”திரிபு முதல் திரு வரை”: திருனர் வாழ்வும் சமூகமும் – கடலூர் சீனு

(கரசூர் பத்மபாரதியின் “திருநங்கையர் சமூக வரைவியல்” நூலை முன்வைத்து)

கரசூர் பத்மபாரதி (ஓவியம்: ஜெயராம்)

முப்பது வருடங்களுக்கு முன்னர் ஓர் இரவு.  விழுப்புரத்தில் என் சித்தப்பா வீட்டில், அவரது கடலைமிட்டாய் கம்பெனியில் வேலை முடிந்ததும் அதன் முதன்மை பணியாளர் மகாலிங்கத்துடன், இரவு 10.30 மணி காட்சியாக ஓடிக்கொண்டிருந்த கிங்காங் படத்துக்கு, என் வயதொத்த பொடியன்கள் எட்டு பேருடன், சரக்கு சுமக்கும் ட்ரை சைக்கிளில் ஏறி அமர்ந்து சென்றோம்.

12 மணிக்கு மேல் திரும்ப வரும் வழியில், மேம்பால சரிவில் மிதமிஞ்சிய வேகத்தில் இறங்கிய ட்ரைசைக்கிள் எங்கள் எடை தாளாமல் குடை சாய்ந்து, சக்கரம் முறிந்து நாங்கள் அனைவரும் சாலையில் உருண்டோம். சிறு சிராய்ப்புகள் மட்டுமே. மகாலிங்கம் அருகே உள்ள நகருக்குள் சென்று, நண்பர் வீட்டில் வண்டியை மீட்க உதவி கேட்க எண்ணி நடக்க, எல்லா பொடியன்களும் அவர் பின்னால் நடக்க, வண்டிக்கு காவலாக யார் நிற்பது என்று கேள்வி வந்து,  அழுகுனி ஆட்டம் ஆடி என்னை மட்டும் வண்டி அருகே விட்டு விட்டு அனைவரும் காணாமல் போனார்கள்.

அரவமற்ற சாலையில் மிக மிக தொலைவாக இடம் விட்டு நின்றிருக்கும் சாலை விளக்கு வரிசையில் முதல் கம்பத்து டியூப் லைட் உதறி உதறி, வெளுத்து வெளுத்து, தனது காலடி சாலையின் ஒளி படும் எல்லையை துலங்கித் துலங்கி மறையவைத்துக்கொண்டு இருந்தது. அப்போதுதான் அவர்களைக் கண்டேன்.  தூரத்தில் அவர்கள் தோன்றி, ஒளிர்ந்தும் மறைந்தும் வந்து கொண்டே இருந்தனர். நெருங்க நெருங்க கூடிக் கூடி வந்தது சத் சத் சத் என்றொரு ஒலி, கூடவே இரட்டை காகம் இணைந்து கரைவது போலொரு குரல்.

” இனிமே இந்த பொறப்புக்கு ஆசப்படுவியா”

திரும்ப திரும்ப கேள்வி கேட்கும் குரல் நெருங்க நெருங்க, அதைக் கண்டேன். இரு ஆண்கள் முன் பின் நின்று வலது தோளில் சுமந்து வந்த குறுக்கு கட்டையில், கால்களும் கைகளும் கட்டப்பட்டு தொங்கியாடி வந்துகொண்டிருந்தது ஒரு பெண் பிணம். பின்னால் நடந்து வந்த முதியவள் அழுகையில் வாய் கோண கேவியபடி 

” இனிமே இந்த பொறப்புக்கு ஆசப்படுவியா”

என்று கேட்டபடி தனது கையில் இருந்த ஸ்லிப்பரால் பிணத்தின் தலையில் சத் என அடித்தார். ஒற்றை கால் செருப்புடன் அவள் கேட்டு கேட்டு அடித்தபடி, யாருமற்ற அந்த இறுதி ஊர்வலம் தூரத்தில் செல்ல, சென்று மறைந்தனர் நால்வரும்.

கடலூர் சீனு

இன்றுவரை என்னைத் துரத்தும் அக்காட்சி வழியே அகத்தாலும் புறத்தாலும் நான் சென்ற தொலைவு அதிகம். அன்று நான் கண்ட காட்சி குறித்து மிக மிக பிந்தி அறிய வந்தேன். அவர்கள் திருநங்கைகள். செத்துப்போன திருநங்கையான தனது தத்துப் பெண்ணை தாய்த் திருநங்கை இடுகாட்டுக்கு எடுத்து போகிறார். எந்த சடங்கும் இன்றி குழி தோண்டி, பிணத்தை குப்புறப்போட்டு புதைத்து விடுவார்கள். இவ்விதம் செய்வதன் வழியே அவள் மீண்டும் மறுபிறவி எடுக்க மாட்டாள் என்பது நம்பிக்கை. சில குறிப்பிட்ட தென் ஆற்காடு திருநங்கையர் சமூகத்தில் (இன்று இவ்வழக்கம் கிட்டத்தட்ட இல்லை) அவர்களின் இறப்பு சடங்கு இவ்விதமாகவே நிகழ்த்தப் படுகிறது.

திருநங்கையர் வாழ்வும் சமூகமும் சார்ந்த எனது புரிதலை வடிவமைத்த முக்கியமான இரண்டு நூல்களில் ஒன்று, கரசூர் பத்ம பாரதி எழுதி 2013 இல் தமிழினி வெளியீடாக வந்த _ திருநங்கையர் : சமூக வரைவியல் _ எனும் ஆய்வு நூல். துவக்கமாக 2005 இல் கூத்தாண்டவர் கோயில் திருவிழா: இன வரைவியல் நோக்கு எனும் தலைப்பில் பத்மபாரதி எழுதிய ஆய்வேட்டின் விரிவான விரிவான வடிவே இந்நூல்.

இன வரலாறு, வழக்காறுகள்,மொழி நம்பிக்கைகள்,சமூக அமைப்பு, சட்டங்கள், பாலினம், மருத்துவம், தொழில், பொருளாதாரம், விழாக்கள், சமூக மாற்றம், இன்றைய நிலை என தமிழ் நிலத்தின் திருநங்கையர் சமூக வாழ்வு சார்ந்த முழுமைப் பார்வையை அளிக்கும் முக்கியமானதொரு ஆய்வு நூல் இது.

வட இந்தியாவில் பூனாவாலி, லாலன் வாலி, புல்லாக் வாலி, டோங்கிரி வாலி, லஸ்கர் வாலி, சகலல் வாலி, பேடி பஜார் எனும் ஏழு பிரிவும், தென் இந்தியாவில் பெரிய வீடு, சின்ன வீடு என்ற இரண்டு பிரிவுமாக ஒன்பது பிரிவுகள் கொண்ட மொத்த சமூகம் இதில், இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரே தாயின் 7 சகோதரர்கள் வழியே கிளைத்தவைதாம் என்ற தொன்மக் கதையும் அவர்களுக்கு உண்டு.

பிற தெய்வங்களை வழிபட்டாலும் அனைவருக்கும் ஒரே தாய் தெய்வம்தான் மூல முதல் தெய்வம். குஜராத்தின் சந்தோஷி மாதா, சித்ரா பௌர்ணமி அன்று எடுத்த தோற்றமான மூர்க்கே வாலி மாதா. இவர்கள் பிறரால் அழைக்கப்படும் பெயர்களில் ஒன்றான அலி என்பதற்கு மேன்மை என்று பொருள். ஹிஜிரா எனும் பெயருக்கு வாயில் காப்பான் என்று பொருள். ஜோகி எனும் பெயருக்கு குரங்கு என்று பொருள். தமிழ் நிலத்தில் இவர்களுக்கு ”அரவாணி” எனும் பெயர் 1998 கூத்தாண்டவர் கோயில் விழாவில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரால் வழங்கப்பட்டு வழக்குக்கு வந்த ஒன்று. “திருநங்கை” எனும் சொல் ’நர்த்தகி நடராஜ்’ அவர்களால் புழக்கத்துக்கு வந்தது. ஆணிலிருந்து பெண்ணுக்கு மாறியவர் திருநங்கை. பெண்ணிலிருந்து ஆணுக்கு மாறியவர் திருநம்பி. திருனர் என்பது மூன்றாம் பால் என்பதன் பொதுப் பெயராக இன்று அறியப்படுகிறது.

மோகினி அவதாரம் கொண்ட கிருஷ்ணனின் அம்சம் என்று தங்களை அடையாளம் காணும் இச்சமூகம் அதே அளவு, போத்ராஜ் மகராஜ் என்பவரின் தொன்ம கதையோடும், தாயைக் கொல்ல மறுத்து அதனால் தந்தையின் சாபம் பெற்று அலிகள் என்றான பரசுராமரின் பிற தம்பிகள் கதையோடும் அடையாளம் தேடிக்கொள்கிறது. மூர்க்கா வாலி மாதா, ரேணுகா இவர்களுக்கு எல்லாம் பால் அடையாளத்தை மாற்றி வைக்கும் சக்தி உண்டு என்பது இந்த சமூகத்தின் நம்பிக்கைகளில் ஒன்று.

இவர்களே உருவாக்கி, இவர்களுக்கு மட்டுமே புரியும் என்ற வகையில் இவர்களுக்குள் மட்டுமே புழங்கும் பொது மொழிக்கு சுவடி பாவி என்று பெயர். சீனாவில் பெண்கள் வெறும் பொருட்கள் என்று கையாளப்பட்ட காலத்தில், ஆண்களுக்கு புரியாத ஆனால் அவர்களுக்குள் புரியும் வண்ணம் ஒரு தனி மொழி புழக்கத்தில் இருந்தது சமீபத்தில் கண்டுபிடிக்க பட்டது. இரண்டுக்கும் ஒரே காரணம்தான். பொதுவில் இருந்தாலும் தனித்து இருக்க, வெளியில் இருந்தாலும் தன்னை ஒளித்துக் கொள்ள. எதனாலும் ஒடுக்கப்படாத தங்களது தனி உலகை உருவாக்கிக்கொள்ள இந்த சமூகத்துக்குள் வரும் புதிய அரவாணி மூன்றே மாதத்தில் இந்த மொழியில் தேர்ச்சி அடைந்து விடுவார். 

இவர்களின் கூட்டுக் குடும்ப அமைப்பு எவ்வாறு உருவாகி வருகிறது, அதில் யார் யாருக்கு என்னென்ன வேலை பிரிவு, பஞ்சாயத்து அமைப்பு என்னவாக இருக்கிறது, ஒரு அரவாணி செய்ய கூடியது கூடாதது என்னென்ன, தண்டனைகள் என்ன, பஞ்சாயத்து தலைவர் எவ்விதம் தேர்வு செய்ய படுவார், அவர் தகுதிகள் என்னென்ன, இந்த சமூகத்தின் பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களுடன் கலந்த சடங்கு சார்ந்த விழாக்கள் என்னென்ன, இந்த சமூகத்துக்குள் ஒருவர் எவ்விதம் உள்ளே வந்து தன்னை பொறுத்திக் கொள்கிறார், இவர்களின் தொழில் நிலை, பொருளாதார நிலை, உடல் நிலை எதிர்கொள்ளும் சிக்கல்கள், நம்பிக்கைகள், வழக்காறுகள், வாழ்வு முறை, வழக்குச் சொற்கள், பிற பண்பாட்டின் இடையீடுகள், இவர்களில் எழுந்த சாதனை ஆளுமைகள், இலக்கியத்தில் வரலாற்றில் சுதந்திர இந்தியாவில் இவர்களின் இடம்,  என இச்சமூகம் சார்ந்த அனைத்தையும் விவரிக்கும் இந்நூலின் முக்கிய பகுதி, கூத்தாண்டவர் கோயில் விழா பகுதி. இந்த நூல் பேசும் அத்தனை விஷயங்களின் பின்புலத்தில் வைத்து இந்த கூத்தாண்டவர் விழாவை அணுகும்போது இந்தியப் பண்பாடு சார்ந்த புதிய நோக்கு ஒன்றை அடைய முடிகிறது. இந்த நூல் வழியே எந்த இனத் தொடர்பு, இனத் தூய்மை வரலாறும் இன்றி, தோன்றிக்கொண்டே இருக்கும் மூன்றாம் பால் வழியே தங்களை ஒரு தாய் பிள்ளைகள் என்று கண்டு ஒரு சமூகம் உருவாகி, குடும்ப நிர்வாகம் முதல் நீதி பரிபாலனம் தொடர்ந்து விழாக்கள் வரை நிலைபெற்று, மெல்ல மெல்ல சமத்துவ நிலை நோக்கி உயர்ந்து வரும் சித்திரத்தை காணும் அனுபவம் எந்த இலக்கியப் பிரதியின் வீச்சுக்கும் மேலானது.

உணர்ச்சிகள் கலவா ஆய்வு நூலின் தகவல்கள்தான் ஆனாலும் அவை அளிக்கும் கொந்தளிப்பு அளவில்லாதது. உதாரணமாக தவிர்க்க இயலா சூழலில் பொது சமூகத்தில் ஆணாகவும், அவ்வப்போது தலைமறைவாகி அங்கிருந்து இங்கே வந்து அரவாணியாக வாழ்பவர்களின் சித்திரம். தனது குருதி சொட்டுக்களை பாலில் விட்டு, அந்தப் பாலை தனது முலை வழியே வழிவிட்டு, அந்த முலைப் பாலை அருந்த வைத்து, மகளாக ஒரு அரவாணியை தாய் அரவாணி தத்தெடுக்கும் சடங்கு. திகைக்கவைப்பது அரவாணிகள் மேற்கொள்ளும் மரபு வழி விரைத்தரிப்பு சடங்கு விவரணைகள். ஆண் குறி போன இடத்தில், பெண் குறி போல தோற்றம் பெற நிகழும் கை வைத்தியம் முதுகு தண்டை சொடுக்க வைப்பது. இந்த உடலியல் வகைமையுடன் இச்சமூகத்தின் உளவியல் உயிரியல் சார்ந்து மேலதிகபுரிதலை இந்த வகைமையில் இரண்டாவது முக்கிய நூலான கிழக்கு வெளியீடாக கோபிகிருஷ்ணன் (இவரே ஒரு மூன்றாம் பால் நிலை ஆளுமை) எழுதிய _ மறைக்கப்பட்ட பக்கங்கள் _ எனும் நூல்.

பத்ம பாரதியின் இந்த ஆய்வேடு வெளியான ஆண்டுக்கு அடுத்த வருடம் முக்கிய வரலாற்று ஆணை ஒன்று வெளியானது.  2014 ஏப்ரலில் உச்சகநீதிமன்றம் திருனர் பிரிவை ஆண் பெண் எனும் இரு பால்களுக்கு அடுத்து சம பால் நிலையாக அங்கீகரித்து ஆணை பிறப்பித்தது. இதோ இந்த ஆண்டு எந்த அரசு சலுகையும் இன்றி படித்து, அந்த படிப்பின் வழியே தொழில் வெற்றியும் கண்டு, குறைந்தது 50 அரவாணிக்கு உறுதுணையாக நிற்கும் விழுப்புரம் வட்டத்தை சேர்ந்த திரு மர்லிமா முரளிதரன் சிறந்த திருநங்கை எனும் தமிழக அரசின் விருதினை வென்றிருக்கிறார். குறைந்தது 15வருடம் முன்னர் தமிழ் திரைப்படங்கள் அரவாணிகளை எவ்விதம் சித்தரித்ததோ அதை இன்று தமிழ் எந்த பொது மனமும் ஏற்றுக் கொள்ளாது. மாறும் எல்லாமே மாறும். மெல்ல மெல்ல எனினும் நிச்சயம் மாறும். இந்த மாற்றத்துக்கு பத்மபாரதி போன்றோரின் உழைப்பும் அதன் ஆதார வேர்களில் ஒன்று. 

திருநங்கையர் சமூக வரைவியல் நூல்

இந்த நூல் வழியே பத்ம பாரதி சென்று அமரும் பீடம் இரண்டு தளங்களில் முக்கியமானது. ஒன்று தீவிர கலை இலக்கிய கலாச்சார செயல்பாடுகள் நிகழும் தனித்தளம். இதில் இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் ஜெயமோகனின் வெண்முரசு, சு. வேணுகோபால் எழுதிய பால் கனிகள், மா. நவீன்(மலேசியா) எழுதிய சிகண்டி என்று இந்த மூன்றாம் பால் வாழ்வைக் களமாக கொண்ட புனைவுகளை ஒரு கை விரல்கள் எண்ணிக்கைக்குள் அடக்கி விடலாம். மையத்தால் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை சார்பாக பீறிட்டு அடித்த பின்நவீன குப்பைகள் அனைத்துமே மக்கா குப்பைகள் போட வேண்டிய சிவப்பு டப்பாவுக்குள் போய் சேர வேண்டிய ஒன்று என்பதற்கு இந்த நூல் மற்றொரு சாட்சியம். இந்த ஆய்வு நூலின் பெறுமதி இன்றளவும் தமிழில் எழுதி குவிக்கப்படும் எந்த பின்நவீன கோட்பாட்டுக்கு பிறந்த குழந்தை புனைவுகளுக்கும் கிடையாது என்பதே உண்மை. இரண்டாவது அரசு போன்ற பெரு நிறுவனங்கள் இயங்கும் பொது தளம். சில ஆண்டுகள் முன்னர் தமிழினத் தலைவர், முத்தமிழ் வித்தகர், முன்னாள் முதல்வர், காலம் சென்ற, கலைஞர்  மு.கருணாநிதி அவர்கள் செம்மொழி தமிழ் மாநாடு ஒன்றை நிகழ்த்தினார். தமிழ் நிலத்தின் பெரும்பாலான பல்கலை கழகங்கள், பேராசிரியர்கள், கூடிய விழா. பல நூறு கோடிகள் செலவு. எல்லா காசும் பிணத்துக்கு வாய்க்கரிசி போன்ற கணக்கில் போய் சேர்ந்தன. ஒரே ஒரு  ஆக்கம் கூட சமர்ப்பிக்கப்பட்டவில்லை. இந்த நிலையுடன் ஒப்பிட்டால் மட்டுமே பொது வெளியில், அரசாலோ பிற கல்வி அமைப்பாலோ எந்த அங்கீகாரமும் இன்றி பத்மபாரதி நிகழ்த்தி இருக்கும் செயல்பாடுகளின் தீவிரம் விளங்கும். 

2022 தமிழ் விக்கி தூரன் விருது பெரும் பத்மபாரதி அவர்களுக்கு வாசகனாக என் சார்பாகவும், நீலி இதழின் சார்பாகவும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

இணைப்புகள்:

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *