பேசாதவ(ர்க)ள் – சாம்ராஜ்
(சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படத்தை முன்வைத்து)
இந்தக் கட்டுரையை மூன்று ஆங்கில மேற்கோள்களோடு துவங்கலாம்,
“The Book is a Film
That Takes Place
In the Mind Of The Reader”
– PAULO COELHO
“Books And Movies are
Like Apples And Oranges
They Both Are Fruit,
But Taste Completely
Different”
-STEPHEN KING
“When You’re Making a Movie
Of a Book, People are always
Waiting With Their Knives”
-JOEL EDGERTON
1985-ல் குமுதத்தில் எழுத்தாளர் சுஜாதா விக்ரம் படத்தின் கதையை தொடர் கதையாக எழுதினார். பின்னதாக விக்ரம் படமாக்கப்பட்ட அனுபவம் குறித்து, விக்ரம் உருவான கதை என்ற கட்டுரையை இப்படித் துவங்குவார். “இந்தக் கதைக்கு மிக ஆதாரமான சம்பவம், ஒரு செப்டம்பர் மாத மழை தினத்தில் நடந்தது என்று நான் எழுதியிருக்க, அதை படம் பிடித்ததோ பட்டை உரியும் மே மாத வெயிலில் சென்னை மியூசியம் அரங்கம் வாசலில், லாரி லாரியாக தண்ணீரைக் கொண்டுவந்து இரைத்து, அதைப் படமாக்கினார்கள். அந்த படப்பிடிப்பில் நான் சற்று பின்னால் நின்றுகொண்டிருந்தேன், என்னை நோக்கி வந்த கமல்ஹாசன், “என்ன சார் திருப்தியா சார்” என்றார்.
ஒரு கதையை வரிக்கு வரி எடுப்பதில் உள்ள சிக்கல் இது, அதே கட்டுரையில், “இந்திய பாதுகாப்புத் துறை என்ற போர்டின் மீது உட்கார்ந்திருக்கும் புறா திரும்பிப் பார்த்தது என்று நான் எழுதியிருக்க, புறா திரும்ப மறுத்தது, ஒரு உதவி இயக்குனர் அவசரப்பட்டு அது திரும்புவதற்காக அதன் மீது தண்ணீரை ஊற்ற, நனைந்த புறா, புறாக் குஞ்சாகிவிட்டது, மறுபடியும் அதை உலர்த்தி புறாவாக்க வேண்டுமெனில், HAIR DRYER வேண்டும், படப்பிடிப்புத் தளத்தில் HAIR DRYER இல்லை, ஒரு டாக்ஸியை எடுத்துக்கொண்டு 300 கிலோமீட்டருக்கு அந்தப்பக்கமிருக்கும், குத்ரே மூக் போய் வாங்கி வந்து, புறாவை மறுபடியும் உப்ப வைத்தார்கள். மறுபடியும் கமல் என்னருகே வந்து, “திருப்தியா சார்” என்று கேட்க, நான் சற்று பின்னால் நகர்ந்து “கரிச்சான் குருவி என்று எழுதியதாக ஞாபகம்” என்றேன்.
ஒரு இலக்கியப் பிரதியை சினிமாவாக மாற்றும் பொழுது மதராச பட்டினத்தில் வரும் கொச்சின் ஹனிபாவைப் போல சம்பிரதாயமான துபாஷிக்கு பதிலாக, கலையான துபாஷி தேவைப்படுகிறார். தமிழ் சினிமாவில் இலக்கியமும் சினிமாவும் அரிதாகத்தான் சந்திக்கிறது, எழுத்தாளர் கோணங்கியின் சித்தார்த்த சங்கர்ரே குறித்த நகைச்சுவை துணுக்கு ஒன்று உண்டு.
சித்தார்த்த சங்கர்ரே பஞ்சாப்பில் தீவிரவாதிகளை ஒடுக்கிய பின்பு, தமிழகத்திலுள்ள இலக்கியவாதிகளை ஒடுக்குவதற்கு அனுப்பிவைக்கப்படுகிறார். அவர் ஒவ்வொரு இலக்கியவாதிகளையும் பார்த்து அரசாங்கத்துக்கு எதிராக எழுதமாட்டேன் என்று உறுதிமொழிக் கடிதம் வாங்குகிறார். அவர் சுந்தர ராமசாமியிடம் மறுப்புக் கடிதம் கேட்க, “NO, NO MR.RAY, என்னுடைய TYPE WRITING MACHINE ஒருநாளைக்கு 50 WORDS தான் அடிக்கும் அதனால் உடனடியாக மறுப்புக் கடிதம் தரமுடியாது” என்கிறார்.
அசோகமித்திரன் ரத்னா கஃபோ வாசலில் வைத்து சுடப்படுகிறார். “ஹே ராம்” என்றபடி கீழே விழுகிறார் அசோகமித்திரன், இதை சொல்லும் கோனங்கியிடம் பதிப்பாளர் மீரா “நான் எங்கங்க” என்று கேட்க,
“சார் நான் சித்தார்த்த சங்கர்ரேவை கோனார் மெஸ்க்கு கூட்டிட்டு போறேன், அப்ப அவரு கை கழுவிட்டு வரும் போது, ஒருத்தர் அவரு மேல இடிச்சிடுறாரு, அவரு தான் நீங்க, அதான் உங்க இடம், அதுக்கு மேல கேக்காதீங்க” என்கிறார். இப்படித்தான் தமிழ் சினிமாவும் இலக்கியமும், மீராவும் சித்தார்த்த சங்கர்ரேவும் போல எதிரும் புதிருமாக லேசாக தோள் உரச கடந்து போய்விடுகின்றன.
மார்க்ஸிய ஆய்வாளர் கோ.கேசவனிடம் என் பதின் பருவத்தில் நான் ஒரு கேள்வி கேட்டேன், “தோழர் தாய் நாவலை மொழிபெயர்ப்பில் படிக்கும் பொழுதே இவ்வளவு உணர்ச்சி பூர்வமா இருக்கே, மூலத்துல படிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்”
கேசவன் எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாது “அதுனால தான் தோழர் ரஷ்யாவுல புரட்சி வந்திடுச்சு” என்றார். ஒரு இலக்கியப் பிரதி மொழி வழியாக நமக்கு கொடுக்கும் உணர்வை, உத்வேகத்தை, உணர்ச்சிப்பூர்வத்தை, அதை வேறொரு வடிவத்திற்க்கு கலை மாற்றம் செய்யும் பொழுது, அதே உணர்வுகளை, மறுபடியும் நிகழ்த்துவது அத்தனை சுலபமல்ல.
”இலகியம் வேறு
சினிமா வேறு”
இது இரண்டும் வேறு வேறு என்று அறிந்த, இந்த இரண்டையும் அறிந்த ஒருவரால் தான் அதை வெற்றிகரமாக கையாள முடியும். அதை இயக்குனர் வசந்த் கலாப்பூர்வமாகவும் வெற்றிகரமாகவும் நிகழ்த்தியிருக்கிறார். எப்பொழுதாவது தான் இது நிகழ்கிறது.
பல சமயங்களில் இலக்கியமும் சினிமாவும் சந்திப்பது என்பது, ஜெயகாந்தனின் ஆசார அனுஷ்ட்டானமான நண்பர், தன் வாழ்நாளிலேயே குடித்திடாதவர், ஜெயகாந்தனைப் பார்த்து தானும் குடிக்க ஆசைப்பட்டு, தன் அம்மாவிடம் அதைச் சொல்கிறார், அவரது அம்மா பால் வாங்கி வரச்சொல்லி, அதில் விஸ்கியை கலந்து கொடுக்கிறார். இதை அந்த நண்பர் ஜெயகாந்தனிடம் சொல்ல, ஜெயகாந்தன் தலையில் அடித்துக்கொண்டு “விஸ்கியையும் கெடுத்து பாலையும் கெடுத்து” என்றாராம். இங்கு இலக்கியமும் சினிமாவும் சந்திப்பது பலசமயங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது.
சாவி வாரப் பத்திரிக்கையின் வழி அச்சு ஊடகத்திற்குள் நுழைந்த, “திசைகளின்” வழி தன் வழிகளை அறிந்துகொண்ட, 1980-களிலேயே ஆதவனையும் அறிந்த, அவரோடு உரையாடிய, எழுத்தாளர் காளிப் பிரசாத்தையும் அறிந்த, அவரையும் வாசிக்க விரும்புகின்றவராக இருக்கின்ற ஒருவரால் தான் இதை செய்ய முடிகிறது. காளிப் பிரசாத்தையும் என்பதின் பொருள் சமீபத்திய படைப்பாளி என்ற பொருளிலேயே.
சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ஒரு நண்பர் திடீரென அழைப்பார், “தலைவா படம் பண்றதுக்கு தோதா ஒரு பத்து நாவல் சொல்லுங்க தலைவா” என்பார். நான் பெரும்பாலும் படம் பண்ண முடியாத நாவல்களைச் சொல்வேன், 40 ஆண்டுகால வாசிப்பில் இரத்தம் சிந்தி பெற்ற அறிவை, இளநீரில் ஸ்ட்ரா போட்டு குடிப்பதுபோல், ஒருவருக்குக் கொடுக்கமுடியுமா என்ன?
மனுஷ்ய புத்திரனின் கவிதை ஒன்று உன்டு,
பிரம்மாண்டத்தில் இருக்கும்
அற்பத்தையும்
அற்பத்தில் இருக்கும்
பிரம்மாண்டத்தையும்
அறிவதற்கு
கொஞ்சம் இரத்தம்
சிந்த வேண்டியிருக்கிறது.
வாசித்து நாம் பெரும் அறிவு என்பது இரத்தம் சிந்தும் பணியே,
ஒரு நண்பர், உதவி இயக்குனர். அன்னா கரினீனாவை வாசித்து முடித்தவர், இடது கையால் அதை மேசையில் தூக்கி எறிந்தவர். “இதெல்லாம் SCRIPT பண்ண முடியாதுங்க” என்றார் அலட்சியமாக. நான் உன்மையாகவே நடுங்கிப் போனேன், டால்ஸ்டாய் அவரிடம் வந்து கனவிலா கேட்டார், அவர் பாட்டுக்கு யாஸ்னியா போல்னியா பண்ணையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார். இந்தக் கதைகளை படமாக்க வேண்டும் என்று கண்டறிய ஒருவர் நிறைய வாசிக்க வேண்டும். அதனிலிருந்து சினிமாவுக்கு அணுக்கமான ஒன்றைக் கண்டறிய, சினிமா சார் நுண் அவதானிப்புகள் வேண்டும். இயக்குனர் வசந்த் அசோகமித்திரனை முழுமையாக வாசித்தவர். ஏறக்குறைய ஜெயமோகனையும் அப்படியே, தன் விசாலமான வாசிப்பின் வழி தெய்வத்துக்கு உகந்தது என்பது போல் இந்தக் கதைகள் சினிமாவிற்கு உகந்தது என்பதைக் கண்டறிகிறார்.
விமோசனம்
1961-ல் எழுதப்பட்ட கதை, 1980-ல் நிகழ்வதாக 2017-ல் படமாக்கப்படுகிறது. கதையில் வரும் மகான் திரைப்படத்தில் இல்லை. கதை முடியுமிடம் வேறு, சினிமா திரைப்படம் முடியும் இடம் வேறு. கதையில் பேருந்துக் காட்சிகள் மிக சன்னமாகவே வருகின்றன. திரைப்படத்தில் கருணாகரன் முன்னாலும், சரஸ்வதி பின்னாலும் லொங்கு லொங்கு என்று ஓடும் பொழுது, இந்த லொங்கு லொங்கு என்ற வார்த்தையை நான் அறிந்தே பயன்படுத்துகிறேன். எங்களூர் பக்கம் நாயைச் சொல்லும் பொழுது, ’லொங்கு லொங்கு’ என்று ஓடுகிறது என்பார்கள். சரஸ்வதி கருணாகரனின் பின்னால் அப்படித்தான் ஓடுகிறாள். அவள் அப்படி ஓடும் பொழுது, அதன் சாரம் நம் மனதுக்குள் இறங்குகிறது,
வீட்டின் கதவை திறக்க முற்படும் சரஸ்வதி, ஒருகணம் குழந்தையை கணவன் வாங்கிக்கொள்ள மாட்டானா என்று திரும்பிப் பார்க்க, கணவன் பின்னால் நகர்கிறான். கதவைத் திறந்தவுடன் அவளை இடித்துக்கொண்டு உள்ளே போகிறான். சாப்பாட்டின் அளவைப் பார்ப்பவன், இத்துனூன்டை மீதம் வைத்துவிட்டு சாப்பிட்டு எழுகிறான்.
இந்த சின்னச் சின்ன காட்சிகள் நமக்கு நிறையச் சொல்கின்றன. மக்சீம் கார்க்கியின் தாய் நாவலில் பெலவ்னா நிலவ்னா தாயின் பிராதன பாத்திரத்தை கார்க்கி விவரிக்கும் பொழுது,
“அவள் உயரமாக இருந்தாள், எனினும் ஓரளவு கூனிப்போயிருந்தாள். ஓயாத உழைப்பினாலும் கணவனின் அடி உதைகளாலும், உடைந்து கலகலத்துப் போன அவளது உடம்பு, ஒருபக்கமாக சாய்ந்தே நடமாடியது, எதனோடாவது மோதிவிடுவோமோ என்று அஞ்சி நடப்பதைப் போல தோன்றியது. பய பீதியும் சோகமும் தோய்ந்து, படிந்த இருண்ட இரு கண்கள், ஒளி செய்துகொண்டிருந்தன. அவள் எப்பொழுதுமே ஒரு பயங்கர செய்தியைக் கேட்டு அஞ்சுவதைப் போல தோன்றியது”
சரஸ்வதி அச்சு அசலாக அப்படித்தான் அந்த வீட்டுக்குள் நடமாடுகிறாள். மொத்த திரைப்படத்திலும், கேமரா அவர்கள் அருகே போவதே இல்லை. தமிழ் தேசியர்கள் மகிழ்ச்சி அடையும் படியான மொழியில் சொன்னால் அண்மைக் காட்சிகளே இல்லை. தூரத்தில் நின்றே மொத்தக் காட்சியையும் காமிரா பார்க்கிறது. ஒரே ஒரு சமயத்தில் மாத்திரம் கேமரா அருகில் போகிறது, அது சரஸ்வதி கணவனை எச்சரிக்குமிடம், காமிராவிற்கு தெரிந்திருக்கிறது தான் எவ்வளவு தூரத்தில் இருக்கவேண்டுமென. அந்த வீட்டில் அன்பு எவ்வளவு தூரத்தில் நடமாட முடியுமோ, அதே தூரத்தில் கேமராவும் நடமாடுகிறது.
சரஸ்வதி கணவனைத் தேடி அவனது தொழிற்சாலைக்கு போய்விட்டு திரும்பும் பொழுது, சோர்ந்து போய் ஓரிடத்தில் அமர்கிறாள், திரையில் அவள் முகம் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் ராட்சச புகைபோக்கியிலிருந்து நெருப்பும் புகையும் வர, இந்தக் காட்சிக்கு படிமம் குறியீடு என்ற மேலதிக அங்கியும் வேண்டாம். இதுவும் சொல்லாமலேயே நமக்கு விளங்குகிறது.
படிமம் குறியீடு குறித்து சிறுவயது தொட்டே எனக்கு ஒவ்வாமை உண்டு. கூடுதலாக படிமம் சார்ந்து பிரதிகள் படிக்கும்பொழுது, உடம்பில் தடுப்புத் தடுப்பாக வீக்கம் தோன்றுவதுண்டு. பெரும்பாலான படிமங்கள், குறியீடுகள், இல்லாத ஷேர் ஆட்டோவில் இருக்கின்ற ஆட்களை ஏற்றுவது போல. “வடபழனி, சாலிகிராமம், வலசரவாக்கம், ஆழ்வார் திருநகர், கேசவர்த்தினி, போரூர்” என்று குறியீட்டுக்காரர்கள் கூவ, ஆட்டோவிற்கு காத்திருப்பவர்கள் தான் அதிர்ச்சியடைவார்கள், இவர்கள் எதில் நம்மை ஏற்றிக்கொண்டு போவார்கள் என.
பாரதிதாசனிடம் ஒருமுறை ஒரு திரைப்பட பாடலாசிரியரைப் பற்றி சக கவிஞர்கள் புகார் சொன்னார்கள். “ஐயா அவர் ரெட்டை அர்த்தத்துல பாடல்கள் எழுதுறாரு”. அதற்கு பாரதிதாசன் இப்படி பதிலளித்தார், “அவரு ஒரு அர்த்ததுல தான் எழுதுறாரு, அது மோசமான அர்த்தம் தான், நல்ல அர்த்தம் கற்பிச்சுக்கிறதெல்லாம் நீங்கதான்”. எனக்கு படிமம், குறியீடற்ற ஒரு அர்த்தமே போதுமானதாக இருக்கிறது.
இறுதியாக கருணாகரன் வீட்டிற்கே வராமல் போன பின், அந்த வீடு இருண்ட வெளிச்சத்திலிருந்து, வேறொரு நல் வெளிச்சத்திற்கு, அழகிய திரைச்சீலைகளோடு, கண்ணாடியில் தன்னைத் தானே ரசித்துக்கொள்ளக் கூடிய, புன்னகைத்துக் கொள்ளக்கூடிய சரஸ்வதியோடு முடிகிறது. தன் பிம்பம் கண்டு சிரிக்குமிடத்திற்கு வந்துவிட்டாள் சரஸ்வதி, அது ஞானம், அது போதும் எனக்கு.
தேவகி சித்தியின் டைரி
தேவகி சித்தியின் டைரி சிறுகதையின் சாரம், எனக்கு ஒன்றை ரகசியமாக வைப்பதற்கு உரிமை இருக்கிறது. அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்பது தான், அதன் பொருட்டு மனவாழ்வையும் இழக்கத் தயாராகிறாள் தேவகி. இந்த சாரம் திரைப்படத்தில் துல்லியமாக கடத்தப்பட்டிருக்கிறது. சாரமென்பது சமயங்களில் பாலை வடிகட்டும் பொழுது, சல்லடையின் உள் பக்கம் தங்கி நிற்கும் பாலாடையப் போல ஆகிவிடும், இதில் அது சல்லடையக் கடந்திருக்கிறது.
படம் என்ன சொல்ல விழைகிறது என்பதை தேவகி கைனட்டிக் ஹோண்டாவோடு ரயில்வே கேட்டில் வந்து நிற்க, அங்கு காத்திருக்கும் மற்ற வாகனங்களில் ஆண்களே ஓட்டுனராக இருக்கிறார்கள். எல்லோரும் ரயில் கடந்து போக காத்திருக்கிறார்கள், கடக்க வேண்டியது ரயில்வே கேட் மாத்திரமல்ல. கதை சொல்லியான சிறுவனின் கோணத்திலிருந்தே மொத்தப் படமும் நகர்கிறது. பல சமயங்களில் அவனது உயரத்திலிருந்தே தான் கேமராவும் பயணிக்கிறது.
சற்று பிசகினாலும், பிரகடனமாகிவிடக் கூடிய, “ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே” என்ற மலேசியா வாசுதேவன் பாடுவதற்கு சாத்தியமான ஒன்றை, சாயா குடிப்பதே போதுமானது என்று நிறுத்திவிடுகிறார் இயக்குனர். நிறுத்தத்தெரிவது மிக முக்கியம், பல துன்பியல் சம்பவங்கள் நிகழ்வதற்கு நிறுத்தத் தெரியாததே காரணம்.
கருவிலேயே HAND BREAK இல்லாமல் வருபவர்கள் இங்கு ஏராளம். அதிலிருக்கும் மற்றொரு பெரும் சிக்கல், அவர்கள் மோதுவதெனில் மோதட்டும், ஆனால் எப்பொழுதும் அவர்கள் நம்மீது தான் மோதுகிறார்கள். அந்த HAND BREAK-க்கை துல்லியமாக இயக்குகிறார் இயக்குனர்.
ஆதவனின் ஓட்டம்
கதையை வாசித்தவர்களுக்குத் தெரியும், இந்த சினிமா கதையிலிருந்து எவ்வளவு தூரம் மேலெழும்பியிருக்கிறதென, 1970-களில் ஆதவன் அவர் நோக்கில் ஓட்டம் கதையை எழுதுகிறார். ஒரு கதையை திரைக்கதையாக மாற்றும் பொழுது, எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதை பயில்வதற்கான ஆகச்சிறந்த பாடங்களில் ஒன்று ஓட்டம். கதையில் எடுத்தவுடன் ஓடிவிடுகிறாள் சிவரஞ்சனி, சினிமாவில் அப்படி செய்ய முடியாது. மெது மெதுவாக அவள் வாழ்வைச் சொல்லி, அவள் அலுப்பைச் சொல்லி, அவளின் ஏக்கத்தைச் சொல்லி, கோப்பையைத் தேடிப் போய், அது கிடைக்காமலாகி, இறுதியாக மகளுக்காக ஓடி, மகள் வேனிலிருந்து தண்ணீர் கொடுக்க, அதை மறுத்து நிமிரும் போது நிகழும் உச்சம், திரைக்கதையிலும், இயக்கத்திலும், இயக்குனர் செய்யும் கலை மாயம் அது. சிவரஞ்சனியின் அன்றாடத்தைக் காட்சிப்படுத்தும் பொழுது, 4 : 24 வினாடி நீளும் SINGLE SHOT காட்சி ஒன்று உண்டு. தொழிற் நுட்பமாய் எழுதி உங்களை பமுறுத்தும் எண்ணம் நிச்சயமாய் எனக்கில்லை. காமிரா அசையாது நிற்க படுக்கையறை, சமையல் அறை, வரவேற்பறை, என மூன்றுக்கும் மாற்றி மாற்றி ஓடுகிறாள். மூன்றும் அவளை டினோசர் போல அவளைப் பிய்த்து தின்கின்றன. அது 4.24 விநாடி அல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டின் பெண்களின் வாழ்வு அது. அவள் ஓடி முடித்து அடுக்கத்துக்குள் நடந்து வரும்பொழுது, முகுந்த் நாகராஜனின் கவிதை ஒன்று தவிர்க முடியாமல் நினைவிற்கு வருகிறது,
முன்னாள்
‘தினம் சமைக்கும்போது
இதே தண்ணீரில் தான்
நீந்தி சாதனைகள் செய்தோம்
என்று நினைப்பதுண்டா ?’
என்ற கேள்விக்கு சிரித்தாள்,
குடும்பத் தலைவி ஆகி
கொஞ்சம் குண்டாகவும் ஆகிவிட்ட
அந்த முன்னால் நீச்சல் வீராங்கனை.
*
சரஸ்வதியும், தேவகியும் விடுதலை அடைந்துவிட்டார்கள். சிவரஞ்சனி இன்னும் வீட்டிலேயே இருக்கிறாள் என்று கேட்கிறார்கள். கதை நடப்பது 2007. 2022-ல் அவள் எங்கோ ஒரு மைதானத்தில் ஓடிக்கொண்டிருக்கிறாள் என்று நம்புவோமாக. மூன்றாம் பிறை படத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது நண்பர்! ஒருவர் இப்படிக் கேட்டார், அவர் போன்றவர்களை என் வாழ்க்கையில் திரும்ப சந்தித்துவிடவே கூடாது என்று நினைக்கிறேன். “ஏன் கமல் கடைசியில அப்டி அழுகுறாரு. கேத்தி ரயில்வே ஸ்டேசன்ல இருந்து ரயில் போனா என்ன?, அது கீழ மேட்டுப்பாளையம் போக நாலு மணி நேரம் ஆகும், பஸ்ல ஏறுனா ஒன்றரை மணி நேரத்துல மேட்டுப்பாளையம் போயிடலாம், அங்க போயி பாக்கவேண்டியது தான?”. கலையை ஒரு டிரைவரின் கண்ணோட்டத்தில் இருந்து அணுகுவதில் வரும் கோளாறு இது. இயக்குனர் பாலு மகேந்திராவிற்கு இதெல்லாம் தெரியாதா. ஒருவருடைய நினைவிலிருந்து நாம் முற்றிலும் அழிந்துவிட்டால் மறுபடியும் அதை உயிர்பிக்கவே முடியாது. என்பதைத்தான் மூன்றாம் பிறை நமக்குச் சொல்கிறது. இது எனக்கு ஒரு கலைப்படைப்பை எப்படி அணுகக்கூடாது என்பதற்கான ஆகச்சிறந்த பாடம்.
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திலுள்ள மூன்று கதைகளையும் தொகுத்துக்கொண்டால், இதில் வரும் வீடுகள் மிகவும் முக்கியமானவை. சரஸ்வதியின் வீடு, கதையின் பாதியைச் சொல்லிவிடுகிறது. காரை பெயர்ந்த, வெளிச்சம் குறைவான, வண்ணதாசனை துணைக்கு அழைத்தால் அது சிறிது வெளிச்சமும் இல்லை. மனச் சோர்வை ஊட்டக்கூடிய, நம்மை இருமையில் ஆழ்த்த வல்லது அந்த வீட்டின் குறைந்த வெளிச்சம். தற்கொலைக்கு நம்மைத் தூண்டும், அந்த வெளிச்சத்தில் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது. மனப் பிறழ்வோடு இருக்கலாம், அல்லது அங்கிருந்து பிறழ்வு எழுத்துக்களை வேண்டுமானாலும் எழுதலாம். தன் துயரத்தை சொல்லும் பொழுது, அடுத்த வீட்டுக்காரன் அக்குளைத் துடைக்கும் திறந்தவெளி நாகரீகத்தோடு, ஒரே நேரத்தில் இருவர் சேர்ந்து நடக்க முடியாத சந்தோடு, பின்னிரவு வரை இயங்கும் வீட்டிற்கு முன்னால் இருக்கும் தையல் கடையோடு, வாழ்வு எவ்வளவு குறுகிப் போயிருக்கிறது என்பதை, சன்னமாய் அலட்டிக்கொள்ளாமல் முன்வைக்கிறது அந்த வீடு.
தேவகியின் வீடு விசாலமானது, பெரிய அறைகளையும், மாடியையும், வரவேற்பறையையும், தோட்டத்தையும் கொண்டது, ஆனால் அவளுடைய சிறிய டைரியை வைக்க இடமில்லாதது. அதற்கு நிகரான மௌனமான பெரும் அதிகாரத்தையும், மர்மத்தையும் தன்னகத்தே கொண்டது. ஆனால் அவளுடைய சிறிய டைரியை வைக்க இடமில்லாதது. அந்த விசாலமான வீட்டில், மனிதர்கள் மனதளவில் மிகவும் இடித்துக்கொண்டே தான் வாழ்கிறார்கள். ஒருவர் அதிலிருந்து விடுதலை பெறவேண்டுமெனில், வெளியேறத்தான் வேண்டும். தேவகியின் மர பீரோவைப் போல, சிவரஞ்சனியின் வீடு நகர்ப்புறத்தின் குறுகலைச் சொல்லக்கூடிய, ஓட்டப்பந்தைய வீராங்கனையின் வாழ்வு, இருபதடிக்குள் முடங்கிப் போவதை சொல்லும் வாழ்வு, இந்த திரைப்படத்தில் வரும் நடிகர்கள் நமக்கு நடிகர்களாக நினைவில்லை. பாத்திரங்களாகவே இருக்கிறார்கள். அறியப்பட்ட பார்வதி திருவோனம் உட்பட.
MY HAPPY FAMILY என்ற ஒரு ஜார்ஜிய திரைப்படம் ஒன்று உண்டு, அந்த திரைப்படத்தில் நாயகியான குடும்பத்தலைவி திடீரென வீட்டை விட்டு வெளியேறி தனியாக ஒரு வீட்டில் போய் வசிப்பாள். அவளுடைய கணவனும் சகோதரர்களும் அவளை கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். உனக்கு காதலர்கள் இருக்கிறார்களா?, கள்ள உறவு ஏதும் இருக்கிறதா?, என்ற கேள்விகளுக்கு அவள் மிக எளிமையாக பதிலளிப்பாள். இவை எதுவுமே இல்லை எனக்கென்று ஒரு வீடு, ஒரு ஜன்னல், ஒரு தோட்டம், அதற்கே நான் தனியாக வந்தேன் என்பாள்.
பெண் விடுதலை வேண்டும் என்ற பாரதியின் வரிக்கு அடுத்த வரி மிகவும் ஆச்சரியத்திற்க்குறியது, பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காத்திட வேண்டும் என்பார். MY HAPPY FAMILY, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் போன்ற சமகால நுண்ணிய திரைப்படங்கள். பெரியது மாத்திரம் விடுதலை அல்ல சிறியதிலும் உள்ளது சுதந்திரம் என்று முன்வைக்கின்றன. பெண்ணியத்தை பிரகடனமில்லாமல் முன்வைக்கிறது, சரஸ்வதி காப்பி குடிக்கும் பொழுதும், தேவகி டீ குடிக்கும் பொழுதும், MY COUNTRY MY PRIDE என்றெல்லாம் அவர்களால் சொல்ல முடியாது. அது வேறு யாருக்கோவான சொல்லாடல்,
MY COFFE MY PRIDE,
MY TEA MY PRIDE,
என்றே அவர்கள் சொல்லுவார்கள். அவர்கள் குடிப்பது காபியோ டீயோ அதில் ஆவியாக போய்க்கொண்டிருப்பது என்னவென்று நாம் எல்லோரும் அறிவோம்
…………………………………..
கவிஞர் தமிழ்நதி, இயக்குனர் பாலுமகேந்திரா இறந்த பொழுது இப்படி முகநூலில் எழுதினார். “ஒருவரை நாம் ஆழமாக நினைவு கூற, அவர் இறக்க வேண்டியிருக்கிறது”. துன்பியலாக சிவரஞ்சனியை எல்லோரும் பார்க்க, அதற்கு தேசிய விருது கிடைக்கவேண்டி இருக்கிறது. அதற்கு முன்னால் அது உலகமெங்கும் போய், பல்வேறு திரைப்பட விழாக்களில் சர்வதேச விருதுகளைப் பெற, நம்மவர்கள் அந்த இலைச் சரடுகளை மாவிலை தோரனமாக கருதுவார்கள் போல. ஆஸ்கார் கிடைத்தபிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இன்னும் சில கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது.
அச்சமில்லை, அச்சமில்லையில் உதவி இயக்குனராக தொடங்குகிறது அவரது பயணம், சினிமாவில் அவருக்கு வயது 40. வசந்த் & கோ-வின் அது அந்தக்காலம் என்ற புகழ் பெற்ற விளம்பரம், இந்த வசந்திற்கு பொருந்தாது, இவர் மிகவும் நிகழ்காலத்தில் இருக்கிறார். ஜானகிராமனின் மரப்பசுவையும், அசோகமித்திரனின் தண்ணீரையும், இன்னும் பலவற்றையும், சினிமாவாக எடுத்தே தீருவேன் என்று அச்சமில்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
ரிதம் படத்தில், ஒரு புகழ்பெற்ற வசனம் உண்டு, ஐந்து நாட்களுக்கு முன்னால், இயக்குனர் மிஷ்க்கின் பிறந்த தின கொண்டாட்டத்தின் பொழுது, கவிஞர் இசை, வசந்த் சாரை பார்த்த பொழுது, உணர்ச்சி பொங்க, “பல சமயத்தில் இந்த வசனத்த நான் பாத்ரூமில் சொல்லி அழுதுருக்கேன் சார்” என்று சொன்னார், “கார்த்தி நீ ரொம்ப நல்லவன்டா உனக்கு இன்னும் கொஞ்சம் வாழ்க்கையில நல்லது நடந்திருக்கலாம்”
சினிமாவிற்க்குள் இலக்கியத்தைக் கொண்டுவந்தே தீருவேன் என்று பிடிவாதமாக மல்லுக்கட்டும் பிரியத்துக்குரிய இயக்குனர் வசந்த்துக்கு, இன்னும் பெரிய பெரிய நல்லதுகள் நடக்கட்டுமென, எல்லாம் வல்ல இயற்கையிடம் நான் பிரார்த்திக்கிறேன்.
*
பிரமாதமான கட்டுரை
Comment அருமை சார். சிவரஞ்சனி யும்
சில பெண்களும் படம் பார்த்துட்டேன் ஆனால் இந்த கட்டுரை பற்றி தெரியாது.
முக நூலில் நண்பர் சுரேஷ் கண்ணன் எழுதியிருந்தார். அதனால் லிங்க் கிடைத்தது.
தங்களின் மேலான பார்வை வித்தியாசமானது.
ஆழமானது. … இது 30/40 ஆண்டுகால திரைதுறையை அலசுகிறது. வாழ்த்தும் பாராட்டும்.
Excellent article.
மிக மிக சுவாரசியமான கட்டுரை