பெண் புரட்சி என்னும் காலவெடி – பார்கவி

(ஜீலானி பானோவின்கவிதாலயம்’ நாவலை முன்வைத்து பார்கவி)

ஜீலானி பானோ

இப்பொழுது நான் இருக்க
என்னுடன் ஆசை நகரம் ஒன்றின்
அழியாத் துயரமும் இருக்கிறது

-மிர்சா காலிப்

‘ஐவன்-ஏ-கஜல்’ (1973) என்ற தலைப்பில் ஜீலானி பானோ எழுதிய உருது நாவலின் தமிழாக்கம் (மொழிபெயர்ப்பாளர் – முக்தார்) ‘கவிதாலயம்’. உத்தரபிரதேசத்தின் பதாயூனில் பிறந்து ஹைதராபாத்திற்கு குடிபுகுந்த பானோவின் முதல் நாவலும் கூட. பரவலாக அறியப்பட்டதும் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதுமான இந்நாவல் நிஜாம் ஆட்சியிலிருந்து இந்திய ஆட்சிக்குக் கைமாறிய ஹைதராபாதில் அமைக்கப்பட்டுள்ளது.  காலசந்தியில் அமையும் கதைகளில் காணப்படும் பெருமாற்றமே கவிதாலயம் நாவலின் பேசுபொருள் எனலாம்.

நிலப்பிரபுத்துவம் மறைந்து மக்களாட்சி தோன்றுவதற்கு ஏதுவாக வெடிக்கும் புரட்சியில் சிதைவன நிலப்பிரபுவான வாஹித் ஹுசைனின் மாளிகையான கவிதாலயமும் அஹ்மத் ஹுசைனின் மாளிகையான அலிப் லைலாவும். பல கவிதை அமர்வுகள் நிகழ்ந்திருக்குமிடம் என்பதால் அம்மாளிகைக்கு கவிதாலயம் என்ற பெயர். புறக் காரணிகள் பொருளாதார விழ்ச்சியை நோக்கி அழைத்துச் சென்றாலும் கதைமாந்தர்களை அழிப்பது அவர்களுடைய விழுமிய வீழ்ச்சியே.

வாஹித், ரஷித், ஹுமாயுன், ஷாஹின், ரஜியா, பதூல், பீபீ, கவ்ஹார் என்று கவிதலயத்தின் குடும்பப் பட்டியல் நீள்கிறது. தன்னை காலிப்பை ஒத்த பெருங்கவிஞனாக கற்பனை செய்து கொள்ளும் வீட்டுப் பெரியவரான வாஹித் தன் சொந்த பணிக்காக ரயிலை ஒரு மணி தாமதமாக கிளம்பச்செய்யும் அளவுக்கு செல்வாக்குடையவர். பிரியாணி சரி இல்லை என்பதற்காக சமையல்காரனை ரயிலிலிருந்து கீழிறக்கி ஹைதரபாத் வரை நடந்தே வரச் சொல்கிறார். பெரும்பகட்டும் பரம்பரை செல்வமும் அமைந்த நிலச்சுவான்தார் சமூகத்தின்  எச்சங்கள் இவர்கள். அடுத்த தலைமுறையினரான ரஷித், ஹுமாயுன் போன்றவர்கள் இந்த ஆடம்பரத்தை தக்கவைத்துக்கொள்ள இன்னும் கீழ் இறங்குபவர்கலாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர்.

ரஷித்-இன் மனைவி ரஜியா, அவர் தங்கை பதூல், அம்மா பீபீ ஆகியவர்க்கு சூழ்நிலையின் சுழற்சியில் சிக்கிய பெண்கள் என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். உயர்குடியில் பிறந்து உயர்குடியில் மணந்த ரஜியா தன் மகள் பவுசியாவிற்காக வீட்டில் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறாள். விதி வசத்தால் வாஹிதின் பார்வையில் விழுந்து, அவரை மணக்கும் இடத்திற்கு தள்ளப்பட்ட பீபீ இறுதி வரை தன்னை எந்த தேர்வுமற்ற சிறைகதியாகவே நினைத்துக்கொள்கிறார். பதூல், கணவன் ஹுமாயுனால் அடிப்பட்டு உதைபட்டு தன் பிறந்தகத்திலிருந்து பணம் பெற்றுகொண்டுச் சென்று ஒரு நாள் மடிந்தும் விடுகிறாள். கவ்ஹர், வாஹிதின் உடல் குறையுள்ள, மணமாகாத, நடுவயது தங்கை. வெறுப்பும் கசப்பும் நிறைந்திருந்தாலும் இறுதியில் அவள் கவிதாலயத்திளிருந்து விலகி ஷேகுவை திருமணம் செய்து கொள்கிறார். சாந்தும் கஜலும் வீட்டு ஆண்களின் பேரசையலும்  வெளி ஆண்களின் பெருங்காமத்தாலும் சிதறுண்டு போகும் கண்ணாடி படிமங்கள். இடையில் சாந்தை காதலிக்கும் சஞ்சீவா, கஜலை காதலிக்கும் பில்க்ராமி, நசீர். கிட்டத்தட்ட கொத்தடிமை போல் நடத்தப்படும் பாத்திமா என்ற பணியாளின் மகள் கைசர் வருகிறார்கள். கைசர் வளர்ந்து இடது சாரி இயக்கத்தில் இணைந்து சஞ்சீவாவை மணந்து கிராந்தி என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். (தேடவே வேண்டாம், ‘கிராந்தி’ என்றால் புரட்சி என்று பொருள்.) கிராந்தியை கைசர் கவிதாலயத்தில் விட்டுவிட்டு தூக்கு மேடைக்கு செல்கிறாள். ஒன்றிலிருந்து அடுத்ததாக நாவல் கதாபாத்திரங்களை மேய்ந்து மேய்ந்து முன்னேறுகின்றன . ஆனால் அதிகப்படியான பாத்திரங்களாலேயே நாவல் திக்கற்றுவிட்டதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

கவிதாலயம் நாவல்

இந்நாவலில் வரும் நிலப்பிரபுத்துவ முறைகளும் பெண்களின் அகச்சித்திரங்களும் நமக்குப் புதிதல்ல. ’மண்ணும் மனிதரும்’ நாவலைப்போல் இவர்கள் தரையில் நடப்பர்வர்கள் அல்ல. சின்டரெல்லாவின் கதைமாந்தர் ஜேன் ஆஸ்டநின் கதைக்களத்துள் புகுந்ததைப் போலத் தோன்றககூடியவர்கள்.ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இணையாகவே எஜமானியக்குரூரத்தை வெளிபடுத்துகின்றனர். கைசரின் நீளமான கருங்கூந்தலைக்கண்டு  பொறாமை பிடித்த வீட்டுப் பெண்கள் அதை ஏதோ காரணத்திற்கு தண்டனையாக வெட்டுவது அதற்கு உதாரணம். என்றாலும் அவர்களுடைய எல்லை அவ்வீட்டின் எல்லைவரை தான். ரஷிதும் ஹுமயுனும் தங்கள் வீட்டு இளம்பெண்களின் அழகை துருப்புச்சீட்டாக்கி பயன்படுத்தி பின்னர் கைவிடுகின்றனர். சாந்த் மற்றும் கஜலுக்கு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறார்கள், அதன் மூலம் சில உறவுச்சிக்கல்களில் சிக்கி இருவருமே நிம்மதியை தொலைத்து விடுகின்றனர். ஐம்பது-அறுபதுகளின் இந்தி திரைப்படல்களைக் கேட்டவர்களுக்கு உருது மொழி என்றாலே ஷாயரிகள் என்ற ரசனைக் கவிதைகள் தான் நினைவுக்கு வரும், ஷேர், கஜல், நஜம் என்று அதன் அமைப்புகளில் பல வேறுபாடுகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் காதல் கவிதைகளாகவே அமைந்து விடுகின்றன.  அப்படியான கவிதைச்சிறைக்குள் சிக்கும் பெண்கள் இவர்கள்.

‘பெருந்துயரோ இடரோ எதுவாக இருப்பினும்
நீ என்னுடையளாகவே இருக்கக் கூடாதா?’

___

‘காதலன் அன்றிக்களிப்பு இல்லை
யாது செய்ய, அமைதி இல்லை’

___

காதலியின் அழகு முகத்தின் மேல் இருக்கும் பரு –
இயற்கையின் எழுத்தர் பேனா உதறும் பொது விழுந்த புள்ளியே!

___

சாந்த் கஜல் இருவருமே தங்கள் காதல் கைகூடாமல் இறக்க நேருவது தற்செயல் அல்ல. நாவலில் வரும் பெண்கள் தங்களை மீட்பில்லாத ஆன்மாக்களாகவே கருதி வாழ்ந்து மடிகிறார்கள்.அவர்களின் அதிகபட்ச கனவே பஞ்சாரா குன்றில் வீடமைத்து குழந்தைகளுடன் நிறைந்து வாழ்வது தான். ஆனால் அதுவும் நிறைவேறாமல் இருப்பது துன்பகரமானது. கஜல் பிறப்பதையே ஒரு தீய சகுனம் என்று எண்ணி ஹுமாயுன் வருந்துவதை இங்கு நினைவு கூரலாம். ‘உலகில் எல்லாருமே ஆண்களாகவே இருந்துவிட்டால் எல்லாரும் எத்தனை மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பார்கள்.’ என்ற அங்கலாய்ப்பு இயல்பாகவே இருக்கிறது.  ஏனென்றால் வாஹித் சொல்லுவது போல, ‘ஒவ்வொரு பெண்ணின் தலைவிதியிலும் பேகமாக வரும் வாய்ப்பு இருப்பதில்லை.’ பெண்களுக்குத் திருமணம் செய்வது என்பது அவ்வளவு சிரமமான செயலாக இருந்திருக்கிறது. முதலில் பெண் ஜென்மம், அதற்கு மேல் அழகு – இது பெரிய ஆபத்து அல்லவா?’ என்று ஒரு தந்தை நொந்து கொள்கிறார். பெண்களின் பாலியல் தேர்வுகள் மீது கடும் ஆசாரவாத கொள்கைகளே இருந்திருக்கின்றன. பேரழகியான கஜலுக்கு ஆசைவார்த்தை நல்கிய நசிர் ,பாகிஸ்தான் சென்று வேறொரு பெண்ணை  திருமணம் செய்துகொள்வதற்கு சொல்லும் காரணம், ‘அவளை காதலிக்க மட்டும் தான் முடியும்’ என்பது.  கஜலின் சவப்பெட்டியில் விழும் கடைசி ஆணியாக நசிரின் இச்சொல் அமைகிறது. இன்னொருவரின் கவிதையின் பாடுபொருளாகக் கழிந்த குழப்பமான அலங்காரமான  வாழ்க்கையின் அர்த்தமின்மை நஞ்சாகிறது.

நாவலுக்குள்ளேயே ஹிஜாப் அணிந்த பெண்களும் அணியாதவர்களும் வருகின்றனர்.  கல்வி அறிவு பெண்களை கெடுக்கிறது என்ற கருத்தும் உலவுகின்றது. ஆடம்பர வாழ்வின் சுகங்களை உதர  முடியாத மாந்தர்கள் எவரும் மாற்றத்தை விரும்புவதில்லை. ஆனால் அவர்களுக்கெல்லாம் காலம்  காத்துக் கொண்டிருப்பதில்லை. சிறைப்பட்ட பீபியின் இடத்திலிருந்து பார்க்கும் பொழுது எப்பொழுதும் கணவனுடன் காதல் பிணக்குகளில் ஈடுபட்டிருக்கும் ரஜியாவின் வாழ்க்கை ஒரு படி மேலாக இருக்கிறது. அவளைவிட கல்வியும் கலையும் பயின்ற சாந்த் தன்னை உயர்த்திக்கொள்கிறாள். தன்னை கைவிட்ட ஆணை முழுவதும் துறக்க முடியாவிட்டாலும் சாந்தை போல் ஒரே அடியாக மறுகாமல் திருமணம் செய்து கொள்ளும் கஜலுடைய வாழ்வும் சற்று மேம்பட்டது எனலாம். கவிதாலயத்தின் சழக்குகளை விட்டு நீங்கிய கைசரின் வாழ்வை  அடுத்த நிலையில் கொள்ளலாம். கதையோட்டத்தில் ஒரு வரி,

‘சுதந்திரம் என்ற உணர்வே ஒரு சமூகத்துடன் அல்லது ஒரு நாட்டுடன் சம்பந்தப்பட்டதல்ல. ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலைமுறைக்கும் இடையேயுள்ள சிந்தனைத் தொலைவு என்று தான் வாஹித் ஹுசெனுக்குப் புரிந்தது.

இளம் வயதில் அறிவும் கலையும் மீறலும் சமநிலையும் கொண்ட புரட்சிப்பெண் கிராந்தி கவிதாலயத்தின் பெண் நிரையின் உச்சியில் திகழ்கிறாள். இத்தகைய தன்மை கொண்ட புதுமைப்பெண்களை தொடர்ச்சியாக ஒவ்வொரு காலத்திலும் நாம் காண முடியும். அவர்களை கற்பனாவதிகளாக, சமூக சீர்கேடுகளாக, அபாயகரமானவர்களாக, சற்று முதிராதவர்களாகவும் கூட நாம் காணப்பழகி இருக்கிறோம். ஆனால் செயலின் முதிர்ச்சி காலமெனும் கருவி கொண்டு  ஒப்பு நோக்கக் கூடியது  தான் என்பதை நாவலாசிரியர் உணர்த்துகிறார். மற்றொரு உருது எழுத்தாளரான வாஜிதா  தபஸ்ஸும்,  தன ‘இன் ஷெஹெர் எ மாம்னு’ (‘தடைசெய்யப்பட்ட கனி’) என்ற நாவலின் முகவுரையில் பானோவின் அறிவுரையை நினைவுகூர்கிறார் – ‘தியோதி’ என்ற அந்தப்புர வாயிற்கதவைத்  தாண்டியும் கதைகள் நிகழ வேண்டும். “ இது யுகயுகமாக பெண்ணிற்கு இருக்கும் கனவு தான். இந்நாவல் ஆசிரியரின் அந்தக்கனவின் முதல் படியாகவும் கருதலாம்.

எழுத்தாளர் பார்கவி

கஜல் மறைந்த பிறகு கிராந்தியிடமும் நசிர் வழிகிறான். கிராந்தி சொல்கிறாள், ‘என்னை விட்டு தூரமாக ஒதுங்கி இருங்கள் நசீர் பாபு. ஏனெனில் என் பையில் ‘டைம்பாம்’ இருக்கிறது. நான் உங்களிடம் வந்தால் இந்த கவிதாலயத்துடன் நீங்களும் அழிந்து போவீர்கள்.’ அழியட்டும்.

-பார்கவி

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *