தாய்மடியில் நான் தலையைச் சாய்க்கிறேன் – சக்திவேல்

நாவல்

1

நாம் ஏன் அவளாக விரும்புவதில்லை. ஏன் நம்மால் வானையும் கடலையும் உலகையும் சுமக்க முடிவதில்லை.

என்ற கேள்வியில் மையம் கொள்கிறது வயலட்டின் இதோ நம் தாய் குறுநாவல்.  இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின், தன் சீடர்களிடம் அன்னை மேரியை சுட்டி, “இவரே உம் தாய்” என்கிறார். இவரே உம் தாய் என்று சுட்டிக்காட்ட ஒரு தேவனில்லாத நவீன பெண்ணான ஆனந்தி இதோ நம் தாய் என்ற கண்டுகொள்வதில் உள்ள அகத்தடைகளே கதையாக விரிகிறது. இதோ நம் தாய் குறுநாவலின் மொத்த கதையும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆனந்தி சந்திக்கும் வாழ்க்கை தருணங்களும் அத்தருணங்களுக்கிடையில் மின்னி ஓடும் அவளது நினைவு பெருக்கும் மட்டுமே. முன்கதை என்ற பகுதியில் பைபிளின் மறு ஆக்கம் போன்ற பத்தியும் ஆனந்தர் பரி நிர்வாணம் அடைவது, புத்தரின் போதனை மொழிப்பெயர்க்கும் ரைஸ் டேவிஸின் அனுபவம்,  ரைஸ் டேவிஸ் மொழிப்பெயர்த்த பகுதியை தமிழாக்கம் செய்யும் கே.எஸ்ஸின் கதை என்று நான்கு கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நான்கு கதைகளும் ஆனந்தியின் கதையுடன் இணைந்து ஒருவரின் கதை என்பதிலிருந்து மனிதர்களின் கதையாக மாற்றுகிறது.

நாம் ஏன் அவளாக விரும்புவதில்லை. ஏன் நம்மால் வானையும் கடலையும் உலகையும் சுமக்க முடிவதில்லை என்ற கேள்வி ஆனந்தி திருநங்கையாக தன்னை உணர்வதில் இருந்து தொடங்குகிறது. நாவலில் இடம்பெறும் இவ்வரிகள் மேரியை தான் குறிக்கின்றன. அது ஒரு அடிப்படை வினா. ஆனால் எந்த அடிப்படை வினாவுக்கும் எரிபொருளாக அமைவது அந்த வினாவை ஒருவர் தன் வாழ்க்கையில் இருந்து அடைந்தரா என்பது தான்.  ஆனந்தி தன்னை திருநங்கையாக உணர்ந்தவுடன் முதல் பிரிவை சந்திப்பது அவளது அம்மா கௌதமியிடம் இருந்து தான். கதை நெடுக அம்மா என்பதற்கு பதிலாக கௌதமி என்றே தன் அன்னையை அடையாளப்படுத்துகிறாள்.

ஆதியில் அவளும் அவளுமே இருந்தார்கள். அவர்கள் உலகை பார்வையாலும் ஒளியாலும் மணத்தாலும் அன்பாலும் அறிந்திருந்தார்கள். அவர்களது நினைவுகளில் வண்ணங்கள் மட்டுமே நிறைந்திருந்தன. சொற்கள் இல்லை. அவர்களால் எல்லா உயிர்களிடத்தும் பேச முடிந்திருந்தது. பின் அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினார்கள்.  உலகத்திடமிருந்து தனித்திருக்க தொடங்கிய அவர்களது நினைவில் முடிச்சுகள் தோன்றின. அவையே சொற்கள் ஆயின. சொற்களில் இருந்தே துயரம் தோன்றியது. துயரத்தின் ஊற்று காதலில் என்று கண்டுகொண்ட அவர்கள் பிரிந்து வெவ்வேறு பாதைகளில் செல்லத் தொடங்கினர். துயரத்திலிருந்து விடுதலை அளிக்க தோன்றிய முதல் புத்தர் சொற்களையும் இலக்கணத்தையும் மீண்டும் கோர்த்து மொழியை உண்டாக்கினார்.

என்னும் முன்கதையின் முதல் பகுதி கதை முழுக்க பின்குரலாக ஒலித்து ஒவ்வொருமுறை கௌதமியும் ஆனந்தியும் சந்திக்கும் தருணங்கள் காட்டப்படும்போதும் அழுத்தத்தை கூட்டுகிறது. சொல் என்பது ஒரு அடையாளம். மேலும் பெரியவற்றின் உடன் இணைவதற்கான அடையாளம். ஆனால் ஒவ்வொரு சொல்லும் தன் இயல்பிலேயே முழுமையிலிருந்து தனித்திருத்தல் என்ற பண்பை கொண்டுள்ளது. அந்த தனித்திருத்தல் பிறிதுடன் இசைவு கொள்கையில் இன்பமாக, முரண்பட்டால் துன்பமாக மாற்றம் கொள்கிறது. ஆனந்தி தன்னை திருநங்கை என்று உறுதியாக அறிவித்து கொண்டவுடன் நிகழ்வது தனித்திருத்தல் என்னும் நிலை. உடனடியாக இசைவு கொள்ள வேண்டிய மறுபுள்ளியாக அமையும் அவளது குருதி அன்னை, அம்மா என்பதற்கு பதிலாக தன்னை கௌதமி என்னும் பெண்ணாக நிறுத்தி கொள்கிறாள்.  தனித்திருக்கும் சொல் தனது அடையாளத்தை ஏற்படுத்தி கொள்ளக்கூடிய தொடர்புமுனையை போல ஆனந்தியின் வாழ்க்கையில் அன்னை இல்லை. ரத்தமும் சதையுமான அன்னை மறைந்துவிட்ட தனிமையின் துயரிலிருந்து எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் எல்லோருக்கும் அன்னையாக அமையும் மேரியை நோக்கிய ஆனந்தியின் ஆன்மீக பயணமே இதோ நம் தாய்.

முன்கதையில் வரும் மார்கரெட் செல்லம்மா ஆனந்தியின் பயணத்தை அவளுக்கு முன்னமே செய்தவராக காட்டப்படுகிறார். அவரே கே.எஸ்ஸின் இறுதி காலத்தில் ஆனந்தரின் கதையை சொல்கிறார். வணிகனிடம் வழியில் சிதறி கிடக்கும் வைரம் எப்படி புத்தரின் தம்மத்தை பரப்ப எட்டு வழிகளில் உதவியது என்று ஆனந்தர் விளக்குவதை போல ஆனந்தியும் பத்து அத்தியாயங்களில், அதாவது பத்து வழிகளில் எல்லாவற்றையும் தாங்கும் உளம் கொண்ட மேரியை பார்த்து பார்த்து இறுதி படியில் இதோ நம் தாய் என்ற மந்திரத்தை சென்றடைகிறாள். ஆனந்தரின் வாழ்க்கை அறிவுக்கும் உணர்வுக்குமான போராட்டத்தின் வழி நிறைவு பெறுவதை காண்கிறோம். புத்தரின் அத்தனை அறிவையும் சொல்சொல்லாக நினைவில் வைத்து கொள்பவர், ஆனால் அவரை சித்தார்த்தராகவே கண்டு உணர்வுப்பூர்வமாக அணுகுபவர். புத்தர் பரி நிர்வாணம் அடைந்த பின் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தர் புத்தரின் சொற்காட்டின் முடிவு வரை சென்று திரும்பி தன் உணர்வாழத்தில் அமையும் அன்பினை கண்டு நிர்வாணம் அடைந்து வருகிறார். ஆனந்திக்கு நிர்வாணம் அமைந்தது என்பது மிகை வாசிப்பாக அமையக்கூடும் என்பதில் மாற்றில்லை. ஆனால் அவள் தன் நினைவுகளின் விளிம்பு வரை சென்று தாயன்பை உணர்கிறாள்.

கௌதமியுடன் விலக்கம் ஏற்பட்டவுடன் தனிமைக்குள் செல்லும் ஆனந்தி கதை தொடங்குகையில் தனிமையிலான மன அழுத்தத்தில் இருப்பதாக தனக்குத்தானே சொல்லி கொள்கிறாள். நினைவுகளில் ஆழ்ந்து ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு அகவுண்மையை தொடும்போதும் கவனத்தை சிதறடித்து கொள்ள ஏதேனும் ஒன்றை செய்கிறாள்.  எரியும் தீ மேல் மணல் அள்ளி வீசுவது போல. அதன்பின் ஒலிக்கும் குரல்

என்ன ஹாஸ்யம், ஏன் ஆனந்தம், உலகம் பற்றி எரிகையில் அந்தகாரம் சூழ்ந்திருக்க, நீ ஒளியை தேடமாட்டாயா ? என்று நாவலில் வரும் தம்மபத வரியையும்

கொட்டித் தீர்க்கிறது பேய் மழை
எங்கும் மென்னிருள்
விரைவில் அடரக்கூடும்
நடுவழியில் அந்தகாரத்தில்
நின்றுகொண்டிருக்கிறேன்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே
இடியிறங்கிய மரம் பற்றி எரிகிறது
இந்தப் பாழடைந்த மண்டபமோ
காற்றில் கூகூவெனக் கதறுகிறது
நெடுவழித் தனியனுக்கு யாருமில்லை
இன்னும் எவ்வளவு நேரம்
காத்திருப்பது
அம்மா வந்துவிடு

என்று இளங்கோ கிருஷ்ணனின் கவிதையையும் நினைவு ஊட்டுகிறது. அந்த ஓலக்குரலில் இருந்து விடுபட ஒவ்வொருமுறையும் ஒரு நினைவுக்குள் நுழையும் ஆனந்தி எழுந்து வரும் விடைகளை உணர்வுகளால் சென்று தொடுகையில் அறிவால் ஒதுக்க முயல்கிறாள். சுழன்று சுழன்று மேல் செல்லும் கலங்கரை விளக்கத்தின் படிக்கட்டுகளை போல நினைவில் ஏறி பரந்த கடலை காண ஆரம்பிக்கிறாள். அதன் கதை தாய்மையின் பல்வேறு முகங்களை விரித்து வாசகன் முன் வைக்கிறது.

2

கலங்கரை விளக்கத்தின் சுழல் படிகளில் ஏறுபவன் ஒவ்வொரு சுழல் திருப்பத்திலும் இருக்கும் ஜன்னல் துவாரம் வழியாக கடலை நோக்குவதை போல ஆனந்தியும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தாய்மையை நினைவூட்டும் ஒரு அம்சத்தை எதிர்கொள்கிறாள்.

வயலட்

தேவலாயத்தில் இயேசுவின் மூட்கீரிடத்திற்கு மேலிருக்கும் பொன் முலாம் பூசப்பட்ட குவையில் சிறு குருவிகளை காண்கிறாள். அந்த கணம் வரை தனது மன அழுத்தத்தையும் பிறர் முன் இயல்பாக இருக்க முடியாமல் போகும் நிலையை எண்ணி வருந்தும் ஆனந்தி தன்னிலிருந்து விலகி குருவிகளுக்காக மனம் நோகிறாள். அவை எப்படியும் அங்கிருந்து துரத்தப்பட்டு விடும். தேவாலய ஒவியங்களை பார்க்கையில் தன்னை குழந்தையாக உணர்ந்தவள். தானறியாமலேயே குருவிகளின் நிலைக்காக பிரார்த்தனை செய்கிறாள். அவற்றிற்கு செய்யும் பாவத்திற்காக தான் நாம் துன்பப்படுகிறோமா என கேட்டு கொள்கிறாள். ஆப்பிளை தின்றது அல்ல, ஆப்பிள் என்று அக்கனிக்கு பெயரிட்டு முழுமையிலிருந்து தன்னை பிரித்து கொண்டது தான் ஏவாள் செய்த அதி பாவமோ என்று நினைப்பு கொள்கிறாள். சொற்கள் துயரத்தை பெருக்கின என்ற வரிகள் இப்படி குறுநாவலின் பின்னணியில் ஒலித்து ஒருமையை உருவாக்குவதை காணமுடிகிறது. முதல் படியின் இந்த சிறுதாவலில் இருந்து புற உலக நிகழ்வுகளால் வெளித்தள்ளப்பட்டு விடு வந்து சேர்கிறாள்.

ஆனந்தி திருநங்கையாக இருப்பதன் அடையாள சிக்கலின் பின்னணியில் முதல் அத்தியாயத்தில் கூறப்படும் ஏவாளின் செயலும் இரண்டாம் அத்தியாயமும் ஒன்றுடன் இணைந்து கொள்கின்றன. உலகத்தை விரிந்து அணைக்க முயலும் குழந்தை, தன்னை வாரி அணைத்து கொள்ள ஒரு அம்மாவை தேடுகிறது. தனிமை அந்த துயரை பெருக்குகிறது. தனது முந்நாள் துணையான யசோதாவை நினைத்து கொள்கிறாள். அதன் பின் தன் அம்மா கௌதமியை நினைத்து கொள்கிறாள். சிறுவயதில் கௌதமி அப்பாவிடம் அடிவாங்கி அழுதபோது அவள் பக்கம் நின்று தான் மௌன கோபம் கொண்டதை போல, தன் அம்மாவேனும் திருநங்கையான தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறாள். பின் அத்தியாயம் ஒன்றில் தனக்கு தன் அம்மாவிடம் இருந்து வேண்டியது ஏற்பு தான் என யசோதாவிடம் வெளிப்படையாக சொல்லவும் செய்கிறாள்.

ஆனால் கௌதமி அவளுக்கான சிக்கல்களுடன் ஆனந்தியை கேள்விகளால் துளைத்தெடுக்கிறாள். ஒவ்வொன்றுக்கும் ஒரு பொய்யுடன் பனிப்போர் நடக்கிறது அவர்களுக்குள். ஆனந்தி வளர்க்கும்/உணவிடும் அன்பு என பெயரிடப்பட்ட பூனையின் கதை அம்மாவுக்கும் அவளுக்குமான உறவுக்கு ஒரு குறியீடாக மாறிவிடுகிறது.  சுலைமானியை போல கௌதமி தன் கேள்விகளால் ஆனந்தியை துரத்தும் போராட்டத்தில் அன்பு காயப்பட்டு காணாமல் போய்விடுகிறான். அன்புவின் இரத்தகறைகள் வீடு முழுக்க சிதறி கிடப்பதை போல சொல்லெனும் கூத்தீட்டிகள் ஆனந்தியின் நினைவு முழுக்க சிதறி கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக பிடுங்கி எறிந்துவிட்டு, புத்தரின் சொற்களை விலக்கி ஆனந்தர் நிர்வாணம் அடைந்தது போல ஆனந்தி தாயை காண்பதுடன் குறுநாவல் நிறைவடைகிறது என்றும் வாசிக்கலாம்.

அதே நேரம் தாய் எனும் போது அவ்வுறவுடன் பிணைக்கப்பட்டுள்ள அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துகிறது ஆனந்திக்கும் அன்புக்குமான உறவு.  தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஊற்றெடுப்பது அன்பு எனில் அது பூனை போல நீர்மேல் எண்ணையாக நெகிழ்வும் விலக்கமும் ஒருங்கமைந்து ஏன் அமைவதில்லை.  பூனையின் செயல்பாடுகள் அன்பு எனும் உணர்வுக்கு உருவகமாக மாறுவது தாமரை இலை தண்ணீராக உறவுகள் ஏன் அமைவதில்லை ? ஒரு விலங்குடன் உள்ள நிபந்தனையற்ற நேசம் கூட மனிதருக்கிடையில் சாத்தியப்படுவதில்லையே என்ற வினாக்களை எழுப்பி நிற்கிறது. தானொரு தாயாக அன்புவின் அழைப்புக்கு செவி சாய்ப்பதை போல கௌதமி ஏன் செய்யவில்லை ? என்ற ஆனந்தியின் கேள்வியாகவும் வாசிக்கலாம்.  அன்பு வெளிவீட்டு இரும்பு கீரில் கதவில் அமர்ந்து காலிங் பெல் அடிப்பதை ஒத்து ஆனந்தியும் கௌதமியிடம் தன்னை வெளிப்படுத்தி கொள்கிறாள்.

குருதி அன்னை ஏற்றுக்கொள்ளாவிடில் யாரோ ஒரு அன்னை தேவைப்படுகிறார். நாம் எல்லோரும் ஏதோ ஒரு சமயத்தில் பிறருக்கு அன்னையாகிறோம். குழந்தையாக விழைகிறோம். ஒன்றுமறியாத பூனையான அன்புவின் முன் மண்டியிட்டு பிரார்த்தனை செய்ய முயன்று தோற்று போகிறாள். ஆனால் நம் அன்புக்கு ஒன்றும் தெரியாது என்பது தான் எத்தனை உண்மை. அன்பு தான் உள்ளதை மட்டுமே அறிகிறது. அன்பை வெளிப்படுத்தவோ மறைக்கவோ முடிகிறதே தவிர, அது ஒரு வேண்டுதலாக செவிக்கொள்ளப்படாததாகவே இருக்கிறது. வேண்டுதலாகும் எல்லா அன்பும் ஐன்னல் கம்பி வழி நழுவி செல்லும் பூனையாக கைவிட்டு செல்கிறது நம்மை. கௌதமியும் அப்படித்தான் சங்கர்தேவ் சாமியாரிடம் சென்று சேர்கிறாள். மறுபக்கம் கௌதமியின் கேள்விகளால் வதைப்படும் ஆனந்தி மேரியன்னையிடம் அடைக்கலம் புகுந்து எல்லாவற்றையும் அதனதன் இயல்புடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மானுடர்க்கு ஏன் அமைவதில்லை என்ற கேள்வியுடன் எரிகிறாள். மேரியன்னையை ஆனந்தி கண்டுகொள்ளும் தருணம் குறைந்த சொற்றொடர்களில் நவீனத்துவ பாணியில் எழுதப்பட்டிருந்தாலும் வழமையான வாழ்வனுபவத்திற்கப்பால் இலக்கியத்திற்கேயுரிய தனி விவேகம் எதையும் காட்டவில்லை. அத்தகைய இடங்களை இக்குறுநாவலின் பலவீனமான பகுதிகள் என்று சொல்ல வேண்டும்.

இடையில் இருந்து நழுவி ஓடும் குழந்தைகளை ஓடிப்பிடித்து இரண்டு அடிவைத்து வீட்டிற்கு அழைத்த வராத அன்னையர் உண்டா என்ன ? விலகி ஓடுதலும் கைவிடுதலும் பின் ஏற்பும் என அமைவது அன்னையரின் இயல்பாகவே உள்ளது என்று கூறலாம். தன் பேச்சை கேட்காத ஆனந்தியை தண்டிக்க கௌதமி சங்கர்தேவ் ஆசிரமத்தில் சேர்ந்து கொள்கிறாள். கௌதமியை சகஜ நிலைக்கு இழுக்க முயன்று தோற்றுப்போகும் ஆனந்தி கௌதமியின் வாழ்க்கை கதையை நினைவுப்படுத்தி கொண்டு ஒரு புரிதலுக்கு வருகிறாள். அங்கே தன் அன்னைக்கு அன்னையாகிறாள். தன் உயிர்த்தோழியான கண்ணகி இறந்துவிடவே கௌதமியின் கல்விக்கனவு தடைபடுகிறது. அதனை மகன் மூலமாக நிறைவேற்றி கொள்ள முடியாமல் போகும் தவிப்பின் ஆங்காரமே ஆனந்திக்கும் கௌதமிக்குமிடையே விலக்கத்தை உண்டுபண்ணுகிறது. கண்ணகி தன் தற்கொலை முடிவை கௌதமியிடம் சொல்லாதது போல ஆனந்திக்கும் கௌதமிக்கும் இடையில் மௌனம் நிலவி சரியாக வேலை செய்யாத தன் வீட்டு கம்போஸ்ட் குப்பைத்தொட்டியை போல அவர்களது உறவு திரிந்துவிடுகிறது. தன் அன்னையின் நிலையை உணரும் ஆனந்தி கம்போஸ்ட்டின் முன் நின்றவுடன் அவர்களுக்கிடையிலான கசப்பான உண்மைகளின் யதார்த்தத்தால் நினைவுகளின் சுழலில் மீண்டும் அடித்து செல்லப்படுகிறாள்.

கெட்டுப்போன கம்போஸ்ட்டை அகற்றுவது போல கௌதமிக்கும் தனக்குமான நினைவுகளிலிருந்து விடுவித்து கொள்ளும் ஆனந்தி கவின் என்று போன வருடம் அறிமுகமான வாலிப சிறுவனை நோக்கி நகர்ந்து கொள்கிறாள். அங்கிருந்து மேரியின் முகத்தில் தெரியும் சாந்தத்தை பார்த்து தாய்மையின் உணர்வுதான் என்ன என்ற கேள்வியை சென்று முட்டிக்கொள்கிறாள்.  அது தொடர்ச்சியாக கடற்கரை சாலையில் தான் பார்த்த தெருநாய்க்குட்டிகளின் பரிதாப நிலையும் பின்னர் மக்கள் மெல்ல மெல்ல அவற்றுக்கு அவரவர் சக்திக்கு உணவிட்டு வளர வழி செய்த நிகழ்வில் சென்று அடைக்கலம் புகுகிறாள். இந்த ஐந்தாம் அத்தியாயத்தின் காட்சிகள் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கையில் சிலவகையான உணர்ச்சிகளை மட்டுமே தான் கொண்டிருக்க வேண்டும் என்ற மானுட அபத்தத்தின் மேல் வலுவான கேள்வியை எழுப்புகின்றன. தாய்மை என்பது பற்றற்ற ஒருவித சாரா நிலையாகவும் இயங்கலாம். ஆனால் அது நம் வீட்டுக்குள் வரும் போது சட்டகத்தில் அடைப்பட்டு திரிபு கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவது ஏன் ? அந்த நாய்க்குட்டிகளின் நினைவால் உளம் விரியும் ஆனந்தி, கவினின் தற்கொலையை நினைத்தவுடன் குற்றவுணர்வால், தான் ஏதும் செய்திருக்க வேண்டுமோ என்ற வழமையான சிந்தனையில் தன் கூட்டுக்குள் அடைபட்டு கொள்கிறாள்.

ஏதிர்பாரா கோடைமழை உள்ளத்தை இனிமையாக்குவது போல கூகுள் ஃபோட்டோஸ் காட்டும் பழைய நினைவுகளில் கைவிட்டுப்போன நட்பான யசோதாவுடன் பெங்களூரில் கழித்த ஒருநாள் எழுந்து வருகிறது. எல்லாவற்றின் மேலும் பொழியும் மழை போன்ற தாய்மையை நாய்க்குட்டிகளின் வாழ்க்கையில் காண்பதன் வளர்ச்சி நிலையாக தன் நலனை விலக்கிவிட்டு யசோதாவுக்காக முழுமையாக வேண்டி கொண்ட நாளின் நினைவினிமையில் ஆழ்ந்து போகிறாள். ஆனால் நினைவுகளின் இனிமை என்பது ஒருவகை கானல்நீர் தான். குறிப்பாக தனிமையில் மன அழுத்தத்தில் இருக்கையில் அதுவொரு கவன சிதறலாகவும் அமைந்து மாயம் காட்டுவது. அப்படியே ஃபோனில் இருந்து விலகி கே.எஸ்ஸின் தம்மபதம் மொழிப்பெயர்ப்பை வாசிக்க தொடங்கும் ஆனந்தி அப்புத்தகத்தை வாசிக்க தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்று குழம்பினாலும் வாசகருக்கு அடுத்து வரும் பகுதிகள் குறிப்புணர்த்தி விடுகின்றன.

தம்மபதம் போன்ற கவிதையாலான நூலை மொழிப்பெயர்க்கும்போது எப்படி மீளுருவாக்கம் செய்வது என்ற வினா. நம்முடைய நினைவுகளில் பதிந்துள்ள வசீகரமான அனுபவங்களை எப்படி மீட்டுருவாக்கம் செய்து கொள்வது என்ற கேள்வியையும் பின்னணியில் கொண்டுள்ளது.  மொழிப்பெயர்ப்பாளராக பணிசெய்யும் ஆனந்தி தன் அனுபவங்கள் ஒவ்வொன்றையும் அப்படி வேறொன்றாக மாற்றி கொள்கிறாள். கௌதமி தன் உடலில் இருந்து உருவான ஆனந்திக்கு விருப்பம் போல் அவள் உடலை மாற்றி கொள்ள உரிமையுண்டா ? என்று வினவுகிறாள். மறுபக்கம் யாஸ்மின் உன்னை நீ முதலில் நேசி, அதுவே பிறரை நேசிக்க வழி செய்யும் என்கிறாள். நடுவில் மேரி நிபந்தனையில்லாத தன் நலம் பாராத அன்புடன் நின்று கொண்டிருக்கையில் ஆனந்தி இருவரது கேள்விகளுக்கும் விடையில்லாதவளாக தன்னை உணர்கிறாள். இச்சைகளுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து யசோதாவுடனான உறவை இழக்கிறாள். நம்மை நாம் நேசிப்பதும் உலகை நேசிப்பதும் ஒருங்கே நடப்பது எப்போது?  அப்படி யோசிக்கையில் இருளே இவ்வுலகின் இயற்கை. அருள்பெற்ற வெகுசிலரே ஒளிநோக்கி நகர்கிறார்கள் என்ற தம்மபத வரியுடன் பூனைகளின் பக்கம் தன் கவனத்தை திசைத்திருப்பி கொள்கிறாள். அன்பை துரத்தும் ரன்விஜய் போல ஆனந்தியை அவளது சொந்த இச்சைகள் உணர்வின் தூய்மையில் இருந்து விரட்டி துரத்துகின்றன என்று வாசிக்க இடமுள்ள பகுதி அது.

துரத்தும் இச்சைகளின் வடிவாக டேட்டிங் ஆஃப் பெண்ணுடனான உரையாடலை பார்க்கலாம். ஒருவகையில் அது கௌதமியுடன் மேல் கொண்ட கோபத்திற்கு எதிர்வினையாகவும் அமைகிறது. மேரி நடுவில் இருக்கையில் காதல் என்ற பேரில் தற்காலிக உறவில் ஈடுபட்டு அஞ்சி விலகுவதும் தன் அம்மா கௌதமி தன் மேல் கொண்ட அதிகாரத்திற்கான விளைவாக இருக்கலாம் என ஆனந்தி உணர்கையில் விடுதலை கொள்ள தொடங்குகிறாள். மதிய தூக்க கனவில் அவளுக்கு குற்றவுணர்வு ஏற்படுவது கௌதமியை புரிந்து கொள்ளாமையில் இருந்து எழுவது என்றும் ராணுவப்படையின் தாக்குதல் என்பது திருநங்கை என்ற தன் அடையாளத்திற்கான சமூக ஏற்பின்மை என்றும் பொருள் விரிந்து வருகிறது.  அக்கனவின் விளைவுடன் போராட்டத்தில் பங்கெடுக்கையில் தன்னுடையதும் ஒரு போராட்டமென்றும் மேலும் முன்சென்று அது சுற்றியிருப்போர்களிடத்து ஒரு வேண்டுதல் என்று உணர தலைப்படுகிறாள். அங்கிருந்து சிவா தோழரின் சொற்களை நினைவு கூர்ந்து தனக்கு எத்தனை அன்னைகள் என உணர ஆரம்பித்தவுடன் மனம் மலர்கிறாள்.

தனக்கு எத்தனை அன்னைகள் என எண்ணி மனம் மலரும் ஒருவர் தன்னையும் ஒரு அன்னையாக உணர்கிறார். ஆனால் ஆனந்தி கோபப்படுவாளா என்ற தயக்கத்துடன் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை யாஸ்மின் தெரிவிக்கும்போது ஆனந்திக்குள் ஒன்று உடைந்து விடுகிறது. தன் அன்னையை இறுதி வரை தன்னால் ஏற்க முடியாமல் போனதன் கையறுநிலையை உணர்ந்து மூளை கொதிக்கையில் வெவ்வேறு இணையதளங்களில் உலவி கவனத்தை சிதறத்துடித்து கொள்கிறாள்.

நள்ளிரவில் அப்படி கவனத்தை சிதறடித்தும் தூங்க முடியாது எழும் அரைத்தூக்க கனவில் ஆனந்தி தனது குரலை மறைக்காமல் ஏற்றுக்கொள்ள சொல்லும் குரல்களாக கே.எஸ், அம்மா, யாஸ்மின், தோழர் சிவா ஆகியோரின் குரல் வழியாக உணர்கிறாள். இறுதியில் ஹெர்மன் ஓல்டெர்க் கேட்கும் எதை நம்புகிறாய் கேள்விக்கு இதோ நம் தாய் என்று மேரியிடம் சரணடைகிறாள்.  ஆனால் சைக்கெடெலிக் தன்மை தொனிக்கும் இப்பகுதி மற்றவற்றை ஒப்பிடும்போது ஒருமை அவ்வளவாக கூடிவராத இடமாக இருக்கிறது.

நாவல் என்று புத்தக குறிப்பில் சொன்னாலும் தனியொரு மனிதர் தன் அகத்துள் உறையும் எங்கும் நிறைந்த தாய்மையின் பிரகாசத்தை எதிர்கொண்டு கண்டடைவதில் உள்ள அகச்சிக்கல்களின் பரிணாம கதியை மட்டுமே காட்டி நிற்பதால் குறுநாவல் என்ற வகைக்குள் நின்றுவிடுகிறது. நாவலுக்குரிய பண்பாட்டில் அமையும் விரிவு அமையவில்லை. முன்கதையாக வரும் அத்தியாயங்கள் நாவலின் விரிவை விட குறுநாவலின் அடர்த்தியை கூட்டுவதாக அமைந்திருக்கிறது. குறுநாவலாக தன் எல்லைக்குள் இதோ நம் தாய் நல்ல படைப்பாக உள்ளது. எனினும் வடிவ ரீதியாக பார்க்கும்போது இத்தகைய குறுநாவல்களின் எல்லையே அவற்றின் பலவீனமாகவும் அமைந்துவிடுகிறது.

சக்திவேல்

எந்த ஒரு அகம் சார் கண்டடைதலும் வலுவாக நிறுவப்படுவது அது புறவுலகை எதிர்கொள்ளும்போது மட்டும் தான். வாழ்க்கையின் மாற்று வடிவமாக கனவென நிற்கும் புனைவிலும் புறவுலகத்தின் இடம் தவிர்க்கப்பட முடியாதது. ஆனந்தி போன்ற ஒரு திருநங்கை நம் சமூக அமைப்பின் காரணமாக புறவுலகத்தை எதிர்கொள்வதில் இயல்பாகவே ஒரு தீவிரம் உருவாகி விடுகிறது. அவள் புறவுலகத்தை அணுகும் விதம் தவிர்க்கப்படும் போது குறுநாவலின் அக வெளிப்பாடு வலுவாக இருந்தாலும் சமநிலை குறைகிறது.

3

ஒட்டுமொத்தமாக தொகுத்து பார்க்கையில் இதோ நம் தாயை இசையின் கவிதை நினைவெலெழுகிறது,

அப்பர் பெர்த்திலிருந்து
உருண்டு விழப்பார்க்கிறது குழந்தை
ஜன்னல் வழியே
உலகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
அவள் அன்னை
அதை உதறியெறிந்துவிட்டு
பதறியெழுந்து
கைவிரித்து நிற்கிறாள்.
அதே கணத்தில் அனிச்சையாய்
ஆங்காங்கே எழுந்து
கைவிரித்து நின்றனர் சில அன்னையர்
நானும் ஒருகணம்
அன்னையாகிவிட்டு
எனக்குத் திரும்பினேன்

ஒருகணத்தில் அன்னையாகி மீளும் நாம், தாய்மையை உடல் மற்றும் உறவு சார் வலையிலிருந்து விரித்து எங்கும் நிறைந்த இருப்பாக ஏன் பார்க்க கூடாது என்ற வலுவான கேள்வியை எழுப்பி, அப்படி பார்க்க முடியும் என்ற வெளிப்பாட்டுடன் நிறைவடைகிறது இதோ நம் தாய்.

*

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *