காற்றில் சஞ்சலக்கும் நினைவெனும் சிலந்தி வலை – சக்திவேல்
(’இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து)

1
”நீ எனக்குத்தானே, என்னுடைய ஆள் தானே என்ற கேள்வியை எதிர்கொள்ளாத காதலர் யாரும் இல்லை. இந்த கேள்வியை போல பூரண சுய சமர்ப்பணத்தை, வெட்கமே இல்லாத சுயநலத்தை, அப்பட்டமான ஆட்கொள்ளும் வெறியை வெளிப்படுத்தும் பிறிதொரு கேள்வி இல்லை. காதலின் உச்சக்கட்ட பரவசத்தை, இருண்ட பாதாள உலகத்தின் கொந்தளிப்பாக சடுதியில் மாற்றும் வல்லமை கொண்ட கேள்வி இது. உணர்ச்சிகளின் ஒருபக்க சார்பு தன்மையில் இருந்து தன் ஆற்றலை பெற்றுக்கொள்ளும் கேள்வி இது. தேர்ந்த, பரந்த மனவிரிவு கொண்ட சிந்தனையாளரும் கூட இக்கேள்விக்கு முன், வலிமையற்றவராக நிற்பதை பார்க்கலாம். முழு ஏற்பையோ மறுப்பையோ வேண்டுவது. ஒவ்வொரு கணமும் வாழ்க்கை முழுக்க நம் பதிலை மெய்ப்பிக்க வேண்டுவது. இக்கேள்விக்கு கவனமற்று ஆம் என்று பதிலளிப்பவர் பிடியில்லாத இருமுனை கூர்வாளை கையில் ஏந்தியிருப்பவர். அவர் கைகளில் குருதி வழியாத நேரமொன்று இல்லை. தன்னையும் தனது விருப்பத்திற்கு உரியவரையும் ஒருசேர துன்பத்திற்கு உள்ளாக்குபவர்.1
-குரு நித்யசைதன்ய யதி
ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலில் மட்டுமல்ல, ஒவ்வொரு உறவின் அடித்தளத்திலும் உள்ள கேள்வி இது. வாழ்க்கையின் ஏதேனும் ஒரு தருணத்தில் சீறி படம் விரிப்பது. நீ எனக்குத்தானே, என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளித்தவுடன் அடுத்த கேள்வி, எந்த எல்லைவரை உன்னை எனக்கு தருவாய் என்பதே. நாம் நம்மை பிறருக்கு அளிக்கும் எல்லையும் பிறர் தம்மை நமக்கு அளிக்கும் எல்லையும் எப்போதும் தெளிவாக இருப்பதில்லை. அங்கே நிரந்தரமான மயக்கமூட்டும் பனிமூட்டம் உண்டு. பெருந்தேவியின் இதற்கும் அதற்கும் இடைப்பட்ட மயக்கங்கள் சிறுகதை தொகுப்பின் கதைகள், அந்த மயக்கத்தை பேசுகின்றன.
மயக்கம் என்பது பீதியூட்டும் அனுபவம் மட்டுமல்ல, பரவசமும் புன்னகையும் ஆழ்ந்த விசாரணைக்கும் அழைத்து செல்வதும் கூட என்பதை வாசிப்பில் உணர்த்தும் கதைகள். தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகள் மூன்று அடிப்படை கேள்விகளை வெவ்வேறு கோணத்தில் விசாரிப்பவையாக விரிகின்றன. முதல் கேள்வி, எந்த எல்லைவரை உன்னை எனக்கு தருவாய், என்னை உனக்கு தருவேன், என்பதன் விரிவாக்கமான கதைகள். தீவிரமான கேள்விகளை இலகுவான மனநிலையுடன் அவற்றின் தீவிரம் குறையாமல் வாசக்க முடியும் என்பதற்கு உதாரணமாக விசித்திர கணவனின் வினோத பரிசுகள் கதையை சொல்ல வேண்டும்.
சுஜாவின் கணவன் ராகேஷ். அவளது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எந்த பெண்ணும் கணவனிடமிருந்து எதிர்பார்க்க முடியாத பரிசுகளை கொடுப்பவனாக இருக்கிறான். தான் கொடுக்கும் பரிசுகளை சுஜா பாதுகாக்கிறாளா என்று கவனிக்கிறான். அவள் தனது பரிசுகளுக்கு கொடுக்கும் கவனமே தன் மீதான அன்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறான். இக்கதையை துப்பறியும் கதை போல வாசிக்க செய்வது ராகேஷ் கொடுக்கும் வினோத பரிசுகளான சிலந்தி, ரங்க ராட்டினம், புரிந்து கொள்ள முடியாத இருள், பாடும் தேநீர் கெட்டில் மற்றும் மாத்திரையும் சவப்பெட்டியும் மட்டுமல்ல.
இத்தகு கதைகளில் வெளிப்படும் அக யதார்த்தத்தை நடைமுறை உலக நிகழ்வுகளை கூறி உணர்த்த முடிவதில்லை. எனவே பெருந்தேவி விசித்திர கணவனின் வினோத பரிசுகள் கதையை நாட்டார் தொன்ம கதை வடிவில் அமைக்கிறார். இந்த அம்சம் கதைக்கு புராண சாயலை கொடுத்து, அன்றாட தர்க்கத்தில் இருந்து விடுவிக்கிறது. புராண கதைகளின் சிறப்பம்சம் அவை ஒரே நேரம் வெகுமக்களும் அறிஞரும் ரசிக்கக்கூடியவை. பொது மக்களுக்கு அது சுவாரசியமான மிகை கற்பனை. அறிஞருக்கு அல்லது தேர்ந்த வாசகருக்கு கதை சம்பவங்கள் அனைத்தும் அக உண்மைகளை உணர்த்தும் உருவகங்கள்.
விசித்திர கணவனின் வினோத பரிசுகள் நாட்டார் தொன்ம கதையை கச்சிதமாக நவீன சிறுகதை வடிவத்தில் நிகழ்த்தியுள்ளது. எனவே ராகேஷின் பரிசுகளை ஒருவர் மற்றவருக்கு தன்னையே கொடுப்பதன் படிநிலைகளாக வாசிக்கலாம். கதை முழுக்க சுஜாவின் பார்வையில் இருந்து விரிவதால் தன்னை முற்றளிக்க முன்வரும் கணவனை ஏற்கும் மனைவியின் தத்தளிப்பாகவும் வாசிக்க முடிகிறது. உருவகத்தன்மையை அடைவதாலேயே ஒவ்வொரு பரிசுக்கும் தனித்தனி சுதந்திரமான வாசிப்புகளை வழங்க முடிகிறது.
எந்த எல்லைவரை உன்னை எனக்கு தருவாய், என்ற கேள்வி புதிதாக உருவாகி வரும் உறவில் மட்டும் இருக்கவேண்டியதில்லை. அக்கேள்வி கணவன் – மனைவி உறவில் எழும்போது இனிய பதற்றமாக இருக்கிறது. ஆனால் மகன் அம்மாவை பார்த்து அக்கேள்வியை கேட்கையில் கொந்தளிக்க வைப்பதாக இருக்கிறது. மகனின் அந்த கொந்தளிப்பை ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி கதை வெளிப்படுத்துகிறது.
அம்மாவுக்கு ஒரு ஆண் நண்பர் இருப்பாரோ என்ற ஊகமும், அதனை உறுதிப்படுத்தி கொள்வது வரையிலான மகனின் தவிப்புமே ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி. பெண்ணியத்தின் குரல்களில் ஒன்று, பெண் அம்மா மட்டுமல்ல அவளுக்கென்று தனிவாழ்க்கை ஒன்றுள்ளது என்பது. ஆம் நிச்சயமாக நம் அம்மாவை வெறும் அம்மாவாக, நம் தேவைகளை நிறைவேற்றும் தாதியாக மட்டுமே பார்ப்பது சரியில்லை தான். ஆனால் நம் அம்மா தனது வாழ்க்கையை பார்த்து கொள்கையில் அம்மா அல்லாமலும் ஆகிறார். அம்மாவை ஒரு பெண்ணாக ஏற்க முடியாமையின் மகனின் சிக்கலை பேசுகிறது. மகனின் பார்வையில் கதை சொல்லப்படுவது அவனது உணர்வுகளை வெளிச்சப்படுத்துகிறது. அம்மாவும் ஒரு பெண், அவருக்கும் தனி உலகம் உண்டு என்பதை ஏன் ஏற்க மறுக்கிறோம், தொந்தரவுக்குள்ளாக்கும் கேள்வி.
கேள்விக்கென்ன பதில் காரணம் தெரியாமல் கணவனை மன்னிக்க தயாரா என்ற கேள்வியை எதிர்கொள்ளும் மனைவியின் கதை. அவநம்பிக்கையின் கல்பட்டு பறத்தல் ஊர்தலாகியது என்ற பெருந்தேவியின் கவிதை வரியை நினைவூட்டியது. நம்பிக்கையில் இருந்து அவநம்பிக்கைக்கு தாவும் வேகத்தை படம் பிடிப்பது மட்டுமல்ல, உண்மையிலேயே நம் நேசத்திற்குரியவர்கள் மேல் எந்தளவுக்கு நமக்கு உரிமை இருக்கிறது.
அப்பாவுக்கு சென்னை பிடிக்கவில்லை கதை அன்பின் பெயரால் நாம் செய்யும் நுண் வன்முறையை சொல்கிறது. வன்முறையை அன்பு என்று நம்ப விழையும் ஒரு மனதின் வெளிப்பாடாக வாசித்தேன். அந்த உண்மை நம்முன் எழுந்து நிற்கையில் கதைச்சொல்லியால் தன் ஊருக்கே புறப்படும் அப்பாவை வெறுமே பார்க்க மட்டுமே முடிகிறது. உறவில் பிரிவு வருகையில் மட்டும் தான் நம் சுயநலத்தின் அப்பட்டமும் அபத்தமும் முகத்தில் அறைகிறது.
2
நினைவின் நிறம் இரண்டு, தாம்பத்யம் இரண்டு கதைகளும் ஆண் – பெண் உறவையே பேசுகின்றன. ஆனால் இருவரும் நெருக்கமானவர்கள், அதனால் ஏற்படும் பலவகை முரண்பாடுகளை, உரசல்களை என்று பேசுவதில்லை. பல்லாண்டு காலம் அருகருகே இருந்தாலும் அணுக்கமாக தான் இருக்கிறோமா, ஓர் உறவில் நாம் உணரும் நெருக்கம் உள்ளதா, இல்லையா, மனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் தனித்தனி முழுமை இருப்புகள். யாரையும் யாரும் முற்றறிந்து விட முடியாது என்ற நிதர்சனம், உறவுகளில் நெருக்கமாக தான் இருக்கிறோம் என்று முற்றுறுதி கொள்ள முடியாத விரிசலை ஏற்படுத்துகிறது. அப்போது ஆம் என்றும் அல்லவென்றும் மயங்குகிறோம்.
தொகுப்பில் நினைவின் நிறம் இரண்டு கதைக்கு முதன்மை இடம் உண்டு. இலக்கிய படைப்பின் வெற்றி என்பது, அது விவரிக்கும் புறவுலகம் தன்னியல்பாக அகத்தை குறிப்பதாக பரிணாமம் அடைவதில் இருக்கிறது. கதையில் குறிப்பிடப்படும் அத்தனை புற பொருட்களும் கதை மாந்தரின் அக உணர்வுகளின் பிரதிபலிப்புகளாக மாறி நிற்கின்றன. தன்னிச்சையாக தோன்றுவது போல தெரியும் நம் நினைவுகள் புறவுலகில் நாம் அடையும் புலனறிதல்களுடன் நுண்மையாக தொடர்புடையவை. அவை புறக்காட்சி ஒன்றிற்கு எதிர்வினையாக தோன்றி ஒன்றுடனொன்று தொடுத்து பின்னி விரிகின்றன.

பிறரை குறித்த நினைவுகளே அவர்கள் மேலான மதிப்புக்கும் நெருக்கத்திற்கும் அடிப்படை. காலம் செல்ல செல்ல நினைவுகள் மயங்கி தேய்ந்து குழம்புகின்றன. மத்தியதர வயது பெண்ணொருத்தி தனக்கு வேலையிடத்தில் நிகழ்ந்த பாலியல் அத்துமீறலை பதின்வயது மகளிடம் சொல்ல நினைக்கிறாள். ஆனால் மகளுக்கும் தனக்குமான இடைவெளி அவளை சொல்லவிடாமல் தடுக்கிறது. இதே சம்பவத்தை கணவனிடம் சொல்ல முயன்று மணவாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டத்தை நினைத்து பார்க்கிறாள். அவனிடம் சொல்ல முயன்று முதல்முறை தவிர்த்தது மட்டுமே நன்றாக நினைவிருக்கிறது. பிறகு நடந்தவை தெளிவாக நினைவில் இல்லை. மீண்டும் மீண்டும் தன் நினைவின் மரச்சட்டங்களை எண்ணி பார்க்கிறாள். அவற்றின் எண்ணிக்கை சரிவருவதே இல்லை.
வெளியூர் அலுவலக வேலை முன்னதாக முடிந்துவிட வீட்டிற்கு திரும்பியவள், கணவன் தன் நண்பர்களுடன் கூட்டாக ரேப் போன் வீடியோ பார்த்திருப்பதை கண்டு கொள்கிறாள். ஆனால் அதேசமயம் தற்காலத்தில் கணவனின் முகத்தை மிக அருகே பார்க்க கிடைக்கையில் அதையெல்லாம் தானாக விரும்பி பார்ப்பவன் என்றும் தோன்றவில்லை. நம் நினைவின் மேல் உறுதி கொள்ள முடியாமை மட்டுமல்ல, நெருக்கத்தின் எல்லை என்ன, என்ற கேள்வி எழுகிறது.
தாம்பத்யம் கதை அக்கறை உதாசீனமாகவும் உதாசீனம் அக்கறையாகவும் புரிந்து கொள்ளப்படும் அபத்தத்தை பேசுகிறது. மூன்றாம் நபர் பார்வையில் ஆசிரியர் கதை கூறுவதாலேயே ஒரு புன்னகை எழுகிறது. நாம் ஒருவருக்கொருவர் உதவி கொள்ள முடியும், ஒன்றாக வாழ முடியும். அகத்தில் மிக தொலைவாக எதிரெதிர் எண்ணங்களுடன் இருக்க முடியும்.
3
மூன்றாவது இழையாக, பெருந்தேவியின் கதைகளில் தனித்திருக்கும் மனதில் ஏற்படும் கற்பனைகளின் சாத்தியமான எல்லை தொடர்ச்சியாக விசாரிக்கப்படுகிறது. அதன் வழியாக காலம், உறவுகளை மனிதன் எப்படி புரிந்து கொள்கிறான் என்ற அடிப்படை வினாக்களை நோக்கி செல்கிறார். இந்த வரிசை கதைகளில் அந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுக்காரி, மழை நிற்கப்போவதில்லை இரண்டு கதைகளும் முக்கியமானவை.
அமெரிக்காவில் பணியின் காரணமாக தனித்து வசிக்கும் மதுமதி பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிஸஸ் தெரசா என்னும் பேயை சந்திக்கிறாள். மிஸஸ் தெரசாவுடனான பழக்கத்தின் வழி அவள் பேயாக தான் இருக்க வேண்டும் என நினைக்கிறாள். குடியிருப்பு பகுதி மேலாளர் ஆஷ்லி அப்படி ஒரு பெண் இருந்தார் என்று சொன்னதை கேட்டு மதுமதி ஏமாற்றமடைவதுடன் கதை முடிகிறது.
மதுமதி, தன் வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட போது உதவியவர், அவளது வாழ்க்கை கதையை காது கொடுத்து மறுப்பின்றி கேட்டதாலேயே மிஸஸ் தெரசா உண்மையான மனிதர் என்று நம்புகிறாள். தெரசாவின் தர்க்கத்திற்கு மீறிய கதைச்சொல்லலை மறுப்பின்றி கேட்கிறாள். பின்னர் தான் தெரசா கூறிய கதையில் உள்ள இடைவெளிகளை நினைவுகூர்ந்து அவளது இருப்பை குறித்து சந்தேகம் அடைகிறாள். இறுதியில் மதுமதி அடையும் ஏமாற்றம் ஏன்.
பிறர் கூறும் கதைகளின் வழி ஒருவரது இருப்பை ஏற்பதை விட, நமது கதைகளை கேட்டு நம் இருப்புக்கு சான்றளித்தாலே மிக முக்கியமானது. தெரஸா பேய் அல்ல என்றால், மதுமதிக்கு அவளது இருப்பும் காலாதீதமானது அல்ல என்றாகிறது. மதுமதி, தெரஸா பற்றி தனக்கு தெரிந்தவற்றை கொண்டு நடைமுறை தர்க்கத்திற்கு ஒவ்வாத ஒரு புனைவை உருவாக்கி கொள்கிறாள். காலம் கடந்த அமானுஷ்ய அனுபவத்தை எதிர்பார்க்கும் மனிதனின் உள்ளக்கிடக்கையாகவே மழை நிற்கப்போவதில்லை கதையும் விரிகிறது.
பெருந்தேவி தன் கதைகளில் அமானுட அனுபவங்கள் என்றால் என்ன என்று தேடிபோவதில்லை. தொடர்ச்சியாக அப்படியான ஒன்றை உருவாக்கி கொள்ள விழையும் மனமயக்கத்தின் மீதே கவனத்தை குவிக்கிறார். தகவல்களில் உள்ள மெல்லிய இடைவெளிகளை தன் பாட்டுக்கு புனைந்து மானுட இருப்பை காலமற்றதாக கற்பனை செய்துகொள்ளும் அந்த வேட்கை என்ன, உதாரணத்திற்கு மழை நிற்கப்போவதில்லை கதையில் கதைநாயகன் தனக்கு சோறிடும் பெரியவரின் சூம்பிய வலதுகையையும் தூணில் உள்ள கையில்லாத சிற்பத்தையும் ஒன்று தான் என நினைத்து அச்சம் கொள்கிறான். எத்தனை எளிதில் நம்முடைய தர்க்கத்தை உதற தயாராக இருக்கிறோம் என்பதை ஆராய்கிறார். இந்த வரிசையில் பாப் சாந்தி, பெயராய் பின்தொடர்தல் கதைகளும் இணைகின்றன.
இவை தவிர தொகுப்பில் எஞ்சியது, மயான கொள்ளை என இரண்டு கதைகள் உள்ளன. தேர்ந்த எழுத்தாளர் கைப்பழக்கம் வழியாக வடிவ கச்சிதம் கொண்ட கதைகளை உருவாக்கி விட முடியும் என்பதற்கான உதாரணங்கள் அவை. வடிவத்துடன் எழுத்தாளரின் தனிநோக்கு என்னும் பெருந்தேவியின் முத்திரை இல்லாத கதைகளாக எஞ்சி விடுகின்றன.
4
உறவுகளில் நெருக்கத்தின் எல்லை, குடும்ப வன்முறை, தனிமனித மனம் கொள்ளும் மனமயக்கங்கள் ஆகிய கருப்பொருள்கள் பெருந்தேவியின் கவிதை உலகத்தை சேர்ந்தவையே. ஆனால் பெருந்தேவி சிறுகதைகளில் நிகழ்த்தும் தனித்துவம் என்ன ? பெருந்தேவிக்கு சிறுகதை வடிவம் ஏன் தேவைப்படுகிறது?
கவிதை எப்போதும் உண்மைகளை கூறுகிறது. அந்த உண்மை சாந்தம் முதல் பீபத்சம் வரை ஒன்பது ரசங்களின் ஓராயிரம் கலவையாக மனதை பல்வேறு நிலைகளுக்கு இட்டுச்செல்லலாம். கவிதையின் சுருக்கமும் செறிவும் உண்மையை முள் தைப்பது போல வாசகனுக்குள் செலுத்தவே உருவாக்கம் பெற்றவை. ஆனால் ஒரு விஷயம் உண்மையா, இல்லையா, உண்மைகளை எப்படி உருவாக்கி கொள்கிறோம், அதன் மேலான நம் எதிர்வினைகள் என்ன, என்ற வினாக்களை ஆய்வதற்கு சிறுகதையும் நாவலுமே இலக்கிய வடிவங்கள். பெருந்தேவிக்கு உண்மை என்று நாமுணரும் விஷயங்களை நெருங்குகையில் மனம் கொள்ளும் மயக்கங்களை ஆராயவே சிறுகதை வடிவம் தேவைப்படுகிறது.
இக்கதைகளில் சிறுகதையின் செவ்வியல் வடிவான ஒரு முனையில் தொடங்கி சிக்கலை நோக்கி சென்று இறுதி திருப்பம் எட்டப்படுவது இல்லை. மாறாக ஒவ்வொரு கதையையும் கிரேக்க செவ்வியல் நாடகங்கள் போல மைய சிக்கலில் இருந்து தான் தொடங்குகிறார். அந்த மைய சிக்கல் எதிர்கொள்ளப்பட்ட விதம் கடந்த காலத்தை நினைவு கூர்ந்து சொல்லும் கதைக்கூறலாக இருக்கிறது. இந்த அம்சம் சிறுகதைகளை துப்பறியும் கதைகளை போல வாசிக்க செய்து சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறது.
கதைச்சொல்லல் அம்சம் என்பது பெருந்தேவியின் சிறுகதைகள் அனைத்திலும் மைய அம்சமாக உள்ளது. குறிப்பாக நினைவுகளாக மட்டுமே எஞ்சி நிற்கும் நிகழ்வுகளை கதை மாந்தர் வாசகருக்கு சொல்வதாகவோ அல்லது ஆசிரியரின் நேரடி கூற்றாகவோ கதைகள் சொல்லப்படுகின்றன. மூன்றாம் நபர் கோணத்தில் கதை சொல்லப்படுவதால் ஒட்டுமொத்தமாக வாழ்க்கையில் சில விஷயங்கள் ஏன் இப்படி உள்ளன, என்பதே பெருந்தேவியின் தேடலாக உள்ளது. இத்தகு தத்துவார்த்த விசாரணைகளுக்கு சிறுகதை வடிவம் சிறப்பாக பயன்படுகிறது.
5
மூன்று அடிப்படை கேள்விகளை நோக்கி விரியும் பெருந்தேவியின் கதைகளின் மையமாக இருப்பது மனிதனின் தனிமை தான். இந்த கதைகளின் மனிதர்கள் பெரும்பாலும் தனித்தவர்கள் அல்லது சுற்றத்துடன் இருந்தும் அகத்தே தனிமையை உணர்பவர்கள். அவர்களது தனித்திருக்கும் அகத்தில் நனவும் நினைவும் கொள்ளும் மயக்கமாக விரியும் கதைகள் இவை.

செடிகளில், மரக்கிளைகளில் பின்னி விரிந்திருக்கும் சிலந்தி வலை பார்ப்பவருக்கு வியப்பை அளிக்காமல் இருப்பதில்லை. மிக மெல்லியவை. ஒரு வலுவான காற்றில் கிழிந்து விடுபவை. ஆனால் தன்னினும் எடைமிக்க சிலந்தியை தாங்குபவை. ஒளி விழும் கோணம் சற்று மாறினாலும் பார்வையில் தென்படாமல் மாயம் காட்டுபவை. எனினும் கைளால் தொட்டு உணர கூடுபவை. காற்றின் விசைக்கேற்ப தொடர்ந்து கிழிந்தும் ஒரு இழை மேல் பிறிதொன்று ஏறியும் வடிவம் மாறுபவை. இந்த கதையின் மனிதர்களும் சிலந்தியை போல தங்களை சுற்றி நினைவின் வலையை பின்னுகிறார்கள். வாழ்க்கையின் எதிர்பாராமை என்னும் காற்றில் அது வடிவம் மாறுகையில் இருக்கிறதா, இல்லையா, உண்மையா, பொய்யா, என்று மயங்குகிறார்கள்.
*
பின்குறிப்பு: 1. குரு நித்ய சைதன்ய யதியின் உரை ஒன்றில் இருந்து எடுத்தாளப்பட்டது.
*
