”பெருந்தேவியின் காலம்” – சதீஷ்குமார் சீனிவாசன்

பெருந்தேவி

தரிசனம்

நியாயமாக
உன்னை நீ கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரே கேள்வி இதுதான்
உனக்கும் பூச்சிக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது
காஃப்காவின் தரிசனத்துக்குப் பின்
பல பத்தாண்டுகள் போய்விட்டன
இன்று எல்லா வீட்டிலும்
எல்லோரும் பூச்சிகள்
எல்லா வீடுகளும் உயிர்பெற்ற பூச்சிக் கூட்டம்
பிறந்தவுடன் நடந்துவிடுகிறது உருமாற்றம்
உடனே தொடங்கிவிடுகிறது அதன் அரித்தல்
பிற பூச்சிகளிலிருந்து வானம் வரைக்கும்
முடியும்வரை
பெரிய பூச்சிகள் சின்னப் பூச்சிகள்
அப்பா பூச்சிகள் குழந்தைப் பூச்சிகள்
கல்லூரிப் பூச்சிகள் ஆஸ்பத்திரிப் பூச்சிகள்
மிகப் பிரமாண்டமான அரசாங்க விஷப் பூச்சி
அதன் வயிற்றுக்குள் கோடிப் பூச்சிகள்
நீயும் ஒரு சின்னப் பூச்சிதான்
ஊர்ந்து செல்லவில்லை
பறக்கவில்லை என்பதால்
இல்லை என்றாகிவிடாது
ஒரு பூச்சி என்றைக்குத்
தானொரு பூச்சி என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது

குளிர் போய்விட்டது

வாஷிங்டன்னில் அடுத்தவாரம்
செர்ரி பூக்களின் வசந்தோத்சவம்
ஆனால்
நான் போகப்போவதில்லை
அவற்றைப் பார்க்க ஆன்மா
வேண்டும்
என்னிடம் ஸ்மார்ட் ஃபோன்தான்
இருக்கிறது

பெருந்தேவி இந்தக் கவிதையின் மூலம்தான் எனக்கு அறிமுகமானார். அதற்கு முன் கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் ஜி.கார்ல் மார்க்ஸ் ஆகியோர் பெருந்தேவி பற்றி பேசக் கேட்டதுண்டு . செர்ரி பூக்கள் கவிதையைப் படித்துவிட்டு கவிஞர் பெருந்தேவியை தொடர்புகொண்டபோது உடனேயே வேறு பேச்சுகளில்லாமல்
“ஏன் அது பிடித்திருக்கிறது எதனால் அது கவிதையாகிறது” என்று
கேட்டார். பெருந்தேவியின் கவிதையுலகம் இதிலிருந்தே தொடங்குவதாகத் தோன்றுகிறது. அவர் சம்பிராதயமான கவிதை நம்பிக்கைகளுக்கும் வாசக ஏற்பு மறுப்புகளுக்கும் அப்பால் தன்னை நிறுத்திக்கொள்பவர். பெருந்தேவியின் கவிதைகளும் இந்த நிலைகளில்தான் தனது உலகங்களை சிருஷ்டித்துக்கொள்கின்றன.
அவை தேவையற்ற மௌடீகங்களையும் மௌனங்களையும் தனது கவிதையில் நிகழ்த்தும் உரையாடல்கள் மூலமாக கடந்து செல்பவராக இருக்கிறார்.

பெருந்தேவி குறித்து அவர்களது நூல் குறித்து போதுமான தரவுகள் பெரும்பாலும் இல்லை. புதையுண்ட கவிஞர்போல அவர் புத்தகங்களை தேடிக் கிடைக்காததால் அவரிடமே கேட்டேன். சில விபரங்கள் சொன்னார். எழுத்தாளரும் பதிப்பாளருமான
ஜீவகரிகாலனிடம் எல்லா புத்தகங்களும் வாங்கித்தரக் கேட்டேன். முதல் இரண்டு தொகுப்புகள் தவிர அச்சிலுள்ள புத்தகங்களை வாங்கித் தந்தார். பெருந்தேவியின் தலைப்புகள் ஒரு எதிர்க்குரலுடனேயே வாசகரை உள்ளிழுக்கும் தன்மையைக் கொண்டவை. பெரும்பாலும் ஆண்மைய சிந்தனைகளுக்கும் பொதுச்சமூக மதிப்பீடுகளுக்கும் எதிரான உள்ளடக்கங்களை கொண்டவை.

பிறப்புறுப்பு இருக்கும் கடவுள் என் கவிதையை வாசிக்க நேர்ந்தால்
.
அவருக்கு உடனடியாகக்
கெட்ட வார்த்தைகளோடு
அதைப் புணரத் தோன்ற வேண்டும்
பின் அதிலிருந்து ஒரு உலகம் பிறக்கும்
திரைகளற்று வெறுப்பற்று
பொறுப்பற்றுத் தன்னைக்
கடவுள் நீக்கிக்கொள்ளாத
ஒரு இடம்
ஆனால் கடவுளுக்குப்
பிறப்புறுப்பு உண்டா இல்லையா
எனத் தெரிந்துகொள்ள முடிவதே இல்லை
என் கவிதைக்கு
இழைக்கப்பட்டிருக்கும் ரகசிய அநியாயங்கள்
இதிலிருந்து தொடங்குகின்றன

பெரும்பாலான கவிஞர்கள் ஒரு காலத்திற்கு பிறகு கல்லென சமைந்து தனது பழைய தருணங்களின்பால் மயக்கங்கள் கொண்டு நின்றுவிடுவார்கள். சிலரால் எவ்வளவு ஓட முடியுமோ அவ்வளவுதான் ஓட முடியும் என்று தோன்றும் தருணங்கள் அவை. “தீயுறைத் தூக்கம்” என்ற தொகுப்பின் மூலம் நவீன கவிதைக்குள் பெருந்தேவி அறிமுகமானார். தொண்ணூறுகளிலிருந்து விட்டு விட்டு தொகுப்புகளையும் தொடர்ந்து எழுதுவதையும் செய்துகொண்டிருக்கிறார் பெருந்தேவி. காலத்தின் புதிய மடிப்புகளுக்கு சென்றாலொழிய புதியவைகளின்பால் நமது மொழியும் மனமும் இருப்புகொள்ளாது. பெருந்தேவியின் ஒரு தொகுப்பிற்கும் இன்னொரு தொகுப்பிற்கும் உள்ளடக்கங்களிலும் கூறு முறைகளிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுண்டு. பத்தாண்டுகளுக்கு ஒரு குரலில் பேசுகிறார் என்று கூட சொல்லலாம். ஆனால் வெவ்வேறு குரல்களின் சாத்தியங்களை கைக்கொள்கின்ற இக்கவிதைகள் காலத்தின் புதிய குருதிகளுடன் பாய்பவை. கேசவா என்ற அதே குரல் டில்டோக்களை ஆர்டர் செய்கிறது. பெண்ணியத்தின் அசலான நிலைகளில் நின்று பெருந்தேவியின் கவிதைகள் சில பல நிகழ்ந்திருக்கின்றன.

சென்ற எந்த நூற்றாண்டையும்விட மனித உறவுகளும் ஆண்பெண் உறவுநிலைகளும் எல்லையற்ற நம்பிக்கையின்மைக்கும் கசப்புகளுக்கும் திரிபுகளுக்கும் சென்றுவிட்டது. ஒருவர் இருப்பதற்கும் இல்லாததற்குமான வேறுபாடுகள் பெரும்பாலும் அழிந்து விட்டிருக்கின்றன. பிரிவுக்கும் கண்ணீருக்கும் எந்த அர்த்தமும் இல்லை. நிறைய உபயோகப்படுத்துகிறோம். நிறைய உபயோகப்படுத்தப்படுகிறோம். தார்மீகமான அக்கறைகளும் உரிமையுணர்வுகளும் மதிப்புணர்வுகளும் மங்கலாகிக்கொண்டே போகின்றன. லவ் யூ என்ற சொல்லில் காதலின் எந்தக் கிளர்ச்சியும் இல்லாதாகியிருக்கிறது. டிஜிட்டல் வெளியில் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு தொடர்புடன் இருக்கிறோமோ அதே அளவு தனிமையிலும் இருக்கிறோம் .

இந்த தாய்மை விவகாரம்

ஒரு பெண்ணுடலில்
எப்போதிலிருந்தோ
கருப்பை இருக்கிறது
தாய்மையை அதில்
அவர்கள் நிரப்பி வைத்தார்கள்
பல பாதைகள் சட்டென்று மூடின
ஓட்டைகள்போல் வேறு சில
திறந்தன
பிள்ளைகளுக்காகவே உயிர்வாழ்தல்
அவர்கள் செயல்களுக்குப்
பொறுப்பாதல்
சின்ன பெரிய தியாக
விளக்குகளாதல்
மருகுதல் அவிதல் கருகுதல்
அவர்கள் அவற்றைக் கண்டு
கண்ணீர் மல்கினார்கள்
கைத்தட்டினார்கள்

தாய்மை, அத்தோடு
நளினங்கள் மட்டுமே சுருதி
சேரவில்லை
அவர்கள்
லிங்கங்களையும் எழுப்பினார்கள்
அதனுள் ஆகாயத்துக்கும் பூமிக்குமாக
ஆரவாரங்கள்
தேசத்துக்கும் நதிக்கும் மொழிக்குமாக
அடிமுடி தெரியாது

தாய்மை தாயை கண்காணிப்பது
பழைய விவகாரம்
தாயை மிஞ்சியது அது
கருப்பையைத் தாண்டியும்
இன்னும் இன்னுமென
அலைகிறது
பசித்த ஆவிபோல்
உணர்வுத் திரள்களுக்கே ராணி
போல்
அதன் கடமையுணர்வுக்கு முன்
வாயடைத்துப் போகிறோம்
நமக்குச் செய்ய எதுவுமில்லை
அதன்
பரிசுத்தத்திற்கு முன்

பின்அமைப்பியலின் அத்தனை அம்சங்களையும் தன்னுள் பாவியிருக்கும் கவிதை இது. ஆண்மையச் சிந்தனையின் வசதிக்காக ஏற்கப்பட்ட, தற்போதும் மறு உற்பத்தி செய்யப்படும் தாய்மை என்ற புனித? கருத்தியலை அதனுடைய நாலாவித ஸ்திதிகளையும் கலைத்துப்போடுகிறது. நீங்கள் சொல்வதெல்லாம் பொய் என்று தெரியாதா என்று சிரிக்கிறது கவிதை.

நவீனத் தமிழ்க்கவிதை அல்லது பெரும்பாலான நவீனக் கவிதை ஆண் பெண் என்ற இருமைகளுக்குள்ளேயே தங்களை வரித்துக் கொள்பவையாகத்தான் சென்ற தசாப்தம்வரை(தற்போதும்) இருந்திருக்கிறது. இந்தப் பால்நிலைகளின் எல்லையை
பெரும்பாலோனாவர்களால் கடக்கவும் முடிந்ததில்லை. பொதுச்சமூக அமைப்பிலிருந்து உருவான மன அமைப்பும் இதற்கொரு காரணம். ”பின்பால் உயிரி” போன்ற கவிதைகளில் பெருந்தேவி அவ்வெல்லைகளை தாண்டிச்செல்கிறார். பெருந்தேவியின் கவிதைகளுடைய முக்கியமான அம்சம் அவை பின் அமைப்பியல் நிலைகளில் நின்று தனது பின்புலத்தை உருவாக்குகின்றன. சம்பிரதாயமான கவிதைமுறைமைகள் காதலுணர்ச்சிகள் தனிமையுணர்ச்சிகள் அந்தியமாதலின் ஒரே மாதிரியான உணர்வுகள் என யாவற்றையும் கடந்துசெல்கின்றன .

நவம்பர்

சாத்தானின் ஆன்மா உறைந்து போய்விட்டது
வகுப்பறையிலிருந்து அலுவலகத்துக்கு நூறு அடிகள்
சாவின் போர்வை போல
வெள்ளை நிலத்தில்
சில தலைகள் நட்டுவைக்கப்பட்டிருக்கின்றன
கண்களாலேயே புத்தகங்களை அவை புரட்டுகின்றன
அடுத்த வாரம் செமஸ்டர் தேர்வுகள்
அவற்றுக்கும்
வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை
அவள் தன் குதிகால்களைக் கவனமாகப் பதித்து நடக்கிறாள்
சறுக்கிவிடாதபடிக்கு
அவளுக்கும் இந்த நிலத்துக்கும்
எந்தச் சம்பந்தமுமில்லை
துருவப் பனி வேக வேகமாக
ஓடி வருகிறது கடலுக்கு
யாரோ ஒருவர்
அவசர அவசரமாக ஸ்டாப் என்கிறார்
துருவப் பனிக்கும் கீழ்ப்படிதலுக்கும்
எந்தச் சம்பந்தமுமில்லை
அவள் ஜன்னல் வழியே பார்க்கிறாள்
பார்க்க ஒன்றுமில்லை
கடவுளின் அருட்கைகள்
ஆளில்லா ரயில்வே கேட்களில்
உயர்ந்து தாழப் பழகிக்கொள்கின்றன

இரண்டு காலங்களை பெருந்தேவியின் கவிதைகள் தாண்டி வந்திருக்கின்றன. இயந்திரமயமான நவீனகாலத்தையும் அதன் பிந்தைய நிலையான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மனிதவாழ்வில் ஏற்படுத்திய சாத்தியங்களும் குழப்பங்களுமான பின்நவீனத்துவ காலம்.

செமஸ்டர் தொடங்கப்போகிறது

போன செமஸ்டர்
என் வகுப்பு மாணவி
ஒரு வழக்கமான பிரச்சினையோடு வந்தாள்
தேர்வு நேரம்
காதலன் எஸ்.டி.டி. கொடுத்துவிட்டான்
கருவுற்றிருந்தாள்
அவன் பேசுவதை நிறுத்திவிட்டான்
பாடப்புத்தகங்களிலிருந்து பூதங்கள் தோன்றுகின்றன
இதற்கெல்லாம் என்ன அறிவுரை சொல்வது
பேராசிரியர்களின் பொறுப்புகளில் ஒன்று
மாணவர்களுக்கு அறிவுரை சொல்வது
தேர்வில் தோற்றுப்போனாள்
அவனுக்குச் சூனியம் வைக்கப்போகிறேன் என்றாள்
முதுகுப் பையில் வைத்திருந்த
ஒரு பொம்மையைக் காட்டினாள்
பிறகு கல்லூரியில் அவளைக் காணவில்லை
மாணவர்களுக்குப் பேராசிரியர்கள்
உதவுவதில்லை
காதலின்போது
எஸ்.டி.டி. கையேடுகள் உதவுவதில்லை
காதலின்போது
எதுவுமே உதவுவதில்லை

அதே சமயம் காலம் இறந்துபோகும் மொழிகளாலான கவிதைகளையும் எழுதியிருக்கிறார். இலை விழுந்துகொண்டிருக்கிறது, கீழே நிலமில்லை, விழுந்துகொண்டே இருக்கிறது என்ற கவிதையை எப்படித்தான் அர்த்தப்படுத்துவது? நிலமே இல்லாததில் எந்த மரம் வேர்பிடித்து நிற்கிறது. அதன் இலைகள் எந்தக் காற்றில் எது இல்லாதுபோனதால் விழுகின்றன. விழ நிலமே இல்லாதபோது ஏன் விழனும் முடிவே இல்லாது விழுவதன் சூட்சுமங்களை எந்த விதி தீர்மானிக்கிறது ?

எல்லோருடைய நாட்களும் ஒன்றல்ல

பார்த்திருப்போம்
அவமானத்திலிருந்து தொடங்கும் பலருடைய நாட்கள்
அவமானத்திலேயே முடிகின்றன
சந்தேகத்தின் முன்னால் தூக்கம் கலைந்து
அதன் முன்னால் தூங்கச் செல்பவர்கள் உண்டு
சூரிய உதயம் அஸ்தமனம் எல்லாம்
வெகு சிலருக்கானவை
பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு
மனதிலிருந்து கூப்பிட்டாலும்
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர
ஆட்கள் இருப்பவர்களுக்கு
வசதிகள் இருப்பவர்களுக்கு
குடும்பத்தில் நம்பிக்கை என்பது ஒரு வசதி
சூரியனின் காலை, மாலைக் காட்சிகளை
குடும்பமாகப்
பெரும்பாலும் தவறாமல் கண்டுவிடலாம்
மற்றபடி
சாட்டையை எப்படிச் சொடுக்கினாலும்
உன் குதிரை
அந்தியில் வந்து நிற்கப்போவதேயில்லை

விளையாட வந்த எந்திர பூதம் என்ற தொகுப்பில் “சரக்கொன்றையிடம் மன்னிப்பு”
என்ற கவிதை இருக்கிறது. ஒரு அசலான காதல் கவிதை.

சரக்கொன்றையிடம் மன்னிப்பு

வெகுநாள் கழித்து சிநேகிதி வந்திருந்தாள்
வாடிய முகம்
இருவர் தட்டிலும் சோற்றைப் பரிமாறிவிட்டு
அவளிடம் கேட்டேன்
நீ அவனைக் காதலிக்கிறாயா என்ன?
பல நூற்றாண்டுகளாக
பல உணவு வேளைகளில்
பல சிநேகிதிகள்
அச்சத்தோடு கேட்ட அதே கேள்வி

பிறகு அவளிடம் எடுத்துச் சொன்னேன்
அந்தக் காதலின் அரைக்கிறுக்குத்தனத்தை
சூனியக்கார வலையை
வானில் இல்லாத நட்சத்திரங்களா?
ஒருவனுக்குப் பின்னால் ஏன் ஒருத்தி
தன்மேல் தானே தீப்பந்தம் சுமந்து
நடந்து போக வேண்டும்?
ஒருவனுக்காக ஏன் ஒருத்தி
தன்னையே அரிந்து உப்பிட்டுத்
தின்னத் தரவேண்டும்?

ஒரு பெண்ணியவாதிக்கு இதெல்லாம் என்ன புரியும்?
ஒரு புத்தகப் புழுவோடு யார்தான்
சிநேகமாக இருப்பார்கள்?
வசந்தத்தின் முடிவில் பூக்குமே சரக்கொன்றைப் பூ
அதையாவது பார்த்திருக்கிறாயா நீ?
தட்டை விசிறிவிட்டு எழுந்து போனாள்

சரக்கொன்றை ஏன் பூக்கிறது?
வசந்தம் ஏன் முடிந்துபோகிறது?
வசந்தம் முடியும்போது பூக்கும்
இதுவரை பார்த்திராத
சரக்கொன்றையிடம்
எதற்கென்று நான்
மன்னிப்பு கேட்பது?

’காதல் தனக்கே உரிய அற்புதங்களோடும் அற்பத்தனங்களோடும் நடந்துகொள்கிறது. ஒருவருக்காக ஒருவர் ஏன் மறுதலிப்பவராகவும் மன்றாடுபவராகவும் இருக்கிறார்கள் ’ என்ற மானுட மனதின் முடிவின்மைகளில் நிகழ்கிறது இக்கவிதை. இந்தக் கவிதையை ஓரளவு சுமாரான கவிதைகள் எழுதும் ஒரு ஆண் கவிஞரிடம் சொன்னபோது அவ கிடக்கிறா பிட்ச் என்று வைதார். ஆண் மனதை அதிகம் புண்டுத்துபவை பெருந்தேவியின் கவிதைகள் என்பதால் அப்போது அவரைக் குறித்து பரிதாபமாகச் சிரித்தேன். மாணவர் என்ற முறையில் பெருந்தேவி கவிதையிலும் சரி, தன் காலத்தின் மொழியின் சகல மட்டங்களிலும் விழிப்புணர்வுடன் இருக்க கற்றுத் தந்திருக்கிறார் எனக்கு. இன்னொன்று வலிந்து உருவாக்கும் படிமச்சிக்கல்கள் பெருந்தேவியின் கவிதைகளில் கிடையாது. அவை தன்னியல்பான உருவகங்களுடன் வெளிச்சம் மிகுந்த காட்சிகளுடன் வாசகரிடம் பேசுகின்றன. ஒருமுறை பெருந்தேவி சொன்னார், “கவிதையில் படிமம் வரலாம். படிமம் மட்டும் கவிதையாகாது. மண்ணுறைந்த மரப்படிமங்களிலிருந்து எரிபொருட்கள் எழுந்தாலாெழிய அப்படிமங்களுக்கு எந்தப் பெருமதியும் இல்லை.”

பெருந்தேவியின் காலம் உலகக் கவிதைகளின் காலம். அவருடன் நிகராக ஒப்பிட தமிழில் ஆட்களில்லை. தமிழ் மனது என்ற ஒன்றின்பால் நமக்கொரு விழிப்புணர்வு வேண்டும் என்று தோன்றுகிறது. அது வீணான கற்பிதங்களாலும் பிரயோஜனமற்ற வரலாற்றுப் பெருமிதங்களாலும் தமிழ் தமிழ் என குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் தன்மையுடையது. தமிழரிடம் சில உண்டு. அதற்கப்பால் அதற்கு எந்த பெரிய பங்கும் கிடையாது. செர்ரிப் பூக்கள் கவிதையின் அர்த்தத்தை இப்படித்தான் அர்த்தப்படுத்துகிறேன்.


ஒருமுறை உம்பர்த்தோ ஈகோ எழுதிய ஒருவிசயத்தை பெருந்தேவி பகிர்ந்துகொண்டார். குக்கர் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தது பற்றி எழுதியிருப்பார். குக்கரில் சட்டிப்பானையில் சோறு ஆக்குவதுபோல இல்லை. முழுக்க உலர்ந்த பதமான சோறு மட்டுமே இருக்கும். சட்டிப்பானையில் வைத்தால் வடிக்கனும். சோற்று நீரின் பிசுபிசுப்பு படியும். உம்பர்த்தோ ஈகோ மனிதர்கள் தொடுவுணர்ச்சியிலிருந்து வெறுமனே காண்பர்களாக உயிரின் எந்தக் கசகசப்பும் அற்றவர்களாக மாறியிருப்பதாக அதை குறிப்பிட்டிருப்பார். ஒரு மாறும் காலக்கட்டத்தின் அவதானிப்பு அது. இனி நாம் காண்பவராக மட்டுமே இருப்போம். பங்கேற்பவராக அல்ல .

பெருந்தேவி கவிதைகளைப்பற்றி நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார் .
இன்னொன்று தன்னை பெண் கவிஞர் என்றுமட்டும் அடையாளப்படுத்திச் சொல்வதை மறுப்பவர் பெருந்தேவி. கவிஞர் என்றால் கவிஞர்தான் ஏன் கவிதையில் மோனோபஸை தேடுகிறீர்கள் என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

நேர்

கவிதையெனப்படுவது
யாதெனில்
உன் கண்ணை நேருக்கு நேர் பார்க்க வேண்டும்
தவிர்த்துப்
பார்வையைத்
திருப்பிக்கொண்டால்
உன் தாடையை உடைத்து
முகத்தை தன் பக்கம்
திருப்பிவிடுமோ என
அச்சம் தரும் வகையில்
வலிமையாக
அந்த வலிமை
அதன் நேர் மட்டுமே .

இளம் கவிஞர்களுக்கு

ஊரில் மிச்ச மீதி மரம் இருந்தால்
அதில் உங்களைக் கட்டிவைத்து அடித்தால்கூட
உறுதியாக நிற்கவேண்டும்.
‘கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதுவோம்.
வெற்றுத்தாளை மேம்படுத்தினால் போதும்
என்கிறான் மகாகவி பர்ரா’
இந்நாள் வரை
கவிதையை கவிதையைவிட
தைரியமே காப்பாற்றியிருக்கிறது
வரலாற்றில்
கடக்க ஒரு மரப் பாலமும்
பேச சில மண்டையோடுகளும் இருந்தால்
போதாதா?…

வெற்றுத்தாள்களில் எழுத இன்னும் எவ்வளவோ இருக்கின்றன என்கிறார் பெருந்தேவி. அதை விடாது எழுதுவதன் வாயிலாக காலத்தின் எல்லா வண்ணங்களையும்
கவிதைகளாக்குகிறார். பெருந்தேவியின் காலம் வளரும் காலம்.

சதீஷ்குமார் சீனிவாசன்

பின் குறிப்பு :

கவிதைகள் குறித்து எழுதும்போது குறிப்பிட்ட எல்லைக்குமேல் அவைகளின் இருப்பிடங்களை துல்லியமாக நிறுவுவதில் நிறைய போதாமைகள் எனக்கு வந்துவிடுகின்றன. குளுமையை அல்லது தணலை சுட்ட முடிய மட்டுமே முடிகிறது. அதை உணர்த்துவது இயலாததாகவே இருக்கிறது. அவரவர் தன் அனுபவ நிலங்களில் உணர்ந்தாலொழிய வேறு கவிதையறிய வேறு வழிகளில்லை என்று தோன்றுகிறது. இது கவிஞர் பெருந்தேவி பற்றிய திறனாய்வு அல்ல மதிப்புரை என்று சொல்லலாம். என் எளிய மனதால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொல்லியிருக்கிறேன். கையிலிருக்கும் சில தொகுப்புகளிலிருந்தே இக்கவிதைகளை சுட்டியிருக்கிறேன். மீதமெல்லாம் ஞாபகத்திலிருந்து.

பெருந்தேவி பெரும்பாலும் ஏமாற்றாத ஒரு கவிஞர். திறந்து மனதுடன் செல்கையில் ஏராளமான ஊடுவழிகளையும், நுட்பமான நிலைகளையும், தன்னாலும் பிறராலும் கைவிடப்படும் உயிர்களின் – மனங்களின் அவஸ்தைகளையும் நாம் உணரலாம். மேலும்… கவிதை என்பது என்ன ? அது மொழியின் உச்சத்தில் எழுவது. மொழி என்பது உலகு குறித்த எல்லாமும். பெருந்தேவியின் அபுனைவுகள் படித்ததில்லை என்பதால் படித்தபிறகு அதுபற்றி இன்னொரு சமயத்தில் எழுதுகிறேன். தமிழில் ஆவிகள் எழுதவந்தது. சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. ஸ்ரீவள்ளி என்று பெயர். முழுத்தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. அந்த ஸ்ரீவள்ளி என்ற ஆவி பெருந்தேவியின் உற்ற நண்பர் என்பது சிலருக்குத்தான் தெரியும். அந்த ஆவியின் எடிட்டர் பெருந்தேவிதான்.

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *