அருகு போல் வேரோடி – சக்திவேல்
(ஆனந்தாயி நாவலை முன்வைத்து)

எனது அத்தைகளில் ஒருவரின் கதை இது. கணவர் குடிக்காரர். மணமான புதிதில் சம்பாதித்து கொண்டிருந்தவர் பணியிடத்தில் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைப்பின் போது, பணி இழந்தார். பிறகு எங்கும் வேலைக்கு போவதில்லை. வரும் ஓய்வூதியத்தை முக்கால் பங்குக்கு மேல் குடித்தே அழிப்பது. பற்றாக்குறைக்கு தன் பக்கத்து உறவினர், அத்தை பக்கத்து உறவினர் என்று யாவரிடமும் கையேந்துவது. குடிக்காரர்களுக்கு அந்த வகையில் மட்டும் வெட்கம் இருப்பதில்லை. உறவினர்களில் பிச்சை போல காசிடுபவர்களும் உண்டு. வேலைக்கு ஆளாக வைத்து ஊற்றி கொடுப்பதும் உண்டு. அவர்களுக்கு ஒரு வீடு உண்டு. அதுவும் அத்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. இவர்களுக்கு குழந்தைகளும் கிடையாது.
குடித்து விட்டு வரும் கணவனை ஏதும் கேட்க முடியாது. ஒன்று பதில் வராது, இல்லையானால் அடி விழும். குடிக்காரர்களின் பரிணாம வளர்ச்சிப்படி கையில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டவுடன் மனிதர் சொந்த வீட்டுப்பொருள்களை அத்தைக்கு தெரியாமல் திருடி விற்க தொடங்கிவிட்டார். தட்டி கேட்கப்போனால் அறை விழுகிறது. அவருக்கு காது வேறு சற்று மந்தம். இப்படிப்பட்ட குடிக்கார கணவர் அவ்வப்போது முழுப்போதையில் நா வறட்டி நினைவு தப்புவார். அப்போதெல்லாம் அத்தை அவருக்கு வேண்டிய பணிவிடை செய்து சாவித்திரி போல உயிர்ப்பிப்பார். அந்த மாமாவை கை கழுவி விட்டு வாழ்வது சாத்தியமில்லாத விஷயமில்லை. ஆரம்பத்தில் ஒரு பத்தாண்டு நல்ல வாழ்க்கைக்கு பிறகு மாமா அத்தைக்கு பெரிதாக சிறப்பு தேடித்தந்தவர் அல்ல. உபத்திரவங்கள் வேண்டுமானால் நிறைய உண்டு. எப்படியாகிலும் அத்தை தன் கணவரை கைவிடுவதில்லை. இன்றும் நாம் அப்படி ஒரு பேச்சை எடுத்தால் மெல்ல அவர் முகம் கோவை பழமாவதை பார்க்க முடியும். அவரது வாழ்வை பார்க்கும் போதெல்லாம் அந்த கணவர் அத்தைக்கு அவ்வளவு முக்கியமாக இருப்பது ஏன் ? என்ற கேள்வி எழும்.
ஆனந்தாயி நாவலை முதல் முறை வாசித்து முடிக்கும்போதும் அதே கேள்வி தான் எழுந்து வந்தது. ஒரே ஒரு வித்தியாசம், ஆனந்தாயி இருப்பது எனது அத்தைக்கும் முந்தைய ஆயாவின் தலைமுறையில். அப்போது பெரும்பாலான தமிழக பெண்களுக்கு நிலம் சொந்தமாக இருந்ததில்லை. ஆனந்தாயி போல தாழ்த்தப்பட்ட வகுப்பு மட்டுமல்ல, இடைநிலை சாதிகள் உட்பட பெண்களிடம் பெரிதாக சொத்துரிமை இருப்பதில்லை. போதாக்குறைக்கு ஆனந்தாயிக்கு ஆறு பிள்ளைகள் வேறு இருக்கிறார்கள். எனவே அத்தைக்கு இருக்கும் வாய்ப்பை விட, ஆனந்தாயிக்கு இருப்பது மிக குறைவான ஒரு வாழ்க்கை மட்டும் தான். இந்நிலையில் அவள் தாக்கு பிடித்து வாழ வேண்டி இருக்கிறது.
நாவல் ஆனந்தாயியின் பேரிளம்பெண் பருவத்தில் தொடங்கி அவள் முதுமை அடைந்து திண்ணையில் கவனிப்பில்லாமல் ஒடுங்கி கொள்ளும் காலம் வரை நேர்க்கோட்டில் நிகழ்கிறது. ஏறத்தாழ 40 ஆண்டுகள். வெளிப்படையாக இல்லையென்றாலும் ஐம்பதுகளின் பிற்பகுதியில் தொடங்கி நாவல் எழுதப்பட்ட தொண்ணூறுகள் வரைக்குமான காலத்தை குறிப்பதை, விவசாய கடன், ரூபாய்க்கு மூன்று படி அரிசி, சாலைகள் போட காண்ட்ராக்ட் எடுப்பது என்ற நிகழ்வுகளின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.
ஆனந்தாயி தாய், தகப்பனை இளமையிலேயே இழந்தவள். சித்தப்பா வீட்டு ஆதரவில் தேயிலை தோட்டத்தில் பணி செய்து வளர்கிறாள். பின்னர் தனது பெரிய பாட்டி வெள்ளையம்மா அழைத்து கொள்ள, அங்கேயே வந்து வாழ்ந்து பெரியப்பாட்டி மகன், பெரியண்ணனுக்கே மனைவியாகிறாள். மணி, கலா, பாலன், தனம், அருள், அன்பு என்று ஆறு குழந்தைகளை பெற்று வளர்த்து ஆளாக்கி ஓய்ந்து உட்காருவதுடன் கதை முடிந்துவிடுகிறது.
இப்படி பார்த்தால் நாவல் வெறும் ஆனந்தாயியின் கதை என்று சுருக்கிவிட தோன்றும். ஆனால் எவரொருவர் வாழ்க்கையும் அவரது வாழ்க்கை மட்டுமேயல்ல, அது சமூகத்தின் ஒரு அங்கம். பெரும்பாலான நம் முடிவுகள் நாம் சார்ந்துள்ள சமூக அமைப்பின் இயங்கு முறைகளால் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, நம்மால் அல்ல. உதாரணத்திற்கு நாவல் தொடங்குவதே ஐந்தாம் பிரசவ வலி வந்து, இரவில் எழுந்து நடமாடி கொண்டிருக்கும் ஆனந்தாயி பெரியண்ணன் இருக்கும் மாடி அறைக்கு கூத்தியாள் ஒருத்தி செல்வதை பார்த்து வயிறெரிவதில் தொடங்குகிறது. வாசிப்பின் தொடக்கத்தில் ஆனந்தாயியின் அந்த உள்ளக் குமுறலை கணவனால் உதாசீனப்படுத்தப்பட்ட பெண்ணின் நிலை என்று மட்டுமே பார்க்கிறோம். அது காமம் சார்ந்ததாக தனிவாழ்க்கை பிரச்சினையாக மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. நாவல் முடிந்து வரும் போது தான் ஆனந்தாயியின் நினைவு வழியாக அவளுக்கு காமம் அருவருப்பும் வெறுப்பும் ஊட்டுவதாக அறிமுகமான விதம் காட்டப்படுகிறது. இதையும் சேர்த்து கொண்டு யோசிக்கும் போது, ஆனந்தாயி கணவனை குறித்து ஏங்குவது வெறும் காமம் மட்டுமல்ல, அதற்கு பின்னுள்ளது என்ன ?
இங்கு தான் நாவல் தனது திசைப்போக்கை மாற்றி கொள்கிறது. வெறுமனே ஆனந்தாயியின் தனிவாழ்க்கை அல்லல்களை மட்டுமே சொல்லியும் காட்டியும் நிறுத்தாமல் பெரியண்ணனுக்கு கிராமத்தில் உள்ள செல்வாக்கு கூறப்படுகிறது. அவன் வைத்திருக்கும் நஞ்சை, புஞ்சை நிலங்கள். அதில் வேலை செய்யும் வடக்கத்தியான், முத்துலிங்கம் குடும்பங்கள், சின்னசாமி. மறுபக்கம் ஊரில் பெரியண்ணனுக்கு எதிரணியாக இருக்கும் கங்காணி, அவரது மகன்களில் சண்டைக்கு முந்தி வரும் நொள்ளைகண்ணன், மாணிக்கம் என்பவர்கள் என விரிவான சித்திரம் ஒன்று கூறப்பட்டு கிராமத்தின் அதிகார அமைப்புகளின் இயங்குதளம் சுட்டப்படுகிறது. இதற்குள் அதில் பங்கு வகிக்கும் ஆண்கள், பெண்கள் அனைவரின் கதையும் கூடுமானவரை வந்து செல்கிறது.

ஆண்களின் அதிகாரத்தால் நடத்தப்படும் அந்த அமைப்பில் பெண்களின் இடம் என்ன என்ற கேள்வியாகவும் நாவலை வாசிக்க முடிகிறது. நீலவேணி போன்று ஆனந்தாயியின் வாழ்க்கையில் நேரடி சம்பந்தமில்லாத கங்காணியின் மச்சினிச்சியின் வாழ்க்கையும் விரிவாக சொல்லப்படுவதில் இருந்து வாசகர் இத்தகு வாசிப்புக்கு செல்ல வழியமைக்கிறது. நாவலில் வரும் பெண்களில் ஆனந்தாயி முந்தைய தலைமுறையான வெள்ளையம்மா, பூண்டு கிழவி. அவளது தலைமுறையை சேர்ந்த வடக்கத்தியாள், பசூதி, அங்கம்மா, முத்தக்கா. அடுத்த தலைமுறையில் மகள்கள் கலா, தனம், அருள் மற்றும் பூங்காவனம், நீலவேணி என்று மூன்று தலைமுறை பெண்கள் ஆண்களின் அதிகார அமைப்பில் தங்களை தகவமைத்து கொள்ளும் விதத்தை பார்க்க முடிகிறது.
இந்த அமைப்பில் இருக்கும் ஆண்களில் அநேகமாக அனைவருமே குடிக்கிறார்கள். மனைவிகளை வசைபாடி அடிக்கிறார்கள். அதன் உச்சக்கட்ட முகமாக கையில் பணமும் கரை புரள்வதால் பெரியண்ணன் பெண் பித்தனாகவும் கடும் வன்முறையாளனாகவும் இருக்கிறான். இவர்களை எதிர்த்து தாக்கு பிடித்து தங்கி வாழ்ந்து தனது இருப்பை நிறைவு செய்து கொள்ளும் பெண்களின் வகைமையில் மைய அச்சாக ஆனந்தாயி விளங்குகிறாள். அவளை போல இல்லாது போனால் நடக்க சாத்தியமான வேறு வாழ்க்கை முறைகளாக பிற பெண்களின் கதையை வாசிக்கலாம்.
இப்பின்னணியில் வைத்து பார்க்கும் போது ஆனந்தாயி பெரியண்ணனின் காமத்திற்காக ஏங்குவதும் அவனாக தேடி வரும்போது வாய்ப்புகளை தவற விடாமல் இருப்பதும் வெறும் காமம் மட்டுமேயல்ல. அது ஒருவகையில் இந்த அதிகாரத்தை ஏதோ ஒருவகையில் தானும் பகிர்ந்து கொள்கிறேன், உடைமை கொள்கிறேன் என்று எண்ணி மன அறையின் ரகசியத்தில் மகிழ செய்வது. பெரியண்ணன் ஆனந்தாயியிடம் வந்து செல்வதால் தனது அதிகாரத்தில் ஏதாவது விட்டுக்கொடுப்பானா என்றால் நிச்சயமாக இல்லை. இருந்தாலும் அப்படியான வருகை, ஆனந்தாயிக்கு தனது இருப்பின் மேல் ஒரு உறுதிப்பாட்டை வழங்குகிறது. லெச்சுமி வந்த பிறகு மனம் புழுங்கி வயல் காட்டில் வேலை செய்யும் ஆனந்தாயி, பெரியண்ணன் மேல் தனக்கிருப்பது என்ன ? ஆசையா ? உரிமையா ? எது என்று வினவிக்கொண்டு பிள்ளைகளுக்காக என்று சொல்லி சமாதானமடைகிறாள். எல்லா அம்மாக்களும் இப்படி தங்களுக்கே தாங்களே ஒரு பாவனை செய்து கொள்கிறார்கள் – பாவனை என்று சொல்வது நல்ல அர்த்தத்தில் தான், அதுவும் ஒரு உண்மை. அது மட்டுமே உண்மை அல்ல என்பதை லெச்சுமியை வெறுப்பேற்ற ஆனந்தாயியை அழைக்கும் பெரியண்ணனிடம் ஓடிப்போகும் ஆனந்தாயியின் செயலை வைத்து முடிவு செய்து கொள்ளலாம். அது கணவனுக்கான போட்டி மட்டுமல்ல, இங்குள்ள அதிகார அமைப்பில் தன்னை தக்கவைத்து கொள்வதற்கான செயல்பாடும் கூட.
அதே நேரம் அப்படியாக பெரியண்ணன் அதிகார அமைப்பின் விசுவாசத்தை பெற முயற்சிக்கும் ஆனந்தாயிக்கு கிடைப்பது மேலும் குழந்தைகளை பெற்று வளர்த்து தன்னைத்தானே சுற்றி வலைப்பின்னி கொள்ளும் அமைப்பு. அல்லது வஹிதாவிடம் சென்று ரகசியமான சட்டவிரோத முறையில் கரு கலைத்து கொள்ள வேண்டும். அப்படி செய்வதற்கு பெரியண்ணன் காசு தருவதில்லை. பணத்தை திரட்டுவதற்கு துளி முயற்சியும் எடுப்பதில்லை. உனக்கு வேண்டுமானால் மூக்குத்தியை விற்று செய்து கொள் என்கிறான். நாவலில் இரண்டு முறை தாம்பத்ய அழைப்பிற்கும் ஆனந்தாயி சொல்வது நெருப்பு போட்டி(தீப்பெட்டி) கொடுக்க போனேன் என்று தான் சொல்கிறாள். அந்த குழுக்குறி அவளுக்கும் பெரியண்ணனுக்குமான உறவின் சாரத்தை சொல்வதாக வாசிக்கலாம். நெருப்பு வேண்டும், ஆனால் பதமாக பற்றவைத்து குளிர்காய வேண்டும். பருப்பொருளில் எரியும் அடுப்பு நெருப்பு நம் கைக்கு சிக்குவது. விறகுகளை எடுத்தும் நீக்கியும் கையாள முடிகிறது. பெரியண்ணன் என்ற மானுட நெஞ்சில் எரியும் மோக வெறி, ஒவ்வொரு முறையும் ஆனந்தாயியை சுட்டு பொசுக்குகிறது. அவள் கோடையில் வாடிய தாவரம் காரில் துளிர்ப்பது போல, குழந்தைகளை, வீட்டை பரமாரிப்பதன் மூலம் ஒவ்வொரு முறையும் தன்னை மீட்டு கொள்கிறாள்.
இவையெல்லாம் ஆனந்தாயியிக்கும் பெரியண்ணனுக்கும் இருக்கும் தாம்பத்யத்தை அதன் வன்முறையுடன் அவள் ஏற்று கொள்ளும் விதத்தை அதிகார அமைப்பின் பின்னணியில் வைத்து விளக்கி கொள்ளும் ஒரு முயற்சி. மறுபுறம் இருள் முகம் ஒன்றுண்டு, அது முதல் அத்தியாயங்களிலேயே கோட்டு சித்திரம் போல் இழுத்து காட்டப்படுகிறது. ஐந்தாம் குழந்தைக்கான மகப்பேற்று வலியில் இருக்கும் மனைவியை கூத்தியாளுக்காக பிடித்து நெட்டி தள்ளியவன், மகள் பிறந்தும் ஒருநாள் முழுதும் மெத்தையிலேயே இருந்துவிட்டு மறுநாள் மாலை வந்து பார்க்கிறான் பெரியண்ணன். அப்போதும் அவனிடம் பிணக்குடன் கண்ணீல் நீருடன் பேசாமல் தான் இருக்கிறாள் ஆனந்தாயி. ஆனால் மறுநாள் இரவு, அவன் கூப்பிட்ட குரலுக்கு தண்ணீர் எடுத்து கொண்டு மெத்தை படியேறுபவள், தலை வந்து தனத்தில் மூட்டியவுடன் தன் வாசம் இழக்கிறாள். மகிழ்ந்து திளைத்துவிட்டு வருகிறாள். ஏனெனில் எட்டியும் இனிக்கும் விந்தை காமத்தில் உண்டு. சமூக அமைப்பில் உந்தப்பட்டு தன்னை தக்கவைத்து கொள்ளும் போராட்டத்தில் இச்சைகளின் உருமாற்றம் ஒருபுறமும் தனிமனித மனதின் அவசங்களும் ஊடும்பாவுமாக பின்னி வருவதால் மனிதர்கள் வெறுமே கருத்துருவ வார்ப்புகளாக இல்லாமல் உயிர்ப்புள்ளவர்களாக வருகிறார்கள்.
இந்த பின்னணியில் ஐந்து குழந்தைகள் பெற்றுவிட்டாயே விட்டு தொலைக்க வேண்டியது தானே, அந்த சனியனை என்ற வெள்ளையம்மாளின் குரல் ஆனந்தாயிக்கு முக்கியத்துவம் இல்லாமல் போவது இயல்பானதே. இந்த இடத்தில் மூன்று தலைமுறை பெண்களின் பொருளியல் அடித்தளத்தை பார்க்க வேண்டி இருக்கிறது. வெள்ளையம்மாளும் அவரது கணவரும் ஒரே நிலத்தில் சமானமாக உழைத்தவர்கள். எனவே கணவனிடம் அடிவாங்கும் வன்முறையை பொறுத்து கொண்டாலும் உடலில் தெம்பிருக்கும் வரைக்கும் வெள்ளையம்மாளுக்கு சொந்தக்காலில் நிற்கும் சுய உறுதி உண்டு. வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்த பின்னரும் கூட, பெரியண்ணன் மரியாதை குறைவாக பணத்தை ஒருமுறை விட்டெறிந்த பிறகு வீரப்பனிடம் சிறுவாடு பிடித்துவிட்டு வரும் பணத்தில் தான் வாழ்கிறாள். ஒரே ஒருமுறை நடந்த மரியாதை குறைவுக்காக மகனிடம் வெள்ளையம்மா பணம் எதிர்பார்ப்பதில்லை என்ற விஷயம் போகிறபோக்கில் சொல்லப்படுகிறது. ஆனால் மனித மனம் இத்தகு பலவகை நுண்பின்னல்களில் தான் இயங்குகிறது. அதனை ஆற்றொழுக்காக காட்டுவதே நாவலை கலைத்தன்மை கொள்ள வைக்கிறது.
வெள்ளையம்மாவுக்கு இருக்கும் பொருள்சார் சுதந்திரம் நிலத்தில் உழைக்கும் கணவனுடன் உழைப்பை பங்கிட்டு கொள்வதில் தொடங்குகிறது. வீட்டில் பெண் செய்யும் உழைப்பு கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இன்றும் அந்நிலையில் பெரிய மாற்றம் இல்லை. அடுத்த தலைமுறையில் பூங்காவனம் தன் உழைப்பில் வாழ்கிறாள். எனவே அவளுக்கு துரைசாமியை விலக்கி வைத்துவிட்டு ஒற்றைத்தாயாக குழந்தையை வளர்க்கும் நம்பிக்கை பிறக்கிறது. பூங்காவனத்தின் தலைமுறையை சேர்ந்த ஆனந்தாயியின் மகள்களான கலாவுக்கும் தனத்தும் அந்த சுதந்திரம் இல்லை. ஆனந்தாயியை போலவே அவர்களும் கணவனுக்கு ஒடுங்கி வாழ வேண்டி இருக்கிறது. ஆனந்தாயியின் நிலையை இங்கிருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.
அந்த புரிதல் வெள்ளையம்மாளுக்கும் இருப்பதாகவே தெரிகிறது. தொடர்ச்சியாக மகன் பெரியண்ணன் தட்டி கேட்கா முடியாததையும் புலம்பலாகவும் மருமகளுக்கு அறிவுரையாகவும் கூறி கொண்டே இருக்கிறாள். அந்த வீட்டின் முரண்படும் தரப்புகளுக்கு இடையில் உயவு எண்ணெயாக செயல்படுகிறது வெள்ளையம்மாவின் பேச்சும் இருப்பும். சென்ற காலத்தின் அறிவுடன் வருங்காலத்தை பார்த்து குரல் கொடுத்து கொண்டே இருக்கிறாள். ஆயாவின் அந்த குரல்கள் இங்கே கேட்காத வீடுகள் குறைவென்று தான் நினைக்கிறேன். அந்த குரல் வீட்டின் வெளித்திண்ணையில் இருந்து தான் வருகிறது. உள்ளறையில் இருந்தும் முணுமுணுப்பும் மறுப்பும் தான் எழுகிறது. ஒரு சுழற்சி வட்டம் ஓடி ஆனந்தாயியியும் வெள்ளையம்மாள் போல வெளித்திண்ணையில் தஞ்சம் புகுகிறாள். நாவல் முடியும் போது அந்த திண்ணை ஒரு படிமமாகி விடுகிறது. நாம் ஏன் அம்மாக்களை அப்படி ஒரு வெளித்திண்ணையில் கிடத்துகிறோம் ? அவர்களின் குரல் ஏன் நம் செவிக்கு எட்டுவதில்லை ? இன்று மேலொமொரு தலைமுறை காலம் கடந்தபின்னும் அந்த நிலை மாறிவிடவில்லை. அம்மாக்கள் ஏதோ ஒருவகையில் வெளித்திண்ணையில் வைக்கப்படுகிறார்கள்.
வெள்ளையம்மாளின் கதையில் அவளது சாமி பிடிப்பு, உரிமை கொண்ட மருமகளான ஆனந்தாயியிக்கு வராமல் லெச்சுமிக்கு போவது கேள்விக்குரிய விஷயம். ஒரு பொது பார்வைக்கு கூத்தியாரை வைப்பாட்டியாக மாற்றி கொண்ட கதை என்றளவில் இருக்கும் லெச்சுமியின் வாழ்க்கை, இந்த சமூக அமைப்பு சொல்லும் நெறிகளில் இருந்து சுதந்திரம் தேடிக்கொள்ளும் பெண்ணின் சிதிலமடையும் வாழ்க்கை என்று பரந்த அளவில் விரித்தெடுக்கிறது. மறுபுறம் முன்பே வன்முறையும் நிகரான இறுகிய பற்று வடிவிலான அன்பும் உழலும் குடும்பத்தின் அறநிலைப்பாடுகளை சோதிக்கும் வருகையாகவே லெச்சுமியை பார்க்க முடிகிறது. ஒரு வேதிவினை நிகழ்வில் செயல்படும் வினையூக்கியாக இருக்கிறது லெச்சுமியின் வருகையும் இறத்தலும்.
லெச்சுமியின் வருகை கச்சிதமாக கலாவின் வீட்டுக்கு அழைப்பு சடங்கின் போது, கலாவிற்கு சிவப்புக்கல் பதக்கமும் லெச்சுமிக்கு பச்சைக்கல் பதக்கமும் என வர்ணனை தொடங்குகிறது. அந்த இடத்திலேயே லெச்சுமிக்கு பெரியண்ணன் கொடுத்திருக்கும் இடம் என்ன என்று விளங்கிவிடுகிறது. இதனை ஒவ்வொருவரும் ஒரு விதமாக எதிர்கொள்கிறார்கள். வெள்ளையம்மாவை பொறுத்தவரை லெச்சுமி நுழைந்த புதிதில் மருமகளின் திறனின்மையை கடிந்து கொள்கிறாள். அதே மருமகள் ஆனந்தாயி வீட்டு வேலைகளை கவனிக்காமல் முடங்கியிருந்து துக்கம் பிடிக்கும்போது, வந்தவளை வீட்டு வேலை செய்யவிட்டு நீ காட்டு வேலைக்கு போ என்று அறிவுரை கூறி தேற்றுகிறாள். அந்த சொற்கள் மருமகளுக்கான ஆறுதலாக ஆகும்போதே லெச்சுமியை ஏற்பதாகவும் பொருள்படுகிறது. அடுத்து வரும் நிகழ்வுகளில் ஆனந்தாயி கூட, லெச்சுமியை திட்டும் போது, சக்காளத்தி என்று தான் வைகிறாள். பிடிக்கவேயில்லை என்றாலும் மெல்ல மெல்ல மனிதர்கள் ஒன்றிணைந்து வாழும் போது ஓர் ஏற்பை உருவாக்கி கொள்கிறார்கள். வெள்ளையம்மாளுக்கு குடும்பம் ஓடினால் நன்று, பீஷ்மர் போல. எனவே ஏதோ ஒரு வகையில் வீட்டின் அமைப்பாக வெள்ளையம்மாளால் ஏற்கப்பட்டதால் லெச்சுமிக்கு சாமி பிடித்தது என்று கொள்வது தனிமனிதர்களின் உறவு பின்னலை புரிந்து கொள்ளும் கண்ணோட்டத்தில் இருந்து வருவது. அதற்கு நேர்மாறாக தனிமனிதன் என்பவன் தனது சொந்த அகச்சிக்கல்களால் மட்டுமே ஆட்டிப்படைக்கப்படுவன் என்று கொண்டால் பெரியண்ணனின் வன்கொடுமை தாங்காமல் லெச்சுமியின் ஆழ்மனம் திரும்பி கொண்ட விதம் என்று உளவியல் பார்வையும் உண்டு – சாமி பிடிப்புக்கு.
லெச்சுமியின் நிலை என்ன ? தனது சுதந்திரத்திற்காக நிற்கும் பெண்ணின் வாழ்க்கைப்பாடாக தான் அவளது கதை விரிகிறது. லெச்சுமியை மத்தாக வைத்து கொண்டால் ஒருபுறம் சுதந்திரத்தை தன் பொருட்டும் தனது பிள்ளைகள் பொருட்டும் பணயம் வைத்துவிட்டு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் ஆனந்தாயி. மறுபுறம் தான் என்பது தான் மட்டுமே பிறரது விருப்பங்கள் ஒரு பொருட்டே அல்ல என்று வாழும் பெரியண்ணன். இவர்களுக்கு நடுவில் சிக்கிக்கொண்ட லெச்சுமி பெரியண்ணனிடமிருந்து தப்பிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்த பின் இறப்பை தழுவி மீண்டுமொரு முறை இறுதியாக தோற்றுப்போகிறாள்.
தேனீயின் மலைக்காட்டுப்பக்க கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து மாமனுடன் திருமணமாகி, அவன் இறந்துவிடவே வேறொருவனை நம்பி மதுரைக்கு வந்து மோசம் செய்யப்பட்டு விபாச்சார விடுதியில் தள்ளப்பட்டவள் லெச்சுமி. அங்கிருந்து அவளுக்கு தேவைப்படுவது விடுதலை, சுதந்திரம். பெரியண்ணன் அதனை வழங்குவான் என்று நம்பி வருகிறாள். பெரியண்ணனும் அந்த அமைப்பின் ஒருபகுதி, பிற ஆண்களில் இருந்து எவ்வகையிலும் பெரிதாக வேறுப்பட்டவன் அல்ல என்பதை கணிக்க தவறுகிறாள். அதை உணர தொடங்கும் போது கைகளில் விலங்கிடப்பட்டுள்ளதை அறிகிறாள்.
பெரியண்ணன் பணம் கையில் புரள்வதால் பெண் பித்தில் உழல்கிறான். அப்படி பணம் கைக்கு வந்தபிறகு திரியும் ஆண்கள் சமூகத்தில் ஏராளம். அவர்களின் மரியாதைக்கு சமூகத்தில் இன்றுவரைக்கும் ஒரு குறைவில்லை. மறுபக்கம் வேணி போல, ஏமாற்றப்பட்டவர்கள் களங்கம் கற்பிக்கப்படுகிறார்கள். வீட்டோடு முடக்கும் நிலை தான் குறைந்திருக்கிறதே தவிர, அப்பெண்களை அவதூறு சொல்லும் மனநிலையில் மாற்றமில்லை. நாவல் நெடுக வரும் ஆண்கள் அத்தனை பேருக்கும் அப்படியான சபலம் இருக்கிறது. எருக்கம்பால் அடிக்க தனத்தை கூட்டி செல்லும் சின்னசாமி, சிறுமகள் என்றும் பாராமல் தொடையை தடவுகிறான், சித்தி முறையாக வேண்டிய வேணியை மாணிக்கம் சீண்டி பார்க்கிறான், மழைக்காலத்தில் கங்காணி வீட்டில் கூட்டம் போடும் ஆண்கள் வேணி வெளி திண்ணைக்கு வருவாளா என வாய் பார்த்து கொண்டே, அவளை குறித்து வம்பு வளர்க்கிறார்கள். தனம் வளர்ந்த பிறகு தனத்தை வளர்த்ததை ஒரு வாழை கண்ணை வளர்த்திருக்கலாம் என்று சாடையாக பேசி செல்கிறான் சின்னசாமி. ஆக இங்கு பெரும்பாலான ஆண்கள் அந்த மனநிலையில் தான் இருக்கிறார்கள். அந்த முகத்தின் குரூரமான இலட்சிய வடிவம் தான் பெரியண்ணன்.
தப்பிச்செல்லும் லெச்சுமியை வேட்டையாடி வர கிளம்பும் பெரியண்ணனுக்கு வீட்டில் இருந்து வலுவான எதிர்ப்போ, சமூகத்தில் இருந்து ஒத்துழைப்பின்மையோ கிடைப்பதில்லை. அவரவர் முணுமுணுப்புகளுடன் அடங்கி விடுகிறார்கள். உச்சக்கட்டமாக நாங்களெல்லாம் பொறுத்து கொண்டு இல்லையா என்று லெச்சுமியை பார்த்து கேட்கிறாள் ஆனந்தாயி. பிள்ளைகளுக்காக பொறுத்து கொள்வதில் நியாயம் உண்டு. எதுவும் இல்லாதவர் சிறகு மடக்கி வான் பார்த்து கூவ வேண்டும் என்பதை என்னவென்று சொல்வது ? ஆனால் அந்த சிறகுகள் பெரியண்ணனால் மெல்ல மெல்ல வெட்டப்பட்டு பறவையும் காணாமல் போகிறது. குழந்தைகள் சில நேரம் கையில் கிடைத்த பொருட்களை அடித்து விளையாடி உடைத்துவிட்டு, உடைந்து போன பொருளுக்காக சிறிது நேரம் அழுதுவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விடுவார்கள். அதேபோலத்தான் பெரியண்ணனும் லெச்சுமியை உருட்டி உடைத்து விட்டு அழுது தூக்கம் தீர்த்து கொண்டு கிளம்பி விடுகிறான். இறுதிவரைக்கும் இப்படியான பெண்பித்தனாகவே இருக்கிறான். மகன் பாலன் இறந்து போன அன்றும் கூட, லெச்சுமியை தேடிவந்து அவள் யாருடனாவது படுத்தாளா என்று சந்தேகப்பட்டு காமம் கொண்டாடுகிறான். மாமிசம் மட்டுமே நிறைந்த உலகை சேர்ந்தவன். அவனது உளவியலுக்குள் நாவல் அதிகம் பயணிப்பதில்லை. சாரு நிவேதிதாவின் தேகம் நாவல் கதாநாயகன் தர்மதுரையை நினைவுப்படுத்தி கொள்வது உதவும்.
மறுபக்கம் பெரியண்ணனை ஆண்களின் அதிகார அமைப்பின் முகமாக எடுத்து கொண்டு சிந்தித்தால் அவனில் வன்முறை வெளிப்படும் தருணங்களை பார்க்கலாம். அவை எப்போதும் கை ஓங்க முடியாத பெண்களிடமே வெளிப்படுகிறது. பதிலுக்கு அடிக்க தயாராகும் லெச்சுமியை ஆனந்தாயி, மணியின் துணையில்லாமல் சமாளிக்க முடிவதில்லை. அதே நேரம் லெச்சுமியை அழைத்து கொண்டு ஓடிய மாணிக்கத்தை அய்யாக்கண்ணுவை சேர்த்து கொண்டு வெட்டப்போகும் தருணத்தில் மாணிக்கத்தை எதிர்த்து நிற்க முடியாமல் பயந்து ஒளிந்து வெட்டுப்பட்டு கொள்கிறான். பின்னொரு காலத்தில் மணியே இந்த விஷயத்தை சொல்லி பெரியண்ணனை மானக்குறைவாக்குகிறான். மேலும் எப்போதும் பெரியண்ணன் சந்தேகப்பட்டு கொண்டே இருக்கிறான். மகன், லெச்சுமி, ஆனந்தாயி என ஒவ்வொருவரையும் கேள்விகளால் துளைப்பதும் மனைவிகளை கற்பை எப்போதும் நிருபித்து கொண்டே இருக்க சொல்வது.
பெரியண்ணனின் இந்த நடத்தைகளுடன் மணியின் குண பாவத்தை பொருத்தி கொள்ள முடியும். இளமையிலேயே திருடுகிறான், ஐநூறு மில்லி எண்ணெய்க்கு நானூறு வாங்கி கொண்டு, மீதி காசுக்கு மிட்டாய் வாங்கி தின்கிறான். தங்கைகளை அப்பா இல்லாத நேரத்தில் அதிகாரம் செய்கிறான். பதின்பருவத்தில் உச்சக்கட்டமாக பாசம் காட்டிய சின்னம்மா லெச்சுமியின் நெஞ்சில் எட்டி உதைக்கிறான். ஒரு வன்முறை சூழலில் வளரும் குழந்தைகள், அதனை தங்களிலும் கொண்டிருக்கின்றன என்று சொல்வதன் வடிவமாகவே மணியை பார்க்க முடியும். சின்னம்மா லெச்சுமியை நெஞ்சில் ஓங்கி உதைத்தும் அப்பனுடன் சேர்ந்து கொண்டு நிர்வாணமாக்கி அடித்து விளாசும் அதே மணி தான், ஆனந்தாயி கோழி அறுத்து தர சொன்னால் ரத்தம், கொலை என்று பாடம் படிக்கிறான். மனித உள்ளங்களின் இத்தகு நுட்பத்தை காட்டி செல்வதன் வழியாக ஆனந்தாயி தன் கலைத்தன்மையை அடைகிறது.
மணியின் இத்தகைய நடத்தையை கொண்டு நாம் வன்முறையை முறையாக்கம் செய்து கொள்வது குறித்த கேள்வியை எழுப்பி கொள்ளலாம். தொடர்ச்சியாக தனக்கு கீழ் உள்ள வீட்டுப்பெண்களை சந்தர்ப்பம் அமைந்தால் அதிகாரத்திற்கு உள்ளாக்குகிறான். வன்முறையும் கையாளப்படுகிறது. நாவல் காலத்தில் எங்கோ பின்னோக்கி நடந்தாலும் அது பேசும் விஷயங்கள் இன்றுவரை வழக்கில் உள்ளன. வன்முறையும் காமமும் சமூக,பொருளியல் தளத்திற்கு தரத்திற்கு ஏற்ப கீழ்நிலையில் வெளிப்படையாகவும் மேல்நிலையில் மறைமுகமாகவும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு சமூகமாக நமது வன்முறையை பெண்களின் மேல் முறைமையாக்கம் செய்து கொள்வது ஏன் ?
ஆனந்தாயியின் மகள்கள் கலா, தனத்திற்கும் அந்த ஒடுக்குமுறை தொடர்கிறது. கலா சைக்கிள் ஓட்டுவதை கண்டவுடன் அடித்து விளாசி பள்ளிக்கு செல்வதை ரத்து செய்கிறான். இன்று பெண்கள் ஸ்கூட்டிகளில் செல்வது சகஜமாகிவிட்ட காலத்தில் சைக்கிள் ஓட்டியதற்காக கலாவும் ஆனந்தாயியும் அடிவாங்குவதும் பள்ளியில் இருந்து நிறுத்தப்படுவதும் ஆணின் வன்முறையாதிக்கம் மட்டுமாக, அந்நியமாக தெரியலாம். ஜெயமோகனின் புனைவு களியாட்டு கதைகளில் சிறகு என்ற கதை, பெண்ணொருத்தி சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்வதால் அடையும் பரவசத்தை பேசுகிறது. அக்கதையின் பின்னணியில் வாசித்தோமென்றால் சைக்கிள் என்பது சுதந்திரத்தின் சிறகு. கலாவுக்கு தடை செய்யப்படுவது அது தான். பிறகு அவள் பகல் முழுக்க ஜன்னல் வழி சாலையை வெறித்து பார்த்து கொண்டிருப்பது சொல்லப்பட்டு கொண்டே இருப்பதை இதனுடன் தொடர்புறுத்தி கொள்ளலாம்.
கலா போல வீட்டில் ஒடுங்காமல் தனம் முடிந்தவரை மீறத்துணிபவளாக இருக்கிறாள். அப்பனை எதிர்த்து பேசுகிறாள். அடிவாங்குகிறாள். பக்கத்து வீட்டுக்கார வேதக்கார டேனியலுடன் காதல் கொள்கிறாள். அதை கண்டித்து கேட்கும் அம்மாவை சட்டை செய்வதில்லை. நடுமதியத்திலேயே வீட்டுக்கு அழைத்து வந்து டேனியலுடன் சல்லாபிக்கும் தனத்தை கண்டிக்கும் சின்னம்மா லெச்சுமியை வசைபாடுகிறாள். முற்றிலும் தன் போக்கில் இருக்க முயன்று அண்ணன், அப்பாவால் அடக்கப்படுகிறாள். திருமணமான பிறகு கணவன் வீட்டிலும் கொடுமை, பிறந்த வீட்டிலும் அப்பனின் கோபம் என்று அல்லலுக்கு உள்ளாகிறாள். மகள் இருவரும் தாங்களும் தாயாகி கைகள் கட்டப்பட்ட நிலையை அடைந்த பிறகே அம்மா ஆனந்தாயியின் நிலையை புரிந்து கொள்கிறார்கள்.
டேனியலை வீட்டுக்கு அழைத்து வருவதை கண்டிக்கும் லெச்சுமிக்கும் தனத்துக்கும் வரும் சண்டை, அதை தொடர்ந்து ஆனந்தாயியும் லெச்சுமியும் உரசி கொள்வது. அடுத்து மாணிக்கத்துடன் ஓடிப்போன லெச்சுமியை பிடித்து வந்து கொடுமைக்குள்ளாக்கும் காலக்கட்டத்தில் மனம் வெதும்பி பேசும் லெச்சுமியிடம் ஆனந்தாயி கூறுவது ஆகிய இரண்டு இடங்களும் கவனித்தக்கவை. அவை ஒரே நேரத்தில் நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள் எப்படி நீதியுணர்ச்சியை இல்லாமலாக்கும் என்பதற்கும் பக்கம் பக்கம் ஒரே வேதனையை இருவேறு வகைகளில் அனுபவித்தாலும் மனிதர்கள் அகத்தே எத்தனை தொலைவில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்று அறிய செய்கின்றன.
முதல் சம்பவத்தில் தனத்தின் மேல் தவறு என்றாலும் சக்காளத்தி முன் மகளை கண்டிப்பது இழுக்கென நினைத்து லெச்சுமியை வைது அனுப்புகிறாள். இரண்டாவதில் தனது சுதந்திரத்தை பறித்து கொண்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கும் பெரியண்ணனை பற்றி கூறினால் நீ இறந்தால் என் கணவன் பைத்தியமாகிவிடுவான் என்று தன் தரப்பையே பேசுகிறாள் ஆனந்தாயி. நாவலின் முன் அத்தியாயங்களில் சொல்லப்படும், ஓய்ந்த நேரத்தில் லெச்சுமி தன் இளமை காலத்து நினைவுகளை ஆனந்தாயியிடம் கூறுவதும் அதை ஆனந்தாயி சட்டை செய்யாமல் இருப்பதையும் ஆனந்தாயியின் பதிலுடன் இணைத்து கொண்டால் சித்திரம் முழுமையடைகிறது. நமக்கே என்று நாம் இட்டுக்கொண்ட வரையறைகளுக்குள் நுழையாத வரை தான் பிறர் குறித்த புரிதல் எல்லாம். அந்த கோட்டில் சற்று தீ பட்டாலும் ஆணவம் புண்பட்டு திரிந்து விடுகிறோம். ஆனந்தாயிக்கு அது பெரியண்ணன்.
தொலைவு பார்வையை தெளிவாக்குகிறது. அதி தொலைவு பார்வையே இல்லாமலாக்குகிறது. பூங்காவனம் பெரியண்ணன் வீட்டில் வேலை செய்த வடக்கத்தியாளின் மகள். வடக்கத்தியான் இறந்துவிட பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டு அம்மாவுடன் பெரியண்ணன் வீட்டு தோட்டத்தில் வேலை செய்கிறாள். அங்கே வேலைக்கு வரும் லெச்சுமியுடன் பழக்கமாகி லெச்சுமி கங்காணி வீட்டு மாணிக்கத்துடன் ஓடி செல்லும் செய்தியை ரகசியம் காக்கிறாள். பிற்பாடு கங்காணி மகன்கள் – பெரியண்ணன் கோஷ்டி மோதலின் போது, லெச்சுமிக்கும் நீலவேணிக்கும் தகவல் தூதுவராக செயல்பட்டு இரண்டு தரப்பு ஆட்களுக்கும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்ள தயாராக இருக்கும் செய்தியை சொல்கிறாள். விளைவாக இரு வீட்டு பகைக்கும் ஆட்பட்டு தனியே தன் வீட்டில் கைத்தொழிலில் ஈடுப்பட்டு வாழ்கிறாள். பிறகு நாயக்கர் வீட்டுக்கு வேலைக்கு சென்று துரைசாமியுடன் தொடர்பு ஏற்பட்டு குழந்தையும் பேற்று விடுகிறாள். பொருளியல் வளத்தால் பூங்காவனம் தளைக்கப்படவில்லை. பொருள் இன்மை அவளுக்கு சுதந்திரத்தை வழங்குகிறது – துரைசாமியை புறக்கணிக்க. பூங்காவனத்தின் சமூகம் துரைசாமிக்கு ஆதரவாக இருந்தாலும் பூங்காவனம் தன் முடிவில் உறுதியாகவே இருக்கிறாள். தோழி மலரின் கதையை கேட்டு அதை மேலும் உறுதிப்படுத்தி கொள்கிறாள். ஆனந்தாயியிடம் அவ்வுறுதியை சொல்கிறாள். பொருளியல் வளம் அல்ல, பொருளிட்டும், வாழ்க்கையை அவதானிக்கும் சுதந்திரமே பெண்களை விடுவிக்கிறது என்று பூங்காவனத்தின் வழியாக சென்றடைய முடிகிறது. அப்படியல்லாவிட்டால் அய்யாக்கண்ணு இறந்த அங்கம்மாள் அடையும் கதியை நினைத்து பார்த்தே ஆனந்தாயி அத்தனை கொடுமைகளுக்கும் அப்பால் பெரியண்ணனை பொறுத்து கொள்கிறாள்.
ஆண்களின் அதிகார முகமாக விளங்கும் அமைப்பில் ஒடுக்கப்படும் பெண்களின் தனிமனித நிலைகளின் மைய அச்சாக ஆனந்தாயி விளங்குகிறாள். அந்த அமைப்பின் அடித்தள இயங்கு விசையாக இப்பெண்களே இயங்குகிறார்கள். தங்கள் மேல் ஏவப்படும் அதிகாரத்தின் பிடியில் இருந்து விலக ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் செயல்படுகிறார்கள். அதன் விளைவுகள் அவரவர் கதையை சொல்லப்படுவதனூடாக காட்டப்படுகிறது. ஆனந்தாயியை அவர்களின் மைய அச்சாக வரித்து கொள்வதற்கான காரணம், அவளுடைய தாக்கு பிடிக்கும் தன்மை, வேறெவரது வழிகளை விடவும் கூடுதல் பயன்களை தருகிறது. தலைமுறைகளை வாழ வைக்கிறது. அப்படியான அம்மாக்கள் வழியாக தான் நம் சமூகம் நகர்ந்து செல்கிறது. அதற்கு மாற்று தீர்வாக பூங்காவனத்தின் வாழ்க்கை தொடங்குகிறது.
இந்த இடத்தில் ஒரு தேய்வழக்காக அம்மாவின் தியாகமே நமது வாழ்க்கை என்ற தமிழ் மனநிலை வந்துவிழ எல்லா வாய்ப்பிருந்தும் நாவல் நாற்பது வருட வாழ்க்கையை விரிவாக காட்டுவதன் வழியாக மனித குணச்சித்திரத்தின் பல்வேறு மாறுபாடுகளை எடுத்து வைத்து தன்னில் தான் சமநிலை அடைகிறது. ஆகவே எவர் மேலும் எத்தீர்ப்பை இடுவதற்கு பதிலாக ஆம் மனிதர்கள் என்ற ஏற்கும் மனநிலைக்கு கொண்டு செல்கிறது. ஒரு பெரிய நாவலை வாசித்து முடித்தவுடன் வாசகன் சொல்வது, ஆம் அவ்வளவு தான். வாழ்க்கையை குறித்த ஒரு சமாதானத்தை அடைகிறான். பக்க அளவால் அல்லாமல் காலத்தை குறுக்குவதனூடாக ஆனந்தாயி அத்தன்மையை அடைகிறது.
குறுகிய பக்கங்களில் சிவகாமி இதை நிகழ்த்த முடிவதன் காரணம், அவரது வடிவம் தான். அது பெரும்பாலும் கதைச்சொல்லலாக அமைந்து, மனிதர்களின் அகத்தை கூற வருமிடத்து உரையாடல்கள் அல்லது வாய்விட்டு சொல்லிக்கொள்ளும் தன்னுரையாடல்களை அமைக்கிறார். காட்சி விவரணைகள் கூர்மையான ஒன்றிரண்டு சொற்களில் கடத்தப்படுகிறது. விரிவான வர்ணனைகள் இருப்பதில்லை.

ஆனந்தாயி பேசும் கால-இடச்சூழல் இன்று இல்லை. அந்த பொருளியல் கட்டுமானங்கள் வாழ்க்கை முறைகள் அனைத்துமே மாறிவிட்டன. அங்கிருந்து கடந்து வந்து நவீன காலத்தில் வேறு வகையான உறவுச்சிக்கல்களை, அமைப்புகளால் உருவாகும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இக்காலக்கட்டத்தில் ஆனந்தாயியை மறுவாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன ? ஏனெனில் நாம் நினைப்பது போல, நம் சிக்கல்கள் முற்றாக மாறிவிடவில்லை. இன்றும் ஆனந்தாயிக்கள், கலா, தனம், லெச்சுமி, பெரியண்ணன், மணி என்று எல்லோருமே வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த நிகழ்வுகளில் மாற்றுருக்களின் மேலான அனுபவத்தை ஒரு ஆடியாக பயன்படுத்தி கொண்டு தான் வாசகனாக ஆனந்தாயி காட்டும் உலகத்திற்கு காலத்தாவலை நிகழ்த்துகிறேன். ஆகவே நம் வேர்களை தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள முற்படும் இலக்கிய வாசகனின் வாசிப்பில் ஆனந்தாயிக்கு கட்டாயம் ஒரிடம் உண்டு. வாழ்த்தும் போது ஆல்போல் தழைத்து அருகு போல் வேரொடி… என்று மங்கல சொல் வழக்கு உண்டு. ஆனந்தாயி, எந்த வறட்சியிலும் தன்னை தக்கவைத்து கொண்டு பூமிக்கு உயிர்ப்பின் பச்சையை வழங்கும் அருகு போல் இருக்கிறாள். ஆல்போல் தழைக்க அருகு குறித்த புரிதலும் அவசியம்.
***
