புத்தம் வீடு – சி.சு. செல்லப்பா
தமிழில் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்றான ‘புத்தம் வீடு’ 1964ஆம் ஆண்டு வெளியானது. அந்த நாவல் குறித்து ‘எழுத்து’ சிற்றிதழில் அதன் ஆசிரியர் சி. சு. செல்லப்பா எழுதிய கட்டுரையை ‘நீலி’ மறுபிரசுரம் செய்கிறது. செல்லப்பாவின் கட்டுரை முதலில் 1966ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க நாவல் விழா கருத்தரங்கில் படிக்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டு அக்டோபரில் ‘எழுத்து’ ஏட்டில் வெளியானது. நாவல் விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் ‘தமிழ் நாவல்கள்’ (தமிழ்ப் புத்தகாலயம், டிசம்பர் 1966) என்ற தலைப்பில் நூலாக்கமும் பெற்றன.
சி.சு. செல்லப்பாவின் கட்டுரைக்கு பேராசிரியர் செ. ஜேசுதாசன் எழுதியுள்ள கடிதமும், அக்கடிதத்துக்கு சி.சு.செ. எழுதிய பதிலும் கட்டுரையின் தொடர்ச்சியாகத் தரப்பட்டுள்ளன. சிற்றிதழ்கள் உருவாக்கிய இதுபோன்ற உரையாடல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியப் பங்களிப்பை ஆற்றியுள்ளன. தற்போதைய இணைய இதழ்களில் இத்தகைய இலக்கிய உரையாடல்களை அரிதாகவே காணமுடிகிறது. இந்தப் பழைய பதிவுகளை நினைவுகூர்வது புதிய விவாதங்களுக்கு வழியமைக்கலாம் என்ற நோக்கில் இவை மறுபிரசுரம் செய்யப்படுகின்றன.
-இளைய பரதன்
*
இன்று தமிழ் இலக்கியத்தில் சிறுகதைபோல் இல்லாமல் நாவல் வளர்ந்து வருகிறது என்பது உண்மையே. வளர்கிறது என்கிறபோது தொகையளவில் மட்டும் இல்லை, தரத்திலும்கூடத்தான். இந்த நிலையில் நாவல்களை தரம் பிரிக்கிறபோது தலைசிறந்த நாவல், சிறந்த நாவல், நல்ல நாவல், சுமாரான நாவல் என்று ரகம் பிரிக்கத் தோன்றுகிறது எனக்கு. இந்த பாகுபாட்டின்படி பார்த்தால் தமிழில் சுமாரான நாவல்கள் என்று சொல்ல ஏதாவது கிடைத்தாலே பெரிய பாக்கியம் என்றே நான் கருதுகிறேன். மேலே சொன்ன தரப் பாகுபாடு பற்றி உதாரணம் காட்டிச் சொல்லப்போனால் இதுவரை தமிழில் வெளிவந்துள்ள நாவல்களில் தலைசிறந்தது ‘மோகமுள்’, சிறந்தவைகளில் ‘பொய்த்தேவு’, நல்ல நாவல்களில் ‘நாகம்மாள்’, ‘இதயநாதம்’ என்று ஒன்றிரண்டு உதாரணம் காட்டுவேன். சுமாரான நாவல்கள் என்று வருகிறபோதுகூட எனக்கு அதிக சங்கடம் இல்லை.
எனக்குத் திருப்தி தருகிற சுமாரான நாவல்களே மிகக் குறைவு. உதாரணத்துக்கு மற்ற சிலதைச் சொல்வதைவிட எனக்கு விமர்சிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் ‘புத்தம் வீடு’ நாவல் ஒரு சுமாரான நாவல் என்று சொல்வேன்.
என் ‘சுமார்’ என்பதுக்கு அளவுகோல் என்ன என்று கேட்டால், ஓகோ என்று சொல்லும்படியான தனித்தன்மையான முயற்சிகள் விஷய, உருவ, உத்தி வகைகளில் கையாளப்படாவிட்டாலும் அதாவது அதிகபட்ச சாதனை இல்லாவிட்டாலும், ‘எலிமென்டரி’ என்கிறோமே அரிச்சுவடி நியதிகள், அஸ்திவார விதிகளையாவது கவனித்து, அதாவது குறைகள் நீங்கியாவது அல்லது குறைந்தபட்ச குறைகளுடன் இருக்கிற நாவலை சுமார் என்பேன். பாஸ் மார்க் நாவல் என்று வைத்துக்கொள்ளுங்களேன். முப்பத்தைந்து சதவிகித மார்க் பாஸ்.
ஸ்ரீமதி ஹெப்ஸிபா ஜேசுதாசன் நாவல் ‘புத்தம் வீடு’ அவரது முதல் நாவல்; இதுவரை எழுதியிருக்கும் ஒரே நாவல். இந்தப் பதினைந்து நாவல்கள் விமர்சன கூட்டங்களில் கவனிக்கப்பட்ட நாவலாசிரியர்களில் ஒரே நாவல் எழுதியிருப்பவர் இவர்தான். எனவே ஆசிரியரின் முதல் நாவல் என்பதை மனதில் கொண்டே நான் இந்த நாவலைப் பார்க்கிறேன். விமர்சகனுக்கு அனுதாபம் இருக்கவேண்டும் என்று நேற்று கூட்டத்தில் சொல்லப்பட்டது. அனுதாபம் என்றால் முன்கூட்டிய வெறுப்பும் அலட்சியமும் காட்டாமல் பார்ப்பது என்றுதான் அர்த்தமே தவிர எதையும் தட்டிக்கொடுப்பது என்று அர்த்தம் இல்லை. நடைபோட்டுச் செல்லும் சொரணையுள்ள வண்டிமாட்டின் மீது விரலை வைத்தால் அது எகிறிப்பாயும். சொரணை கெட்ட மாட்டை தட்டிக்கொடுத்தால் அது கொஞ்சுவதுக்கு நின்றுவிடும். அதேபோலத்தான் அனுதாபம் காட்டுவதும். அனுதாபம் பெற இடம் இருந்தால் கொடுத்தே ஆகவேண்டும். இந்த நாவலுக்கு என் அனுதாபத்தைக் கொடுத்தே பார்க்கிறேன். ஏன் என்றால் அதுக்கு இது இடம் தருகிறது.
இந்த நாவல் நமக்குமுன் காட்டுகிறதென்ன, போடுகிற கேள்வி என்ன என்பதே கேள்வி. ஜாதி, அந்தஸ்து இரண்டும் விளையாடும் விளையாட்டு எப்படி இருக்கும், எதில் முடியும், எந்தவிதமாக முடியும் என்பது ஒரு கோணத்திலிருந்து பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் தமிழ் நாவலுக்கு அப்படி ஒன்றும் புதுசு இல்லை. சிறுகதைகளிலும் சில நாவல்களிலும் கையாளப்பட்டிருப்பதுதான். எனவே புதுசான ஒரு கதையாகப் படவில்லை எனக்கு. ஆனால் அந்தஸ்தும் வறட்டு கவுரமும் ஒரு சோக நிகழ்ச்சியாக துன்ப முடிவுக்கு இட்டுச் செல்லாமல், ரோமியோ-ஜூலியட், லைலா-மஜ்னூவின் வாழ்வுபோல் ஆகாமல், லிஸி – தங்கராஜ் உறவு ஓர் இன்பமான முடிவுக்கு உதவியிருக்கிறது.
அப்பட்டமாகச் சொல்லப்போனால் இது ஒரு காதல் கதைதான். லிஸி-தங்கராஜ் ஆசை நிறைவேற்றம் பற்றிய உத்தேசம்தான் ஆசிரியரின் முதன்மையான, ஏன், ஒரே நோக்கம் என்று சொல்லலாம். எனவே காதல் வழி கரடுமுரடாகத்தானே இருக்கும். இருந்தாக வேண்டும் என்ற சம்பிரதாயமும் இருக்கிறதே. எனவே அதுக்குக் குறுக்கே வருகிறவர்கள், ஏற்படும் நிகழ்ச்சிகள், குரோதம், பொறாமை இதெல்லாம் வந்தாக வேண்டும் இல்லையா? ‘புத்தம் வீடு’ பழம்பெருமை கொண்ட லிஸியின் தாத்தா கண்ணப்பச்சி, அவளுடைய குடிகாரத் தகப்பன், மூர்க்கனான சித்தப்பா, குரோதம் காட்டும் சித்தப்பா பெண் லில்லி, கபடமாக நடந்துகொள்ளும் அவள் கணவர் வைத்தியர் போன்றவர்கள் சிக்கல்களை ஏற்படுத்தி அதிகப்படுத்தி விபரீதத்துக்கு கொண்டுவிட்டுவிடுகிறார்கள். பெரியவள் லிஸிக்கு மணம் ஆகாமல் சிற்றப்பா பெண் சிறியவள் லில்லி கல்யாணம், அந்தஸ்து குறைவான தங்கராஜ் லிஸியை மணக்கக் கேட்டல் இரண்டாலும் தந்தையின் ஆத்திரம், சித்தப்பா கொலை, தங்கராஜ் மீது கொலைப்பழி, ஆனால் கொலை செய்தது குடிகார தகப்பன், தந்தையின் தற்கொலை, உபதேசியாரின் ஆதரவான செயல், உண்மை வெளிவருதல், தங்கராஜ்-லிஸி திருமணம், ஓய்ந்த மனம் கொண்ட கண்ணப்பச்சியின் வேறு வழியில்லாத சம்மதம் – இப்படியாகக் கதை முடிகிறது.
நாவலின் கதையம்சம் உங்களுக்குத் தெரிந்திருக்கும் இதிலிருந்து. இந்தக் கதை ஏதாவது புதிசாகத் தெரிகிறதா? நம் சினிமாக் கதைபோல இருக்கிறது என்றுகூட நான் சொல்லத் துணிவேன். ‘மோகமுள்’ மாதிரி பால் உணர்வு, கலையாசை சம்பந்தமான ஒரு அடிப்படை மனோதத்துவ போராட்டம், ‘பொய்த்தேவு’ மாதிரி நிஜத்துக்கும் பொய்க்கும் வித்யாசம் காண இயலாத ஒரு வாழ்க்கை யாத்திரை அனுபவம், ‘இதய நாதம்’ மாதிரி குரலால் செய்த உபாசனையை இழந்து இதயத்தால் பகவானை உபாசனை செய்யும் நிலைக்கு வர ஏற்பட்டதிலேயே நிம்மதிபெறுமுன் நடுவே பட்ட வேதனை, ‘நாகம்மாள்’ மாதிரி அப்பாவியாக இருந்து ஊர் அவளுக்குக் கொடுத்த தொல்லையால் ஊரையே எதிர்க்கத் துணிந்த ஒரு மனதின் போராட்டம் போல ஒரு விசேஷ கதையம்சம் கொண்ட நாவல் இல்லை அது. அவை மாதிரி இருந்திருந்தால் ஒரு பெருமுயற்சி என்று நினைத்திருப்பேன்.
ஆக ஒரு சாதாரண கதையம்சம் கொண்டது இந்த நாவல். ஆனால் அதுக்காக அதை நான் ஒதுக்க, புறக்கணிக்க முற்படவில்லை. அவரது நோக்கத்தை, உத்தேசத்தை கதைக்கருவை அவரவருக்கே விட்டுவிட வேண்டியதுதான் விமர்சகன் தர்மம். படைப்பாளி கொடுப்பதை ஏற்க மறுத்து விமர்சகன் எதிர்பார்ப்பதை விரும்புவது சரியான காரியம் இல்லை. எனவே, நாவலுக்கான விஷயத்தை அங்கீகரித்து அதன் உள்ளடக்கத்துக்கு கைத்திறன் பயன்பட்டிருப்பதையும் கலைத்திறனையும் நிதானிப்பது விமர்சகன் வேலையாகும்.
பழகின கைகள் செய்கிற காரியத்தை புதுக் கைகளில் எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஹெப்ஸீபா ஜேசுதாஸன் கை சரியாக எழுத ஆரம்பித்திருக்கிறது. பனைவிளை கிராமமும் புத்தம் வீடும் நமக்கு அறிமுகப்படுத்தப்படுவது முதல் பாத்திரங்களும் ஒருவர்பின் ஒருவராக சேர்ந்து வருகிற போக்கில் ஒரு இடத்து, ஒரு மத, ஒரு ஜாதி, ஒரு பழக்கவழக்கச் சித்திரம் உருவாகத்தான் செய்கிறது. இனம்காண முடிகிற அளவுக்கு கற்பனையில் உருப்பெருகிறது. பிரதேச நாவல் என்றால் ஏதோ அந்தப் பிரதேசத்துக் கொச்சையை அள்ளிக் கொட்டிவிட்டால் போதும் என்று தப்பாக கணித்துக்கொண்டிருப்பவர்கள் நமது எழுத்தாளர்கள் பலரும். அதோடு ஒரு இடத்தை பூகோள ரீதியாக வர்ணித்துவிட்டால் போதும் என்றும் நினைக்கிறார்கள். இது இல்லை பிரதேச நாவல் என்பது. ஒரு இடத்து மண்ணுக்கு உரிய தனிவித சுபாவம் காற்றாக எங்கும் பரவி இருக்க வேண்டும். அதுதான் பிரதேச நாவலுக்கு மூச்சு. அமெரிக்க நாவலாசிரியர் வில்லியம் பாக்னரின் நாவல்கள் தலைசிறந்த உதாரணம். என் நாவல் ‘வாடிவாசல்’ மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில், குறிப்பிட்ட பிரதேசங்களில்தான் நடக்கும்.
‘நாகம்மாள்’ நாவலுக்குப் பிறகு ‘புத்தம் வீடு’தான் ஒரு புதிய பிரதேசத்தை இனம்காணச் செய்யும் நாவல் என்று நான் நினைக்கிறேன். கொச்சைக்காக மட்டும் இல்லை, சுபாவத்துக்காக. பனையேறிகளின் வாழ்வு இங்கே படமாகிறது. இந்த ஜாதியாரின் இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களைப் பற்றிய முதல் நாவல் இதுதான். கிருஸ்தவ குடும்பம் இங்கே பேசுகிறது. கிருஸ்தவ சமூக நாவல்தான். தமிழில் நான் படிப்பதும் இதுதான் முதல் தடவை. அன்று நாகம்மாள் கொங்கு நாட்டைக் காட்டியது. பி. எஸ். ராமையா தன் சிறுகதைகளில் மதுரை பிராந்தியத்தையும் புதுமைப்பித்தன் திருநெல்வேலி பிரதேசத்தையும் கோணம் காட்டினார்கள். இப்போது திருநெல்வேலிக்கும் தெற்கே கேரளத்தை ஓட்டிய தமிழ்ப் பகுதியில் உள்ள கன்யாகுமரி பிரதேசம் இதில் கோடிகாட்டப்படுகிறது.
நான் திருநெல்வேலி ஜில்லாவையும் குமரிப் பிரதேசத்தையும் கொஞ்சம் அனுபவித்தவன். தாம்பிரவர்ணி அங்கு ஓடினாலும் பனைமரம்தான் என் கண்முன் நிற்கும். நாவலில் வரும் பனைவிளை போல் பல கிராமங்களைப் பார்த்திருக்கிறேன், இருந்திருக்கிறேன். கிராமவாசிகளின் பேச்சை நிறைய கேட்டிருக்கிறேன். திருநெல்வேலி பேச்சுக்கும் பனைவிளை கிராமத்தாரின் பேச்சுக்கும் அதிக வித்யாசம் இல்லை. நான் இந்த நாவலைப் படிக்கிறபோது ஒருசில சொற்களைத் தவிர மற்றப்படி எனக்கு புரிந்தது. உதாரணத்துக்கு அனந்தரத்தி, அடிச்சக்கூடு, பாட்டக்காரர், டீக்கனார், புரோகதி, இற்செறிப்பு, புரைவிடம் போன்றவை. ஆனால் சந்தர்ப்பத்தில் இவைகளை பொருள் அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு நாவலில் வரும் பிரதேசச் சொற்களை இப்படித்தான் வாங்கிக்கொள்ளவேண்டும். இந்த நாவலில் பிரதேச மணம் எழுகிறது. ஆனால் மென்மையாக வீசுகிறது. அழுத்தம் இன்னும் விழுந்திருக்கலாம். முதல் நாவல் இல்லையா? கோடிகாட்டியிருப்பது வளரும் கைக்கு அறிகுறி.
இந்த நாவலின் ஆரம்ப பாராவே எனக்குத் திருப்தி தருகிறது. அதேபோல் பல இடங்கள் இருக்கின்றன. ஆனால் வர்ணனையும் நடையும் நாவல் நெடுக இதேபோலப் போயிருந்தால் அதிக கனம் நாவலில் ஏறியிருக்கும், போஷாக்கும் சேர்ந்திருக்கும்.
இந்த நாவல் புறப்போக்கான கதை சொல்லல் வழி பின்பற்றியது. மூன்றாம் மனித பார்வை நாவல். ஆசிரியர் கதையை தடம் பிசகாமலும் அவசியமான தகவலை மட்டும் தேர்ந்தெடுத்தும் சொல்லிச் செல்கிறார். சொல் செட்டு வளர்த்தாத, நீர்க்காத சம்பாஷணை இதெல்லாம் இருக்கிறது. கதாபாத்திரங்கள் வர்ணனை எல்லாம் கச்சிதமாகத்தான். பாத்திரங்கள் யாரும் அப்படி ஒன்றும் தீர்க்கமான, திடமான அழுத்தமான பாத்திரங்கள் இல்லை. குறித்து முதன்மையாக இவன்தான், அடுத்தபடி இவன் என்றெல்லாம் சுட்டிச் சொல்லத்தக்க குறித்த தனிப் பாத்திரம் யாரும் இல்லை. ஏதோ குடும்பப் பெருமை மட்டும் பேசும், இன்று சீர்குலைந்து கிடக்கிற ஒரு குடும்பத்தின் ஜம்பத்துக்குக் குறியீடுகளாக நிற்பவர்கள்தான் காணப்படுகிறார்கள். சீராக இருந்த நாட்களை அனுபவித்து சீர்கெடும் நாட்களையும் பார்த்துவரும் கண்ணப்பச்சிகூட எடுப்பாக முன்வந்து நிற்கவில்லை. எல்லோருமே லிஸி-தங்கராஜ் பிரச்னைக்கு உதவுகிற அளவுக்குத்தான் வந்துபோகிறார்கள்.
லிஸி – தங்கராஜ் இருவருமே இன்னும் உருவாகாத, சிறுவயது பருவத்தினர் போலத்தானே இருக்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள தங்களவர்கள் ஆட்டுகிறபடி எல்லாம்தானே நடந்துகொள்கிறார்கள். தங்கள் காரியத்தைச் சாதிக்கத்தக்க வழிவகை தெரியாமல், தீர்மானிக்க முடியாமல் தவிக்கிறார்கள். ஏதோ ஏசுநாதர் அருள் இருந்து அவர்களைச் சேர்த்து வைக்கிற மாதிரிதான் (உபதேசியார்தானே துப்பு துலக்கி தங்கராஜ் விடுதலைக்கு வழி செய்கிறார்). அவர்கள் பிரச்னை தீர்கிறது. இந்த நாவலில் லிஸி-தங்கராஜ் பிரச்னைதான் முக்கியமே தவிர லிஸியோ தங்கராஜோ வேறு யாரோ முக்கியம் இல்லை. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நிறுத்தப்பட்ட இரண்டு அந்தஸ்து வித்யாசக் குடும்பத்தவர்கள் சில சிறு மனப்பிராந்திகளைகொண்டு, நினைத்து, காரியம் செய்து சிக்கல்களை விளைவித்துக்கொள்கிறார்கள், அவதிப்படுகிறார்கள். அவர்களில் லிஸிக்குத்தான் பிரச்னை கொஞ்சம் கடுமையாக. உள்ளே திடம் இருந்தாலும் வெளியே நடந்துகொள்கையில் அதைத் தக்க சமயத்தில் காட்ட சக்தியற்றவளாகவே இருக்கிறாள். தங்கராஜோ தான் செய்கிற காரியம் என்ன என்பதை அவன் உணர்ந்தவன்தான். ஆனால் ஆசையைச் சக்திக்கு மீறி கொண்டுவிட்டான். முன்னும் போகமுடியாமல் பின்னும் போகமுடியாமல் இக்கட்டான நிலைமையில் குழம்புகிறான். அவனாக பிரச்னைக்குத் தீர்வு காணவில்லை. அவன் சக்திக்கு மீறி அவன் ஆசைப்பட்டதுபோல் அவன் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால்தான், பிறரது சக்தியால்தான் அவன் பிரச்னை தீர்கிறது.
மொத்தமாக இந்த நாவல் ஒரு முழுமை பெற்றிருப்பது படுகிறது, ஒரு திருப்தியும் தருகிறது. ஆனால், ஒரே ஜாதி ஆனாலும், தொழில், பனையேறி குடும்ப அந்தஸ்து மாறுபாடு சம்பந்தமான ஒரு பிரச்னையை ஆரம்ப முதல் மென்மையாக, நாசூக்காகக் கையாண்டு லாகவமாகக் கதை வளர்த்து வந்த படைப்பாளி கடைசி அத்தியாயத்துக்கு முந்தின அத்தியாயத்திலே, அதாவது அண்ணன் மகள் மூத்த லிஸிக்கு மணமாகுமுன் தம்பி மகள் சின்னவள் லில்லி மணம் ஆகவும் வந்த அடுத்த அத்யாயத்திலேயே, இதுவரை உளப் போக்கு ரீதியாக கதை ஜோடித்து வந்ததைக் கைவிட்டுவிட்டு, ஒரு கொலை, கைது, விசாரணை. தற்கொலை, விடுதலை ஆகிய நிகழ்ச்சிகளை ராக்கெட் வேகத்தில் மளமளவென அடுக்கி, லிஸி-தங்கராஜ் மணத்தை முடித்துப் பார்க்க ஏன் இந்த அவசரம்? அதோடு, அவர்கள் பிரச்னை தீர, தன் பெண்ணுக்கு முன் தம்பி பெண்ணுக்கு மணம் நடந்த ஆத்திரம், பனையேறி தொழில் செய்யும் தங்கராஜ் தன் பெண்ணைக் கட்டிக்கக் கேட்ட கோபம் இரண்டும் சேர, தங்கராஜின் அரிவாளாலேயே தன் தம்பியைக் கொன்று தங்கராஜ்தான் கொலை செய்தவன் என்று பழி சுமத்தி, விசாரணை நடக்கச் செய்து, பின் தன் குற்றம் தன்னை அறுக்க, அண்ணன் தற்கொலை செய்துகொண்டது இதெல்லாம் அவசியமா இந்த நாவலுக்கு? இங்கே கொலையும் தற்கொலையும் பிரச்னையாக வந்திருந்தால் சரி, ஆனால் இவை ஒரு நொண்டிச்சாக்காக கதை முடிச்சவிழ்ப்புக்குச் சுளுவாக உதவக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகவே வருகின்றன. உண்மையில் இந்த அத்யாயத்தை புத்தகத்திலிருந்து அப்படியே எடுத்துவிட்டால் என்ன என்று தோன்றுகிறது எனக்கு. செய்துவிடலாம். அதுக்கு பதில் இடைச்செருகல் செய்ய எனக்கு உரிமை கிடையாதே.
போகட்டும், இந்தப் பெரிய குறையிலும் ஒரு ஆறுதல் படிப்பவனுக்கு, கொலை வழக்கு, தீர்ப்பு, தற்கொலை இத்யாதிகளுக்கெல்லாம் ஆசிரியை காட்சிகள், கட்டங்கள் ஆர்ப்பாட்டமாக எழுப்பாமல் க.நா.சு. ‘பொய்த்தேவு’வில் சொல்லியிருப்பது போல நிதானமாகச் சொல்லிச் சென்றுவிட்டார். இருந்தாலும் இந்தக் கட்டம் தேவை இல்லை. இதுக்குப் பதில் மாறாக கதையின் மென்மையான போக்குக்கு ஏற்ப இசைவான வேறு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி சுதாவாகக் கதை விடுவிப்புக்கு வழி செய்திருந்தால் சுருதி மாறி இருக்காது என்று சொல்லத் தோன்றுகிறது.
இன்னொரு குறை. உதாரணத்துக்கு:
1. ‘லிஸியா அது? நம் லிஸியா? ஏன் இப்படிக் குன்றிக் கூசிப்போய் நிற்கிறாள்? ஏன்? ஏன்?’
2. ‘முதலாவது லிஸி பெரிய வீட்டுப் பிள்ளை என்பதை நீங்கள் அறியவேண்டும். அதை மறந்திருந்தீர்களானால் இதுதான் அதை மறுபடியும் ஞாபகத்தில் கொள்ளவேண்டிய தருணம்.’
3. ‘ஆனால் இதற்கெல்லாம் போய்த் துயரப்படாதேயுங்கள். துயரப்பட்டால், தமிழ் நாட்டின் மற்ற பெண்மணிகளின் துயரங்களுக்கெல்லாம் எப்படிக் கணக்கெடுக்கப் போகிறீர்கள்?’
இந்த மாதிரி எழுதுவது அறுபதுகளில் பத்தாம்பசலி எழுத்துத்தான். வேதநாயகம் பிள்ளையும், ராஜம் அய்யரும், மாதவையாவும் அன்று, முக்கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட பழங்காலத்தில் இந்த மாதிரி எழுதினத்துக்கு மன்னிக்கலாம் – தமிழுக்கே முதல் ஆரம்ப நாவல்கள் என்பதுக்காக, அனுதாபமாகப் பார்த்து. வ.வெ.சு. அய்யரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ இப்படிப் பேசினபோதுகூட அது கதாபாத்திரமாக தன் உணர்ச்சியைக் கலந்தது, அது பொருத்தமானது. ஆனால் இங்கே சாட்சியாக உள்ள ஆசிரியை தன் உணர்ச்சியை அப்பட்டமாகக் கலக்கிறார். கதாபாத்திரங்கள் அசட்டு அபிமான உருக்கத்தோடு (செண்டிமெண்டலாக) நடந்துகொள்வதுதான் நம் தற்போதய நாவல், சிறுகதைகளில் சகஜமாகக் காண்பது. இங்கு ஆசிரியையே செண்டிமெண்டலாகத் தன் வேதனைக் குரல் கொடுக்கிறார். இது கலைத்தரமானது இல்லை. அதே மாதிரி இன்னொரு இடத்தில் பனையேறிகளின் வாழ்க்கை பற்றித் துயரக் குரல் கொடுத்திருப்பது, ஆசிரியை தன்னை முன் துறுத்திக்கொண்டு பேசுவது பனையேறிகள் மகாநாட்டுத் தலைமைப் பிரசங்கம்போல் தொனிக்கிறது. இதெல்லாம் தவிர்த்தாக வேண்டியவை, சுமாரான நாவல் என்பதிலிருந்து அடுத்த படிக்கு இது நல்ல நாவல் என்ற பிரமோஷன் பெறவேண்டுமானால்.
இந்த நாவலில் அங்கங்கே உபமானங்கள் யதார்த்தமாகவும் நல்ல சுவையை காட்டுவதாகவும் இருக்கின்றன. இன்னும் ‘காதுவடித்து’ அழகு பார்க்க ‘பேர்போடபோறோம்’ போன்ற அழகான பேச்சுவழக்கு பிரயோகங்கள் காணப்படுகின்றன. கொச்சைச் சொல்லை பாத்திரங்களின் பேச்சிலேதான் சொல்லலாம். ஆசிரியர் எழுதக்கூடாது என்று மேடைமேல் ஏறி தமிழ் எழுதச் சொல்லித்தரும் போதகர்களைப் பார்க்கிறோம். இப்போது இந்த நாவலாசிரியர், ஒரு கலாசாலை தமிழ்ப் பேராசிரியர். ஆனாலும் ‘குறட்டையின் ஒலி பெலந்தான்’, ‘பெலமாகக் காறித் துப்புவதிலிருந்து அறியலாம்’ என்று எழுதியிருக்கிறார். தெரிந்தேதான் இந்தச் சொல்லை உபயோகித்திருக்கிறார் ஆசிரியை. எனக்கு இது உடன்பாடு.
இங்கிலீஷ் வாக்கிய அமைப்பு என்றும் இங்கிலீஷில் நினைத்துத் தமிழில் எழுதுகிறார்கள் என்றும் ஒரு கிளிப்பிள்ளைப் புகார் உண்டு. ‘அவள் பலர் காண வெளியில் வருவது கூடாது. இது அவள் விலையைக் குறைப்பதாகும்’ என்று எழுதி இருக்கிறார் ஆசிரியை. இதுவும் எனக்கு உடன்பாடு. வளரும் தமிழுக்கு இதெல்லாம் தேவைதானே.
ஆக, ‘புத்தம் வீடு’ நாவலை நான் படித்துவந்தபோது இன்றைய பல நாவல்களை நான் உதறிவிடுவதுபோல் என்னால் புறக்கணிக்க முடியாதபடி அது என் கவனத்தை நீடிக்கச்செய்துகொண்டிருந்தது. அதன் நிறைகுறைகள் என் மனதில் பட்டதைக் கொண்டு சுமாரான நாவல் என்று சொல்லுகிறேன். அதோடு இந்த ஆசிரியையின் அடுத்த நாவலை எதிர்பார்க்கிறேன். அது நல்ல நாவலாகவோ சிறந்த நாவலாகவோ இருக்கக்கூடும்.
***
(எழுத்து (94), அக்டோபர் 1966: 1966ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க நாவல் விழாவில் படிக்கப்பட்ட கட்டுரை. விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் ‘தமிழ் நாவல்கள்’ (தமிழ்ப் புத்தகாலயம், டிசம்பர் 1966) என்ற தலைப்பில் நூலாக்கம் பெற்றன.)
***
சி.சு. செல்லப்பாவின் கட்டுரைக்கு பேராசிரியர் ஜேசுதாசனின் எதிர்வினை
மதிப்புக்குரிய ‘எழுத்து’ ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்,
‘புத்தம் வீடு’ நாவலைப்பற்றித் தாங்கள் எழுதிய ஆய்வு விமர்சனத்தைப் படித்தேன். அதற்கு முப்பத்தைந்து மார்க்கு – பாஸ் மார்க்கு போட்டிருக்கிறீர்கள். விமர்சகருக்கு ஒரு நூலைத் தன் அறிவின் எல்லைக்குள் நின்று ஆராயவும் குறைகளைக் காணவும், பிடித்த அம்சங்களைப் புகழவும் உரிமை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மார்க்குப் போடுகிற விஷயம் வரும்போதுநான் ஒரு ஆசிரியன் ஆனதால் சொல்லுகிறேன் – நம்மைவிட நம் கலையில் தேர்ந்த ஒருவருக்குத்தான் அந்த உரிமை கிடைக்கிறது; அதுவும் நாம் அனுமதிக்கும்போது மட்டும். இல்லாவிட்டால், அது ஆசிரியருக்கு மாணாக்கன் மார்க்குப் போடும் கதையாகிவிடும். விமர்சகர் கலைக்கு வெளியில் நின்றுகொண்டு கலையை அலசி ஆராயும்போது அவருக்குச் சிறிது அச்சம் இருக்கவேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். கலையையும் மனித இயல்பையும் கணித ரீதிப்படி அளந்து கூறிவிட்டதாக இன்று சிலர் சொல்லிக்கொள்ளுகிறார்கள். அது எவ்வளவு தப்பு என்பதற்குத் தங்கள் விமர்சனம் ஒரு சான்று.
‘புத்தம் வீடு’ ஆசிரியர் எழுதிய முதல் நாவல் என்பதற்காக அதற்கு அனுதாபம் தேவையில்லை என்று நினைக்கிறேன். இது அவருடைய முதல் நாவலாக இருக்கட்டும், கடைசி நாவலாக இருக்கட்டும், ஏதாவது சிறப்பிருந்தால் இருக்கிறது என்று சொல்லுங்கள். இல்லையென்றால் பள்ளிக்கூட ஆண்டு மலரில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் சிறுமியின் முதல் படைப்பாகக் கருதி அந்தக் காரணத்தால் இதைச் சிறப்பிக்க வேண்டியதில்லை.
நான் இந்தக் கடிதம் எழுத வந்த நோக்கம் இதுதான். தங்கள் விமர்சனத்தில் காணப்பட்ட பிழைகள் சிலவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டும் தங்களுடைய சில அவசரமான முடிவுகளையும் குறிப்பிடவேண்டும் என்று எண்ணினேன். சுருக்கமாகத்தான்.
முதலாவது இந்த நாவலாசிரியர் தமிழ்ப் பேராசிரியர் அல்ல, ஆங்கிலப் பேராசிரியர். இரண்டாவது இற்செறிப்பு என்பது பிரதேச வழக்கு அல்ல, பழைய இலக்கிய இலக்கண வழக்கு. மூன்றாவது, நாவலில் மூன்றாம் பார்வை மாத்திரமல்ல, வேறு பார்வைகளும் இருக்கின்றன, முக்கியமாக லிஸியின் பார்வை. நான்காவது, லிஸியின் தந்தை தற்கொலை செய்துகொள்ளவில்லை.
இனி உங்கள் முடிவுகளைப்பற்றி. அப்பட்டமாகச் சொல்லப்போனால், இது ஒரு காதல் கதை என்கிறீர்கள். கதையில் காதல் சித்திரிக்கப்படுகிறது உண்மைதான். ஆனால் காதல் சரடு இடையே அற்றல்லவா கிடக்கிறது? வகுப்பு வேற்றுமை உணர்வும், வீண்பெருமையுமல்லவா கதையின் ஊடே ஒரே இழையாகச் சென்று, கதைக்கு ஒருமையுணர்ச்சியைத் தருகிறது? இந்த விஷயம் நீங்கள் சொல்வதுபோல், தமிழ் நாவலுக்கும் சிறுகதைக்கும் அப்படியொன்றும் பழகிப்போன விஷயமல்லவே?
ஒரு அத்தியாயத்தைப் புத்தகத்திலிருந்து எடுத்துவிட்டால் என்ன என்பது தங்கள் கேள்வி. இது தேவையா தேவையற்றதா என்பதை முன்பின் பகுதிகளோடு கதையின் முக்கியமான இழையோடு, சேர்த்துப் பார்த்தால் தெரிந்துவிடும். கொலை, விசாரணை என்ற சம்பவங்கள், முன் சம்பவங்களின் இயல்பான தொடர்புகளே. பனைவிளைச் சூழ்நிலையில் சாதாரணமாக நிகழக்கூடியவைகளுந்தான். இங்கே சம்பவங்களை மிகைப்படுத்தாமல் அவற்றின் காரண காரியமான மனநிலைகளுக்கு முதலிடம் கொடுத்திருப்பதையும் கவனிக்க வேண்டும். எனவே உளப்போக்கு ரீதிக்கும் ஒரு குந்தகமும் விளையவில்லை என்பேன்.
உபதேசியார் துப்புத் துலக்கி தங்கராஜை விடுவித்து வழிசெய்கிறார். அதனால் ‘ஏசுநாதர் அருளிருந்து அவர்களைச் சேர்த்து வைக்கிற மாதிரிதான்’ என்கிறீர்கள். இந்த உபதேசியார் செய்து முடித்தார் என்றால் முந்தின உபதேசியார் தலையிடவே முடியாதென்று சொல்லிவிட்டாரே? இந்த உபதேசியார் தங்கராஜை விடுதலை செய்தாலும், வைத்தியர் துணையில்லாமலிருந்தால் கல்யாணமே நடந்திருக்காதே? சமூக ஊழியம் செய்வதே கிறிஸ்து மதம் என்று உபதேசியாரே நினைக்கும்போது தங்கராஜை விடுவித்த உபதேசியாரை ஏசுநாதரின் அருளுக்கு அடையாளமாக நீங்கள் எடுத்ததில் வியப்பில்லை. இதெல்லாம் கதையைக் காதல் கதை என்று சரித்துப் பார்த்ததின் விளைவு என்றுதான் சொல்வேன்.
பாத்திரங்கள் திடமான அழுத்தமான பாத்திரங்கள் அல்ல என்பதும் மிக அவசரமான முடிவென்றே தோன்றுகிறது. என்னைக் கேட்டால். முதலாவது கண்ணப்பச்சி, இரண்டாவது குடிகாரன், மூன்றாவது லிஸி கச்சிதமான படைப்புகள் என்று சொல்வேன். மற்றப் பாத்திரங்களுக்கும் தனித்துவ முத்திரை விழுந்தே யிருக்கிறது. பழம் பெருமை எல்லாம் தேய்ந்து ஓய்ந்துபோன ஒரு பூர்வீகக் குடும்பத்தின் வீண்பெருமைக்குச் சின்னம் கண்ணப்பச்சி. அவருடைய கால்கள் பெஞ்சுக் கடங்காமல் நீண்டு கிடக்கின்றன. அவர் உடலும் உள்ளமும் எல்லாமே தளர்ந்துவிட்டன. கொஞ்ச நஞ்சம் மீதியிருக்கும் குடும்பப் பெருமைக்கும் குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கும் இரண்டு பொல்லாத குடிகாரப் பிள்ளைகளுக்கெதிராக அவர் என்ன செய்யமுடியும்? தன் கோபத்தைத்தான் கிழட்டு மனைவியிடம் காட்டலாம். காறித் துப்புதல் மூலம் வெளியிடலாம். ஏழைப் பனையேற்றுத் தொழிலாளி தங்கையனிடம் தன் பழம்பெருமையைக் காட்டி, இனி அவன் தனக்குப் பனையேற வேண்டாம் என்று விரட்டிவிடலாம். உலகத்தில், தன் பாசமெல்லாம் சொரிந்து வைத்திருந்த லிஸியும் கூடத் தன் பெருமையைத் தகர்த்துவிட்டதாக அறிந்த ஏமாற்றத்தோடு, கொளுத்தும் வெயிலில் வைத்தியர் வீட்டுக்குத் தள்ளாடி நடந்து சென்றபோது லிஸி கூறிய இரக்க மொழிகளுக்குப் பதிலாக “கிளவனெப் பத்திக் கவலையா உனக்கு” என்று சொன்ன வார்த்தைகள் அவர் பெருமையும் இருதயமும் உடைந்து வந்த வார்த்தைகள் அல்லவா? இதைவிடப் பாத்திரம் எப்படித்தான் திடமாக இருக்க வேண்டுமோ?
கடைசியாக ஒரு வார்த்தை, ‘பத்தாம் பசலி’ முறைகளும் அறுபது முறைகளும் பற்றி. அறுபது முறைகளும் எழுபது எண்பதுகளில் பத்தாம் பசலிதான். புதுமை மோகத்தினால் விளைந்த வேகத்தை இந்த வார்த்தையில் காண்கிறேன்.
கடிதம் நீண்டுவிட்டதோ என்று பயப்படுகிறேன். இதை உங்கள் பத்திரிகையில் பிரசுரிக்கும்படியாக வேண்டிக்கொள்ளுகிறேன். சவுகரியமில்லையென்றால் பதில் எழுதுவீர்களென்று எதிர்பார்க்கிறேன்.
செ. ஜேசுதாசன்
தமிழ்ப் பேராசிரியர்,
யூனிவர்ஸிடி காலேஜ், திருவனந்தபுரம்
***
சி.சு. செல்லாப்பாவின் பதில்
(எழுத்து இதழ் (96) டிசம்பர் 1966 அன்று வெளியானது)
தமிழ் பேராசிரியர் செ. ஜேசுதாசன் அவர்களுக்கு,
தங்கள் கடிதம். என் விமர்சனக் கட்டுரைக்கு விமர்சனமாக, ஒரு கட்டுரைக்கு பதிலாக எனக்கு நேர் கடிதம் மூலமாகவே உங்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கும் ஒரு முறையை கையாண்டிருக்கிறீர்கள். எனவே நானும் கடிதமாகவே எழுதுகிறேன். உங்கள் கடிதத்தின் முதல் இரண்டு பாராக்களைப்பற்றி (அவை என் தகுதி, துணிச்சல் பற்றியவை) முடிவில் குறிப்பிடுகிறேன். முதலில் என் பிழைகள், அவசர முடிவுகள் சில பற்றிப் பார்க்கலாம்.
இந்த நாவலாசிரியர் தமிழ் பேராசிரியர் இல்லை, இங்கிலீஷ் பேராசிரியர் என்று பிழையைத் திருத்தியிருக்கிறீர்கள். ஏற்றுக்கொள்கிறேன். பிழை பிழைதான். நான் தமிழ் பேராசிரியர் என்று அழுத்தியதுக்குக் காரணம் அவர் பெலமாக என்ற கொச்சைச் சொல்லைத் தெரிந்து உபயோகித்திருக்கிறார் என்று சுட்டிக்காட்டவே. அடுத்து, ‘அவள் விலையைக் குறைப்பதாகும்’ என்று தமிழ் மரபுக்கு ஒத்தது என்று இடம் தரப்படாத ஒரு வாக்கியத்தை எழுதியிருக்கிறார் என்றும் சுட்டிக்காட்ட. இப்போது அவர் இங்கிலீஷ் பேராசிரியர் என்பதனால் என் வாதம் பலவீனப்பட்டுவிடவில்லை. மாறாக இன்னும் அதிக வலுப்படுகிறது. எனக்கு சாதகமாக. ஒரு இங்கிலீஷ் இலக்கிய பரிச்சயம் உள்ளவர், பிறமொழி இலக்கியங்களின் போக்கை அறிந்தவர் தமிழில் தான் படைக்கும் இலக்கிய உருவத்தில் இவைகளை கையாளுகிறார் என்றால்! தமிழ் இலக்கியம் மட்டும் படித்து, பரிச்சயம் உள்ளவர்கள் இவைகளை கையாளுவார்களோ மாட்டார்களோ, தமிழுக்கு இது சேரக்கூடியது, வேண்டியது என்று அவர் முடிவுகட்டி உபயோகித்திருக்கிறாரே போதுமே. ஆனால் நாவலாசிரியர் இங்கிலீஷ் பேராசிரியர் என்பது பட்ட ரீதியாக உத்யோகமாக இருந்தாலும் அவர் தமிழ் பேராசிரியராகவும் கருதும்படியான தகுதியைப் பெற்றிருக்கிறாரே. நீங்களும் அவரும் சேர்ந்து எழுதியுள்ள ‘தமிழ் இலக்கிய சரித்திரம் (எ ஹிஸ்டரி ஆப் தமிழ் லிடரேச்சர்) என்ற நூலில் தமிழ் இலக்கியத்தில் அவருக்குள்ள பரிச்சயத்தையும், அதோடு ஆராய்ச்சி மனப்பான்மையையும் வெளிக்காட்டுவதிலிருந்து அவரைத் தமிழ் பேராசிரியர் என்றும் சொல்லி இரட்டைப் பெருமை அவருக்குக் கிடைக்கச் செய்வதை நீங்கள் ஆட்சேபிக்க மாட்டீர்களே?
அடுத்தபடி ‘இற்செறிப்பு’ சொல்பற்றி. அது பழைய இலக்கிய இலக்கண வழக்கு என்று திருத்தி, பிரதேச வழக்கு இல்லை என்கிறீர்கள். நாவலிலேயே ‘இற்செறிப்பு ஒரு பழந்தமிழ் வழக்கம், சங்க காலத்திலேயே உள்ள வழக்கம்’ என்று இருக்கிற வரிகளைப் படித்த பிறகே அது பிரதேச வழக்காக இருக்கக்கூடும் என்று அநுமானித்து எழுதினேன். ‘இற்செறித்தல்’ என்றால் ‘வீட்டில் இருத்துதல்’ என்று அர்த்தம்கொண்டு செந்தமிழ் அகராதியிலும் இருக்கிறது. சரி, அதனால் என்ன? எத்தனை பழைய இலக்கிய இலக்கண வழக்குச்சொற்கள் நாம் அறியாமல் பேச்சு வழக்கில் இருக்கின்றன. அதுவும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில்? அன்று நான் கூட்டத்தில் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியுமா என்று கேட்டபோது ஒருவர்கூட இதைச் சொல்ல முடியவில்லையே. அதனால் ‘இற்செறிப்பு’ என்ற சொல் மற்ற சிலதைப்போல இன்றும் அங்கு பரிச்சயமான சொல்லாக இருக்கக்கூடும் என்று நான் யூகித்தேன். இப்போது நீங்கள் சொல்வதைக் கொண்டு அங்கு அது பிரதேச வழக்கில் இல்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஆசிரியர் அந்தப் பழக்கத்தில் எங்கும் இல்லாத பழைய சொல்லை வலிந்து உபயோகித்திருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். வயது வந்த பெண்கள் வீட்டைவிட்டு போகக்கூடாது என்ற ஒரு இயற்கையான, பழக்க நியதிக்கு ஆசிரியர் தன் ‘சங்ககால வழக்கமான இற்செறிப்பு’ பற்றி பிரஸ்தாபிக்கத் தேவையே இல்லையே. சங்ககால வழக்கமும் தெரியாமல், அதற்குள்ள தமிழ் ஞானமும் இல்லாமல், ‘தலைமுறை தலைமுறையாக’ வரும் வழக்கம் மட்டும் நன்றாகத் தெரிந்த பனைவிளைப் புத்தம் வீட்டாரின் செய்கைக்கு சங்க, பழந்தமிழ் வழக்குச் சொல்லை, ஆராய்ச்சி செய்த விளக்கமாக, ஏற்கெனவே நன்றாக விளங்கிவிட்ட ஒரு தகவலுக்கு இந்தச் சொல்லைப் புகுத்தி பொருள்விளக்கி நச்சுப்பண்ணுவானேன்? ஆசிரியர் கட்டுரை எழுதவில்லையே.
மூன்றாவதாக, ‘நாவலில் மூன்றாம் பார்வை மாத்திரமல்ல, வேறு பார்வைகளும் இருக்கின்றன முக்கியமாக லிஸியின் பார்வை’ என்று எழுதி இருப்பது. இந்த வரிகளை நீங்கள் எழுத எப்படி ஏற்பட்டது, என் கட்டுரையின் எந்தக் கருத்துக்கு இந்த பதில் என்று என் கட்டுரையில் மீண்டும் படித்துத் தேடினேன். என் கட்டுரையில் எங்கும் நான் ‘மூன்றாம் பார்வை’ என்று நாவலில் வரும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் பார்வையை அழுத்திச் சொல்லவே இல்லையே. முதல் பார்வை, இரண்டாம் பார்வை என்றுகூட நான் பிரஸ்தாபிக்கவில்லையே. அப்படி இருக்க நீங்கள் எதைக் கொண்டு வேறு பார்வைகள், முக்கியமாக லிஸியின் பார்வை என்று எதுக்காக் சொல்ல வருகிறீர்கள்?
எனக்கு ஒரு சந்தேகம். என் கட்டுரையில் ‘இந்த நாவல் புறப்போக்கான கதை சொல்லல் வழி பின்பற்றியது. மூன்றாம் மனிதப் பார்வை நாவல். ஆசிரியர் கதையை தடம் தவறாமலும்…’ என்று எழுதி இருக்கிறேன். இந்த மூன்றாம் மனிதப் பார்வை நாவல் என்பதைக் கொண்டுதான் நீங்கள் மேலே கண்ட வரிகளை எழுதி இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இந்த வார்த்தைகளைத் தவிர வேறு எந்த இடத்திலும் மூன்றாம் பார்வை என்ற கருத்து வெளியிடப்படவில்லை. இந்த வரிகளை மறுபடியும் படித்தால் தெரியும். இங்கே நான் குறிப்பிடுவது நாவலின் உருவ உத்தி வகை பற்றி, கதை சொல்லல் வழி பற்றி இரண்டு வாக்கியங்களையும் சேர்த்துப் பார்க்கிற யாருக்கும் புரியும் ‘நான்’ என்று சொல்லுகிற தன் பார்வையான கதை சொல்லல் வழியில் இல்லாமல் புறப்போக்காக அவன் என்று மூன்றாமவன் பார்வை வழியில் சொல்லும் உத்தியைத்தான் குறிப்பிடுகிறேன் என்று புரியும். நீங்கள் பாதை தவறிவிட்டீர்கள்.
அடுத்தபடியாக ‘லிஸியின் தந்தை தற்கொலை செய்துகொள்ளவில்லை…’ என்பது. மற்ற மூன்றையும்விட இது முக்கியமான விஷயம். கதையில் வரும் ஒரு நிகழ்ச்சி பற்றி இரண்டு பாடந்தரம் இருப்பதா? இருக்க முடியாது. நிச்சயமாக யாரோ ஒருவரின் பார்வையில் முடிவில் கோளாறு. என் பார்வையின் முடிவில்தான் கோளாறு என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். சரி அப்படியானால் உங்கள் கட்டுரையில், வேறு எப்படி அவன் இறந்தான் என்று சொல்லும் ஒரு வாக்கியம் சேர்த்து விளக்கி’ (இங்கிலீஷ் பேராசிரியர் என்று குறிப்பிட்டதுபோல்) இருந்தால் முடிவை ஒப்பிட்டுப் பார்த்து தப்பானால் திருத்திக்கொள்ளவும் உபயோகமாக இருந்திருக்கும். நீங்கள் சொல்ல வந்ததை முடிக்காமல் புள்ளிகள் போட்டு மேலே ஏதோ இன்னும் இருப்பதுபோல் காட்டி நின்றுவிட்டீர்கள். ஏன்!
எனக்குத் தோன்றுகிறது உங்களுக்கே ஏதோ நிச்சயமில்லை என்பதுபோல. ஆய்வு விமர்சனம் என்பதே நுட்பமாக தகவல்களை ஆராய்ந்து பார்ப்பது. அந்த வழியில் ஏற்பட்ட ஒரு கருத்தை மறுக்க முற்படும்போது, அதே ரீதியில் ஆதாரங்களைத் தரவேண்டும். ஏதோ என் முடிவை மறுத்துவிட்டீர்கள். அப்புறம் என்ன, புதிரா? தற்கொலை இல்லை என்றால், கொலை, தற்செயல் விபத்து மரணம், திடீர் இயற்கை மரணம். இப்படி எதாவதுதானே இருக்க வேண்டும். அந்த ஒரு தகவலை சொல்ல நீங்கள் தயங்கியது ஏன்? இல்லை மர்மக் கதையா? துப்பறிபவர்களைத் தேடவேண்டுமா? முதலில் ஒரு கருத்தைச் சொல்கிறவனைவிட மறுக்கிறவனுக்கு பொறுப்பு அதிகம். போகட்டும் நீங்கள் சொல்லாவிட்டாலும் என் முடிவு பற்றி நான் சரி, தப்பு பார்த்துக்கொண்டாகவேண்டும். நீங்கள் மறுத்துவிட்டபிறகு.
நாவலுக்குப் போவோம். விடியும் முன் கொலை நடந்துவிட்டது. பொழுது புலர்ந்ததும் போலீசார் வந்து புலன் விசாரித்து தங்கராஜை கைது செய்து போகிறார்கள். நன்றாக விடிந்தபின் லிஸியின் தகப்பனும் கைதான செய்தி லிஸிக்கு எட்ட, வீட்டு பின்வாசலுக்குப் போய் உட்கார்ந்து கொலை செய்தது யார் என்று குழம்பிக்கொண்டிருக்கும்போது (கொஞ்ச நேரம் கழித்து) அப்பன் ஜாமீனில் வீடுதிரும்பி “அது அவனைப் ( தங்கராஜை) பாடம் படிக்க பள்ளிக்கூடத்திலே சேத்திற்று நான் வந்தேன். எப்படி, கிளவி, நல்லாருக்கா” என்று பெருமை பேசிவிட்டுத் தூங்கிப் போய்விடுகிறான். லிஸியும் வாசலில் போய் உட்கார்ந்துகொண்டிருக்கும்போது (கொஞ்ச நேரத்தில்) செல்லப்பன் வந்து பேசிவிட்டுப் போகிறான். வீட்டுக்குள் லிஸி புகவும் செல்லப்பன் பேசிவிட்டுப் போனதைப் பார்த்திருந்த குடிகார அப்பன் அவள்மீது சீறி விழுகிறான். அப்போது வைத்தியர் வரவும் “கேஸ் நமக்கு சாதகமாக இருக்கும்னு தோணுது” என்று அவர் சொல்ல, இருவரும் லிஸியின் தாத்தாவிடம் சென்று (ஏதோ) பேசுகிறார்கள். வைத்தியர் போனபின் லிஸியின் குடிகாரத் தந்தை மறுபடியும் அவளிடம் வந்து தன் மானத்தைக் கெடுப்பதைவிட அவளை சாகச் சொல்லி ஆத்திரமாகப் பேசவும் லிஸி துணிந்து அப்பாவிடம் பேசி அப்பனுக்குக் குறைச்சல் உண்டாக்கி வைக்கமாட்டேன் என்று முகத்தில் அடித்த மாதிரி பேசுகிறாள். அப்போது தாத்தா கூப்பிட அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு உள்ளே போய்விடுகிறாள். லிஸி சிந்திக்கிறாள். ‘இவர்கள் எல்லோரும் தங்கராஜ்தான் கொலையாளி என்று நம்புகிறார்கள். அப்பனையும் அவளையும் தவிர. அவர் படுத்திருக்கிறார். அவள் முகத்தில் விழிக்க விருப்பம் இல்லையோ என்னமோ… சித்தப்பாவை அப்பாதான் கொன்றிருக்கிறார். தந்தை செய்த குற்றத்தை தங்கராஜ் மேல் சுமத்தப்பார்க்கிறார்கள்’ இப்படி சிந்தித்துக்கொண்டு இருந்ததால் அன்றிரவு லிஸி தூங்கவில்லை.
இனிதான் கதையின் போக்கை நுட்பமாக கவனிக்க வேண்டும். புத்தக வரிகள் இவை:
‘பகலில் தூங்கினதாலோ, என்னவோ அவள் தந்தையும் புரண்டு புரண்டு படுப்பதும் முனகுவதுமாக இருந்தார்’ (தூங்காத லிஸி தந்தையைக் கவனித்து வந்திருக்கிறாள்)
‘அதிகாலையில் சற்றுக் கண்ணயர்ந்தவள், உள் திண்ணையிலிருந்து லிஸியம்மா என்ற கம்மின குரலைக் கேட்டு விழித்து அவன் தந்தையிடம் ஓடிச் சென்றாள்.’
‘அவரது முகரூபம் முற்றிலும் மாறிப் போயிருந்தது. பேச நாவெடுக்கும்போது வாயிலிருந்து சிவந்த நுரை தள்ளிற்று.’
‘வைத்தியர் வருமுன் நிலைமை மோசமாகிக்கொண்டிருந்தது. உணர்வு தவறும் நிலை. எதேதோ பிதற்றுகிறார். இடையிடையே பொருள் விளங்காமலுமில்லை.’
‘குட்டி நான்தான் கொண்ணேன் பாரு. அதுக்கிப்ப உனக்கு என்னவாம்?’
‘ஏ கிளவி! நீ என்ன கண்டே. வெட்டொண்ணு, துண்டம்ரண்டு என்று பல்லை இளிக்கிறார்.’
‘காய்கறி அரிஞ்சான் காய்கறி. நான் தலையை அரிஞ்சிற்றேன்! அருவா எப்படி நைஸா வெட்டுது தெரியுமா?’ (நினைவின்றி)
வைத்தியர் வரவும் இதேமாதிரி நினைவும் உளறலும்.
‘அவன் மக அவனுக்கு மேலு’ (கொஞ்சம் நினைவுடன்)
‘ஏ நான் உறங்கப்போறேன். நல்லா உறங்கப்போறேன். நீ எழுப்பினாலும் முளிக்காமத்தான் உறங்கப்போறேன். எம் பிள்ளையைக் கூப்பிடு. லிஸியம்மா!’
‘வந்தியாம்மா மகளே, நீ கொலைகாரப் பயலுக்க மகதான். ஆனா நீ நல்லவ!’ (நினைவுடன்)
‘இப்ப பேசட்டும் மகளே… இனி உனக்கு பயமில்லே. வாம்மா.’
‘நான் உன்னெ ஆசீர்வதிக்கல்லேம்மா, என் கையிலே அளுக்கு இருக்கு. இந்த குடிகாரன் போனபிறகு கண்ணப்பச்சி ஆசீர்வாதம் வாங்கிக்க’ (நினைவுடன்). ‘என் மகளுக்கு திருவனந்தபுரத்திலேருந்து மாப்பிள்ளே வராண்டா’ (நினைவு தடுமாறி) பிறகு உபதேசியார் வருகிறார். இனம் கண்டு.
‘ஏ ஓதை, என்னெ மோச்சத்துக்கு…’ (நினைவு தடுமாறி)
இதுக்குப் பிறகு அவன் பேசவில்லை. இறந்துவிட்டான். கொலை செய்தவனின் முடிவு பற்றிய தகவல் நாவலில் இவ்வளவுதான். நான் தற்கொலை செய்துகொண்டதாகக் குறிப்பிட்டேன். அவன் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் எதுவும் கதையில் இல்லைதான். இந்த ஆசிரியரின் எழுத்துப் போக்கிலே இதுபோல் பல இடங்களில் தகவல் நேராகச் சொல்லப்படவில்லை. உதாரணத்துக்கு. விடியற்காலை நான்கு மணிக்கு பனையேறிகள் தங்கள் வேலையைத் துவக்கிய சமயம் புத்தம் வீட்டுக்கு அருகில் உள்ள பனையின் உச்சியிலிருந்து ‘குடிகெட்டுப்போச்சு’ என்று திரும்பத் திரும்ப கூவிக்கத்தின அன்பையன் ஓடிவந்தவர்கள் கேட்டும் எதுக்காக அலறினான் என்று அந்த சம்பவ நிகழ்ச்சி முடியும் வரை தெரியவே இல்லை. பொழுது புலர்ந்தபின் போலீஸார் வந்த தகவலுக்குப்பின்தான் கொலை செய்யப்பட்டவனின் (லிஸியின் சிற்றப்பாவின்) முண்டத்தைப் பற்றிய பிரஸ்தாபமே வருகிறது. இதுக்குப்பின்தான் அன்பையன் அலறல் இதுபற்றியதாக இருக்கும் என்று அனுமானிக்கத் தோன்றுகிறது. (ஒருவேளை அன்பையன் அலறல் இது சம்பந்தமாக இல்லை. வேறு ஏதோ என்று நீங்கள் என் முடிவு தவறானது என்று கூறிவிடுவீர்களோ?)
சரி இது தற்கொலை இல்லாவிட்டால் வேறு என்ன? கொலையா? காயப்படுத்தி கொலை, இல்லை விஷம் வைத்தா? அவன் மனைவி, லிஸி இருவர்தான் கூட இருந்தவர்கள். அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். அது போகட்டும். படுக்கப்போகும்போது சரியாக இருந்ததாகக் கொண்டால் லிஸி போய் பார்க்கும்போது முகம் ரூபம் மாறி சிவந்த நுரை (ரத்தம்) தள்ளி இருப்பானேன்? திடீர் மாரடைப்பா? ஹெமரேஜ்? பக்கவாதம், வலிப்பு, அதிர்ச்சியில் சித்தக்கலக்கம்? எதால் அவன் மரணம் சில மணிநேரத்துக்குள் ஏற்பட்டிருக்கக்கூடும்? மேலே குறிப்பிட்டவை எது மூலமும் அவன் சாகவில்லை. ஏனென்றால் அதுக்கு வேண்டிய சூசனைத் தகவல்களும் கிடையாது. இல்லை எதாவது பேய் அறைந்ததாகச் சொல்லலாமா ? அது நம்பிக்கை சம்பந்தப்பட்டதாயிற்றே!
ஆக, தற்கொலை இல்லை என்றால் மரணத்துக்கு வேறு காரணம் எதுவும் தரப்படவில்லை. தற்கொலை என்ற அநுமானத்துக்குத்தான் அதிகபட்ச தகவல் இருக்கிறது. கொலைகாரனுடைய மனநிலை, பேச்சு எல்லாம் அவன் ஜாமீனில் வந்ததிலிருந்துதான் தெரிகிறது. ஜாமீன் தந்தது யார் தெரியுமா? நான்தான் தடிபோல வந்தாச்சே’ ‘அவனைப் பாடம் படிக்கப் பள்ளிக்கூடத்திலே சேத்திற்று நான்வந்தேன்’ என்று பெருமை பேசுகிறான். திடமாகவோ அல்லது தன் உள்ளத் தடுமாற்றத்தை மறைத்தோ. பிறகு மகளைக் கண்டிக்கிற போதும் அவன் கோபம் ஓங்கியே தொனிக்கிறது. பிறகு முகம் சோர்ந்து வந்த வைத்தியரும் அவனும் ரகஸ்யமாக அவன் அப்பாவுடன் பேசிவிட்டு (அவர்கள் பேசியது என்ன என்று நமக்குத் தகவல் இல்லை) மறுபடியும் லிஸி இருக்குமிடம் வந்தபோது நடை சற்று சோர்ந்ததுபோலக் காணப்பட்டது. குரலும் தான் என்கிற வரிகளில்தான், அவர்கள் பேச்சின் விளைவாக அவன் மனது பாதித்திருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றுகிறது. (அவனை அப்படி பாதிக்கத்தக்கது என்ன என்பது அப்போதைக்கு நமக்குத் தெரியாவிட்டாலும் பிறகாவது தெரியவேண்டாமா, இந்தப் பாதிப்புக்கு பின்னும் அவன் மகளிடம் கொடூரத்தோடு ‘நீ இனி எங்கேயாவது விளுந்து கிளுந்து செத்து தொலைஞ்சுபோ’ என்கிறான். லிஸி முதல் தடவையாக எதிர்த்து தந்தையிடம் பேசுகிறாள். இதுக்குப்பின் அவள் எதுவும் பேசவில்லை. பிறகு லிஸி அவனைப் பார்ப்பது கோரமாக ரத்த நுரை தள்ளிய வாயுடன்தான். உற்சாகமாக கேஸ் நடத்த முன்வந்த வைத்தியர் சோர்ந்து வந்ததும் அவர்கள் ரகசியப் பேச்சின் விளைவாக குடிகாரன் நடை சோர்ந்து குரல் சோர்ந்து வந்ததும் என்ன காரணத்தால்? அதன் விளைவாக பாதித்த மனநிலையில் அவன் மரணம் சம்பவித்திருக்கலாம். (அந்த பேச்சு விவரம்தான் நமக்குத் தெரியவில்லையே. ஆசிரியர் சொல்லி இருப்பதை நாம் அப்படியே அப்போதைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் ஒரு காரணக்காரியத் தொடர்பு காட்ட பின்னாலாவது சூசகமாகச் சொல்லவேண்டாமா? சரி, அவன் சாகவேண்டியவன் என்று ஆசிரியர் முடிவுசெய்துவிட்ட பிறகு எந்தவிதமாக அவன் மன உறுத்தல் ஏற்பட்டது, அதுக்கு ஏற்ப எந்தவிதமாக அவன் மரணம் சம்பவித்தது என்று உணர்த்த அந்தவித நிகழ்ச்சிக்கான தகவல்களை கோடிகாட்ட வேண்டாமா?
அவனுக்கு ஏற்பட்ட சோர்வில், உறுத்தலில் பீதியில் அவன் தன் மரணத்தை வருவித்துக்கொண்டதாகவேதான் படுகிறது, அவன் வார்த்தைகளை (சுயநினைவுடனும் உணர்வு தப்பியும் பேசியதிலிருந்து) சேர்த்துப் பார்க்கிறபோது. இல்லை நான் மேலே குறிப்பிட்ட வேறுவித திடீர் வியாதிகள் ஒன்றினால் ஏற்பட்டதாகச் சொல்வதானால் அதுக்கான தகவல் இம்மியும் இல்லை. ஆசிரியர் காரிய காரணத்தொடர்பு ஏற்படுத்தத் தவறிவிட்டார் என்றே கூறுவேன். நீங்கள் மறுபடியும் நான் மேலே குறிப்பிட்டவைகளைக் கொண்டு என் முடிவு தவிர்த்த வேறு ஏதாவது ஒரு முடிவுக்கு இயைவாக தகவல்கள் எழுத்தில் காணப்படுகிறதா என்று பார்த்து எனக்கு எடுத்துக்காட்டி நிரூபிக்க முடியும் பட்சத்தில் நன்றி உடையவனாக இருப்பேன். என்னது தவறானால் திருத்தியும் கொள்கிறேன். இதிலே கட்சியாட எதுவும் இல்லை. உணர்வு சக்தியை சோதித்துப் பார்த்துக்கொள்வதுதானே.
இதேபோல நீங்கள் குறிப்பிட்டுள்ள இதர அம்சங்கள் ஒவ்வொன்று பற்றியும், நான் என் உணர்வு சக்திக்கு ஏற்ப முடிவு செய்திருப்பதுக்கு ஆதரவாக நான் வாதிட முடியும். ரொம்ப நீளும். இடமில்லை. ஒரு சோறு பதம் போதும் என்று நினைக்கிறேன். அவசியம் ஏற்பட்டால் பிறகு பார்த்துக்கலாம்.
இலக்கிய விமர்சனம் ஒரு அறிவுபூர்வமான அணுகுதல். நூலில் இருக்கிற தகவல்களைக் கொண்டு பொருத்திப் பார்க்கிற காரியம். நீங்களே எழுதி இருப்பதுபோல அறிவின் எல்லைக்குள் நின்று ஆராய்கிற வேலை. இதில் படைப்பின் தரத்தை மதிப்பதில் சுமார் என்று சொல்வதை மார்க் விகிதத்தில் வேறொருவிதமாகச் சொல்லி இருக்கிறேன். மாணவர்கள் எழுத்துக்கு மார்க் போடும் பேராசிரியரின் எழுத்துக்கு மார்க் போட்டுக் காட்டுவது பொருத்தமே. இதை நீங்கள் ஏற்காமல் என்னைக் குத்திக் காட்டும் நினைப்பில் சில வரிகளை எழுதி இருக்கிறீர்கள். அவசியமில்லாதவை, பண்பு காட்டாதவை. ‘நம்மைவிட நம் கலையில் தேர்த்த ஒருவருக்குத்தான் அந்த உரிமை கிடைக்கிறது, அதுவும் நாம் அனுமதிக்கும்போது மட்டும்’ என்கிறீர்கள். யார் யாரைவிடத் தேர்ந்தவர். யாருக்கு யார் உரிமையை அனுமதிப்பது இதெல்லாம் அப்படி நிர்ணயித்துவிட முடியாது. அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதிலிருந்து தெரியவருவது. ஒரு நாவல் எழுதியவரைவிட இரண்டு நாவல் எழுதி இருப்பவன் தேர்ந்தவன். ஒரு இலக்கிய சரித்திரம் எழுதி இருப்பவர்களைவிட இலக்கிய விமர்சனம் பல செய்திருப்பவன் தேர்ந்தவன் என்று தரம் இருக்கட்டும் – தொகையளவைக் கொண்டுகூட முடிவு கட்டலாம். மாணாக்கன் ஆசிரியருக்கு மார்க் போடும் கதையாகிவிடும் என்கிறீர்கள். ரொம்ப உண்மை. வ.ரா. என்பவர் யார் என்று கேட்கும் கலாசாலை தமிழ் எம். ஏ. பேராசிரியர்களுக்கு, நூல்நிலையங்களில் உள்ள அவரது நூல்களைப் படிக்க வாய்ப்பு பெற்ற மாணவன், நிச்சயமாக – அந்த பேராசிரியரின் தற்கால இலக்கிய பரிச்சயத்துக்கு – மார்க் போடும் உரிமை வாய்ந்தவன்தான் என்பதில் சந்தேகம் என்ன இருக்கிறது? இதைவிட நீங்கள் இன்னும் பெரிய போடாக ‘விமர்சகர் கலைக்கு வெளியில் நின்றுகொண்டு கலையை அலசி ஆராயும்போது அவருக்கு சிறிது அச்சம் இருக்கவேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்’ என்கிறீர்கள். இதில் நான் ஆட்சேபிப்பதுக்கோ இப்படிச் சொல்வதால் வருத்தப்படுவதுக்கோ, கோபப்படுவதுக்கோ எதுவும் இல்லை என்பதைச் சொல்லிக்கொள்கிறேன். புத்தம் வீடு நாவலை விமர்சிக்கும் ஒரு விமர்சகனுக்கு ஒரு நல்ல குணம் இருக்கவேண்டும் என்று தாங்கள் சொல்வதில் தவறில்லை. இதைச் சொல்லும் வாயால் இதையும் சொல்ல விரும்புகிறேன். நீங்களும் திருமதி ஹெப்ஸீபா ஜேசுதாஸன் இருவரும் சேர்ந்து தமிழ் இலக்கிய சரித்திரம் (A History of Tamil Literature) என்ற ஒரு புத்தகம் இங்கிலீஷில் 1961 ல் எழுதி இருக்கிறீர்களே. அதில் கடைசி அத்தியாயம், மாடர்ன் பீரியட் என்று 1960 வரையுள்ள இலக்கிய காலம் பற்றி எழுதி இருக்கிறீர்களே. அதில் வசன எழுத்தாளர்கள் (பக்கம் 261) என்ற பகுதியில் ஐந்து பக்கத்தில் வேதநாயகம் பிள்ளை முதல் திரு.வி.க. வரை ஒரு பத்து பேர்களை மட்டும் குறிப்பிட்டுவிட்டு பிறகு கல்கிக்கும், புதுமைப்பித்தனுக்கும் பகுதிகள் ஒதுக்கிவிட்டு, தற்கால தமிழ் இலக்கியத்தில் வளர்ந்திருக்கும் செழித்தும் இருக்கும் சிறுகதை, நாவல் இலக்கியம் பற்றிய தகவல் எதுவும் இல்லாத (பெயர்களைச் சொல்ல விருப்பம் இல்லாமல் இருக்கலாம்) வளம்கூட காட்டாத தற்கால தமிழ் இலக்கிய வரலாறு எழுதத் துணிபவர்களுக்குக்கூட சிறிது அச்சம் இருந்திருக்க வேண்டும் என்று நான் தாழ்மையுடன் சொல்வதை நீங்களும் ஏற்றுக்கொள்ளத் தயங்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
கடைசியாக முதல் நாவல் என்பதற்காக அனுதாபம் தேவையில்லை என்று விசிறி அடிக்கிறீர்கள். அனுதாபத்துடன் பார்ப்பது என்றால் முன்கூட்டிய வெறுப்பும் அலட்சியமும் காட்டாமல் பார்ப்பது என்றும் நான் விளக்கி இருக்கிறேனே. அதைப் படித்துவிட்ட பிறகுமா இப்படி எழுதுகிறீர்கள்? அனுதாபம் ஆளுக்கல்ல, நூலுக்கு. இலக்கியத் தரம் அதில் ஆரம்பத்திலேயே தென்பட்டிராவிட்டால் நிச்சயமாக அதை மூடி வைத்திருப்பேன். பள்ளிக்கூட ஆண்டு மலரில் கூட, சுமாரென்ன, சிறந்த படைப்புகள் வரலாம். சிறந்த இலக்கியப் பத்திரிகை ஆண்டு மலர்களில், சுமாரென்ன, உபயோகமற்றவை வரலாம். ஆமாம், அனுதாபமாகப் பார்க்கத் தேவையில்லை என்று எனக்கு தாக்கீது பிறப்பிக்க வருகிறீர்களே. நான் காட்டியவை குறைகள் இல்லை, நிறை என்று கூறி என்னை மறுக்க வந்தவரின் கண்ணோட்டத்தில் இந்த நாவலில் ஒரு குறையுமா தென்படவில்லை என்று கேட்டு, அபிமானமாகவும் பார்க்கக்கூடாது என்று நான் சொன்னாலும் சரிதானே?
– சி. சு. செல்லப்பா
***