாத ஆசுவாசமாக எஞ்சுகிறது. அதுவே அக்கதைகளின் வெற்றியுமாகும்.

ஒவ்வொரு தொகுப்பிலும் அடுத்த படைப்பின் மீதான அதீதமான எதிர்பார்ப்புகளை விதைப்பவர்களுள் ஒருவராகிறார் ப்ரிம்யா கிராஸ்வின்.
*
