இச்சைகளில் சிதையும் குடும்பம் – கிருஷ்ணமூர்த்தி

(அம்மன் மரம் நாவலை முன்வைத்து…)

நாவல்

நாவல் இலக்கியத்தில் தனித்த பங்கு வகிக்ககூடிய ஒரு கதைப் பொதுமை குடும்பம் சிதைவதாக இருக்கிறது. உலகளாவிய தளத்தில் அவ்வகையிலான கதைகளுக்கு பொதுப்பண்புகளும், தொடர்ந்து எழுதப்படுவதும் நிகழ்ந்து வருகிறது. சமூகத்தில் உருவாகும் கருத்தியல் சார்ந்த அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக குடும்ப அமைப்பே உருவாகிறது. சமூகத்தின் சோதனைக்கூடமாக அவை அமையப்பெறுகின்றன. அங்கே ஒரு அதிகாரமும், அவற்றின் துணையுடன் வழி நடத்தப்படும் தலைமுறைகளும் தனித்த கதைகளாகின்றன. இந்தக் கட்டமைப்பு தனக்கென விதிமுறைகளையும், அறம் சார்ந்த சட்டகங்களையும் நிறுவிக்கொள்கின்றன. அவற்றிலிருந்து வழுவும் ஏதோ ஒரு தலைமுறையின் தனி நபர் மொத்த கட்டமைப்பும் இடிபடுவதற்கான காரணமாகிறார். நாவல் வடிவத்தில் அந்த்த தனி நபரின் செயல்கள் அமைப்பியல் முரணை பேசுவதற்கான களமாகிறது. குடும்பம் எனும் அமைப்பு சுமக்கும் அம்சத்திற்கும் அந்த முரணான கருத்தியலுக்குமான உரையாடலாக சிதைவு பேசப்படுகிறது. சிதைவிற்கு பின் பல்வேறு சாத்தியங்கள் உருவாகின்றன. ஏற்கனவே இருந்த குடும்பம் முன்னோர் கதையின் உருவத்தை எடுக்கிறது. மற்றொன்று புதிய குடும்பம் எனும் அமைப்புகள் உருவாகின்றன. இதன் ஏதோ ஒரு பகுதியை நாவல்கள் எடுத்து மிக விரிவாக அவற்றைப் பேச முற்படுகின்றன. காலந்தோறும் அதன் காரணங்கள் மாறுபடுவதால் குடும்பம் சிதைவுருவது யதார்த்தத்திலும் இலக்கியத்திலும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதன் சமகால எடுத்துக்காட்டாக அமைவது தமிழ்நதி எழுதிய “அம்மன் மரம்” நாவல்.

அவருடைய முதல் நாவல் பார்த்தீனியம் ஈழத்தில் நிகழ்ந்த போரை மையப்படுத்திய ஒன்று. அதிலிருந்து முற்றிலும் மாறி போரின் வடுக்கள் பின்புல நினைவேக்கமாக மாறி அன்றாடத்தின் போராட்டத்தில் சிக்குண்டிருக்கும் குடும்பத்தின் கதையாகிறது அம்மன் மரம். ஓ ஹென்றியின் பிரபலமான சிறுகதையொன்றில் கடைசி இலை விழுந்தால் தன் உயிர் பிரிந்துவிடும் என்று நம்பும் நோயாளி வருவார். அப்படியான ஒருவராக நாயகியை அறிமுகம் செய்கிறார். அருந்தவ ராணி நோய்ப்படுக்கையில் ஒரு பறவையின் இருப்பை தன்னுயிருடன் இணைத்து, நினைவேக்கங்களை அசைபோட்ட வண்ணம் படுத்திருக்கிறார்.

அருந்தவ ராணியின் கணவன் வாணன். பிரிந்து வெளிநாட்டிற்கு பணி நிமித்தம் சென்று இருபது ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு நான்கு மகன் ஒரு மகள். மகள் மிதிலாவிற்கு கால் ஊனம். அதைக் காரணம் காட்டி திருமணம் தள்ளிச் செல்கிறது. பார்த்திபன், தயாளன், முகுந்தன், நவநீதன் ஆகிய நான்கு மகன்கள். அருந்தவ ராணியை அருகிலிருந்து பார்த்துக்கொள்வது மிதிலா மட்டுமே. நான்கு மகன்களும் அவரவர்களின் சிக்கலில் உழன்றுகொண்டிருக்கின்றனர். அவை அனைத்தும் ஒழுக்கச் சிக்கல்களாக இருக்கின்றன. போதைப் பழக்கம, அதிகாரத்தின் மீதான வெறி, ஏமாற்றிப் பிழைக்கும் மனம், மனைவியை சமமாக நடக்காதிருத்தல் என்று அவை விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரின் சிக்கலும் தனித்துவம் மிக்கதாகவும், தனித்த கதைக்கான கருவைப் போலவும் அமைந்திருப்பது நாவலின் சிறப்பம்சம். அனைவரின் பொதுத் தேவையாக அமைவது செல்வம். கேட்கும்போதெல்லாம் வாணனிடம் கேட்டு அதிலிருந்து சிக்கனப்படுத்தி அருந்தவம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் திசை மாறிச் செல்லும் மகன்களின் பாதையை நெறிபடுத்த இயலவில்லையே எனும் ஏக்கம் அவரை வாட்டுகிறது.

மறுபுறம் மிதிலாவின் நிலைபெறாத வாழ்க்கை அவருக்கு சங்கடமாகிறது. அவளுடைய கைக்கூடாத காதலையும் அறிந்தே வைத்திருக்கிறார். எல்லா சிக்கல்களையும் மிக அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டும் அதன் மீதான நல்ல தாக்கத்தை செயல்படுத்த முடியாத பாத்திரமாக அருந்தவ ராணி வார்க்கப்பட்டிருக்கிறது.

கதையோட்டம் நிகழ்காலத்தில் நடக்கும் அனைவரின் அன்றாடமும், ஊடாக அருந்தவ ராணியின் கடந்த கால கதைகளும் இணைகோடாக சொல்லப்படுகிறது. வாணனுக்கும் அருந்தவ ராணிக்கும் இடையே முகிழ்க்கும் காதல் வீட்டை எதிர்த்து நிகழும் திருமணமாகிறது. வாணனுடைய அம்மாவிற்கு அவன் ஒரே மகன். அவன் மீதிருக்கும் பாசம் அருந்தவத்தின் மீதான வெறுப்பாகிறது. அந்த வெறுப்பை அன்றாடம் சமாளிக்க நேரும் அருந்தவத்திற்கு தனக்கென ஒரு வீடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசை முளைக்கிறது.

எல்லை இடப்படாத ஆசை அருந்தவத்தை வழி நடத்துகிறது. வாணனுக்கென இருக்கும் சொத்துரிமையில் ஒரு நிலத்தைப் பிடித்து வீடு கட்டுகின்றனர். அங்கிருக்கும் மரத்தை வெட்ட அது அம்மன் மரம் என்றும் அதன் தொன்மக் கதை விரிவாக சொல்லப்படுகிறது. அதனால் எழும் சாபம் குடும்பத்தைத் தொடரும் என்றும் வழி வழியான நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. மாறாக பழைமைவாத கதை சொல்லாடலுக்கு இடையில் பின்புலமாக நகரும் ஆசைக்கும் இச்சைக்குமான இடைவெளியில் சிறிய பலிகிடாவாக மாருகிறது அம்மன் மரம்.

வாணனின் பொருளாதார எல்லைகளைப் பொருட்படுத்தாமல் கட்ட விரும்பும் வீடு அருந்தவத்தின் பேராசைக்குள் பயணிக்கிறது. கட்டுமானப் பணிகளுக்கு இடையில் ஏற்படும் இடர்களுக்கு தொன்மச் சாபத்தின் காரணங்கள் பூசப்படுகின்றன. பொருளாதாரக் கட்டுபாடுகளைக் கடந்து அருந்தவத்தின் இச்சையில் வீடு ஒரு பெருங்கோட்டையாக பரிணமிக்கிறது. கோட்டை எனும் சொல் அவளுடைய ஆசையின் அர்த்தமாக வீடு உருப்பேருவதே இங்கு குறிப்பிடப்படுகிறது. ஆசையின் விதை சுயமரியாதைக்கு நேரும் இழுக்கிலிருந்தே தொடர்கிறது. சொந்த குடும்பத்தால் கைவிடப்பட்ட ஒரு மனதிற்கு புதிய வேர் தேவைப்படுகிறது. அது இழந்த கடந்த காலத்தை பூர்த்தி செய்வதற்கு நிகராக தேவைப்படுகிறது. வாணன் மீதான காதல் மட்டுமே அவற்றை நிறைவு செய்வதில்லை. வீடு வெறும் இருப்பிடமாக இல்லாமல் சுதந்திரத்தீன், சுயமரியாதையின் வடிவமாக அருந்தவத்திற்கு புலப்படுகிறது. அதை இயன்றளவு விஸ்தீரணமாக கட்டமைக்க விரும்புகிறார். இடர்கள் அனைத்தையும் தன் ஆசைகளுக்கான, நோக்கங்களுக்கான முட்டுக்கட்டையாக மட்டுமே பார்க்கிறார். ஆசையே வெல்கிறது.

ஆசையின், இச்சையின் வெற்றியிலிருந்தே நாவலின் மையக்கதை தொடங்குகிறது. எல்லா கதாபாத்திரங்களும் இச்சைகளுக்கு செவி சாய்க்கின்றனர். பிறர் உடைமைகளின் மீது இச்சை கொள்ளும் முகுந்தன் ஏமாற்றுக்காரனாக மாறுகிறான். அதிகாரத்தின் மீதான் ஆசை ஒரு மகனை ரௌடித்தனத்தை நோக்கி நகர்த்துகிறது. நாவலில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இதன் அளவுகோளில் நம்மால் வரையறுக்க இயலும்.

இந்த வரையறுத்தல் மிக நுட்பமாக கையாளப்பட்டிருப்பது நாவலின் பெரும் பலம். அருந்தவத்தை மட்டும் எடுத்து இதனை விளக்கலாம். வாழ்வதற்கு வீடு தேவை எனும் அளவில் கனவை வனைந்திருக்கலாம். ஆனால் அதன் அழகியல் சார்ந்த அம்சங்களும் அளவில் பெரியது எனும் ஆசையும் பொருளாதார எல்லைகளைகளைக் கடக்க உதவுகிறது. அவருடைய ஆசை வாணனின் மீது பெருங்கடனாக விழுகிறது. கடன் நோக்கி ஓடும் வாணனின் கவனம் தொழிலில் மட்டுமே குவிகிறது. அதே நேரம் அருந்தவத்தின் மீதிருந்த ஈர்ப்பு குன்றுகிறது. வாணனின் மனதுள் இருக்கும் இச்சைக்கான இடம் காலியாகிறது. அது முறை தவறிய பரிணமிக்கிறது. பின் அதற்குண்டான விளைவுகள் குடும்பத்திற்குள் கவிகிறது. உரையாடல்கள்  காரசாரமான பேச்சுவார்த்தைகள் ஆகின்றன. குற்றம் சுட்டும் வார்த்தைகள் மட்டுமே மண்டுகின்றன. தொழில் நிமித்தம் என்று ஊராருக்கு சொல்லி வெளிநாட்டிற்கு செல்லும் வாணன், அதற்காக மட்டுமே செல்வதில்லை என்பது நாவலில் அழகாக புலனாகிறது. அது குற்றவுணர்ச்சியின் விளைவால் எடுக்கும் ஓட்டம். யாரையும் காணும் துணிவின்றி மேற்கொள்ளும் தீராப்பயணம்.

ஒன்றில் தொடங்கும் இச்சையும் அதனால் ஏற்படும் விளைவுகளும் சுழல்வட்டப்பாதையில் வேறு வேறு மனிதர்களின் அக உலகை பாதிக்கிறது. அது சுழலின் மறு ஓட்டமாக புற வடிவில் தன் விளைவுகளைப் பூதாகாரமாக்குகிறது. மன்னிப்பு கேட்பதும் மன்னிப்பதும் மட்டுமே இந்த சுழலை உடைப்பதற்கான ஒரே வழி. ஆனால் அதை முதல் நிலையிலேயே தவறும் போது யாரிடம் கேட்க, யாரையெல்லாம் மன்னிக்க எனும் பல்லடுக்குகளை எட்டிவிடுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் மொத்த குடும்பத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகின்றனர். நாவலின் இறுதியில் எல்லோரும் கையறு நிலையில் நிற்கும் காட்சி சிறப்பாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அதை அடுக்கடுக்காக ஒவ்வொரு பாத்திரத்திற்கும் மனதில் படியும் வண்ணம் புனைவாக்கியிருக்கிறார்.

ஈழம் சார்ந்த கனவும், அங்கிருக்கும் பண்பாட்டு அம்சங்களும் மிகச் சிறப்பாக நாவலில் கையாளப்பட்டிருக்கிறது. குறிப்பாக போரின் நினைவுகள். அருந்தவ ராணிக்கு விடுதலைப் புலிகளின் மீது பெரும் நம்பிக்கை இருந்திருக்கிறது.விடுதலையின் வழியே பொன்னுலகத்தை கட்டமைப்பார்கள் என்று பலரைப் போல அவரும் நம்புகிறார். யதார்த்த சூழல் வேறு மாதிரியாகிறது. அருந்தவ ராணிக்கு வீட்டின் சூழலே சிந்தனையின் பெரும்பகுதியை ஆட்கொள்கிறது. அரசியல், போதைப்பொருள் சார்ந்த தன்னுடைய மகன்களின் செயல்பாடுகளைப் பார்கும்போது விடுதலைப் புலிகளின் பொன்னுலகத்தை அசைபோடுகிறார். அக்கனவுகள் நிறைவேறியிருந்தால் தன்னுடைய மகன்கள் தடம் மாறி சென்றிருக்க மாட்டார்கள் என்று சமாதானம் கொள்கிறார். மேலும் மகன்களின் நிலையை எண்ணுவதன் வழியே, பேசுவதன் வழியே இலங்கையின் சமூகச் சூழலை நுட்பமாக பேசுவது நாவலில் கச்சிதமாக பதிவாகியிருக்கிறது.

தமிழ்நதி

இவ்வளவு துயரமான ஒரு நாவல் தேவையா எனும் கேள்வி அவ்வப்போது எழுந்தது. ஒரு மனித உணர்வை எடுத்துக்கொண்டு அதன் வழியே ஆளுமையின், ஆளுமையின் கீழ் இருக்கும் ஒரு அமைப்பின் வீழ்ச்சியை இவ்வளவு நுட்பமாக பேசும்போது துயர் மட்டுமே எஞ்சுகிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் நீக்கும்போது, அவை குடும்பத்தின் கதையாக இல்லாமல் சமூகத்தின் கதையாக பரிணமிக்கிறது. நம் ஆசைக்காக நாம் எதையெல்லாம் இழக்க தயாராகியிருக்கிறோம் எனும் கேள்வியை எதிர்கொள்வதே இல்லை. அல்லது விருப்பத்துடனான இழப்பை நாம் பேச்சுக்குக்கூட கருதுவதில்லை. எதையும் இழக்க தயாராகாத மனம் எல்லாவற்றையும் இழக்க நேரிடுகிறது. பாதுகாப்பு வளையங்கள் உடைகின்றன. சேர்த்து வைத்த அடையாளங்கள் அர்த்தங்கள் இழக்கின்றன. கடந்த காலத்திற்கு செல்ல இயலாத கைவிடப்பட்ட நிலையில் சேகரமாகிறோம். அப்படி சேகரமாகும் ஒரு குடும்பத்தின் நுட்பமான சித்தரிப்பு “அம்மன் மரம்”.

கிருஷ்ணமூர்த்தி

இன்னமும் ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து செவ்வியல் நாவல்களின் பட்டியலில் இந்த நாவல் நிச்சயம் இடம்பெறும். மொழி, கதையின் கட்டமைப்பு, கதாபாத்திர வார்ப்பு என அனைத்திலும் செவ்வியல் தன்மையை இயல்பாக கொண்டிருக்கிறது அம்மன் மரம்.

*

*

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *