விந்தியா எனும் தீற்றல் – ரம்யா

(விந்தியாவின் புனைவுலகத்தை முன்வைத்து)

விந்தியா (நன்றி: நரணன்)

தீற்றல்

அந்த வீட்டுக்குள் மீண்டும் ஒருமுறை போனேன்.
வெள்ளையடித்து மறுபடியும் வாடகைக்கு விட வைத்திருந்தார்கள்.
வெறுமையான அறைகள் தோறும் சுற்றிவந்தேன்.
உள்ளே சுவரோடு பதிக்கப்பட்ட சிறிய முகம்பார்க்கும் கண்ணாடி.
அதனருகே ஒரு சிறு கரிய தீற்றலை கண்டேன்.
கண்ணில் மையிட்டபின் அப்படியே விரலைத் தீற்றிக்கொண்டது.
ஒரு சின்னஞ்சிறு குருவியின் சின்னஞ்சிறு இறகுபோல.
ஒரு மெல்லிய வளைவு.
ஓர் அலட்சியமான கீற்று.
ஒரு கணம்,
அந்த ஒருகணம், அது அங்கிருந்தது.
கண்கள் இல்லை,
மையிட்ட இமைகளும் இல்லை,
நீட்டிவரைந்த வால் மட்டும் எஞ்சியிருந்தது.
அதை பார்த்துக்கொண்டு நின்றேன்.
அது அழியவே இல்லை.
அது எப்போதும் மிஞ்சிவிடும்

(ஜெயமோகனின் தீற்றல் சிறுகதையிலிருந்து…)

முதன்முதலாக “விந்தியா” என்ற எழுத்தாளரின் பெயரை தமிழ்விக்கி பணிக்காக “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் – 2: பெண்ணெழுத்து(1907-1947)” (யாவரும் பப்ளிஷர்ஸ்) என்ற அரவிந்த் சுவாமிநாதனின் புத்தகத்திலிருந்து தான் அறிமுகம் செய்து கொண்டேன். அதில் ”பார்வதி” என்ற சிறுகதை இருந்தது. பிராமணக் குடும்பத்தை பின்னனியாகக் கொண்டு, பூப்பெய்துவதற்கு முன்னரே திருமணம் செய்யும் வழக்கம் கொண்ட காலகட்டத்தைச் சார்ந்த கதை. ஓர் எளிமையான கதை தான். விந்தியாவின் முதல் சிறுகதையும் கூட. யாரும் அக்காலத்தில் பேசத்தயங்கும் தலைப்பு என்ற அறிமுகத்தோடு எனக்கு அறிமுகமாகியிருந்தார். அங்கிருந்து விந்தியாவின் தமிழ்விக்கி பக்கம் உருவானது. முப்பது எழுத்தாளர்கள் அடங்கிய அரவிந்த் சுவாமிநாதனின் அந்த தொகுப்பிலிருந்து ஒரு முகம் மட்டும் தீற்றலாக எஞ்சியது.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் விந்தியாவின் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட விந்தியாவின் வலைப்பக்கத்தை தமிழ்விக்கி தகவல் அப்டேட்டுக்காக நண்பர் மதுசூதன் அனுப்பியிருந்தார். அதில் அவரைப் பற்றிய தகவல்கள், அவர் எழுதிய எண்பது சிறுகதைகள், ஒரு நாவல் ஆகியவை தொகுக்கப்பட்டு இருந்தது.

*

1947-1960 காலகட்டத்தில் விந்தியா நூறு சிறுகதைகள் எழுதியிருக்கிறார். விந்தியாவின் முதல் சிறுகதை அவரின் இருபதாவது வயதில் கலைமகள் இதழில் ஆகஸ்ட் 15, 1947-ல் வெளியானது. விந்தியா என்பது புனைப்பெயர். இந்தியாதேவி என்ற இயற்பெயர் கொண்ட விந்தியாவின் சிறுகதை இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நாளில் வெளிவந்தது என்பது தற்செயல் என்று சொல்வதற்கில்லை. அரசு நிர்வாகத்திலும், அரசியலிலும் பிரமணரல்லாதவர்களின் எண்ணிக்கை விகிதத்தை அதிகப்படுத்தும் பொருட்டு நீதிக்கட்சியினரால் 1921-ல் மதராஸ் மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட “கம்யூனல் GO” -ஆல் திருச்சியிலிருந்து ஒரிசா மாநிலம், பெர்காம்பூருக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர்கள் விந்தியாவின் பெற்றோர். விந்தியா 1927-ல் ஒரிசாவில் பிறந்தார். பள்ளியில் தமிழ் கற்க முடியாத சூழ்நிலையில் தந்தை கே.என். சுந்தரேசனால் தமிழ் மொழி கற்றுக் கொடுத்து வளர்க்கப்பட்டார். கே.என். சுந்தரேசனும் எழுத்தாளர். மொழிபெயர்ப்புகள் அதிகமாக செய்துகொண்டிருந்த சுந்தரேசன் ஃபாதர் சி.எஃப். ஆண்ட்ருஸின் ஊக்கத்தால் தமிழில் கவிதைகள், புனைவுகள் எழுதத் தொடங்கினார். கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகள் வீட்டில் வந்து கொண்டிருந்த சூழ்நிலையில் அதைப் படித்து வளர்ந்தார் விந்தியா. தன் பதினைந்து வயதில் சீனிவாசன் என்பவரைத் திருமணம் செய்து ஐந்து வருடங்கள் கோயம்புத்தூரில் வாழ்ந்தார். பின் கணவருடன் அவரின் வேலை நிமித்தமாக ஒரிசாவின் கட்டக் பகுதியில் குடியேறினார். அவரின் தமிழ் மீதுள்ள ஆர்வம் காரணமாக கணவர் வீட்டில் வார இதழ்கள் வாங்கி வாசிக்க ஊக்குவித்திருக்கிறார். திருமணமான ஐந்தாண்டுகளுக்குப் பின் 1947-ல் விந்தியாவின் முதல் சிறுகதை ”பார்வதி” வெளிவந்தது. விந்தியாவின் சிறுகதைகள் சுதந்திரப் போராட்டம் முடிந்து நாட்டிற்கான முன்னேற்றத்தை நோக்கி புதிய நம்பிக்கையுடன் தலைவர்களும், இளைய தலைமுறையினரும் இயங்கிய காலகட்டத்தைச் சேர்ந்தது. அந்த ஊக்கமும், மலர்ச்சியும் விந்தியாவின் கதைகளில் காண முடிகிறது.

விந்தியாவின் புனைவுலகம் அவர் பார்த்த மனிதர்கள், சம்பவங்களால் உந்தப்பட்டதாகவே உள்ளது. தன்வரலாற்றுத்தன்மை கதைகளில் காணப்படுகிறது. அதில் அவரின் கற்பனையும், புனைவையும் கலந்து ஆற்றொழுக்கான நடையுடன் கதைசொல்கிறார். தேர்ந்த உரையாடலுடனான அவரின் கதைசொல்லும் தன்மை ஒரே அமர்வில் அவரின் சிறுகதையை வாசிக்கச் செய்கிறது. ஆற்றொழுக்கான கதைசொல்லல் என்பது எளிய மொழிநடையைக் கொண்டதற்கான சான்று. குடும்பம் சார்ந்த கதைகள் வரும்போது பிராமண பின்னணியை ஞாபகப்படுத்தினாலும் மிகச் சொர்ப்பமாகவே பிராமணச் சொல்லாடல்களைக் கையாண்டிருக்கிறார். பெரும்பாலும் எளிமையான செறிவான தமிழிலேயே எழுதியிருக்கிறார். இந்த எளிமை அவர் படைப்புகளுக்குள் வாசகரை எளிதாக உள்நோக்கி இழுத்துவிடுகிறது. வளைய வருதல், கண்ணராவி (இன்று கண்ட்ராவி), கும்பிகள், லளிதம், காக்காய் சீவன் போன்ற இன்று கதைகளில் வழக்கத்தில் இல்லாத சொற்களைக் கையாண்டுள்ளார். விந்தியாவின் கதைகள் அனைத்திலும் கதைசொல்லியாக வருவது அந்தக் கதையில் இருக்கும் ஒரு கதாப்பாத்திரம் தான். பிரதானமான பாத்திரத்தை நோக்கியே கேள்விகளும், விசாரணைகளும் அமைவதால் கதைசொல்லியாக அதை அந்தக் கதைக்கு பெருமளவு சம்மந்தப்படாத ஒருவரின் வழியாகவே கதை சொல்லப்படுகிறது. அது வாசகர்களை எளிதாக பார்வையாளராக மாற்றிவிடுகிறது. காண வேண்டிய காட்சிகளை மிகத் துல்லியமாக ஓட்டுவதற்கு இந்த வகையான கதைசொல்லல் பயன்படுகிறது.

நவீன சிறுகதைக்கான இலக்கணப்படி ஒரே அமர்வில் வாசித்து முடிக்ககூடியதும், முதல் வரியிலேயே கதை ஆரம்பிப்பதும், ஒரு பொருள்/ஒரு மனநிலை பற்றியதாகவும், ஒருமை கொண்டதாகவும் அமைவதே நல்ல சிறுகதை. இந்த நான்கு முக்கியமான கூறுகளையும் விந்தியா தன் சிறுகதைகளில் கடைபிடித்துள்ளார். கலை, இலக்கியம், பண்பாட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட கலைமகள் இதழில் விந்தியாவின் பதின்மூன்று சிறுகதைகள் வெளிவந்துள்ளன. அநுத்தமாசி.ஆர்.ராஜம்மாஆர்.சூடாமணிராஜம் கிருஷ்ணன்கமலா சடகோபன் என பெண் எழுத்தாளர்களின் ஒரு நிரையை கலைமகள் உருவாக்கியது. கி.வ.ஜா ஆசிரியராக அமைந்த காலகட்டத்தில் மிகக் கராரான விமர்சனத்தோடேயே விந்தியாவின் சிறுகதைகள் கலைமகள் இதழில் வெளிவந்துள்ளது. கி.வா.ஜகன்னாதன் விந்தியா எழுத ஊக்குவித்திருக்கிறார். கி.வா.ஜ பிரசூரிக்காமல் திருப்பி அனுப்பிய ஒரு சிறுகதையுடன் வருத்தம் தெரிவித்து கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார். அதில் “இந்தக்கதை விந்தியா எப்போதும் எழுதும் தரத்திற்கு இணையாக இல்லை” என்று குறிப்பிட்டிருந்தது. அதன் பிறகு விந்தியா அனுப்பிய “கூப்பிய கை” சிறுகதை வெகுவாக அவரால் பாராட்டப்பட்டது. விந்தியாவின் சிறுகதைகள் சுதேசமித்திரன், கலைமகள், காவேரி , பாரிஜாதம் , வெள்ளிமணி , கல்கி போன்ற இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தன. பிற்காலத்தில் ஆனந்தவிகடன், குமுதம், தினமணிகதிரிலும் விந்தியாவின் சிறுகதைகள் வெளிவந்தன. 

*

விந்தியா சிறுகதையின் ஆரம்பத்தில் ஒரு காட்சியை மனத்தில் உருவாக்கிவிட்டு அங்கிருந்து நம்மை பயணம் செய்ய வைக்கிறார். ”அவசர அவசரமாய்த் தலைக்கொண்டையில் ஊசியை சொருகிக் கொண்டே சாரதா வந்தாள்” என “உறவின் இனிமை சிறுகதை ஆரம்பிக்கிறது. எந்தப் புடவையை உடுத்த என அல்லல்படும் சாரதாவை மையமாகக் கொண்ட சிறுகதை அது. சேலைகளின் மீது மோகம் கொண்ட சாரதாவின் துடுக்குத்தனம் மாப்பசானின் நெக்லஸ் சிறுகதையின் மெடில்டாவை ஞாபகப்படுத்துகிறது. இந்தக்கதையின் முதலில் வரும் காட்சி சித்திரம் நேரடியாக சாரதவை நோக்கி பயணப்படச் செய்கிறது. ”அசுத்தம் வீட்டுக் கும்பிகள் எப்போதுமே பலே ஷோக்கு” (கும்பி- புஸ்வானம் பட்டாசு) என ஆரம்பிக்கும் ”விழியின் வெம்மை” சிறுகதை விழியில்லாத கலைஞன் ஒருவனின் கதை. அங்கு ஒளியோடு ஒரு காட்சியை தீபாவளியை ஒட்டி எடுத்துச் செல்கிறார்.

சிறுகதையின் இறுதியில் ஒரு அதிர்ச்சி, கேள்வி, அங்கிருந்து கதையை வளர்ப்பதற்கான முடிவு என நவீன சிறுகதைக்கான போக்கை கையாண்டிருக்கிறார். சிறுகதையின் அதிர்ச்சியின் முடிவை மேலும் வலுப்படுத்தும் விதமாகவே உரையாடல் கதை முழுவதும் நிகழ்ந்துள்ளது. காதல் இதயம் சிறுகதையில் தன் கணவனின் நண்பன் மீது கொண்ட சந்தேகத்தின் வழியாக அது மெல்ல தன் கணவன் மீது படர்ந்து இறுதியில் தன் கணவன் ஒழுக்கமானவர் தான் என கண்டுகொள்ளும்படி கதை அமைந்தாலும் அதன் இறுதியில் இத்தனை யோசிக்கும் நான் என் கணவரின் பார்வையில் நல்ல மனைவி தானா! அவர் என்ன சிந்திக்கிறார்! என்ற கேள்வியோடு கதை முடிகிறது. திருமணமாகாது முறியும் காதலும், சேர்ந்து வாழ இயலாத பொருந்தாக் காதலும் நிறைவின்மையையே அளிக்கின்றன. இணைந்து வாழும் கணவன் மனைவி தன் அகத்தையும் புறத்தையும் அதிக நேரம் ஒருவருக்கொருவர் பார்க்கும் படி அமைந்திருந்த சமூக அமைப்பில் ஓர் அகவிசாரணையை எந்தவித சலிப்புமின்றி நிகழ்த்தியிருக்கிறார். சிறுகதையின் இறுதியில் வரும் திருப்பங்களை “ஓ. ஹென்ரியன் திருப்பங்கள்” என விந்தியாவின் தமையன் நரணன் மதிப்பிடுகிறார். அப்படியான சிறுகதைகளாக ”குழந்தையின் உள்ளம்”, ”தவறிய சொல்” போன்ற சிறுகதைகளைச் சொல்லலாம். காசிக்கு தன் பேரன் படிக்கும் இடத்தில் பொழுதைக் கழிக்க வர நினைக்கும் தாத்தாவின் மனப்போராட்டங்கள், அவரை எதிர்கொள்ளும் பேரனின் மனப்போராட்டங்களின் இறுதியில் அவரை வரவேற்க அவன் ரயில் நிலையத்திற்கு செல்லும்போது தாத்தாவின் அஸ்தியே வருகிறது. அது தரும் அதிர்ச்சியோடு கதை முடிகிறது. குழந்தை உள்ளம் சிறுகதையிலும் மகன் வீட்டிற்கு அவனின் பெற்றோர்கள் ரிடயர்ட் ஆகி ஒரேயடியாக வந்ததாக நினைத்து மனப்போராட்டத்திற்கு ஆளாகும் தம்பதியினரைக் காண்பித்து, இறுதியில் தங்களால் ஓய்வுக்குப் பின் இங்கு தங்க இயலுமா என சோதனை செய்வதற்காக விடுமுறை நாளில் வந்தோம் என பெற்றோர் சொல்லும் போது தம்பதிகளுக்கு வரும் பெருமூச்சை நோக்கி அத்தனையும் நிகழுமாறு சிறுகதை அமைந்துள்ளது.

ஒவ்வொரு கதையிலும் நிறுவ முயற்சிக்கும் ஒன்றிற்கு இணையாக அதற்கு எதிரான இன்னொரு பிம்பத்தை கட்டமைத்து அதனுடன் ஒப்பிட்டுக் கொண்டு அகவிசாரணை செய்து கொண்டே வருகிறார் விந்தியா. “விழியின் வெம்மை” சிறுகதையின் மையமாக  கேசவனின் வெண்மையான வெம்மை நிற விழியையே மையப்பொருளாக வைத்திருக்கிறார். இந்தக்கதையின் வழி ”அரூபம்” என்பதை அவர் அகவிசாரனை செய்து பார்த்திருக்கிறார். கண் தெரியாத கேசவனின் அரூபமான உலகத்திற்கு இணையாக கண் தெரியும் கதைசொல்லி சிறுவனின் ஒளி நிறைந்த உலகத்தைக் காண்பிக்கிறார்.  கேசவன் இருமுறை தனக்கு ஒளி/வெளிச்சம் தெரிவதாகச் சொன்ன நேர்வுகளில் ”தெரிந்ததே சூடாயிருந்ததே!” என்று சொல்கிறான். அந்த இடத்திலிருந்து தான் கேசவன் காணும் உலகத்தின் அரூபக்காட்சி புலப்படுகிறது. அங்கிருந்து சிறுகதையில் இரண்டு வகையான உலகங்கள் புலப்படுகின்றன. ஒன்று கதைசொல்லி சித்தரிக்கும் உலகு. இன்னொன்று கேசவனின் உலகு. ”இசை ஞானம், வேதாந்த பராபர ஞானம், உலக ஞானம்” போன்ற அரூபங்களுக்கு இணையாக வண்ணங்களும், ஒளியும் நிரம்பிய கும்பிகள், தீபாவளி உலகம், இசைக்கருவிகளின் சித்தரிப்புகள், கேசவனின் அம்மா, அப்பாவின் அன்பு ததும்பிய முகங்கள், கேசவனின் மென்மையான கை விரல்கள், அதன் லளிதம், அணிந்திருக்கும் உடைகள், இசைக் கச்சேரியில் கிடைக்கும் பரிசுகள், பாராட்டுகள், அவனுக்கு அவன் அப்பா செய்யும் அலங்காரங்கள் என புறம் யாவும் மின்னுகின்றன. ஆனால் கேசவனின் அரூப உலகம் நம் கற்பனைக்கு விடப்படுகிறது. வாணங்களை(பட்டாசு) பிறர் ஒளியாகக் கண்டால் அவற்றை அவன் வெம்மையாகக் கண்டான் என்ற வரி வெம்மையின் வழியாக அவன் உணர்வது உணர்வுகளை, ஆற்றலை, ஆத்மாவை என்ற எண்ணத்தை நமக்கு அளிக்கிறது. உயிரும் உடலும் அவனுடன் அரூபமாக உரையாடுவதை கேள்வியோடே கதைசொல்லி எதிர்கொள்வதாக கதை அமைந்துள்ளது. ”விழியின் வெம்மை” சிறுகதை ஓர் உண்மை மனிதரின் கதை. கண் பார்வையற்ற வயலின் மேதை ”த்வாரம் வெங்கடசாமி நாயுடு” மற்றும் அவரின் சிஷ்யர் குழந்தை மேதை என்றழைக்கப்பட்ட ”மாரெல்லா கேசவ ராவோ” அவர்களின் கதை. வாசகர்கள் முதன்மையாக வாசிக்க வேண்டிய விந்தியாவின் சிறுகதையும் கூட.

விந்தியா கடவுள் பக்தி கொண்டவர். தன் வீட்டில் கணவன், உடன்பிறந்தவர்களுடன் நடந்த ஆத்திக, நாத்திக விவாதங்களையும் கதையில் ஒரு சம நிலைத்தன்மையுடன் பயன்படுத்தியுள்ளார். கூப்பிய கை சிறுகதையில் வரும் சுப்ரமணியன் என்ற சிறுவன் உண்மையிலேயே விந்தியா நெகிழ்ந்த ஒரு ஓட்டல் வெயிட்டர். அதில் அவனை நாத்திகனாக்கி, தொழிலதிபரை ஆத்திகனாக்கி ஒரே சமயத்தில் சுப்ரமணியனின் நல் உள்ளத்தைப் பற்றிய விசாரணையையும் ஆத்திக-நாத்திக விவாதத்தையும் நகர்த்திச் செல்கிறார். இறுதியில் கூப்பிய கையுடன் நிற்கும் சுப்ரமணியனின் காட்சி மனதில் தங்கும்படி உணர்வுகளை கதையில் கடத்துகிறார். கடவுள் பக்தி என்பது உயிர் சக்தியின் இன்றியமையாத இணை என்று சொல்லப்படும் இந்தக் கதையிலேயே பூஜை செய்யும் குருக்கலான இளம்பிள்ளையைப் பார்த்து வழிவழி வந்த கடமையுணர்ச்சியில் பூஜை செய்தான். பக்தி இருக்குமோ என்னவோ?என்றும் கேள்வி எழுப்புகிறார். இதில் வரும் ஆத்திக-நாத்திக விவாதங்கள் விந்தியாவின் சமநிலைத்தன்மையை புலப்படுத்துகிறது. எந்தவொரு நேர்விலும் ஒருமுனைத்தன்மையற்ற சிந்தனையையே வெளிப்படுத்துகிறார்.

விந்தியாவிற்கு குழந்தைகள் இல்லை. அதை அவர் ஒரு குறையாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தன் நான்கு உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளை தன் பிள்ளையாகக் கருதினார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவரின் சிறுகதைகளில் குழந்தைக்கான ஏக்கம் தெரிகிறது. புனைவுகளில் அவர் உருவாக்கிய குழந்தைகள், சிறுவர்கள் வழியாக அவர் தன் பிரபஞ்சத்தில் குழந்தைகளை நிரப்பிக் கொண்டார். ”அந்தக் கடிதம் கூடத்தான் குழந்தை போலவே ஆட்கொள்ள அவர்களிடம் வந்தது” என ஆரம்பிக்கும் ”குழந்தை உள்ளம்” சிறுகதை கீதா என்ற சிறுமியையும் குழந்தை என தங்களை சதா சொல்லிக் கொள்ளும் பெரியவர்களையும் ஒப்பிட்டுக் கொண்டே நகர்கிறது. “குழவிப்பிராயமும், கிழப்பிராயமும் ஒன்று” என்பதை நிறுவுவதாக அல்லாமல் அதை, கதையில் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறார். “குழந்தைகள் தங்களை பெரியவர்கள் என்று சொல்லிக் கொள்ளவே விரும்புவார்கள்” ஆனால் “நாங்கள் குழந்தையாகிவிட்டோம்” என சதா சொல்லிக் கொள்ளும் பெரியவர்களை நோக்கி சந்தேகப் பார்வையை கதை சொல்லி வழியாக எழுப்புகிறார். “மாதம் பிறந்தது” சிறுகதையில் இரண்டாம் தாரமான வைதேகிக்கு தொடர்ந்து குழந்தை கலைந்து போகும் போது ஏற்படும் அவளின் மன வேதனையைக் கடத்துகிறார். “குழந்தை வீரிட்டு அழுதது கேட்டு ஓடோடினேன்” என ”அன்பு மனம்” சிறுகதை ஆரம்பிக்கிறது. அதில் வரும் கதையின் நாயகிக்கும் குழந்தை இல்லை. தன் கணவரின் அண்ணன் குழந்தையை தன் கணவர் அடித்து அழுது ”காக்காய் சீவன்” போய்விட்ட நிலையிலிருந்து அதை மீட்கிறாள். குழந்தையின் அன்பு மனத்தை அறிந்துகொள்ளும் விதமாக கதை அமைந்துள்ளது. “ரெயில் எங்களை ஏற்றிச் சென்றபோது எனக்கு மனத்திலே ஒரு கற்பனையும் இல்லை. என் வயிற்றில் குழந்தை உதித்தது. அது பூமியில் விழுந்து வீரிட்டு அழும் நாளை எதிர்பார்க்கும் மனநிலை இல்லை. அன்றொரு நாள் அவரிடம் அடிபட்டு அழுததும், பாலா வீரிட்டு அழுததும், இன்று எங்கள் பிரிவால் அவள் அழுததுந்தான் மாறி மாறித் தோன்றின.” போன்ற வரிகளின் வழியே விந்தியாவின் ஆழத்தைக் காண முடிகிறது. குழந்தைக்கு காக்காய் சீவன் போய்விட்ட நிலையிலிருந்து அதை மீண்டும் உயிர்ப்பித்த அந்த தருணத்தையே தான் இவ்வுலகத்திற்கு ஈன்ற குழந்தையாகக் கருதி, பெற்றுக் கொள்ளாத ஒன்றை கற்பனை செய்து கொள்ளும் தாய்மையை கதையின் வழி கடத்துகிறார்.

விந்தியா எழுதிய சிறுகதைகள் அனைத்தும் பெண் மையக் கதைகள் அல்ல. ஆனால் பெண் கதாபாத்திரங்கள் வழியாகத் தெரியும் உலகு அசலானதாக உள்ளது. “பெண் ஜென்மம் எடுத்த தோஷம், வேதனை, யோசனை” போன்ற வரிகளைச் சொல்லலாம். பெண்களின் எண்ணங்கள் செல்லும் தொலைவு அளவிட இயலாத அளவுக்கு ஆழமானவை. அந்த ஆழத்தில் இருப்பது தாங்களே உருவாக்கிக் கொண்ட இனிமை, காதல், பகை, வஞ்சம், நஞ்சு தான். மீள மீள யோசனைகளால் உருவாக்கப்பட்ட மனித மனங்களும், மனிதர்களும் வாழும் ஆழம் அது.

”பார்வதி” சிறுகதையில் சாரதா சட்டம் பற்றிய செய்தி வருகிறது. 1929-ல் இயற்றப்பட்ட சாரதா சட்டத்தின் படி பெண்களுக்கான திருமண வயது 14 ஆக இருந்தது. 1949-ல் அது 15 ஆக உயர்த்தப்பட்டது. 1978 முதல் 18 ஆக மேலும் உயர்த்தப்பட்டது. 1947-ல் வெளிவந்த பார்வதி சிறுகதையில் வரும் பார்வதிக்கு 15 வயதில் திருமணம் நடைபெறுவதாகவும், சாரதா சட்டத்தையும் அது மீறவில்லை என்ற குறிப்போடும் வருகிறது. பெண்கள் பூப்பெய்தும் முன்னரே திருமணம் செய்து வைக்கும் நடைமுறைகள், பெண்கள் இளவயதில் திருமணம் ஆகவில்லையானால் உடல் அழகு குறைந்து மாப்பிள்ளை கிடைக்காமலாவர் என்ற பெரியவர்களின் எண்ணங்கள் போன்றவற்றை சிறுகதைகள் வழி அறிய முடிகிறது. அதிரடியான மீறல் கதைகள் என விந்தியாவின் சிறுகதைகளின் கதைக்களத்தை சொல்ல முடியாது. தான் வாழ்ந்த சமூகம், குடும்பம், பழகிய மனிதர்கள், தெரிந்து கொண்டவைகளை மிக ஆழமாக அக விசாரணை செய்திருக்கிறார் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

அவர் உச்சபட்சமாக எழுதிய சில உறவு மீறல் கதைகள் என்றால் ஜி.எஸ். மணியனுடன் இணைந்து எழுதிய “மாதம் பிறந்தது” சிறுகதை என்ற இரட்டைக் கதை. மாதம் பிறந்ததும் முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் அனுப்பும் வக்கீல் முதல் மனைவியின் மேலான அன்பு அதிகமாகி குழந்தையற்ற இரண்டாவது மனைவியிடம் அதை தெரியப்படுத்தி அவளையும் குடும்பத்தில் இணைத்துக் கொள்வதான கதை. இது மாதிரியான நேர்வுகளிலும் கூட சட்டம், குடும்பம், சமூகம், சுற்றம் என அனைத்தையும் விசாரணை செய்தே அந்த உறவை ஏற்கிறார். ஆண்களின் சபலங்களையும் மனக்குமுறலாக வெளிப்படுத்துகிறார். இந்த புருஷர்களுக்கே பிற பெண்களுடனே பழகுவதில் கொண்டாட்டம். சேஷன் என்னிடம் அப்படித்தானே இருந்தார்? இவரும் என் மதினி தங்கையுடன் அப்படித்தானே இருக்கிறார். கலகலப்பாக புருஷர்களுடன் பழகும் பெண்கள் குறைவு இந்துச் சமூகத்திலே. இந்தப் புருஷர்கள் சந்திக்க நேருகிற பெண்கள் சிலர்தாம். அப்படிச் சந்திக்கிற பெண்களைக் கண்டு மயங்கிப் போய் இனிக்கிறது இந்த ஆண்கும்பல். சஞ்சல சித்தமுள்ள பெண்கள் உண்டு; அவர்கள் சொர்ப்பம். இந்த ஆண்வர்க்கம் ஒரே தினுசு.”; “லட்சியப்புருஷரின் மனைவி என நான் என்னை நினைத்தது எத்தனை நாள்! கலியாணமான நாலு மாதம் வரைதான்!” போன்ற வரிகள் அக்காலத்திற்கு அதிரடியானவை.

கி.வா. ஜகன்னாதன் குறிப்பு

அண்ணன், தம்பி இருவரும் மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழும் கதையாக “அன்பு மனம்” சிறுகதை சொல்லப்படுகிறது. 1949 காலகட்டத்திலேயே அது மிக அரிதாக மாற ஆரம்பித்ததன் சுவடு இங்கே தெரிகிறது. ”ஏதோ மானம் மரியாதையாக நியாயமாக அண்ணனுடன் இருக்கிறது தான் என்கிற பழைய நியாயத்தையொட்டி இருந்து வருகிறோம். யாருக்கு யார் உரிமை, யாரோடு இருக்க யாருக்கு நியாயம் இந்நாளில்? எல்லோருக்கும் அவரவர் சுதந்திரம், வாழ்க்கை, வேண்டும். அவரவர் குடும்பம் கவலை என்று ஏற்பட்டுவிட்டன” என்ற வரிகளின் வழி அவை புலப்படுகின்றன. அண்ணனின் மாதச் சம்பளத்தில் வாழும் தம்பி மனைவியின் யோசனை, வேதனை, சிறுமை வழி கதை சொல்லப்படுகிறது. முன்பு தீபாவளிக்கு அவரவர் வீட்டில் மருந்தடைத்து அந்த பட்டாசுகளில் மருந்தடைத்தவரின் பெயரை ஒட்டி வெடி வெடித்து மகிழ்ந்த செய்தி புதுமையாக இருந்தது. வானவேடிக்கையைப் பற்றிச் செல்லும் போது தஞ்சாவூர் கல்யாண வீடுகளில் தான் இத்தகைய வானவேடிக்கையின் பிரம்மாண்டம் இருக்கும் என்று குறிப்பிடுகிறார். “தமிழ் நாட்டு வித்துவான்களுக்குக் கலையையும் புகழையும், பொருளையும் பேணத்தெரிகிறது”; “தமிழக இசை வல்லுநர்க்கு ஈடு இணை இல்லை” என இசை பற்றி வரும் இடங்களில் தஞ்சையையும், தன் பூர்வீகத்தையும் நினைத்துக் கொள்கிறார்.

விந்தியாவின் கதைகளில் உள்ள கதாப்பாத்திரங்களில் முழுவதுமாக கெட்டவர்களோ, முழுவதுமாக நல்லவர்களோ இல்லை. சொந்தக்குழந்தையானலும் அப்பா அடித்தால் அம்மாவுக்கு ரோசம், அம்மா அடித்தால் அப்பாவுக்கு ஆத்திரம் போன்றவை மனித உணர்வுகளை துல்லியமாக மதிப்பிடுபவை. அம்மாவுக்கு ரோசம் மட்டுமே. அப்பாவுக்கு ஆத்திரம் வருகிறது. பொதுவாகவே பெற்றவர்கள் குழந்தைகளை தங்களின் சிறிய வார்ப்புகளாக ஆழத்தில் கருதுவதால் வரும் சிக்கல் இது. எல்லா மனிதர்களின் அகத்தையும் விசாரணை செய்து நன்மை தீமைக்குமிடையேயான ஊசலாட்டமாக கதை நெடுக உரையாடல் நிகழ்கிறது. கதையின் வழியாக எதையும் நிறுவ அவர் முற்படவில்லை. பல கதைகள் கேள்வியாகவே முடிகின்றன.

விந்தியாவின் உவமைகள் ரசிக்கும்படியானது. அவை பெரும்பாலும் பெண் உலகம் சார்ந்தே அமைந்துள்ளன. ”ஒரு முறை பிறர் உடுத்திவிட்டதனாலோ என்னவோ, சாரதா புடவையை ஒரு தடவை உற்றுப்பார்த்துவிட்டுப் பீரோவில் வைத்தாள். தாலி கட்டிய தோஷத்திற்காக மனைவியை உடன் இருத்திக் கொண்டே அலட்சியப்படுத்தும் புருஷனைப்போல இருந்தாள் அவள்”; பெற்றோருக்கு உடமையாக இருந்த ஒரு பெண்ணை மணந்து மனைவியாக்கிக் கொண்டு கைமாறி வந்தவள் என வெறுக்கலாமா? புடவையை வெறுக்காமல் கையில் எடுத்தேன்.” என கடனுக்கு ஈடாக கொடுக்கப்பட்ட பிறரின் புடவையை கட்டுவதற்கான மனநிலையைச் சொல்கிறார். உடம்பெல்லாம் நீராகிப்போனது மாதிரி வெறும் மனிதராக நின்றார் என்ற வரி தரும் ஒரு காட்சி ஆழமானது. உடல் அறுபது சதவீதத்திற்குமேல் நீராலானது. யாவும் போன பின் ஒரு மனிதர் வெறுமாக எஞ்சுவது என்றால் அது நீராலானதாகத்தான் இருக்க இயலும். “நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப்படூஉம்” என்பது இது தான். வண்டி வாகனங்கள் போவதற்கென்றும், ஜனங்கள் நடப்பதற்கென்றும் தனித்தனியாகப் பாதை பிரித்திருக்கும்போதே, எத்தனை விபத்துக்கள் நேருகின்றன! அது போலத்தான், மானிட மனம் எத்தனையோ பாகுபாடுகளுடன் இயங்கினாலும் சில சமயம் தடுமாறித் திண்டாடிப் போகிறது”; “அழகும் இனிமையும் உபயோகமும் உள்ள காயும் பழமும் பூவும் இலையும் வாழையின் வெளியே குலுங்க அவற்றை எடுத்துப் பயன்படுத்திக் கொண்ட பிறகும் திருப்தியுறாமல், வீழ்ந்திருக்கும் வாழை மரத்தினுள்ளே, பல பகுதிகளுக்கிடையே பதுங்கியிருக்கும் தண்டுக்காகவும் அலைவது தானே நம் மனம் போன்றவை மனத்தை பற்றிய அவரின் தெளிவான சிந்தனைகள்.

விந்தியாவின் சிறுகதைத் தலைப்புகள் பெரும்பாலும் ”அரும்பிய முத்து, இளகிய தோஷம்…” என இரு சொற்களால் ஆனவையாக உள்ளன. மிகச் சொற்பமாகவே ஒற்றைவரியில் தலைப்பு வைத்திருக்கிறார். இத்தலைப்புகள் யாவும் கதையின் மையத்தை நோக்கிக் குவிகின்றன. “கூப்பிய கை”, “விழியின் வெம்மை” போன்ற தலைப்புகள் ஒரு காட்சியாக மனதில் நின்று அதற்குள் கதை ஒளிந்து கொள்கிறது. உணர்வுகள் சார்ந்த அரூபமான தலைப்புகள் கொண்ட சிறுகதைகளின் ஆழத்தில் அவ்வுணர்வுகளே மையமாக அமைவதாக சிறுகதை அமைந்துள்ளது.

*

சிறுபத்திரிக்கைகள், வணிகப்பத்திரிக்கைகள் என யாவற்றிலும் எழுதிய விந்தியா அவை நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளார். யுனெஸ்கோ ஆதரவில் நியூயார்க் ஹெரால்ட் நடத்திய அகில உலக சிறுகதைப் போட்டியில் விந்தியாவின் ”காதல் இதயம்” சிறுகதை பரிசு பெற்றது. சுதேசமித்திரனில் விலைவாசி, தேர்தல், ஜனநாயகம் குறித்த பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். விந்தியாவின் தேர்ந்தெடுத்த சில சிறுகதைகள் தெலுங்கில், எழுத்தாளர் சேஷராவ் அவர்களால் மொழிபெயக்கப்பட்டன. விந்தியாவின் தமையன் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர் ஆனந்தரங்கன் அவரின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை ‘Cupids’s Alarms’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். விந்தியாவின் ‘சுதந்திரப் போர்’ நாவலையும் ‘Rajeswari’ என்ற தலைப்பில் ஆனந்த ரங்கன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவற்றை அமெரிக்காவில் உள்ள ‘குறிஞ்சி பதிப்பகம்’ வெளியிட்டது. விந்தியாவின் புனைவுலகத்தில் ஞானம், அன்பு, பாசம், காதல், மனிதம், இரக்கம், இனிமை, உறவுகள், குடும்பம் என யாவுமே ஒளியானவையாக உள்ளன. அதன் மேலேயே விந்தியாவின் நம்பிக்கை இருந்ததை இப்புனைவுகளின் வழி அறிய முடிகிறது. அதே சமயம் அதன் எதிர்முனைகள் தோறும் சென்று அவற்றை பல வகை மனிதர்கள், சம்பவங்கள், உணர்வுகள், இடம், காலத்தின் வழியேயான நிகழ்த்தகவுகள் வழி நிறுவ முயற்சி செய்திருக்கிறார். இதற்குமேல் விசாரணை செய்ய ஒன்றுமில்லை என்றோ, கேள்விகள் இல்லை என்றோ அல்லது ஓர் நிறைவடையாப் பயணம் என கைவிட்டதாலோ அவர் தன் முப்பத்தி மூன்று வயதிற்கு மேல் புனைவுகள் எழுதாமல் அமைந்திருக்கலாம்.

பதின்மூன்று வருடங்கள் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த விந்தியா அதன் பிறகு புனைவுகள் எழுதாமலானார். ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு “என்னை யாரும் எழுத அழைக்கவில்லை. ஏதோவொரு வேகத்தில் சொல்லிவிட வேண்டும் என்ற வேகம் தோன்றியதால் எழுதினேன்” என்று சொல்லியிருக்கிறார். பிற்காலத்தில் அவரின் சிறுகதைகள் பற்றி கேட்டபோது “இதை நானா எழுதினேன். ஆச்சரியமாக இருக்கிறது” என கடந்துபோனதாகச் சொல்லப்படுகிறது. 1960-க்குப் பிறகு விந்தியா கட்டுரைகள், நூல் மதிப்புரைகள் எழுதியுள்ளார். விந்தியா தொடர்ந்து ஒவ்வொரு நாளும் டைரி எழுதியதாகவும், அந்த டைரிகளை பின்னாளில் அவரின் எழுத்துக்களை அடையாளம் கண்டுகொண்டு வரும் ஆர்வமுள்ள வாசகர்களுக்காக குடும்பத்தினர் சேர்த்து வைத்துள்ளதாகவும் வலைதளத்தில் தகவல் உள்ளது. விந்தியாவின் டைரிகளை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் அவரின் புனைவுலகத்தின் வழியும், நரணன் வழியாக சொல்லப்பட்ட அவரின் வாழ்க்கையின் சிறு தீற்றல் வழியாகவும், கவிதையாக அமைந்த அவரின் புகைப்படம் வழியாகவும் உருவாகியுள்ளது. டைரியை வாசித்து விந்தியாவின் வாழ்க்கையைப் பற்றிய வரலாற்றுப் புனைவு நூல் ஒன்று எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இன்றும் நரணனின் குடும்பத்தினர் பொக்கிஷமாகப் பாதுகாக்கும் விந்தியாவின் நாவல் தட்டச்சு செய்யப்பட்டதும், 1937-ல் ஜெர்மன் கம்பெனியான Bijou-லிருந்து அவரின் தந்தையால் வாங்கப்பட்டதுமான தட்டச்சுப்பொறியைப் பார்க்க வேண்டும். அவரின் நூறு சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் கொண்டு வர வேண்டும். நவீன எழுத்தாளர்கள் நிரையில் வைக்கப்படுவதற்கான தகுதியான பல சிறுகதைகளை விந்தியா எழுதியுள்ளார். வாசகர்கள் அவரின் சிறுகதைகளை வாசித்து மேலும் ரசனை, விமர்சனக் கட்டுரைகள் எழுத வேண்டும். சிரத்தையெடுத்து விந்தியாவின் படைப்புகள் அனைத்தையும் வலையேற்றிய குடும்பத்தினருக்கு நன்றி.

*

4 Comments

Leave a Reply to Siva Sankaran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *