மென் மல்லிகையின் வண்ணமும் வாசனையும் – க. மோகனரங்கன்
(பெருந்தேவியின் அக்கமகாதேவி கவிதைகள் மொழிபெயர்ப்பு நூலான ’மூச்சே நறுமணமானால்’ முன்வைத்து)
இந்திய பக்தி இலக்கியத்திற்கு கன்னடமொழி வழங்கிய கொடை என அதன் ’வசனங்களை’ சொல்லலாம். வசனம் என்றால் சொல்லப்பட்டது என்று பொருள். சிவனை ஏக புருஷனாகவும் அவனை தொழுதிடும் ஏனைய பக்தர்கள் அனைவரையும் பெண்களாகவும் உருவகித்துக் கொண்டு பாடப்பெற்ற வசனங்கள் பேச்சு மொழிக்கு பெரிதும் நெருக்கமாக அமைந்தவை. சாதிய ஏற்றத்தாழ்வு, சடங்கு ஆசாரம் போன்ற நியமங்களுக்கு எதிரான ஒருவித கலகக்குரலை கொண்ட வசனங்கள் ஒருவகையில் பக்தியின் பேராலெழுந்த சமூகசீர்திருத்த இயக்கமாகவும் அதே சமயத்தில் கன்னட கவிதை மொழியின் மறுமலர்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தன. இவ்வசனங்களை நம்முடைய சித்தர் பாடல்களோடு பலவகையிலும் ஒப்பிடவியலும்.
பொ.யு. 8-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையிலும் முப்பது பெண்கள் உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்ட வசனக்காரர்களால் எழுதப்பட்ட பதினைந்தாயிரம் வசனங்கள் உள்ளதாக அறியப்படுகிறது. இந்த வசனங்களை அருளிப் போந்தவசனக்காரர்கள் யாரும் அதிகம் கற்ற அறிவாளிகள் அல்லர். நெசவாளிகள், மாடு மேய்ப்பவர்கள், படகோட்டிகள், கூத்துக் கலைஞர்கள், துணி வெளுப்பவர்கள் முதலியோருடன் திருட்டுத் தொழில் பழகிய ஒருவரும் கூட வசனம் எழுதுபவராக இருந்துள்ளார். இதனால் அக்கால சமூகம், அதன் மதிப்பீடுகள் சார்ந்த ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் காட்டுவனவாக இப்பாடல்கள் அமைந்துள்ளன எனலாம்.
புகழ்பெற்ற வசனக்காரர்களான பசவண்ணர், அல்லம்ம பிரபு, மாதர சென்னையா, தேவரதாசிமய்யா போன்றவர்களின் வரிசையில் வைத்துப் போற்றப் படுபவர் ”அக்கா” என அனைவராலும் மதிப்புடன் விளிக்கப்படுகின்ற அக்கமகாதேவி. அவருடைய நானூறுக்கும் மேற்பட்ட வசனங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நூற்றுசொச்சம் வசனங்களை ’மூச்சே நறுமணமானால்’ என்கிற தலைப்பில் பெருந்தேவி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பெருந்தேவி கவிஞர், கட்டுரையாளர், புனை கதையாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர் எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர்.
பெரிதும் நேரடித் தன்மையும், அணிஅலங்காரங்கள் எதுவுமில்லாத, உணர்ச்சிக் கலப்பற்ற, உரைநடைத் தன்மை மிகுந்த நிலவி வரும் நம்பிக்கைகளையும் மதிப்பீடுகளையூம் கேள்விக்குள்ளாக்கும் எதிர்கவிதை பாணியலமைந்த கவிதைகளை சமீபமாக எழுதிவரும் பெருந்தேவி, அதற்கு நேரெதிரான வகைமையில் அமைந்த பக்திக் கவிதைகளின் உட்கிடைப் பொருளமைதியும், சரணாகதித்தொனியும், பிரேமையும், செவ்வியல் மொழியும் கொண்ட ஸ்ரீவள்ளியின் பெயரிலான கவிதைகளையும் பதிப்பித்து வருகிறார். ஸ்ரீவள்ளிக் கவிதைகளின் அந்த நெகிழ்வான மொழியானது ஒரு வகையில் அக்கமகாதேவியின் இந்த வசனங்களை மொழி பெயர்க்கத் தேவையான ஒரு முன்தயாரிப்பாக அமைந்தவை என பெருந்தேவி குறிப்பிடுகிறார். இக்கவிதைகளின் உள்ளடக்கமான பக்தியை மாத்திரம் மொழிமாற்றம் செய்வதை முதன்மை நோக்கமாக கொள்ளாமல் அவற்றின் கவித்துவம், மொழி நுட்பம், அர்த்தச் சுட்டல், ஒலிப்பு ஆகியவற்றையும் கூடுதல் இலக்காகக் கொண்டது இந்நூல் என்கிறார்.
எதேச்சையாக ஒருநாள் அக்கமகாதேவியின் வசனங்கள் அடங்கிய வினய சைதன்யாவின் ஆங்கில நூலான ”songs of siva: Vacanas of Akka Mahadevi” என்பதை அமேசானின் இணைய நூலகத்தில் கண்டு அதைப் புரட்டி வாசிக்கத் தொடங்கிய பெருந்தேவி அக்கவிதைகளின் பாற்பட்ட விலக்கமுடியாத ஈர்ப்புக் காரணமாக அவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கத் தொடங்குகிறார். வினய சைதன்யா கேரளத்தில் மிகவும் அறியப்பட்ட ஆன்மீக குருவும் அத்வைதியுமான நாராயண குருவின் வழிவந்த சீடர்களில் ஒருவராவார். முதலில் மலையாளத்திலும் பிறகு ஆங்கிலத்திலுமாக அவர் மொழியாக்கம் செய்த அக்காவின் வசனங்களே பெருந்தேவியின் இந்த தமிழாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தவை. பிறகு சில நண்பர்களின் உதவியோடு அவற்றைக் கன்னட மூலத்தோடு ஒப்பிட்டு செழுமைப் படுத்தியதாகவும் தனது முன்னுரையில் அவர் குறிப்பிடுகிறார்.
பொ.யு. 12-ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்திலுள்ள ஷிமோகாவில் பிறந்த அக்கமகாதேவி இளம் வயதிலேயே இறை நாட்டமுடையவராக இருந்திருக்கிறார். ஸ்ரீசைலத்தில் உள்ள சென்ன மல்லிகார்ஜூனன் என்னும் பெயருடைய சிவனை தனது இஷ்ட தெய்வமாக வரித்துக் கொண்டவர். ஒரு கட்டத்தில் குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறி ஆடைகளையும் துறந்து, தனது கூந்தலையே மறைப்பாகக் கொண்டு திகம்பரக் கோலத்தில் அலைந்து திரிந்திருக்கிறார். சதிபதி பாவனையில் எழுதப்பட்டிருக்கும் அவருடைய வசனங்களில் சென்னமல்லிகார்ஜூனன் மீதான தனது பக்தி, பிரேமை ஆகியவற்றோடு, ஒரு பெண்ணாக இருப்பதனால் தான் அடைய நேரிட்ட எதிர்ப்பு, வேதனைகள், அவமானங்கள் குறித்தும் எள்ளல் தொனியில் அவர் பாடியிருக்கிறார்.
சிவன் மேலான அக்காவின் ஒன்றிப்பு பல வகையிலும் திருமாலின் மீதான ஆண்டாளின் அணுக்கத்திற்கு ஒப்பானது. ஆனால், ஆண்டாள் திருமணபந்தத்தை தவிர்த்துவிட்ட போதிலும் குடும்ப அமைப்பின் பாதுகாப்பிற்குள்ளாகவே வாழ்ந்து மறைந்ததால் புற உலகின் நெருக்குதல்களுக்கும் அதன் பாற்பட்ட துன்பங்களுக்கும் பெரிதாக ஆட்படவில்லை. ஆனால் நாடோடியாக அலைந்து திரிந்ததால் அக்கமகாதேவியின் பாடல்களில் அத்தகைய அனுபவங்களின் தெறிப்புகளை அதிகமும் காணமுடிகிறது.
எருமைக்கு ஒருசிந்தை
தோல்காரனுக்கு ஒரு
சிந்தை
அறவோனுக்கு ஒரு
சிந்தை
வினைபுரிவோனுக்கு
ஒரு சிந்தை
எனக்கு என் சிந்தை
தனக்கு தன்
காமத்தின் சிந்தை
மாட்டேன் போ,
முந்தானையை விடு
பைத்தியமே
எனக்கு
சென்னமல்லிகார்ச்சுன
தேவன்
நேசிப்பானா மாட்டானா என்ற சிந்தை
சிவபூசையில் ஆழ்ந்திருக்கும்போது தன்னை இச்சையுடன் அணுகிய தனது கணவனான கௌசிக மன்னனை நோக்கி கூறுவதாக மேற்கண்ட வசனம் அமைந்திருக்கிறது. இவ்வாறான இடையூறுகளைக் கடந்து முழுமையாக சென்னமல்லிகார்ஜுனனின் பக்தியுள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் பொருட்டே அவர் இல்லறத்தை விட்டு துறவிற்கு ஏகியதாக நம்பப் படுகிறது.
நம் மரபில் ஆண்கள் துறவியாவது இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் பெண்களால் அவ்வளவு எளிதாக வீட்டைத் துறந்து வெளியேறி விட முடியாது. அதற்கு முன்னுதாரணங்களும் அதிகமில்லை. தமிழ் வரலாற்றில் நோக்கினால் மணிமேகலையும் இத்தகைய இடர்ப்பாடுகளை அடைந்திருப்பதை அறியலாம். துறவியாக தீட்சை பெறாவிடினும் நாடோடியாக அலைந்தவர்களான அவ்வையாரும் காரைக்காலம்மையாரும் அவ்வாறு அலைந்து திரிவதற்கு ஏதுவாக, கிழத்தன்மையையும் பேயுருவையும் முறையே அவர்கள் கொள்ள வேண்டியிருந்தது. புத்தரின் சங்கத்திலும் தொடக்கத்தில் பெண்களை சேர்ப்பதில் அவருக்கு தயக்கமிருந்தது. பிற்காலத்தில்தான் பிக்குணிகள் பௌத்தத்தில் சேர்க்கப்படலாயினர். தமது துறவு வாழ்விற்கு பெண்கள் பெரிதும் இடையூறாக இருப்பர் என ஆண்கள் அதிகமும் அஞ்சினர். இப்பின்னணியில் வைத்து நோக்குகையில் அக்காவின் ஆடைதுறந்த திகம்பரக் கோலம் என்பது பெண் என்கிற அடையாளத்தை கடந்து பால்பேதமற்ற பக்தி என்னும் இலட்சியநிலையை அடைவதற்கான முனைப்பாக கொள்ளலாம். பின்வரும் வசனம் அவரது நிலைப்பாட்டை சித்தரிக்கிறது.
மறைக்கும் உடை நழுவினால்
ஆணும் பெண்ணும்
கூச்சப்படுகிறார்கள்
உயிர்மூச்சின் ஊற்றுக் கண்ணான
நீ
உலகத்தில் இடைவெளியன்றி
உள்ளபோது
கூச்சப்பட என்ன இருக்கிறது
சொல்
உலகமே கண்ணான
சென்னமல்லிகார்ச்சுனனிடம்
மூடி மறைக்க என்ன இருக்கிறது
சொல்.
சிவனைத் தவிர்த்த பிற ஆண்கள் அனைவரையும் சகோதரர்களே என விளித்துப் பேசும் அக்கா தன் பிரேமையும் பெண்தன்மையும் உலகியலின் பாற்பட்டதல்ல, அது சென்னமல்லிகார்ஜுனன் ஒருவருக்கு மட்டுமே உரித்தானது என்று தீர்மானமாக உரைக்கிறார். அவருடைய ஆடைகளைதல் என்பது இகஉலக பந்தத்தை துறப்பதன் குறியீடுதான் என்பதாக விளக்குகிறார் பெருந்தேவி.
தம் சுயமுயற்சியால் கிட்டாத ஒன்று இறையின் அருளால் தமக்கு கிடைக்கப் பெறவேண்டும் என்பதுதான் பொதுவாக ஒரு பிரார்த்தனையின் நோக்கமாக இருக்கும். ஆனால் அக்காவின் ஒரு வசனம் இதற்கு நேரெதிரான பொருளைத் தருவதாக அமைந்திருக்கிறது. அது தன் முயற்சி எதுவுமின்றி தற்செயலாகக் கிடைப்பவற்றையும் தட்டிப் போகச் சொல்லி வேண்டுகிறது.
வீடுவீடாகப் போய்க் கைநீட்டி வேண்ட
வை ஐயனே
வேண்டினாலும் கொடுக்காதபடி செய்
ஐயனே
கொடுத்தாலும் நிலத்தில் விழச்செய்
ஐயனே
நிலத்தில் விழுந்தாலும்
நான் எடுத்துக் கொள்ளும் முன்பே
நாயை எடுக்கச் செய்
சென்ன மல்லிகார்ச்சுனனே.
இவ்வுலகில் கிடைக்கும் ஆசை நிறைவேற்றம், உடல் ஆரோக்கியம், மனநிறைவு என்பன அவ்வுலகு பற்றிய சிந்தனையை மட்டுப்படுத்தி விடுகின்றன. அல்லும்பகலும் அவனொருவன் பற்றிய நினைப்பிலே லயித்திருக்க ஆன்மா தவித்திருக்க வேண்டும்.
“கவிதையிடத்தில் என் பற்று கவிஞர் என்ற முறையில் மட்டுமல்லாது கவிதை வாசகர் என்ற முறையிலுமானது” என்று இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடும் பெருந்தேவி தன்னுடைய தனிப்பட்ட ரசனையும் விருப்பமும் இத்தொகுப்பிற்கு அடிப்படை என்ற போதும் அவற்றுக்கும் அப்பால் அக்கமகாதேவி என்ற கவி ஆளுமையின் பன்முகங்களை காட்டுவதே இதன் நோக்கம் என்கிறார். அவ்வகையில் இந்நூலின் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்பாளரின் பின்னுரை, துணைக் குறிப்புகள், அடிக்குறிப்புகள் ஆகியவற்றை சிறப்பாக குறிப்பிட வேண்டும். வெறும் பக்திப் பனுவல் என்ற பரவசத்தோடு மட்டுமல்லாமல், இந்த வசனங்களை அவற்றின் இடத்திலும் காலத்திலும் பொருத்தி ஒரு வரலாற்றுப் பார்வையோடு இவற்றை நாம் அணுக அக்குறிப்புகள் வெகுவாக உதவுகின்றன.
காலச்சுவடு பதிப்பகம் ஏற்கனவே வெளியிட்டிருக்கும் “தாகம் கொண்ட மீனொன்று” (ரூமி கவிதைகள்) , “புன்னகைக்கும் பிரபஞ்சம்” (கபீர் கவிதைகள்) என்னும் இரண்டு நூல்களின் வரிசையில் மூன்றாவதாக “மூச்சே நறுமணமானால்” (அக்கமகாதேவி கவிதைகள்) என்கிற இந்நூலும் அவற்றின் ஆன்மீகப் பொருண்மைக்காகவும் வசீகரமான கவித்துவத்திற்காகவும் தொடர்ந்து வாசகர்களால் நினைவிற் கொள்ளப்படும்.
***