முனித்துறை முதல்வியர் – வீர. ராஜமாணிக்கம்
தை நீராடல் குறித்து நல்லந்துவனார் எழுதிய பரிபாடலில் வரும் பாடல் ஒன்று…
கனைக்கு மதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விடுதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப
வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர் பாடிப் பருமண் வருவியன்
ஊதையூர் தர வுறைசிறை வேதியர்
நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற்
றையன் மகளிர் ஈரணி புலர்த் தர
வையை நினக்கு மடைவாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
(பரிபாடல் (74-87) நல்லந்துவனார்)
இப்பாடலில் வரும் ”முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட” என்ற வார்த்தைக்கு பரிமேலழகர் முதல் பிற உரையாசிரியர்கள் அனைவரும் ‘முதிய பெண்கள் வழிகாட்ட’ என்றே பொருள் குறிப்பிட்டுள்ளனர். முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட, அம்பா ஆடல் ‘ஆய்தொடிக்கன்னியர்’, ’விரி நூல் அந்தணர்’, ’புரி நூல் அந்தணர்’ என தனித்தனியாக ஒவ்வொரு பூசக குடியினரும் முன்னெடுக்கும் சடங்கைச் சொல்லி வருபவர், மூத்த பெண்கள் அல்லது முதிய பெண்கள் என்பதை முனித்துறை முதல்வியர் என்று குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அவர் மறை பொருளாக சொன்ன முனித்துறை முதல்வியர் என்பது யார்? அதன் பின்தொடர்ச்சி என்ன? என ஊகிப்பதற்கான ஒரு முயற்சி தான் இக்கட்டுரை.
இவர்கள் ஒரு நெறிக்காப்பாள பூசக குடியாக இருக்கலாம். முனித்துறை முதல்வியர் என பரிபாடல் சொல்வதை நாம் ஒரு குலம் (clan) என்று கொள்ளாமல் ஒரு குரு மரபு அல்லது பூசக குடி மரபு என ஊகிப்பதற்கான இடம் உள்ளது. இந்த பூசக குடியும் பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் (neither clan based, nor birth based) குருகுல, தவகுல வழியிலான ஒரு சிந்தனைப்பள்ளியின் (philosophical school) தொடர்ச்சி என்று கொள்ளலாம். குறிப்பிட்ட சிந்தனை மரபை, சடங்காக்கி அதனை நெறியாக்கி அதைக் காக்கும் ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியின் நெறி கொண்ட முன்னோர்கள் தான் முனித்துறை முதல்வியர்.
வேத ரிஷிகளில் மைத்ரேயி, கார்கி, லோபமுத்திரா, யமி, ரோமஸா, அபாலா, விஸ்ரவஸ், இந்திராணி, கத்ரூ முதலான இருபத்தி நான்கு பெண் ரிஷிகள் எழுதிய தொன்மையான வேத சூக்தங்களையும், பிரார்த்தனைகளையும் வேதங்களிலும், ஆரண்யகங்களிலும் பயில்கிறோம், பிரார்த்திக்கிறோம். ஆனால் அதன் பின்பு மத நிறுவனங்களிலும், சடகை செயல்படுத்தும் பூசக குடி மரபிலும் பெண்கள் முதன்மைப்படுத்தப்படவில்லை.

பிரம்மாவாதினி கார்கி, மைத்ரேயியை போலவே சமானமாக பொருள்முதல்வாத சிந்தனைப்பள்ளியிலும் ஜபாலா, ஊர்வசி, பெளலமி என ரிஷிகள் உள்ளனர். இது வேதம் தழைத்த பாரதவர்ஷம் முழுக்க இருந்த ஒரு நடைமுறை என புரிந்து கொள்ளலாம். அகண்ட பாரதத்தின் பகுதிகளான அனடோலியா, தொல் கிரேக்கம், அசிரியா, மெசபடோமியா, எகிப்து முதல் கீழை ஜப்பான் வரை பாய்ந்து பரவி இருந்த பழமையான பெண் பூசக குடிகளாக இருந்தவர்களுக்கும், சங்ககால முனித்துறை முதல்வியருக்கும் இருக்கும் ஒற்றுமைகளை கொஞ்சம் கவனிக்கலாம்.
தொல் கிரேக்கத்தில் “presbyteros” என பெண் பூசக குடியினர் அழைக்கப்பட்டனர். அதன் நேரடி பொருள் மூத்தோர் அல்லது முன்னவர். அதைத்தான் முனித்துறை முதல்வியர் என இங்கு குறிப்பிடுகின்றனர். உரையாசிரியர்கள் பலர் மூத்தோர் என்பதை ‘elder’ ‘வயதில் முதிய’ என்று தவறாக பொருள் கொண்டதாலேயே நாம் முனித்துறை முதல்வியர் என்ற பூசக வழி வகைமையைத் தவற விட்டிருக்கிறோம்.


துருக்கியின் யூபிசியஸில் (Ephesus) இருக்கும் பழமையான ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான ஆர்ட்டிமிஸ் ஆலயத்திற்கு சென்றிருந்தபோது அங்கு ஆலயத்திற்கு முன்பு ஒரு எரிகுளத்தை ஒட்டிய அமைப்பை பார்த்தேன். அதன் அருகில் கிரேக்க காலத்திய வெர்ஜின் நன்னரிஸ் கான்வெண்ட்(virgin nunnery convent)-ஐப் பார்த்தேன். வட்ட வடிவத்தில் இருக்கும் அந்த தொல் எரிகுளம் என்பது வெஸ்டல் வெர்ஜின்கள் (vestal virgins) மாதிரியான கன்னியர் பேணி வந்த தூய அக்கினி. இத்தூய அக்கினியை பேணும் கன்னியர்களுக்கான கல்விக்கூடமும் தங்குமிடமுமே நன்னரி கான்வென்ட் எனப்பட்டது.
கிரேக்க பெண் பூசக குடியிலும், தொல் கிரேக்க ஹெலனிக் நடைமுறையிலும் இருந்த பெண் பூசகர்களுக்கு விரிவான பயிற்சி முறைகள் இருந்தது. ”கன்னிமையின் முக்கியத்துவம், இசை, நடனம், இலக்கியம், கணிதம் கற்பிக்கப்பட்டது. உணவு அட்டவணைகள், விரத நடைமுறைகள், சுய பரிசோதனைகள், ஆன்ம விழிப்புணர்வு பயிற்சிகள், பிற சமயங்கள் பற்றிய அடிப்படைக் கல்வி, வானியல், தத்துவம், astronomical theology, சடங்குகள், அதன் முக்கியத்தும் ஆலய வழிபாட்டு நடைமுறைகள், ரகசிய காப்பு, பலி சடங்குகள் பற்றிய தெளிவு, apotheosis practices, auto-neotic wisdom, மருத்துவம், சப்தங்கள், மந்திரங்கள் மூலம் குணப்படுத்தும் கலை” ஆகியவற்றில் விரிவான கல்வியும் பயிற்சியும் கொண்ட ஒரு தத்துவார்த்தமான நம்பிக்கையூட்டும் பெண் பூசக குடிமரபினர் இருந்திருக்கின்றனர். இந்த பூசகர்கள் போல பிற தொல் சமூகங்களிலும் இருந்த பெண் பூசகர் நடை முறையை கவனிக்கலாம்.


சுமேரிய அகேட்டிய (akkadian) பகுதியில் டெரின்க்யூ (derinkiyu) பகுதியில் ஒரு தொன்மையான வெர்ஜின் மேரி ஆலயம் என்று சொல்லப்படும் கன்னி மேரியின் இளம் வயது நன்னரி காலத்திய (வெஸ்டல் வெர்ஜில் நன்னெரி காலம்: பொ.மு 700 – பொ.பி 400) கட்டிடத்தை அங்கு பயணம் சென்றபோது பார்த்தேன். அது முன்னாள் வெஸ்டிய நன்னரி (nunnery) ஹாஸ்டல் ஆக இருந்ததாகவும், அதற்கு முன்பு வெஸ்டல் வெர்ஜின்களின் தங்குமிடமாக இருந்ததாகவும், அதற்கு முன்பு சுமேரிய அகேட்டிய காலத்தில் சின்(sin) ஆலய பெண் பூசகர்கள் தங்கி தவமியற்றும் லெண்டியன் கேவ் (lenten retreats and caves) என்றும் தெரிய வந்தது.
அகேடிய சார்காவ்னின் மகளான என்ஹிடிவானா (enheduanna) சுமேரிய நிலவு தெய்வமான நன்னாவின் ஆலயப் பூசகர். ’இனானாவின் பாடல்கள்’ என க்யூனிபார்முக்கு முந்தைய வடிவில் சந்திர ஸ்தோத்திரங்களை எழுதியவர். ஆதிகவியும் கூட. உலகின் முதல் பெண் எழுத்தாளர். பெண் பூசகர்களில் கன்னிமை காத்த பூசக குடியினர்க்கும், தாய்மை அடைந்தாலும் தவ வலிமையால் பூசக குடியினராய் இருந்த தொல் மரபினர்க்கும் இடையிலான விவாதங்களை என்ஹிடிவானா பதிவு செய்திருக்கிறார் என நியூயார்க்கர் நாளிதழின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மெசபடோமியாவிலும், பாபிலோனிலும், அகேட்டிய பகுதிகளிலும் பின்னர் கிரேக்க, ரோம பகுதிகளிலும் பெண் பூசகர்கள் முதன்மை பெற்று இருந்தனர். தொல் கிரேக்கத்தின் ஆரக்கிள் (Oracle), டெல்பி (Delphi), வெஸ்டியா(vestea) ஆலயங்களில் பெண்பூசகர்கள் மட்டுமே இருந்தனர். சீனாவிலும் கூட தொன்மையான சீன வழிபாட்டு மரபினரின் தொன்மங்களில் நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய நான்கு சக்திகளை கைக்கொள்ளும் தனி பெண் பூசக மரபு இருந்தது. புகழ் பெற்ற சீனத் திரைப்படங்கள் (lord of the rings), காட்சி வடிவங்கள் ஆகியவற்றில் இன்றும் இவற்றைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம். தொன்மையான பாறை செதுக்குகள், பழமையான குகை ஓவியங்கள் வழியாகவும் பெண் பூசகர்கள் இருந்திருப்பதை அறிய முடிகிறது. உதாரணமாக கேரளாவில் இருக்கும் பழமையான இடக்கல் குகை கல்செதுக்கில் பூசகன் மெய்ப்பு கொண்டு இறை ரூபமாக வெளிப்படும் காட்சி உள்ளது. அது பெண் பூசகராக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பொ.மு. 7500 என்று காலக்கணிப்பு உறுதிப்படுத்தப்பட்ட அன்னை சிங்கங்கள் (catalhoyoak mother) என்ற அன்னையின் காலடியில் வீற்றிருக்கும் சிற்பத்தில் இருப்பது மூத்த அன்னை வடிவம் மட்டுமல்ல, பூசக அன்னை, முனித்துறை முதல்வி என்று சொல்லவும் இடம் உள்ளது.

’ஆர்ட்டிமிஸின் தொன்மையான குகை ஓவியம்’ 15,000 ஆண்டுகளுக்கு முன்பு குகையில் கண்டடையப்பட்டதில் ஆர்ட்டிமிஸ் அருகில் மான் நின்று கொண்டிருக்கும். உலகம் முழுக்க பல்வேறு குகை ஓவியங்களில் ஒரு வேடுவத்தலைவி, அருகில் மான் நிற்பது போன்று சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.


இதே போல பல்வேறு குகை ஓவியங்கள் கிடைக்கின்றன. ’பாய்கலை பாவை’; ’கொற்றவை’ என இன்றும் அந்த அன்னை வழிபாடு தொடர்கிறது. இந்த அன்னை வழிபாட்டை முன்னின்று நடத்தியவர்கள் முனித்துறை முதல்வியர்களே. இறைவனுக்காக தங்களின் புலனின்ப இச்சையை அர்ப்பணித்து, மெய்மையைத் தேடிய ஒரு முனித்துவ மரபு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் அப்படி தடயமில்லாமல் அழிய சாத்தியமில்லை இல்லையா? நாம் தான் தவறவிடுகிறோம் என்று எண்ணி யோசித்தால் முனித்துறை முதல்வியர் என்பவர்கள் பேதைப் பருவத்தில் தங்களின் புலனின்பத்தை ஒறுத்து, வேட்கைகளைத் துறந்து மெய்த் தேடல், இறை அனுபவ தேடல், தத்துவார்த்த தேடல் என்று தங்களின் தேடும் சிறகை பிரபஞ்சம் நோக்கி விரித்துக்கொண்டு சென்றவர்களாக இருக்கிறார்கள். மானுடத்தின் தீராத விந்தைகள், என்றென்றைக்குமான ஆதாரக் கேள்விகளை நோக்கி தன் நுண் புலன்களைக் கூர்மையாக்கி பக்தி, மீமெய்மை, யோகப் படிநிலைகள், அறிதல் முறைகளில் ஒரு தனித்த வழியோடு முன்சென்றிருக்கிறார்கள் என ஊகிக்க முடிகிறது. புலனின்பம், இளமை ஆகியவற்றோடு தாய்மை பெறும் மகிழ்ச்சியையுமே இந்த தவத்தில் ஆகுதியாக்கி மெய்மையைத் தேடி இருக்கிறார்கள்.
கிரேக்க மெய்யியல் காலத்திலும், தத்துவார்த்த காலத்திலும் வெஸ்டல் வெர்ஜின்களுக்கு மரண தண்டனையை நிறுத்தி வைக்கும் அதிகாரம் இருந்தது. டைரண்ட்களின் (Tyrant) காலத்தில் வெஸ்டல் வெர்ஜின்கள் பல்வேறு மரண தண்டனைகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ரோம் பெரும் உணவுப்பஞ்சத்தில் ஆழ்ந்தபோது வெர்ஜின்கள் தங்கள் கருவூலத்தில் இருந்து பெருமளவு தானியங்களை மக்களுக்கு வழங்கினார்கள். சிற்றரசர்கள், சூதாட்ட விடுதியினர், அடிமை வர்த்தகம் செய்வோரிடமெல்லாம் மன்றாடிக் கேட்டு, தொடர்ந்து தானியங்களை கப்பல்களில் வரச்செய்து மக்களுக்கு வழங்கினார்கள். பசிப்பிணி போக்கிய மாமங்கலைகள் அவர்கள். இதனால் தான் ரோம் மக்களுக்கு வெர்ஜின்கள் மீது மிகப்பெரிய மரியாதையும் பக்தியும் இன்றும் இருக்கிறது.

இவர்கள் மீதான மரியாதையும் பக்தியும் ரோம அரசாட்சியின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்தது. இதனால் டையரண்ட்களின் (tyrant) ஆலோசனைப்படி வெஸ்டல் வெர்ஜின்களுக்கு (vestal virgins) அவர்களின் தவக்காலம் முடிந்த பிறகு பிராத்தல் மற்றும் சூதாட்டம் நடத்தும் உரிமங்கள் இலவசமாக ரோம ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டது. வெஸ்டல் வெர்ஜின்களுக்கு புலனின்பத்தின் ஆசையை தூண்ட ரோம ஆபாச களஞ்சியங்கள் அவர்களின் இடங்களுக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டது. பாலியல் சீண்டல்களில் தேர்ந்த திறனுள்ள புகழ் பெற்ற ஜிகலோக்கள் (gigalos) அவர்களுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
பின்னர் கிறிஸ்தவம் நிறுவனமயமாக மாறத்துவங்கிய கான்ஸ்டண்டைன் காலத்தில் (பொ.யு. 4ஆம் நூற்றாண்டு) துவங்கி தொடர்ச்சியாக வெஸ்டல் வெர்ஜின்களும், இதர பாகன் (pagan) சமயத்தினரும், இயற்கை வழிபாட்டாளர்களும், பெண் பூசகர்களும் நிறுவனமய செமிட்டிக் மதங்களால் வேட்டையாடப்பட்டார்கள். ஹிபாடியா(Hypatia) பொ.யு. 415இல் அலெக்ஸாண்டிரியாவில் உருவ வழிபாடு, பாகனிய சடங்குகள் பற்றிய புத்தகங்களை வைத்திருந்தற்காக 21 நாட்கள் பொது வெளியில் கொடும் சித்திரவதை செய்யப்பட்டு உயிருடன் இருக்கும் போதே தோல் உறிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, பொது வெளியில் டையர் உல்ப்கள், நாய் நரிகளுக்கு விருந்தாக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு பாகனிய பெண் பூசக குடியினர் வெளியில் தெரியாமல் ஆயினர். பின்னர் அது ரகசிய வழிபாட்டுக் குழுவாக ஆகியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து ஜனநாயகம் செழித்த பாரத ஜனபதங்களில் மட்டுமே இருக்கும் ஒரு வழிபாட்டு மரபாக சுருங்கி அழிந்தது.

எகிப்தில் ஹெதர் (hathor), ஐசிஸ் (isis), ஆலயங்களில் முதன்மை பெற்று இருந்தவர்கள் பெண் பூசக குடியினரே. பொ.மு. 2600 க்கு முன்பிருந்த தொல் பாரோக்களுக்கு ஆலோசகர்களாக ஐசிஸ் ஆலய பூசகர்கள் இருந்திருக்கிறார்கள். இது குடி மரபாக வந்த உரிமை. அரச குடும்பத்தில் குருதி கலப்பு என்பதை ஒப்புக்கொள்ளாத பாரோக்கள், அரச குடும்பத்தை தாண்டி பூசக குலத்தில் பெண் எடுத்து மணம் செய்து கொள்ளலாம் என்று சட்டமே இயற்றி இருந்தனர். புகழ்பெற்ற பெண் பாரோவான ஹெட்செஸ்ட்புட் (hatshepsut), தை (thye), நெபர்ட்டிட்டி (nefertiti) ஆகியோர் பூசக குடியினரே. டாலமியின் மகளான கிளியோபாட்ராவும் ஒரு ஹெலனிக் பூசக குடியை சார்ந்தவர்.

இந்தப் பெண் பூசகர்கள் ஐசிஸ் (isis), தா(thoth), ஹெதர் (hathor)ஆலயங்களில் இறை கடமை செய்பவர்களாகவும், தினச்சடங்குகளை முன்னின்று நடத்துபவர்களாகவும், இறை வாக்குகளை சொல்பவர்களாகவும் இசை, நடனம் வழியாக இறைத்தொண்டு செய்பவர்களாகவும் இருந்தார்கள். பாரோக்களின் (pharoahs) மார்ச்சுவாரி ஆலயங்களிலும், அனுபீஸ்(anubis) போன்ற பாதாள உலக தெய்வங்களின் ஆலயங்களில் மட்டுமே ஆண் பூசகர்கள் இருந்தார்கள். அன்றைய தீப்ஸ் (thebes), மெம்ப்பிஸில் (memphis), விவசாய நிலங்களில் முதல் நாற்று நடவை இந்தப் பெண் பூசகர்களும், சூலுற்று இருக்கும் பெண்களுமே நட்டு துவக்கி வைப்பார்கள். இந்தச் சடங்கு இன்று வரை, தென் இந்தியா, வியட்நாம், கம்போடியா, பர்மா, தாய்லாந்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கம்போடியா, வியட்நாமில் நாக அன்னையரான சோமா, அப்சரா, வாசுகி ஆகியோருக்கு குல முதன்னையர் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. கெமர்(khemer) ஆலயங்களிலும், சென்லா (zhenla or chenla) ஆலயங்களிலும் நாகினிகள், எனும் பெண் பூசகர்களே முதன்மையானவர்கள். இந்தியாவெங்கும் சாக்த வழிபாட்டில் இன்றும் ஆண்கள் புடவை, பெரிய பொட்டு அணிந்து கொண்டு அம்பிகைக்கு பூசை செய்யும் நடைமுறைகளை நேரில் காணலாம். இவை எல்லாமே தொன்மையான பெண் பூசக நடைமுறையின் மிச்சங்களாகவே கொள்ளலாம்.
எகிப்தை போலவே மைசீனிய, மினோவிய, ஐயோனிய, பாக்டீரிய, பார்த்தீய நாகரீகங்களிலும் பெண் பூசகர்கள் முதன்மை பெற்று இருந்தனர். மைசீனிய ஆர்ட்டிமிஸ் ஆலயங்களில் இருந்த hiereiai என்று அழைக்கப்படும் மூத்த துறவி, முனித்துறை முதல்வி தான். அந்த நகரத்தின் ஆன்மா என உறையும் அழியா தூய நெருப்பைப் (pyre) பேணுபவர். ”பைர்” ஒரு வட்டம் அல்லது சதுர வடிவிலான எரிகுளத்தில் பேணப்படும். அதை பேணுபவர் முதன்மைப் பெண் பூசகர். அவருக்கு உதவ கன்னிமை விரதம் கொண்டிருக்கும் நன்கள்(nuns), குழு இருக்கும். மைசீனிய, மினோவிய வீடுகளில் இருக்கும் ஆல்டர்களில் பேணப்படும் ’பைர்’க்கு தேவையான மூல நெருப்பு ஆர்ட்டிமிஸ் ஆலயத்தில் இருந்தோ அதீனா(athena), ஆலயத்தில் இருந்தோ எடுத்து செல்லப்படும்.
கன்னி தெய்வமான ஆர்ட்டிமிஸ் ஆலயத்தின் பூசகர் கன்னிமையோடு இருப்பது ஒரு நிச்சய தகுதி தான். ஆனால் திருமணம், பாலியல் இணைவின் கடவுளான ஹெராவின் ஆலயத்திற்கு மணமான பெண் பூசகர்களே முதன்மையானவர்களாக இருந்து சடங்குகளை வழி நடத்தினர். இந்த பெண் பூசகர்கள், பிறப்பு அடிப்படையிலும், கன்னிமையாலும், வாரிசு அடிப்படையிலும், இறை அருள்வாக்கு அடிப்படையிலும் நியமிக்கப்பட்டார்கள்.
இவர்களின் முதன்மைப் பணி, ஆலயப பாதுகாப்பு, கட்டுப்பாடு, சடங்குகளின் முறையான கடைபிடிப்பு, பொது மக்களுக்கான பிரார்த்தனை, அரசியல் தீர்வுகள், நீதி விசாரணை, மருத்துவ ஆலோசனைகள், பொது மக்கள், அரச குடும்பத்தினரின் விருப்ப வேண்டுதல்கள், பிரார்த்தனைகளை பதிவு செய்தல், பொது பிரார்த்தனை, நில அளவைகள், ஆலய சாவி, கருணை கோரல்கள், இதோடு தூய நெருப்பு பாதுகாப்பு, ஆகியவை. தொல் நாகரீகங்களில் அரசர் அளித்த மரண தண்டனையை நிறுத்தி வைக்கும் உரிமை, இந்த முனித்துறை முதல்வியர்க்கு மட்டுமே இருந்தது.
பிலேவின் எரிதா (eritha), யூபிசியஸின் ஜெனோபா (zenoba), pythia, (oracle of delphi), டெமட்டர் (demeter)ஆலய பூசகர்கள் பற்றி எல்லாம் கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள். கிரேக்க காவியமான இலியட்டில் வரும் அதீனா ஆலய பூசகர் தியானோ (theano) ஹீலியோடோரஸ் (heliodorus), நாவலில் வரும் சாரிக்ளியா (chariclea) ஆர்ட்டிமிஸ் ஆலய பூசகர் என வரலாற்றிலும், இலக்கியத்திலும் மிக அதிகமான உதாரணங்கள் இருக்கிறது. பொம்பாய் மவுண்ட் வாசுவியஸின் எரிமலை சீற்றத்தால் ஒட்டுமொத்த நகரமும் எரியும் முன் வீனஸ் ஆலயத்தில் எரிந்து கொண்டிருந்த பைர்(pyre) அணைந்து விட்டது ஒரு பெரும் தீ சகுனம் என்று சொல்லப்பட்டது. ஐசிஸ் ஆலயத்தின் பெண் பூசகர்கள் தீக்குறிகளை ஆராய்ந்து இந்த நகரம் அழிய இருக்கிறது; இது தெய்வத்தின் குரல் என்று சொல்லியிருக்கிறார்கள். அதை நம்பிய சிலர் மட்டுமே தப்பினார்கள். எஞ்சியவர்கள் எரிந்து வரலாற்றில் மட்டும் வாழ்ந்தார்கள்.
சிலப்பதிகாரத்தில் எயினர் ஆலய தேவராட்டியாகவும் இறைவாக்கு சொல்லும் பெண் பூசகராகவும் இருக்கும் வேட்டுவப் பெண் சாலினி, இறை ஏறப்பெற்று அருள் சொல்லும் முனித்துறை முதல்வியே. அதே போல கண்ணகிக்கு சகுனங்களை பகுத்து சொல்லும் தேவந்தி, பாசாண்ட சாத்தனை மணங்கொள்ளும் தேவந்தி (dream interperator) ஒரு முனித்துறை முதல்வியே. பண்டைய தமிழ்த் திணை குடிகளில் கொற்றவை அன்னை ஆலயத்திற்கு மட்டுமே பெண் பூசகர்கள் இருந்ததற்கான தரவுகள் நம்மிடம் இருக்கிறது. கோவில் சார்ந்த சமய சடங்குகளில் பிற்கால சோழர் காலத்தில் முக்கியத்துவம் பெற்ற தேவரடியார்கள் இந்த முனித்துறை முதல்வியர் வகை வழியில் வந்து சடங்கு திரிபு ஏற்பட்டு பின்னர் தேவரடியாரில் இருந்து பொது மகளிராகக் கூட சிதைந்து போயிருக்கலாம்.

இதே மாதிரியான பண்பாட்டு சிதை மாற்றம் கிறிஸ்தவ ரோமில் மைசீனிய, அயோனிய கிரேக்க பண்பாட்டின் உயர் வடிவான கன்னிமை குழும முனித்துறை முதல்வியர்கள் , பெரும் பிராத்தல்களை நடத்தினர். எகிப்திய தீப்ஸ் பகுதியின் கார்னாக் ஆலயத்தில் ஐசிசிஸிற்கு பூசனைகள் செய்யும் இசை, நடனத்தில் தேர்ச்சி பெற்ற குல பூசகர் வழி நெடுநாள் தொடர்ந்திருந்தது. சுமேரியா, மினோவிய, பாபிலோனிய, அசிரிய, சீன, பாரத, கிரேக்க, ரோமானிய நாகரீகங்களில் பெண் பூசகர்கள் முதன்மை பெற்றிருந்ததையும் இது உலகம் முழுக்க ஒரு முதன்மை பண்பாட்டு கூறாகவும் இருந்ததை நல்லந்துவனார் உணர்ந்தே அவர்களை முனித்துறை முதல்வியர் என்று குறிக்கிறார் என நம்புகிறேன்.
பானை பயன்படுத்துவதற்கு முந்தைய – பழைய கற்காலத்திலிருந்து (pre pottery paleolithic, prepottery neolithic 1,2) நியோலித்திக், மெகாலித்திக் காலங்களில் மிகவும் முதன்மையாக இருந்த பெண் பூசகர்களின் முக்கியத்துவம் விவசாய எழுச்சி, நகரங்களின் உருவாக்கம், துவங்கி பேரரசுக்காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்துவங்கி செமிட்டிக் நாகரீகங்களின் ஒற்றைப்படைக் கடவுள்கள், தீர்க்கதரிசன மதங்களின் பேரெழுச்சிக்குப் பிறகு இறை வழிபாடு, சடங்கு, தத்துவங்களில் மூதன்னையர், பெண் பூசக குடிகளின் பிடி தளர்ந்து முற்றிலும் ஆண்மைய நோக்கு கொண்டதாக மாறிவிட்டது. போர்கள், புதிய மதங்களின் தோற்றம், சமூக அரசியல் மாற்றங்கள், கலாச்சாரங்கள், கல்வி, பயணங்கள், வியாபாரப் பரவல், விவசாய உற்பத்தி மற்றும் உபரி, உலோகப் பயன்பாட்டால் சமூக நிறுவனங்களில் ஆண்மைய நோக்கு அடைந்த முக்கியத்துவம் ஆகியவை மத நிறுவனங்களில் பெண்களின் அதிகாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து முற்றிலும் இல்லாமல் ஆக்கியது. மோசஸ், கிறிஸ்து, புத்தர், மகாவீரர் துவங்கி முகமது வரையிலான தீர்க்கதரிசிகள் முற்றிலும் ஆண் மைய நோக்கு மட்டுமே கொண்டவர்களாக இருந்து மத நிறுவனங்களின் அதிகாரத்தை ஆண்களுக்கு மட்டுமே அளித்து விட்டுச் சென்றனர்.
இந்த தீர்க்கதரிசிகள் இறந்து 25 நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. யுகப்புரட்சிகள் பல மனிதகுலம் தாண்டி வந்துவிட்டது. ஆனால் இந்த 21-ஆம் நூற்றாண்டில் கூட இன்னும் பெண் பூசகர்கள், மத சடங்குகளில் முதன்மை பெற முடியவில்லை. ஒரு பெண் போப், பெண் மெளலவி, ராபி, இன்னும் சாத்தியமாகவில்லை. பாரதப் பண்பாட்டில் கன்னிமார் வழிபாடாக, கண்ணகி அன்னைக்கான பொங்கல்விழா, நாரி பூஜை, சில தந்திர சடங்குகள், சாக்த வழிபாடு, வஜ்ராயனத்தின் சில சடங்குகளில் மட்டும் பெண் பூசகர்களுக்கான இடம் இருக்கிறது. தொல்காப்பியர் சொன்ன முனித்துறை முதல்வியர் என்ற நடைமுறை வழக்கொழிந்து, நம் சமகாலத்திய பார்வையில் இருந்து மறைந்து இருப்பதால் அதை வெவ்வேறாக பொருள் கொள்கிறோம் என நினைக்கிறேன். தொன்மையான நாகரீகங்களின் முதன்மையான பெண் பூசகர்களின் ஒரு வழித்தொடர்ச்சியை முனித்துறை முதல்வியர் என கொள்ளலாம். பானை பயன்படுத்துவதற்கு முந்தைய – பழைய கற்காலம் (ppn-a, ppn-b) காலத்திலிருந்து விவசாய பெருங்குடி காலம் (agraraian) வரை முதன்மை பெற்றிருந்த ஒரு பூசக குடி மரபு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இன்று வெறும் சொல்லாக மட்டும் எஞ்சி நிற்கிறது.

’Catalhoyack’ மூதன்னை முதல், ஐசீஸ், ஆர்ட்டிமிஸ், வெஸ்டியா, டெல்பி, கொற்றவை ஆலயங்களில் முதன்மை பெற்றிருந்த பெண் பூசகர்களின் ஆளுமை, அதிகாரம், அவர்களின் உரிமை எப்படி மாறியது? ஏன் கடந்த 2500 முதல் 4000 ஆண்டுகளாக மத அதிகாரமோ, தத்துவார்த்த அதிகாரமோ, அரசியல் அதிகாரமோ, சமூக அதிகாரமோ பெண்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது? மத நிறுவனங்களிலோ, வேறு சமூக அரசியல் நிறுவனங்களிலோ முதன்மை அதிகார அடுக்கில் இருக்கும் ’பெண் விலக்கம்’ என்பது ஒரு கலாச்சாரப் புதிராகவே உள்ளது. ஜனநாயகம், சுதந்திரச் சிந்தனை, தத்துவம், அறிவியல் ஆகிய சிந்தனைகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வரும் இக்காலகட்டத்திலும் கூட ஒரு பெண் – போப் ஆகவோ, தலைமை மெளலவியாகவோ, ராபியாகவோ, லாமாவாகவோ, வைகானாகஸ மடாதிபதியாகவோ ஏன் வர முடியவில்லை என்ற கலாச்சார புதிருக்கு விடை தேட வேண்டும்!
*
அடிக்குறிப்புகள்:
- Vestal Virgins: were the priestesses of Vesta, the Roman goddess of the hearth, home, and family. They were chosen at a young age, typically between six and ten, and served for 30 years, taking a vow of chastity during that time. Their primary duty was to keep the sacred fire burning in Vesta’s temple, symbolizing the continuous existence of the Roman state.
- Nunnery: a building or group of buildings in which nuns live as a religious community; a convent.
- Delphi: a sacred site in ancient Greece.
- The Oracle of Delphi: (Pythia) the priestess of Apollo’s temple at Delphi. She was believed to speak the will of the god through cryptic pronouncements and prophecies, offering guidance and advice to those who sought her wisdom.
- Vesta: equivalent to the goddess Hestia. Both were goddesses of the hearth and home, representing domestic tranquility and the sacred fire. Vesta is the Roman goddess, while Hestia is the Greek counterpart.
- gigolo: a man who is paid by a woman to be her sexual partner, companion, or to attend social engagements with her.
- Paganism: a diverse collection of religious and spiritual traditions, often associated with nature worship and the reverence of deities and spirits.
மேலும் படிக்க:

சிறப்பான கட்டுரை
வாழ்த்துக்கள் சகோதரரே
பல திறப்புகளை அளித்த பதிவு. சமானமான கலாச்சார பின்புலங்களை தொட்டு விரித்தெடுத்த சித்திரம், மலைப்பளிக்கிறது.
Excellent writing! The length and breadth of the article take the reader across the world and through time immemorial to understand the subject. Kudos to Er. Rajamanikkam!
படித்து பிரமித்தேன். பயணம் தொடரட்டும்.
Comme”பெண் பூசகர்கள் ஆளுமை மற்றும் அதிகாரம் இழந்தது எவ்வாறு ?” என்ற வினாவை ஏந்தி செல்லும் உங்கள் ஆராய்ச்சி ஆர்வமூட்டும் புதிய தகவல்களைக் கொண்டுள்ளது. அவர்கள் சரித்திரத்தின் சமீப பக்கங்களில் தலைமைப் பதவிக்கு ஏன் வர முடியவில்லை என்ற கலாச்சார புதிருக்கு விடை தேடும் உங்கள் பயணம் என்னையும் இழுத்துச் செல்கிறது…வாழ்த்துக்கள்…nt
முழுமையான தரவுகளுடன் படிக்க சுவாரஸ்யமான அருமையான கட்டுரை
வீர. ராஜமாணிக்கத்தின் இந்த கட்டுரை மிக முக்கியமான ஒன்று. நிறைய தரவுகளுடன் விரிவாக ஒரு ஆய்வை மேற்கொண்டு எழுதியது போன்று உள்ளது ஜெயமோகனின் தோற்கடிக்கப்பட்ட அன்னைகள் என்ற கட்டுரையுடன் சேர்ந்து இதை படித்தோம் என்றால் பல நல்ல திறப்புகள் உருவாகலாம்.