சௌந்தர்யலஹரீ முன்னுரை – டெபோரா புகானன்

(சங்கராச்சார்யா எழுதிய சௌந்தர்யலஹரீ பாடல்களுக்கு நித்ய சைதன்ய யதி உரை எழுதியுள்ளார். அந்நூலின் பதிப்பிற்கு அவரின் மாணவர்களில் ஒருவரான டெபோரா புகானன் எழுதிய முன்னுரை ஆனந்த் ஸ்ரீனிவாசன்மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது)

சௌந்தர்யலஹரீ

பாரதம் எனும் பெரும்பரப்பில் தோன்றிய பல மெய்யியல், சமய மரபுகள் தம்முள் பின்னிப்பிணைந்து செழுமையான பண்பாட்டுப் பின்புலம் ஒன்றை உருவாக்கியுள்ளன. இதிலிருந்து தோன்றிய சௌந்தர்யலஹரீ, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூறு பாடல்கள் கொண்ட முக்கியமான படைப்பு. அன்னை வழிபாட்டை மையமாகக் கொண்ட ஶ்ரீவித்யா தாந்த்ரீகப் பள்ளிகளுக்கு இது சாரமான நூல். ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, அத்வைத வேதாந்தத்தின் உறுதிப் பற்றாளரான சங்கரர் தமது இறுதி நாட்களில் எழுதிய நூல்களில் ஒன்று இது. முரண்பட்ட இவ்விரு மரபுகளுக்கிடையில் சௌந்தர்யலஹரீயின் இடம் என்பது, இந்திய மெய்யியல் வரலாற்றின் அடிப்படைப் பண்புகளையே எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

மொகஞ்சதாரோவின் சிந்து சமவெளி நாகரிகத்தில் தொடங்கி, ஆரியப் படையெடுப்பு, மைய ஆசிய நாடோடிகள் குடியேற்றம், அரபு வணிகர் வருகை என தொடர்ந்து, இறுதியாக முகலாயர் ஆதிக்கம், ஐரோப்பிய காலனியாக்கம் வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட புதிய புதிய தொடர்புகளால், இந்திய மரபு தனது கருத்துக்களை மறுமதிப்பீடு செய்தபடி விரிவாக்கிக் கொண்டே சென்றது. ஒவ்வொரு காலகட்டமும் தனது தேவைக்கேற்ப தனது தத்துவப் பாரம்பரியத்தை உருமாற்றிக்கொண்டே வந்தது. சங்கரர், நாடோடி ஆசிரியராக, இந்தியா முழுக்க திரிந்தபடி, உபநிடதத்துக்கான உரைகளை எழுதியபோது

  • மிகையாக போற்றப்பட்டதும், பிளவுபட்டதுமாக இருந்த இந்துமதம் வீழ்ச்சி அடைந்தபடி இருந்தது;
  • இதனால் வழக்கத்திற்கு மாறான, பகுத்தறிவுக்கு ஒவ்வாத சடங்குகள் பெருகின;
  • சீர்திருத்தத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட பௌத்தம் இந்துமதத்திற்கு பெரும் சவாலாக இருந்தது;
  • தென்னகப் பேரரசுகளும், பண்பாடும் தென்கிழக்கு ஆசியா வரை பரவிய போது சங்கரரின் பிறப்பிடமான மலபார் கடற்கரைப் பகுதி நாகரிகமயமானது; வணிகப் பாதையில் கிறிஸ்தவ, சீன, இந்திய மரபுகள் ஒன்றுகலந்தன.

இத்தகைய நிலையில்தான், சங்கரர் தனது உரைகளை (பாஷ்யங்களை) எழுதத் துவங்கினார். அவற்றின் வழியாகவும், பௌத்த தத்துவவாதிகளுடன் அவர் மேற்கொண்ட புகழ்பெற்ற விவாதங்கள் மூலமாகவும் உபநிடத ரிஷிகளின் மெய்யியல் தரிசனங்களை மீட்டெடுத்து புத்துயிர் அளித்தார். கால-வெளியால் பகுக்கப்படாத, சமரசமற்ற ஒருமை தரிசனத்தை முன்வைப்பவை உபநிடதங்கள். அவை நமது அன்றாடச் செயல்பாடுகளோடு தொடர்புறுத்திக் கொள்ளக்கூடிய பல்வகைப்பட்ட தனித்துவங்களை இழந்துவிடாமல் காப்பவையும் கூட. இத்தகைய உலகுதழுவிய பார்வை மீது படிந்த மதக்கொள்கைச் சாயங்களை அகற்றினார் சங்கரர்.

இந்தக் காலகட்டத்தில், பல தாந்த்ரீகப் பள்ளிகள் முளைத்தெழுந்தன. அவையெல்லாம், பார்ப்பனீயக் கட்டுப்பாடுகளுக்கு முரணான ஆன்மீகத்தை பின்பற்றின. திரிக்கப்பட்ட இந்துமதத்தையும், அதற்கு எதிரான பௌத்தத்தையும் தனது விவாதங்கள் வழியாக மறுத்தார் சங்கரர். அவரது தாந்த்ரீக மறுமதிப்பீடு மிக நுண்ணியது. தோற்றத்தின் ஆதி ஆற்றலான சக்தியை, இறைவியாக உருவகிக்கப்பட்ட தேவியை போற்றிப் பரவுவதே தாந்த்ரீகத்தின் ஆற்றல் மையம். சங்கரர் அந்த மையத்தை சடங்குகளிலிருந்து பிரித்தெடுத்தார். இறுதியாக அவர் இயற்றிய சௌந்தர்யலஹரீயிலும், சிவானந்தலஹரீயிலும் உபநிடத மெய்மையை கவித்துவமாகச் சொல்வதற்கு, தாந்த்ரீகம் முன்வைக்கும் பெண்மையுடனான தீவிர, உள்ளார்ந்த அடையாளப்படுத்தலை கைக்கொண்டார். சௌந்தர்யலஹரீயில், ஆழ்ந்த பொருளுடைய இந்திய மரபுகளையும், திராவிட தியான மரபையும் (தாந்த்ரீகப் பயிற்சிக்கு மூலமென கருதப்படுவது) பயன்படுத்தி, தனது அத்வைத உரைகளின் சாரமானவற்றை, மேலும் செறிவாகச் சொல்கிறார் சங்கரர்.

சௌந்தர்யலஹரீ இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக பகுக்கப்படுகிறது. முதல் 41 பாடல்கள் ஆனந்தலஹரீ என தனியாக பதிப்பிக்கப்பட்டுள்ளன. இதுவே இந்நூலின் மிக முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. 42 முதல் 100-ஆவது பாடல் வரை கொண்டது இரண்டாவது பகுதியாகவும், சில சமயம் 92 முதல் 100-ஆவது பாடல் வரை கொண்டது மூன்றாவது பகுதியாகவும் பிரிக்கப்படுகின்றன. இவை எல்லாம் அடங்கியதே சௌந்தர்யலஹரீ எனப்படுவது. லஹரீ என்பதை மனமயக்கம் என்று மொழிபெயர்க்கலாம். நடராஜ குரு இதை ‘அறிவு குறித்தும் அழகு குறித்தும் மனதில் எழும் அகவயமானதும் புறவயமானதுமான பேரனுபவம்’ என்பார். இந்த மனமயக்கம் அல்லது நனவின் வெள்ளப்பெருக்கு இந்த நூல் முழுவதும் விரவியுள்ளது. முதல் 41 பாடல்களில் ‘ஆனந்தம்’ என்பது பெருமகிழ்வை குறிப்பது; அகவயமாக கொண்டாடப்படும் ஒரு விழுமிய அனுபவம் அது. ‘சௌந்தர்யம்’ என்பது அழகை குறிப்பது; புறவயமானவற்றை அழகியலுணர்வோடு போற்றுவது. ஆனந்தமும் சௌந்தர்யமும் இணைந்து, அகவயமானதும் புறவயமானதுமான பேரானந்தம் ஒருவரது நனவில் கலந்து, முழுமுதல் அழகென உருக்கொள்ளும் தொடர் நிகழ்வில் அவரை பங்குகொள்ளச் செய்கிறது.

கடந்த 1200 ஆண்டுகளில், சௌந்தர்யலஹரீ இந்தியாவில் பல பதிப்புகள் கண்டுள்ளது. சில பதிப்புகள் உரையுடனும், சில தேவியின் ஓவியங்களுடனும், பல  மந்திரம், தந்திரம் இவற்றோடும் பதிப்பிக்கப்பட்டவை. இன்றும் இது பக்திப் பாடலாகவும், தியானத்திற்கான பாடலாகவும் தொடர்கிறது. 1958-இல் Prof Norman Brown மொழியாக்கத்தில் Oxford Oriental Service-இன் பதிப்பு வெளிவருவதற்கு முன் இரண்டு ஐரோப்பிய மொழிப் பதிப்புகளே வெளியாகியிருந்தன. ப்ரவுனின் மொழியாக்கமும் உரைகளும் இப்படைப்பை நேர்மையுடன் அணுகி இயற்றப்பட்டவைதான் என்றாலும் மிகுந்த எச்சரிக்கையுடன், சொற்களின் நேர்பொருளை மட்டுமே கணக்கில் கொண்டு எழுதப்பட்டதால், சௌந்தர்யலஹரீயின் கவித்துவமும் ஆன்மீக சாரமும் அவற்றில் வெளிப்படவில்லை.

1988-இல் நடராஜ குருவின் மொழிபெயர்ப்பும் உரையும் East-West University-ஆல் பதிப்பிக்கப்பட்டன. நடராஜ குரு தனது உரையில், இந்திய மரபும் நவீன மேலை அறிவியல் துறைகளும் சந்திக்கும் புள்ளியில் தோன்றிய பலவிதமான போக்குகளின் அடிப்படையிலான மெய்யியல் தரிசனத்தை முன்வைத்தார். புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி ஒருவருக்கு மகனாகப் பிறந்த நடராஜ குரு விலங்கியலிலும், நிலவியலிலும் பட்டம் பெற்றிருந்தார். பாரிஸில் உள்ள சார்போன் பல்கலையில் கல்வியியலில் முதுமுனைவர் (D.Litt. in Educational Philosophy) பட்டம் பெற்ற அவர் ஜெனிவாவில் Quaker School-இல் ஆசிரியராகப் பணியாற்றிவர். இந்த பன்முகப் பின்புலம், எதையும் மேலோட்டமாக அல்லாமல் அடித்தளம் வரை சென்று ஆராயும் திறனையும், பலதுறைகளுக்கு இடையிலான இசைவிணைவைக் காணும் திறனையும் அவருக்கு அளித்தது.

நீண்டகாலமாகவே சௌந்தர்யலஹரீ சங்கரரால் இயற்றப்பட்டதல்ல என்று பல அறிஞர்கள் வாதிட்டு வந்திருக்கின்றனர். நடராஜ குருவோ, இதனை சங்கரரின் அத்வைத தரிசனத்தின் வேறுவகையான, வேறு வடிவில் வேறு மொழியிலமைந்த, வெளிப்பாடாகவே கண்டார். இதற்கு முன்னர் சங்கரர் எழுதிய உரைகள் மீமொழியில் (meta-language) அமைந்தவை என்பார் நடராஜ குரு. மீமொழி என்பது கருத்துருவான குறியீடுகளைப் பயன்படுத்தும் மொழி குறித்த மொழி. அது இயற்கணிதம் சார்ந்தது, மிகவும் புறவயமானது, கருத்து ரீதியானது, வடிவம் குறித்து பேசுவது, தொடர்பை வகுத்தமைப்பது. நடராஜ குருவைப் பொறுத்தவரை சௌந்தர்யலஹரீ மூலமொழியில் (proto-language) எழுதப்பட்ட ஒன்று. 

மிகப் பழையதும் இன்றும் பயன்பாட்டில் உள்ளதுமான மூலமொழி  அறிவுசார்ந்து இயங்குவதில்லை. மாறாக உருக்காட்சி எதிரொளிப்புகளின் அடிப்படையில் இயங்குவது. கவிதைக்கும், இசைக்கும், பல வகையான குறியீட்டுக் கலை வடிவங்களுக்கும் விளைநிலமாக இருப்பது. கருத்துருவாக்கம் பற்றி புறவயமாகப் பேசுவது மீமொழி. பல தளங்களிலான புலனுணர்வு வழியே இக்கணத்தில் காணும் ஒரு தோற்றத்தையே மூலமொழியில் நாம் உணர்கிறோம். சங்கரர் அத்வைத வேதாந்தத்தை மொழி வழியாக அல்லாமல் விளக்குவதற்கு தாந்த்ரீகக் குறியீடுகளையும் அன்னை வழிபாட்டையும் பயன்படுத்தினார் என்பதை நடராஜ குரு கண்டுகொண்டார். சொற்கள், நமது மீநனவில் எதிரொளித்து நமது இருத்தல் குறித்தும் புரிதல் குறித்தும் விழிப்பை ஏற்படுத்தக்கூடிய மறைமுகமான உருவகங்களாக பயன்படுத்தப்படுகையில்தான் எழுதப்பட்ட நூல் சொற்களால் ஆகாத ஒன்றாக முடியும். சங்கரர் உபயோகித்த பல்வேறு மொழிகளின் இயல்பு குறித்தும், முழுமுதல் மெய்மையை மனிதனுக்கு உணர்த்துவதில் மூலமொழிக்குள்ள இடம் குறித்தும் நடராஜ குரு தன் சௌந்தர்யலஹரீ உரையில் சுட்டிக்காட்டுகிறார்.  

ஆனந்தலஹரீக்கான இந்த உரையை எழுதிய குரு நித்ய சைதன்ய யதி நடராஜ குருவின் மாணவர். தென்னிந்திய தாய்வழிச் சமூக மரபில் வந்த குரு நித்யாவின் குடும்பம் அறிஞர்களும் கவிகளும் நிரம்பியது. கேரள பல்கலையில் மாணவராகவும் இந்தியா முழுவதும் நாடோடித் துறவியாக திரிந்தும் அவர் தத்துவம் பயின்றார். மத ஒப்பாய்வியல் அறிஞரான டாக்டர் மீஸ், ரமண மகரிஷி, மகாத்மா காந்தி ஆகியோரிடம் பயின்றவர். இவற்றோடு பாம்பே பல்கலையில் உளவியல் துறையில் பட்டமும் பெற்றார். அதன்பின் பதினெட்டு மாதங்கள் தனிமையில் இருந்து ஆன்ம பரிசோதனையில் ஈடுபட்டார். இந்தத் தனிமை அவரது மெய்ஞானத்துக்கு இட்ட அடித்தளம், அவரது இந்த உரைக்கு மிகச்சிறந்த பரிமாணம் ஒன்றை அளிக்கிறது.     

இந்திய தத்துவப் பள்ளிகளின் பின்புலத்தையும், விரிவான உளவியல் அறிவையும், அழகியலின் நுட்பமான பார்வையையும் இந்த உரையில் கொணர்கிறார் குரு நித்யா. சௌந்தர்யலஹரீயின் உள்கட்டமைப்பு குறித்த, அதன் தொன்மக் குறிப்புகள் குறித்த தனது புரிதலின் வழியாக அதன் மறை குறியீடுகளை தெளிவாக்குகிறார். 17-ஆவது பாடலுக்கான உரையை எடுத்துக்காட்டாக சொல்லலாம். முதல் வாசிப்பில், பல இறைவியரின் பெயர்கள் குறித்த நுட்பமான ஒரு பட்டியல் மட்டுமே என்று தோன்றும். ஆனால், அதன் வழியாக, இறைவியர் குறிப்புணர்த்தும் அடிப்படை உளவியல் நிலைகளையும், வாய்மொழியின் பண்புகளையும், தொடர்புகளையும் தெளிவாக்குகிறார் குரு நித்யா. 

சக்தியை போற்றிப் பாடும் கவிதையாக சங்கரர் இதை எழுதியுள்ளது கவனிக்கத்தக்கது. சொற்கள் பண்ணாக இசைக்கப்படுகையில் அவை புறவயமாக அளிக்கும் பொருளைக் கடந்து அழகின் ஊர்திகளாகிவிடுகின்றன. இப்படியாக, மொழி என்பது சொற்றொடர் அமைப்புக்கு அப்பால் செல்கிறது. நாதம் (ஒலி) என்பது சௌந்தர்யலஹரீயின் மையக் கருத்தாக்கங்களில் ஒன்று. உருப்பெறாத ஒன்று (அவ்யக்தம்) புறத்தே விரிந்து ஒழுங்குபெறுகையில் அதில் ஏற்படும் முதல் அதிர்வு ஒலியதிர்வுதான். முழுமுதலின் மெய்மை நமக்கு ஒலியாகவே உணர்த்தப்படுகிறது, உருக்கொண்ட நனவின் அடிப்படையே ஒலிதான். முழுமுதலின் பொருள் நமது விழிப்புநிலையில் ஒரு விழுமியமாக வெடிக்கிறது, இது சமஸ்கிருதத்தில் ஸ்ஃபோடம் எனப்படுகிறது.   ஆக, ஒலியானது மாற்றத்தை விளைவிக்கக் கூடியது. சௌந்தர்யலஹரீயின் பல பாடல்கள் அதன் இயல்பையும் இயக்கத்தையும் பேசுகின்றன.

ஒவ்வொரு பாடலும் தனக்கான ஒரு தனிப்பட்ட மந்திரத்தை கொண்டுள்ளது. கவனம் முழுதையும் அதன் மேல் குவிக்கையில் தியானிப்பவரின் நனவை நேர்ப்படுத்தி எல்லையில்லா முழுமுதலை நோக்கி செலுத்துவது அது. இந்த ஒலித்தொகுதிகள் பற்றிய பிழைபுரிதல்களைக் களைந்து, நனவை ஒருமுகப்படுத்துவதற்கான ஒலிக் கருவிகளே அவை என்பதை நிறுவுகிறார் குரு நித்யா. சக்தியின் பெருக்கத்தை, படைப்பெனும் ஆடலை நாம் முதலில் செவியுறுகிறோம்; பின்னரே உலகின் மினுங்கும் அழகை கட்புலன் கொண்டு காண்கிறோம். பரந்துவிரிந்ததாய், புரிந்துகொள்ளவியலாததாக இருந்த தொடக்கங்களின் மர்மங்களெல்லாம் இப்போது ஒலியாகவும் காட்சியாகவும் மாறி எண்ணற்ற வடிவமைதி கொள்கின்றன. ஒவ்வொரு மந்திரத்துடனும் அதற்கிணையான, தனியரின் நனவை ஒழுங்குபடுத்தும் வடிவ அமைப்புகள் (visual patterns) கொண்ட ஒரு யந்திரமும் உள்ளது. மந்திரம், யந்திரம், அவற்றை செயற்படுத்தும் இயக்கவியலான தந்திரம் – இவற்றினிடையே உள்ள தொடர்புகளை தெளிவுபடுத்தும் குரு நித்யா அவற்றின் அடிப்படை இயல்பை, உருமாற்றத்தின் வழிமுறைகளாக விளக்குகிறார். 

யோகம் பற்றிய புரிதலை உள்ளடக்கியதே தாந்த்ரீகம். அது பயிற்சி மூலமாகவும் ஒருமுகப்படுத்தல் மூலமாகவும் துருவங்களை இணைத்து பொருள் பொதிந்த முழுமையாக்கல். சௌந்தர்யலஹரீயில், மீள மீள வரும் அடிப்படை முனைக்கோடிகள்: சிவமும் சக்தியும் – ஆண்மை எனும் இருப்பிலிருந்து முளைத்தெழும் பெண்மையெனும் தோற்றமும், அதற்கு அவள் அளிக்கும் ஆற்றலும் பொருளும்; தேவியும், பக்தரும் – பேரண்டச் சுற்றெல்லையென இறைவியும், அத் தனிப்புள்ளியில் இறுதியாக கரைந்து மறையும் பக்தரும்.    

சுடுபொடி பூசி மௌனத்தில் ஆழ்ந்த சிவனிலிருந்து பேரழகுடன் எழுகிறாள் சக்தி. ஆடும் இறைவியான அவள் கலையை, இசையை, மறை தரிசனத்தை, வாழ்வின் சாரத்தை நம் மேல் மழையெனப் பொழிகிறாள். பிரபஞ்ச நிகழ்வுகளும் உளவியல் செயல்பாடுகளும் கவித்துவமாக உருவகப்படுத்தப்படுகின்றன. சங்கரர் உருவகிக்கும் தேவியில் அவளது உடல் மரபார்ந்த இந்திய அழகியலின் அடிப்படையில் – அகதரிசனங்களைத் தீட்டும் ஓவியச் சீலையாக – அமைந்துள்ளது. பக்தர் தனது புலனுணர்வு வழியே அறியக்கூடிய அந்த உடல் வழியாகவே உருக்கொள்ளாததை உணர முடிகிறது. அவளது அழகின் வழியே – அதன் ஒலிகள், தொடுகை, மணம் வழியே – அனைத்துப் படைப்புகளின் மூலத்தையும் காண முடிகிறது; இறுதியில் அதனுடன் ஒன்றாக கலக்க முடிகிறது. 

குரு நித்யா தனது ‘Love and Devotion’ நூலில் சொல்வது போல, ‘சௌந்தர்யலஹரீயில், தொல்படிம அன்னை வடிவம் ஆண்-பெண் முரணியக்கத்தின் நுட்பங்களையும், பெண்மையின் அகம் காட்டும் விழுமியங்களையும், புதிர்களையும்,  எளிய புலனின்பங்களில் தொடங்கி அன்பு, முழுமையான விழிப்புநிலை, பெருவியப்பு, அனைத்தையும் கடந்தநிலை என்றெல்லாம் சொல்லத்தக்க, அனைத்தையும் விழுங்கக்கூடிய அழகின் பெருவெடிப்பு வரையிலான, சொல்-பொருள் இயல்கைகளையும், இயலாமைகளையும்  செதுக்கிக் காட்டுவதற்கான ஒரு மாளிகையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.’  

சௌந்தர்யலஹரீயில் இடம்பெறும் நுட்பமான தேவியின் உருவங்கள் தியானத்திற்கு துணைநிற்பவையாக உருக்கொள்ளாத மெய்மையை அணுகுவதற்கான வழியாக பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. இறுதியாக, பக்தர் தானே அது என்றும், இயலுலகும் அகமும் ஒன்றாக பிணைக்கப்பட்ட  எதிரிணைகளே என்றும் உணர்கையில் உருவ வழிபாட்டுக் கருவிகள் மறைந்து, தனியரும் மறைந்து போகிறார். செல்வழியாக மட்டுமே இருக்க வேண்டிய உருவங்களில் மயங்கிவிடும் யோகசாதகருக்கு பலசமயங்களில் தாந்த்ரீகம் பற்றிய இந்தப் புரிதல் பெரும் தடையாக ஆகிவிடுவதுண்டு.  

தாந்த்ரீகம் சார்ந்த படைப்பில் காமம் தவிர்க்கமுடியாத ஒன்று. பல போதும் தாந்த்ரீகம் என்பதே பாலியல் சார்ந்த யோகமாக பார்க்கப்படுகிறது. அங்கு, பாலியல் இணைவே மெய்மையையும் ஆற்றலையும் உணர்வதற்கான ஆகச்சிறந்த வழிமுறையாக கொள்ளப்படுகிறது. இது மிகக் குறுகிய புரிதல். சௌந்தர்யலஹரீ காட்டும் காம ஈர்ப்பு காமதேவனுடையது. மேலை மரபில் ப்ளோடினஸும் புனித அகஸ்டினும் பேசிய இறைநிலை இணைவு அது; அது தனியர் இறையிடம் அல்லது நன்மையிடம் கொண்ட ஈர்ப்பு.  பாலியல் இணைவு என்பது இறுதியாக நிகழ்வது. இயல் உலகில் காமதேவனின் உருவ வெளிப்பாடு அது. பாலியல் உணர்வு மெய்ப்படுவதற்கு அது ஒரு வழியே அன்றி மூலமே அதுவல்ல. கிறிஸ்தவ கத்தோலிக்க சபையும், இந்து வைணவமும் யோக சாதகரை, அவர் ஆணோ பெண்ணோ, கடவுளின் காதலராகக் கருதுபவை – கிறிஸ்துவின் காதலியாக அல்லது கிருஷ்ணனின் ராதையாக. அங்கு புலனின்ப உருவகங்களும், ஆண்-பெண் ஈர்ப்புகளும் தனியருக்கும் அனைத்துமடங்கிய மீமெய்மைக்கும் இடையிலான உறவை விவரிக்கவே பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக St. John of the Cross-இன் Night of the Soul, ஜெயதேவரின் கீத கோவிந்தம் போன்றவற்றை சொல்லலாம். இந்த உறவை சமயச் சார்பற்ற மொழியில் சொல்ல முடியும். அரவிந்தர் தன் ‘சாவித்ரி’ கவிதையில் இதை மிக அழகாக விரிவாக நிகழ்த்தியிருக்கிறார். காமத்தில் பாலியல் இணைவுக்கு இடமில்லை என்று சொல்வதல்ல இது. நமது மொழியையும் புரிதலையும் வேறு சொற்களில் சொல்ல வேண்டும்: பாலியல் இணைவு என்பது அறுதி இணைவல்ல, இறைச் சொல்லின் செயல்முறை இயக்காற்றல் மட்டுமே.   

கோடைகால இறுதியில் நிலம் வறண்டு வெடிப்புகள் தோன்ற, காய்ந்துபோன தாவரங்கள் நீருக்காக ஏங்கி நிற்கும். மெல்ல, கீழ்வானம் கருக்க, மழைமேகங்கள் கூட, காற்றில் ஒரு புத்துயிர்ப்பு நிரம்பி அனைத்தும் உவகை கொள்ளும். எதிர்பாராத கணத்தில் மழை வெடித்துப் பொழியத் துவங்கும். காத்திருப்பு, ஏக்கம், உச்சநிலை அடைந்து வெளிப்படல், நிறைவு என இத்தகைய காமப் பெருவிழைவுகளின் லயத்தை சௌந்தர்யலஹரீ முழுவதும் காணலாம். தேவிக்கும் மௌனத்தில் ஆழ்ந்த அவளது இறை சிவனுக்கும் இடையிலான விழைவையும் இணைவையும் பாடுவது இது; அவர்களது ஆடலிலிருந்து எழும் அழகின் அலைகளோடு நம் இதயங்களில் எதிரொலிக்கும் பாடல் இது.   

-போர்ட்லாண்ட், ஆரகன், 1994

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *