தாரா பரேக் – ஓர் அறிபுனைவு கலந்துரையாடல் – ஸ்வர்ண மஞ்சரி

(தாரா பரேக்-ன் “Take a seat at the Cosmic Campfire” என்ற சிறுகதை தொகுப்பை முன்வைத்து)

*

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அறிவியல் புனைவு சிறுகதையை எழுத ஆரம்பித்தேன். அன்று எனக்கு தீவிர இலக்கிய வாசிப்பு இல்லை. ஆனால் அறிவியலிலும் அதை சார்ந்த அபுனைவு புத்தகங்களிலும் மிகுந்த ஈர்ப்பு இருந்தது. வணிக இலக்கியம் மற்றும் சில ஃபாண்ட்டஸி வகை எழுத்தும் சிறு வயதில் படித்திருந்ததை வைத்து என் மனதில் இருந்த உருவப்படத்தை எழுத்தாக மாற்ற முயற்சித்தேன். 

சிறுகதை வடிவம் பற்றியோ இலக்கிய உலகில் அறிவியல் புனைவின் இடத்தை பற்றியோ மிக சிறிய வரைபடமே என்னிடம்  இருந்தது. சில மாதங்களிலேயே ஒரு அகத்தேடலின் விளைவாக தமிழ் இலக்கிய உலகம் அறிமுகமானது. உடனடியாக பிரபலமான ஆளுமைகளின் சிறுகதை தொகுப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். இதன் மூலம் சிறுகதை வடிவத்தின் வளர்ச்சியையும் பல அம்சங்களையும் கற்றுகொண்டேன். அதே சமயம் உலக இலக்கியத்தின் மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை அறிமுகம் செய்து கொண்டேன். 

அறிவியல் புனைவு சிறுகதைகள் என்ற போது ஐசாக் அசிமோவும் எச்.ஜி.வெல்ஸ் போன்ற எழுத்தாளர்கள் முதலில் பரிந்துரைக்கப்பட்டார்கள். வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரத்தை சேர்ந்த எழுத்தாளர்களை தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒரு நண்பர் எனக்கு தாரா பரெஃஹே (Dhara Parekh) அறிமுகம் செய்தார். 

தாரா பரேக் இந்திய அறிவியல் புனைவு எழுத்தாளர். தற்போது அமெரிக்காவில் உள்ள சான் டிஏகோவில் வசிக்கிறார். அவர் இந்தியாவில் தென்குஜராத்தில் பிறந்தவர். படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றபின் 3 கண்டங்களில் 11 நகரங்களில் வாழ்ந்திருக்கிறார். அவற்றில் அவர்  சந்தித்த மனிதர்கள் மற்றும் பார்த்த இடங்கள் அவரை கதைகளை எழுத ஊக்குவித்தன என்றும் அவரின் அனுபவங்களின்  பின் புலத்திலேயே அவை அமைகின்றன என்றும் கூறுகிறார். 2023ல் அவர் முதல் நாவலான “Unearthing Idyll” வெளிவந்தது. ஆண்டின் கடைசியில் அவரது  முதல் சிறுகதை தொகுப்பான “Take a seat at the Cosmic Campfire” இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மிகுந்த வரவேற்புடன் வெளிவந்தது. 

தாரா பரேக் (Dhara Parekh)

தாராவை 2022 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தின் மூலம் தொடர்பு கொண்டேன். அப்போது அவர் முதல் நாவலான “Unearthing Idyll” யை எழுதிக்கொண்டிருந்தார். அதே சமயம் அவர் வலைத்தளத்தில் அறிவியல் புனைவை எழுதுவதை பற்றி பதிவுகளை  பிரசுரித்திருந்தார். அவர் படிக்கும் புத்தகங்கள், வேற்று மாநில எழுத்தாளர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் இலக்கியத்தை பற்றி விவாதங்களில் ஈடுபட்டோம். நெருங்கிய நண்பர்கள் ஆக தொடங்கினோம். 

அறிவியல் புனைவு எழுதுவதில் ஒரு சிக்கல் உண்டு. அறிவியலையும் புனைவையும் மிக சிறப்பாக ஒரு சமமான நிலையில் வாசகர் மனதுள் தொடசெய்வது. அறிவியலில் அதிகமாக மூளையை கசக்கிக்கொண்டால்  புனைவு என்பதை  மறந்துவிட கூடும். புனைவை வேராக வைத்து எழுதினால் அறிவியல் கோட்பாடுகளை மறக்க கூடி அது பாண்டஸி ஆக மாறிவிடலாம். இவ்விதத்தில் தாராவின் இரண்டு புத்தகங்களும் அறிவியல் கோட்பாடுகளின்  விதிகளுக்குள் சமூகத்தையும் மானுடத்தின் ஆழ் மனநிலைகளையும்  விவரிக்கும்படி இருக்கின்றது. முக்கியமாக, கதாபாத்திரங்களின் இடையே உள்ள உறவுகளை உள்ளுணர்வுகளை வைத்து சித்தரிக்கும்படி அமைகின்றன. அவ்வுறவுகள் மனிதர்களுக்கு இடையே நிகழலாம்; வேற்று கிரக உயிரினங்களுக்கு இடையே நிகழலாம்; ஏன், இரண்டு செயற்கை நுண்ணறிவுகளுக்கு இடையே கூட நிகழலாம். பூமியை  மட்டுமல்லாமல் விண்வெளியில் மற்ற கோள்களை கூட கதை களமாக கொண்டவை அவை.

“Take a seat at the Cosmic Campfire” என்ற சிறுகதை தொகுப்பில் ஐந்து கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு அறிவியல் புனைவு வகையை சேர்ந்தவை. முதல் கதையில் ஒரு பெண் அவருடைய சிறுமி பருவத்தில் உள்ள அதே பெண்ணை காலத்தின் பின்நோக்கி  பயணித்து சென்று சந்திக்கிறாள். இரண்டாம் கதையில் ஒரு அப்பாவும் மகளும் உயிர்வாழ வேற்று கிரகத்திற்கு தப்பித்து செல்லும்போது அவர்களின் அச்சங்களை பகிர்ந்து கோண்டு பேசுகிறார்கள். அடுத்த கதையில்  “Augmented Reality” என்ற தொழில் நுட்பத்தின் மூலம் நடக்கும் ஒரு காதல், அதன் மரணம். நான்காம் கதை ஒரு புதிய கோளின் ஆக்ரமிப்பு  பற்றி. கடைசியாக, நமது சோலார் சிஸ்டத்தை ஒரு சாகச பயணம் கொள்ளும் ஒரு சிறுமியின் கதை.

2021ல் அரூ நடத்திய அறிவியல் புனைவு சிறுகதை போட்டியில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்க அழைக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் “புனைவின் அறிவியலை பற்றி” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்.

“அறிவியல் புனைவைப் பொறுத்தவரை, வாசகரின் பங்கு அதிமுக்கியமானதாகிறது. அறிவியலுக்கும் புனைவுக்குமான விகிதாசாரம் பொருத்தமாய் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்; இலக்கிய உலகின் நடைமுறை விதிகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்; குறிப்பிட்ட புனைவு வழங்கும் உணர்நிலை வெறும் மேசைத் தகவலாக மீந்துவிடுகிறதா, இலக்கிய அனுபவமாகத் தனக்குள் வளர்கிறதா என்று மதிப்பிடத் தெரிய வேண்டும்; என்றோ நடக்கவிருப்பதாய் இருந்தாலும், இன்றைய வாழ்வின் அம்சங்களைக் கணக்கிலெடுக்கிறதா என்று பார்க்க வேண்டும். கொக்கோக நூலாக இருந்தால்கூட, அதற்குக் கலைப் பெறுமானம் இருக்கிறதா என்று பார்க்க முனைவதில்லையா, இலக்கிய ஆர்வமுள்ள ஒரு மனம்!”

“Take a seat at the Cosmic Campfire” என்ற தொகுப்பில் இருக்கும் கதைகளின் மூலம் தாரா, இந்தியாவில் இருக்கும் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களை அறிவியல் புனைவிற்குள் அறிமுக படுத்த முயற்சிக்கிறேன் என்று கூறுகிறார். அறிவியல் புனைவு என்பது புரியாத புதிர்களாக சிரமப்பட்டு யோசித்து புரிந்து கொள்பவை அல்ல என்றும் அவை நாம் வாழும் அனுபவங்களை வெவ்வேறு தீவிரமான களங்களுக்கு கொண்டு செல்வது என்றும்  அவர் சொல்கிறார். இக்கதைகள் காலத்தை கணிப்பதற்காகவோ புதிய தொழில்நுட்பங்களை பரிசோதிப்பதற்காகவோ இல்லை. இவற்றின் வழியாக காதல், நட்பு, வன்மம், சாகசம் போன்ற மானுட உணர்வுகளை அழுத்தமாக புதிய  எல்லைகளுக்குள் விரித்தெடுக்கலாம் என்று நம்புகிறார். 

தாராவின் கதைகளின்  வழியாக அவர் எழுத்து ஆளுமையின் உட்குரலை உணர முடிகிறது. அவரிடம் நான் பல முறை இணைய கடிதங்களின் மூலம் உரையாடியிருந்தாலும், அவர் கதைகளை வாசிக்கும் அனுபவத்தின் காரணமாக எனக்கு அவரை ஒரு எழுத்தாளராகவும் சக மனிதராகவும் மேலும் ஒரு படி அணுக்கமாக புரிந்து கொள்ள முடிகிறது. அவர் கதைகளை கோடிட்டு பார்த்தால் அவை  அனைத்திலும் ஆழ்ந்த தத்துவ கேள்விகள் ஒளிர்ந்த படி இருப்பதை  கண்டுகொள்ள முடிகிறது. அறிவியல் புனைவு என்ற genreல் literary science fiction என்ற தனிப்பட்ட வகையை சேர்ந்த தாராவின் கதைகள், அழகியல் அம்சத்தை மையமாக கொண்டு அறிவியல் மற்றும் இலக்கிய ஆர்வம் கொண்ட வாசகரின் மனதிற்கு உவந்ததாக அமைகிறது. அதுவே இந்த சிறுகதை தொகுப்பின் மிக சிறந்த வெற்றி என்று நினைக்கிறேன். 

சமீபத்தில், எனது வலைத்தளத்தின்  இரண்டாம் ஆண்டு விழாவாக ஒரு சிறப்பு விருந்தினரை அழைத்து ஒரு இலக்கிய கூட்டம் நடத்துவதற்கு ஒரு எண்ணம் இருந்தது. தாரா பரேக்ஹின் பெயர்தான் முதலில் மனதிற்கு வந்தது. இலக்கிய கூட்டத்தை ஒரு சிறுகதை கலந்துரையாடலாக வடிவமைத்து இலக்கியத்தில் ஈடுபாடுள்ள நண்பர்களை பங்கெடுக்கும் படி அழைத்தேன். தாராவின் சிறுகதை தொகுப்பிற்கு இந்தியாவில் அறிமுகம் கிடைப்பது  மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர் வாசகர் சந்திப்பாகவும் அது அமையும் என்று நம்பினேன்.

மார்ச் 21 ஆம் தேதி ‘Fireside Chat with Dhara Parekh’ என்ற தலைப்பில் அவர் சிறுகதை தொகுப்பின் முதல் கதையான  “Allons-y!” ஐ பற்றி ஒரு கலந்துரையாடல் நிகழ்ந்தது. ஆம், நிகழ்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வாரம், தாராவின் முதல் நாவலான “Unearthing Idyll” எழுதி இரண்டு ஆண்டுகளாகி யிருந்தது. அதே வாரம் தாராவின் பிறந்தநாளும் கூட. குஜராத்தியில் “பூமி” என்ற சொல்லை குறியிட்டு அவர் “தாரா”என்று பெயர்சூட்ட பட்டார் என்று ஒரு அறிவியல் புனைவு விழாவில் பெருமிதமாக சொல்லியிருக்கிறார். அந்நாள் “Spring Equinox” என்றதால், இது ஒரு சிறப்பான தேதி என்று  சொல்லி நிகழ்ச்சியை தொடங்கினேன். 

கூட்டத்தில் என் பால்ய கால நண்பர்கள் சோனா, ம்ருநாளினி, அட்சயா; வேலை மூலம் அறிமுகமானவர்கள் க்ரித்தி, இந்து, மற்றும் இலக்கிய நண்பர்கள் ரம்யா, தன்யா ஆகியோர் கலந்துகொண்டார்கள். வெவ்வேறு உலகுகள் ஒரு இடத்தில் சந்தித்தது போல உணர்ந்தேன். இவர்கள் எல்லாம் உலகின் வெவ்வேறு மூலையில் இருந்து இணைந்திருந்தார்கள். இதுவே நான் தாராவை முதல் தடவை காணொளி வழியாக சந்திக்கிறேன் என்பதை குறிப்பிட்டேன். 

“Allons-y!” ஒரு காலப்பயண கதை. அதில் அறுபது வயதை தாண்டிய அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இந்திய பெண் தனது பதினெட்டாம் வயதிலுள்ள இளம் பெண்ணை காலத்தில் பின் நோக்கி பயணம் செய்து அவளுடைய சிறுமி பருவத்தின் வீட்டில் சந்திக்கிறாள். அந்த இளம் பெண் இன்னும் ஆறு மாதங்களில் படிப்பிற்காக வெளிநாடு செல்ல இருக்கிறாள். அவளிடம் இந்த மூதாட்டி காலத்தில் பின் பயணம் செய்து வைப்பது ஒரு சிறிய வேண்டுகோள். சமையல் கற்று கொள் என்பது.  இளம் பெண்ணிற்கு இது அதிர்ச்சியை மட்டும் அளிக்கிறது. இந்த மூதாட்டி என் வாழ்க்கையின் எத்தனையோ கணங்களுக்கு சென்று எப்படிப்பட்ட வேண்டுகோள்களை வைத்திருக்கலாம். ஏன் இந்த சாதாரண மறக்கக்கூடிய கணத்திற்கு வந்து இவ்வளவு சிறிய வேண்டுகோளை வைக்கிறாள்? அதுவும் சமைப்பது. சமூகம் பெண்ணிடம் சுமத்தும் ஒரு எளிய ஆனால் கடினமான பொறுப்பு. இளம் வயதில் பெண்ணியத்திற்கு அறிமுகமாயிருக்கும் இப்பெண்ணால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் அதற்கு பின்னால் எடுக்கும் முடிவுகளே கதை. 

ஒரு சிறிய வாசிப்பிற்கு பின்னால் கேள்வி பதிலை தொடங்கினோம். ஆரம்ப கேள்வியாக நான் தாராவிடம் கேட்டது:

“சமையல் குறிப்பும் காலப்பயணமும் ஒரே இடத்தில்  சந்திக்கும் அறிவியல் புனைவு கதை இது. வியப்பூட்டுகிறது. அதே சமயம் வியப்பாகவே இல்லை. இந்திய பெண்களாக நாம் எல்லோரும் சமையல் கற்றுக்கொள்வது என்பது நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து எப்படி எழுந்தது இக்கதை?”

அதற்கு தாரா, “நான் தென் குஜராத்தில் ஒரு சிறிய நகரில் வளர்ந்தேன். என் அம்மா வழக்கத்திற்கு மாறான ஒரு சிந்திக்கும் பெண்ணாக இருந்தாலும் அவர் என் மீதும் இந்த சமையல் கற்றுக்கொள்ளும் சுமையை  ஏற்றினார். நீ கற்றுக்கொள்ளவில்லை என்றால் உன் குடும்பத்தையும் கணவரையும்  எப்படி பார்த்துக்கொள்வாய்? பன்னிரெண்டாம் வயதில் முதன் முறையாக சப்பாத்தி மாவை பிசைந்தேன். அப்போது அது எனக்கு ஒரு விளையாட்டாக இருந்தது. ஆனால் வளர வளர சமூகம் சமையலை ஒரு பெண்ணின் மேல் சுமத்தும் வன்மமாக உணர்ந்ததால் சமையலறை எனக்கு ஒரு போர்க்களம் போல் தோன்றியது. 

வேடிக்கையாக மேற்படிப்பிற்கு நான் “hotel management”ஐ தேர்ந்தெடுத்தேன். அதில் தொழில் சார்ந்த  விவரங்களையும் சமையலின் கோட்பாடுகளையும்  ஒரு அறிவியலாக கற்றாலும் சமையல் கலையை கட்டாயமாக கற்க வேண்டும். அப்போதுதான் நான் சமையலை ஒரு பொறுப்பாக உணராமல் ஒரு வாழ்க்கை திறனாக புரிந்துகொண்டேன். சமைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. எனக்கு சிறந்த சமையல் நிபுணராக வேண்டும் என்ற கனவெல்லாம் இருந்தது. ஆனால் அது செயல்படவில்லை. நீங்கள் படித்திருந்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரியும். “Unearthing Idyll” என்ற எனது நாவலில் வரும் கதாபாத்திரம் லைரா நிலவை போல் ஒரு சிறுகோளில் வாழும் ஒரு சமையல் கலை நிபுணர். என் கனவை அவள் மூலம் நான் வாழ்ந்து கொண்டேன்” பதிலளித்தார்.

அடுத்ததாக அந்த மூதாட்டியின் ஆழ்ந்த தனிமையை குறித்து க்ரித்தி கேள்வி கேட்டார். 

“கதையில் வரும் பெண் கதாபாத்திரம் தனிமையை எப்படி கையாளுகிறாள்?கதையில் அப்பெண்ணின்  பெற்றோர்களை தவிர வேறு எந்த உறவையும் நீங்கள் குறிப்பிடவில்லை. பொதுவாக மனிதர்கள் தங்கள் தனிமையை தீர்த்துகொள்ள ஒரு வாழ்க்கை துனையை தேடிக்கொள்கிறார்கள். எல்லா பாலினத்தவர்களிலும் இதை நாம் காண்கிறோம். ஆனால் இந்த பெண் தனியாக கதையின் கடைசியில் அவருடைய நியூ யார்க் வீட்டில் காண்கிறோம். அவளுக்கு துணையாக யாரும் இருக்கிறார்களா?”

 அதற்கு தாரா, அந்த பெண் தனிமையான ஒருத்தவள் என்று ஒத்துக்கொண்டார். ஆனால் அவளுக்கு தனிமை மேல் இருந்த புரிதல் வயதான பின் மாறிவிடுகிறது. இளமையில் தான் தனிமையாக இருந்ததை அவள் உண்மையில் உணரவில்லை. வளர்ந்த பின் தனிமையை வேறு விதமாக உணர்கிறாள். தனிமைக்கும் தனியாக இருப்பதற்கும் தொடர்பு இல்லை என்றும் தனிமையை துணைகள் (நண்பர்கள், அல்லது உடலுறவு கொள்ளும் துணைகள்) மூலம் தீர்த்துக்கொள்ள ஆகாது என்றும், சமையல் போல் நாம் செய்கிற சிறு சிறு செயல்கள் நம்மை ஆழ்ந்த தனிமையில் இருந்து விடுவிக்கும் என்பதை உணருகிறாள் என்றும் கூறினார். 

கலந்துரையாடல் தீவிரமாக, அடுத்தபடியாக  ரம்யா பெண்மைத்துவத்தை (femininity) பற்றி ஒரு முக்கிய கேள்வி எழுப்பினார். 

“நீங்கள் ஒரு காலப் பயணக் கதையில் கூட பெண்மைத்துவத்தை நன்றாக உணர்த்தியிருக்கிறீர்கள். உதாரணமாக உங்கள் கதையில் காலப்பயணம் கடந்தும் சமையல் குறிப்பு பற்றிய தேடல் வருவதை எடுத்துக் கொள்ளலாம். அறிபுனைவு கதைகளில் இது புதுமையாக இருந்தது. இலக்கியச் சூழலில் விமர்சகர்கள் சொல்லும் ஒரு விஷயம் உண்டு; ஒரு பெண் எழுத்தில் பெண்மைத்துவத்தை கடந்தால்தான் கலையின் உச்சத்தை அடையலாம் என்று. ஆனால் அதைக் கடக்கவே அதைப் பற்றிய உரையாடல் தேவைப்படுகிறது. இதுகாறும் ஆண்மைய விமர்சனச் சூழல் ஒன்று இருந்ததால் தான் அப்படி எழுதப்பட்ட கதைகளுக்கான சரியான ரசனைப்பார்வை உருவாகி வரவில்லை என்றும் தோன்றும். நீங்கள் இந்த கூற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஒப்புக் கொள்வீர்களா? நீங்கள் செயல்படும் சூழலில் இவ்விமர்சனத் தரப்பு வைக்கப்படுகிறதா? அறிவியல் புனைவு வகை கதைகளில் பெண்மைத்துவதை நன்றாக வெளிக் கொண்டுவரும் பெண் எழுத்தாளர்கள் சிலரை பரிந்துரையுங்கள்” என்று கேட்டார்.  

அதற்கு தாரா இல்லை நான் அதை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று அழுத்தமாக சொன்னார். தன் சூழலில் அவ்வாறான விமர்சனம் வைக்கப்படுவதையும் சொன்னார். அவ்வாறு விமர்சனம் வைக்கப்படும்போது ஒரு பரிதாபத்திற்குரிய தொனியுடன் பாவம் என்பது போல பேசுவார்கள். நானும் சிறு வயதிலிருந்தே பெண்மைத்துவத்தை குறிக்கும் எந்த செயலிலும் ஈடுபாடு இல்லாதவளாக இருந்தேன். ஏனென்றால் அவற்றை சமூகம் சுமத்தும் அடக்குமுறைகள் என்று நினைத்தேன். சிறுமியாக என் ஊரில் ஜீன்ஸ் பான்ட் தான் அணிவேன். பெண்ணாக அழகூட்டும் சுடிதார் சூட் அவற்றை அணிந்ததே இல்லை. சமையல் கூட எனக்கு பெண்மைத்துவத்தின் ஒரு குறியீடாகத் தெரிந்தது. புனைவு எழுத ஆரம்பித்த பின் தான் என் பெண் கதாபாத்திரங்களின் மூலம் பெண்மைத்துவதை ஆராய்ந்தேன். என் முதல் நாவலில் லைரா என்ற பெண் கதாபாத்திரம் சமையல் கலை நிபுணர். ஆனால் அவள் சமூகம் வரைந்த பெண்மைத்துவம் என்ற கோட்டிற்கு அப்பால் நிற்கிறார். தன்னை பெண்ணாக உணர பெண்மைத்துவ செயல்களையோ அடையாளங்களையோ சூட்டிக்கொள்ள தேவையில்லை என்றும் ஒரு பெண்ணிடம் ஆண்மைத்துவமும் பெண்மைத்துவமும் வெவ்வேறு நிலைகளில் இருக்கலாம் என்றும் உணர்கிறாள் என்று அழகாக பதிலளித்தார் தாரா.

பெண்ணிய எழுத்தாளர்கள் சிலரை பகிர்ந்தார். உற்சுலா லே குயின், மார்கரெட் அட்வுட் மற்றும் ஆக்டேவியா பட்லர் இதற்கு சிறந்த உதாரணங்கள் என்று சொன்னார். “குறிப்பாக ஆக்டேவியா பட்லரின் “கிண்ட்ரேட்“ என்ற நாவல் ஒரு கறுப்பின பெண்ணின் காலப்பயண கதை. அதில் எழுத்தாளர் பெண்மைத்துவத்தை கட்டாயமாக கடத்தாமல் அது தானாக நிகழும்படி அமைத்திருக்கிறார். மேற்படி, பெண் எழுத்தாளர்களை பற்றி நான் ஆராய்ந்தபோது பங்களாதேஷை சேர்ந்த பேகம் ரோகியாவின் “சுல்தானா’ஸ் ட்ரீம்” என்ற சிறுகதையை படித்தேன். அவர் அக்கதையை 1905ல் எழுதினார். அமெரிக்காவில் ஆண் எழுத்தாளர்களின் பிரபல அறிவியல் புனைவு கதைகளுக்கு முன்னாள் எழுதப்பட்ட கதை இது. ஆனால் அறிவியல் புனைவில் ஈடுபட்டிருக்கும் இந்திய இலக்கிய ஆர்வலர்கள் கூட இக்கதையை அறிந்திருக்க மாட்டார்கள்.” என்று கூறினார். 

மெய்நிகர் கைதட்டல்களை குவித்த தாராவின் பதில்கள் கலந்துகொண்டவர்களின் ஆர்வத்தை அறிவியல் புனைவில் மேலும் அதிகரித்தது. சிலர் தன் எண்ணங்களைப் பகிர்ந்தனர். அட்சயா, கதையின் கதாபாத்திரத்துடன் தன்னை அடையாளம் கொள்ள முடிந்தது என்றார். “என் அண்ணனை போல ஒரு ஆண் இக்கதையை படித்தால் அவருக்கு  எப்படிப்பட்ட அனுபவம் கிடைக்கும் என்பதை பற்றி யோசித்தேன்” என்றார். “உண்மையில்  என் வாசகர்களில் பாதிபேர் ஆண்கள்தான். அதுவும் இந்தியாவில் உள்ள சமூக சூழ்நிலையில் வசிக்கும் ஒரு ஆணிற்கு அவர் சோர்வடையும்போது படிக்க   பிடித்தமான கதை “Allons-y!” என்று எனக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

கடைசியாக எனது நெருங்கிய நண்பரான ம்ருநாளினி தனது அனுபவத்தை பகிர்ந்தார். “நான் சமீபத்தில் ஒரு மன சோகத்தில் ஆழ்ந்திருந்தேன். இந்தக் கதை என்னை மீண்டும் செயலாற்ற ஊக்கவித்திருக்கிறது. சமையல் என்ற செயலிலிருந்து வெகு தூரம் தொலைவில் அமர்த்திக்கொண்ட என்னை, அதை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசையை  மனதில் முளை விடச் செய்திருக்கிறது இக்கதை” 

ஸ்வர்ண மஞ்சரி

நான் அவளிடம் சமையல் கற்றுக்கொள் என்று மூன்று மாதங்களுக்கு மேல் சொல்லிக்கொண்டிருந்தேன். “நண்பர் கொடுக்கும் ஆலோசனையைவிட ஒரு கதையை படித்து நீ அதை புரிந்துகொண்டால் எனக்கு மகிழ்ச்சி தான். இதுவே இலக்கியம் நிகழ்த்தும் சாத்தியம்.” என்று சிரித்துக்கொண்டே சொல்லி கலந்துரையாடலை நிறைவு செய்தேன். 

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *