எலிசபெத் ஆன்ஸ்கம் – சைதன்யா

எலிசபெத் ஆன்ஸ்கம்

பொ.யு. 1956ல் அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமனுக்கு (Harry S. Truman) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கௌரவ பட்டம் அளித்த போது அதனை எதிர்த்து non placet (உவப்பானதல்ல) கையொப்பம் இட்டவர்கள் மூன்றே மூன்று தத்துவ அறிஞர்கள்; கெர்ட்ருட் எலிஸபெத் ஆன்ஸ்கம் (Gertrude Elizabeth Anscombe), ஃபிலிப்பா ஃபுட் (Phillipa Foot), ஐரிஸ் மர்டாக் (Iris Murdoch). மூவருமே 20ஆம் நூற்றாண்டின் பிற்பாதியை வரையறுக்கும் முக்கியமான தத்துவ கோட்பாடுகளை உருவாக்கியவர்கள். மேலும் அற விழுமியங்கள் (virtue ethics) என்ற ஒரு புது கோட்பாட்டை துவக்கி வைத்தவர்கள் எனலாம்.

ஆகஸ்ட் 06, 1945 அன்று ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்க ராணுவம் அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்திய பதினாறு மணி நேரங்களுக்கு பிறகு ட்ரூமன் தொலைக்காட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“இது பிரபஞ்சத்தின் அடிப்படை ஆற்றலை பயன்படுத்தி இயங்குவது. சூரிய ஆற்றலின் ஊற்றுமுகம் இப்போது தூரக் கிழக்கில் போர் துவக்கி வைத்தவர்களின் மீது அவிழ்க்கப்பட்டுள்ளது…

ஜப்பானியர்கள் நிலத்திற்கு மேல் வைத்திருக்கும் அனைத்து உற்பத்தி நிறுவனங்களையும் கனநொடியில் முழுமையாக அழிக்க நாங்கள் இப்போது தயாராக உள்ளோம். அவர்களின் கப்பல் துறைகள், தொழிற்சாலைகள், தகவல் தொடர்புகளை அழிப்போம். இனி எப்போதும் போர் புரியும் ஆற்றலை ஜப்பான் எட்டப் போவதில்லை. இந்த விஷயத்தில் எந்த சந்தேகமும் வேண்டாம்.”

-ஹிரோஷிமாவில் அணுகுண்டைப் பயன்படுத்தியதை அறிவித்த ஜனாதிபதியின் அறிக்கை

ஜூலையில் நிகழ்ந்த பாட்ஸ்டம் அறிக்கையில் (Potsdam Declaration) அனைத்து ஜப்பானிய ஆயுதப் படைகளும் நிபந்தனையின்றி சரணடைவதாக ஜப்பான் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியிருந்தது. அணுஆயுத தாக்குதல் பற்றிய தகவலோ எச்சரிக்கையோ அப்போது வெளியிடப்படவில்லை. ஜப்பான் அரசு அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. ஹிரோஷிமாவை தொடர்ந்து நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிவை தொடர்ந்து இங்கிலாந்தில் ஆண்கள் பெரும்பாலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பட்டபடிப்புகளில் ஈடுபட்டனர். அதே சமயம் பெண்கள் பெருமளவில் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல துவங்கினர். இதனால் தத்துவம், கலை, அரசியல் கோட்பாடு போன்ற துறைகளில் பெண்களின் எண்ணிக்கை சரிசமமாக இருந்தது. பெண் சிந்தனையாளர்கள் பலர் உருவாயினர். மேடை அரங்குகளிலும் வானொலியிலும் தத்துவ உரைகளை ஆற்றினர். Oxbridge-ல் தத்துவம், அறக்கோட்பாடு, இலக்கியம் பற்றிய வகுப்புகளை எடுத்தனர். நூல்கள், ஆய்வு கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டனர். 

இதில் எலிசபெத் ஆன்ஸ்கம் இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான தத்துவவாதிகளில் குறிப்பிடத்தக்கவர். அவரது ‘நவீன அறக்கோட்பாடு’ (Modern Moral Philosophy) கட்டுரையும், ‘உள்நோக்கம்’ (Intention) புத்தகமும் பின்னாளில் வலுவான தரப்பாக உருவாகி வந்த ‘அறவிழுமியம்’ (Virtue Ethics) என்னும் கோட்பாட்டின் துவக்கப்புள்ளிகளாக கூறலாம். இவர் அயர்லாந்தில் பிறந்து பின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றும், கற்பித்தும் வாழ்ந்தார். கத்தோலிக்க மதத்தை தழுவி தன் வாழ்நாள் முழுவதும் அதன் மீது மிக தீவிரமான நம்பிக்கையை கொண்டிருந்தார். 

Ludwig Wittgenstein

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் புகழ்மிக்க தத்துவ மேதையாக அறியப்பட்டிருந்த விட்ஜன்ஸ்டைனின் (Ludwig Wittgenstein) உரைகளை கேட்பதற்கென்றே ஆன்ஸ்கம் கேம்பிரிட்ஜில் மூன்று வருடங்கள் தத்துவ ஆய்வு மேற்கொண்டார். விட்ஜன்ஸ்டைனின் Tractatus Logico – Philosophicus என்னும் நூல் ஒரு பெரும் அலையை அப்போது உருவாக்கியிருந்தது. ட்ராக்டாடஸில் picture theory என்னும் மொழியியல் கோட்பாட்டை விட்ஜன்ஸ்டைன் முன்வைத்தார்.

ஒரு சொல்லுக்கு அதற்கு சமானமான பருப்பொருள் (object) ஒன்று வெளியில் இருக்க வேண்டும். ஒரு சொற்றொடரில் சொற்களுக்கு இடையே உள்ள இணைப்புகள் பருப்பொருட்களின் தர்க்கரீதியான இணைப்புகளை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். “மேசையின் மீது ஒரு பூனை அமர்ந்துள்ளது” சொற்றொடரில் “ஓன்று”, “மேசை”, “பூனை”, “அமர்தல்”, “மீது” ஆகிய சொற்களும் அவற்றின் இணைப்புகளை குறிக்கும் யதார்த்தமும் புற வெளிப்பாடுகளாக அங்கு இருந்தால் ஒழிய அது அர்த்தமற்றதாகிவிடுகிறது. அவ்வாறு அனுபவரீதியாகவோ தர்க்கரீதியாகவோ உறுதிப்படுத்தவியலாத ஒரு சொற்றொடர் (Proposition) உண்மையானதில்லை. அதை விவாதிக்கவேண்டியதுமில்லை என்பதே ஆரம்பகட்டத்தில் விட்ஜன்ஸ்டைனின் தத்துவ கொள்கையாக இருந்தது.

“எங்கெல்லாம் ஒருவருக்கு மொழி கைகொடுக்காதோ, அங்கெல்லாம் ஒருவர் அமைதி காக்க வேண்டும்”
(Whereof one cannot speak, thereof one must remain silent)

-ட்ராக்டாடஸ்

தத்துவ சிக்கல்கள் பலவும் பொதுவாக மொழியின் சாத்தியங்களை நாம் மீறுவதனால் ஏற்படும் குழப்பங்கள் என இதை தொடர்ந்து எழுந்த சிந்தனைகள் மதிப்பிட்டன. வெறும் மொழியியல் விவாதங்களாக தத்துவம் எஞ்சியது. மேலும் ஆரம்பகால விட்ஜன்ஸ்டைன் அறிவியல் உண்மைகள் மற்றும் புலன் அனுபவம் சார்ந்த உண்மைகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்திருந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அன்றைய சூழலை பற்றி பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் “ஆக்ஸ்போர்டு தத்துவம் மிகவும் பண்பட்டது. எந்த ஒரு விஷயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்வதுமில்லை ஆராய்வதுமில்லை” எனக் கூறுகின்றார். மொழியியல் தத்துவவாதிகள் பல்கலைக்கழகங்களை நிறைந்திருந்த காலம் அது.

கேம்பிரிட்ஜில் விட்ஜன்ஸ்டைனிடம் தத்துவம் பயின்ற காலகட்டம் ஆன்ஸ்கமின் வாழ்வில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. அவர் விட்ஜன்ஸ்டைனின் ஆளுமையால் முழுமையாக ஈர்க்கப்பட்டார். அவரது அனைத்து வகுப்புகளிலும் போய் அமர்ந்து விரைவிலேயே விட்ஜன்ஸ்டைனின் விருப்பத்துக்குரிய மாணவியானார். இறுதி நாட்களில் விட்ஜன்ஸ்டைன் அவரது புத்தகங்களை மொழிபெயர்க்கும் பொறுப்பை ஆன்ஸ்கமிடம் ஒப்படைத்தார். விட்ஜன்ஸ்டைனின் ’Philosophical Investigations’ நூலிற்கான ஆன்ஸ்கமின் ஆங்கில மொழிபெயர்ப்பே அனைவராலும் இன்று வரை சிறந்தாக கருதப்படுகிறது. 

இயல்பாகவே ஆரம்பகட்டத்தில் ஆன்ஸ்கமின் சிந்தனைகளில் விட்ஜன்ஸ்டைனின் தாக்கம் பெருமளவில் இருந்தது. தன் சிந்தனைகள் அனைத்துமே விட்ஜன்ஸ்டைனால் விதைக்கப்பட்டதாகவே ஆன்ஸ்கம் கடைசிவரை உணர்ந்தார். ஆனால் அவரது தத்துவ கோட்பாட்டின் தனித்தன்மையை intention என்னும் நூல் 20ஆம் நூற்றாண்டு தத்துவத்தில் குறிப்பாக அறக்கோட்பாடு சார்ந்த தத்துவத்தில் உருவாக்கிய அலையை வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஆன்ஸ்கம் தத்துவச் சிந்தனை மீது அவரை சுற்றி இருந்த அனைவரும் வியக்கும் அளவிற்கு ஆழ்ந்த பற்று கொண்டிருந்தார். ஆனால் விட்ஜன்ஸ்டைனின் quietism (“எங்கெல்லாம் ஒருவருக்கு மொழி கைகொடுக்காதோ, அங்கெல்லாம் ஒருவர் அமைதி காக்க வேண்டும்”) எனும் கருதுகோளின் காரணமாகவோ, அல்லது அவரை மிஞ்சி ஒரு சிந்தனையை தன்னால் சென்றடைய முடியாது என்ற தன்னுணர்வாலோ ஆன்ஸ்கம் பொ.யு. 1956 வரை பெரிதாக எதுவுமே எழுதவில்லை. அதே சமயம் அவரது தோழியும் தத்துவ அறிஞருமான ஐரிஸ் மர்டாக் தத்துவ நூல்கள், நாவல்கள் என எழுதித்தள்ளி கொண்டிருந்த காலகட்டம் அது.

ஆன்ஸ்கம் குடும்பத்துடன்

ஆன்ஸ்கமின் வீட்டில் அவரும், அவர் கணவரும் ஏழு குழந்தைகளும். பல தருணங்களில் ஆன்ஸ்கம் அவரது மாணவர்களுக்கு வீட்டிலேயே பாடங்களை கற்பித்தார். குழந்தைகள் மடியில் ஏறி விளையாடி கொண்டிருக்க ஆழ்ந்த தத்துவ விவாதங்களிலும், வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆன்ஸ்கமின் கணவரும் ஆக்ஸ்போர்டு பேராசிரியர் என்பதால் வருமானம் மிக குறைவாகவே இருந்தது. ஆனால் ஆன்ஸ்கம் வாழ்க்கையில் தத்துவ கேள்விகளை விட பெரிய இடம் வேறெதற்கும் இருக்கவில்லை.

ஆன்ஸ்கம் தன் கத்தோலிக்க மத நம்பிக்கையையும் தத்துவத்தையும் தனித்தனியாக பிரித்து வைத்துக் கொண்டார். விட்ஜன்ஸ்டைனிற்கு அவரது ஆன்மீக உலகத்தில் எந்த இடமும் இருக்கவில்லை. அவ்வுலகில் விட்ஜன்ஸ்டைனின் சிந்தனைகள் “நஞ்சை போன்றவை” என்றார். ஆனால் இப்படி தர்க்கத்தை மிஞ்சி உள்ளுணர்வால் சென்றடையும் இடங்களில் தத்துவம் எதையும் பேசமுடியாது என்பதே விட்ஜன்ஸ்டைனின் தத்துவத்தின் ஒரு தொடர்ச்சி என்று கூறலாம்.    

ஆன்ஸ்கம் அவரது மத நம்பிக்கையால் பல வலதுசாரி கொள்கைகளை கொண்டிருந்தார். கருத்தடை, கருக்கலைப்பு போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் வகுப்புகளுக்கு தனக்கு சவுகரியமான உடையை அணிந்து செல்வது, தனது கருத்தை எந்த இடத்திலும் ஆணித்தரமாக (சில தருணங்களில் தகாத வார்த்தைகள் கலந்துகூட) முன்வைப்பது என தான்தோன்றித்தனமாகவும் தனி வாழ்க்கையில் அவர் இருந்திருக்கிறார்.

ஆன்ஸ்கமின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை 1956ல் ட்ரூமனிற்கு கெளரவ பட்டம் அளிக்கப்பட்ட தருணம். அது ஏற்படுத்திய அறக்கொந்தளிப்பு அதுவரையில் அவருக்கு தன்னை வெளிப்படுத்துவதில் இருந்த சுய விமர்சனங்களையும் மனத் தடைகளையும் கடக்க வைத்தது. உடனடியாக ஒரு துண்டுப்பிரசுரத்தை எழுதி வெளியிட்டார்.

Harry Truman

“Mr. Truman’s Degree” என்ற தலைப்பில் அவர் எழுதிய பத்து பக்க துண்டுப்பிரசுரம் அணுஆயுத தாக்குதலை ஆதரித்து அமெரிக்கா அன்று உருவாக்கியிருந்த அனைத்து வாதங்களையும் தகர்த்தது. அதில் அமெரிக்க அரசின் “நிபந்தனைகள் அற்ற சரணடைதல்” என்னும் கோரிக்கையே அவர்கள் இழைத்த மிகப்பெரிய தீங்கு என்கிறார். அப்படி ஒரு தெளிவற்ற புகைமூட்டமான மொழியில் எழுதப்பட்ட அறிக்கையை எந்த அரசாங்கமும் உடனே ஏற்றுக்கொள்ளாது. இது தெரிந்தே செய்யப்பட்டது என்று கூறுகிறார் ஆன்ஸ்கம்.

இரண்டாம் உலகப்போரின் உச்சத்தில் பெருநகரங்களை குறிவைத்து கண்மூடித்தனமான குண்டுவீச்சு (carpet bombing) இரு தரப்பினராலும் கையாளப்பட்டது. அது தாக்கப்படும் நாட்டின் பொருளாதாரத்தை அழித்து, அவர்களின் போர் புரியும் ஆற்றலை கட்டுப்படுத்தும் என்பது அதற்கான காரணமாக கூறப்பட்டது. இது எந்த வகையிலும் அறம் அல்ல என்பதை நிறுவுகிறார் ஆன்ஸ்கம். ஒரு நாட்டின் ‘பொருளாதாரம்’ என்று தனியாக அங்கொன்றில்லை. இச்செயல் ஆயுதம் ஏந்தாத சாமானிய மக்களை பெருமளவில் அழிப்பது மட்டுமே என்கிறார். 

ஹாரி ட்ரூமன் செய்தது உண்மையில் போர் அல்ல கூட்டப்படுகொலை என்று கூறுகிறார். அச்செயலின் உள்நோக்கம் (intention) என்பதே அதிகபட்ச ஜப்பானியர்களை கொல்வது தான். ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அத்துமீறி சென்று சாமானிய மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டிருந்தால் கூட அது இவ்வளவு பெரிய அறமீறலாக இருந்திருக்காது என்கிறார்.

அமைதிவாதம் (Pacifism) என்னும் கொள்கையை எதிர்த்து இக்கட்டுரையில் சில வாதங்களை முன்வைக்கிறார் ஆன்ஸ்கம். மக்கள் அமைதிவாதம் என்ற ஒரு உயர் விழுமியத்தை கையில் எடுத்துக் கொண்டு ‘எப்படியும் அதை நம்மால் எட்டவே முடியாது, ஆகையால் போரில் எல்லாம் அனுமதிக்கப்படலாம்’ என்னும் இடத்தை வந்தடைகிறார்கள். இந்த இரண்டு உச்ச நிலைகள் மட்டுமே சாத்தியம் தார்மீக எல்லைகள் கொண்ட போரே சாத்தியமில்லை என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள் என்கிறார். எந்த ஒரு போரிலும் அனுமதிக்கப்பட்ட கொலைகள் அனுமதிக்கப்படாத கொலைகள் என்று இருந்தாக வேண்டும். உதாரணமாக, போர்க் கைதிகளோ சாமானியர்களோ கொல்லப்பட கூடாது என்று ஒரு கடக்கமுடியாத எல்லை எப்போதும் வேண்டும் என்று கூறுகிறார் ஆன்ஸ்கம்.

இக்கட்டுரை ஒரு சில எதிர்வினைகளை தவிர எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆன்ஸ்கமின் ஆக்ஸ்போர்டு நண்பர்கள் இட்ட கையொப்பங்களும் எந்த சலனத்தையும் உருவாக்கவில்லை. இதை தொடர்ந்து அவர் எழுதிய நவீன அறக்கோட்பாடு (Modern Moral Philosophy), உள்நோக்கம் (Intention) இரண்டுமே இதனை தத்துவ சிக்கலாக மட்டுமே அணுகி ஆராயும் நூல்கள்.

ஆன்ஸ்கம் நவீன அறக்கோட்பாடு என்ற கட்டுரையில் “இன்றிருக்கும் சூழலில் நாம் உளவியல் தத்துவத்தில் பெரிய தாவல்களை நிகழ்த்தாமல் நெறிமுறை தத்துவம் (moral philosophy) ‘இயற்றுவதால்’ எந்த பயனும் இல்லை” எனக் கூறி ஆரம்பிக்கிறார்.

‘இது இப்படி இருக்கிறது’ (is) என்ற காரணத்தினால் ‘இது இப்படித்தான் இருக்க வேண்டும்’ (ought) என ஒரு தாவலை நிகழ்த்துவதன் மூலமாக தான் இங்குள்ள அனைத்து அறக்கோட்பாடுகளும் நெறிமுறைகளும் உருவாகின்றன என்று தத்துவவாதி ஹ்யூம் கூறுகிறார். (Is-ought fallacy). ஆனால் உண்மையில் “Is” என்பதற்கும் “ought” என்பதற்கும் இடையில் எந்த வித காரணகாரிய இணைப்பும் இல்லை என்கிறார். ஆன்ஸ்கம் அதை விட்ஜன்ஸ்டைனிய முறையில் “ought” (செய்ய கடன்படுதல்) என்னும் சொல் யதார்த்தத்தில் என்னவாக இருக்கிறது என்று தன் கட்டுரையில் ஆராய்கிறார். உண்மையில் அது கடந்தகால சமூகத்தின் எச்சம் என்கிறார். ‘இப்படி செய்யக் கடவாய்’ (ought to) எனக் கூறும் அதிகாரம் கடவுளுக்கு அப்போது கொடுக்கப்பட்டிருந்தது. கடவுள் இல்லாத சமுதாயத்தில் அந்த சொல் அர்த்தமற்றதாகிறது. ஆகவே அதை களைந்துவிட்டு அதற்கு பதிலாக அனைத்தும் உயிர்களும் ஒன்றோடொன்று இணைந்து செழிப்பதற்கு என்ன செயல்கள் ‘தேவை’ (needs to flourish) என்ற பார்வையை முன்வைக்கிறார். ஆன்ஸ்கமின் இக்கருத்தில் அவரை மீறிய ஒரு வித மீபொருண்மைவாத (metaphysical) தன்மை வெளிப்படுகிறது. பின்னால் உருவாகிவந்த ‘அறம் சார்ந்த விழுமியங்கள்’ எனும் கோட்பாட்டின் துவக்கத்தை இங்கு காணலாம்.

வானொலிப் பேட்டி ஒன்றில் “ஆக்ஸ்போர்டு தத்துவம் இளைஞர்களை கெடுக்கிறதா?” என்ற கேள்விக்கு ஆன்ஸ்கம் “கண்டிப்பாக இல்லை. கெடுப்பதற்கென்று ஒரு அற உணர்வோ நெறியோ எந்த இங்கிலாந்து இளைஞனுக்கும் இல்லை” என்று கூறினார். இதற்கு காரணமாக அவர் அப்போது சமூகத்தில் பரவலாக இருந்த ‘விளைவுவாத’ அறக்கோட்பாட்டைக் கண்டார். 

‘விளைவுவாதம்’ (consequentialism) என்று ஆன்ஸ்கம் கூறுவது ‘ஒரு செயல் நல்லதா கெட்டதா என்பது அதன் விளைவுகள் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்தே பெரும்பாலும் அமையும்’ என்னும் கருதுகோள். இதை எதிர்த்து அவர் தனது உள்நோக்கம் (intention) என்னும் நூலில் விரிவாக விவாதிக்கிறார். விளைவு மட்டுமே முக்கியம் எனும்போது எந்த ஒரு செயலுக்கும் தன்னளவில் நல்லது தீயது என்ற பாகுபாடே சாத்தியமில்லாமல் ஆகிறது. உதாரணமாக ஆரோக்கியமான மனிதன் ஒருவன் ஒரு மருத்துவமனைக்குள் நுழைகிறான். அவனது உறுப்புகளை கொண்டு ஆறு நோயுற்ற மனிதர்களை காப்பாற்ற முடியும் என்றால் விளைவுவாத கொள்கையின் படி அவனை கொன்று அவன் உறுப்புகளை எடுப்பது தீயசெயல் அல்ல என்பது மட்டுமல்லாமல் அது செய்ய வேண்டிய ஒன்று என்று ஆகிவிடுகிறது. அதிகமான எண்ணிக்கையில் மக்கள் அப்போது தான் பயன்பெறுகிறார்கள். அதற்காக ஒரு மனிதனை பலியிடுதல் தவறல்ல. ஆனால் அந்த செயல் கொலை என்றும் அது எந்த வகையிலும் அறமல்ல என்பதையும் உணராமல் யாராலும் இருக்கமுடியாது.

மேலும் “intention” என்னும் ஒரு சொல்லை அவர் வெவ்வேறு தளங்களில் விளக்குகிறார். ஒரு செயலை செய்யத் தூண்டும் காரணம் என்றும் அதன் இலக்காக அமையும் குறிக்கோள் என்றும் பல விதங்களில் பார்க்கலாம். இந்த கருதுகோளை எடுத்துக்கொண்டு ஆன்ஸ்கம் இருவழி விளைவியக்க கோட்பாடு (the doctrine of double effect) என ஒன்றை முன்வைக்கிறார். ஒரு செயலை செய்யத்தூண்டிய காரணம்/குறிக்கோள் மற்றும் அந்த செயல் உருவாக்கிய விளைவுகள்- இவை இரண்டையும் எடைபோட்டு ஒரு முடிவுக்கு வருவது என்பது இக்கோட்பாட்டின் சாரம். ஆனால் தர்க்கரீதியாக இதில் இருக்கும் மொழியியல் சிக்கலை அடுத்ததாகக் கூறுகிறார். அதாவது “ஒரு” செயல் என்று எந்த அலகை கொண்டு பிரிப்பது. இந்த நூலில் ஆன்ஸ்கம் அணுஆயுத தாக்குதலை பற்றி குறிப்பிடவில்லை என்றாலும் நாம் அதை இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அமெரிக்கா ஜப்பான் மீது நிகழ்த்திய அணுஆயுத தாக்குதலை எத்தனை தனித்தனி செயல்களாக பிரிக்க முடியும்? “அணு” என்னும் இயற்பியல் கருதுகோளின் கண்டுபிடிப்பிலிருந்து ஆகஸ்ட் 6, 1945 அன்று ஹிரோஷிமா மேல் விமானத்தை ஓட்டிச் சென்று அணுகுண்டு வீசும் அச்செயலியை இயக்கியது வரை எண்ணற்ற செயல் துண்டுகளாக பிரித்துக்கொண்டே செல்ல முடியும். அப்படியென்றால் எந்த குறிப்பிட்ட செயல் அற மீறலை நிகழ்த்தியது என்ற கேள்வி எஞ்சி நிற்கிறது. 

தர்க்கரீதியாக இதற்கு ஒரு விடையை அளிக்கமுடியாது. இது உள்ளுணர்வால் சென்றடையக் கூடிய இடம். ஆகவேதான் இதற்குப் பின் வளர்த்து எடுக்கப்பட்ட virtue ethics-ல் அரிஸ்டாட்டில் (Aristotle) மற்றும் புனித தாமஸ் அக்வினாஸின் (St. Thomas Aquinas) போன்றவர்களின் மீபொருண்மைவாத சிந்தனைகளின் தாக்கதைக் காணமுடிகிறது.

ஆன்ஸ்கம் தன் புத்தகத்தில் இந்த இடைவெளியை உளவியல் தத்துவம் நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். மீபொருண்மைவாதம் நோக்கி அவர் அதில் செல்லவில்லை. ஆனால் Mr. Truman’s Degree என்னும் துண்டுப் பிரசுரத்தில் அமெரிக்கா இழைத்த அநீதிகளில் மிக பெரியது நிபந்தனைகளற்ற சரணடைவை (unconditional surrender) கோரியது தான் என்று அவர் கூறும் இடம் அவர் உள்ளுணர்வால் சென்றடைந்தது.

1965ல் பதிவு செய்யப்பட்ட நேர்காணல் ஒன்றில் “நீங்கள் செய்தது தவறென்று உணர்கிறீர்களா?” என்ற கேள்விக்கு அணுப்பிளப்பை நிகழ்த்திய அறிவியலறிஞரான ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் (Robert Oppenheimer) அமெரிக்கா அதுவரையில் உருவாக்கி வைத்திருந்த அனைத்து நியாயங்களையும் கூறி பின் “நான் அதை நியாயப்படுத்தவில்லை” என்கிறார். ஓரிரு கணங்களுக்கு பிறகு அவர் “ஆனால் எங்களிடம் இருந்த அந்த அகங்காரம் ஒரு பிழை” (sin of pride) என்று கூறுகிறார்.

சைதன்யா

“பிரபஞ்சத்தின் அடிப்படை ஆற்றல்” கையில் உள்ளது என்னும் கர்வம் ஒரு வேளை அந்த தாக்குதலில் பங்காற்றிய அனைவரும் ஏதோ தருணத்தில் உணர்ந்திருக்கலாம். ஒப்பேன்ஹெய்மர், பிற ஆய்வாளர்கள், அமெரிக்க படைத்தளபதிகள், வீரர்கள் முதல் அதிபர் ட்ரூமன் வரை அனைவரும். “நிபந்தனைகளற்ற சரணடைவு” என்னும் கோரிக்கையின் பின்னால் இருப்பது அந்த கர்வம் என்பதை ஆன்ஸ்கம் அறிந்திருந்தார். அந்த பிழையை தர்க்க ரீதியாக வந்தடைய முடிவதில்லை. ஏனென்றால் எங்கெல்லாம் தத்துவம் ஒன்றும் சொல்வதற்கில்லை என்று உணர்கிறதோ அங்கெல்லாம் அது அமைதி காக்கிறது.

*

சைதன்யா – தமிழ்விக்கி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *