உலகத்தையே சுருட்டிப் பையில் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாளா? – ரம்யா
(அம்பையின் புனைவுலகத்தை முன்வைத்து)

1
இந்திய விடுதலைக்குப் பின்னான காலத்தில் வளர்ந்து எழுபதுகளில் எழுத ஆரம்பித்தவர் அம்பை. கோயம்புத்தூரில் பிறந்து சென்னையில் மேற்படிப்புக்காகச் சென்று பண்ருட்டியில் பள்ளி ஆசிரியராக சிறிது காலம் வேலை பார்த்துப் பின் தலைநகர் டெல்லியில் முனைவர் பட்டம் பெற்று கல்லூரி விரிவுரையாளராகவும் பணி செய்தவர். கல்வித்துறை சார்ந்து இயங்கியிருப்பதால் இயல்பாகவே ஆய்வுப்பணியின் மேலும் ஈடுபாடு கொண்டவர். தி இந்து, தி எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய நாளிதழ்கள், இதழ்களில் சமூகவியல், பெண்கள் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார். பெண் இசைக்கலைஞர்கள், பெண் நடனக்கலைஞர்கள் பற்றிய அவருடைய ஆய்வுப்பதிவுகளான “Volume 1: The Singer and the Song – Conversations with Women Musicians; Volume 2: Mirrors and Gestures – Conversations with Women Dancers” ஆகிய ஆய்வு நூல்கள் முக்கியமானவை. பெண்களின் ஒலிப்பதிவுகள், வாய்மொழி வரலாறுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை மும்பையில் நிறுவினார். விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்கள், அவர்களின் படைப்புகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்.
விந்தியா மற்றும் சரோஜா ராமமூர்த்தி ஆகியோரைப் பற்றிய தேடலின் போது அம்பையின் விரிவான பணிகளை மேலும் புரிந்து கொள்ள முடிந்தது. விந்தியாவின் தந்தை, மகளின் கதைகள் பத்திரிகைகளில் பிரசுரம் ஆக ஆக, வெட்டி எடுத்து சேகரித்து, பைண்ட் செய்து ஒரு புத்தகம் போல் வைத்திருந்ததை அம்பை மின்வடிவமாக்கி தனது SPARROW அமைப்பின் மூலம் சேமித்துவைத்துள்ளார் என்ற தகவலைத் தெரிந்து கொண்டபோது அவரின் அமைப்புப் பணிகளின் தீவிரம் புரிந்தது. சரோஜா ராமமூர்த்தியின் கதைகளை அவரின் கணவரின் முன்னுரையுடன் காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாக மீள் பிரசுரம் செய்திருக்கிறார். “The Face behind the Mask: Women in Tamil Literature” என்ற ஆய்வு நூல் அவருக்கு முந்தைய தலைமுறை எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு நூல்.
சரோஜா ராமமூர்த்தியை “எழுத்தாளர் மாமி” என அழைக்குமளவு சிறுவயதில் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு பெற்றவர் அம்பை. அறுநூறு சிறுகதைகள் எழுதிய சரோஜாவின் புனைவுலகத்திலிருந்து அம்பை தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பு வழியாக அம்பையையும் பார்க்க, அவதானிக்க முடிந்தது.
சிற்றிதழ்களின் வழியாக மட்டுமே தீவிர இலக்கியம் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ஒரு சிறுகதை அனுப்பினால் அது எப்போது பிரசுரமாகும், திருப்பி அனுப்பப்படும் என்று தெரியாது. பக்க அளவுகளுக்காக வெட்டப்படும் கதைகளுக்காக எழுத்தாளர்-பத்திரிக்கையாளர் சண்டை நிகழ்ந்த காலகட்டமும் கூட. மரபின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவோ, அதிக மீறல்களை எழுதாதவர்கள் என்பதாலோ, சிறு பத்திரிக்கைச் சூழலின் அழகியலுக்கு பொருந்தாமல் எழுதியதாலோ பெரும்பாலான விடுதலைக்கு முந்தைய பெண் எழுத்தாளர்கள் “கலைமகள்” இதழ் வழியாகவே உருவாகி வந்தனர்.
அம்பை எழுத வந்த எழுபதுகளைப் பற்றி வெங்கட் சாமிநாதன் அளிக்கும் சித்திரமும் முக்கியமானது. எழுபதுகளில் பெண் எழுத்தாளர்கள் அதிக எண்ணிக்கையில் எழுத வந்தனர். “எல்லா வெகு ஜனப் பத்திரிகைகளும் புதிதாக வந்த பெண் எழுத்தாளர்களுக்கு மேளதாளத்தோடு விளம்பரம் கொடுத்தன. பத்திரிகைகளின் அட்டையில் பெண் எழுத்தாளர்களின் படங்களே திரும்பத் திரும்ப அலங்கரித்தன. இத்தகைய கோலாகல வரவேற்பு கிடைக்கும் பாக்கியம் ஆண் எழுத்தாளர்களுக்கு இருக்கவில்லை. அந்த சமயத்தில் தான் நிறைய ஆண் எழுத்தாளர்கள் (இதில் புதியவர்கள் மட்டும் அல்ல, பழைய பெயர் பெற்றவர்களும் அடக்கம்) பெண் பெயர்களைச் சூட்டிக்கொண்டு தங்கள் மசாலா எழுத்துக்களை பத்திரிகைச் சந்தையில் கடைபரப்பினார்கள். பெண்கள் பெயரில் இந்த மசாலாக்கள் வெளிவந்தால், புதுமையும் நவீன சிந்தனைகளும் கொண்ட தயக்கமற்ற பெண்களேதான் இவற்றை எழுதுகிறார்கள் என்ற நினைப்பில் வாசகர்களுக்குக் கிடைக்கும் கிளுகிளுப்பு அதிகம் என்ற புத்திசாலித்தனம் இத்தந்திரத்தின் பின் இருந்தது.” என வெங்கட்சாமிநாதன் குறிப்பிடுகிறார். ”பாலியல் கதைகள் பத்திரிகைகளின் விற்பனையைப் பெருக்கும் என்பது வியாபார உலகம் அறிந்த விதி.” என்றில்லாமல் தங்கள் கதையை, தங்கள் தேடலை உண்மையாகச் சொல்ல வந்த பெண் எழுத்தாளர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் குறைவு. அந்த வகையில் அம்பையின் வரவு இலக்கிய உலகில் முக்கியமானதாகக் கருதப்பட்டது.
1970-களில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தவர் அம்பை. இவரின் முதல் சிறுகதை ”சிறகுகள் முறியும்” 1967-ல் வெளியானது. அந்த காலகட்டத்தில் “கலைமகள்” இதழில் அவரின் “ஒரு வெள்ளை மனது” நாவல் தொடர்கதையாக வெளிவந்து கொண்டிருந்தது. முதல் சிறுகதைத்தொகுப்பு 1967 முதல் 1976 காலகட்டத்தில் எழுதப்பட்டு 1976-ல் “சிறகுகள் முறியும்” என்ற பெயரில் பதின்மூன்று சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்தது. இந்த பத்து வருட காலகட்டம் என்பது அம்பைக்கு சென்னையில் தொடங்கி டெல்லி வரையான பயணம் அமைந்த காலகட்டம். ஒரு இள மனது இந்த உலகத்தை அதன் வித்தியாசங்களை, வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை சிதறல்களைச் சந்தித்த காலகட்டத்தில் எழுதப்பட்டது. ”சிறுகதையின் இலக்கணம், வரைமுறைகள், தமிழ் இலக்கியத்துடனான பரிச்சயம், பிற மொழி இலக்கியங்களுடனான தொடர்பு இல்லாமலேயே எழுதிய கதைகள்” என அம்பை தன் முதல் தொகுப்பு கதைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது சொல்கிறார். எழுத்து எனும் விசையினால் மட்டுமே உள் இழுத்து வரப்படும் எழுத்தாளர்கள் வகைமையைச் சேர்ந்தவர்கள் இவர்கள். ஆனால் உள்நுழைந்தபின் அதற்கான தொழில் நுட்பங்களை கைக் கொண்டு, சூழலோடு உரையாடி என தனக்கான பாதையைக் கை கொண்டவர் அம்பை. பயணம் செய்யவோ, கூட்டங்களில் கலந்து கொள்ளவோ எந்தவிதத் தடங்கலும் இல்லாதவர். தன் எழுத்து மற்றும் ஆய்வுப் பணிகளுக்கான வாழ்க்கைச் சூழலை அமைத்துக் கொண்டு செயல்பட்டவர்.
விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்கள் நேர்மறை அம்சம் கொண்ட கதைகளை எழுதினர். பெரும்பாலும் “எல்லாம் நன்மைக்கே” வகைக் கதைகள். ஆங்காங்கே சமூகம், அரசியல் சார்ந்த பெண்ணியக் கருத்துச் சிதறல்களைக் காண முடிகிறது. ஆனால் கதைகளில் திட்டமாக மனதை மையமாக வைத்து பெண்ணியச் சிந்தனைகளை ஆய்வு செய்த முதல் எழுத்தாளர் அம்பை. அந்த வகையில் பெண் எழுத்தின் முதல் உடைவுப்புள்ளி என அம்பையைச் சொல்லலாம். பெண் என தான் உணர ஆரம்பித்ததிலிருந்து நிகழ்ந்த அத்தனை உடைவுப் புள்ளிகளையும் சந்தித்து கேள்வி எழுப்பி, உரையாடி என தனக்கான விடைகளைக் கண்டறிந்த கதைகளாக அம்பையின் முதல் சிறுகதைத் தொகுப்பு உள்ளது.
2
முதல் சிறுகதைத் தொகுப்பின் அம்பை இளமையானவள். இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளை அதன் பேசுபொருள் சார்ந்து நான்கு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை ஆண்-பெண் உறவுச்சிக்கல், உணர்வுகள் சார்ந்த கதைகள். சிறகுகள் முறியும், மிலேச்சன், ஆள்காட்டிவிரல், ஸஞ்சாரி ஆகிய கதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆணிடம் எதிர்பார்க்கும் பெண்ணின் உள உணர்வுகளை அறிவார்ந்து அடுக்கும் உரையாடல்களைக் கொண்ட கதைகள் இவை. மரபுகளை, பெண்ணுக்கான வரம்புகளைக் கேள்வி கேட்கும் தொனி இதிலுள்ளது. ஒரு மீறலை நோக்கிச் சென்று கேள்வியோடு மட்டுமே அமைந்து விடும் கதைகள். இதில் ஓர் கலைஞனும், இனிமையானவனுமான ஒருவனுக்கான தேடலும், உடலாக மட்டுமே அவளைப் பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிபவன் மற்றும் அவள் சுதந்திரமான போக்கின் பொருட்டு உடன் இருந்து கொண்டே அவமதிப்பவன் மேலான விசாரணையும் இருக்கிறது. ஓர் இளம்பெண்ணின் லட்சிய ஆணுக்கான கனவை இக்கதைகளில் அம்பை தேடியிருக்கிறார், இறுதியில் அவர் அமைந்து விடுவது கனவுகள், கற்பனைகளில் மட்டுமே காண முடியும் ஒருவனுடன் தான்.

இரண்டாவது வகைக் கதைகள் அம்மா என்ற பிம்பத்தை மையமாகக் கொண்ட கதைகள். அம்மா ஒரு கொலை செய்தாள், தனிமையின் இருட்டு ஆகிய கதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதில் “அம்மா ஒரு கொலை செய்தாள்” கிளாசிக் கதையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கதை. ஒரு பெண்ணின் முதல் உடைவுப்புள்ளி அங்கிருந்தே ஆரம்பிக்கிறது. அன்பும், உலகத்தின் மேன்மைகளும் ஏற்றப்பட்ட அம்மா எனும் பிம்பம் உடையும் தருணம். இனி திரும்பி வர இயலாத உடைவு ஏற்படும் தருணமிது. ”தனிமையின் இருட்டு” திருமணமானமாகி அம்மா வீட்டுக்கு வந்தவளின் தனிமை, கனவு, கற்பனைகளின் கதை. இருட்டுக்குள், கொள்ளைப் புறத்தில் தனிமையில் ஆழ்ந்து தான் விரும்பும் ஒரு லட்சிய ஆணை, லட்சிய உறவைக் கனவு காணும் ஒருவளின் கதை. “நிஜம் அவளுக்கு வேண்டவே வேண்டாம், இந்த ரகஸிய பூரிப்பே, இந்த சுகானுபவமே போதும்” எனும்படியான கற்பனையான வாழ்வைக் கொண்டவளின் கதை. இறுதியில் முழுவதும் கனவுகளுக்குள் அமிழ்ந்து நிரந்தரமாக உறங்கிப் போவதற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டவளின் கதை. அவளுக்கான தேர்ந்த முடிவு தான் என வாசகரை நம்பச் செய்யும் கதை.
மூன்றாவது அப்பா-மகள் உறவு சார்ந்த கதைகள். எப்போதும் எதிர்மறையாகவே யாவற்றையும் அணுகும், பேசும், சொல்லெடுக்கும் தந்தை. அவரின் ஆண்மையையும், கணவன் என்ற பெருமிதத்தையும் வெறும் மெளனத்தாலேயே கொல்லும் அம்மா. அவரின் பயங்களையும், பயமுறுத்தல்களையும் விசாரணை செய்யும் கதைசொல்லியாக மகள். அவரை நோக்கி கேள்வி கேட்பதாக, எதிர்த்துப் போராடுவதாக, இறுதியில் அவருக்காகவே பரிதாபப்படுவதாக அமையும் கதைகள். மெல்லுணர்வுக்கும் தடித்தனத்திற்குமான மோதல் பற்றிய கதைகள். வல்லூறுகள், ம்ருத்யு ஆகியவை அப்படியான கதைகள். ”ம்ருத்யு” அப்பாவின் ஜனனம் முதல் மரணத்தின் பயம் வரை விசாரணை செய்யும் கதை. “ரெண்டு உடம்புகள் கூடிண்டதுலே நான் பொறந்தேம்பா, உற்பத்திக் கருவி எல்லாம் பொருத்தின ரெண்டு மெஷின்களாலே தான் பொறந்தேன். உனக்கு மென்மை உணர்ச்சி உண்டாப்பா?” என்று பரிதவிக்கும் மகள். ம்ருத்யஞ்ச ஹோமத்தில் மரண பயம் கொண்ட தன் வயதான அப்பா சமர்ப்பிக்கும் நெய்யில் பிணவாடை அடிப்பதாக முடியும் கதை தரும் பிம்பம் அப்பாவாக மனதில் நிற்கிறது.
நான்காவது வகைக் கதைகள் நீக்ரோ பிரச்சனை, மாணவர் புரட்சி, அமெரிக்கா-வியட்னாம் போர், மார்க்ஸியம், இடதுசாரி சிந்தனைகள் கொண்டவற்றைப் பற்றி பேசும் கதைகள். இது சார்ந்த ஓர் அறிவார்ந்த உரையாடலாகவே கதை நின்று விடுகிறது. சூரியன் கதையை உதாரணமாகச் சொல்லலாம். ஆணுக்கு இழைக்கப்படும் அநீதியைச் சொல்லும் கதைகளையும் எழுதியுள்ளார். உயர் மட்டத்தில் ஒருவள் பெண் என்பதாலேயே விரைவில் முன்னேறுபவளாகவும், திறமையிருந்தும் ஆணாக இருப்பதால் முன்னேற முடியாமல் முட்டிக் கொண்டிக்கும் ஆணின் புலம்பல்களை “உடம்பு” சிறுகதையில் காண முடுகிறது. ஆணின் மீதான அந்தக் கரிசனத்தை இறுதித்தொகுப்பில் “சோகமுடிவுடன் ஒரு காதல் கதை” சிறுகதை வரை நீட்டலாம்.
சிறகுகள் முறியும், ஆள்காட்டி விரல் ஆகிய சிறுகதைகளில் சில வடிவச் சோதனைகளைச் செய்திருக்கிறார். அம்பை ஒவ்வொரு தொகுப்பின் முன்னுரையிலும் தமிழை முறையாகப் பயிலாததால் இலக்கணம், பொருள் பற்றி வரும் ஐயங்களைத் தீர்க்க நண்பர்களின் உதவியை நாடியதைப் பற்றியும், அவர்களுக்கான நன்றி நவிழலையும் மறக்காமல் சொல்லிவிடுகிறார். மொழியின் பிரயோகத்திலும் அந்த வித்தியாசத்தை நம்மால் காண முடிகிறது. கதையின் ஒழுக்கே நம்மை அதிலிருந்து விடுதலை செய்கிறது.
ஒட்டுமொத்தமாக முதல் தொகுப்பின் வழியாக அம்பையின் தேடலின் திசை புலப்படுகிறது. தன் வாழ்விலிருந்து தன் அனுபவத்திலிருந்து உருவான கேள்விகளை சிறுகதைகளாக ஆக்க முற்பட்டிருக்கிறார் அம்பை. அறிவார்ந்த தர்க்கத்திலிருந்து அவர் கனவுகள், கற்பனைகள் வழியாக படிமத்தைச் சென்று தொடும் இடம் முக்கியமானது. பேசுபொருளின் முக்கியத்துவம் சார்ந்து அம்மா ஒரு கொலை செய்தாள் கதையும், புதிய வடிவம் மற்றும் பேசுபொருள், அது சென்றடையும் கையறு நிலை ஆகியவற்றைக் கொண்டு சிறகுகள் முறியும், தனிமையின் இருட்டு ஆகிய கதைகளும் இத்தொகுப்பில் முக்கியமனவை. முழுமையை, பூரணத்துவத்தை நோக்கிய தவிப்பு இக்கதைகளில் உள்ளது.
*
அம்பையின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பான “வீட்டின் மூலையில் ஒரு சமயலறை” 1976 முதல் 1988 வரை எழுதப்பட்ட சிறுகதைகளை உள்ளடக்கியது. அம்பை தன் முப்பது, நாற்பதுகளில் எழுதிய கதைகளின் தொகுப்பு இது. இந்தச் சிறுகதைத் தொகுப்பில் அவரின் முந்தைய கதைகளை விடவும் ஓர் இலகுத்தன்மையைப் பார்க்க முடிகிறது.

இந்தத் தொகுப்பிலுள்ள “வீட்டின் மூலையில் ஒரு சமயலறை” சிறுகதை முத்திரைக்கதையாக தமிழ்ச் சிறுகதையுலகில் சொல்லப்படுவது. இக்கதையின் சுவடுகளை அம்பை எழுதிய முதல் சிறுகதையான சிறகுகள் முறியும் என்ற கதையில் சாயாவின் அம்மா பற்றி சொல்லும் சித்திரத்திலேயே காணலாம். “சமயலறையின் இருட்டு மூலையில் அமர்ந்து கொண்டு தலைக்கு மேல் வெறித்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவின் உருவம் உறங்கக் கண்மூடும் முன்போ, நடுப்பகல் தனிமையில் உட்கார்ந்து கொண்டு தைக்கும்போதோ மனக்கண்முன் திடீரென்று தோன்றும்” என்ற வரிகள் அவை. திருமணத்திற்கு முன்பே அவளுக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளையின் தோற்றத்தின் நிமித்தம் அவளுக்காக கண்ணீர் உதிர்த்திருந்த அம்மா அவள். நம்பிக்கையை மட்டுமே கை கொண்டு திருமண பந்தத்திற்குள் நுழையும் சாயா மெல்ல மெல்ல அங்கு பாஸ்கரனின் நடத்தையால், அசிரத்தையால், கஞ்சத்தனத்தால், அன்பினமையால் நொடிந்து முறிந்து போகும் கதையைச் சொல்லும் சிறுகதையில் வரும் அம்மா வெறுமே கையறு நிலையில் மூலையில் அமர்ந்து கண்ணீர் உகுக்க மட்டுமே முடிந்தவள். அந்த அம்மாவை அந்த இருட்டு அறையிலிருந்து வெளிவரச் சொல்லும் கதையாக வீட்டின் மூலையில் ஒரு சமயலறை கதையை நீட்டிக் கொள்ளலாம். “சரியான அளவில் எல்லாம் இடப்பட்ட சமையலில் காதிலும் கழுத்தின் நுதலிலும் உறுத்திய நகையில் பலம் என்று எப்படி நினைத்துக் கொண்டீர்கள்? முங்குங்கள் இன்னும் ஆழமாக. அடியை எட்டியதும் உலகளந்த நீரைத் தொடுவீர்கள். சுற்றியுள்ள உலகுடன் தொடர்பு கொள்வீர்கள்.” என்று சொல்லும் கதைசொல்லியாக இருக்கிறார். இந்த இரண்டு சிறுகதைகளும் இவ்வகையில் ஒன்றை ஒன்று நிரப்புபவை.
இந்தத் தொகுப்பிலுள்ள எந்த உறவுச்சிக்கல் சார்ந்த கதைகளிலும் காமமோ, உடலோ பிரதானமாக இல்லை. மிகஇளமையில் கன்னியாஸ்த்திரி ஆகியோ அல்லது விவேகானந்தர் போலோ உலக மக்களுக்கு நன்மை விளைவிக்க நினைக்கும் ஒருவளாகவே வரும் கதைசொல்லி, அதன்பின் தன் அறிவுகும், சிந்தனைக்கும், சுதந்திரத்திற்கும் ஏற்ற இன்னொரு இணை சார்ந்த அறிவார்ந்த தேடல் நோக்கி நகர்கிறாள். அவள் மனதின் எண்ணங்கள் மெல்ல உருமாறி ஆழ்மனம் நோக்கி வாசகர்கள் செல்ல ஏதுவான படிமங்களை உருவாக்கும் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அந்தவகையில் மஞ்சள் மீன், ஆறு, சில மரணங்கள், வயது பதினைந்து ஆகிய கதைகள் முக்கியமானவை.
பத்து மாதம் முடியும் முன்னரே அவசர கதியில் பிறந்து இறக்கும் ஒரு குழந்தையின் மரணத்தை சந்திக்கும் தாய் அதனை கடலிலிருந்து வெளித்தள்ளப்பட்ட வித்தியாசமான மஞ்சள் மீன் மீண்டும் கடலுக்குள் சென்று கலந்து கடலின் நிறமாவதை நினைத்து தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ளும் கதை மஞ்சள் மீன். ஆறு சிறுகதை தரூ என்ற பெண் முதல்முறையாக சுதந்திரமாக தன் தோழனான உபேனுடன் எதிர்பாராத ஒரு தருணத்தில் ஆற்றில் குளிப்பது பற்றியது. அவள் சிறு வயதிலிருந்து கேள்விப்பட்ட ஆற்றில் ஆரம்பித்து அந்த ஆற்றில் குளிக்கும் அனுபவம் வரை சொல்லப்படும் கதை. “அது ஆறு இல்லை. வாழ்க்கையின் ஆதார நீர், கருப்பை நீர், சிறு கரு மிதக்கும் நீர், ஆறு அதன் பெளதிக நீட்சி தான்” என்று நினைப்பவளாகவும், சிறு மூங்கில் பெட்டியில் குழந்தையை இட்டு ஆற்றில் மிதக்கவிட்ட இதிகாசப் பெண்கள் வரை அதை நீட்டிக் கொள்பவளாகவும் தரூ அமைகிறாள். ஆறு கருப்பை நீராக உருவகமாகி நிற்கும் இடம் அந்தக் கதையை நீட்டுகிறது.
சில மரணங்கள் கதையை அப்பாவின் பிம்பத்தின் நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். ஓர் வயதான விமர்சகரை தன் அப்பாவின் பிம்பத்தோடு ஒப்பிடும் கதை அது. ‘எட்டி உதைப்பேன்’; ‘தன் காலிலேயே நிக்கிற சக்தி’ என்று சொல்லும் இளமையின் அப்பா மெல்லக் கனிந்து ’உங்கள் வீட்டில் ஒரு கால் ஊன்றிக் கொள்ள ஒரு சிறு இடம் தந்தால் போதும்’ என்ற நிலைக்கு வரும் கதையில் அப்பாவின் சிதையில் கருகும் காலையும் விமர்சகரின் காலையும் ஒப்பிடும் இடத்தோடு கதை முடிகிறது. இளமை எதை ஆயுதமாக்கி தருக்கி நிற்கிறதோ முதுமையில், மரணத்தில் அது கருகும் சித்திரத்தை அளிக்கிறார். வயதான அப்பா, வயதான விமர்சகர் என யாவரின் வீழ்ச்சியையும் விலகி நின்று பார்க்கும் பெண்ணின் மன ஓட்டங்கள் வழியாக நாம் சென்று தொடுவது அவ்வாறு ஆணின்/மனிதர்களின் ஏற்றத்தையும், தருக்கத்தையும், வீழ்ச்சியையும் வெறும் பார்ப்பதினூடாக மட்டுமே பெண்/ஒருவர் அடையும் ஞானத்தை.
வயது பதினைந்து கதை உலக வாழ்க்கையைப் பற்றி யோசித்துவிட்டு தியாக வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்த சம்பகத்தின் கதை. பெண்கள் பெரும்பாலும் தனக்கு நிகழ்வதனால் அடையும் துன்பத்தை விட தன் கற்பனைகளால் அடையும் துக்கமே அதிகம். நான்கு சுவற்றுக்குள் அமர்ந்திருக்கும் எந்தத் தீங்கும் அடையாத ஒரு மனம் சென்று தானே எடுத்துப் போர்த்திக் கொள்ளும் துக்கத்தை இக்கதை நகைச்சுவையாக முன்வைக்கிறது. இக்கதையில் சம்பகத்தை விட சிறியவளான செல்லத்தின் காதல் கதை சொல்லப்படுகிறது. இல்லாத காதலன், அவன் தனக்காக செய்து கொள்ளாத தற்கொலை என இல்லாத சோகங்களை எல்லாம் தனதாக ஒவ்வொன்றாக எடுத்துக் கோர்த்துக் கொள்ளும் சம்பகத்தின் கள்ளமின்மையான எண்ணவோட்டங்கள் சிறு புன்னகையை நமக்கு அளிக்கிறது.
இந்தக் கதைகளின் வழியாக அம்பை நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைப் பார்ப்பதினூடாகவும், அங்கிருந்தவாறே வேறுவிதமாக கற்பனையாக்கிக் கொள்வதன் வழியாகவும் அல்லது அதை எளிய பகடியாக்கிக் கொள்வதன் வழியாகவும் கிடைக்கும் ஞானத்தையும், மெளனத்தையும் சென்று தொடுகிறார்.
*

மூன்றாவது தொகுப்பில் விமர்சகர்களால் முக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கதை காட்டில் ஒரு மான். இதை இரண்டாவது தொகுப்பிலுள்ள படிமம் சார்ந்த கதைகளின் நீட்சி என்றே சொல்லலாம். பூக்காத அல்லது பொக்கை உடம்பைக் கொண்ட தங்கம் அத்தையின் வாழ்வை அடுக்கிச் சித்தரிக்கும் கதையது. கதைசொல்லியான அவள் மான் கூட்டத்திலிருந்து விலகி வேறு காட்டுக்குச் சென்று அங்கு மெல்ல பயம் நீங்கி அந்தக் காட்டை தனதாக்கிக் கொள்ளும் கதையை பிள்ளைகளுக்குச் சொல்கிறாள். இறுதியில் நடு இரவில் குத்தி அமர்ந்திருக்கும் அவளையும் அந்தக் கதை வழியான படிமத்தையும் இணைத்து வாசகர் வளர்த்தெடுத்துச் செல்லும் கதை ஒன்று ஆரம்பமாகிறது. இந்த உலகத்தில் வித்தியாசமாக இருப்பவர்கள் யாவரையும் வேறு காட்டிலிருந்து வழி தவறி வந்து இன்னொரு காட்டிற்குள் அதன் சட்ட திட்டங்களுக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு அதில் மகிழ்ச்சியைத் தேடும் மானாக பொருத்திக் கொள்ளலாம்.
இந்தத்தொகுப்பிலுள்ள கிளாசிக் கதையென “பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்” கதையைச் சொல்லலாம். இது ஒரு வகையில் வீட்டின் மூலையில் ஒரு சமயலறை கதையின் நீட்சி எனலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக வேறு பார்வை கொண்டது. அங்குள்ள எதிர்மறைப் பார்வை இங்கு நேர்மறையாகக் கனிந்துள்ளது. கதைசொல்லியான தனத்திற்கும் அவள் அக்காவான பாரதிக்கும் இடையே நடக்கும் கடிதப்போக்குவரத்தாக கதை உள்ளது. அமெரிக்காவிற்கு திருமணமாகிப் போய் விவாகரத்து நிலையில் இருந்த திருமணத்தினால் அவதிக்குள்ளான பாரதியை அங்கிருந்து மீட்டு வரும் அம்மாவின் ஆளுமை சொல்லப்படுகிறது. அதன் பின் அவள் வேறு திருமணம் செய்து கொண்டு நலிவடைந்த நிலையிலும் அம்மா அவள் வாழ்வில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துகிறாள் என்பதைப் பற்றிய கதை. இதில் அம்மா பிறரின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றம் என்பதைத்தாண்டி ஒரு ஆளுமையாக அவள் தன் வாழ்வை தான் எந்த நிலையிலும் மகிழ்ச்சியாக பரபரப்பாக, பயனுள்ளதாக, கருவியாக வைத்துக் கொள்கிறாள் என்ற தன்மையை வியக்கும் விதமான கதை.
“அம்மாவின் பிளாஸ்டில் டப்பாவைத் திறந்தால் ஒரு சின்ன அம்மன், சிவலிங்கம், கணபதி, முருகன், தவழும் கிருஷ்ணன் இத்யாதி கடவுள் உள்ளே. இவள் தனிமனுஷியாக வந்திருக்கிறாளா இல்லை, உலகத்தையே சுருட்டிப் பையில் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாளா என்று தெரியவில்லை” என்று தனத்திடம் பாரதி கூறுகிறாள். அம்மா மிகப் பெரிய பிரபஞ்சத்தையும் ஒன்றுமில்லாததிலிருந்து ஆரம்பிக்க முடியும் என்ற வியப்பை அடையும் மகள்கள். ஒன்றுமில்லாதது என்று சொல்லிவிட இயலாது. ஒரு ப்ளாஸ்டிக் டப்பா, அதில் பராசக்தி முதலியோர் கொண்ட சிறு சிலைகள். இங்கிருந்து தனக்கான ஆற்றலை அம்மா எடுத்துக் கொள்கிறாள். எல்லா ஒன்றுமில்லாததிலிருந்தும் “கிருஷ்ணா ரா” என்றதும் பிரபஞ்சமே வந்து அவளுக்காக விரிந்து நிற்கும் சித்திரத்தை அளிக்கும் முக்கியமான கதை. இக்கதையை வாசிக்கும் போது கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் நினைவு வந்தது. கிருஷ்ணம்மாள் செயற்களத்தை வாழ்வாகக் கொண்டவர். ஆனால் அதுவல்லாமலும் வீட்டை, தன் குடும்பத்தை, தன் சுற்றத்தை, தன்னைச் சுற்றியிருக்கும், சூழலை, இயற்கையை என ஒரு குறும் பிரபஞ்சத்தை நேராக்கும் அனைத்து அம்மாக்களையும் உணர்வுப் பெருக்குடன் இக்கதையில் நினைத்துக் கொள்ள முடிந்தது.
’ஆரம்பகாலக் கவிதைகள்’ என்ற கதை இலகுத்தன்மையின் உச்சம் எனலாம். துள்ளலும் இளமையும் கொண்ட ஞானத்தைத் தேடும் சிறுமியாக தன்னை நம்பும் கதைசொல்லிக்குக் கிடைக்கும் ஒரு நீல நிற டயரியில் பக்திக் கவிதைகள் எழுத ஆரம்பிக்கிறாள். பின்னர் தன் வீட்டில் வேலை பார்க்கும் கெம்பம்மா அவள் கணவனால் சந்தேகப்படப்பட்டு வன்மையாக அடிக்கப்படும் சம்பவத்தை நேரில் பார்த்த பின் தனிமை, ஏக்கம், கனவு, ஊமை ஆகியவற்றை கருப்பொருளாக்கி கவிதைகள் எழுதி, அதன்பின் மெல்ல கவிதைகள் எழுதுவதைக் கைவிடும் கதை. இக்கதை சொல்லப்பட்டுள்ள விதம் நகைச்சுவையானது. ஐம்பதுகளில் அம்பை எழுதிய இந்தக் கதை அவர் மேலும் இலகுவாகியிருப்பதையே காண்பிக்கிறது.
பின் வரும் தொகுதிகள் அனைத்தையும் இந்த வகைமைகளுக்குள்ளேயே அடைக்கலாம். வடிவம், மொழி சார்ந்து அதன்பிறகு எந்த சோதனைகளையும் செய்து பார்க்கவில்லை. வடிவம் பொருத்து ஆரம்ப காலகட்டத்தில் சில முயற்சிகள் செய்து பார்த்துள்ளார். அதன் பிறகு கதைசொல்லலுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இந்தத் தொகுப்பில் அம்பை பயணம் 1, பயணம் 2, பயணம் 3 ஆகிய கதைகளை எழுதியுள்ளார். கதையின் பின்புலம் பயணமாக உள்ளது. அதில் நிகழும் சம்பவங்கள், எதிர்பாராமல் சந்திக்கும் மனிதர்களுடனான உரையாடல் வழியான கதை சொல்லல். அன்றாடத்திலிருந்து வெளியே சென்று எழுத இந்தப் பயணக் கதைகள் அம்பைக்கு உதவியிருக்கலாம். அடுத்தடுத்த தொகுதிகளில் அம்பை இதே பாணியிலான இருபதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார். பாணிகள் எழுத்தாளர்களுக்கு ஒரு வசதியான சட்டகத்தையும், போலவே வாசகர்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பையும் அளிக்கின்றன. ”ஒரு சட்டகத்தின்” கதைகள் எப்போதுமே அதன் செல்லும் திசையில் தேக்கத்தை சூடிக் கொள்கின்றன. ஆனால் இவை அவ்வெழுத்தாளர்களின் தொடர் வாசகர்களுக்கு அவருடனான ஆழமான பயணத்தின் பாதை.
மினுங்கு கதையில் “வாலை உயர்த்தியபடி திடீரென்று ஒரு அணில் வந்தது… இவளிடம் ஏன் வந்தது? தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? பருத்த வாலைத் தூக்கியபடி ஒரு அணில் அவள் அருகில். அவ்வளவுதான். அதற்குமேல் எந்த ஆழத்துக்கும் போகவேண்டாம். எல்லாம் கண்ணெதிரே நிதர்சனம். பீன்ஸ் கொடியைப் பற்றிக் கொண்டு ஏறிப்போன ஜாக் மாதிரி எல்லாவற்றையும் கொடியாக்கி ஏறினால் முடிவில் ஒரு அரக்கன் இருக்கலாம். இது. இப்போது. இந்த அணில். இவள். இவ்வளவுதான் நிஜம். மழை நிஜம். தண்மை நிஜம்” என்ற வரி வருகிறது. மிகுந்த கேள்விகள், தர்க்கங்கள் என ஆரம்பித்து அம்பை பிற்பாடு தன் கதைகளில் வந்து அமைந்து புள்ளியும் இது தான். இந்த அமைதி தான். இந்தத் தண்மை தான்.
3
பெண் எழுத்து அல்லது பெண் தன்மை எழுத்து என்பது பரந்து விரிந்து அகன்று சென்று அடைவதல்ல. இயல்பினாலேயே பெண் குறுகுபவள், அகழ்ந்து அகழ்ந்து மேலும் செல்பவள். பரந்து விரிந்து சென்று ஆண் அடையும் ஒன்றை பெண் தன் இயல்பினால் இருக்கும் இடத்தில் அறிபவள். இங்கு ஆண் என்பதை ஆண் தன்மை எனவும் பெண் என்பதை பெண் தன்மை என்றும் சொல்லலாம். ஒரு பெண் ஆண் தன்மை கொண்ட படைப்புகளை எழுதலாம். போலவே ஆணும்.
பெண் தன்மை கொண்ட எழுத்துக்களே உலக அளவிலும், இந்திய அளவிலும் பெண்கள் அதிகமும் எழுத முற்பட்ட கதைகள். நம் இந்திய அளவில் அப்படியான ஒரு பெண் தன்மை எழுத்தின் உச்சம் ஆஷாபூர்ணாதேவி. நான்கு சுவற்றுக்குள் நிகழும் வாழ்க்கையை அதன் முழுமைத் தன்மையுடன் எழுதியவர் என்பதால் அவரின் கதைகள் கிளாஸிக் தன்மையுடன் இன்றளவும் நிற்கின்றன. பெண்களின் அன்றாடமும் யதார்த்தமும் கலையாவது இங்கு தான். வீட்டை, சமையல் அறையை அதிலுள்ள பிரபஞ்சத்தை அம்பை எழுதவில்லை. அதனால் நம்மால் அவரை ஆஷாபூர்ணாதேவியுடன் ஒப்பிட இயலாது.
ஆனால் அம்பை அதற்கடுத்த கட்டத்தில் வெளிக்கும் வீட்டுக்கும் இடையில் நின்று கொண்டு வீட்டை, சமயலறையை, அதில் புழங்கும் மனுஷிகளின் துயரங்களை கரிசனத்துடன் எழுதியவர். அங்கிருந்து அவர்கள் மீட்கப்பட வேண்டும் என நம்பியவர். போலவே சுதந்திரமாக படித்து எழுந்து பறந்து செல்லும் சிறகுகள் முளைத்தபின் பெண் ஏற்கனவே இருக்கும் மரபான உறவுகளுக்கும், புதிய உறவுகளுக்குள்ளும் அலைக்கழியும் உணர்வு சார்ந்த பிரச்சனைகளையும் தன் புனைவுகள் வழியாக விசாரணை செய்தவர். சிறகுகள் முறியும், அம்மா ஒரு கொலை செய்தாள், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ஆகிய கதைகளில் ஏக்கம், கோபம், கையறுநிலை என ஆகி தன் அனுபவங்களின் வழியாக அப்பெண்களில் குடியிருக்கும் ஞானத்தை, அவர்கள் ஒன்றுமற்றவற்றிலிருந்து உருவாக்கும் பிரபஞ்சத்தை பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் கதையில் வந்து அடைந்திருக்கிறார். சமயற்கட்டும் வீடும் மெய்மைக்கான இடங்களும் தான் என்பதை அறிந்தவராக அமைகிறார் எனலாம். அதன் பின்னான அம்பையின் கதைகளில் தென்படும் அமைதியும் படிமமும் அளப்பரியது. அம்பைக்குப் பின்னான இதன் தொடர்ச்சியை நாம் உமாமகேஸ்வரியில் காணலாம். ஆனால் அவர் குடும்பத்திலிருக்கும் மனிதர்களுக்குள்ள உணர்வுச் சிடுக்குகள், கைவிடுதல்கள் வழியாக தன் விசாரணையைச் செய்தவர்.
நம் தமிழிலக்கிய மரபில் மணிக்கொடி காலகட்டத்துக்குப் பின் சுந்தரராமசாமி காலகட்டம் வரை ஒரு வகையான எழுத்து விமர்சகர்களால் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வந்தது. மையத்தில் இந்த எழுத்து உருவாகி வந்து பிற எழுத்துக்கள் ஓரங்கட்டப்பட்டு வந்தன. உதாரணமாக கிருத்திகாவின் வஸேச்சுரம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அது பெண் தன்மை எழுத்து இல்லை. அது உறவு மீறல், காம மீறல் பற்றியது. நவீனத்தில் மனிதனின் குரூரமும், வன்மமும், வன்முறையுமே பிரதான பேசுபொருள். புனிதம் என்ற ஒன்றே இல்லை எனுமளவான மனநிலை இருந்த காலகட்டம். இன்றளவிலும் நாம் இலக்கியம் சார்ந்து கிளிஷேவாக சொல்லப்படும் மேற்கோள்கள் யாவும் இத்தன்மையவையே. ஆனால் நன்மையை, கள்ளமின்மையை தன் இயல்பினால் சொல்லும் பெண் எழுத்துக்கள் புறந்தள்ளப்பட்டு ”மாமி எழுத்து” என்று சொல்லப்பட்டது. ஒரு காலகட்டத்தின் பெண்தன்மை எழுத்து முழுவதுமாக இந்தச் சிந்தனைப்போக்கால் துளிர்விடக்கூட ஆரம்பிக்கவில்லை என்பதை நீலி வழியாகப் பார்க்க முடிகிறது.
முன்னோடிகளால் முன்வைக்கப்பட்ட அம்பையின் படைப்புகளிலும் இத்தகைய பண்புகளே இருப்பதைக் காணலாம். இதன் வழியாக அம்பை இடதுசாரித்தன்மையுள்ள எழுத்தாளராகவே நமக்கு இலக்கியத்தில் அறிமுகமாகிறார். ஆனால் அவர் படைப்புகள் வழியாக நாம் சென்று தொடுவது வேறொரு அம்பையை. அன்னையைப் புரிந்து கொள்ள முற்பட்ட சிறுமியை. சமூகம், அரசியல் சார்ந்த காலமாற்றத்தால் இனி ஒரு ஆஷாபூர்ணாதேவி இங்கு உருவாவது சாத்தியமில்லை. உருவாகியிருக்க வேண்டுமானால் அம்பைக்கு முன் நிகழ்ந்திருக்க வேண்டும். அத்தகைய பெண்களை அம்பையின் கரிசனத்தின் வழியாக நாம் கடந்து சென்று விட்டோம் என்றே தோன்றுகிறது. அதற்குப் பின்னான காலகட்டத்தில் நாம் அரசியல் சமூகவியல் சார்ந்த பெண்ணியப் பேசுபொருட்களால் அதை முற்றாக இழந்துவிட்டோம். கடந்து சென்ற இப்பாதையில் உணர்வுகள் சார்ந்து ஆழங்களைத் தொடும் படைப்புகள் எழுதிய உமாமகேஸ்வரி, சந்திரா தங்கராஜ் ஆகியோரின் சில படைப்புகளைக் காணமுடிகிறது.
ஆம். பெண் தன்மை என்பது மெல்லுணர்வுகளால் ஆனது. கனவும் கற்பனையும் தன் கருவியாகக் கொள்வது. பரந்து அகன்று சென்று உலகியல் வெற்றியைப் பேசுவது அல்ல. குறுகி அகழ்ந்து சென்று ஆழத்தைப் பேசுவது. ஆனால் அதில் செவ்வியல் தன்மையை எட்டிய படைப்புகள் சிலவே. தமிழ் இலக்கியத்தில் அதன் முதன்மைப் புள்ளி என அம்பையைச் சொல்லலாம்.

வெண்முரசுக்குப் பின்னான இக்காலகட்டம் என்பது தமிழ் இலக்கியத்தில் செவ்வியல் காலகட்டம் எனலாம். செவ்வியல் அம்சம் என்பது ஆண், பெண் என்ற பாகுபாடில்லாதது. சங்ககாலப் புலவர் பாடல்களில் அவ்வாறு நம்மால் பிரித்தறியவியலாத அம்சமே உள்ளது. பிரித்தறியவியலாத இந்த அம்சத்திற்கு எதிர்த்திசையில் இரு தன்மை எழுத்துக்களும் சம அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குரலும் கொண்ட காலகட்டம் இது. அதற்கான வாய்ப்பு பின்நவீனத்துவ காலகட்டத்தில் இயல்பாக எழுந்தும் வந்தது. எல்லா வகையான எழுத்துக்களுக்கும் இங்கு இடம் உண்டாயிற்று. போலவே பெண் தன்மை எழுத்துக்களுக்கும். அரசியல் சார்ந்த தீவிர பெண்ணியக் குரல்கள் கலாச்சாரம், பண்பாடு சார்ந்த பெண்ணியக் குரல்களுக்கு சரியாக இடம் அளிக்கவில்லை என்றே இன்று தோன்றுகிறது. அதையும் மீறி எழுந்த எழுத்தாளரான உமாமகேஸ்வரியே தீவிர இலக்கியவாதிகளின் கவனத்தைப் பெற்றார்.
ஒரு பெண் ஆணாக மாறி விரிந்து பரந்து மீறிச் சென்று எழுதுவதை மட்டுமல்ல, அன்னையாக இருந்தும் அன்பு, கருணை, பெண் தன்மை கொண்டு எழுதியும் இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்யலாம் என்பதை இன்று உணர்ந்திருக்கிறோம். இதில் விடுதலைக்கு முன் அவ்வகையான எழுத்துக்கள் துளிர்விட்ட பெண் எழுத்துக்களின் அடுத்தக்கட்ட நகர்வாக அம்பை அமைகிறார். புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கும் நவீன தமிழ் செவ்வியல் சிறுகதை எழுத்தாளர்கள் பட்டியலில் மிக நிச்சயமாக வைக்கப்பட வேண்டிய பெண் எழுத்தாளர் அம்பை. பெண் என்றில்லாமலும் முன்னோடிகளின் வரிசையில் அமைய வேண்டியவர் அம்பை. தொடர்ந்து வாசிக்கப்பட்டு வாசகர்களின் ரசனை, விமர்சனங்களால் மேலும் கண்டடையப்பட வேண்டியவர்.
*