மேதைகளின் நிழல் – லஷ்மி சரவணகுமார்

“if nothing else is left, one must scream. Silence is the real crime against humanity”
-Nadeshda Mandelstam (hope against hope)
இலக்கிய வரலாறு பெரும்பாலும் தனிமனிதர்களின் வரலாறாகவே எழுதப்பட்டிருக்கிறது. ஓர் எழுத்தாளர் தனது கற்பனைக்குள் மூழ்கி, தனிமையில் ஒரு படைப்பை உருவாக்குகிறார் என்ற பிம்பம் நம்முடைய மனதில் பதிந்திருக்கிறது. இதனாலேயே படைப்பாற்றல் என்பது ஒருவருடைய தனிப்பட்ட திறமை, அனுபவம், சிந்தனை, ஆகியவற்றிலிருந்து உருவாகிறது என்று நம்புகிறோம். ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசும்போது அதன் ஆசிரியரின் பெயரையே முதன்மைப்படுத்துகிறோம். ஆனால் அந்தப் புத்தகம் உருவாவதற்கான வாழ்க்கைச் சூழலையும் அதனைச் சாத்தியமாக்கியவர்களையும் நாம் பேசுவதில்லை. அவனுக்கு இணக்கமானதொரு வாழ்க்கையைச் சாத்தியமாக்கிய மனிதர்கள் யார், அவனது நேரத்தைப் பாதுகாத்தவர்கள் யார், அவன் எழுதியதை மீண்டும் நகலெடுத்தவர்கள் யார், அவனுடைய கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாத்தவர்கள் யார் என்ற கேள்விகள் இலக்கிய வரலாற்றில் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை.
சில நாட்களுக்கு முன்பு அலெக்ஸாண்ட்ரா போபாஃப் எழுதிய The Wives: The Women Behind Russia’s Literary Giants என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான ஒரே நிழல் நூலை வாசித்தேன். நண்பர் சிறில் அலெக்ஸ் இதனைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ரஷ்ய இலக்கியத்தின் ஆறு முக்கியமான எழுத்தாளர்களின் மனைவிகளான அன்னா தஸ்தயேவ்ஸ்கி, சோபியா டால்ஸ்டாய், நடேஷ்டா மெண்டல்ஸ்டம், வேரா நபகோவ், எலெனா புல்ககோவா, நடால்யா சொல்ஷெனிட்சின் ஆகியோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அவர்களுடைய கணவர்களின் இலக்கிய வாழ்க்கையில் இந்தப் பெண்கள் ஆற்றிய பங்களிப்புகளையும் அவர்கள் எதிர்கொண்ட சமூக, அரசியல் நெருக்கடிகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.
இந்த ஆறு பெண்களும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் அல்ல. அவர்களுடைய திருமணங்களும் ஒரே தன்மையைக் கொண்டிருக்கவில்லை. சிலர் தங்களது கணவர்களின் எழுத்துப் பணியில் நேரடியாக ஈடுபட்டவர்கள், சிலர் பொருளாதாரத்தையும் குடும்பத்தையும் நிர்வகித்தவர்கள், சிலர் அரசியல் ஒடுக்குமுறையின் காலத்தில் கையெழுத்துப் பிரதிகளையும் நினைவுகளையும் பாதுகாத்தவர்கள், இன்னும் சிலர் கணவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய இலக்கிய மரபைத் தொடர்ந்து காப்பாற்றியவர்கள். ஆனால் இவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. உலகம் தனிப்பட்ட மேதைகளாகக் கொண்டாடிய ஆண்களின் படைப்பாற்றலைச் சுற்றியே இவர்களில் பலருடைய வாழ்க்கையின் பெரும்பகுதி அமைந்திருந்தது. அந்தப் படைப்பாற்றலைச் சாத்தியமாக்கிய இவர்களுடைய உழைப்புக்கு, அந்த ஆண்களின் புகழுக்குக் கிடைத்த அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தனிமையே படைப்பாற்றலின் அடிப்படை என்று நம்புகிறோம். ஆனால் அந்தத் தனிமையை உருவாக்குவதற்கான வாழ்க்கை எங்கிருந்து வருகிறது என்று யோசிப்பதில்லை. ஒருவர் புற உலகின் சிரமங்கள் வாழ்க்கைப்பாடுகளைக் குறித்து அலட்டிக்கொள்லாமல் எழுதுவதற்கு, அவருடைய வாழ்க்கையில் பல விஷயங்களை வேறொருவர் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். பணம் இல்லாவிட்டால் குடும்பத்தின் பொருளாதாரத்தைச் சமாளிக்க வேண்டும். நோய் வந்தால் உடனிருந்து கவனிக்க வேண்டும். கடிதங்களுக்குப் பதிலளிக்க வேண்டும். பதிப்பாளர்களுடன் தொடர்புகொள்ள வேண்டும். கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க வேண்டும்.
ஒரு எழுத்தாளர் தனது படைப்பை உருவாக்குவதற்காக ஒதுக்கும் நேரத்தைத் தவிர, அவருடைய வாழ்க்கையின் மற்ற நேரங்கள் பலவும் வேறொருவரின் உழைப்பால் சாத்தியமாகிறது. இந்த மறைக்கப்பட்ட உழைப்பைப் பற்றி இலக்கிய வரலாறு பேசுவதில்லை, அல்லது மிகக் குறைவாகவே பேசுகிறது. குறிப்பாகப் பெண்களின் உழைப்பு குடும்பக் கடமை என்ற பெயரில் இயல்பானதாகக் கருதப்பட்டதால், தனிப்பட்ட சாதனையாகப் பதிவு செய்யப்படவில்லை. ஒரே நிழல் இந்த மறதியை எதிர்த்துப் பேசுகிறது. இந்த நூலில் வரும் பெண்கள் தங்களுடைய கணவர்களின் வாழ்க்கையைச் சுற்றி இருந்தவர்கள் மட்டுமல்ல, அவர்களது இலக்கிய வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் இயங்குவதற்கான முக்கியமான கட்டமைப்பாக இருந்தவர்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கையை அன்னா தஸ்தயேவ்ஸ்கி இல்லாமல் புரிந்துகொள்வது கடினம். அன்னா முதலில் அவருடைய மனைவியாக அவரது வாழ்க்கைக்குள் வரவில்லை. ஒரு சுருக்கெழுத்தாளராக அவரிடம் பணியாற்ற வந்தார். சூதாடி என்ற நாவலைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தஸ்தயேவ்ஸ்கி இருந்தபோது, அன்னா அவருக்குச் செய்த உதவி முக்கியமானதாக இருந்தது. அவர் சொல்வதை எழுதி, பிரதியை ஒழுங்குபடுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியை முடிக்க உதவினார். அந்தத் தொழில்முறை உறவு பின்னர் திருமணமாக மாறியது.
திருமணத்துக்குப் பிறகும் அன்னாவின் பங்களிப்பு ஒரு மனைவியின் வழக்கமான குடும்பப் பொறுப்புகளுடன் முடிந்துவிடவில்லை. தஸ்தயேவ்ஸ்கியின் பொருளாதார வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவது, அவரது நூல்களின் வெளியீட்டு நடவடிக்கைகளைக் கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது, அவருடைய எழுத்துப் பணிக்குத் தேவையான சூழலை உருவாக்குவது எனப் பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். சூதாட்டம், கடன், நோய், பொருளாதார நெருக்கடி எனப் பல பிரச்சினைகளால் சூழப்பட்டிருந்த தஸ்தயேவ்ஸ்கியின் இலக்கிய வாழ்க்கை தொடர்ந்து இயங்குவதற்கான நடைமுறை சாத்தியங்களை உருவாக்கியதில் அன்னாவின் பங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு பெண் ஓர் ஆணின் வாழ்க்கைக்காகத் தனது நேரத்தையும் உழைப்பையும் செலவழித்தால் அதை உடனடியாகத் தியாகமாக மட்டும் சுருக்கிவிடும்போது அவர்களது திறமை, நிர்வாக அறிவு, பொருளாதாரப் புரிதல், முடிவெடுக்கும் திறன் ஆகியவை காணாமல் போகிறது. அன்னாவைத் தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கையைத் தாங்கிய ஒரு நிர்வாகியாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு எழுத்தாளன் எழுதுவதைப் போலவே எழுதுவதற்கான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக்கொள்வதும் முக்கியமானது. அந்த வாய்ப்பை உருவாக்கியவர்களில் அன்னா முக்கியமானவர். இதற்காக தஸ்தயேவ்ஸ்கியின் மேதையை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்பதில்லை. மாறாக, அந்த மேதைமை எந்த வாழ்க்கைச் சூழலில் உருவானது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ளும் சாத்தியம் கிடைக்கிறது.
சோபியா டால்ஸ்டாயின் வாழ்க்கை இந்தக் கேள்வியை இன்னும் சிக்கலாக்குகிறது. போரும் அமைதியும், அன்னா கரீனினா போன்ற படைப்புகளின் மூலம் உலக இலக்கியத்தின் சிகரங்கலில் ஒருவராக நிறுத்தப்பட்டவர் லியோ டால்ஸ்டாய். ஆனால் அந்தப் படைப்புகளின் உருவாக்கத்துக்குப் பின்னால் இருந்த அன்றாட உழைப்பைப் பற்றிப் பேசும்போது சோபியாவைத் தவிர்க்க முடியாது. டால்ஸ்டாயின் கையெழுத்துப் பிரதிகளை அவர் மீண்டும் மீண்டும் நகலெடுத்தார். குறிப்பாக போரும் அமைதியும் போன்ற பிரம்மாண்டமான படைப்புகளின் உருவாக்கத்தில் அவர் செய்த பணி மகத்தானது. டால்ஸ்டாய் எத்தனை முறை அந்த நாவலை திருத்தி எழுதுகிறாரோ அத்தனை முறையும் அதனை நகலெடுப்பதற்கு பெரும் உழைப்பும் பொறுமையும் தேவை. இதற்கு நடுவே குடும்பத்தை நிர்வாகம் செய்து குழந்தைகளையும் சரியானபடி வளர்க்க வேண்டும். ஓஷோ காந்தியின் எளிமையான உணவுமுறை குறித்துச் சொல்லும்போது ’அவர் எளிமையானவராக இருக்க நாங்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது என அவரது சீடரான சரோஜினி நாயோடு சொன்னதை மேற்கோள் காட்டுவார். நான் டால்ஸ்டாயின் வாழ்க்கையில் இதனை வேறுவிதமாக பார்க்கிறான். அவரை மகத்தான கலைஞனாகவும் துறவியாகவும் இந்த உலகம் பார்க்க அவரது குடும்பம் எத்தனை தியாகங்களையும் இழப்புகளையும் செய்ய வேண்டியிருந்தது என்பதை இந்த நூலை வாசிப்பதன் வழியாகப் புரிந்துகொள்ல முடியும்.
டால்ஸ்டாயின் பிற்கால ஆன்மீக மாற்றங்கள் அவருடைய குடும்ப வாழ்க்கையுடன் முரண்படத் தொடங்கின. உலகச் சொத்துக்களையும் தனிப்பட்ட உரிமைகளையும் துறக்க வேண்டும், எழுத்தின் உரிமையைப் பொதுவுடைமையாக்க வேண்டும், எளிய வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்ற டால்ஸ்டாயின் சிந்தனைகள் அவருக்கு ஓர் ஆன்மீகப் பாதையாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் சோபியாவுக்கு அவற்றின் விளைவுகள் வேறுவிதமாக இருந்தன. குழந்தைகள் இருக்கிறார்கள், குடும்பம் இருக்கிறது; வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது. டால்ஸ்டாய் உலகத்தைத் துறப்பது ஒரு தத்துவத் தேர்வாக இருந்திருக்கலாம், ஆனால் அதன் நடைமுறை விளைவுகளையும் இழப்புகளையும் சுமப்பது சோபியாவுக்கு ஒரு போராட்டமாக மாறியது.
ஒரு மனிதன் தனது ஆன்மீக உண்மையைத் தேடும்போது, அவனோடு வாழும் மற்றொருவரின் வாழ்க்கை என்னவாகிறது என்கிற கேள்வி இங்கே எழுகிறது. டால்ஸ்டாயின் படைப்புகளை வெளியிடுவதிலும் அவற்றின் உரிமைகளைக் கையாள்வதிலும் ஏற்பட்ட முரண்பாடுகள், குடும்பத்தின் பொருளாதார நலனுக்கும் அவருடைய இலட்சியங்களுக்கும் இடையில் உருவான பதற்றத்தை மேலும் அதிகரித்தன. ஓர் எழுத்தாளனின் உயர்ந்த தத்துவம் அவனுடைய குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும்போது, அந்தத் தத்துவத்தின் விலையை யார் செலுத்துகிறார்கள் என்று கேட்க வேண்டியிருக்கிறது. எல்லாக் காலத்திலும் கலைஞன் ஏன் இத்தனை சிக்கலானவனாக இருக்கிறான் என்பது தனி ஆய்வுக்குரிய கேள்வி.
ஓர் எழுத்தாளனின் தனிப்பட்ட முரண்பாடுகளை நாம் பெரும்பாலும் அவரது ஆளுமையின் சிக்கலாகப் பார்க்கிறோம். அதே முரண்பாட்டுக்குள் ஒரு பெண் இருப்பதைப் பார்க்கும்போது அவளைக் குணநலன்களின் அடிப்படையில் தீர்மானிக்கிறோம். ஒரே நிழல் இந்த இரட்டை அளவுகோலை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. பெரிய எழுத்தாளர்களின் அருகில் வாழ்ந்த பெண்களைக் கணவர்களின் நிழலாக அல்லாமல், அவர்களுக்கென்று தனித்த வரலாறும் விருப்பங்களும் கொண்ட மனிதர்களாகப் பார்க்க வேண்டிய தேவையை இந்நூல் உருவாக்குகிறது.
நடேஷ்டா மெண்டல்ஸ்டமின் வாழ்க்கைக்குள் நுழையும்போது இந்தக் கேள்வி குடும்ப வாழ்க்கையைத் தாண்டி அரசியல் வாழ்க்கைக்குள் செல்கிறது. ஸ்டாலின் கால சோவியத் ஒன்றியத்தில் எழுத்தாளர்களின் குரலை அரசால் கண்காணிக்கவும் தடைசெய்யவும் அழிக்கவும் முடிந்தது. ஒசிப் மெண்டல்ஸ்டமின் கவிதைகளும் அரசியல் நிலைப்பாடுகளும் அவரை அதிகாரத்தின் கண்காணிப்புக்குள் கொண்டுவந்தன. அந்தச் சூழலில் அவருடைய கவிதைகளைப் பாதுகாப்பது வெறும் குடும்பப் பொறுப்பாக இருக்கவில்லை; அது உயிரைப் பணயம் வைக்கும் செயலாக மாறியது.
காகிதத்தில் இருந்த கவிதையை அரசு பறிமுதல் செய்யலாம். ஒரு வீட்டில் இருக்கும் கையெழுத்துப் பிரதியை அழித்துவிடலாம். ஆனால் அந்தக் கவிதையை ஒருவர் தனது நினைவில் வைத்திருந்தால் என்ன செய்வது? நடேஷ்டா மெண்டல்ஸ்டமின் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று, தனது கணவரின் கவிதைகளை நினைவில் வைத்து பாதுகாத்ததாகும். அந்த நினைவு தனிப்பட்ட நினைவாக மட்டும் நின்றுவிடாமல் ஓர் இலக்கியக் காப்பகமாக மாறியது.
ஓர் அரசியல் சூழலில் காகிதம் பாதுகாப்பற்றதாக மாறும்போது இலக்கியம் மனித நினைவுக்குள் இடம்பெயர முடியும். ஒரு கவிதையை மனப்பாடம் செய்வது இங்கே இலக்கியப் பயிற்சி அல்ல, வரலாற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கை. நடேஷ்டா தனது கணவரின் கவிதைகளைத் தாங்கிக்கொண்டது, ஒருவகையில் அழிக்கப்பட வேண்டிய நினைவைக் காப்பாற்றிய செயலாகும். ஒரு எழுத்தாளன் தனது படைப்பை எழுதுகிறான், வாசகர் அதை வாசிக்கிறார். ஆனால் ஓர் அரசியல் சூழலில் அந்தப் படைப்பை உயிரோடு வைத்திருக்கும் மனிதர் வரலாற்றின் சாட்சியாகிறார்.
மெண்டல்ஸ்டமின் கவிதைகள் பல ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், அவற்றை நினைவில் வைத்திருப்பது நடேஷ்டாவுக்கு இலக்கியத்தின் மீதான பற்றுதலாக மட்டுமல்ல, அரசின் அழிப்பு முயற்சிக்கு எதிரான நிலைப்பாடாகவும் இருந்தது. நாடுகடத்தலும் அலைச்சலும் வாழ்வின் கொடூரமான தருணங்களும் அவரைச் சூழ்ந்தபோதும் அந்தக் கவிதைகளை அவர் கைவிடவில்லை. ஸ்டாலினைப் புகழ்ந்து ஒரு கவிதை எழுதினால் மன்னிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருந்தபோதும் மெண்டல்ஸ்டம் அதைச் செய்யவில்லை. நடேஷ்டாவும் அதற்காக அவரை வற்புறுத்தவில்லை. இந்தப் பகுதியை வாசித்து முடிக்க எனக்கு நீண்ட அவகாசம் தேவைப்பட்டது. என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கலைஞனின் முன்னால் மற்ற எல்லாமே சிறியவை என்ற எண்ணம் அப்போது மேலோங்கி நின்றது. ஆனால் அதே நேரத்தில், அந்தக் கலைஞனின் கவிதைகள் உயிர் பிழைப்பதற்காக இன்னொரு மனிதர் தனது வாழ்க்கையையே பணயம் வைத்திருக்கிறார் என்பதையும் உணர்ந்தேன்.
வேரா நபகோவின் வாழ்க்கை வேறொரு பரிமாணத்தைத் திறக்கிறது. விளாதிமிர் நபகோவின் இலக்கியப் பயணத்தில் வேரா மிக நெருக்கமான துணையாக இருந்தார். அவருடைய முதல் வாசகர், ஆலோசகர், செயலாளர் எனப் பல பொறுப்புகளை ஏற்றதுடன், மொழிபெயர்ப்பு மற்றும் பதிப்பகப் பணிகளிலும் துணைநின்றார். ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் முதல் வாசகர் என்ற இடம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அதிகம் சிந்திப்பதில்லை. ஒரு வாக்கியம் சரியாக இருக்கிறதா, ஒரு காட்சி வேலை செய்கிறதா, ஒரு பாத்திரம் உயிரோடு இருக்கிறதா என்பதை முதலில் உணரக்கூடியவர் அந்த முதல் வாசகர்தான். எழுத்தாளன் தனது படைப்பின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் சந்தேகத்தையும் சமநிலைப்படுத்தும் கண்ணாடியாகவும் அவர்தான் இருக்கிறார். வெளியுலகம் நாவலின் இறுதி வடிவத்தை மட்டுமே பார்க்கிறது, முதல் வாசகர் அது உருவாகும் படிநிலையையும் பார்க்கிறார். அதனால் வேரா போன்ற பெண்களின் பங்களிப்பை உதவியாளர் என்ற சொல்லுக்குள் அடைத்துவிட முடியாது. அவர்கள் படைப்பின் உருவாக்கத்தோடு நெருக்கமாக இருந்தவர்கள். அவர்களுடைய பங்கு வெளியுலகிற்குத் தெரியாமல் போனாலும், அந்தப் படைப்பின் தனிப்பட்ட வரலாற்றில் அது இடம்பெற்றிருக்கிறது.

மிகைல் புல்ககோவின் வாழ்க்கையோடு இணைந்த எலெனா புல்ககோவாவின் பங்கு இன்னொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ஒரு எழுத்தாளன் இறந்துவிடுவதால் அவரது இலக்கிய வாழ்க்கை முடிவடைவதில்லை., சில எழுத்தாளர்களுக்கு மரணத்திற்குப் பிறகுதான் அவர்களுடைய படைப்புகளின் உண்மையான பயணம் தொடங்குகிறது. வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகள் இருக்கலாம்; முழுமையடையாத படைப்புகள் இருக்கலாம்; தடைசெய்யப்பட்ட நூல்கள் இருக்கலாம். அவற்றின் பிரதிகள் எங்கே இருக்கின்றன, அவற்றை எப்படிப் பாதுகாப்பது, யாரிடம் ஒப்படைப்பது, எப்போது வெளியிடுவது என்பதெல்லாம் தனித்த வரலாறு.
புல்ககோவின் இலக்கிய மரபைப் பாதுகாப்பதில் எலெனாவின் பங்கை இப்படித்தான் பார்க்க வேண்டும். எழுத்தாளன் தனது படைப்பை உருவாக்குகிறார்; ஆனால் அவர் இறந்த பிறகு அந்தப் படைப்பு உலகத்தை அடைவதற்கு யாரோ ஒருவர் வழி அமைக்க வேண்டும். அந்த வழியை அமைத்தவர்களின் பெயர்கள் பல நேரங்களில் எழுத்தாளரின் பெயருக்குள் மறைந்துவிடுகின்றன.
நடால்யா சொல்ஷெனிட்சினின் வாழ்க்கையில் இந்த மறைமுகப் பணி இன்னும் ஆபத்தான வடிவம் எடுக்கிறது. சோவியத் அரசின் ஒடுக்குமுறையைப் பதிவு செய்த சொல்ஷெனிட்சினின் எழுத்துகள் தனிப்பட்ட இலக்கிய முயற்சியைத் தாண்டி வரலாற்றுச் சாட்சியங்களாக மாறின. அந்தப் படைப்புகள் சோவியத் எல்லைகளைக் கடந்து வெளியுலகை அடைய வேண்டியிருந்தது. ஒரு கையெழுத்துப் பிரதியைப் பாதுகாப்பது, அதை நம்பகமானவர்களிடம் கொண்டு சேர்ப்பது, அரசின் கண்காணிப்பைத் தவிர்ப்பது, வெளிநாட்டில் வெளியிடுவதற்கான வழிகளை உருவாக்குவது போன்றவை எழுத்தின் வெளிப்புற வேலைகள் என்று சொல்லிவிட முடியாது. அந்தச் செயல்களே எழுத்தின் உயிர்ப்பை நிர்ணயித்தன. சொல்ஷெனிட்சினின் இலக்கிய வரலாற்றில் நடால்யாவின் பங்களிப்பைப் பார்க்கும்போது, ஒரு எழுத்தாளனின் அரசியல் மற்றும் இலக்கியப் போராட்டம் குடும்பத்தின் வழியாகவும் எவ்வாறு தொடர்கிறது என்பது புரிகிறது.
இந்த ஆறு பெண்களின் வாழ்க்கையையும் ஒன்றாகப் பார்க்கும்போது ரஷ்ய இலக்கியத்தின் இன்னொரு வரலாறு நமக்குக் கிடைக்கிறது. அந்த வரலாற்றில் நாவல்களின் பெயர்களோடு கையெழுத்துப் பிரதிகளும் இருக்கின்றன. விருதுகளோடு வீட்டின் அன்றாடச் செலவுக் கணக்குகளும் இருக்கின்றன. அரசியக் சிந்தனைகளும், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும்போது கூட படைப்புகளை பாதுகாக்க வேண்டுமென்கிற மகத்தான கனவுகளும் இருக்கின்றன. இதுதான் இந்நூல் ஏற்படுத்தும் முக்கியமான மாற்றம். அது இலக்கியத்தின் மையத்திலிருந்து எழுத்தாளரோடு அந்த மையத்தைச் சுற்றியிருந்த உலகத்தையும் நமக்குக் காட்டுகிறது.
இங்கே இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இந்தப் பெண்களைப் பற்றி எழுதும்போது அவர்களை வெறும் தியாகிகளாக மாற்றிவிடும் அபாயம் இருக்கிறது. பெரிய எழுத்தாளர்களின் பின்னால் நின்ற பெண்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களுடைய வாழ்க்கையை முழுவதுமாகக் கணவர்களின் வாழ்க்கைக்குள் அடைத்துவிட்டால் இந்த நூலின் அடிப்படை நோக்கமே தோல்வியடைந்துவிடும். அவர்கள் தங்களது கணவர்களின் வாழ்க்கையில் பங்கெடுத்தவர்கள் என்பது உண்மை. ஆனால் அவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பங்களும் கோபங்களும் லட்சியங்களும் இருந்தன. தங்களது கணவர்களுடன் முரண்பட்டார்கள். சில சமயங்களில் அவர்களுடைய எழுத்தையும் வாழ்க்கைத் தேர்வுகளையும் எதிர்த்தார்கள். தங்களுடைய குழந்தைகள், குடும்பம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்தார்கள். ஒரு பெண்ணின் மதிப்பு அவள் எவ்வளவு தியாகம் செய்தாள் என்பதில் மட்டும் இல்லை. அவள் எவ்வளவு சிந்தித்தாள், தனது வாழ்க்கையை எவ்வாறு புரிந்துகொண்டு காப்பாற்ற முயன்றாள் என்பதிலும் இருக்கிறது.

இந்தக் கேள்வியை நம்முடைய தமிழ் இலக்கியச் சூழலுக்கும் கொண்டுவந்து நிறுத்த வேண்டியிருக்கிறது. பாரதியைப் பற்றிப் பேசும்போது அவரது கவிதைகளையும் விடுதலைக் கனவுகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் விரிவாகப் பேசுகிறோம். ஆனால் அந்தக் கவிஞனின் அன்றாட வாழ்க்கை எப்படியிருந்தது, அவரது வறுமையும் சமூகப் புறக்கணிப்பும் குடும்பத்தை எவ்வாறு பாதித்தன, செல்லம்மாள் பாரதி அந்த வாழ்க்கையின் சுமைகளையும் முரண்பாடுகளையும் எவ்வாறு எதிர்கொண்டார் என்பவற்றைப் பற்றி இன்னும் ஆழமாகப் பேச வேண்டியிருக்கிறது. பாரதியின் கவிதைகளில் பெண்விடுதலை குறித்துப் பேசப்பட்ட இலட்சியங்களுக்கும், அவர் வாழ்ந்த காலத்தின் குடும்பச் சூழலுக்கும் இடையில் இருந்த இடைவெளிகளை ஆராய்வதும் முக்கியமானது. செல்லம்மாளின் வாழ்க்கையைப் பாரதியின் வாழ்க்கைக்கான துணைக் குறிப்பாக மட்டும் பார்க்காமல், தனித்த அனுபவமும் சாட்சியமும் கொண்ட ஒரு பெண்ணின் வரலாறாக வாசிக்கும்போதுதான் பாரதியின் வாழ்க்கையையும் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
புதுமைப்பித்தனின் வாழ்க்கையையும் இதே கேள்விகளுடன் அணுகலாம். அவரது இலக்கிய மேதமையைப் பற்றியும் சமூக விமர்சனங்களைப் பற்றியும் சிறுகதைகளின் தனித்துவத்தைப் பற்றியும் பேசும்போது, எழுத்தாளனின் வாழ்வாதாரம், நோய், பொருளாதார நெருக்கடி, குடும்பத்தின் மீதான அதன் தாக்கம் ஆகியவை எந்த அளவுக்கு அவரது இலக்கிய வாழ்க்கையோடு பிணைந்திருந்தன என்பதை மறந்துவிடுகிறோம். புதுமைப்பித்தனின் மனைவி கமலாவின் வாழ்க்கையையும் குடும்பத்தின் அனுபவங்களையும் தனித்த வரலாறாக ஆராய்வது, அவரது இலக்கியத்தைச் சுற்றியிருந்த வாழ்க்கைச் சூழலைப் புரிந்துகொள்ள உதவும். பாரதியும் புதுமைப்பித்தனும் வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு இலக்கியப் பாதைகளிலும் இயங்கியவர்கள். அவர்களை ஒரே அளவுகோலில் மதிப்பிட முடியாது. ஆனால் அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி எழுதும் வரலாற்றில், அவர்களோடு வாழ்ந்த பெண்களின் அனுபவங்களுக்கும் உழைப்புக்கும் என்ன இடம் அளித்திருக்கிறோம் என்ற கேள்வியை கேட்க வேண்டியிருக்கிறது.
ஒரு எழுத்தாளன் தனியாக எழுதுகிறான் என்று சொல்லலாம். ஆனால் தனியாக வாழ்கிறான் என்று சொல்ல முடியாது. அவன் எழுதுவதற்கான தனிமையை உருவாக்கிக்கொடுப்பது அவனது உறவுகள். தனது புற உலகத்திலிருந்து விலகி ஒருவன் எழுதுகிறான் என்றால், அவன் விலகிச் சென்ற புறஉலகத்தை யாரோ ஒருவர் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார். அவன் தனது அறைக்குள் நுழைந்துவிட்டான் என்பதற்காக குடும்பம் நின்றுவிடுவதில்லை. அந்த குடும்பத்தின் வேலைகளை யாரோ ஒருவர் செய்துகொண்டிருக்கிறார். இலக்கிய வரலாறு அந்த உழைப்பையும் பதிவு செய்யத் தொடங்கும்போது, எழுத்தாளனின் மேதைமையோடு அவனது சூழலையும் முழுமையாகப் பார்க்கத் தொடங்குகிறோம்.
இதனால்தான் ஒரே நிழல் வாழ்க்கை வரலாற்று நூலாக மட்டுமல்லாமல், இலக்கியத்தை நாம் எப்படிப் வாசிக்கிறோம் என்ற கேள்வியை எழுப்புவதாகவும் இருக்கிறது. ஒரு புத்தகத்தின் அட்டையில் ஒரே ஒரு பெயர் இருந்தாலும், அந்தப் புத்தகத்தின் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது; அந்த வாழ்க்கைக்குப் பின்னால் இன்னும் பல வாழ்க்கைகள் இருக்கலாம். அந்த வரலாறுகளைக் கண்டடைவதுதான் இலக்கியத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கான வழி என்று நினைக்கிறேன். இலக்கிய வரலாற்றை நாம் மீண்டும் வாசிக்க வேண்டிய இடம் இதுதான். எழுதியவரின் பெயரோடு அந்தப் பெயருக்குப் பின்னால் மறைந்திருப்பவர்களையும் தேட வேண்டும். ஓர் எழுத்தாளனின் தனிமையைப் பற்றி நாம் ஏராளமாக எழுதியிருக்கிறோம். அந்தத் தனிமையை உருவாக்கிய உறவுகளைப் பற்றியும் எழுத வேண்டியிருக்கிறது.

ஒரே நிழல் எனக்கு முக்கியமானதாகத் தோன்றுவது அது ரஷ்ய இலக்கியத்தின் ஆறு பெரிய எழுத்தாளர்களின் மனைவிகளைப் பற்றிப் பேசுகிறது என்பதற்காக மட்டுமல்ல. இலக்கியம் என்பது தனிமனிதனின் மேதமையிலிருந்து மட்டும் உருவாவதில்லை என்பதை நினைவூட்டுகிறது. ஒரு படைப்பை எழுதியவரை அடையாளம் காண்பதோடு அந்தப் படைப்பு உருவாகவும் உயிர்பிழைக்கவும் துணைநின்றவர்களின் வரலாற்றைக் கண்டறிவதும் அவசியம். ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த பிறகும் அதன் பின்னால் இருந்த வாழ்க்கைகளைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறதென்றால், அந்தப் புத்தகம் இலக்கியத்தை மட்டுமல்ல, இலக்கியத்தைப் பற்றிய நமது புரிதலையும் மாற்றத் தொடங்கியிருக்கிறது.
(Writerlakshmisaravanakumar@gmail.com)
*
