மஞ்சள் கதிரின் பின்னே மறைந்த கனவுகள் – லதா அருணாச்சலம்

(சிமாமந்தா எங்கோஸி அடிச்சியின் (Chimamanda Ngozi Adichie) நாவலான மொழிபெயர்ப்பு நாவல்: அரை மஞ்சள் சூரியன்)

நாவல்

அறியப்படாத நிலத்தையும் அதன் கலாச்சார மாறுபாட்டையும் அரசியல் பொருளாதார நிலைப்பாடுகளையும் அவ்விடத்தின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்வதற்கு மொழியாக்கங்கள் பேரளவு துணை புரிகின்றன. ஒரு படைப்பை மொழிபெயர்ப்பதன் வாயிலாக மூல ஆசிரியருக்கு நிகராக இல்லையென்றாலும் ஒரு மாற்றுக் குறைவாக அவர் அடைந்த உணர்வு நிலைகளை மொழிபெயர்ப்பாளராலும் எட்டிவிட முடியுமென்று நான் நம்புகிறேன்.  

சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த, ஹௌஸா (இஸ்லாமிய) இன மனிதர்களின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கையையும் சமூகப் பின்னணியையும் பதிவு செய்த ’தீக்கொன்றை மலரும் பருவம்’ எனும் நைஜீரிய நாவலைத் தொடர்ந்து இம்முறை அதே நாட்டைச் சேர்ந்த ஈக்போ இன மக்களின் வாழ்க்கையும் தனி மனித உணர்வுகளும் அரசியல் கிளர்ச்சிகளும் யுத்தமும் கருதுகோள்களாக அமைந்த மாபெரும் வரலாற்றுப் புதின ஆவணமாக இன்றளவும் பேசப்படும் ‘சிமாமந்தா அடிச்சியின்’ Half Of A Yellow Sun என்னும் புகழ்பெற்ற நூலை மொழிபெயர்க்கும் வாய்ப்பு அமைந்தது எனது நல்லூழ். ஏனெனில் இந்நூல் நைஜீரியாவில் நான் வாழ்ந்த காலகட்டத்தை மீண்டும் உயிர்ப்புடன் கண்முன் காட்டியது. நாவலில் இடம் பெறும் நகரங்களின் பெயர்கள், ஈக்போ, ஹௌஸா, யொரோபா இன மக்களின் பெயர்கள், அவர்களின்   பேச்சுவழக்கு, உடல்மொழி, கதைக்களம் என யாவும் புத்தக அடுக்கிலிருந்து எடுக்கப்பட்ட பழைய வாசனை வீசும் புத்தகமொன்றின் பக்கங்களைத் திறப்பது போல அந்நாட்டில் நான் கழித்த நாட்களை மீளவும் வாழ்ந்தது போன்ற உணர்வை அளித்தன. அன்று என்னைச் சுற்றியிருந்த மனிதர்களின் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் நினைவுகளின் வலிகளையும் வேதனைகளையும் ஓரளவு அறிந்திருக்கிறேன் என்று உணரும் அதே வேளை அவர்களுடைய இலக்கியங்களை வாசிக்கையில் நான் காணாதவையும் அறியாதவையும் அதிகம் என்ற ஆதங்கம் சேர்ந்த இருமையும் மனதில் எழுகிறது. அப்படி அறியாதவைகளின் உலகு சிறுகச் சிறுக விரிந்து செல்வதை இம்மொழியாக்கத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உணர்ந்தேன். அவ்வுலகத்தை அனைவரும் அறியும் வண்ணம் தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்னும் எண்ணத்தின் விளைவே இம்மொழிபெயர்ப்பு.

வர்க்க பேதங்கள் நிலவும் மனிதர்களின் வாழ்க்கை முறை, அறிவுத்தளத்தில் இயங்கும் கல்வியாளர்களின் சிந்தனை, காலனியாதிக்கத்திலிருந்து மீண்ட தேசத்தின் பண்பாட்டு அடையாள மாற்றங்கள் மற்றும் உறவுகளுக்கிடையேயான அகச்சிக்கல்கள் போன்றவற்றைக் கொண்டு துவங்கும் இந்நாவல் மெல்ல மெல்ல விரிவடைந்து போர்ச் சூழலையும் இடம்பெயர்தலையும் நோக்கி நகர்கிறது. அதன்பின் காணக் கிடைப்பது உலகின் ஒரு துண்டு நிலமாகிய நைஜீரியாவின் உள்நாட்டுப் போரின் விரிவான சித்திரம். அந்தச் சூழலில் வாழ்ந்த தன்னுடைய முன்னோர்களின் சொந்த அனுபவங்களைக் கேட்டறிந்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டும் துல்லியமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டும் நாவலைக் கட்டமைத்திருக்கிறார் சிமாமந்தா அடிச்சி. பன்முகத்தனமை கொண்ட தனது ஆற்றல்மிகு படைப்புகளின் வாயிலாக உலகத்தின் பார்வையில் ஆப்பிரிக்க இலக்கியத்தின் தவிர்க்க முடியாத முகமாக உள்ளவர் சிமாமந்தா அடிச்சி.

தெற்கு நைஜீரியாவில் 1960-களின் அரசியல் கலவரங்கள், மதப்பிரிவினைகள், இன அடையாளச் சிக்கல்கள் மற்றும் அதிகாரத்துக்கான பேராசை போன்றவற்றால் உருவாகிய பியாஃப்ரா (Biafra) குடியரசு ஒரு காலத்தில் பல்லாயிரக்கான மக்களின் கனவாகவும் சுதந்திர வேட்கைக்கான தீர்வாகவும் இருந்தது. அந்தக் கனவின் பின்னணியில் உண்மையான உணர்வுகள், உறவுகள், காதல்கள், பிறழ்வுகள், துரோகங்கள், வறுமை, பட்டினி, இடப்பெயர்வு, சிதறிப்போன குடும்பங்கள், மங்கிப்போன லட்சியங்கள் யாவற்றையும் பிணைத்து எழுதப்பட்ட புதினம் Half of a Yellow Sun. பியாஃப்ராவின் கனவையும் அதன் சிதைவையும் நேர்மையாக விவரிக்கும் அதே வேளையில் மனிதர்களையும் அவர்தம் இயலாமையையும் கடும் சூழலையும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் அணுகுகிறது.

வளம் பெருகிய நாடான நைஜீரியாவில் பன்முகத்தன்மை வாய்ந்த கலாச்சாரமும் பண்பாட்டுக் கூறுகளும் உடைய வெவ்வேறு நிலப்பரப்பைச் சேர்ந்த மக்கள் வசித்த போதிலும்  முன்னர் ஒரு காலத்தில்  ஒருவரையொருவர் சீண்டாமலும் தலையிடாமலும் போரின்றி அமைதியாக அவர்கள் வாழ்ந்து வந்தனர். தொன்மம் சார்ந்த இலக்கியங்களும் இசையும் மூத்தோர்களின் பாடல்களாலும் கதைகளாலும் செவி வழியாகவே அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்ந்தன. காலத்தின் மாற்றங்கள் தீண்டாமலிருந்தவரை சலனமற்ற நதியென அவர்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. மாற்றம் என்பது மேம்பட்ட அறிவை, அறிவியலை, தொழில்நுட்பத்தை, முன்னேற்றத்தைக் கொண்டு வரக்கூடியது. ஆனால் தனக்கான விலையாக அது கோரி நிற்பது எளிய மனிதர்களின் அடையாள இழப்பையும் அமைதியான வாழ்க்கையையும் என்பதே நிதர்சனம். அவ்வகையிலேயே ஆப்பிரிக்காவில் நுழைந்த எண்ணற்ற காலனியாதிக்கங்கள் அம்மக்களின் எளிமையையும் அறியாமையையும் பயன்படுத்தி அந்நிலத்தைத் தங்களுக்குள் கூறு போட்டுக் கொண்ட வரலாறையும் சேர்த்துப் பதிவு செய்கிறது இந்நாவல்.

காலனியாதிக்கத்தின் எச்சங்களாக நிலைத்து விட்ட மேலைக்கலாச்சாரமும் நாகரிகங்களும் மக்களைப் பீடித்துக் கொண்ட போதும் அவற்றிலிருந்து விலகித் தமது கொள்கைகளையும் லட்சியங்களையும் கைவிடாமல் வாழும் மனிதர்களும் இருந்தார்கள். தங்களுடைய தொல்குடி வழக்கங்களோடும் அரசியல் நியாயங்களோடும் வாழ்ந்த இவர்களது வாழ்வு எவ்வாறு சிதைகிறது என்பதை சீனுவா அச்பேவின் ஆகச்சிறந்த படைப்பான ”Things Fall Apart”  நாவலில் காணலாம். அதன் தொடர்ச்சியாக நேர்மையற்ற அரசின் அதிகாரத்தாலும் திட்டமிடப்படாத விடுதலை வேட்கைப் போரினாலும் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் இழப்புகளையும் இந்நாவலில் நுட்பமாக எழுதியிருக்கும் சிமாமந்தா சொந்த மக்களையே அவை காவு வாங்கியதையும் மிக முக்கியமான அம்சமாகப் பதிவு செய்துள்ளார்.

ஆங்கிலேயரிடமிருந்து 1960 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற நைஜீரியா சுதந்திர தேசத்தை வலுவாகக் கட்டமைக்கத் துணைபுரியும் புதிய பொருளாதாரம், கல்வி வளர்ச்சி, தேசநலன் சார்ந்த கொள்கைகளின் கனவுகளோடு நிலைநிற்க முயன்றது. ஆனால் தவிர்க்கவே இயலாத அடையாளச் சிக்கல்களாலும் இன வேற்றுமையாலும் அதிகாரப் பகிர்வுகளின் பேராசையாலும் வடக்குப் பகுதி பெரும்பான்மை ஹௌஸா இனத்தவருக்கும் தெற்கு பகுதியானது அங்கு வசிக்கும் ஈக்போ இனத்தவருக்குமிடையே சென்று சேர்ந்தது. இதன் காரணமாக இரு பிரிவினருக்குமிடையே உள்நாட்டு வெறுப்பு ஆழமாக வேர்விடத் தொடங்கியது. அன்றாட வாழ்வில்  நெருக்கமாக இருந்தவர்கள் கூட எதிரிகளாக மாறி ஒருவருக்கொருவர் சமர் புரிய நேர்ந்ததை காலத்தின் அவலமாகவும் அறியாமையின் விளைவாகவும் எடுத்துக் கொள்ளலாம். எத்தனை வளங்கள் கொட்டிக் குவிந்திருந்தாலும் தன்னலமற்ற தலைவர்கள் இல்லாத தேசம் வீழ்ச்சியை நோக்கி எவ்வாறு அதிவேகத்தில் செல்லக்கூடுமென்பதை அறிய நைஜீரியாவின் வரலாறே போதுமானது. காலனி அரசுகள் சில நாடுகளைப் பிரித்து ஆட்சி புரிந்த அதே வேளையில் இணையும் சாத்தியமே அற்ற குழுக்களைக் கொண்ட சில நாடுகளை தங்களது சுய லாபத்துக்காகவும் நிர்வாக வசதிக்காகவும் ஒன்றிணைத்து ஆண்டார்கள். புதிய எல்லைகளை வகுத்தார்கள். அதுதான் நைஜீரியாவில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் ஆதி விதை. வெறுப்பையும் நிரந்தரப் பகைமையையும் மக்களிடையே வளர்த்து விட்ட பின் வளங்களைச் சுரண்டிக் கொண்டு நீங்கிச் சென்றார்கள். அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட, மேலை நாட்டு ஆட்சி முறையிலும் வாழ்க்கைத் தரத்திலும் மோகம் கொண்ட தலைவர்களால் மெல்ல மெல்லச் சிதைவுற்றது நைஜீரியா.

இந்த நாவலை வாசிக்கத் தொடங்கும் முன்பே பியாஃப்ரா தோன்றிய அரசியல் பின்னணி, ஒரு சுதந்திர நாடாக மலரும் முன் கருகிய அதன் கனவுகள், அதனால் நேர்ந்த ராணுவ உயிரிழப்புகள், பட்டினிச் சாவுகள், நாட்டையே உருக்குலைத்த பஞ்சம், எதற்காகப் போரிடுகிறோம் என்றே அறியாத இளம் பிஞ்சுகளின் சீரழிந்த எதிர்காலம் போன்றவற்றை அறிந்து கொள்வது நாவலின் உள்ளடக்கத்தை தெளிவாக அணுக உதவி புரியும்.

1914-1960-காலனித்துவ காலத்தில் ஒன்றிணைக்கப்பட்ட பகுதிகள் நைஜீரியா என்று அழைக்கப்பட்டது. பல்வேறு கலாச்சாரம், மதம் மற்றும் சமூக அமைப்புகள் கொண்ட 250-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் ஒன்றிணைக்கப்பட்டன.

அவற்றில் முக்கிய இனக்குழுக்கள்:ஹௌஸா- (ஃபுலானி) வடக்குப் பகுதி – இஸ்லாமியர்கள், அரசியல் ஆதிக்கம் நிறைந்தவர்கள்); யொரோபா- மேற்குப் பகுதி கிறித்துவர்கள், பாரம்பர்ய சிந்தனை உடையவர்கள்; ஈக்போ- தென்கிழக்குப் பகுதி கிறித்துவர்கள், தனி நபர் சிந்தனை உடையவர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிகம் கொண்ட நைஜீரியாவின் அறிவுத்தளமாக அறியப்பட்டது)

காலனி ஆட்சி பெரும்பாலும் வடக்குப் பகுதியை (ஹௌஸா) ஆதரித்தது, அதன் காரணமாக நாட்டில் அரசியல்,சமூக, பொருளதாரச் சமச்சீரின்மை உருவாகியது.

1960– நைஜீரியா சுதந்திரம் பெற்றது.

ஒருங்கிணைந்த கூட்டாட்சி அரசு (Federal Government) ஆட்சி புரிந்த போதும் இனவாதமும் பிராந்திய அரசியல் ஆதிக்கமும் நிலவின. அதன் விளைவாக இனக்குழுக்களின் சுதந்திர, பிரிவினைவாத சிந்தனையும் ஆழமாக வேர் விடத் தொடங்கியது.

1964- ஆம் ஆண்டுதேர்தலில் வடக்கு, மேற்கு, கிழக்கு பகுதியைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களின் அதிகாரம் மற்றும்  ஆட்சி வெறியின் காரணமாகத் தேர்தலில் மோசடிகளும் வன்முறைகளும் கட்டற்றுப் பெருகின.

1965- மேற்குப் பகுதியில் Operation Wetie என்று அழைக்கப்படும் வன்முறை கூடிய முதல் தீவிர அரசியல் கலகம் ஏற்பட்டது.கடந்த தேர்தலில் வென்றவர்கள் மற்றும் ஊழல்வாதிகள்  பலர் கொல்லப்பட்டனர்.

1966– ஒற்றைக் குழுவின் அதிகாரத்தை எதிர்த்தும் அதிகாரத்தைப் பரவலாக்கும் நோக்கத்திலும் ஈக்போ அதிகாரிகள் கலகம் செய்தனர்.அதில் அதிபர் உட்பட பல ஹௌஸா வடக்குத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈக்போ இனத்தைச் சேர்ந்த ஜெனரல் ஜான்ஸன் அக்குயி இரோன்ஸி என்னும் அதிகாரி புதிய அதிபராகப் பதவியேற்றார்.

1966 -ஆம் ஆண்டு வடக்குப் பகுதியில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலான கலகம் மூண்டது. ஈக்போ மக்களுக்கெதிரான இனப் படுகொலையில் ஏறத்தாழ 30,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதிபர் இரோன்ஸியும் கொல்லப்பட்டு யாக்குபு கோவன் ஆட்சியேற்றார்.இந்தப் படுகொலையால் மேற்குப் பகுதியில் வாழ்ந்த ஈக்போ இனத்தவர் பெருங்கூட்டமாகத் தப்பியோடி கிழக்குப் பகுதிக்குப் புலம் பெயர்ந்தனர்.

கிழக்குப் பகுதியின் ராணுவ அதிகாரி ஜெனரல் ஒஜுக்வு, ஈக்போ இனப்படுகொலைகளுக்கு எதிராகக் குரலெழுப்பி நீதி வேண்டினார்.

1967 ஆம் ஆண்டு நைஜீரியாவின் அண்டை நாடான காணா நாட்டின் அபுரி நகரில் மாநில அதிகாரங்களுக்காகவும் புதிய கூட்டாட்சி தத்துவத்திற்காகாவும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அபுரி உடன்படிக்கை ஏற்பட்டது. ஆனால் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்காமல் அந்த உடன்படிக்கையை நைஜீரியாவின் கூட்டாட்சி (Federal Government) அரசு நிராகரித்தது.

பியாஃப்ரா பிரிவினை மற்றும் போர் (1967-1970) துவங்கியது. 1967 மே, 30 அன்று, ராணுவ அதிகாரி ஜெனரல் ஒஜுக்வுவைத் தங்களுடைய அதிபராக ஏற்றுக் கொண்டு கிழக்குப் பகுதி, பியாஃப்ரா என்னும் நாட்டை உருவாக்கிப் பிரிவினையை அறிவித்தது. அதே ஆண்டு ஜூலை 6 அன்று அதை எதிர்த்து நைஜீரியப் படைகள் பியாஃப்ராவைத் தாக்கின.

1967 போரின் துவக்கத்தில் பியாஃப்ரா படைகள் முன்னேறினாலும் பின்னர் தங்கள் நகரங்கள் ஒவ்வொன்றையும் வரிசையாக இழந்தன. எனுகு, நுஸுக்கா, போர்ட்-ஹார்-கோர்ட் ஆகிய முதன்மை நகரங்கள் கைப்பற்றப்பட்டன. தங்கள் கைவசம் ஆயுதங்களும் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களும் இல்லாத பியாஃப்ரா நீண்ட காலப் போரில் வலுவிழந்து கொண்டே இருந்தது. மக்கள் பசியாலும் பஞ்சத்தாலும் நோயாலும் கொத்துக் கொத்தாக மடிந்தனர். உதவிப் பொருட்களும் மருந்துகளும் எடுத்துச் சென்ற சர்வதேச உதவி நிறுவன விமானங்கள் நைஜீரிய வான்வெளியில் அனுமதி மறுக்கப்பட்டுத் திரும்பிச் சென்றன. வல்லரசுகளின் மறைமுக உதவி நைஜீரியாவுக்கு இருந்ததால் பியாஃப்ராவுக்கு ஆதரவுக் கரம் நீட்ட எந்த நாடும் முன் வரவில்லை.

1970 ஜனவரியில் பியாஃப்ரா படை மொத்தமாக வீழ்ந்தது. அதிபர் ஒஜுக்வு நாட்டை விட்டுத் தப்பியோடினார்.பியாஃப்ரா கோவன் அரசுடன் சமரசம் செய்து முற்றிலும் தன் அடையாளத்தை இழந்து நைஜீரியாவுடன் இணைந்தது.

நாட்டின் பக்குவமுமற்ற தலைவர்களால் 30 இலட்சம் பேருக்கு மேல் இறந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை அளிக்கும் அதிர்ச்சிக்குச் சற்றும் குறையாத பேரதிர்ச்சி என்னவெனில் போரிட்டு உயிரிழந்த மக்களைக்  காட்டிலும் பசியாலும் பஞ்சத்தாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதே. இந்தப் போரால் கிழக்குப் பகுதியின் மனித வளமும் பொருளாதார வளமும்  குலைந்தது. போர் ஈக்போ மக்களின் மனதிலும் வாழ்விலும் நீண்ட கால பாதிப்புகளையும் தோல்வியின் வடுக்களையும் ஏற்படுத்தியது. பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளும் படுகொலைகளும் இடம்பெயர்தலும் பொருளாதார, சமூக, அரசியல் சீர்கேடுகளூம் நிகழ்ந்தன. இனக்குழுக்களின் ஒவ்வாமையும் சுயநலமிக்க தலைவர்களின் அரசியல், பணம் மற்றும் பதவி வேட்கை போன்ற காரணங்களால் இன்றளவும் நைஜீரியா மூன்றாம் உலகத்தர நாடு என்னும் நிலையிலேயே உள்ளது.

“All War is a symptom of man’s  failiure as a thinking animal” என்றார் நோபல் எழுத்தாளர் ஜான் ஸ்டெயின்பெக்.  ஆம், இன்றும், இந்த நொடியிலும் எங்கோ ஓரிடத்தில் மனிதனின் சிந்தை அழிந்து, அகந்தை பெருகி உருவாகும் போர்களின் விளைவை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். இந்நாவலில் அடிக்கடி ஒரு வரி ஒலித்துக் கொண்டே இருக்கும்,”நாங்கள் இறந்து கொண்டிருந்த போது உலகம் மௌனமாக இருந்தது”.அன்று 1967-ல் மட்டுமல்ல, இன்றளவிலும், எங்கோ, ஏதோ வொரு ஒரு நாட்டில் பெருந்தொகையாக் குழந்தைகளும் மக்களும் மடிந்து கொண்டிருக்க உலகம் மௌனமாகத்தான் இருக்கிறது.

ஒரு நாட்டின் அரசியல் சரிவும் அதன் மக்கள் அனுபவிக்கும் தனிப்பட்ட வேதனைகளும் பொதுவாக மாறுபட்ட கதைகளில் சொல்லப்படுகின்றன. ஆனால் அவை இரண்டையும் ஒன்றிணைத்து கண்ணீரும் கருணையும் நிறைந்த சிறப்பான ஆக்கத்தை அளித்திருக்கிறார் சிமாமந்தா அடிச்சி. மேலும் இந்நூல் போரின் பின்னணியில் பெண்களின் இருப்பையும் போராட்டங்களையும் அனுபவங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்த நாவலின் பெண் பாத்திரங்கள் சுயசிந்தனை, வலிமை கொண்டவர்களாகவும், பாரம்பரியத்திற்கு மாறான பொறுப்புகளை மேற்கொள்கிறவர்களாகவும், கடும் சூழலிலும் முடிவெடுக்கும் திறன் கொண்டவர்களாகவும், ஆணாதிக்கச் சிந்தனையை விமர்சிக்கிறவர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளனர். இதனால் பெண்களின் குரல் மற்றும் அதிகாரத்தை முன்னிறுத்தும் பெண்ணியச் சிந்தனை கொண்ட நாவலாகவும் இது உள்ளது.

சிமாமந்தாவின் செறிவான  எழுத்து நடையும் விவரணைகளும் வெறும் வரலாற்றுத் தரவுகளாக மட்டும் நாவலை மாற்றி விடாமல் தொய்வின்றி அதனுள் ஒன்றச் செய்கிறது. கவிதை மொழியின் நுட்பமும் ஆழமும் கொண்ட அழகிய சொற்களும் எளிய நடையில் வலுவான காட்சிகளைச் சொல்லிச் செல்லும் சரளமும் இவரது உரைநடையில் நன்கு கையாளப்பட்டுள்ளன. மாறுபட்ட வர்க்கத்தைச் சேர்ந்த கதை மாந்தர்களால் பின்னப்பட்ட கதையின் வாயிலாக போர் எவ்வாறு வெவ்வேறு சமூக ,பாலின மற்றும் நாட்டுப்புற அடையாளங்களைப் பாதிக்கிறது என்பதை ஆழமாக ஆராய்கிறார். நைஜீரிய மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே படைப்புகளை எழுத வேண்டிய கட்டாய நிலையிலிருக்கும்போதும் ஒவ்வொரு நைஜீரிய எழுத்தாளரும் தங்களுடைய பிரத்தியேக மொழியால்,நடையால், உருவகங்களால் அந்த மண்ணின் மணத்தையும், தொன்மத்தையும் அசல்தன்மையையும் நம்மை உணர வைப்பர். அவ்வகையில் இந்த நூலில் ஈக்போ சொற்கள் மிகப் பரவலாகக் கையாளப்பட்டுள்ளன. அவற்றுடன் பிட்ஜின் ஆங்கிலம், ஹௌஸா சொற்கள் போன்றவை அந்தந்த நிலப்பரப்புக்கேற்றவாறு கையாளப்பட்டிருக்கின்றன. அவை கதையை வாசிக்கையில் எந்தவித உறுத்தலுமின்றி பொருந்திப் போவதால் நைஜீரியாவின் வளமிகு கிழங்கு வயல்களும் குக்கா மரங்களும் ஹர்மட்டான் என்னும் பாலைப் பனிப்புயல் புழுதியும் வாசிப்பவர்களால் அந்நியத்தன்மையின்றி உணரப்படுகின்றன.அத்துடன் போர்ச்சூழலால் கடுங்காலங்களை நோக்கி வாழ்க்கைமுறை சட்டென மாறுவதை வலிமையான சொற்பிரயோகத்தால் வெளிப்படுத்துவதும் அடிச்சியின் மொழி வன்மைக்குச் சான்று. அலங்காரங்கள் ஏதுமின்றி அழுத்தமான வாக்கியங்களால் கடத்தப்படும் அதிர்ச்சியான சம்பவங்களை அதே நேர்த்தியுடன் சூழலின் தன்மை நீர்த்துப் போகாமல் தமிழுக்குக் கொண்டு வருவது மொழிபெயர்ப்பில் சற்றே சவாலாகத்தான் இருந்தது. அதில் முக்கியமாக இதன் தலைப்பைக் கூறுவேன். எழுகதிரைக் குறிப்பிடும் இந்த வார்த்தை பியாஃப்ராவின் முத்திரை, ஆனால் அதை சொல்லுக்குச் சொல் (Literary translation) அர்த்தம் மாற்றி மொழிபெயர்ப்பதில் பொருளின்மையுடன், அரசியல் சரித்தன்மையும் பொருந்தி வராததால் ஏறத்தாழ மொழிபெயர்ப்பு முடியும்வரை தலைப்புக்கான சரியான வார்த்தைகள் பிடிபடவில்லை.அதன்பின் உருவாகாத தேசமான பியாஃப்ராவின் கொடியைக் குறிக்கும்  மஞ்சள் ஞாயிறை எந்தவித சமரசங்களுமின்றி அரை மஞ்சள் சூரியன் என்றே அழைக்க வேண்டும் என்று முடிவெடுத்து இந்தத் தலைப்பைக் கண்டடைந்தேன்.இப்படியாக இதன் மொழிவழிப் பயணம் இருக்கையில் கதையுடனான அகவழிப் பயணம் மிக உணர்வுப்பூர்வமாக இருந்தது. ஆவணப்படங்களிலும் புகைப்படக் காட்சிகளிலும் கண்ட ஆப்பிரிக்காவின் நலிந்த நோஞ்சான்  குழந்தைகளின் படங்கள் நமது மனதின் சமநிலையைக் குலைப்பதற்குப் போதுமானவையாக இருக்கின்றன. ஆனால் அதே காட்சிகளின் வலியையும் அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றாகச் செத்து மடிவதை அடிச்சி எழுத்தில் கொண்டுவரும் போதும் மேற்கொள்ளும் கண்ணீர் தோய்ந்த அகப்பயணம் கொடிய முட்களடர்ந்த பாதையில் வெறுங்காலுடன் நடப்பதற்கு ஒப்பானது. க்வாஷியோர்கர் என்னும் சொல்லை எழுதும் போது மட்டுமல்ல, நினைக்குந்தோறும் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இத்தாக்கத்தை வாசகர் ஒவ்வொருவரும் உணரக்கூடிய வகையில் பதிவு செய்திருக்கிறார் அடிச்சி. ஒரு வரலாற்றுச் சம்பவத்தை, கொடுங்காலத்தை, மனதை அறுக்கும் உண்மை நிகழ்வுகளைப் புனைவின் வழியாக இலக்கியமாக மாற்றுவது எப்போதுமே அவசியமான செயல்பாடாக உள்ளது. ஏனென்றால் வரலற்றைத் திரிப்பதும் மறைப்பதும் எப்போதும் எங்கேயும் நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் உண்மைகளை எதிர்வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள இது போன்ற படைப்புகள் உதவி புரியக்கூடும். அவ்வகையில் சிமாமந்தா அடிச்சி எழுதிய Half Of A Yellow Sun மிக முக்கியமான புதினங்களுள் ஒன்று.

லதா அருணாச்சலம்

வழக்கம் போல இந்த நூலைச் சிறப்பான முறையில் பதிப்பித்த எதிர் வெளியீட்டுக்கு எனது நன்றிகள். மொழிபெயர்ப்பைத் துவங்கியதிலிருந்து பல மன அழுத்தங்களும் தனிப்பட்ட வாழ்வின் துயரமான சூழலும் சூழ்ந்திருந்த நாட்களில் என்னைத் தட்டியெழுப்பி உற்சாகமளித்த அருமைச் சிநேகிதி திரு. சித்ரா பாலசுப்ரமணியமணியன், நூலின் முதல் பிரதியை ஆர்வமுடன் வாசித்து அதிலிருந்த தட்டச்சுப் பிழைகளைக் களையவும் வாக்கியங்களை நேர்த்தியாக்கவும் உதவிய எனது இனிய சக மொழிபெயர்ப்பாளர் இல.சுபத்ரா மற்றும் தட்டச்சுப் பிரதியை வாசித்து மனதாரப் பாராட்டிய மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு. கமலாலயன் அவர்களுக்கும் என் மனமார்ந்த  நன்றியும் அன்பும்.

என் நினைவுகளுள் ஒரு பகுதியாக நீங்காமல் என்னுடன் இருக்கும் நைஜீரியாவுக்கும், எக்கணமும் நான் சோர்ந்து போகாமல் எப்போதும் ஒரு செயலூக்கியாக என்னை வழிநடத்திக் கொண்டிருக்கும் மறைந்த என் அன்புத் தந்தை திரு.முத்துசாமி அவர்களுக்கும்  இம்மொழியாக்கத்தைச் சமர்ப்பிக்கிறேன்.

வாசகர்களுக்கு என் அன்பும் நன்றியும்.

லதா அருணாச்சலம்.
சென்னை
10/12/2025

*

சிமாமந்தா எங்கோஸி அடிச்சி (Chimamanda Ngozi Adichie):

நைஜீரியாவில் வளர்ந்த சிமாமந்தா எங்கோசி அடிச்சி, சமகால ஆப்பிரிக்க மற்றும் உலக இலக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர். இவரது எழுத்து, பின் காலனித்துவ அரசியல், இன -அடையாளச் சிக்கல், புலம்பெயர் குடியேற்ற அனுபவம், பாலின சமத்துவம் மற்றும் பெண்ணியம் போன்ற சமூக , அரசியல், பண்பாட்டுத் தளங்களின் கருத்தியல்களை ஆழமான ஆய்வுகளுக்குள்ளாக்குகிறது.

அவரது படைப்புகள் ஐம்பத்தைந்து மொழிகளுக்கும் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. Purple Hibiscus என்ற அவரது முதல் நூல் Commonwealth Writer’s Prize விருதைப் பெற்றுள்ளது. பிற படைப்புகளான Half Of A Yellow Sun நாவல்  Womens Prize for Fiction- Winner of Winner’s விருதையும் Americanah  நாவல் Nationala Book Critics Circle Award  விருதையும் வென்றுள்ளன. அமெரிக்காவின் புகழ்பெற்ற MacArthur Genius Grant (McArthur Fellowship)  இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், The thing Around Your Neck  என்னும் சிறுகதைத் தொகுப்பு, We Should All Be Feminists மற்றும் Dear Ijeawele,Or A Feminist Manifesto in Fifteen Suggestions என்னும் கட்டுரைத் தொகுப்பு ஆகியவற்றையும் எழுதியவர் சிமாமந்தா அடிச்சி. தந்தையை இழந்த துயரைப் பற்றிய Notes on Grief  என்ற நினைவுத் தொகுப்பும், Nwa Grace James என்ற புனைப்பெயரில் எழுதப்பட்ட Mama’s Sleeping Scarf என்ற சிறார் நூலும் இவரது சமீபத்திய படைப்புகள். சிமாமந்தா அடிச்சி தான் வாழும் அமெரிக்கா மற்றும் தன் சொந்த நாடான நைஜீரியாவுக்குமிடையில் தனது காலத்தைப் பகிர்ந்து வாழ்கிறார்.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *