ஆகூழ் மதிப்புரைகள் – லக்ஷ்மி சரவணகுமார், அழகு நிலா

1
இலட்சியவாதத்தின் ஆகூழ் – அழகுநிலா
சிங்கப்பூர் எழுத்தாளர் ரமா சுரேஷ் எழுதி நூல்வனம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆகூழ் நாவல் சமீபத்தில் இந்தியாவிலும் சிங்கையிலும் வெளியீடு கண்டது. எழுத்தாளர் ரமாவுக்கு இது இரண்டாவது நாவல். இவரது முதல் நாவல் அம்பரம்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏதாவதொரு வகையில் மலாயாவோடு தொடர்பு உண்டு. அந்தக் காலகட்டத்திலிருந்து இன்று வரை பிழைப்பிற்காக டெல்டா பகுதியிலிருந்து குடும்பத்தில் ஒருவராவது மலேசியாவுக்கோ சிங்கப்பூருக்கோ இடம் பெயர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனது சின்ன தாத்தா கூட சிங்கப்பூரில் பல ஆண்டுகள் வேலை பார்த்து ஊர் திரும்பியவர். இப்படி ஒவ்வொருவருக்கும் சிங்கப்பூருடனான தொடர்பு வேலை, பிழைப்பு, சம்பாத்தியம், உறவுகள், பொருளாதார மேம்பாடு என இருக்கையில் ரமாவுக்கு அது இடதுசாரி கருத்தியலாக இருந்துள்ளது.
ரமாவின் சொந்த ஊரான ஆம்பலாப்பட்டு இடதுசாரி இயக்கத்தின் கொள்கைகளை வரித்துக்கொண்டு மேலத்தஞ்சையில் முன்னோடியாகத் திகழ்ந்த ஒரு கிராமம். ரமாவின் தாய்வழித் தாத்தாவான காசிநாதன் முக்கிய இடதுசாரித் தலைவராக விளங்கியவர். தனது சொந்த கிராமமான ஆம்பலாப்பட்டு, தனது தற்போதைய வாழ்விடமான சிங்கப்பூர் என்ற இரண்டு நிரப்பரப்புகளின் வழியாகத் தனது தாத்தாவின் கதையை இடதுசாரி இயக்கத்தின் பின்னணியில் புனைவாக்கியிருக்கிறார் ரமா.
மதுக்கூர் ஜமீன், பாப்பாநாடு ஜமீன் ஆகிய நில உடமையாளர்களை எதிர்ப்பதில் பிரச்சனை ஆரம்பிக்கிறது. “இருவார வசூல் முறையால் விவசாயியும் அவன் குடும்பமும் அழியும் நிலைக்கு ஆளாகிறார்கள். அதனால் வசூல் முறையைக் கைவிட வேண்டும். ஊருக்குள் நில உரிமைதாரர்கள் சிலரைத் தவிர்த்து பெரும்பாலான நிலங்கள் ஜமீனிடம் உள்ளன. அவற்றை அனுபவிக்கும் கிராம மக்களுக்குக் குடியுரிமைப் பட்டாவும், விவசாய நிலத்தைக் கிரயம் செய்தும் தாருங்கள்” என்ற கோரிக்கையோடு கிராம மக்கள் ஜமீன்தார்களையும் ஜமீன்களை அண்டிப் பிழைக்கும் உயர் குடியினரையும் எதிர்க்கிறார்கள். மக்களின் இந்த எதிர்ப்பு மனநிலைக்குப் பின்னால் இடதுசாரி இயக்கத் தோழர்களும் அவர்களுக்கு வழிகாட்டுபவனாக இரணியனும் இருக்கிறார்கள்.
மக்களின் கோரிக்கை ஒரு வழக்காக நீதிமன்றத்திற்கும் செல்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு கிராம மக்களுக்குச் சாதகமாக வருகிறது. இந்த வழக்கின் வெற்றியாலும் முதன் முதலில் விவசாய நலச் சங்கத்தை உருவாக்கியதாலும் ஆம்பலாப்பட்டு இனிமேல் கிராமம் கிடையாது, ஒரு நாடு என்று பெருமையில் பூரிக்கிறார்கள் மக்கள்.
ஆனால் பிரச்சனைகள் தொரடர்ந்து வேறு, வேறு வழிகளில் வெடிக்கின்றன. செம்பாளூர் ஐயர் வீட்டுற்குச் சென்று கிராம மக்கள் செய்யும் சில அடாவடித்தனமான செயல்கள் வேறொன்றாகத் திரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்படுகிறது. ஊர் பொது மன்றத்தில் தோழர்கள் காங்கிரஸ் கொடியை எரிப்பது தீயை மேலும் கொழுந்து விட்டு எரியச் செய்கிறது.
செம்பாளூர் ஐயர் வழக்கு வெறும் அடிதடி கேசாக பதிவாகாமல் கொலை, கொள்ளை, ஐயர் பெண்டாட்டியின் தாலியை அறுத்தது, வட்டிக்கு கடன் கொடுத்த நோட்டுக்களை எரித்தது, அரசாங்கத்துக்கு எதிராச் சதித் திட்டம் தீட்டியது, ஊருக்குள் ஏற்றிய காங்கிரஸ் கொடியை எரித்தது, வெடிகுண்டு தயாரித்தது, துப்பாக்கி வைத்திருப்பது என்று கிட்டத்தட்ட எழுபது இளைஞர்கள் மேல் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. அதிலும் குறிப்பாகப் பத்து இளைஞர்கள் உடனடியாகச் சரண்டைய வேண்டும், இல்லாவிட்டால் கண்டவுடன் சுடுவோம் என்ற முடிவோடு மலபாரிலிருந்து காவலர்கள் கொண்டு வரப்பட்டு ஆம்பலாப்பட்டில் முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்படுகிறார்கள்.
நான்கு வருடங்கள் கிராமத்தில் முகாமிட்டிருந்த மலபார் போலீஸ்காரர்களின் அக்கிரமங்கள், ஒளிந்திருக்கும் இடதுசாரி தோழர்களைக் காட்டி கொடுக்கச் சொல்லி மக்களை மிரட்டும் அடக்குமுறைகள், ஒட்டு மொத்த கிராமமே இடதுசாரி தோழர்களைப் பத்திரமாகப் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் என ஆகூழ் நாவல் நகர்கிறது. இறுதியில் சில முக்கியமான தோழர்கள் சுட்டுக்கொல்லப்பட மற்றவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். அப்படி சிறைக்குச் சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாகி வெளிவந்தவர்களில் காசிநாதனும் ஒருவராக இருக்கிறார்.
ஆம்பலாப்பட்டு என்ற கிராமத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு ஆகூழ் நாவலை வாசிக்கும் வரையில் இந்த வரலாறும் சம்பவங்களும் தெரியாது என்பது சொந்த மண்ணிலிருந்து எவ்வளது தூரம் அன்னியப்பட்டிருக்கிறேன் என்ற குற்ற உணர்வை அளித்தது.
ரமா தனது முதல் நாவலான அம்பரத்தை இரண்டாம் உலகப்போரைக் களமாகக் கொண்டு பர்மா, சிங்கப்பூர், இந்தியா என்ற மூன்று நிலப்பரப்புகளின் வழியாக கொண்டு சென்றிருந்தார். ஆகூழ் நாவலை மலபார் போலீஸ் கிராமத்திற்குள் நுழைந்த சம்பவத்தைக் களமாகக் கொண்டு ஆம்பலாப்பட்டு, சிங்கப்பூர் என்ற நிலப்பரப்புகளின் வழி நகர்த்திச் செல்கிறார். உண்மையில் ஆகூழில் இரண்டு நாவல்கள் உள்ளன. மலாயா பகுதிகளை மட்டுமே தனி நாவலாக உருவாக்குவதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆனால் தான் பிறந்து வளர்ந்த மண்ணையும் தான் வாழும் மண்ணையும் இடதுசாரி இயக்கப் பின்னணியில் ரமா இணைத்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
ஆனால் இந்த இணைப்பு வடிவரீதியாக சரிவர நிகழாதது ஒரு பலவீனம். ஆம்பலாப்பட்டு பகுதிகளை எழுதுகையில் சன்னதம் கொள்ளும் ரமாவின் மொழி மலாயா பகுதிகளில் ஒருவித அழுத்தத்துடனும் தயக்கத்துடனும் அபுனைவு தன்மையோடு வெளிப்படுகிறது. இரண்டு நிலப் பரப்புகளை இணைக்கும் புள்ளிகளாக இரணியனும் இடதுசாரியும் இருப்பதால் இரணியனின் நினைவுகள் வழியாக பின்னோக்கு உத்தியில் மலாயாவின் இடதுசாரி இயக்கத் தோழர்களான எஸ்.ஏ.கணபதி, வீரசேனன், சுதர்மன், தேவேந்திரன் ஆகியோரும் அகில மலாயா பொது தொழிற்சங்க சம்மேளனம் சார்ந்த அவர்களது செயற்பாடுகளும் அரசால் அவர்கள் அடைந்த இன்னல்களும் பதிவு செய்யப்பட்டிருந்தால் நாவல் வாசிப்பு இன்னும் சிறப்பானதாக மாறியிருக்கும். கணபதி, இரணியன் இருவருக்குமான காதலிகளை ரமா தனது புனைவுச் சுதந்திரத்தால் அருமையாக உருவாக்கி தந்திருந்தாலும் நாவலில் அவர்களுக்கான இடம் என்ன என்ற கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஆம்பலாப்பட்டின் பகுதிகளில் வெளிப்பட்டிருக்கும் ரமாவின் மொழியையும் சித்தரிப்புகளையும் வாசிக்கும் வாசகன் ஒரு தேர்ந்த கதைசொல்லியையும் ஒரு சிறந்த படைப்பாளியையும் அடையாளம் கண்டுகொள்ள இயலும். குறிப்பாக ஆம்பலாப்பட்டு பெண்களை எழுதுகையில் ரமா விஸ்வரூபம் எடுத்து துவம்சம் செய்கிறார். நாவலாசிரியன் மறைந்து நாவல் தன்னைத்தானே எழுத்திக்கொண்ட மாயக்கணங்களாக இந்தப் பெண்களின் பகுதிகள் அத்தனை கலைநேர்த்தியோடு வெளிபட்டிருக்கின்றன. நாவலின் அத்தனை குறைகளையும் பலவீனங்களையும் இப்பகுதிகள் நிகர் செய்து வாசிப்பவருக்கு மகத்தான, நெகிழ்வான வாசிப்பனுபவத்தை வழங்குகின்னன.
தனது குடும்பக் கதையை, தனது கிராமத்துக் கதையை, தனது சாதியின் கதையை எழுதினால் பிரச்சனைகள் வரலாமென்று அறிந்திருந்தும் மனிதர்களின் பெயர்களைக் கூட மாற்றாமல் எழுதுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். ரமாவின் அந்த துணிச்சல் நாவலுக்குப் பெரும் நம்பகத்தன்மையை அளிக்கிறது. அதே சமயம் குடும்பத்துக் கதையாக இருப்பதாலேயே ஆங்காங்கே குடும்ப பெருமையும் சுயசாதி பெருமையும் வெளிப்படத்தான் செய்கிறது. கிட்டத்தட்ட ஆறு தலைமுறைகள் பேசப்படுவதாலும் இரண்டு கதாபாத்திரங்களுக்கு ஒரே பெயர் இருப்பதாலும் வாசிக்கையில் ஏற்படும் குழப்பத்தை நீக்க குடும்ப வரைபடத்தை இணைத்திருக்கலாம்.
தனது சொந்த சாதியைச் சேர்ந்த ஜமீன்தார்களை எதிர்த்த வகையில் ஆம்பலாப்பட்டில் வெடித்தது ஒரு வர்க்கப்போராட்டம் மட்டுமே. தோழர் காசியிடம் “தோழர்! உங்களுக்கு ஐந்து மகள்கள் இருக்கிறார்கள் அல்லவா? ஒருத்தரை என் மகனுக்கு பெண் கேட்டு வந்தால் என்னை உயிரோடு விடுவீர்களா?” என்று தோழர் சீனி கேட்கும்போது ஏதேதோ சொல்லி மழுப்பும் காசி பிறகு ‘எங்க இருவர் வீட்டுக்கும் இடையே ஒரு சாலைதான். பத்துத் தப்படி இடைவெளியில் முன்னேயும் பின்னேயும் எங்க குடிசைகள் இருந்தன. அவர் என்னைத் தோழர் என்று அழைப்பதும் நான் அவரைத் தோழர் என்று அழைப்பதும் காலம் கடந்தும் இந்த ஊர் முழுதும் கேட்டுக்கொண்டிருக்கும்’ என மனதில் நினைக்கும் காட்சியின் வழி ஜமீன்களை எதிர்த்து வென்ற இடதுசாரி இயக்கத்தால் சாதியை ஒன்றுமே செய்ய இயலவில்லை என்ற விமர்சனப் பார்வையை முன்வைக்கிறார் ரமா.
“சுத்துப்பட்டு அத்துன ஜெமீன் பயலுக்கும் அடிமையா கெடந்துருக்கோம். மீச மயரை முறுக்கிக்கிட்டு பாவபட்ட பயலுவள போட்டு அடிச்சிருக்கோம்” என்று சிலம்ப வாத்தியார் வஸ்தா சிறையில் தனது சக தோழர்களிடம் விரக்தியோடு பகிரும் காட்சியில் சுய சாதி விமர்சனத்தையும் முன்வைக்க ரமா தவறவில்லை.
வைத்திலிங்கம் என்ற கதாபாத்திரமும் அவருடைய பறவை வேட்டையும் அதி அற்புதமாக நாவலில் விவரிக்கப்பட்டிருந்தாலும் இப்பகுதி இல்லாவிட்டாலும் நாவலுக்குப் பழுதில்லை என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. இப்படி சில தேவையற்ற பகுதிகளை வெட்டி நீக்கியிருந்தால் நாவல் இன்னும் கச்சிதமான நேர்த்தியோடு அமைந்திருக்க வாய்ப்புள்ளது.
நாவலின் இறுதிக்காட்சியில் சிறைக்குச் சென்று திரும்பிய வயதான காசிநாதன் குளத்தங்கரையில் அமர்ந்திருக்கும் போது அங்கு வரும் சந்திரபோசு, சேகுவேரா என்ற இரண்டு சிறுவர்களும் அவரைப் பார்த்தவுடன் “நாம கையில கயிறு கட்டி இருக்க மாதிரி இந்த ஊர்ல எல்லா தாத்தவும் செவப்புத் துண்டு போட்டுருக்காங்கடா” என்று சிரிப்பதையும் “நாளைக்கு கச்சி கூட்டம்டா. மாமா நம்ம பசங்களுக்கு பாட்டிலு, பிரியாணி பொட்டலம் எல்லாம் எடுத்து வச்சுடுவாரு” என்று சொல்வதையும் கேட்டு காசி தனக்குத்தானே புன்னகைக்கையில் மனம் பாரமாகிப் போகிறது.
ரமா ஏன் பெண்களை குறிப்பாக மணியமூட்டு அப்பாயி, நாவம்மா இருவரையும் பெரும் ஆளுமைகளாகப் படைத்திருக்கிறார் என்ற கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. நாவலின் அத்தனை கதாபாத்திரங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இவர்கள் மட்டும் ஏன் மிகவும் வலிமையோடு வாசக மனதில் எழுந்து வருகிறார்கள்? அதற்கான பதிலாக நான் கண்டடைந்தது இதுதான். நாவலின் மையமான இலட்சியவாதத்தை, இலட்சியவாதியான காசிநாதனைக் கொண்டாட, நியாயப்படுத்த, சரி தவறுகளோடு அப்படியே ஏற்றுக்கொள்ள, வரும் தலைமுறைகளின் முன்னால் அவனை ஒரு நாயகனாக முன்னிறுத்த இந்தப் பெண் ஆளுமைகளைகளைத் தவிர வேறு யாரால் இயலும்?
ஓர் ஆணின் அத்தனை செயல்பாடுகளையும், வெற்றிகளையும் ஒரு நொடியில் ஒன்றுமில்லாமல் ஆக்க கூடிய இயல்பு அவனது குடும்பத்து பெண்களுக்கு உண்டு. அப்படிச் செய்வதன் வழியாக குழந்தைகள், குடும்பம், உறவுகள், சமூகம் ஆகியவற்றிற்கு முன்னால் அவனை ஒரு தோல்வி அடைந்த பிம்பமாக அவளால் நிறுவ இயலும். ஆனால் ஆகூழில் காசிநாதனின் தந்தையைப் பெற்றவளான மணியமூட்டு அப்பாயி. அத்தைக்காரியான நாவம்மா, மனைவி ஆயி மாணிக்கம் மூவரும் முறையே அன்பாலும், கண்டிப்பாலும், காதலாலும் காசிநாதனை அரவணைத்துக் கொள்கிறார்கள். காசியின் இடதுசாரிக் கொள்கைகளும் சிந்தனைகளும் அவர்களையும் மெல்ல, மெல்ல கனியச் செய்கிறது. இடதுசாரி இயக்கப் பாதிப்பால் விளைந்த பெண் கல்வியும் முற்போக்கான சிந்தனைகளும் காசிநாதனின் இலட்சியவாதத்திற்கு அவர்களையும் துணை நிற்கச் செய்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரை ஒன்றில் ‘இலட்சியவாதி ஒருபோதும் இரக்கத்திற்குரியவராக இருக்கலாகாது. இலட்சியவாதம் பொதுச்சமூகத்தால் அண்ணாந்து வியப்புடன் பார்க்கப்படவேண்டும். ஒருபோதும் குனிந்து இரக்கத்துடன் பார்க்கப்படலாகாது. இலட்சியவாதி மீதான இரக்கம் என்பது இலட்சியவாதம் மீதான இளக்காரத்திற்கே வழிவகுக்கும்’ என்று குறிப்பிட்டிருப்பார். அந்த வகையில் பார்த்தால் காசிநாதனின் இலட்சியவாதம் அவரது வீட்டு ஆளுமை மிக்க பெண்களால் நிலைநிறுத்தப்பட்டு அவரது மகள்களை மரியாதையுடன் பார்க்க வைத்திருக்கிறது. அவரது பேத்தியை ஆகூழ் என்ற நாவலை எழுத வைத்திருக்கிறது.
இடதுசாரி இயக்கம், சொந்த சாதி, தற்கால அரசியல் சூழல் ஆகியவற்றின் மீது விமர்சனத்தை முன்வைத்துள்ள ஆகூழ் ஏன் காசிநாதன் என்ற தனிமனிதன் மீது எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை என்ற கேள்வி எனக்குள் இருந்தது. ஆனால் நாவலில் அப்படியான விமர்சனம் இருந்திருந்தால் காசிநாதன் என்ற இலட்சியவாதி தோல்வியுற்றவனாக பார்க்கப்பட்டு இலட்சியவாதம் கேலிக்கூத்தாக மாறிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. அதை நாவலாசிரியர் தனது ஆளுமை மிக்க பெண் கதாபாத்திரங்கள் வழியாக முறியடித்திருக்கிறார்.
இலட்சியத்திற்காக தன்னைப் பலிகொடுத்த, பலிகொடுக்கும் மனிதர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் மதிப்பு உள்ளதா? இலட்சியங்களும், அறங்களும், விழுமியங்களும் காலாவதியாகிவிட்டதா? போன்ற பதற்றமான கேள்விகள் சூழ்ந்திருக்கும் தற்காலச் சூழலில் தனது சொத்து சுகங்கள் அனைத்தையும் இழந்து இலட்சியவாதத்தின் முகமாக வாழ்ந்து மடிந்த காசிநாதன் என்ற இடதுசாரித் தோழரின் ஆகூழ் நமக்குள் பெரும் நம்பிக்கையை விதைக்கிறது. இருளிலிருந்து மீளும் ஒளியைக் காட்டுகிறது. ‘இலட்சியவாதம் பொதுச்சமூகத்தால் அண்ணாந்து வியப்புடன் பார்க்கப்படவேண்டும்’ என்ற வரியை ஆகூழ் உண்மையாக்கி இருக்கிறது. இதுதான் இந்த நாவலின் மிகப் பெரிய வெற்றி.

சிங்கை நவீன இலக்கியத்தில் சிறுகதைகள், கவிதைகள் அளவுக்கு நாவல்கள் இல்லை என்ற பெரும் குறையை ரமா தனது இரண்டு நாவல்களான அம்பரம், ஆகூழ் வழியாகப் போக்கியிருக்கிறார். தங்களது இயலாமைகளையும் கையாலாகாத்தனங்களையும் ஒத்துக்கொள்ள முடியாமல் “வீட்டில் சும்மா இருக்கிறீர்கள், அதனால்தான் உங்களால் நாவல் எழுத முடிகிறது” என்று கிண்டல் செய்வதன் வழி ஒருவரது பெரும் கனவுகளையும் பணிகளையும் ஒன்றுமில்லாமல் செய்யும் நஞ்சு நிறைந்த சூழலில் அதற்கான பதிலை ரமா தனது இரண்டு நாவல்கள் வழியாக காத்திரமாகச் சொல்லியிருக்கிறார்.
அப்படிச் சொன்னதன் மூலம் சிங்கை தமிழ் இலக்கியத்தின் முதன்மையான, முக்கியமான படைப்பாளியாகத் தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
2
ஒரு கிராமம் வரலாறு ஆகும் கதை – லக்ஷ்மி சரவணகுமார்
ரமா சுரேஷ் தனது முந்தைய நாவலான அம்பரத்திலிருந்து முற்றிலும் துண்டித்துக்கொண்டு புதிய களத்துக்குள் பயணித்திருக்கிறார். கதைமொழியிலும் கதாப்பாத்திர உருவாக்கத்திலும் இந்த நாவல் தனிச்சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறது. கீழ் தஞ்சை மாவட்டமான ஆம்பலாப்பட்டு என்னும் கிராமத்திலிருந்து சிங்கப்பூருக்கு பிழைக்குச் செல்கிறவர்கள் அங்கு ஏகாத்தியபத்யத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுப்பதன் வழியாக அரசியலைக் கற்றுக் கொள்கிறார்கள்.
இந்த நாவலைப் புரிந்துகொள்ள கணபதியின் அரசியல் வாழ்க்கையை மட்டும் பின்தொடர்வது போதாது. அவர் உருவாக்கிய சமூகத்தின் நினைவுக்குள் இறங்க வேண்டும். அந்த நினைவின் மிக முக்கியமான இடம் ஆம்பலாப்பட்டு. நாவலில் அந்த ஊர் ஒரு புவியியல் அமைப்பு அல்ல; வர்க்க நினைவாகவும் அரசியல் நினைவாகவும் குடும்ப நினைவாகவும் கூடிய உயிருள்ள நிலப்பரப்பாக வெளிப்பட்டிருக்கிறது. ஆம்பலாப்பட்டு மதுக்கூர் ஜமீனின் கீழிருந்த கிராமம். ஜமீன்தாரின் அதிகாரம் நிலத்தின் மீது மட்டும் இல்லை; அந்த நிலத்தில் உழைக்கும் மனிதர்களின் மீதும் இருந்தது. வரி, நில உரிமை, குத்தகை, உழைப்பு என ஒவ்வொரு வழியிலும் விவசாயியும் தொழிலாளியும் அதிகாரத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்தனர். நாவலில் ஜமீனுக்கு எதிரான எதிர்ப்பு இப்படித்தான் தனிப்பட்ட கோபமாகத் தொடங்கி, பின்னர் கூட்டு அரசியலாக மாறுகிறது.
ஆம்பலாப்பட்டின் அரசியல் விழிப்புணர்வு ஒரே நாளில் தோன்றியதல்ல. 1943-ஆம் ஆண்டில் அங்கே கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையும் விவசாயிகள் சங்கமும் உருவாகின்றன. கதிரேசன் போன்றவர்கள் அந்த அமைப்புகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். அதே காலகட்டத்தில் இளைஞர்கள் அரசியல் அமைப்புக்குள் திரள்கிறார்கள். ஒரு கிராமத்தில் கட்சி கிளை உருவாகிறது என்பதன் பொருள், அந்த கிராமத்தின் அன்றாட வாழ்க்கையிலேயே அரசியல் நுழைகிறது என்பதுதான். நிலம் பற்றிய பேச்சு அரசியலாகிறது; கூலி பற்றிய பேச்சு அரசியலாகிறது; ஜமீன்தாரிடம் செலுத்த வேண்டிய பணம் அரசியலாகிறது. இதுவே ஆம்பலாப்பட்டின் தனித்துவம்.
ஜமீனுக்கு எதிரான போராட்டத்தின் மிக முக்கியமான மாற்றம், “ஜமீன்தாருக்கு உழைப்பைக் கொடுப்பது இல்லை” என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது. அது ஒரு சிறிய பொருளாதார மறுப்பு போலத் தோன்றினாலும், அதன் பின்னால் பெரிய அரசியல் மாற்றம் இருக்கிறது. தலைமுறைகளாக அதிகாரம் செலுத்திய ஜமீன்தாரிடம் கீழ்ப்படிந்து வாழ்ந்த மக்கள், ஒரு கட்டத்தில் “இல்லை” என்று சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அந்த ‘இல்லை’தான் நாவலின் அரசியல் மொழியில் மிகப் பெரிய சொல்.
அந்த எதிர்ப்பு ஆம்பலாப்பட்டுக்குள் மட்டும் அடைபட்டிருக்கவில்லை. செல்லத்தூர்வெட்டிகாடு, பின்னையூர், வடவாளம், செங்கம்மேடு, நெய்வேலி, வெங்கரை, கொல்லைக்காடு, திப்பியவிடுதி, பூவாளூர் போன்ற பகுதிகளுக்கும் விவசாய சங்க அமைப்பு பரவுகிறது. இதனால் ஒரு கிராமத்தின் கோபம் சுற்றுப்புற கிராமங்களின் கூட்டு உணர்வாக மாறுகிறது. ஆம்பலாப்பட்டு இங்கே ஒரு அரசியல் மையமாக உருவாகிறது.
பொதுவாக அரசியல் வரலாறுகள் போராட்டத்தின் முன்னணியில் நின்ற ஆண்களின் பெயர்களை மட்டுமே பதிவு செய்கின்றன. ஆனால் ஒரு போராட்டம் பல நாட்கள், பல மாதங்கள் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் அதன் பின்னால் குடும்பங்களின் உழைப்பு இருக்க வேண்டும். ஆம்பலாப்பட்டு பெண்கள் அந்தப் போராட்டத்தின் வெளிப்படாத கட்டமைப்பாக இருக்கிறார்கள். ஆண்கள் கூட்டங்களுக்குச் செல்லும்போதும், தலைமறைவாகும்போதும், காவல்துறை ஊருக்குள் நுழையும்போதும், வீடுகளில் குழந்தைகள், முதியவர்கள், உணவு, பாதுகாப்பு ஆகியவற்றைச் சுமப்பவர்கள் பெண்கள்தான். போலீஸார் ஊருக்குள் நுழைய முடியாத குறுகிய தெருக்களிலும், மக்கள் ஒதுக்கிவைத்திருந்த சேரிப் பகுதிகளிலும் மக்கள் தஞ்சம் புகுந்தனர். இளைஞர்கள் எங்கே மறைந்திருக்கிறார்கள் என்பது பெற்றோர்களுக்குக்கூடத் தெரியாத அளவுக்கு சூழல் உருவானது.
இதனால் பெண்கள் போராட்டத்தின் மறைமுகத் தகவல் வலையமைப்பாகவும், பாதுகாப்பு வளையமாகவும் மாறுகிரார்கள். இது வெறுமனே “பெண்களும் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்” என்ற அளவிலான பதிவு அல்ல. ஆண்கள் கைது செய்யப்படலாம்; தலைமறைவாகலாம்; சிறைக்குச் செல்லலாம்; ஆனால் வீடு காலியாகிவிடாமல் பார்த்துக்கொள்வது பெண்களின் பொறுப்பாகிறது. போராட்டம் தெருவில் நிகழ்ந்தாலும் அதன் தொடர்ச்சி சமையலறையிலும், திண்ணையிலும், வயலிலும், குழந்தைகளின் உடலிலும் நிகழ்கிறது. அதனால்தான் பட்டுக்கோட்டை மாநாட்டில் பெண்களின் பெருமளவிலான பங்கேற்பு வெறும் எண்ணிக்கை அல்ல. அது அந்தக் காலத்து சமூக அமைப்பின் உள்ளே ஏற்பட்டிருந்த மிகப்பெரிய அரசியல் மாற்றம். வீட்டுக்குள் இருந்த பெண் பொதுவெளிக்கு வருகிறாள்; ஜமீனுக்கு எதிரான கோபம் அவளுடைய குடும்பத்தின் அன்றாட வாழ்வோடு இணைகிறது. அவளுக்கு அரசியல் என்பது கோட்பாடு அல்ல; வாழ்க்கைப் போராட்டம்.
இந்த அரசியல் எழுச்சிக்கு எதிராக அரசு பயன்படுத்திய வன்முறையும் நாவலில் முக்கியமான இடம் பெறுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட பிறகு ஆம்பலாப்பட்டு சாதாரண கிராமமாக இருக்கவில்லை. தலைமறைவாக இருந்த தலைவர்களும் கட்சி ஊழியர்களும் சுற்றியுள்ள செம்பாளூர் காடுகளில் அரசியல் வகுப்புகளும் போராட்டப் பயிற்சிகளும் மேற்கொண்டனர். இதைத் தடுக்க முயன்ற நிலச்சுவான்தார்களுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைகிறது. சாம்பசிவ ஐயரின் வீடு தொடர்பான சம்பவம் அதற்குப் பிறகு ஆம்பலாப்பட்டின் மீது அரசு இயந்திரத்தை இறக்குவதற்கான காரணமாகிறது. அறுபத்தெட்டு பேர்மீது வழக்கு போடப்பட்டு, அவர்களைக் கைது செய்ய சிறப்புக் காவல்படை கிராமத்தை முற்றுகையிடுகிறது. போலீசார் ஊருக்குள் நுழைந்து கடுமையான அடக்குமுறையை மேற்கொள்கிறார்கள்.
இங்கே “மலபார் போலீஸ் படை” என்பது நாவலின் வன்முறை நினைவுக்குள் ஒரு தனித்த உருவமாக வாசிக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து வந்த ஆயுதம் ஏந்திய அரசு, தனது சொந்த கிராமத்திற்குள் நுழைகிறது. எதிரே நிற்பவர்கள் ஆயுதம் கொண்ட ராணுவம் அல்ல; விவசாயிகளும் தொழிலாளர்களும். அதனால்தான் ஆம்பலாப்பட்டின் தெருக்கள், வயல்கள், வீடுகள், சேரிகள் எல்லாம் போராட்டத்தின் நிலப்பரப்பாக மாறுகின்றன. போலீஸ் வாகனங்கள் ஊருக்குள் வர முடியாத குறுகிய தெருக்கள் மக்கள் பாதுகாப்புக்கான இயற்கையான அரண்களாகின்றன. மக்கள் சிதறி மறைகிறார்கள். இளைஞர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று குடும்பத்தினருக்குக்கூட தெரியாது. இது ஒரு கிராமம் அரசை எதிர்த்து நிற்பதன் மிக அடிப்படையான காட்சி.
ஒருபுறம் ஜமீன். மறுபுறம் விவசாய மக்கள். ஒருபுறம் காவல்துறை. மறுபுறம் கிராமத்தின் தெருக்கள். ஒருபுறம் அரசு. மறுபுறம் நினைவையும் உறவையும் நம்பிய மக்கள். இந்த எதிர்மறைத் துருவங்களுக்கிடையேதான் ஆம்பலாப்பட்டின் அரசியல் உருவாகிறது. ஆனால் இந்த நாவலை இன்னும் ஆழமாக்குவது, இந்த அரசியல் வரலாற்றுக்கு அடியில் ஓடும் தொன்ம நினைவு.
ஒரு குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக மூத்த பிள்ளை ஊமையாகப் பிறப்பதாகச் சொல்லப்படும் சாபம் போன்ற தொன்மம், நாவலின் யதார்த்த அரசியல் வரலாற்றோடு இணையும் போது ஒரு விசித்திரமான அர்த்தத்தை உருவாக்குகிறது. இதை வெறும் மூடநம்பிக்கையாகப் பார்க்க முடியாது. ஒரு குடும்பம் தன் கடந்த காலத்தில் நடந்த சொல்லப்படாத வன்முறையை, குற்றத்தை, அல்லது நிறைவேறாத ஆசையை “சாபம்” என்ற வடிவத்தில் அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது. பேச முடியாத மூத்த பிள்ளை என்ற உருவகம் இங்கே மிகவும் வலிமையானது. ஒரு கிராமம் தனது வரலாற்றைச் சொல்ல முடியாதபோது அது தொன்மமாக மாறுகிறது. குடும்பம் தன் ரகசியத்தைச் சொல்ல முடியாதபோது அது சாபமாக மாறுகிறது. அந்த வகையில் ஊமையாகப் பிறக்கும் மூத்த பிள்ளை, பேசப்படாத வரலாற்றின் உடல் வடிவமாக வாசிக்கப்படலாம்.
இதுதான் நாவலின் மிக அழகான அடுக்குகளில் ஒன்றாக இருக்க முடியும்: கணபதியின் அரசியல் வரலாறு பேசப்படுவதற்காகப் போராடுகிறது; குடும்பத் தொன்மம் பேச முடியாததைச் சுமக்கிறது. ஒன்று கோஷமாக வெளியில் வருகிறது; மற்றொன்று மௌனமாக உடலுக்குள் தங்கி விடுகிறது. இதன் காரணமாக ஆம்பலாப்பட்டு ஒரு வரலாற்று கிராமமாக மட்டுமல்லாமல், நினைவுகளின் கிராமமாக மாறுகிறது. ஒரு மக்கள் கூட்டம் தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை எப்படிச் சுமக்கிறது? சிலர் அதை அரசியலாக்குகிறார்கள். சிலர் போராட்டமாக்குகிறார்கள். சிலர் குடும்பக் கதையாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் மௌனமாகத் தங்களுடைய உடலில் சுமக்கிறார்கள்.
ஆம்பலாப்பட்டு பற்றிய இந்தப் பதிவுகள் சேரும்போதுதான் நாவலின் பரப்பு உண்மையில் விரிகிறது. கணபதி சிங்கப்பூரில் தொழிலாளர் அரசியலைக் கற்றுக்கொள்வதற்கு முன்னரே, அவன் பிறந்த மண்ணில் மக்கள் நிலத்திற்காகவும் மரியாதைக்காகவும் உரிமைக்காகவும் போராடிக் கொண்டிருந்தார்கள். சிங்கப்பூரின் தொழிலாளர் அரசியலும் ஆம்பலாப்பட்டின் விவசாய அரசியலும் இரண்டு வெவ்வேறு கதைகள் அல்ல. அவை ஒரே மனிதனின் அரசியல் உணர்வை உருவாக்கிய இரண்டு கரைகள். அதனால்தான் கணபதியை உருவாக்கிய பள்ளி ஒரு அரசியல் கட்சி மட்டும் அல்ல. அவன் பள்ளி ஆம்பலாப்பட்டு.

இந்த எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்த்தால், ஆம்பலாப்பட்டு நாவலில் ஒரு இடம் அல்ல; அரசியல் உயிரினம். அந்த உயிரினத்தின் நினைவிலிருந்துதான் கணபதி போன்ற மனிதர்கள் உருவாகிறார்கள். அதனால் இந்த நாவலின் உண்மையான பயணம் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வரை செல்லும் ஒரு மனிதனின் பயணம் அல்ல. அது ஒரு கிராமத்தின் உடலிலிருந்து ஒரு மனிதனின் அரசியல் உணர்வுக்குள் வரலாறு எப்படி நுழைகிறது என்பதன் பயணம். ஆனால் இதற்கெல்லாம் அப்பால் முக்கியமான சில விமர்சனங்கள் உண்டு. கதாப்பாத்திரங்கள் நிஜ மனிதர்கள், அவர்களின் பெயர்கள் சம்பவங்கள் எல்லாமே நடந்ததை அப்படியே எழுதப்பட்டிருக்கின்றன. நடந்ததை அப்படியே சொல்ல ஒரு வரலாற்று ஆசிரியன் போதுமே? அங்கே எழுத்தாளனின் வேலையென்ன? இன்னொரு முக்கியமான சிக்கல் கதாப்பாத்திரங்கள் நாவலாசியருக்கு உறவினர்களாகவும் ஊர்க்காரர்களாகவும் இருப்பதால் அவர்களின் மீது எந்த விமர்சனங்களும் இல்லாமல் விதந்தோதல்கள் மட்டுமே மிகுந்திருக்கின்றன. சில இடங்களில் நாங்களும் கள்ளந்தாண்டா என சொல்கிற இடங்களில் அது சாதிப் பெருமிதமாக மாறிவிடக் கூடிய ஆபத்தும் நிகழ்ந்திருக்கிறது. உங்கள் வாழ்வையே எழுதினாலும் அதை நீங்கள் மூன்றாவது மனிதனாக இருந்து பார்ப்பது முக்கியம். இந்தக் குறைகளை கவனத்தில்ந எடுத்துக் கொண்டால் அவரது அடுத்த நாவல் இன்னும் சிறப்பாக வரும்.
*
