சவரக்கத்தி முனையில் ஒரு மூன்வாக் நடனம் – விக்னேஷ் ஹரிஹரன்

பெருந்தேவி

ஜெர்மானிய கவிஞர் ஃப்ரெட்ரிக் ஷில்லரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை, இனிமேல் அறிந்துகொள்ளலாம். முக்கியமானவர். மேற்கத்திய இலக்கிய விமர்சனம் கோட்பாடுகள் சார்ந்த தனித்த துறையாக உருமாற்றம் அடையாத காலத்திலேயே சில அசலான அழகியல் கோட்பாட்டுக் கட்டுரைகளை எழுதியவர். பெரும்பாலும் படைப்பாளிகள் அவர்கள் வாழ்ந்த காலத்தின் அடிப்படையிலேயே வகைமைப்படுத்தப்பட்டு வந்த காலத்தில் படைப்பாளிகளை அவர்களின் ரசனையின் அடிப்படையில் வகைமைப்படுத்த முயன்றவர். அவரது “On Naïve/Simple and Sentimental Poetry” என்ற கட்டுரை மிகவும் புகழ் பெற்றது. ஆழமானது.

அந்த கட்டுரையில் ஷில்லர் கவிஞர்களை இரண்டு வகைமைகளாக பிரிக்கிறார்: Naïve and Sentimental. இந்த சொற்கள் நேரடியாக தமிழில் “வெகுளிகள் மற்றும் உணர்ச்சிவயப்பட்டவர்கள்” என்றே மொழிபெயர்க்கப்படும். ஆனால் ஷில்லர் இவற்றுக்கு அளிக்கும் பொருளோ முற்றிலும் வேறானது. அவர் இந்த சொற்களை “தன்னிச்சையானவர்கள் மற்றும் அறிவுஜீவிகள்” என்ற தோராயமான பொருளில் பயன்படுத்துகிறார். அந்த கட்டுரையின்படி கவிதைகள் பெரும்பாலும் இயற்கையிலிருந்தே பிறக்கின்றன. இல்லை. கட்டுரையின் பொருளில் இயற்கை என்ற சொல்லும் சரியானதா என்று தெரியவில்லை. பிரபஞ்சம் என்று மொழிபெயர்க்கலாமா? இல்லை. மெய்மை என்றே மொழிபெயர்க்க வேண்டும்.

Naïve கவிஞர்கள் தங்களை அந்த மெய்மையின் ஒரு பகுதியாக கருதுபவர்கள். தன்னிச்சையானவர்கள். தங்கள் கவிதைகளையும் அவற்றின் சொற் சேர்க்கைகளையும் ஆராயாதவர்கள். கவிதைகள் குறித்த அறிவார்த்தமான ஆய்வுகளில் ஈடுபடாதவர்கள். கவிதை என்பது மெய்மை கவிஞனில் பதிக்கும் தடம். அதில் கவிஞனின் தனிப்பட்ட அறிவுக்கோ ஆளுமைக்கோ பங்கு எதுவும் இல்லை என்று நம்புபவர்கள். கவிதை நிகழ்வது, இயற்றப்படுவது அல்ல என்ற நம்பிக்கை கொண்டவர்கள். ஷில்லர் கதேவை இதற்கான உதாரணமாக முன்வைக்கிறார். சமகால தமிழ்ச் சூழலில் இதற்கான சிறந்த உதாரணம் தேவதேவன் தான்.

மேற்கூறப்பட்ட அனைத்திற்கும் எதிர் நிலையில் இருப்பவர்கள் sentimental கவிஞர்கள். கவிதையை அறிவார்த்தமாக அணுகுபவர்கள். மொழிப் பிரயோகத்தின் மீதான முழுமையான போதமுடையவர்கள். கவிதையையும் கவிதையியலையும் சொல்லெண்ணிச் செதுக்கக் கூடியவர்கள். தமிழ்ச் சூழலில் இந்த வகைமையின் மிகச் சிறந்த பிரதிநிதி தேவதச்சன் தான்.

இப்படி இரண்டாகப் பிரித்தவுடன் இதில் எது சிறந்தது என்று நாம் உடனடியாக விவாதிக்கத் தொடங்கிவிடுவோம் என்று ஷில்லருக்குத் தெரிந்திருக்கிறது. கெட்டிக்காரர். எனவே அவரே தீர்ப்பும் வழங்கிவிட்டார். இந்த இரண்டு வகைமைகளை வசதிக்காக உருவாக்கிக் கொண்டாலும் கவிஞர்களின் ஆளுமைகளில் இவை முழுமையாக தனித்தனியாக இருப்பது இல்லை.

எல்லா Naïve கவிஞரிலும் கொஞ்சம் Sentimental தன்மையும், எல்லா Sentimental கவிஞரிலும் கொஞ்சம் Naïve தன்மையும் இருக்கும் என்கிறார். கவிஞர்களின் ஆளுமைகளில் எத்தகைய தன்மை அதிகம் தென்படுகிறது என்ற அடிப்படையிலேயே இந்த வகைமைகள் அர்த்தப்படுகின்றன. இவற்றில் எதுவொன்றும் மற்றதை விட சிறந்தது இல்லை.

சரி, இதன் அடிப்படையில் கவிஞர் பெருந்தேவியை எப்படி வகைமைப்படுத்தலாம்? இந்த கேள்விக்குள் செல்வதற்கு முன் வேறு ஒரு கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டும். எதற்காக மெனக்கெட்டு ஒரு படைப்பாளியை வகைமைப்படுத்த வேண்டும்? அழகியல் ரசனைக்கு ஏது வகைமை?

அழகியல் ரசனைக்கு வகைமைகள் அவசியமில்லை. ஆனால் ரசனையோ ஒன்று இல்லை. ரசனையென நாம் கருதுவது நம் சூழல், அனுபவங்கள், வாசிப்பு, அரசியல் நிலைப்பாடு, நண்பர்கள், ஆசிரியர்கள் என பல புறக்காரணிகள் நம் அகத்தோடு உரையாடி உருவாக்குவது. அழகியல் ரசனையும் அவ்வாறே எண்ணற்ற சாத்தியங்களின் சேர்க்கைகளால் உருவாக்கப்படுவது. எனவே பெரும்பாலும் அழகியல் ரசனை என்பது நம் தனிப்பட்ட எல்லைகளுக்கு உட்பட்டது. புறவயமாக நிரூபிக்க முடியாதது. இதனாலேயே பலரும் கோட்பாடுகளிடம் தஞ்சம் அடைகின்றனர். கோட்பாடுகள் ஒப்பு நோக்க பாதுகாப்பானவை. புறவயமானவை. அழகியல் ரசனையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு தங்கள் எல்லைகள் சார்ந்த தன்னுணர்வும் அதே நேரத்தில் அந்த ரசனையின் தனித்தன்மையை பாதுகாக்கத் தேவையான அளவு ஆணவமும் ஒருசேர இருந்தாக வேண்டும்.

நம் எல்லைகள் சார்ந்த தன்னுணர்வின் ஒரு பகுதியாகவே அந்த எல்லைகளை விரிவாக்க வேண்டும் எனும் போதமும் இருக்க வேண்டும். அந்த போதம் இல்லாமலாகும் பொழுது நம் ரசனை தேக்க நிலையை அடைந்துவிடுகிறது. பி. எஸ். ராமையாவுக்குப் பின் தமிழில் சிறுகதை ஆசிரியர்களே இல்லை, பாரதிக்குப் பின் தமிழில் கவிஞர்களே இல்லை என்று உளரத் தொடங்கிவிடுகிறது. எனவே அழகியல் ரசனையில் வகைமைகளின் பங்களிப்பு என்பது நம் இயல்பான பொது ரசனையின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள படைப்புகளை அணுகுவதற்கான வழிகளை விரிவுபடுத்துவது மட்டுமே. தண்ணீரை தராசால் அளக்கக் கூடாது என்று அறிவதற்கு முதலில் நமக்கு தண்ணீரின் தன்மை என்ன? அது சர்க்கரையிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்று தெரியவேண்டும் இல்லையா? அதுதான் அழகியல் ரசனையில் வகைமைகளின் பயன்.

இப்போது முதல் கேள்விக்கு வருவோம். (அல்லது அது இப்போது இரண்டாவது கேள்வியா?) கவிஞர் பெருந்தேவியை மேற்கூறிய இரண்டு வகைமைகளில் எதில் சேர்ப்பது? முதல் பார்வைக்கு ஷில்லரே கூறுவதுபோல் பெருந்தேவி இந்த இரண்டு வகைமைகளுக்கும் இடையில் ஊடாடிக்கொண்டே இருக்கிறார். சில கவிதைகளில் தன்னிச்சையான வெடிப்பின் சாயலும் சிலவற்றில் அறிவார்த்தமான சிந்தனையின் சாயலும் வெளிப்படுகின்றன. ஆனால் இதுவரையிலான கவிதைகளில் ஒப்புநோக்க அறிவார்த்தத்தின் செல்வாக்கு கூடுதலாக இருப்பதான சித்திரம் உருவாகிறது. எனவே என்னளவில் பெருந்தேவியை Sentimental-Naïve கவிஞர் என்றே வகைமைப்படுத்துவேன்.

பெருந்தேவியின் கவிதைகள் பெரும்பாலும் அறிவார்த்ததிற்கும் உணர்ச்சி வேகத்துக்கும் இடையில் ஊசலாடுகின்றன:

இருப்பின் நிகழ்தகவு

சிறிய அகல்
அதனினும் சிறிய அதன் சுடர்
பெருங்காற்று
இன்னும் பெரிய அதன் இரைச்சல்
என்ன நடந்திருக்கலாம்
என்பதற்கும்
என்ன நடந்திருக்க வேண்டும்
என்பதற்கும் இடையே
அல்லோலகல்லோலப்படுகிறது.

நேர்

கவிதையெனப்படுவது
யாதெனில்
உன் கண்ணை அது
நேருக்கு நேர் பார்க்க வேண்டும்
தவிர்த்துப்
பார்வையைத்
திருப்பிக்கொண்டால்
உன் தாடையை உடைத்து
முகத்தை தன் பக்கம்
திருப்பிவிடுமோ என
அச்சம் தருகிற வகையில்
வலிமையாக
அந்த வலிமை
அதன் நேர் மட்டுமே.

இந்த வகையான கவிதைகளில் வெளிப்படும் உணர்ச்சி கொஞ்சம் எளிமையானது. அறிவார்த்தத்திலிருந்து கனிசமான தூரம் விளகி நிற்பது. தன்னிச்சையானது. பெரும்பாலும் பெருந்தேவியைப் பற்றிய உரையாடல்களில் அவருக்குச் சார்பாக எடுத்துக்காட்டப்படுவது. ஏனென்றால் இவை நவீன தமிழ்க் கவிதையின் இயல்பான ரசனைக்கு நெருக்கமானது.  

ஆனால் பெருந்தேவியோ இந்த வகையான கவிதைகளில் மட்டுமே செயல்படுபவர் அல்ல.

(திபெத்திய) இறந்தவர்களின் புத்தகத்திலிருந்து

இறப்பில் காத்திருந்தடையும்
வெண்ணொளி வெறிக்கக் கூசி
விழிகள் பஞ்சடைய
இங்குமங்கும்
அன்றும் பிறகும் என்றும்
தடுமாறி அல்லலுறுமுன்:

இரு நிகழ்வுகளுக்கிடை
இரு நினைவுகளுக்கிடை
கனவுக்கும் விழிப்புக்குமிடை
மின்னாதுமின்னும் அவ்வப்
பொழுதின் குழந்தை ஒளித்துளிக்கு
விழிகளுனதை ஈகையிட்டுப் பழகு

ஒன்றிலிருந்து இரண்டும்
ஈராயிரமும் லட்சமும் லட்சத்துக்
கோடிகளுமாகி
தானற்றுப்
பல்கும்
தன்
கமலம்
விரியும்

உலகளத்தல்

கவிதை
உலகை அளக்கிறது
நான்கு வரியில்
எவர் தலையிலும் அடி வைக்காமல்
எவரையும் பாதாளத்துக்குள் அழுத்தாமல்
கவிதை உலகை
(அதன் பொழுதுபோக்க)
அளக்கும்போது
ஒவ்வொன்றுக்கும்
உயரம் தருகிறது
எவரும் காணாத
அதன் தலை
மேகக்கூட்டங்களுக்குள்
புதைய
அர்த்தம் மின்னிமின்னி
அந்தக் கிரணக்
கண்ணாமூச்சி
ஆட்டத்தில்
பொம்மைகள் நாம்
உயிர்வசப்பட்டோம்

முதலில் குறிப்பிட்ட கவிதைகளுக்கும் இரண்டாவதாக குறிப்பிட்ட கவிதைகளுக்கும் இடையில் எத்தனை பாரதூரமான வேற்றுமை இல்லையா? ஆனால் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே பேசுபொருளைத்தான் கையாளுகின்றன. முந்தையது இருப்பின் ஊசலாட்டம் என்றால் பிந்தையது இருப்புக்கும் இன்மைக்குமான ஊசலாட்டம். முந்தையது கவிதையின் யதார்த்த முகம் என்றால் பிந்தையது அதன் கற்பனாவாத முகம். முந்தையது உலகியல் என்றால் பிந்தையது மெய்யியல். அது மட்டுமா?

முந்தைய கவிதைகளுக்கும் பிந்தையவற்றுக்கும் இடையில் உள்ள மொழி மற்றும் வடிவ வேறுபாடுதான் எத்தனை? முந்தையவற்றை ரசிக்க நமக்கு சிறிதளவு கவிதை ரசனை இருந்தால் போதும். பிந்தையவற்றுக்கோ திபெத்திய மரணத்தின் புத்தகம் என்றால் என்ன? அதன் சூத்திரங்கள் எவ்வாறு எழுதப்பட்டிருக்கும்? அவற்றின் மொழி அமைப்பு எப்படி இருக்கும்?  வாமன அவதாரம் என்றால் என்ன? என்றெல்லாம் தெரிய வேண்டும். கவிதையின் வடிவமும் கவிதையில் பங்காற்றுவதை புரிந்துகொள்ள வேண்டும். கவிதைக்கு இடையில் இருக்கும்:

(அதன் பொழுதுபோக்க)

என்ற தனித்த வரி, எவ்வாறு அந்த கவிதையின் முந்தைய வரிகளில் வெளிப்படும் கவிதையின் மீதான பக்தி பாவத்தின் கட்டுகளைத் தளர்த்தி கவிதையை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது என்று உணரவேண்டும்.

நம் ரசனையின் அடிப்படையில் நமக்கு முதலில் எது உவப்பாக இருக்கிறது என்பது மாறுபடலாம். ஆனால் பெருந்தேவி இந்த இரண்டு வகையான கவிதைகளிலும் பங்காற்றியிருக்கிறார். என்னளவில் இரண்டாவது வகைக் கவிதைகளே அவரது தனித்துவம் என்று நினைக்கிறேன். இதுவே அவரது Sentimental முகம்.

இந்த முகமே அவரது கவிதைகளில் உட்பிரதித் தன்மை கொண்ட வரிகளாகவும் பிற படைப்புகள் சார்ந்த குறிப்புகளாகவும் வெளிப்படுகிறது. அது சரியாக அமைந்த கவிதைகளில் அந்த குறிப்புகள் கவிதைகளின் அர்த்தச் செறிவை கூட்டுகின்றன.

இளம் கவிஞர்களுக்கு

ஊரில் மிச்ச மீதி மரம் இருந்தால்
அதில் உங்களைக் கட்டிவைத்து அடித்தால்கூட
உறுதியாக நிற்க வேண்டும்
‘கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதுவோம்.
வெற்றுத்தாளை மேம்படுத்தினால் போதும்’
என்கிறான் மகாகவி பர்ரா
இந்நாள் வரை
கவிதையைக் கவிதையைவிட
தைரியமே காப்பாற்றியிருக்கிறது
வரலாற்றில்
கடக்க ஒரு மரப் பாலமும்
பேசச் சில மண்டையோடுகளும் இருந்தால்
போதாதா?

“இந்த கவிதையில் பர்ராவின் மேற்கோள் என்ன பங்களிப்பை ஆற்றுகிறது? கவிதையை ஏன் இப்படி எழுதவேண்டும்?” போன்ற கேள்விகளை இந்த கவிதையை நோக்கி நாம் கேட்கவே முடியாது. ஏனென்றால் நாம் கேட்கும் முன்னரே கவிதையில் இடம்பெறும் பர்ராவின் வரிகள் அதற்கு பதிலளித்துவிடுகின்றன. இங்கு கவிதை நம்மை முன்னரே கணித்து நாம் ஆற்றவேண்டிய எதிர்வினையை உருவாக்கி அதை எதிர்கொள்ளும் ஒரு தேர்ந்த மாயாஜால வித்தைக்காரரைப் போல் இருக்கிறது. அந்த வித்தையில் பர்ராவும் கலந்துகொள்கிறார்.

ஆனால் இந்த வகை குறிப்புகள் பொருந்தாத கவிதைகளும் பெருந்தேவியின் கவிதைகளில் இருக்கின்றன.

வேறு வழி

Bynge Appஇல் ராஜேஷ் குமாரை
பதினைந்து லட்சம் பேர் படிக்கிறார்கள்
என்றார் ஒரு நண்பர்
ஐரோப்பாவில் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியை
பத்து மில்லியன் பேர் படிக்கிறார்கள்
என்றேன் நான்
ஒரு வேண்டாத திகைப்பின்
வாயை மூடுவதற்கு
அடுத்த கண்டத்திலிருந்து
கையைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது

இதில் இருக்கும் எவையும் கவிதைக்கு எதையும் சேர்ப்பதில்லை. உரைநடையில் வரும் இத்தகைய தேவையற்ற குறிப்புகளை எளிதாக மன்னிக்கும் மனது கவிதையில் அதைச் செய்ய மறுக்கிறது.        

பெருந்தேவியின் கவிதைகள் பலதரப்பட்ட பேசுபொருள்களைக் கையாளுபவை. கவிதை, மொழியியல், அரசியல், மெய்யியல், இருத்தலியல், பெண்ணியம், பகடி என்று பல்வேறு பேசுபொருள்களைக் கையாளுகின்றன. ஆனால் பேசுபொருட்களையும் கூறுமுறைகளையும் ஊடறுத்துப் பாயும் அவற்றின் பிரதானமான விசாரணையாக இருப்பது காலமும் இருப்பும்தான். அந்த விசாரணையோடு இணைந்தே பயணிக்கும் அவரது கவிதைகளின் பிடித்தமான விளையாட்டாக சொல்-பொருள்-சமூகம் இவற்றுக்கு இடையிலான உறவு சார்ந்த விசாரணைகளும் இருக்கின்றன.

ஆனால் ஆயிரம்தான் இருந்தாலும் இது நீலி இதழுக்காக எழுதப்படும் கட்டுரை இல்லையா? எனவே பெருந்தேவியின் பெண்ணியக் கவிதைகளைப் பற்றி மேலும் சிலவற்றை கூறவேண்டும் என்று நினைக்கிறேன்.

பெருந்தேவியின் பெண்ணியக் கவிதைகள் ஒரே வகையானவை அல்ல. அவற்றுக்குள் பல விதமான முயற்சிகளை அவர் செய்து பார்க்கிறார். எந்தவொரு குறிப்பிட்ட வகைமைக்கும் தன்னை ஒப்புக்கொடுக்காதவராக இருக்கிறார். ஆனால் அவருடைய பெண்ணியக் கவிதைகளின் பொதுச் சிறப்பாக நான் கருதுவது அவற்றில் உள்ள பணிவிணக்கமற்ற (Irreverence) தன்மையே. தன் பிரதான பேசுபொருளான பெண் வாழ்வின் அனுபவங்களின் மீதோ தான் குறிப்புணர்த்தும் விஷயங்களின் மீதோ எந்த விதமான பணிவிணக்கமும் அற்று இந்த கவிதைகள் இலகுவாக செயல்படுகின்றன.

நீங்கள் கைதூக்க அல்ல இக்கேள்வி

பொதுக் கழிவறைச் சுவர்களில்
கலை ஆர்வத்தோடு
கணவனைப்
படம்போட்டு பாகம் குறிக்க
எந்தக் கண்மணிதான்
நினைப்பதில்லை?

என்ற கவிதை அத்தனை இலகுவாக ஆண்களின் கீழ்மையை நேரடியாக பகடி செய்தபடியே பெண் வாழ்வின் நுட்பமான ஒரு இடத்தை தொட்டுவிடுகிறது. ஆனால் அதே நேரத்தில்:

மாதுளம் பூ

மாதவிடாய்க்கு முன்னிரவு
தற்சுகத்தின் பயன்
அறிந்த பெண்கள் கொடுத்துவைத்தவர்கள்
ஒரு கிறுக்குக் குதிரை
சில தாறுமாறு ஓட்டங்கள்
ஒரு முகம்
அதைச்
சிற்றோடையில் வீழ்ந்து
தன் உதடுகளை மட்டும்
அசைத்த நிலா என்றோ
ஒரு பெயரின் வன்தியானம்
என்றோ விவரிக்கலாம்
அட, குதிரை தொடுவானத்தைத்
தொட்டுத்தான் நின்றது
மாதுளம் பூ
பூத்தது காலையில் என்றால்
புரிந்துகொள்ளமாட்டீர்களா என்ன

போன்ற கவிதை அதே அளவு நுட்பமான வேறு ஒரு பகுதியை முதல் கவிதைக்கு நேர் எதிர் திசையில் பயணித்து படிமங்களின் வழியே வந்தடைகிறது. மேலும் இவை இரண்டும் நவீனம் (கொஞ்சம் Sentimental) என்றால், அதற்கு முற்றிலும் மாறான மரபான (கொஞ்சம் Naïve) தளத்திளிருந்து:

மாறாதவள்

உத்தராயணத்தில் செந்நிறம்
தக்ஷிணாயணத்தில் வெண்ணிறம்
ஈசனின் தக்கோலம்.

தேவி எந்நிறம்?
மணந்து மலர்த்திய
காருண்யம்.

என்ற கவிதை செயல்படுகிறது. வேறு எங்கோ ஒரு இணைப் பிரபஞ்சத்தில் இந்த கவிதையை நிச்சயமாக பிரமிளோ விக்கிரமாதித்யனோதான் எழுதியிருப்பார்கள்.

இப்படி பல்வேறு தளங்களில் செயல்படக்கூடிய பெருந்தேவியின் பெண்ணியக் கவிதைகளில் சமீப காலமாக பெண்ணியப் பொதுச் சிந்தனைப் போக்குகளின் ஆதிக்கம் மிகுந்திருப்பதாக நினைக்கிறேன். அதன் காரணிகளை ஆராய்வது இந்த கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் என்னளவில் அதன் குறைகளை சுட்டிக்காட்டுவது அவசியம் என்று நினைக்கிறேன்.

பெண்கள் ஏன் டில்டோவை உபயோகிக்க வேண்டும்?

இருபத்தி நான்கு செட்டிங் இருக்கும்
ஒரு காதலனாவது கணவனாவது
உங்களுக்கு இருந்திருக்கிறானா?
முக்கியமாக
உம்மணாமூஞ்சி டில்டோ
என்று ஒன்று
கிடையவே கிடையாது
எந்தக் கடையிலாவது
கேட்டுத்தான் பாருங்களேன் 

இந்த கவிதையில் இருக்கும் பகடிக்கான கடும் பிரயத்தனத்துக்கும் முதல் கவிதையில் நாம் காணும் தன்னிச்சையான பகடியின் ஆழத்துக்கும்தான் எத்தனை பாரதூரமான வித்தியாசம்? பெருந்தேவி போன்ற ஒரு முக்கியமான கவிஞரிடமிருந்து இத்தகைய மிகை எளிமைப்படுத்தல்கள் எவ்வாறு உருவாகின்றன? அவை எப்படி உருவாயின? போன்ற கேள்விகள் சமகால தமிழ்க் கவிதைச் சூழலை புரிந்துகொள்ள முக்கியமானவை. மேலும்,

விழிப்புணர்வு

நான்கு ரௌடிகள்
ஒரு பெண் பாம்பை
வன்புணர்வு செய்துவிட்டார்கள்
அந்த நாளிதழில் செய்தியை
இப்போதுதான் வாசித்தேன்
ஒன்று கவனித்தீர்களா?
இப்போதெல்லாம்
கற்பழிப்பு என்று
எவனும் எழுதுவதில்லை

என்ற கவிதையில் பகடி இயல்பாக அமைந்திருக்கிறது. ஆனால் முதல் கவிதையின் பகடியில் இருந்த இயல்பான யதார்த்ததுக்கு மாறாக இதில் ஒரு கருத்து மையப் பேசுபொருளாகிவிடுகிறது. பாலியல் சொல்லாடல்கள் குறித்த பெருந்தேவியின் விரிவான கட்டுரைகளை ஆர்வமாக வாசிக்கும் எனக்கு அதே கட்டுரையின் பகடிக் கவிதை வடிவம் அத்தனை சுவைக்கவில்லை. காரணம், கவிதை என்பது (எந்த அழகியல் தரப்பை சார்ந்து இருந்தாலும்) அனுபவங்களுக்கான வெளிப்பாட்டு முறைதானே தவிர கருத்துக்களுக்கானது அல்ல. அவை காலம் சார்ந்த அனுபவங்களாகவோ வெளி சார்ந்த அனுபவங்களாகவோ இருக்கலாம். அதற்கு அப்பாலும் செல்லலாம். ஆனால் அவை வெறும் கருத்துக்களாகவோ வியாக்கியானங்களாகவோ இருக்க முடியாது. தமிழ் மரபிலக்கியங்களில் சங்கப் பாடல்கள் கவிதைகளாக கருதப்படுவதும் இரட்டைப் புலவர்களின் “பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் தலையை காலில் தேய்” என்ற பாடல் எத்தனை மொழி வித்தைகள் காட்டினாலும் சூத்திரமாகவே கருதப்படுவதும் இதனால்தான்.   

பெருந்தேவியின் கவிதைகளில் வடிவச் சோதனைகளுக்கும் பஞ்சமில்லை. தொடர்ந்து தன் கவிதையின் வடிவங்களிலும் கூறுமுறைகளிலும் பல சோதனைகளை அவர் செய்து பார்க்கிறார். ஆரம்ப காலங்களில் அவரிடம் காணப்படும் மரபான கவிதை முறைகளை மீறுவதற்கான பிரயத்தனமே பிற்காலங்களில் அவரை எதிர் கவிதைகளை நோக்கி இட்டுச் சென்றிருக்க வேண்டும். வெறும் வடிவச் சோதனைகளாக இருந்த “ஆசை முதலாய் எழுத்தெல்லாம்” போன்ற ஆரம்ப கால கவிதைகளுக்கு மாறாக “ஃபேஸ்புக்கில் நவீன கவிதை” போன்ற அவருடைய இன்றைய முயற்சிகள் மிகச் சிறப்பான எதிர் கவிதைகளாக உருப்பெறுகின்றன.

ஆசை முதலாய் எழுத்தெல்லாம்

மிகமிகமி மிக மி மிகமி கமிகமிக
                     கமிக மிகமிக க கமி
ஆசை தலைதெரித்தோ
டும் கண்ணிகளின் பெட்
டிகள்
கழன்று
மிகமிகச்
சுற்றும் வட்டப்பாதை
விழி
அகாலத்தில்
ஒற்றைப் பாலத்தில்
முக்கியம்
அவாவிய ஒவ்வொரு பெயரும்
தெறித்துக் குப்புற
வாய்க்குள்
மரித்து
அநாமதேயமாதலும்.

ஃபேஸ்புக்கில் நவீன கவிதை

யாருடனோ இருப்பதற்காக
யாருடனும் இல்லாமலிருக்கவில்லை
யாருடனும் இருக்காதிருக்கத்தான்
யாருடனும் இல்லாமலிருக்கிறேன்
என்னுடனும்

என்ற கவிதையை எழுதிக்கொண்டே
ஃபேஸ்புக்கில் போட்டபோது
வந்த பின்னூட்டங்கள்
கௌரிஸ்ரீ: நானும்தாங்க யாருடனும் இல்லை
Softiesoftie:
சுதா மணிமாறன்: நலமாக இருக்கிறீர்களா? சிங்கப்பூரில்தானே
பரமானந்தம்: நகுலன் ஏற்கனவே எழுதியிருக்கிறார். அதோட தலைப்பு கூட இப்படித்தான் வரும்.
Nilachoru: காலையில் எழுந்தவுடன் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்ட கவிதை.
கலாரசிகன்: என்னுடனும் என்பது உங்களுக்குக் கவிதை தெரிந்தாலும் தமிழ் தெரியாததைக் காட்டுகிறது. என்னோடும் என்றுதான் எழுத வேண்டும்.
triendietrendie: அருமை!!!
மருகாதவன்: புரிஞ்ச மாரி இருக்கு. புரியாத மாரியும் இருக்கு. நோட்ஸ் ப்ளீஸ்
Rashir: யாருக்கும் தான் யார் இருக்காங்க? உலகம்னா அப்படித்தான் இருக்கும்.
கவிஞர் No.1: உங்களோடதான் கவியுலகமே இருக்கே.
செத்துப்போன கவிஞர்கள்ளாம் இருக்காங்க. நீங்கதான் தமிழின் சிறந்த கவிஞர்னு நாளைக்கு சேலம், அடுத்த நாள் ஆத்தூர் கூட்டத்தில பேசப்போறேன்.
நேரக் காதலன்:   அடுத்த தொகுப்பு எப்போது?
Thigil Thigil: வாழ்த்துகள்!
கடலைமுத்து: வாழ்த்துகள் மேம்!
வளரும் கவிஞர் No. 2: உள்குத்து மாதிரி இருக்கு. அவரையானு தெரியல. இன்பாக்ஸ் பாருங்க.
Jaggukani: Best wishes!
Manisha Organics: ஆர்கானிக் முட்டை மாம்பழம், பருப்பு வகைகள் வாங்க 8373373973, 9338362636, 3 ஆதிகேசவா தெரு, West Saidapet

என்ற கவிதையை படிக்கையில் அடக்க முடியாமல் சிரித்தபடியே பெருந்தேவியை வியக்கிறேன். ஆனால் இது வெறும் வடிவ விளையாட்டு இல்லையே. எத்தனை இயல்பாக நம் காலத்திற்கான சிறந்த பகடிக் கவிதைகளுள் ஒன்று உருப்பெற்றிருக்கிறது. அது எதை பகடி செய்கிறது? ஃபேஸ்புக்கையா? நம் தற்கால இலக்கியச் சூழலையா? அதன் அபத்தத்தையா? அதை வாசிக்கும் நம் தனிமையையா? அதன் பொருளின்மையையா? நம் காலத்தையா? நம் வாசிப்பையா? வாழ்க்கையையா? எதை பகடி செய்கிறது அது? சரியாகத் தெரியவில்லை. ஆனால் அடக்க முடியாமல் சிரித்தது மட்டும் சத்தியம். ஞானக்கூத்தனின் “காலவழுவமைதி” கவிதையை வாசித்தபோது எனக்கு வந்த சிரிப்புக்கு நிகரான சிரிப்பு அது.

விக்னேஷ் ஹரிஹரன்

இப்போது மீண்டும் ஷில்லரிடமே செல்வோம். ஷில்லர் தன் கட்டுரையில் மேற்கூறப்பட்ட வகைமைகளை முன்வைக்கையில் வேறு ஒன்றையும் கூறுகிறார். மகத்தான கவிஞர்கள் அனைவரும் இந்த வகைமைகளின் சரியான கலவைகளே என்கிறார். அவர்கள் இயற்கையை/மெய்மையை அறிந்துகொண்டே அதனிடம் தன்னை ஒப்புக்கொடுக்கவும் ஒப்புக்கொடுத்தபடியே அதை அணுக்கமாக அறியவும் கற்றவர்கள். அதன் வழியே இயற்கையில்/மெய்மையில் மட்டுமே சித்திக்கும் பரிபூரணமான சுதந்திரத்தில் திளைக்கவும் தேவைப்பட்டால் அதை கொஞ்சம் பிட்டு தங்கள் வாசகர்களுக்கும் பங்குபோட்டு கொடுக்கவும் கற்றவர்கள். ஆம், இது கொஞ்சம் மிகை எளிமைப்படுத்தல்தான். ஆனால் முற்றிலும் பொய்யில்லை. மகத்தான படைப்பாளிகள் பலரும் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அவர்கள் Naïve-Sentimentalistகளாக இருந்தாலும் சரி. Sentimental-Naïveகளாக இருந்தாலும் சரி. உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் நீங்களே பெருந்தேவியின் கவிதைகளை படித்துப் பாருங்களேன்.

***

பெருந்தேவி: தமிழ்விக்கி

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *