ஐயை கொஞ்சும் குழந்தை – சஜு
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் ஆரம்பிக்கும் போது உனக்கு தூக்கம் உண்டா ? உனக்கு தூக்கம் உண்டா ? என்ற கேள்வி தான் எங்கள் ஊர் இளைஞர்களிடம் சுழன்று கொண்டிருக்கும். நட்பு வட்டாரத்தில் யாருக்காவது தூக்கம் கிடைத்து விட்டால் தூக்கம் உள்ள சக நண்பர்களோடு இணைந்து தூக்கத்திற்கு நிற்பதற்கு ஏதுவாக முன்னதாகவே ஜோடிகளை உறுதி செய்து வைத்துக் கொள்வதும், உற்ற நண்பர்களுக்கு தூக்கம் கிடைக்கவில்லையென்றால் தெரிந்த நபர்கள் யார் மூலமாவது தூக்கம் பெற்று அவர்களுக்கு அளிப்பதுமென அந்தந்த முடிப்புரைக் கோவில்களில் தூக்கத் திருவிழா தொடங்கும் முந்தைய நாள் வரையிலான அந்தப் பரப்பரப்பு அச்சடங்கினை நிறைவேற்றிக் கொடுக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு பேரானந்தம் தரக்கூடிய ஒன்றாகும்.
கன்னியாகுமரியிலும், திருவனந்தபுரத்திலும் அமைந்துள்ள முடிப்புரைக் கோவில்களில் தூக்க நேர்ச்சை என்பது அங்கு நடைபெறும் பிரதானச் சடங்குகளில் ஒன்றாகும். குழந்தை பாக்கியம் வேண்டி நேர்ச்சை நேந்தவர்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்ததும் இந்நேர்ச்சையை நிறைவேற்றிக் கொடுக்கும் பொருட்டு தங்கள் குழந்தைகளுக்கு தூக்கம் நடத்துகின்றனர். அதற்காக அவர்கள் இந்நேர்சையை நிறைவேற்றி கொடுக்கும் ஒருவரை அணுகுகின்றனர். அந்நபர் சம்பந்தப்பட்ட முடிப்புரைக் கோவில் வளாகத்தில் ஏழு நாட்கள் தங்கி விரதமிருந்து இந்நேர்ச்சையை நிறைவேற்றிக் கொடுப்பர். இப்புராதனச் சடங்கு கிட்டத்தட்ட முந்நூறு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருவதோடு ஒவ்வொரு வருடமும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இத்தூக்க நேர்ச்சை நடைபெறும் முடிப்புரைக் கோவில்கள் பொதுவாக சிலைகளற்ற வழிபாடு கொண்டவையாகும். புரை என்பது தமிழில் குடிலைக் குறிக்கும். முடி என்பது கூந்தலாகும். அதாவது முடி இருக்கும் குடிலே முடிப்புரையாகும். அன்னையின் கூந்தலையே இங்கு மரச்சிலையாக வழிபடுகின்றனர். குமரி மாவட்டத்தில் திருவட்டாருக்கு அருகில் உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரை, கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் முடிப்புரை, மூவாற்றுக்கோணம் பத்ரகாளியம்மன் முடிப்புரை ஆகியவை தூக்க நேர்ச்சைக்கு மிகவும் பிரசித்திப்பெற்ற முடிப்புரைகளாகும். அதுபோல திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள பாச்சல்லூர் பத்ரகாளியம்மன் முடிப்புரை, நெய்யாற்றின்கரை பத்ரகாளியம்மன் முடிப்புரை, கொளத்தூர் பத்ரகாளியம்மன் முடிப்புரை ஆகியனவும் பிரசித்திப்பெற்ற தூக்க முடிப்புரைகளாகும். இதில் கொல்லங்கோடு முடிப்புரையில் தான் அதிக அளவிலான குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. இங்கு ஓராண்டில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தூக்கம் நடத்தப்படுகிறது.

இக்கோவில்களில் உள்ள திருமுடி (சிலை) மரத்தால் செய்யப்பட்டதானதால் அச்சிலைக்கு திருமஞ்சனம் நடைபெறுவதில்லை. மாறாக திருமஞ்சனத்திற்காகப் பிரத்யேக சிலை ஒவ்வொரு முடிப்புரையிலும் இருக்கும். சில கோவில்களில் கலைமான் கொம்பை திருமஞ்சனச் சிலையாக வழிபடுகின்றனர். சில கோவில்களில் கண்ணாடி பிம்பத்தை பறைசாற்றும் விதமாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலையை வழிபடுகின்றனர். ஆனால் அனைத்து முடிப்புரையிலும் திருமுடியே மூலச்சிலையாகும்.
பலா மரத்தில் செதுக்கப்பட்ட அரைவட்ட வடிவ மரச்சிற்பமே திருமுடி. இத்திருமுடி அன்னையின் விரிசடையை உருவகமாகக் கொண்டு உருவாக்கப்படும் ஓர் புடைப்புச் சிற்பமாகும். இது “சர்ப்பக்கட்டு” என்ற சிற்பச் சாஸ்திர முறைக்குட்பட்டது. ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த இரு நாகங்களையே இங்கு விரிசடையாகச் செதுக்கி வைத்திருப்பர். இதில் அநேகம் சிற்பங்கள் முக அமைப்போடும், பெரும்பாலான சிற்பங்கள் முக அமைப்பில்லாமலும் அமைந்திருக்கும். விரிசடையோடு பெரிய இரு காதணிகளும் திருமுடியில் இணைந்திருக்கும். இக்காதணியில் பிளிறும் யானைகளின் புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கொல்லங்கோடு, பாச்சல்லூர் போன்ற பழைமை வாய்ந்த பல முடிப்புரைகளின் திருமுடிகள் தங்கத்தால் வேயப்பட்டிருக்கும். அநேகம் முடிப்புரைகளின் முடிகள் வெள்ளியாலும், செம்பாலும் வேயப்பட்டருக்கும். ஆனால் முடியின் சிற்பம் பலா மரத்தால் செதுக்கப்பட்டதாகவே இருக்கும்.

அனைத்து திருமுடியும் தலையில் வைத்து ஆடும் விதமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். இம்முடியை தலையில் ஏந்தும் நபரை “வாத்தி” என்று அழைப்பர். வாழ்த்தி என்ற சொல்லே வட்டார வழக்கில் மருவி வாத்தி என்றானது. இவரே அன்னைக்கு பிரதானப் பூசகரராகவும் இருப்பர். இவ்வாத்தி அநேகம் முடிப்புரைகளில் கொல்லர் சமுகத்தினராகவும், அநேகம் முடிப்புரைகளில் கணியர், தண்டான் போன்ற ஒடுக்கப்பட்ட சமுகத்தினராகவும் உள்ளனர். அனைத்து முடிப்புரைகளையும் நாயர் சமூகத்தினரே நிர்வகிக்கவும் செய்கின்றனர்.
துர்மரணமடைந்த நாட்டார் பெண் தெய்வங்களை காளியாக உருவகம் கொண்டு இம்முடிப்புரைகளில் வழிபடுகின்றனர். துர்மரணம் கொண்டதால் இத்தகைய நாட்டார் பெண் தெய்வங்களுக்கு குழந்தைகள் மேல் அலாதியான பிரியம். குழந்தைகளைக் கொஞ்சுவதும், தாலாட்டுவதும், மார்போடு அணைப்பதுமென தாய்மை நிலையை உணர்வது இப்பெண் தெய்வங்களுக்கு அதீத ஆசை என்று பழங்கதைகள் கூறுகின்றன. அதன் வடிவமாகவே தூக்கம் என்னும் குழந்தைகளுக்கான சடங்கு இங்கு பின்பற்றப்படுகிறது என்பது ஐதீகம்.
தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் ரத்தத்தை “தூக்க வண்டி” என்று அழைப்பர். தேக்காலான இரண்டு மரத்தடிகளை நெம்புகோல் தத்துவத்தின் அடிப்படையில் அந்த வண்டியோடு இணைத்திருப்பர். இம்மரங்களுக்கு “தூக்கவில்” என்று பெயர். மரங்களின் மேல்பாகத்தை தனித்தனியாகவும், அடிப்பாகத்தை ஒன்றோடொன்று சேர்த்தும் கட்டியிருப்பர். அதில் ஒரு கப்பியினைக் கட்டி அதன் வழியே கயிற்றினை இழுத்து அதனை வண்டியின் அடிபாகத்தோடு எளிதில் அவிழ்ப்பதற்கு ஏதுவாக கட்டிவைத்திருப்பர். இக்கயிற்றின் வழியே அம்மரங்களை மேலே இழுக்கவும், கீழே இறக்கவும் செய்வர். இருபது அடி உயரமுடைய தேக்கு மரங்களில் இரண்டு மரச்சட்டகங்களை இணைத்து அதன் வழியே மரத்திற்கு இரண்டு நபர்கள் வீதம் மொத்தம் நான்கு நபர்களை கயிற்றினால் கட்டி தொங்க விடுவார்கள். அவர்களது கைகளில் குழந்தைகளை கொடுத்ததும், வண்டியின் அடிபாகத்தில் கட்டப்பட்ட கயிற்றினை இழுத்து அம்மரங்களை மேலே உயர்த்துவர். இரு மரங்களும் ஓரே நேரத்தில் முழுவதுமாக மேலே உயர்ந்ததும் வண்டியை இழுத்து ஆலயத்தை சுற்றி ஒருமுறை வலம் வருவர். முழுமையாக ஆலயத்தை வலம் வந்ததும் நேர்ச்சை நிறைவுற்று மீண்டும் கயிற்றினை அவிழ்த்து மெதுவாக அம்மரங்களை கீழிறக்கி அத்தூக்காரர் கையிலிருந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பின் தூக்காரர்களை கட்டிய கயிற்றினை அம்மரத்திலிருந்து அவிழ்த்துக் கொள்வர். இத்துடன் தூக்கம் நிறைவுற்று அந்நபர் விரதத்தை முறித்து அக்கோவில் வளாகத்திலிருந்து வெளியேறிக் கொள்வர். எண்ணிக்கையில் தூக்கம் குறைவாக நடக்கும் முடிப்புரைக் கோவில்களில் அனைத்து தூக்கமும் முடிந்த பிற்பாடே தூக்காரர்கள் அக்கோவில் வளாகத்தை விட்டு வெளியேறிக் கொள்ள இயலும்.

கண்ணகி மதுரையை எரித்த மீனபரணி நாளில் தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. இது அந்தந்த கோவில்களைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால் பிரதான முடிப்புரையானக் கொல்லங்கோட்டில் பங்குனி நாளில் வரும் பரணி நட்சத்திரத்தில்தான் தூக்கம் நடைபெறும் என்பது தொன்று தொட்டே வழக்கத்தில் இருக்கும் ஒன்று. பரணி நட்சத்திரம் தொடங்கும் பத்து நாட்கள் முன்னதாகவே சம்பந்தப்பட்ட கோவிலில் திருவிழா தொடங்கிவிடும். திருவிழாவின் மூன்றாம் நாளில் தூக்காரர்களுக்கான மருத்துவ பரிசோதனை கோவில் வளாகத்தில் நடைபெறும். இம்மருத்துவ பரிசோதனையில் தகுதியடையும் நபரே தூக்க நேர்ச்சைக்கு அனுமதிக்கப்படுவர். நேர்ச்சை நேர்ந்தவர் நேர்ச்சைக்காரர் என்றும் அவருக்கு தூக்கம் நிறைவேற்றிக் கொடுக்கும் நபர் தூக்க்காரர் என்றும் அழைக்கப்படுவர். மருத்துவ பரிசோதனைக்கு கொடுக்கும் விண்ணப்ப படிவத்தில் நேர்ச்சைக்காரர் பெயரும், தூக்ககாரர் பெயரும் நிரப்பிக் கொடுப்பர். இவ்வாறு கொடுக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை அடுத்த நாள் குலுக்கி யாருக்கு எத்தனையாவது வண்டி என தீர்மானிப்பர். தூக்க வண்டி ஒருமுறை கோவிலை முழுமையாக வலம் வருவது வண்டி எண்ணிக்கையில் ஒன்றாகக் கணக்கிடப்படும். ஒரு வண்டியில் நால்வர் என எத்தனை நபர்கள் விண்ணப்படிவம் கொடுத்துள்ளார்களோ அத்தனை நபர்களது விண்ணப்பமும் குலுக்கி எடுக்கப்பட்டு அவர் அவர்களுக்கு கிடைக்கும் வண்டி எண்ணைக் குறித்து கொள்வர். கொல்லங்கோடு முடிப்புரையைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட முந்நூறு வண்டிகளுக்கு மேல் தூக்கம் நடைபெறும். அதாவது மொத்தம் ஆயிரத்தில் இருநூறு குழந்தைகளுக்கு மேல் இங்கு தூக்கம் நிறைவேற்றப்படும். ஒருமுறை முந்நூற்று அறுபது வண்டி வரை இங்கு தூக்கம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குலுக்கல் முடிந்ததும் தூக்காரர்களுக்கு சிவப்பு பட்டும் இடுப்பில் அணிய பச்சை நிறத்திலான சிறு கச்சையும் கொடுக்கப்படும். அக்கச்சையின் பின்புறம் அந்தத் தூக்காரரின் தூக்க எண் பொறிக்கப்பட்டிருக்கும். அன்று முதல் தூக்க நேர்ச்சை முடியும் வரை அதை மட்டும் தான் தூக்ககாரர்களால் அணிய இயலும். காலையும், மாலையும் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள குளிக்கும் இடத்திற்கு நடந்து சென்று அங்கு கட்டப்பட்டிருக்கும் நீளமான தொட்டியிலிருந்து தண்ணீரைக் கோரி குளித்து விட்டு மீண்டும் நடந்து கோவிலையடைந்ததும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு நமஸ்காரம் என்று பெயர். இந்த நமஸ்காரம் முதல் நாளில் மூன்று சுற்றென தொடங்கி ஏழாவது நாளில் ஒன்பது சுற்றுடன் நிறைவுறும். அதாவது மூன்றாம் திருவிழா அன்று மூன்று சுற்றுடன் தொடங்கி ஒன்பதாவது திருவிழாவில் ஒன்பது சுற்றுடன் முடிவடையும். ஒரு சுற்றுக்கு மூன்று புஷ்யப் வீதம் நான்கு திசைகளில் செய்ய வேண்டும். அவ்வாறு மூன்றாம் நாள் மாலையில் பன்னிரெண்டு வீதம் அடுத்த நாள் முதல் காலை, மாலையென ஒன்பதாவது நாள் வரை மொத்தம் இருநூற்றி ஐம்பதாறு எண்ணிக்கைக்கு மேல் புஷ்யப் எடுக்க வேண்டும். இது தூக்கம் தூங்குவதற்காக தூக்ககாரர்கள் தங்கள் உடலை தயார் படுத்தும் நடைமுறை. கண்டிப்பாக இதை அனைத்து தூக்ககாரர்களும் செய்ய வேண்டும். இதை அனைவரும் செய்கின்றனரா என கோவில் நிர்வாகிகள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.

திருவிழாவின் ஒன்பதாவது நாள் மாலை வண்டியோட்டம் என்று அழைக்கக்கூடிய வெள்ளோட்டம் நடைபெறும். இதில் அவ்வண்டியை செய்த தச்சர்கள் இருவர் அத்தூக்கவில்லில் தூங்குவர். இது தாங்கள் செய்த வண்டி உறுதியோடு தான் இருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு காட்டும் முறை. ஆகையால் முதன் முதலாக அவர்களே தூக்கம் தூங்கி அம்மக்களுக்கு வண்டியின் தன்மையை நிரூபிப்பர். வண்டியோட்டம் முடிந்ததும் மூதன்னைக்கு தூக்கம் காண்பதற்காக கருவறைக்கு வெளியே பிரத்யேக பந்தல் ஒன்று பச்சை தென்னை ஓலையால் கட்டப்படும். இவ்வோலையை தூக்கக்காரர்களே முடைவர். அடுத்த நாள் காலையில் தூக்கம் காண்பதற்காக மூதன்னை பச்சை பந்தலில் எழுந்தருளுவாள். சரியாகக் காலை ஆறரை மணியளவில் முதல் தூக்கமான தேவி தூக்கத்தோடு புராதனமான தூக்கம் இனிதே துவங்கும்.

அந்தந்த வண்டியின் எண் வரிசைப்படி ஒவ்வொரு தூக்ககாரர்களும் தனது தூக்கம் நெருங்கும் போது கச்சை கட்டும் இடத்திற்கு செல்ல வேண்டும். கச்சை கட்டுவது என்பது தூக்க வில்லில் தொங்குவதற்காக தூக்காரர்களின் மார்பு பகுதியிலும், இடுப்பிலும் கட்டப்படும் கயிறாகும். மூன்று நபர்கள் சேர்ந்து கட்டிங் பிளேயர் வைத்து இறுக்கித் தூக்ககாரர்களுக்கு இதை கட்டிக் கொடுப்பர். அதே சமயம் முதுகு பகுதியில் ஊக்கு போன்ற காகிதப் பின்னால் ஒருமுறை குத்துவார்கள். இது குருதி தர்பணத்திற்காக இரத்தம் எடுப்பதற்காகக் குத்தப்படுவதாகும்.
இறுகக் கட்டப்பட்ட கச்சையால் தூக்ககாரர்களுக்கு நடப்பதற்கு சற்று சிரமம் ஏற்படும். கச்சை கட்டும் இடத்தில் இருந்து தூக்கம் வண்டி நிற்கும் இடமான வில்லுமூடு வரை வருவதற்கு அவர்கள் மிகுந்த கடினப்படுவர். அதன்பின் அவர்களை தூக்கி மரச்சட்டகத்தோடு கட்டி விட்டு கைகளில் விபிதிக் கொடுத்தப்பின் நேர்ச்சை குழந்தைகளை ஒப்படைப்பர். அடுத்தச் சில நிமிடங்களுக்கு அக்குழந்தைகளுக்கு தாயாகவும், தந்தையாகவும், தாத்தாவாகவும், மாமாவாகவும், சித்தப்பாகவும், சகோதரனுமென அனைத்து உறவு முறையாகவும் அத்தூக்காரர் மாறிவிடுவார். அக்குழந்தையைக் கையில் ஏந்தியது முதல் மீண்டும் அதனைப் பத்திரமாக அதன் தாயின் கையில் அளிப்பது வரை அத்தூக்காரனின் கடமை என்பது அளப்பரியது. தூக்க வண்டி ஆலயத்தைச் சுற்றி ஒருமுறை வலம் வந்ததும் தூக்கம் நிறைவுறும் ஆனால் அவ்வொரு வலத்திற்குண்டான தருணங்கள் முழுவதும் அக்குழந்தையை பத்திரமாக பாதுகாக்கும் பொறுப்பு தூக்காரரின் மிகப்பெரும் கடமையாகும். தூக்கம் நிறைவடைந்து குழந்தையை அதன் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்ததும் தன் நேர்ச்சையை நிறைவேற்றி தந்த தூக்ககாரருக்கு செய்ய வேண்டிய உரிய மரியாதையை நேர்ச்சைக்காரர்கள் செய்வர். அது பணமாகவும், பொன்னாகவும், ஆடைகளாகவும் இருக்கும். அத்துடன் தூக்ககாரர் தன்னுடைய விரதத்தை முறித்துக் கொண்டு அவ்வாலய வளாகத்தை விட்டு வெளியேறியும் கொள்ளலாம்.

அனைத்து தூக்கமும் முடிந்த பிற்பாடு அன்னைக்கு பலி நல்குவதற்காக தூக்ககாரர்களிடம் எடுத்தக் குருதியை சமர்பணம் செய்வர். அத்துடன் அவ்வாண்டிற்கான தூக்கத்திருவிழா இனிதே நிறைவுக் கொள்ளும்.

முடிப்புரைகளைத் தவிர முற்காலங்களில் மற்ற சில கன்னித் தெய்வங்களுக்கும் தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டு வந்தன. கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை நடந்தது பற்றி வரலாற்றில் சான்றுகள் பதிவாகியுள்ளன. கிறித்தவ இறை பணியாளரான சாமுவேல் மேட்டீர் 1870 – ல் எழுதிய “The Land of Charity” எனும் புத்தகத்தில் இது குறித்த பதிவுகளை ஆவணப்படுத்தியுள்ளார். தூக்கத்தில் தொங்கிய ஓர் ஆணும், அவரது கையில் இருந்த குழந்தையும் தூக்க வில்லில் இருந்து கீழே விழுந்ததாகவும், அதன்பின் திருவிதாங்கூர் அரசாங்கம் இதை தடை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். எத்தனை வருடங்கள் தூக்க நேர்ச்சை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைமுறையில் இருந்தது என்று அறியவில்லை இருப்பினும் 1860 களில் இது தடை செய்யப்பட்டது என்பதை மேட்டீர் நூல் மூலம் உறுதியாகிறது. மேலும் பாண்டிச்சேரியிலும் தூக்கம் வேறொரு வடிவில் நடைப்பெற்றது பற்றியும் சான்றுகள் பதிவாகியுள்ளன.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் நான் தூக்கம் தூங்குகிறேன். ஒவ்வொரு முறையும் ஓர் குழந்தையை என் கைகள் ஏந்தும் போது அக்குழந்தை பத்து வருடமோ பதினான்கு வருடமோ தவமிருந்து பெற்ற குழந்தையாகவே இருக்கும். ஒவ்வொரு வருடமும் இப்படி குழந்தை பாக்கியம் இல்லாமல் வருடக்கணக்காகக் காத்திருந்து குழந்தை வரம் பெற்று கொள்ளும் பெண்கள் தங்களுக்கு மூதன்னையின் வரத்தாலே குழந்தை பேறு கிடைத்தாக பெரும் நம்பிக்கைக் கொண்டு இத்தகைய தூக்க நேர்ச்சையை நடத்துகின்றனர். அந்தரத்தில் குழந்தை ஆலயத்தை வலம் வைக்கும் போது அம்மூதன்னை அக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்வதாகவே கருதப்படுகிறது. இது அக்குழந்தைகள் அழுதுக்கொண்டே சிரிக்கும் சிரிப்பின் மூலமாகத் தூக்ககாரர்கள் உணர்ந்தும் கொள்ளவும் செய்வர். தனக்கு பாக்கியம் வாய்க்காத குழந்தை வரத்தை மக்களுக்கு அளித்து அக்குழந்தைகளை தன் குழந்தைகளாகவே கொஞ்சி மகிழ்கிறாள் தெய்வமாகக் குடிகொள்ளும் கன்னி.
*

Commentஅன்பு தம்பிக்கு,
நம் முன்னோர்களின் பாரம்பரிய நேர்ச்சை திருவிழாவான தூக்குத் திருவிழாவைப் பற்றி நீ எழுதிய கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது! நம் மக்களின் நம்பிக்கை, பக்தி, பாரம்பரியம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறாய். இது போன்ற நம் கலாச்சார அடையாளங்களை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளவும் பாதுகாக்கவும் உன் இந்த முயற்சி பெரிதும் உதவும்.
தொடர்ந்து இது போன்ற சிறப்பான படைப்புகளை நீ படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்!
அன்புடன்,