அம்மணி – ஹெப்சிபா ஜேசுதாசன்

ஹெப்சிபா ஜேசுதாசன் நூற்றாண்டை முன்னிட்டு ‘நானும் என் எழுத்தும்’ என்ற கட்டுரை கடந்த இதழில் வெளியானது. இவ்விதழில் சிறுகதை பற்றி ஹெப்சிபா எழுதிய கட்டுரை இடம்பெறுகிறது. ‘அம்மணி’ என்ற புனைபெயருடன் எழுதப்பட்ட இந்த ரசிக விமர்சனக் கட்டுரை க.நா.சு நடத்திய ‘இலக்கிய வட்டம்’ 12வது இதழில் (24-4-1964) வெளியானது. இக்கட்டுரையை ‘நீலி’ நன்றியுடன் மறுபிரசுரம் செய்கிறது.

-ஸ்ரீநிவாச கோபாலன்

*

ஹெப்சிபா ஜேசுதாசன்

*

சிறுகதை

எங்கு பார்த்தாலும் வேலை, நெருக்கடி. பொழுதுபோக்கிற்காக நூலை எடுத்து வைத்துக்கொண்டு, மூக்குக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு, மெய்மறந்து உட்கார்ந்துவிடுகிறதெல்லாம் பழைய காலம். இப்போதைக்கு நாவலைவிட நாவலின் சுருக்கம் தேவை. பிரபந்தத்தைவிட பிரபந்தத்தின் சாரம்தான் வேண்டியிருக்கிறது. பொழுது எங்கேதான் போகாமலிருக்கிறது? இருட்டிவிடுகிறதற்குள் யுகமே மாறிவிடும் போலிருக்கும் இந்த நிலையில், இந்த நவீன உலகில், அன்று அந்தப் பாரசீக சுல்தானுக்குத் தேவையாகயிருந்த அந்தமில்லாத கற்பனைக்கதை யாருக்கு வேண்டுமாம்? கடிகாரம் டிக்டிக் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக ஆகவேண்டிய வேலை காத்துக்கொண்டுமிருக்கிறது.

ஆகவேதான் இன்று காவிய உலகைச் சிறுசிறு பாட்டுகள் வென்றுகொண்டிருக்கின்றன. பழம்பெரும் நாவல்களின் இடத்தைச் சிறுசிறு கதைகள் தமக்குரிமையாக்கிக்கொண்டுவிட்டன. பள்ளிக்கூடத்துக்குப் புறப்படும் குழந்தை, சாவகாசமாக இட்லி, தோசை மென்று விழுங்குவதற்கு சமயம் போதாமல் ஒரு தம்ளர் பாலை எடுத்து மடக் மடக் என்று வயிற்றிலாக்கிவிட்டுப் புறப்படுகிறது போல, அகில உலகமும் காவியப் பெருங்கதைகளைப் புறக்கணித்துவிட்டு, “சிறுகதை! சிறுகதை!” என்று கையை நீட்டிக்கொண்டிருக்கிறது. இலக்கியப்பசி, கலைத்தாகம், இருக்கவே இருக்கிறது. படைத்து விட்டவன் அதை இதயத்தில் வைத்தும் விட்டான். அதைச் சுருக்கமாக இலகுவில், தீர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு தலைக்குமேல் இருக்கிற பொறுப்புக்களைக் கவனிக்கச் செல்ல வேண்டும்.

தமிழ்நாட்டிலும் இப்போது சிறுகதை பிரவாகம் எடுத்துக்கொண்டிருக்கிறது. பத்திரிகைகளிலும் நூல்களிலும் நவீன ஆசிரியர்கள் தம் கைவரிசையை சிறுகதைக் கலையிலேயே காட்டிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையின் ஒரு புதுத் தேவையை நிரப்ப இலக்கிய உலகம் முயன்றுகொண்டிருக்கிறது. ஆனால் வாசகர்களைத் திருப்திசெய்துவிடுவது இலகுவல்ல. தாய்மார்களில் பலருக்கும் தெரியலாம், கதை சொல்வதின் அருமை. படுக்கைக்கு வேளையானதும் அம்மா கதை என்று வருவார்கள் குழந்தைகள். முதலில் கற்ற வித்தையெல்லாம் காட்டி குழந்தைகளை மகிழ்வித்துத் தானும் மகிழ்ந்த காலம் எல்லாம்போய் பிறகு இந்தச் சனியன்களை எதைச் சொல்லி சமாதானப்படுத்துவது என்ற நிலைமைக்கு வந்துவிடுகிறாள் தாய், ‘ஸ்டாக்’ தீர்ந்துவிட்டது. கற்பனைக்கும் எல்லை உண்டல்லவா? இப்படித் திணறும் அழகான அனுபவம் எனக்கும் வாய்த்திருக்கிறது. தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் பலரும் இந்த நிலைமையிலேயே திணறுகிறார்கள்!

சிறுகதை வாசகர்கள் பொல்லாத குழந்தைகள். அவர்களை ஒரளவுக்கு மேல் ஏமாற்ற முடிகிறதில்லை. சிறுவர்களிடமாவது முயல் இறகு கட்டிப் பறக்கிறது என்று சொல்லி, சிறுவர்கள் முரண்டினால் நிலைமையை எளிதில் சமாளித்துவிடலாம். ஆனால் வாசகர்கள் காரியம் அப்படியல்ல. இது இருபதாம் நூற்றாண்டாகவும், வாசகர்கள் விஞ்ஞான உணர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்கவே, நாம் தத்துப்பித்தென்று ஏதாவது உளறிக் கொட்டிவிட்டுத் தப்பி வந்துவிட முடியாது. பேயையும் யக்ஷியையும் கண்டதாக சென்ற நூற்றாண்டில் எழுதவும் எழுதினார்கள். இலக்கியப்போக்காக அதைக் கவனித்தால் அதில் பிசகொன்றுமில்லை. நம்புவதற்குத்தான் ஏராளம் பேர் இருந்தார்களே! இன்றைக்கோ விளக்கம் கொடுத்தாக வேண்டும். பேய் மரநிழலாக இருக்கலாம். அல்லது பைத்தியக்காரன் மனநிழலாக இருக்கவேண்டும்! இல்லையென்றால் கதையின் மதிப்புப் போயிற்று. வாசகர் உலகம் தங்களைப் பொறுத்த அளவில் விஞ்ஞானிகள் சபையாயிற்றே? கதை சொல்கிறவன் கொஞ்சம் சுயமரியாதையையும் காப்பாற்ற வேண்டாமோ? ஆலன் போ என்ற சிறுகதை மேதை, ஒரு கொலையை ஆராய்கிறான். கொலையின் காரணம் நமக்கு விளங்காத விஷயமாயிருக்கிறது. கொலையாளின் நடத்தையே ஒரே புதிர். ஆனால் கடைசியில், “நான் பைத்தியக்காரன் என்று நீங்களும் நினைக்கிறீர்களா?” என்று அவன் கதறும்போது, மர்மமெல்லாம் வெட்டவெளிச்சமாகிவிடுகிறது. கதை கட்டுக்கதை என்கிற தோற்றம் மாறி, ஒரு பைத்தியக்காரனின் உள்ளத்தில் நிகழ்வனவற்றை மெய்ப்பித்து, பூதக்கண்ணாடியில் பிடித்துக்காட்டி, அரிதான ஒரு பொருளாக ரூபமெடுத்துவிடுகிறது. பூரணமான வெற்றி கதைக்கு!

ஆனால், சிற்றறிவுக்குக் கதையைப் பொருந்தச் செய்வது சிறுகதைக்கலையின் ஒரு நுட்பமான அம்சம் மட்டும். அது மட்டும் போதாது, நிகழக்கூடிய நிகழ்ந்துள்ள ஒரு சம்பவத்தை ஒரு கோணத்திலிருந்து இலக்கியாசிரியன் கையாளுகிறான் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கோணம் பழையதாகிவிட்டால்—? ஆறின கஞ்சி பழங்கஞ்சி. ஆகவே புதுமையைத் தேடிப் பிடித்து, வாசகர்களுக்கு அள்ளி அளிக்கவேண்டிய நிலையும் வந்துவிடுகிறது. வாசகர்களின் திருப்தியைச் சம்பாதிப்பதற்கு இது ஒரு குறுக்கு வழி, யாருமே கையாண்டிராத விதம். சிறுகதை ஆசிரியர்கள் ‘டெக்னிக்’ என்று இன்று தேடியலைகிறார்கள். ஒரு கதையில் வெறும் சம்பவத்தின் விறுவிறுப்பு. இனியொன்று உணர்ச்சி வெள்ளம். ஒன்றில் ஆசிரியர் தாமே கதாபத்திரங்களை அறிமுகம் செய்துகொண்டு வாசகனின் நண்பனாக அமைகிறார். வேறொன்றில் ஆசிரியரைக் காணவே காணோம். கதாபாத்திரமான ஒருவருடைய மனப்போராட்டங்கள் நிழலாட்டமாக நம் கண்முன் சஞ்சரிக்கின்றன. வேறொரு சிறுகதை வெறும் ஒரு கடிதம். அந்தக் கடிதம் வாயிலா ஒரு நெருக்கடியான நிலைமை நம் கண்முன் உருவாகிறது. காதல் வாழ்க்கையின் திருப்பங்கள் சிறுகதை ஆசிரியரது மனத்துக்குகந்து சந்தர்ப்பங்களையளிறக்கின்றன.

இந்தத் திருப்பங்களைப் பயன்படுத்துகிறதும் பலவிதம். சிறுகதையாசிரியர்களுக்குப் பஞ்சமில்லையென்றால், கதைக்கும், டெக்னிக்குக்குமா பஞ்சம்? அதுவும் நம் இலக்கிய உலகத்திலா? அது மிகவும் வளம் பெற்றதல்லவா? வாசகர்கள் எண்ணிக்கை பெருகுந்தோறும் கதையும், டெக்னிக்கும், பெருகிக்கொண்டேதானிருக்கும்.

இலக்கிய வட்டம் – 12வது இதழ்

ஆனால் என்னவோ மேதைகளின் எண்ணிக்கை மட்டும் அத்தனை எளிதில் பெருகுகிறதில்லை. நூற்றிலொருவர் என்ற விகிதம் இந்த மேதைகளின் கணக்கில் மட்டும் சரிப்பட்டு வருகிறதில்லை. எங்கேயோ என்றோ ஒரு கம்பன் இருந்தான். அந்தக் கம்பன் காலத்திலிருந்த ஜனத்தொகையைவிட நம் ஜனத்தொகை குறைந்ததா? இல்லை, கற்றறிந்தவர்கள், சான்றோர் தொகையும் தரமும்தான் இன்று மட்டமாகிவிட்டதா? பத்திரிகையும் பள்ளிக்கூடமுமாகப் பல்கிப் பெருகிக் கிடக்கும் இந்தக் காலத்தில். எத்தனை கம்பன்கள் சிறுகதை எழுதிக்கொட்டிக்கொண்டு ஜே ஜே என்று இருக்கவேண்டும்? இவர்கள் எல்லோரும் எங்கே சென்று ஒளிந்துகொள்ள இடம் தேடிப் பிடித்துக்கொண்டார்கள்? தமிழில் இன்று இலக்கியம் ஏது என்று பிறர் சொல்லும் அளவுக்கு நாம் ஏன் தரம் இறங்கிவிட்டோம்?

இலக்கியத்தின் உயிர்நாடி ‘டெக்னிக்’ அல்ல. ‘டெக்னிக்’ ஒரு மெஷினைப் போன்றது. அல்லது ஒரு உடலின் அமைப்பில் எலும்புக்கூட்டைப் போன்றது. உடலுக்கு உரமும் உருவமும் அளிப்பது எலும்புக்கூடான இந்த அச்சுத்தான். ஆனால் இந்த வெறும் எலும்புக்கூடு யாருக்கு வேண்டும்? முகத்தில் தவழும் அன்புப் புன்னகை எங்கே? கண்களில் நிழலிடும் கனவுகள் எங்கே? அவற்றில் அல்லவா கவிதையிருக்கிறது? வெறும் எலும்புக்கூடு அருவருப்பையல்லவா தருகிறது? இதயப் புன்னகையும் கனவு நிழலும் மார்க்கெட்டில் வாங்கக்கூடிய பொருளாக இல்லை. சிருஷ்டி கர்த்தாவிடம் இருந்து வரமாகப் பெற்றாக வேண்டும். அதாவது, கிடைத்தால் வாங்கிக்கொள்ளவேண்டும். கிடைக்காவிட்டால்—? தலையெழுத்து அவ்வளவுதான். தன் முயற்சியால் முளைக்கிற பயிரா இது? மேதையொருவனின் புகழுக்குக் காரணம், தொண்ணூற்றொன்பது சதமானம் அவன் முயற்சியின் வியர்வை என்கிறார்கள். முற்றிலும் சரி. ஆனால் மிக்சமிருக்கும் அந்த ஒரே ஒரு சதமானமும் இல்லாவிட்டால் காரியம் உருப்படாது. அந்த ஒரே ஒரு சதமானத்துக்கு யார் பொறுப்பு? முட்டையின் மஞ்சள் கருவில் ஒரு சிறிய பொட்டு. அதில்தானே உயிர் இருக்கிறது? இலக்கிய சிருஷ்டியின் இதயமாக இயங்குகிறது அந்த ஒரே சதமானம்தான். நாளங்களில் உயிர்த் துடிப்பைப் பாய்ச்சவேண்டியது இதுவே. ஷேக்ஸ்பியருக்கு இது இருந்தது. ஆகையால் அவன் சிறந்த கவிஞன். சிறந்த நாடகாசிரியன். இசைக்கு சிறந்த பாடல்களை அமைத்திருக்கிறான். அவன் எழுதிய கொஞ்சநஞ்சம் வசன நடையிலுங்கூட சிறப்பைக் காணலாம். கம்பன் இன்று சிறுகதை யுகத்தில் இருந்தானில்லையே என்பது ஒரு மனக்குறையாக இருக்கிறது. ஒரு பக்கம், பத்திரிகை விற்பனைக்கென்று சிறுகதையைத் தரம் இறக்கியுமிருப்பான். ஆனால் இன்னொரு பக்கம் சிறுகதை ரசிகர்களைத் திணறத்திணற அடித்துமிருப்பான். புதுமைப்பித்தன் தோற்றுவிட்டான் போங்கள். ஆனால்—கம்பன்தான் இன்றில்லையே!

அமெரிக்க சிறுகதையாசிரியர் ஒருவர், ஒரு சிறுவனின் அனுபவத்தை சிறுகதையாக வடித்திருக்கிறார். விஷயம் வெறும் சில்லறைதான். கிறிஸ்மஸ் தினம். தந்தையிடம் ஒரு குதிரை, ‘போனி’ பரிசாகக் கேட்டிருக்கிறான். தந்தையும், போனியாவது வாங்கவாவது என்று சொல்லிவிட்டு, சிறுவனை அறியாமல் போனிக்கு ஏற்பாடும் செய்கிறார். போனி வந்து சேர தாமதமாகிவிடுகிறது, ஒரு குடிகாரன் காரணமாக. அந்த இடைவேளைதான் அந்தச் சிறுகதைக்குக் காழாக அமைந்திருக்கிறது. இதென்ன கதை என்று மிக எளிதில் சொல்லிவிடலாம். அந்தக் கதையை வாசித்துப் பாருங்கள், மரத்துப்போன உங்கள் உள்ளம் அந்தப் பிள்ளைமனத்தோடு இழைந்து நெகிழ்ந்து போகிறதை உணருங்கள். அவனோடு அழுங்கள். சிரியுங்கள். புதிய குதிரையின் சலங்கைகள் கலகலப்பதை, உங்கள் உணர்ச்சியற்றுவிட்ட ஊன் செவிகளால் அல்ல, அந்தச் சிறுவனின் மென்மையான புலன்களால் ஏற்று ஆனந்தம் அனுபவியுங்கள். அதென்ன கவிதையா? சிறுகதையா? கவிதையில்லாத சிறுகதை எது? யாருக்கு வேண்டும்?

சிறுகதை யொன்றின் தரத்துக்கு ஒரு சிறிய பரிசோதனை. கதை வாசகனின் மனத்தைக் கவ்விக்கொள்கிறதா, அட்டை மாதிரி? இதை வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடிகிறதில்லை, வைத்துவிட்டாலும் மறக்க முடிகிறதில்லை என்று வாசகனை அப்படி ஆட்டிவைக்கிறதா? இந்தக் கதைக்கு படம் எதற்கு? விளம்பரம் எதற்கு என்று தோன்றுகிறதா? அப்பப்பா வாழ்க்கையில் அற்புதம் இத்தனையா என்று வியக்க வைக்கிறதா? அணுவை அண்டமாகவும் அண்டத்தை அணுவாகவும் மாற்றுகிறதா? கண்ணீர்விடவேண்டிய கட்டத்தில் ஆனந்தச் சிலிர்ப்பையும் மகிழ்ச்சியின் சிகரத்தில் கண்ணீரையும் தருகிறதா? சிறிய ஒரு விஷயம் பெரியதொரு உண்மையாகிவிடுகிறதா? அப்படியானால் அடுத்தபடியான ஆராய்ச்சிக்கு அந்தச் சிறுகதை தகுதி பெற்றுவிட்டது, இலக்கியாசிரியனின் ‘டெக்னிக்’ விமர்சனத்துக்குப் பாத்திரமாகிறது. கதைமட்டில் ‘சப்’பென்று தூங்கி வழிந்துகொண்டிருந்தால் ‘டெக்னிக்’கின் புதுமை யாரைக் கவரப்போகிறது? சமையல் நன்றாகயிருக்கலாம். உப்பு மட்டும் இல்லாவிட்டால்—? டெலிவிஷனில் புதுமை யிருக்கிறது, ‘டெக்னிக்’ ஒன்றும் மட்டமில்லை. ஆனால் பொய்ச்சிரிப்புக் காட்டும் அந்த முகத்தை எத்தனை நாளைக்குச் சகித்துக்கொள்கிறது? சில வேளைகளில் ‘பொய்க்கால்’ குதிரை ஆடுகிற சிறுவன் போடுகிற போடு எப்படியிருக்கிறது? அவன் உற்சாகமும் பெருமிதமும் நம்மையுமல்லவா பிடித்துக்கொள்கிறது? அவன் ‘டெக்னிக்’ மிகப் பழையது. உற்சாகமோ மிக மிகப் புதியது!

ஸ்ரீநிவாச கோபாலன்

சிறுகதை ஆசிரியன் வாசகனின் ஒரு தோழன் மாதிரி. சில வேளைகளில் அந்தத் தோழமை அற்புதமாகிவிடுகிறது. வாழ்க்கைச் சகதியின் நடுவில் நின்றுகொண்டே, காணதனவெல்லாம் காட்டி, தெம்பையும் உற்சாகத்தையும் தருகிறான். ஆனால் சில வேளைகளில் ஊட்டி என்றும் கோடைக்கானல் என்றும் அழைத்துப் போனாலும், அங்கேயும் நம்மை ‘போர்’ அடிக்கிறான். கொட்டாவி விட்டுக்கொண்டு காசு செலவழித்த உணர்ச்சியோடு திரும்புகிறோம். இப்பேர்ப்பட்ட தோழமை என்றும் வேண்டாம்! ‘போர்’ அடிக்கிற சிறுகதை உங்களுக்கு வேண்டாம்! அதைக் கீழே வைத்துவிடுங்கள்? வாசித்து ரசித்து, அனுபவித்த பிறகல்லவா அதைப் பற்றிப் பேசுகிறது?

அம்மணி (ஹெப்சிபா ஜேசுதாசன்)
இலக்கிய வட்டம், இதழ் 12, 24-4-1964

***

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *