மஞ்சள் சுவர்த்தாள் (குறுநாவல்) – சார்லெட் பெர்கின்ஸ் கில்மேன்

தமிழில்: விக்னேஷ் ஹரிஹரன்  

சார்லெட் பெர்கின்ஸ் கில்மேன்

சார்லெட் பெர்கின்ஸ் கில்மேன் – அமெரிக்க நாவலாசிரியர், எழுத்தாளர், சமூகவியலாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அமெரிக்க பெண்கள் உரிமை இயக்கத்தின் தொடக்க கால முன்னோடிகளில் ஒருவர். இவரது படைப்புகள் முதன்மையாக பாலினம், குறிப்பாகச் சமூகத்தில் நிலவும் பாலின ரீதியான பிரிவுகள், ஆணாதிக்கம் போன்ற சிக்கல்களைப் பேசுபொருட்களாகக் கொண்டவை. தனது மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வை அடிப்படையாகக் கொண்டு பெண்கள் மீது நிகழ்த்தப்படும் உளவியல் ரீதியான வன்முறையைப் பற்றி அவர் எழுதிய தன் வரலாற்றுப் புனைவான மஞ்சள் சுவர்த்தாள் (The Yellow Wallpaper) அமெரிக்க பெண்ணிய இலக்கியத்தின் ஆதாரப் படைப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் குறுநாவல் பெண்ணிய விமர்சகர்களாலும், உளவியல் விமர்சகர்களாலும் விரிவாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. மனநல பாதிப்புகள், பாலின எதிர்பார்ப்புகள் மற்றும் பெண்களின் சுதந்திரத்திற்கான தேடல் ஆகியவற்றைச் சித்தரித்த வகையில் இந்த குறுநாவல் சில்வியா பிளாத்தின் “பெல் ஜார்” நாவலுடன் ஒப்பிடப்படுகிறது.

-விக்னேஷ் ஹரிஹரன்

*

மஞ்சள் சுவர்த்தாள் (குறுநாவல்) – சார்லெட் பெர்கின்ஸ் கில்மேன்

(தமிழில்: விக்னேஷ் ஹரிஹரன்)

1

மிக அரிதாகவே, ஜானையும் என்னையும் போன்ற சாமானியர்களால், இப்படி ஒரு புராதானமான கோடை வாசஸ்தலத்தை வாடகைக்கு எடுக்க முடியும்.

இதை ஒரு காலனிய மாளிகையாகவோ; பழம்பெரும் எஸ்டேடாகவோ; ஏன், ஒரு பேய் வீடாகவோ கூட கற்பனை செய்து மகிழ்கிறேன். ஆனால் என் தலைவிதியிடமிருந்து அவ்வளவெல்லாம் ஆசைப்படுவது அதீதம்.

எதுவானாலும் இந்த இடத்தில் வித்தியாசமான ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. இல்லையென்றால், எதற்காக இதை இவ்வளவு மலிவாகக் கொடுக்க வேண்டும்? ஏன் இதை இத்தனை காலமாக யாருமே வாடகைக்கு எடுக்காமல் இருக்க வேண்டும்?

ஜான் என்னைப் பார்த்து சிரிக்கிறான். ஆனால் திருமண வாழ்வில் இதெல்லாம் சகஜம்தானே!

ஜான் கடும் நடைமுறைவாதி; விசுவாசத்திற்கான பொறுமை அற்றவன்; மூடநம்பிக்கைகளை அறவே வெறுப்பவன்; தொட்டு, பார்த்து, புரிந்து, பதிவு செய்ய முடியாத எதைப் பற்றிய பேச்சையும் பழிப்பவன்.

ஜான் ஒரு மருத்துவன்; ஒருவேளை (அடுத்து நான் சொல்லப்போவதை வேறு எந்த உயிரிடமும் சொல்ல மாட்டேன். ஆனால் இது ஒரு உயிரற்ற காகிதம் எனும் உணர்வு தரும் மன நிம்மதியால் இதை இங்கு பதிவு செய்கிறேன்) அதனால்தானோ என்னவோ என்னால் சீக்கிரமாக குணமடைய முடியவில்லை.

பார்க்கப்போனால், அவன் எனக்கு உடல்நலம் சரியில்லை என்பதையே நம்பவில்லையே! பிறகு என்ன செய்ய? ஒரு பெயர்பெற்ற மருத்துவன், அதிலும் சொந்தக் கணவன், அவனே தன் நண்பர்களிடம் தன் மனைவிக்கு ஒரு குறையும் இல்லை, வெறும் தற்காலிக மன அழுத்தம்தான் – ஒரு சிறிய நரம்புத் தளர்ச்சி மட்டுமே – என்று சொல்லும்போது ஒருவர் என்னதான் செய்ய முடியும்?

என் சகோதரனும் மருத்துவன்தான் – பெயர்பெற்றவன் – ஆனால் அவனும் அதையேதான் சொல்கிறான்.

அதனால்தான் நான் இப்போது ஃபாஸ்ஃபேட்டோ – ஃபாஸ்ஃபைட்டோ (ஏதோ ஒன்று) அதையும்; அதோடு மருந்துகள், பயணங்கள், சுத்தமான காற்று, உடற்பயிற்சி என அத்தனையையும் எடுத்துக்கொள்கிறேன். மேலும் நான் முழுதாகச் சரியாகும்வரை எந்த “வேலையும்” செய்யக் கூடாது என்றும் விலக்கப்பட்டிருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் கேட்டால், எனக்கு இந்த யோசனைகளில் உடன்பாடு இல்லை.

தனிப்பட்ட முறையில் கேட்டால், என் மனதுக்கு உகந்த, வழக்கத்துக்கு மாறான ஆர்வம் நிறைந்த, என் தனிப்பட்ட வேலைகள் எனக்கு நன்மையே பயக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஆனால் என்ன செய்ய?

அவர்கள் அறிவுரைகளையும் மீறி, சிறிது காலம் ரகசியமாக எழுதிக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் இப்படி கள்ளத்தனமாகவோ முரண்டுபிடித்துக்கொண்டோ எழுதுவது என்னை மிகவும் அயர்வுறச் செய்தது.

சில சமயங்களில், எதிர்ப்புக்கு பதிலாக, எனக்கு இன்னும் கொஞ்சம் அணுக்கமும் ஆதரவும் கிடைத்தால் என் நிலை எப்படி இருக்கும் என்று தோன்றும். ஆனால் என் நிலையைப் பற்றி யோசிப்பதுதான் எனக்கு நானே செய்யும் கொடும் கேடு என்று ஜான் சொல்கிறான். உண்மையைச் சொன்னால் அவன் அப்படிச் சொல்வதே என்னை இன்னும் சங்கடப்படுத்துகிறது.

எனவேதான் நான் அதை விட்டுவிட்டு இந்த வீட்டைப் பற்றி பேசுகிறேன்.

மிக அழகான இடம்! தனிமையானது, சாலையிலிருந்து தள்ளியிருப்பது, பக்கத்து கிராமத்திலிருந்தும் மூன்று மைல் தொலைவில் இருப்பது. நாம் புத்தகங்களில் வாசித்த ஆங்கிலேய வீடுகளைப் போல் புதர் வேலிகளும், சுவர்களும், பூட்டக்கூடிய கதவுகளும், தோட்டக்காரர்களுக்கும் பிறருக்குமான தனித்த சிறு வசிப்பிடங்களும் கொண்டது.

மிக ருசிகரமான தோட்டம்! இப்படிப்பட்ட தோட்டத்தை நான் பார்த்ததே இல்லை. பெரிய, நிழல்கள் அடர்ந்த, சதுரக் கற்களால் பாதைகள் அமைக்கப்பட்ட, திராட்சைப் பந்தல்களின் கீழ் இருக்கைகள் போடப்பட்ட தோட்டம்.

சில பச்சில்லங்களும் உண்டு; ஆனால் அவை பழுதடைந்துள்ளன.

இங்கு ஏதாவது சட்டச் சிக்கல் இருந்திருக்க வேண்டும் – வாரிசுகள், இணை வாரிசுகள் அப்படி ஏதாவது. எது எப்படியோ, இந்த வீடு பல காலமாக காலியாகத்தான் கிடக்கிறது.

என் பேய் வீட்டுக் கற்பனை இந்த காரணம் தெரிந்ததால் கொஞ்சம் பாதிக்கப்படுகிறதுதான் – பரவாயில்லை. ஆனால் இங்கு ஏதோ தவறாக இருக்கிறது – என்னால் அதை உணர முடிகிறது.

நிலவொளியில் நனைந்த ஒரு மாலையில் இதை நான் ஜானிடம் சொன்னபோது, கூதற் காற்றாக இருக்கும் அறை ஜன்னல்களை மூடிவிடு என்றான்.

சில நேரங்களில் காரணமே இல்லாமல் ஜானின் மீது கோபப்படுகிறேன். இதற்கு முன்பு நான் இவ்வளவு உணர்ச்சிவயப்பட்டவளாக இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஒருவேளை இந்த நரம்புத் தளர்ச்சியே காரணமாக இருக்கலாம்.

ஆனால் அப்படி நினைக்கத் தொடங்கினாலே நான் என் சுய கட்டுப்பாட்டிலிருந்து தவறிவிடுவேன் என்கிறான் ஜான். அதனாலேயே நான் – அவன் முன்னாலேனும் – என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள பெரும் பாடுபடுகிறேன். அது என்னைச் அயர்வுறச் செய்கிறது.

எனக்கு எங்கள் அறையைத் துளியும் பிடிக்கவில்லை. கீழ்ப் பகுதியிலிருந்த, வெளியைப் பார்த்த, ஜன்னல்களெங்கும் ரோஜாக்கள் நடப்பட்ட, அத்தனை அழகான பழைய பாணி சீட்டித்துணி திரைச்சீலைகள் மாட்டப்பட்ட அறையைத்தான் நான் விரும்பினேன். ஆனால் ஜான் நான் சொல்வதைக் கேட்கவும் விரும்பவில்லை.

அந்த அறையில் ஒரே ஒரு ஜன்னல்தான் இருக்கிறது; இரண்டு கட்டில்கள் போட இடமில்லை; நாங்கள் தனித் தனியே படுக்கவும் அருகில் வேறு அறைகள் இல்லை என்று சொல்லி மறுத்துவிட்டான்.

அவன் என் மீது மிகுந்த அக்கறையும் அன்பும் கொண்டவன். அவனது வழிகாட்டுதல் இல்லாமல் என்னை அசையவும் விடமாட்டான்.

என் நாளின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவன் போட்டுக்கொடுத்த நெறிமுறைப்படுத்தப்பட்ட அட்டவணை உண்டு. அப்படி என் கவலைகளையெல்லாம் எடுத்துக்கொள்ளும் அவனை மதிக்காமல் இருப்பதனாலேயே என்னை நானே நன்றிகெட்டவளாக உணர்கிறேன்.

“நாம் இங்கு வந்ததே உனக்காகத்தான்; நீ முழுமையாக ஓய்வெடுக்கவும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்ல காற்றை சுவாசிக்கவும்தான்”, என்றான் அவன். “செல்லமே, உன் உடற்பயிற்சி உன் உடல்வலுவைப் பொறுத்தது; உன் உணவு அளவு உன் பசியைப் பொறுத்தது; ஆனால் காற்றை மட்டும் நீ எப்போதுமே சுவாசிக்கலாமே” என்றான். எனவே நாங்கள் மாடியிலிருந்த குழந்தைகள் அறையை எடுத்துக்கொண்டோம். 

அதுவொரு பெரிய, காற்றோட்டமான அறை. அறையின் மொத்த தரையும், எல்லா திசைகளையும் பார்க்கும் ஜன்னல்களிலிருந்து வரும் காற்றாலும் வெளிச்சத்தாலும் மொழுகப்பட்டிருக்கும். அது முதலில் குழந்தைகள் அறையாக இருந்து பிறகு விளையாட்டு அறையாக மாறி பிறகு உடற்பயிற்சி அறையாகியிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். ஏனென்றால் குழந்தைகள் ஏறாமலிருக்க ஜன்னல்களில் கம்பிகளும்; சுவர்களில் பொருத்தப்பட்ட ஏதேதோ பொருட்களும், வளையங்களும் அந்த அறையில் இருந்தன.

சுவர்களில் இருந்த வண்ணங்களும் சுவர்த்தாள்களும் அந்த அறையை ஏதேனும் ஆண்கள் பள்ளிக்காக பயன்படுத்தி இருக்கலாம் என்று எண்ண வைத்தது. என் கட்டிலின் தலைப் பகுதிக்கு மேல் என் கையெட்டும் தொலைவு வரை ஒட்டப்பட்டிருந்த தாளும், அறையின் மறுமுனையின் கீழ்ப் பகுதியில் ஒரு பிரதானமான இடத்தில் ஒட்டப்பட்டிருந்த தாளும் ஆங்காங்கே பெரிதாகக் கிழிந்திருந்தன. என் வாழ்வில் அவற்றைவிட மோசமான தாள்களைப் பார்த்ததே இல்லை.

கலைக்கு எதிரான அத்தனை பாவங்களையும் செய்யும் பறந்து விரிந்த வடிவங்களால் நிறைந்த தாள்கள் அவை.

பின்தொடர முடியாமல் கண்களைக் குழப்பும் அளவுக்கு மந்தமாகவும், அமைதியாகப் பார்க்க முடியாமல் பின்தொடரத் தூண்டும் அளவுக்கு துருத்தலாகவும், வேறு வழியின்றி அவற்றைச் சிறிது தூரம் பின்தொடர்ந்தால் – ஏடாகூடமான கோணங்களில், கேள்விப்படாத முரண்களில் சென்று – திடீரென்று தற்கொலை செய்துகொள்பவை அந்த வடிவங்கள்.             

நிறமும் அருவெறுக்கத்தக்கது; கிட்டத்தட்ட குமட்டக்கூடியது. வெயிலால் வெளுத்து, மூச்சு முட்ட வைக்கும், விசித்திர அழுக்கு மஞ்சள் நிறம். அது சில இடங்களில் மங்கிய ஆபாச ஆரஞ்சாகவும், மற்ற இடங்களில் நொய்மையான சல்ஃபர் நிறமாகவும்கூட மாறியிருந்தது.

குழந்தைகள் இதை வெறுத்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை! இந்த அறையில் நீண்ட காலம் வாழ நேர்ந்தால், நானே இதை வெறுப்பேன். 

ஜான் வந்துவிட்டான். நான் இந்த காகிதத்தை மறைக்க வேண்டும். அவன் நான் எழுதுவதை அறவே விரும்புவதில்லை.

2

நாங்கள் இங்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. முதல் நாளுக்குப் பிறகு எனக்கு எதுவுமே எழுதத் தோன்றவில்லை.

நான் இப்போது இந்த அராஜகமான குழந்தைகள் அறையின் ஜன்னல் அருகே அமர்ந்திருக்கிறேன். நான் ஆசைதீர எழுதுவதைத் தடுக்க இங்கு எதுவும் இல்லை, என் பலவீனத்தைத் தவிர.

ஜான் பகல் முழுவதும் வெளியே சென்றுவிடுகிறான்; சில தீவிரமான நோய்வாய்ப்பட்ட நோயாளிகளைப் பார்க்கையில் இரவுகளிலும்.

நல்லவேளை! என் நிலை அத்தனை தீவிரமாக இல்லை! 

ஆனால் இந்த நரம்புச் சிக்கல்கள் பயங்கர மன அழுத்தத்தை அளிக்கின்றன.

நான் இங்கு எவ்வளவு துன்பப்படுகிறேன் என்று ஜானுக்குத் தெரியாது. நான் துன்பப்படக் காரணம் ஏதுமில்லை என்பது மட்டும் அவனுக்குத் தெரியும். அதுவே அவனுக்குப் போதுமானதாக இருக்கிறது.

ஆமாம். இது வெறும் நரம்புச் சிக்கல்தான். ஆனால் என் கடமைகளைச் செய்யமுடியாதபடி இது என்னை முடக்குகிறதே!

நான் ஜானுக்கு எவ்வளவோ உதவியாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன் – அவனது ஆறுதலாகவும் ஆசுவாசமாகவும். ஆனால் ஒப்புநோக்க இப்போது நானே அவனுக்கு பாரமாகிவிட்டேன்.

நான் இப்போது செய்யும் குறைந்தபட்ச வேலைகளான உடுத்துதல், உபசரித்தல், பணியாளர்களை ஏவுதல் போன்றவற்றைச் செய்வதே எனக்கு எத்தனை சிரமமான காரியமாக இருக்கிறது என்பதை எவரும் நம்ப மாட்டார்கள்.

நல்ல வேளையாக மேரி குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்கிறாள். என் கண்ணான குழந்தை அவன்!

ஆனால் என்னால் அவனோடு இருக்க முடியவில்லை. அது என்னை மேலும் பதட்டப்படுத்துகிறது.

ஜான் அவன் வாழ்வில் பதட்டப்பட்டதே இல்லை போலும். இந்த சுவர்த்தாளைப் பற்றி சொன்னாலே அப்படிச் சிரிக்கிறான்!

முதலில் அவன் இந்த சுவர்த்தாள்களை மாற்றுவதாகத்தான் இருந்தான். பிறகு நான் இவை என்னை ஆக்கிரமிக்க அனுமதிப்பதாகவும், ஒரு நரம்புச் சிக்கல் நோயாளி இத்தகைய மனப் பிராந்திகளுக்கு ஆட்படுவதைவிட மோசமானது வேறெதுவும் இல்லை என்றும் சொன்னான்.

“இன்று சுவர்த்தாளை மாற்றினால் அடுத்து இந்த கனமான கட்டில் பலகையை மாற்றத் தோன்றும், பிறகு கம்பிகளிட்ட ஜன்னல்களை, பிறகு மாடிப்படிகள் முன் இருக்கும் வாயிற்கதவை என நீண்டுகொண்டே போகும்” என்றான் ஜான்.

“இந்த வீடு உனக்கு நன்மை செய்வது உனக்கே தெரியும். உண்மையைச் சொன்னால் ஒரு மூன்று மாத வாடகை வீட்டை நான் புதுப்பிக்க விரும்பவில்லை, கண்ணே!” என்றான் அவன்.

“அப்படியானால் நாம் கீழ் தளத்துக்குச் செல்வோம். அங்கு அத்தனை அழகான அறைகள் இருக்கின்றன” என்றேன் நான்.

அதற்கு அவன் என்னைக் கட்டியணைத்து, “என் செல்ல வாத்தே!” என்றழைத்து, “நீ விரும்பினால் நான் இந்த வீட்டின் நிலவறையைக் கூட புதுப்பித்து தங்குவேன்” என்றான்.

ஆனால் அவன் எங்கள் அறையின் படுக்கை வசதிகளையும் ஜன்னல்களையும் பற்றிச் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது.

எங்கள் அறை காற்றோட்டமானது, வசதியானது, எவரும் விரும்பக்கூடியது. அப்படியிருக்க, நிச்சயமாக என் நப்பாசைகளுக்காக மட்டும் அவனை அசௌகரியப்படுத்த நான் விரும்பவில்லை.

உண்மையைச் சொன்னால் எனக்கு இந்த பெரிய அறையை பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் மட்டமான சுவர்த்தாளைத் தவிர.

இங்கிருந்து ஒரு ஜன்னல் வழியே பார்த்தால் தோட்டம் தெரியும். அதன் மர்ம நிழலடர்ந்த பந்தல்களும், கதம்பமான பழைய பாணி பூக்களும், புதர்களும், முறுக்கேரிய மரங்களும் தெரியும்.

இன்னொரு ஜன்னல் வழி பார்த்தால் விரிகுடாவும் எங்கள் எஸ்டேட்டுக்குச் சொந்தமான படகுத்துறையின் அழகிய காட்சியும் தெரியும். இந்த வீட்டிலிருந்து அங்கு செல்லும் அழகிய நிழலடர்ந்த பாதைகளும் உண்டு. அந்த பாதைகளிலும், பந்தல்களிலும் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக எனக்கு எப்போதும் தோன்றுகிறது. ஆனால் இத்தகைய கற்பனைகளுக்கு துளியும் இடம் கொடுக்கக்கூடாது என்று ஜான் என்னை எச்சரித்திருக்கிறான். என் கற்பனை சக்தியும் கதை கட்டும் பழக்கமும் இத்தகைய கற்பனைகளை உருவாக்குவது இயல்புதான் என்றும் நான்தான் என் மனவுறுதியையும் தெளிந்த புத்தியையும் கொண்டு இத்தகைய கற்பனைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறான். நானும் முயல்கிறேன்.

சில நேரங்களில் எனக்கு மட்டும் கொஞ்சம் எழுதுமளவு தெம்பிருந்தால் அதுவே என்னை இந்த கற்பனைகளின் அழுத்தத்திலிருந்து மீட்கும் என்று தோன்றுகிறது.

ஆனால் எழுத முயன்றால் நான் சோர்வடைகிறேன்.

என் படைப்புகளுக்கான ஆதரவோ அறிவுரையோ துளியும் கிட்டாதிருப்பது என்னை கடுமையாக ஊக்கமிழக்கச் செய்கிறது. நான் முழுமையாக குணமான பின் எங்கள் அத்தைப் பிள்ளைகள் ஹென்றியையும் ஜுலியாவையும் அழைத்து நீண்ட நாட்கள் வைக்கலாம்; ஆனால் என் தற்போதைய நிலையில் அத்தகைய அதி உற்சாகமான ஆட்களை வீட்டுக்கு அழைப்பதென்பது என் தலையணைகளில் வெடியைக் கொளுத்தி வைப்பதற்கு சமமானது என்று ஜான் சொல்கிறான்.

நான் விரைவாக குணமடைந்துவிடவே விரும்புகிறேன்.

ஆனால் நான் அதைப் பற்றி யோசிக்கக் கூடாது. இந்த சுவர்த்தாள் அது என் மீது செலுத்தும் மோசமான செல்வாக்கைப் பற்றி அறிந்ததைப் போல் என்னை உற்றுப் பார்க்கிறது. 

அதன் குறிப்பிட்ட ஒரு இடம் தலைகீழாகத் தொங்கும் முறிந்த கழுத்தும் பிதுங்கிய விழிகளும் போல் தோற்றம் காட்டுகிறது.

அதன் நிரந்தரமான துடுக்குத்தனம் என்னை எரிச்சலுறச் செய்கிறது. மேலும் கீழும் இரு புறங்களுமாய் ஊறும் அந்த இமைக்கா விழிகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. இரண்டு தாள்கள் சரியாக இணையாத விளிம்புகளில் ஒரு விழி மேலும் ஒரு விழி கீழுமாக இருக்கின்றன.

ஜடப் பொருட்களில் இத்தனை உணர்ச்சிகள் வெளிப்படுவதை நான் பார்த்ததே இல்லை – ஜடப் பொருட்களில் எவ்வளவு உணர்வுகள் வெளிப்படும் என்பதுதான் நமக்குத் தெரியுமே! என் குழந்தைப் பிராயத்தில் இரவு முழுக்க விழித்துக் கிடந்து வெற்றுச் சுவர்களையும் அறைக்கலன்களையும் வெறித்துப் பார்த்தபடி என் கற்பனைகளில் நான் அடைந்த கேளிக்கைகளும் பயங்கரங்களும் பெரும்பாலான குழந்தைகள் பொம்மைக் கடைகளில் அடையும் பரவசத்தை விட அதிகமானது.

எங்கள் பீரோ கதவுகளில் இருந்த குமிழ்கள் எத்தனை அன்பாக என்னை நோக்கி கண் சிமிட்டும் என்பது இப்போதும் நினைவிருக்கிறது. மேலும் ஒரு உறுதியான நண்பனைப் போல் தோன்றும் நாற்காலி ஒன்றும் எங்களிடம் இருந்தது.

வீட்டின் பிற பொருட்கள் ஏதேனும் என்னை அதீதமாக முறைப்பதாகத் தோன்றினால், நான் ஓடிப்போய் அந்த நாற்காலியின் மடியில் தாவி அமர்ந்துகொள்வேன்.

இந்த அறையில் இருக்கும் அறைக்கலன்களோ சீரற்றதாக இருக்கின்றன. ஏனெனில், நாங்கள் இவற்றை கீழ் தளத்திலிருந்து கொண்டு வந்து போட்டோம். ஒருவேளை இது விளையாட்டு அறையாக மாற்றப்பட்டபோது இதிலிருந்த குழந்தைகளுக்கான சாதனங்கள் அத்தனையும் வெளியேற்றப்பட்டு விட்டனவோ என்னவோ. அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை! இந்த அறையில் குழந்தைகள் செய்திருக்கும் அட்டகாசத்தைப் போல் நான் வேறு எங்கும் பார்த்ததே இல்லை.

நான் முன்பே சொன்னதுபோல், சில இடங்களில் சுவர்த்தாள்கள் கிழிந்திருக்கின்றன. ஒரு ’சோதரனினும்’ அதிகமாக ஒட்டிக்கொள்ளக் கூடிய அவற்றை  கிழித்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் விடாமுயற்சியும் வஞ்சினமும் கொண்டிருக்க வேண்டும்.

தரையும் கீறப்பட்டு, கொத்தப்பட்டு, ஓடுகள் உடைக்கப்பட்டிருக்கிறது. அங்கேயும் இங்கேயுமாய் சாந்தே குடைந்து எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த அறையில் இருக்கும் கட்டிலோ, பல யுத்தங்களைச் சந்தித்ததைப் போல் இருக்கிறது. 

ஆனால் அது எனக்கு பரவாயில்லை. இந்த சுவர்த்தாள்தான்…

அதோ ஜானின் சகோதரி வந்துகொண்டிருக்கிறாள். அத்தனை அன்பானவள்! என் மீது மிகுந்த அக்கறை கொண்டவள்! நான் எழுதுவதை மட்டும் அவள் கண்டுபிடித்துவிடக் கூடாது.

அவள் மிகுந்த ஆர்வமும் கச்சிதமும் மிக்க இல்லத்தரசி. அதற்கு மேல் எந்த பணிக்கும் செல்லும் விருப்பம் இல்லாதவள். என் எழுத்துப் பணிதான் என் உடல்நிலையைக் கெடுக்கிறது என்று மிக நிச்சயமாக நம்புபவள்.

ஆனால் அவள் வெளியே சென்றததும் நான் எழுதலாம். அவள் இந்த ஜன்னல்களைவிட்டு தூரமாக விலகிச் செல்வதை பார்க்கலாம்.

ஒன்று சாலையை நோக்குவது – நிழலடர்ந்து வளைந்து செல்லும் அழகிய சாலையை. மற்றொன்று கிராமப்புறத்தைப் சற்றே பார்த்துக்கொண்டு இருப்பது. அதுவும் அழகிய கிராமப்புறம்தான் – மிகப் பெரிய இலுப்பை மரங்களும் வெல்வெட் பசும்புல் வெளிகளும் நிறைந்தது.

இந்த சுவர்த்தாளில் வேறு வண்ணங்களில் வரையப்பட்ட உப வடிவங்களும் உண்டு, குறிப்பாக நம்மை எரிச்சலுறச் செய்பவை. ஏனெனில் அவற்றைச் சில வெளிச்ச அமைப்புகளில் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் அப்போதும் தெளிவாக இருக்காது.

ஆனால் அது மங்காத சில இடங்களில், சூரியன் சரியாக இருக்கும் பொழுதுகளில் – அந்த பொருளற்ற அற்பமான வடிவங்களுக்குப் பின்னால்; ஒரு வினோதமான, எரிச்சலூட்டும், உருவிலித் தோற்றம் ஒன்று அங்கு உலாவுவதை என்னால் பார்க்க முடிகிறது.

இதோ ஜானின் சகோதரி மாடிப் படிகளில் ஏறிவிட்டாள்.

3

ஆக, ஜூலை நான்கும் முடிந்துவிட்டது! விருந்தினர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். எனக்கோ கடும் அயர்ச்சி. கொஞ்சம் நட்பார்ந்த சூழலில் இருப்பது எனக்கு நன்மை பயக்கும் என்று ஜான் கருதினான். எனவே அம்மாவும் நெல்லியும் இங்கு வந்து ஒரு வாரம் இருந்தார்கள்.

எப்படியும் நான் எந்த வேலையும் செய்யவில்லை. ஜென்னிதான் இப்போது எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறாள்.

ஆனாலும் நான் அயர்ந்து போகிறேன்.

நான் சீக்கிரமாக சரியாகாவிட்டால் என்னை வைர் மிச்செலிடம் அனுப்பப் போவதாக ஜான் சொல்கிறான்.

ஆனால் எனக்கு அவரிடம் செல்ல துளியும் விருப்பம் இல்லை. அவரிடம் சிகிச்சை பெற்ற என் தோழி ஒருத்தி சொன்னாள், அவரும் ஜானையும் என் சகோதரனையும் போன்றவர்தானாம். என்ன, அவர்களிலும் கொஞ்சம் கூடுதலாக அவர்களைப் போன்றவர்.

தவிர அத்தனை தொலைவு செல்வதே பெரும் பணி.

அப்படி எதற்குள்ளும் நான் தலையைக் கொடுக்க விரும்பவில்லை. மேலும் இப்போதெல்லாம் நான் மிகவும் பதட்டமாகவும் சிடுசிடுப்பாகவும் இருக்கிறேன்.

நான் எதற்காகவும் அழுவதில்லை; ஆனால் பெரும்பாலான நேரம் அழுதுகொண்டே இருக்கிறேன்.

நிச்சயமாக ஜானோ வேறு எவரோ உடனிருக்கும்போது அழுவதில்லை; என் தனிமையில் மட்டுமே.

மேலும் இப்போதெல்லாம் நான் பெரும்பாலும் தனிமையில்தான் இருக்கிறேன். ஜானின் தீவிர சிகிச்சைகள் அவனை பெரும்பாலும் டௌனிலேயே வைக்கின்றன. ஜென்னியும் நல்லவள்தான் – என் தனிமையை அனுமதிக்கிறாள்.

அதனால்தான் நான் தோட்டத்திலும் அந்த அழகிய பாதையிலும் கொஞ்சம் நடந்து திரிகிறேன்; வீட்டு முகப்பில் பூக்கும் ரோஜாக்களுக்கு அடியில் அமர்கிறேன்; இங்கு நீண்ட நேரம் படுத்துக் கிடக்கிறேன்.

சுவர்த்தாள் இருந்தபோதும் இப்போதெல்லாம் இந்த அறையை மிகவும் பிடிக்கிறது. ஒருவேளை அதற்கு இந்த சுவார்த்தாளும் காரணமோ!

என் மனதிற்கென்னவோ அப்படித்தான் தோன்றுகிறது!

இந்த பெரிய, அசைக்க முடியாத – தரையோடு சேர்த்து ஆணி அடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் – கட்டிலில் படுத்து சுவர்த்தாளின் வடிவங்களை ஒரு மணி நேரமாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன். சீருடற்பயிற்சிக்கு நிகரானது இது, உத்தரவாதமாகச் சொல்கிறேன். சுவரின் கீழ் மூலையில், கைப்படாத ஒரு ஓரத்தில், தொடங்குகிறேன் என்று வைத்துக்கொள்வோமே. அங்கிருந்து தொடங்கி அந்த அர்த்தமற்ற வடிவம் எங்குதான் சென்று முடிகிறது என்று பார்க்கப்போவதாக ஆயிரமாவது முறையாக எனக்கு நானே சபதம் எடுத்துக் கொள்கிறேன்.

எனக்கு சிறிது வரைகலை அடிப்படைகள் தெரியும். எனவே இந்த சுவர்த்தாள் வடிவங்கள் வீச்சமைப்பு, மாற்றமைப்பு, மீளமைப்பு, சமச்சீரமைப்பு என நான் கேள்விப்பட்ட எந்த வரைகலை சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு உருவாக்கப்பட்டவை அல்ல என்பது எனக்குத் தெரியும்.

அகலவாக்கில் இந்த வடிவங்கள் மீளமைப்பு செய்யப்பட்டிருப்பதைத் தவிர வேறு எந்த அமைப்பும் இவற்றில் இல்லை.

ஒரு கோணத்தில் பார்த்தால் ஒவ்வொரு அகல அமைப்பும் தனித்தனியாக, பெருத்த வளைவுகளும் தழைவுகளும் கொண்டதாக, “டிபேஸ்ட் ரோமனெஸ்க்” அமைப்பில் சித்தப் பிரம்மை பிடித்த கற்பனைகள் கலந்ததைப் போல் மேலும் கீழும் அலைவுறும் தனித்த முட்டாள்தனங்களின் ஸ்தூபிகளாகத் தோன்றும்.

ஆனால் மறுகோணத்தில் அவை குறுக்காக இணைந்து உருவாக்கும் பரந்த கோட்டுச் சித்திரங்கள் கோணல் வாக்கில் கடல் பாசிகளைப் போல் அலை அலையாய் நெளியும் கோரக் காட்சிகளைப் பரப்பும்.

அவை கிடைமட்டத்திலும் செல்வதாகத்தான் தோன்றுகிறது. ஆனால் அவை அந்த திசையில் செல்லும் ஒழுங்கை கணிக்க முற்பட்டால் நான் அயர்வுறுவதுதான் மிச்சமாகிறது.

கிடைமட்டத்தை ஒப்பனைப் பட்டையாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அது ஏற்கனவே இருக்கும் குழப்பங்களை பிரமாதமாகக் கூட்டுகிறது.

விக்னேஷ் ஹரிஹரன்

அறையின் ஒரு மூலையில் மட்டும் இந்த வடிவங்கள் கிட்டத்தட்ட சேதாரமின்றி இருக்கின்றன. அந்த மூலையில் எதிர்வெளிச்சம் அடங்கி தாழ்ந்த சூரிய ஒளி நேராக வீழ்கையில் அங்கு என்னால் எப்படியோ ஒரு வீச்சமைப்பை பார்க்க முடிகிறது  – முடிவற்ற விகார ரூபங்கள் ஒரு பொதுவான மையத்தைச் சுற்றிக் கூடி அங்கிருந்து எட்டுவைத்து எகிரி எல்லா திசைகளிலும் சமமாகச் சிதறி ஓடுகின்றன.

இவற்றைப் பின்தொடர்வதே என்னை அயர்வுறச் செய்கிறது. நான் சிறிது தூங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

(தொடரும்)  

*

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *