பத்மா கோளே – கவிதைகள்

(தமிழில்: தீபா)

பத்மா கோளே

*

1. ஆகாயப் பித்தி

ஆகாயப் பித்து பிடித்த
ஒரு பெண் பறவை நான் .
இதைத் தவிர வேறு எந்த நினைவும் எனக்கு இல்லை.

என் கண்களில் வானமே நிறைந்திருக்கிறது.
மூச்சிலும், உயிரிலும் வானமே!

என் கனவில்,
விடியலின் சுடர் எரிகிறது.
ஆனால் அங்கிருந்தபடியே இரவு பாடி அழைக்கிறது.

கூண்டை விட்டு கால்கள் நொடியில் நழுவுகின்றன.
மதம் பிடித்த இறக்கைகளிலிருந்து
மின்னல் விளையாடுகிறது.
இப்படிப்பட்ட திடீர் பாய்ச்சலில் பாடுகிறேன்.
அம்பைப் போல மேகங்களுக்குள் புகுகிறேன்.
ஆரஞ்சும், செம்பழுப்பும் குங்குமப்பூவின் கூட்டு நிறத்தை மேகத்திலிருந்து அள்ளி,
என் சிறகுகளில் பூசிக் கொள்கிறேன்.

விடியல் பொழுதின் உதயச்சிவப்பின் ரகசியம் அறியவிழைகிறேன்.

ஸ்வரங்களோடு ஸ்வரங்களின் இணைவை எப்படிப் பார்க்க முடியும்?
வீணை தன் நாதமாய் அதை காட்டுகிறது.
இறைவனின் ஸ்பரிசத்தால் அனைத்தும் அழகாகிறது.

எத்தனை உயரம் செல்வேன்?
இலக்கை அடைவேனா?
அல்லது பாதியில் என் ஆயுள் முடியுமா?
ஆகாய யாத்திரிக்கு வருத்தமே இல்லை. அதற்குத்தான் அந்த நீலம் உள்ளும் புறமும் நிரம்பி விட்டதே!

*

2. நான் வீட்டிற்குள் நுழைந்தேன்

பெரிய தலைவாசலின்
நிலையிலிருந்த ஒரு படி அரிசியை,
காலால் தள்ளி விட்டு,
லட்சுமி என்ற பெயரில்,
வீட்டிற்குள் நுழைந்தேன்.

பெரியவர்கள் கண்களுக்கெல்லாம் ஒளியானேன்.
ஆனால், என் கண்கள் நிலமே நோக்கின.

நிலம் சொன்னது,
நீ எனக்கானவள்!
குப்பைகளை அகற்றி சுத்தம் செய்!
நான் அவளிடம் பணிந்து கூட்டி மெழுகும் துடைப்பமானேன்.
அழகிய கோலங்கள் ஆனேன்.

அடுப்பு சொன்னது,
நீ எனக்கானவள்!
நான் அவளிடம் விறகாகி, நெருப்பாகி
என்னை சமைத்தேன்.

மாவு எந்திரம் சொன்னது,
நீ எனக்கானவள்!
அவளிடம்,
கோதுமை, சோளம் என மாவுகளானேன்.

உலை வைக்கும் பாத்திரத்தில் வெந்து சோறானேன் .

வெண்ணெய் எடுக்கும் பானையில் மோராகி, மத்தின் நடனமும் ஆனேன்.

வீட்டின் சுவராகி, கூரையாகி ரகசியங்கள் காத்தேன்.

வெளியில் இருந்து ஏதும் வீட்டினுள் நுழையாதபடி அனைத்துத் துளைகளையும் அடைத்து மூடினேன்.

விளக்காகி, வீட்டின் மூலையெல்லாம் ஒளிரச் செய்தேன்.

மருமகளானேன். மனைவியானேன்.
தாயானேன்.
மாமியாரும் ஆனேன்!

என்னை இழந்து எல்லாமுமாகி முடிந்து விட்டது.
நான் அணிந்த வேடங்கள் போதுமென்றானது.

கனமான சுமைகளையெல்லாம்
இறக்கி வைத்தாகிவிட்டது.

இப்போதாவது என்னைத் தேட எனக்கு அனுமதி கொடு!

துண்டு, துண்டுகளாக ஆகிவிட்ட என்னை ஒன்றாகச் சேர்க்க விடு!

விசாலமான எதிலாவது என்னை இணைத்து மூழ்கடி.

சுதந்திரமாக சுவாசிக்க
விடுதலை கொடு!

உயிர் கொடுத்தவனை சிந்திக்கும் அக்கணமே,
அவ்வுயிரை
நிம்மதியாக போகவும் விடு!

*

3. இப்போது நான் இங்கு இருப்பதில்லை

இப்போது நான் இங்கு இருப்பதில்லை.
இன்னும் நான் வருவதும் போவதுமாய் இருந்தாலும் கூட,
நான் இங்கே இருப்பதே இல்லை.

எங்கே என்று என்ன கேட்கிறீர்கள்?
ஏதோ உங்களுக்கு எதுவுமே தெரியாதது போல!
எஞ்சியது ஒருவேளை உங்களுக்கு தெரியாமலும் இருக்கலாம்.
காரணம்,
அந்த ஊர் வழியாக யாரும் அதிகமாக செல்வதே இல்லை.

அங்கே வீடு என்று சொல்கிறீர்களே,
அது இருக்கிறதே.
இத்தனை பெரிய வீடு !
இத்தனை பெரிய வீடு!
அந்த வீட்டிற்கு சுவர்களே இல்லை!
கூரையா?…
இருக்கிறது.
ஆனால், இல்லை..
அதேபோலத்தான் வாசற்படிகளும்!

அதன் மேல் ஓடுகிறது
ஒரு நதி.
சந்திரனும், நட்சத்திரங்களும் அதில் விளையாடுகிறார்கள்.

நானா?…

நதியின் கரையோரங்களில், இறைவனுக்கு சாத்தப்பட்ட மலர்கள் மிதந்து செல்கிறது பாருங்கள்.
அதற்குள்ளே… அங்கே…
இருக்கிறேன்., எங்கோ ஓரிடத்தில்
பூக்களின் புதிய புதிய கனவுகளில்.

துணையா?..
இருக்கிறது.
நம்முடைய…
அவர்களுடைய…
அவருக்கு பெயரும் இருக்கிறது.
ஆனால்..
எனக்கு என்னவோ ,
எதுவுமே நினைவில் இல்லை.
அதுதான் நான் இப்போது இங்கு இருப்பதே இல்லை.

மெதுமெதுவாக பட்டு நூல் அறுந்து கொண்டிருக்கிறது.
ஆடும் தொண்டை இப்போது பிசிரே இல்லாமலாகி,
பாடல் உதடு வரை வந்து விட்டது.
பாடட்டுமா?!

யமுனையின் ஆழச்சுழலின், அடியில் ராசலீலை வண்ண வடிவாய் களைகட்டி இருந்தது.
இல்லையா?!
அப்போதைய பாடல் இது.

ஆடைகள் எப்பொழுதோ திரைச்சீலைகளாவதற்காக கதம்ப மரத்தின் மேல் ஏறி விட்டன.
விழிப்போடு இருங்கள்!

அந்த பசுமையான நதியில் மிதந்து செல்லும் இறைவனுக்குச் சாத்திய மலர்களோடு,
நீலப் பாடலாய் நானும்.!

இப்போது நான் இங்கு இருப்பதே இல்லை.
இன்னும் வருவதும் போதுமாய் இருந்தாலும் கூட,
நான் இங்கு இருப்பதே இல்லை!

*

4. நினைவுகள்

மனதின் நினைவுகள் எல்லாம் ஒன்றிணைந்து கூட்டமாக வரும்போது,
இன்முகத்தோடு அவற்றை வரவேற்க வேண்டும்.
விலை உயர்ந்த, பட்டின் மென்மையான
ஆசனங்களைத் தந்து
அமரச் செய்ய வேண்டும்.
சிறிய இளைப்பாறலுக்குப் பிறகு,
என்ன எடுத்துக் கொள்கிறீர்கள்?
என்று கேட்க வேண்டும்.

அவைகள் குழந்தையின் அழகும்,
குறும்புத்தனமும் கொண்டவை.
அவைகள் அப்பாவி குழந்தை போல நடித்து,
என்ன தருவீர்கள்?
என்று கேட்கும்.

மனம் திறந்து பதில் சொல்ல வேண்டும். கேட்பதெல்லாம் உங்களுடையதுதான்.
பிறகு ஒன்று மெதுவாக கண்ணை தாருங்கள்,
என்று கேட்கும்.
மீண்டும் மீண்டும் நம்மையே திரும்பி பார்க்கும்.

இரண்டாவது கைகளை தாருங்கள்,
என்று சொல்லும்.
அவைகள் நம்மை பிடிக்காமலேயே கட்டிப்போட்டு விடும்.

மூன்றாவது சொற்களைத் தாருங்கள் என்று கேட்கும்.
அவைகள்
வானவில்லின் வண்ணங்களை
நம் மீது தூவுபவை.

இருந்தாலும் ,
யாருக்கும் எதுவும் தந்து விடக்கூடாது.
சொற்களை மட்டும் தரவே கூடாது.

நான்காவது, ஐந்தாவது என,
எல்லாமே முன்னால் வந்து நிற்கும்.

தேன் ததும்பும் குரலில்,
வெறுமனே ம்ம் என்று சொல்ல வேண்டும்.
கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.

மேலும், எல்லோரையும் செல்லமாகக்
தடவி, தடவிக் கொடுத்து,
மனதின் அடியாழத்து மெத்தையில்
தூங்க வைத்துவிட வேண்டும்.

மீண்டும் என்றைக்காவது ஒரு நாள் இப்படியே இணைந்து கூட்டமாய் வருவதற்காக!

*

5. விழிப்பு உணர்வு

விழிப்புணர்வில் கண்கள்
உள்நோக்கித் திரும்பியதும்,
உள்ளே நடக்கும் அனைத்துக் குழப்பங்களையும் கண்டு வியப்படைகின்றது.

அகந்தைகாட்டின் செடிகளையும்,
அதன் காண முடியாத அடிவேர்களையும்,
ரீங்காரமிடும் வீணை நரம்புகளையும்,
விரிந்த வானில் ஓரிரண்டு பறவைகளையும்,
காண்கிறது.

ஆனால் இச்சிறு உலகங்களிலும் கூட, பெருங்கடல்கள் கொந்தளிக்கின்றன.
கரிய இருண்ட மேகங்கள் புயல் காற்று, பெருஞ்சூறாவளியைத் திரட்டிக்கொண்டு வருகின்றன.
மேகங்கள் மழை பொழிகின்றன.
இப்படி…இப்படித்
தீவிரமாக பொழிகின்றது!
எப்படி என்றால்?
எல்லாச் சிறுமைகளையும் கழுவிச் செல்லும் அளவிற்கு!

ஒரு கணம் வீசுகிறது பிரகாசமான சூரிய ஒளி.
இந்தக் கணத்தின் நினைவுகளைத்
தக்க வைத்த எளிய மனிதன் வாழப் பார்க்கிறான்.

ஒரு கணம் தன்னிலிருந்து சற்று உயர்ந்த படி,
காலடிகளை கொஞ்சம்
முன் வைத்து!

*

6. குடைவரைகள்

எதிரில் பனியை போர்த்திக் கொண்டு,
இதமான வெயிலை உண்டு,
ஆ! கம்பீரமாக அமர்ந்திருக்கும்
லோஹ்கட் கோட்டையே!

ஒவ்வொரு நாளும் என்னைக் கடக்க விடாமல் நிறுத்தி,
ஆழப்பார்வையால்,
மறந்து விட்டாயா?
எனக் கேட்கிறாயே?

நீ வெறும் கல்! என,
எனக்குள் நானே
முணுமுணுத்துக்கொண்டு,
ஆமாம், மறக்கத்தான் போகிறேன் என்று,
பதில் சொல்லிக் கொள்கிறேன்.

இப்படி எல்லாவற்றையும் மறக்க முடிந்திருந்தால்,
உன் மொழி எனக்குப் புரிந்திருக்குமா?
மேலும், இந்த வெகுளியான மனம்,
கால நேரமே இல்லாமல்,
தவித்துக் கொண்டிருக்குமா?
உனக்கு அருகிலேயே குடைந்து செய்யப்பட்ட கோவில்களும், சிற்பங்களும் இருக்கிறதே?
பிறகு ஏன் உனக்கு தெரியவில்லை
பைத்தியமே?

ஏனென்றால், இப்படித்தான் மனதிற்குள்ளேயும் சில அழகான குடைவரைகள் இருக்கும் என்று!

*

பத்மா கோளே (1913 – 1998): சாங்லி மாவட்டம் மகாராஷ்டிராவில் பிறந்தார். பட்வர்தன் என்ற அரச வம்சா வழியைச் சேர்ந்தவர். இளமையிலேயே தந்தையை இழந்தார். இவர் பூனாவிலேயே கல்வி பயின்று முதுகலை பட்டம் எம்.ஏ முடித்தார். காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 1932-ல் தொழிலதிபர் விஷ்ணு கோளே என்பவரை மணந்தார்.

பெண்ணின் அகவுலகப் போராட்டங்களையும், அவளுள் எழும் விடுதலைக்கான தவிப்பையும், பெண்ணின் சுயமரியாதை, சமத்துவம்,ஆன்மிகம், போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு கவிதைகள் எழுதினார். இவரது எழுத்துக்கள் ஆக்ரோஷமான குரலில் இல்லாமல் மென்மையுடன் சொல்லும் தன்மை கொண்டது. சிறுகதை, நாடகங்கள் மேலும், பாடல்களையும் இயற்றியுள்ளார்.
இவரது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகள் ஆகாஷ வேடி, ஷ்ராவன் மேக், ப்ரீத்தி பயன், நிஹார், ஸ்வப்னதா, சகால். சாகித்ய அகாடமி, மகராஷ்டிரா மாநில விருது, கேஷவ்சூத் விருது, பால் கவி விருது, பண்டிட் வித்யாதர் கோகலே விருது ஆகியவற்றைப் பெற்றவர்.

தீபா.R

மராத்தி மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பு தீபா.R: தமிழ் இலக்கியத்திலும், குறிப்பாக கவிதைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் கர்நாடக இசைப் பயிற்சியும், இசையியலில் ஆர்வமும் கொண்டவர். இசையில் முதுகலைப் பட்டமும்(M.A), TTC(Technical Teachers Training in Music) எனப்படும், இசை கற்பிக்கும் ஆசிரியர் பயிற்சியும் பெற்றவர். தாய் மொழியான மராத்தியில் கவிதைகள் வாசிக்கத் தொடங்கி, தம்மைக் கவர்ந்த கவிதைகளை மொழிபெயர்த்தும் வருகிறார்.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *