வீதிகளில் பாடுபவர்கள் – மதுமிதா
(குர்அதுல்ஐன் ஹைதரின் ‘லக்னோ வீதிகளில் பாடுபவர்கள் மற்றும் பிற கதைகள்’ என்ற தொகுப்பை முன்வைத்து)

குர்அதுல்ஐன் ஹைதர் உருது மொழியின் தலை சிறந்த இலக்கியவாதி. அவருடைய பல ஆக்கங்களைத் தானே ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்த்தவர். “River of Fire” (தமிழில் அக்னி நதி, ஆக் கா தரியா – உருது மூலம்) என்ற அவரது நாவல் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. கலாச்சார மாற்றங்களையும், கால மாற்றங்களையும், அவை மனித வாழ்வின் மீது செலுத்தும் தாக்கத்தையும், அதையும் தாண்டி மாறாமல் நிற்கும் உணர்வுகளையும், கனிவையும், மூர்க்கத்தையும், அபத்ததையும் பேசு பொருளாக கொண்டவை அவரது படைப்புகள்.
சுயசரிதை, யதார்த்தவாதம், தொன்மம், தேவதைக் கதை, திகில் கதை என பல வகைப்பட்ட கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. மனிதர்கள் தனக்கென வரிக்கப்பட்ட இடத்தில் நின்று தான் எட்ட வேண்டிய இடத்தை அடைய முயல்வதை பேசு பொருளாக கொண்ட கதைகள் இதில் ஒரு வகை. தான் எட்ட வேண்டியது என்ன என்ற முடிவு அவர்கள் இருக்கும் இடத்தை அடித்தளமாக கொண்டு அமைகிறது. அந்த இடத்தை தேடும் பயணத்தில் மனிதர்கள் சென்று கொண்டே இருக்கிறார்கள். காலம், சூழல், வெளி இவற்றை கடந்து அந்த தேடல் பொருளின்மையில் மட்டுமே முடிகிறது.
“கேத்தரின் போல்டனின் கதை”, ஆங்கிலேய சிப்பாய்க்கும் ஒரு விடுதியை துப்புறவு செய்யும் ஒரு ஏழை இந்திய பெண்ணுக்கும் பிறந்த கேத்தரின் போல்டன் (Catherin Bolton) பற்றியது. அவள் அந்த விடுதியின் உரிமையாளரான ஒரு ஆங்கிலேய பெண்மணியால் அவரது அண்ணன் மகள் என அவள் வளர்க்கப்படுகிறாள். அவளுடைய தந்தைக்கு அவளைப் பற்றித் தெரியாது. அவள் அன்னையும் மாமாவும் அந்த விடுதியில் வேலை செய்பவர்கள், அங்கேயே அவளை கனிவோடும் மிகுந்த அன்போடும் வளர்க்கிறார்கள். ஆனால், அவளைப் போன்ற ஆங்கிலேய – இந்திய கலப்பு குழந்தைகள் இந்தியாவில் நடத்தப்படும் விதத்தை அறிந்து வளர்ந்தவள் அவள். உயர் குடி ஆங்கிலேயருக்கு பிறந்தவள் என்ற பொய் அவளுக்கு தேவையானதாக ஆகிறது. அதையே மெய் எனக் கொண்டு வாழ முடிவு செய்கிறாள். இந்தியா, ஆஸ்திரேலியா என்று நீள்கிறது அவளது வாழ்க்கைப் பயணம், அந்தப் பொய்யினால் ஒரு சிறிய சமஸ்தான இளவரசரின் மனைவி ஆகிறாள். அதை நிலை நிறுத்திக்கொள்ள அவள் வெறும் பொய்யினுள் வாழ்ந்தால் மட்டும் போதாது, அதற்கு ஈடான மெய்யை பொய்யாக்க வேண்டிய சூழலுக்கு வந்து நிற்கிறாள். அவளது தாய், மாமா, கண்டுபிடித்து வந்த தந்தை என அனைவரையும் உதறி அந்தப் பொய்யை அவள் தக்க வைக்கிறாள். இதில் அவள் பிறரை ஏமாற்றுகிறாளா அல்லது தன்னையே நம்ப வைத்துக் கொள்கிறாளா என்ற கேள்வி அங்கே அப்படியே இருக்கிறது.
இந்த கதையின் ஒரு பிற்கால தொடர்ச்சியாக “தொலைக்கப்பட்ட நிழல்” கதையைச் சொல்லலாம். நிலப்பரபத்துவ குடும்பத்தை சேர்ந்த துலாரே மியான் தனது குடும்பத்தால் மிகவும் அன்புடன் நடத்தப்படுகிறார், ஆனால் சற்றே தள்ளி நிறுத்த வைக்கப்பட்ட அன்பு தான் அவனுக்கு கொடுக்கப்படுகிறது. ஏனெனில், அவனது அன்னை ’மீராசின்’ என்று அழைக்கபடும் கஜல் (Ghazal) பாடகி. அந்தக் குடும்பத்தை பொறுத்த வரை திருமணம் செய்து அழைத்து வரப்பட்டதால் அவன் அன்னை மீராசினும் அல்ல, அவள் மீராசின் ஆதலால் அவள் குடும்பத்து பேகமும் அல்ல. அதனால் அவன் என்னதான் வீட்டு பையன் ஆனாலும், அந்த வீட்டின் முக்கியமானவன் அல்ல. அந்த இடைவெளியை அந்த குடும்பம் மீள மீள நிறுவுகிறது, அவனுக்கு பல வழிகளில் அது காட்டிக்கொண்டே இருக்கிறது. அவன் தனது காதல் மனைவி, மிகப்பெரிய நடிகையாக இருந்தவள், அவன் மீது கொண்ட மையலினால் அவனுடன் அவன் வீட்டுக்கு வந்தவள், அவளை உதாசீனப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில், அவளது புகைப்படத்தை தான் வீட்டின் வரவேற்பறையில் இருந்து அவன் அகற்றி வைக்கிறான். ஆனால், அவனால் இன்னும் அந்த எல்லையை கடக்க முடிவதில்லை. அவளது மரணத்திற்கு பின்னும், ஏன் அவனது மூப்பிலும் கூட அந்த எல்லையும் அந்த தூரமும் அப்படியே இருக்கிறது. தான் கொல்லப்படுகிறோம் என அறியாமலேயே இறந்தவனின் கதை இது.
பிறன்மை செய்யப்பட்டவர்கள் எட்டாமல் நிற்கும் தன்னிலையை சொல்லும் இந்த முன்னிரண்டு கதைகளின் இன்னொரு புறமாக, மரபின் கணத்தால் அமிழ்த்தப்பட்டு மறக்கப்படுபவர்களின் வாழ்க்கையை “கௌரவம்” கதை சொல்கிறது. குடும்பத்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தனக்கு நிச்சயம் செய்யப்பட்டவனுக்காக வருடக்கணக்கில் காத்திருக்கிறாள் ஷம்ஷத் பேகம். இந்தக் கதை அவளை அபலையாக வரிக்கவில்லை. செல்வம் இருந்தும், அதை காத்துக்கொள்ளக் கூடிய கற்றலைப் பெறுவதையோ, தன்னிலையை வேறு வகையில் அமைத்துக்கொள்வதையோ அவள் எண்ணிப் பார்ப்பதே இல்லை. பேகமாக பிணைக்கப்படும் அவளது வாழ்க்கை பிறரால் புரட்டிப் போடப்படுவதை தடுக்கும் ஆற்றல் அவளிடம் இல்லை. அதை சரிசெய்யத் தேவையானவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு தோன்றுவதே கூட இல்லை. ஒவ்வொரு கட்டத்திலும் மாற்று முடிவு எடுக்கக்கூடிய வாய்ப்பு இருந்தும் அதை அறியக்கூட மனம் வராமல் அப்படியே வாழ்ந்து மறைவதே அவளது வாழ்வின் பொருளின்மை.
மரபு, பழமை ஆகியவற்றிலிருந்து வெளி வர முடியாத துக்கத்தை பெரும் அங்கதத்துடன், அதுவும் திகில் கதையின் பாணியில் கொண்டு செல்கிறது, “பாலி குன்றில் ஓர் இரவு”. நகராமல் நின்ற காலம், காத்திருக்கும் காதல் போன்ற படிமங்களை அப்படியே தலைகீழாக புரட்டி போடுகிறது இக்கதை. அங்கதமென தொடங்கி, சென்று போன காலத்தின் சங்கடமான எச்சங்கள் நிறைக்கும் துன்பத்தில் ஆழ்த்தி, சட்டென ஒரு திகில் கதையாகி விரிகிறது.
“ஒளியின் வேகத்தில்” கதையில் யுகம் யூகமாய் மீள மீள நிகழும் அதே நிகழ்வு தொடர்களை அங்கதமாகவே நோக்குகிறார் ஆசிரியர். பழைய எகிப்துக்கும் இருபதாம் நூற்றாண்டு இந்தியாவுக்கும் காலமாற்று பயணம் செய்யும் கதை இது. அன்றிலிருந்து இன்று வரையான மாற்றத்தையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து கொண்டே வரும் இந்த புனைவில், பழைய எகிப்தில் இருந்து வரும் தோத் இன்றைய இந்தியாவின் பத்மாவிடம் கேட்கிறான், “அப்படி என்ன பெரிதாய் இருக்கிறது உங்கள் உலகில்?” ஏனெனில், அரசும் நிறுவனமும் என்றும் உள்ளன, கிளர்ச்சியும் கலகமும் எல்லா காலமும் நிகழ்கிறது, போராடி நிறுவி வருபவர்கள் அதே சுழலுக்குள்ளேயே மீண்டும் சிக்குகிறார்கள். இன்னும் அவன் கேலி செய்வது போல, “நீங்கள் போர்களே இல்லாமல் ஆக்கி விட்டீர்கள் இல்லையா? அணுசக்தி கொண்டு அமைதியை நிலை நிறுத்தி விட்டீர்களே!” என்கிறான். அந்த உண்மைக்குள் பிற அனைத்துமே வடிந்து போகிறது. காலம் மாறி வாழ்ந்தால் மட்டும் அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் இருக்கப்போவாதில்லை என்ற திடுக்கிடலோடு முடிகிறது இந்த கதை.
இதன் இன்னும் கூரான பரிணாமம் “புனிதர் ஃப்ளோராவின் பாவ மன்னிப்பு” கதையில் வெளிப்படுகிறது. அங்கதம் நிரம்பிய இந்த திகில் கதையில், நானூறு வருடங்களுக்கு முன் இறந்து வெறும் எலும்புக்கூடுகளாய் இருக்கும் புனித ஃப்ளோராவும் பாதிரியார் கிரெகரியும் உயிர் பெறுகின்றனர். ஆனால் அவர்கள் எலும்புக்கூடுகளாகவே இருக்க நேர்கிறது, அதுவும் ஒரு வருட காலம் மட்டுமே என்ற நிபந்தனையுடன். இந்தச் சூழலில் அவர்களும் ஏறக்குறைய பத்மாவையும் தோத்தையும் போலவே தங்களை முடிந்த அளவு பொருத்திக் கொள்கிறார்கள். தாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்த கதையை, நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். துறவுக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட ஃப்ளோரா புனிதர் ஆன கதை தொன்மங்களின் காலத்தேவைகளைப் பற்றி சொல்கிறது. அவள் ஆழ இருக்கும் வலியை துறக்க மேலோட்டமான வலியை தேர்ந்தெடுக்கிறாள். அது அவளை புனிதராக அறியப்பட வைத்து தொன்மம் என நிலை நிறுத்துகிறது. ஆனால், அந்த வலி மாறுவதில்லை அப்படியே தான் இருக்கிறது, “துடைத்து எடுத்து வலியை நீக்கி விட முடியும் என்பதைப் போன்ற கட்டுக்கதை எதுவும் இல்லை, அது நிரந்தரமானது”. அவள் உயிர் பெற்று திரும்பி வரும் போது ஆசைப்படுவது, வெறும் ஒரு சிவப்பு உடைக்காக மட்டுமே, “நான் வண்ணங்களை இழந்து வாழ்ந்தேன்!” அந்த சிவப்பு உடை பல குறியீடுகளை உடைத்து எறிகிறது. முக்கியமாக தெரிவுகள் விலக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையின் மேல் கட்டி எழுப்பப்படும் பிம்பங்களை கேலி செய்கிறது. ஆஷாபூர்ணா தேவியின் ’முதல் சபதம்’ நூலின் மோக்ஷதா அத்தையின் மீன் ஆசைக்கு நிகரானது ஃப்ளோராவின் சிவப்பு உடை ஆசை. அந்த சிகப்பு உடையையும் தூக்கி எறிந்து தான் “யார்” என்பதை சொல்லும் நிலையும் அவளுக்கு வரத்தான் செய்கிறது.

இந்த வகைமையிலேயே மாறி வரும் காலத்தை, ஆனால் அதனுள் மாறாது நின்று விடுபவற்றை பேசுவது, “சில்ஹெத்தின் தேநீர் தோட்டங்கள்” சிறுகதை. நிறைய சுயசரிதை போல எழுதப்பட்ட இந்தக் கதையில், கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷ்) மேற்கு பாகிஸ்தானில் இருந்து வந்து வாழும் உயர் குடியினர் சிலரின் வாழ்க்கைக்குள் நிகழும் சிறு பூசல்களுக்கு நடுவில் மாறும் சமுதாயத்தையும், அஸ்ஸாம் எல்லை சிக்கல்களையும் விரித்துச் செல்கிறது. நினைத்ததை அப்படியே நிறைவேற்றும் யக்ஷி என ஒருத்தியும், அவளுக்கு நேரெதிர் என தனது அடிப்படை தெரிவுகளை கூட நிறுவிக்கொள்ள முடியாத இன்னொருத்தியும் இதில் ஒப்பிடாமல் ஒப்பிடப்படுவது மிகக் கூர்மையான பகுதியாக உள்ளது.
குர்அதுல்ஐன் ஹைதர் நிலப்பிரபத்துவ காலகட்டத்தின் இறுதியில், அதை விலக்கி முன்னே வந்து கொண்டிருந்த மார்க்சிய கொள்கைகளின் எழுச்சியில், பிரிவினைவாத சிந்தனைகள் வலுப்பெற்ற காலத்தில் வளர்ந்தவர். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையும் அதன் தாக்கத்தையும் தானே நேரில் கண்டும் அனுபவித்தும் வாழ்ந்தவர். அதன் வீச்சை அவரது எழுத்து முழுதும் காண முடிகிறது. பிரிவினையின் தாக்கம் நேரடியாக இந்தத் தொகுப்பில் இடம் பெறுவதில்லை ஆனால் ஒரு பெருவெள்ளத்தின் பின் அணையில் நிலைத்து விடும் விரிசல்களாக அது ஆகிவிட்டதைக் காண முடிகிறது. இந்த தொகுதியில் இருக்கும் கதைகளின் இணைவு, அவை ஒரு வாழ்க்கை முறையை அது அமைந்த ஒரு கருத்தியலின் அந்திமத்தை அடித்தளமாக கொண்டவை என்பது. நிலப்பரபுத்துவ வாழ்க்கை முறையின் இறுதிக்காலம் பல வகைகளில் பதிவு செய்யும் இந்தக் கதைகள், அதே சமயம் அந்த மாற்றத்துக்கான வித்துகள் எத்தனை வலி கொண்டவை என்பதையும் சொல்லாமல் சொல்கின்றன. இவ்வாறான ஒரு விலகும் பண்பாட்டை பற்றிய பேசுபொருள் கணம் கூடி வெறும் நினைவேக்கம் (nostlagia) என்று மட்டுமே ஆகிவிடக்கூடிய வாய்ப்பு அதிகம். அவ்வாறு நிகழாமல் அங்கிருந்து முன்சென்று வரலாற்றிலும், அதிலிருக்கும் வாழ்வின் பொருளின்மையிலும் நின்று மனிதர்களையும் அவர்களின் செயல்களையும் மதிப்பிடாமல் வெறுமே நோக்குகிறது, இக்கதைகள்.
இவற்றில் இழையோடும் பல குறும்பண்பாடுகளின் சித்தரிப்புகள் கவனத்துக்கு உரியவை. ஆங்கில இந்திய வழியில் வந்த பெண்கள் நடத்தப்பட்ட விதம், ஆங்கிலேயர்கள் தங்களின் உழைக்கும் வர்க்க பின்னணியை மறைத்து இங்கே பிரபுக்களின் வழி வந்தவர்களாக காட்டி நடந்தது, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய சினிமாவின் குறுக்குவெட்டு சித்திரம், உயர் குடி பார்சி இன வாழ்க்கை, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் குடி பெயர்ந்த மக்கள், அங்கிருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு குடி புகுந்து வாழ்ந்தவர்கள், அஸ்ஸாம் எல்லை சிக்கல், அங்கிருந்த கூலி தொழிலாளிகளின் நிலை ஏறக்குறைய அவர்களை நாடற்றவர்களாக ஆக்கியது, எகிப்தில் இஸ்லாமிய ஆட்சி மாறிய காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், பழைய பைஜான்டியம் பண்பாட்டில் ரோமானிய கத்தோலிக்கர்கள் வாழ்ந்தது, அதற்கு பின்னான அரேபிய படையெடுப்புகளின் பின்னணியில் விரிந்த காலத்தின் சித்தரிப்பு என பலவும் ஊடுபாவி வருகின்றன. தொகுதியின் முக்கிய படைப்பு, அதன் தலைப்பில் வரும் கதையான லக்னோ வீதிகளில் பாடும் கூத்து கலைஞர்களின் வாழ்க்கை கதை. இஸ்லாமிய சமூகத்தில் நிலவிய தவைஃப் என்ற தேவதாசிகளை ஒத்த வாழ்க்கை முறையின் இறுதி என்ற நோக்கிலும் இந்த படைப்பை அணுகலாம். எதில் தூக்கி எரியப்பட்டாலும், எதனால் அறையப்பட்டாலும் அதை கொண்டு தன் வாழ்க்கையை நடத்திக்கொள்ள மட்டுமே முயற்சி செய்த ரஷ்கே கமர் என்ற கம்ரூனின் கதை என்று இன்னும் நினுக்கமாகவும் இதை அணுகலாம்.
சமாதிகளில் கஜல் பாடி வாழ்வாதாரம் பேணும் மக்கள். அந்த ஏழ்மையில் இருந்து விலக முற்பட்டு நாவிதராக வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் ஜும்மன் கான். அந்த நிலையை தாண்டிச் செல்ல தவைஃப் ஆவது ஒன்றே வழியாக தெரிவு செய்யும் கம்ரூன். ஆகா ஃபர்கத்திடம் அதற்கான ஒப்பந்தத்தை செய்து கொள்கிறாள். அவள், அவளது தங்கை ஜமீலா, மற்றும் இன்னொரு பெண் சடஃப் மூவரும் ஆகா ஃபர்கத் மற்றும் அவனது நண்பன் நரேந்தர வர்மாவால் பேணப்படுகிறார்கள். மீராசின்களை போல சிறு கூட்டங்களுக்கு பாட செல்கிறார்கள், கவிதாயினிகளாக கஜல்களை சென்று வாசிக்கிறார்கள். பிறகு கம்ரூன் குழந்தைகள் மூன்று பெற்று, பிறந்ததும் ஒன்றை, சற்றே வளர்ந்து வேறு வகையில் இன்னொன்றையும் இழக்கிறாள். எஞ்சிய ஒற்றைப் பெண்ணை, ஆகா ஃபர்கத்தின் மகளை அவனிடமே கொண்டு செல்ல யத்தனிக்கிறாள். அவனை தொடர்ந்து பாகிஸ்தான் சென்று அங்கே தன்னை போலவே ஒரு வாழ்கையை தேர்ந்த தான் மகளை ஒரு தங்கம் கடத்தும் கும்பலிடம் பறிகொடுக்கிறாள். எல்லாம் இழந்து லக்னோவிற்கே மீண்டும் வருகிறாள். அங்கே அவளது தங்கை சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டதை அறிந்து கொள்கிறாள். அந்த வேளையில், சிக்கன்காரி வகை பூத்தையல் வேலை செய்து அதன் சொற்ப வருமானத்தில் தன் மூப்பை கழிக்கிறாள் கம்ரூன்.
நேரிடையாக கதையை விரித்தெடுத்துச் செல்லும் படைப்பு இது. அக்னி நதியை போலவே கால மாற்றங்கள், அவை சில வருடங்கள் ஆனாலும் சரி, சில மாதங்கள் ஆனாலும் சரி அடுத்தடுத்த வரிகளில் நிகழ்கின்றன. இத்தனை சோகம் நிறைந்த கதையில் நிரம்பி தளும்பும் அங்கதமும், எதிர்பாராத இடங்களில் நிறைந்து கிடக்கும் கட்டற்ற கனிவும் இதை ஒரு ஆழமான படைப்பாக ஆக்குகிறது. இதில் பாதிக்கப்படும் எந்த பெண்ணும் வெறும் அபலையாக இல்லை, அதற்கான பெரும் காரணிகளான எந்த ஆணும் முழு வீச்சில் எதிர்மறையாகவும் சித்தரிக்கபடுவதில்லை. அவர்கள் ஐயமில்லாமல் கோழைகளாக சில இடங்களில் நடந்து கொள்ள நேரிடுகிறது, ஆனால் அவர்கள் தொடங்கும் இடமும் முடிக்கும் இடமும் முழுக்கவே அன்பு நிறைந்து தான். வாரி இறைக்கப்பட்ட அத்தனை துன்பங்களையும் ஒரு புறம் சுமந்தாலும், சிரித்துக்கொள்ள, கனிந்து கொள்ள அந்த பெண்கள் அனைவராலும் முடிகிறது.
கம்ரூனின் தங்கை, போலியோ பாதிப்பில் காலை இழந்த ஜமீலா ஒரு அற்புதமான படைப்பு. அவளது ஊனத்தை அவள் முழுதும் ஏற்றவள், அதையே தனது பலமாக ஆக்கிக்கொண்டவள். அதன் துணிவில் எதையும் யாரிடமும் நேர்பட பேசத் துணிந்தவள், நியாயமானவள், அக்காவிடம் அளவு கடந்த அன்பு கொண்டவள், கம்ரூனை விலக்கிய ஆகா ஃபர்கத் தன்னுடைய நிலை அறிந்து பொருள் உதவி செய்ய முன்வரும்போது அதை வேண்டாம் என்று திருப்பி அனுப்பும் ரோஷக்காரி. அதையாவது வாங்கி அவள் நிம்மதியாக இருந்திருக்கலாமே என்று கம்ரூன் வருந்தும் இடம் ஒரு உச்சம்.
“அடுத்த ஜென்மத்திலாவது என்னை பெண்ணாக படைக்காதே,” என்ற கஜல் பாடலோடு தொடங்கும் கம்ரூனின் கதை அந்தப் பாடலின் வீச்சு முழுதும் வாழ்ந்து அறிந்து கழிகிறது. ஆனால் அவளது பயணம் முழுக்க அவள் அறியும் வெறுமைக்கு இணையாக கருணையையும் அறிகிறாள், அதைக் கொடுக்கவும் செய்கிறாள். அவளை வளர்த்த கடுகடு ஹுர்முஜி அத்தை மட்டும் தான் அங்கேயே கம்ரூனுக்காக காத்திருக்கிறாள், கம்ரூனை பாகிஸ்தானில் வீட்டு வேலைக்கு வைத்திருக்கும் ஜப்பானிய இணையர் தான் அவள் மகள் இறந்த தருவாயில் அவளுக்கு பேராதராவாக நின்று மீண்டும் இந்தியா போக உதவி செய்கின்றனர். ஹுர்முஜி அத்தையையும் ஜமீலாவையும் கடைசியாக பார்த்துக்கொள்ளும் ஹஃபீஜான் அவர்களுக்காக ஆகா ஃபர்கத்திடம் சென்று முறையிட்டு வழி செய்கிறான். தனது பண்ட பாத்திரம் அனைத்தையும் அவர்களுக்கு கொடுத்து விட்டுச் செல்கிறாள் சடஃப். கம்ரூன், அவளது ஊருக்கு செல்ல உதவும் நபர்கள் என கதை நெடுக சிறிதாகவோ பெரிதாகவோ கருணை ஒன்று எப்போதும் இழையோடிக்கொண்டே இருக்கிறது. அந்த நீட்சியே, ஹுர்முஜி அத்தை கேட்கும் போது அவளிடம் தனது மகள் ஒரு நல்ல வாழ்வு வாழ்வதாகவே பொய் சொல்லி அந்த வயதானவளை வீணே வருந்த விடாமல் கடைசி காலத்தில் பேணுகிறாள் கம்ரூன்.
இந்த நெடுங்கதை, அதன் வீச்சிலும், குமிழியென உடையும் அதன் முடிவிலும், மாறுவதையே நிலையாக கொண்ட வாழ்க்கை போக்கிலும், அதை எதிர் கொண்டு தங்கள் வாழ்க்கையை வாழும் சாமானியர்களாலும், ஒரு காவிய நிலையை எட்டி விடுகிறது.

குர்அதுல்ஐன் ஹைதர் மரபை, நவீனத்தை, கருத்தியல்களின் பிடிவாதத்தை, அவற்றின் தேவையை, அதன் முட்டாள்தனத்தை என எதையுமே புனித்தப்படுத்துவதில்லை. அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்துகிறார், அவற்றின் பொருளின்மையை மீள மீள நிறுவுகிறார். இவ்வளவே இவை அனைத்தும் என்ற கருணை அந்த நோக்கில் நிறைந்துள்ளது.
***
(இந்நூலின் உருது மூலம் – ரோஷ்னி கி ரஃப்தர், ஆங்கிலத்தில் Street singers of Lucknow and other stories, ஆசிரியரே மொழிப்பெயர்த்தது)
